கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு,
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வெற்றிவேந்தன் பள்ளி பருவத்திலேயே பெற்றோரை இழந்தவர் தன் சொந்த முயற்சியால் நன்றாக படித்து செல்வரத்தினம் என்கிற பெரிய பணக்காரருக்கு காரியதரிசியாக வேலைக்கு சேர்ந்திருந்தான். வெற்றிவேந்தன் பார்க்க ஆளுமையான தோற்றத்தோடும், நேர்மையானவனாகவும், அதே சமயம் மிகவும் புத்திசாலியாகவும் இருந்ததால் செல்வரத்தினத்திற்கு அவனை பிடித்து போனது. எனவே வெற்றிவேந்தனை எப்போதும் தன் கூடவே வைத்து கொண்டார்.
அவருடைய ஒரே செல்ல பெண் ரோகிணி. அந்த வீட்டின் மகாராணியாக வாழ்ந்து வந்தாள். தன் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் வெற்றிவேந்தனை விட தன் பெண்ணுக்கு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று செல்வரத்தினத்திற்கு தோன்றியது. ஏனெனில் வெற்றி பொறுமைசாலி, நிதானமானவன். ஆனால் ரோகிணி அவனுக்கு நேரெதிர் குணமுடையவள். செல்லமாக வளர்ந்த மகளை வேறு யாருக்கோ திருமணம் செய்து அனுப்புவதை விட வெற்றிவேந்தனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் இருவருமே தன்னுடன் இருப்பார்கள் என்று திட்டமிட்டு இருவரின் சம்மதத்தோடு திருமணம் செய்து வைத்தார்.
ரோகிணிக்கு வெற்றியின் தோற்றத்தில் ஈர்ப்பு இருந்தது, வெற்றிக்கும் அவளுடைய அபரிதமான அழகு பிடித்திருந்தது. எனவே ஆரம்பத்தில் வெற்றியும் ரோகிணியும் மனமொத்த தம்பதிகளாக மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். அதன் பலனாக அவர்களுக்கு முரளி கிருஷ்ணா பிறந்தான். ரோகிணி பணக்கார குடும்பத்தின் செல்லமகளாக வாழ்ந்ததாலோ என்னவோ, அவள் கணவனிடமும் தன் ஆளுமையைும் அதிகாரத்தையும் செலுத்த தொடங்கினாள். அதுமட்டுமின்றி எப்போதும் எளிமையாக இருக்கும் வெற்றி தனக்கு ஏற்ற ஜோடி இல்லை, என்ன இருந்தாலும் அவன் என் வீட்டிற்கு வேலைக்கு வந்தவன் தானே என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட தொடங்கியது.
அதன் விளைவு எப்போதும் கணவனை மட்டம் தட்டி பேச ஆரம்பித்தாள். கணவன் என்ற உரிமையில் நெருங்கினால் அவனை உதாசீனம் செய்தாள். கணவனின் எந்த விதமான தேவைகளையும் அவள் நிறைவேற்றவில்லை. முதலில் வெற்றியும் இதை பெரிது படுத்தவில்லை. செல்லமாக வளர்ந்தவள், அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு, அத்தோடு அழகான மனைவி, அருமையான ஆண் குழந்தையை கொடுத்திருக்கிறாள் என்பதால் அவனும் அவளுக்கு பணிந்து போக ஆரம்பித்தான். அது மெல்ல மெல்ல வளர்ந்து அவள் எது சொன்னாலும் அவன் தலையாட்டும் நிலைக்கு கொண்டு வந்தது.
இதை பார்த்தே வளர்ந்த முரளி கிருஷ்ணாவும் தன் அன்னையை போல அதிகாரம் செய்ய ஆரம்பித்தான். வெற்றிவேந்தன் தன் மகனின் ஆளுமையை கண்டு சிலாகித்தானே தவிர அவன் குணமும் மாறிக் கொண்டு இருப்பதை கவனிக்க வில்லை. அவனை அறியாமலே அந்த குடும்பத்திற்கு ஒரு தலையாட்டும் பொம்மையாக மாறிப்போயிருந்தான்.
இந்த நிலையில் ரோகிணி தன் தந்தை செல்வரத்தினம் மற்றும் மகன் முரளி கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு காரில் திருமண வரவேற்பிற்கு கிளம்பி கொண்டிருந்தாள். அப்போது தான் வேலையை முடித்து வந்த வெற்றிவேந்தன் “ரோகிணி ரிஷப்சனுக்கு தானே போறே? இரு நானும் வந்திடுறேன், ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணு” என்று அவசரமாக உள்ளே செல்ல எத்தனித்தான்.
“எங்கே வரப்போறீங்க? நாங்க போற இடம் ரொம்ப பெரிய பணக்காரங்களோட கல்யாண ரிசப்ஷன், அங்கே யாரவாவது உங்களை பத்தி கேட்டா என்ன வேலை செய்யறதா சொல்ல போறீங்க? வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறேன்னு பெருமை படப்போறீங்களா? என்னால எல்லாம் அங்கே அசிங்க பட முடியாது. நீங்க வீட்டிலேயே இருங்க. நாங்க வர்றதுக்கு எப்படியும் 11 மணி ஆகிடும். வேலைக்காரங்களுக்கு லீவு கொடுத்து அனுப்பிட்டேன். நீங்களே சிம்பிளா எதாவது சமைச்சு சாப்பிடுங்க, நாங்க கிளம்பறோம்” என்ற மனைவியின் வார்த்தைகளில் விக்கித்து போனான் வெற்றிவேந்தன். அப்போது தான் அவன் மனைவி தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறாள் என்றே அவனுக்கு புரிந்தது.
அவள் கோபப்படும் சமயங்களிலும் எடுத்தