“ம்ம்ச்..” என்ற சலிப்புடன் மகளை தோளில் போட்டுக் கொண்டு தங்களுடைய அறைக்குச் சென்று படுக்க வைத்தான்.
ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தவன் அப்படியே கண்ணுறங்கி விட்டான்.
வெளி கேட் திறக்கும் சத்தம் கேட்டு கண்களை திறந்தான்.
சந்தியா தான் வந்து கொண்டிருந்தாள்.
அவன் ஹாலில் அமர்ந்திருப்பதை கண்டு கொள்ளாமல் தங்களுடைய அறைக்குச் சென்று உடை மாற்றிவிட்டு வந்தாள்.
“ தோசை ஊத்தி தரவா சந்தியா..” என்றான்.
“தேவையில்ல…எதுக்கு ஹால்லயே உக்காந்திருக்கீங்க. என்னைய வேவு பாக்கவா…? எத்தனை தடவை ஃபோன் பண்ணுவீங்க..? உங்களுக்கு தான் வேலை வெட்டி இல்ல…எனக்கும் இல்லைன்னு நினைக்கிறீங்களா…? இனி இந்த மாதிரி அடிக்கடி ஃபோன் பண்ணுற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க…சொல்லிட்டேன்…” என்றபடியே முடியை தூக்கி கொண்டைப் போட்டுக் கொண்டாள்.
“இல்ல… நேரம் பத்து மணிக்கு மேல ஆச்சேன்னு தான் ஃபோன் பண்ணுனேன். அந்த பக்கம் ஸ்ட்ரீட் லைட் இல்ல இருட்டா இருக்கும் அதான் வண்டியை எடுத்துட்டு வரலாமேன்னு …” எனக் கூற வந்ததை பாதியிலேயே நிறுத்தினான்.
“ஒரு மண்ணும் தேவையில்லை.. யாரும் என்னைய கடத்திட்டு போக மாட்டாங்க. உங்க அக்கறை சக்கரையெல்லாம் காலையில கை நீட்டி அடிக்கும் போது எங்க போச்சு? வந்துட்டாரு…பெருசா சமாதானப்படுத்த…” என்றவள் விடுவிடுவென அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.
ஒரு பெருமூச்சுடன் அறைக்குள் சென்று முடங்கினான்.
தனதறையின் பால்கனியில் நின்றி நிலவினை வெறித்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா..
குளுமையான பால் நிலவின் வெளிச்சம் கூட அவளை தகிக்க வைப்பதாக இருந்தது.
அவளது முகத்தை தொட்டுச் சென்ற மெல்லிய தென்றல் காற்று கூட தன்னவளின் ஸ்பரிசத்தை நினைவுபடுத்தியது.
தகிக்கும் அவனது நினைவுகள். அருகிலேயே அவனை வைத்துக் கொண்டு அவனை வதைப்பது என்னவோ போலிருந்தாலும் அவளுக்கு அது தான் பிடித்திருந்தது.
அவன் திருமணமானவன் , குழந்தையிருக்கின்றது என்பதெல்லாம் அவளுக்கு பொருட்டே இல்லை.
அவனது அருகாமை அவளுக்குத் தேவை. தினமும் அவனது முழு பிம்பத்தை கண்ணில் நிரப்பிக் கொண்டால் தான் அவளுக்கு அன்றைய நாளே சென்றது போலிருக்கும்.
சரி தவறென்றெல்லாம் அவளது அகராதியில் பிரித்து பார்க்க முடியாது. அவள் செய்வதனைத்தும் சரியே..
தினமும் இதே வாடிக்கையாகி விட்டது .
வெறிக்க வெறிக்க நிலவினை பார்த்துக் கொண்டேயிருப்பவள் தூங்குவதற்கு நள்ளிரவாகிவிடும்.
மனமும் மூளையும் எதையெதையோ யோசித்து களைத்து ஓய்விற்கு கெஞ்சும் போது தான் உறங்கச் செல்வாள்.
அவளது தாய் பிரேமாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டார்.
அவள் கேட்பதாக இல்லை.
“இங்க பாரு ஆருத்ரா. இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கப் போற…? அந்த பையன் கல்யாணம் பண்ணிட்டு குழந்தை குட்டின்னு நல்லா செட்டில் ஆகிட்டான். ஆனா நீ தான் அவனை நினைச்சு உருகிட்டு இருக்க. நைட் முழுக்க தூங்காம கொள்ளாம உடம்பை கெடுத்துக்குற… இதெல்லாம் வேணாம் ஆரு. நல்ல பையானா பாக்குறோம். கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்ற வழியைப் பாரு. வீணா உன் வாழ்க்கையை கெடுத்துக்காத…” என்பவரிடம் , “அதெல்லாம் எனக்குத் தெரியும்…உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க…” என முகத்திலடித்தார் போல் பேசிவிட்டு செல்வாள்.
அவரோ ,”உன் கிட்ட மனுஷன் பேசுவானா?” என முணுமுணுத்து விட்டு செல்வார்.
தந்தையின் புறம் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்.
அத்தனை வெறுப்பு அவர் மீது.
‘டாட்ஸ் லிட்டில் பிரின்ஸஸ்ஸாக’ இருந்தவள் ஏதோ ஒரு புள்ளியில் மாறி தான் போனாள்.
விட்டத்தை பார்த்தபடியே படுத்திருந்தவனுக்கும் ஏதேதோ நினைவுகள்.
மறுநாள் சொன்னது போலவே அனுவிற்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தான்.
சந்தியா வழக்கம் போல் வைக்கும் இட்லியும் சாம்பாரையும் வைத்திருந்தாள் .
மதிய உணவிற்கு வெறும் ரசம் மற்றும் பெயருக்கு பொரியலை செய்து வைத்திருந்தாள்.
ஒரு பெருமூச்சுடன் அதனை எடுத்து தனது உணவு டப்பாவிலும் குழந்தையின் டப்பாவிலும் எடுத்து வைத்தான்.
எப்போதும் பெரிதாக அவன் உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டான்.
ஆனால் தினமும் மாதிரி இருப்பது சலிப்பு ஏற்படவே செய்தது.
“ அட்லீஸ்ட் வேற சட்னியாவது அரைச்சு இருக்கலாம்…” என மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது.
வெளியில் கூறினால் பிரச்சினை என்பதினால் அமைதியாக கிளம்ப எண்ணினான்.
“எனக்கு கை செலவுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் வேணும். அகௌண்ட்ல போட்டு விட்டுடுங்க.” என்றாள் உதட்டுச்சாயம் போட்டுக் கொண்டே…
அவனோ பொறுமையை இழுத்து பிடித்தபடியே, “பத்து நாள் முன்னாடி தான் ஐஞ்சாயிரம் போட்டேன். அதுக்குள்ள செலவாகிடுச்சா..?” என்றான்.
“இங்கு பாருங்க…நான் போற வேலை ரிசப்ஷனிஸ்ட் வேலை..மாசத்துக்கு ரெண்டு தடவை ப்யூட்டி பார்லர் போகணும்…மேக்கப் ஐட்டம்ஸ் வாங்கணும். ஹயர் ஸ்டெரயிட்டனிங் பண்ணனும். அப்ப செலவாகாதா…? நான் ஒண்ணும் சும்மா வீட்ல உக்காந்து தண்டச்சோறு திங்கல. உழைச்சு கொட்டிட்டு தான் இருக்கேன். நான் என்னவோ வெட்டியா செலவு பண்ணுற மாதிரி பேசுறீங்க…உங்களால முடியலைன்னா சொல்லுங்க. என்னோட செலவை நானே பாத்துக்குறேன்.. எல்லாத்தையும் உங்க கிட்ட கணக்கு சொல்லணுமா..?” என படபடவென பொரிந்தாள்.
“ நான் அப்படி சொல்லல சந்தியா.. ப்ளீஸ்…புரிஞ்சிக்க. இன்னும் ஒரு வாரத்துல சம்பளம் வந்துடும். அதுக்கப்புறம் போட்டு விடுறேன். வீட்டுக்கான லோன் வேற போயிட்டு இருக்கு. அதை வேற சமாளிக்கணும். அனுவோட கிரச் பீஸ் வேற பே பண்ணனும்..” என்றான் தன்மையாக.
“ஓகோ…அப்ப உங்களுக்கு நான் பண்ணுறதெல்லாம் தேவையில்லாத செலவா தெரியுதா..? அவளுக்கு கிரச் ஃபீஸை அடுத்த மாசம் குடுக்குறேன்னு சொல்லுங்க. எனக்கு இப்பவே பணம் வந்தாகணும். எப்ப பாரு பஞ்சப் பாட்டு பாடிட்டே இருக்குறது… ச்சை..! இந்த மாதிரி மாசக் கடைசியில பணத்துக்கு அல்லாடுற பிச்சைக்கார குடும்பத்துல வந்து வாக்கப்பட்டு தொலைச்சிருக்கேன். என் தலையெழுத்து..இப்படி ஒரு மனுஷனை கட்டனும்ன்னு விதி.” என வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு தனது விலையுயர்ந்த அலைப்பேசியை எடுத்து தனது ஹேண்ட்பாக்கில் வைத்துக் கொண்டாள்.
அதனை பார்த்தவனின் கண்கள் இடுங்கியது.
“உனக்கேது இவ்வளவு காஸ்ட்லியான ஃபோன்..? பழைய ஃபோன் நல்லா தானே இருந்தது…” என்றான்.
ஆத்திரமாக திரும்பியவள், “ ஒரு ஃபோன் வாங்குறதுக்கு கூட எனக்கு உரிமையில்லையா..? எப்ப பார்த்தாலும் எல்லாத்தையும் உங்க கிட்ட பெர்மிஷன் கேட்டு தான் பண்ணனுமா…? உங்க மேல் ஈகோவை நீங்க எப்ப பாரு என் கிட்ட காட்டிட்டே இருக்கீங்க…” என்றாள் காட்டமாக.
“ ம்ம்ச்…உன் கிட்ட மனுஷன் பேசுவானா? உனக்கு உன்னோட சுகம் தான் முக்கியம். அடுத்தவங்களை பத்தி உனக்கு கவலையில்ல…ச்சை…!வாழ்க்கையில நிம்மதியே இல்லாம போச்சு….”என வார்த்தைகளை விட, அவளுக்கோ ஆத்திரம் அதிகமானது.
“ஓகோ ..என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாதால தான் உங்க நிம்மதி போச்சா?அப்பறம் ஏன் சார் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிங்க? உங்க தங்கச்சி வயித்துல வாங்கிட்டு வந்து நின்னப்ப எங்க போச்சு சார் இந்த ரோஷம்.? உங்களுக்கெல்லாம் மானம்னு ஒண்ணு இருக்கா..? உங்களுக்கும் இல்லை உங்க குடும்பத்துக்கும் இல்ல. என்னை கட்டிக்க முடியாதுன்னு தைரியமா சொல்லிருக்க வேண்டியது தானே…?உங்க வீட்டு மானம் மரியாதையை காப்பாத்த எங்க அண்ணனை உங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு கிட்டத்தட்ட கால்ல விழாத குறையா எங்க கிட்ட கெஞ்சினீங்க. அதுக்கு தான் எங்கம்மா பொண்ணு குடுத்து பொண்ணை எடுக்கணும்னு சொன்னாங்க. அப்பவே நீங்க ,’எனக்கு என் தங்கச்சி வாழ்க்கை முக்கியம் கிடையாது…சுயமரியாதை தான் முக்கியம்னு போயிருக்க வேண்டியது தானே? என் வாழ்க்கையும் இப்படி உங்க கிட்ட சிக்கி சீரழிஞ்சிருக்காதுல்ல?பாக்க ஏதோ கொஞ்சம் சுமாரா இருக்கீங்களே னு சரின்னு சொன்னேன். இப்படி ஒரு பஞ்சப் பாட்டு பாடுற குடும்பம்னு தெரிஞ்சிருந்தா அப்படியே கும்பிடு போட்டு போயிருப்பேன்…ஒரு நல்ல நகை நட்டு உண்டா..? கார் இருக்கா..? நல்ல பெரிய வீடு தான் இருக்கா..? குருவிக்கூடு மாதிரி இத்துணுண்டு வீட்டுக்கு லோன் கட்டறதுக்கு ஏதோ மாடர்ன் வில்லாக்கு லோன் கட்டிட்டு இருக்குற மாதிரி ஒரே அலம்பல். இதை கேட்டு கேட்டு எனக்கு சலிச்சி போச்சு…” என வெறுப்பின் உச்சத்தில் பேசிக் கொண்டே இருக்கும் போது அனு அவளருகே வந்து ,” சண்டை போடதம்மா…நாளைக்கு பேரண்டஸ் மீட்டிங்..மிஸ் நீங்களும் அப்பாவும் வரணும்னு சொன்னாங்க. இந்தாங்க ம்மா…டைரி…” என மழலைக் குரலில் கூறி அவளிடம் நீட்டினாள்.
இருந்த ஆத்திரத்தில் டைரியை தூக்கி விட்டெரிந்தவள் , “ இது ஒண்ணு தான் கேடு…உனக்கு. போ..அங்கிட்டு…உங்கப்பாவையே கூட்டிட்டு போ. என்னால லீவு போட்டுட்டெல்லாம் வர முடியாது . ஆயிரத்தெட்டு வேலை இருக்கு…” என எரிச்சலுடன் அவளை தள்ளி நிறுத்தி விட்டு தனதறைக்கு சென்று கைப்பையை எடுத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பினாள்.
வாசுவின் மனமோ சுணங்கிப் போனது. அவனது கால்களை கட்டிக்கொண்டு அவனது முகத்தை அண்ணாந்து பாவமாக பார்த்தாள் அனு.
“ப்பா…”என்றழைத்தவளின் குரல் கேட்டு சுதாரித்தவன் , “ என்னடா பட்டு? அம்மா கோவமா பேசிட்டு போனதை மனசுல வச்சிக்காத டா. நாளைக்கு அப்பா கண்டிப்பா வர்றேன்.” என்றவன் அவள் விட்டெரிந்த டைரியை தேடி எடுத்தவன் அதில் நேரத்தை பார்த்தான் மதியம் மூன்று மணி என்றிருந்தது.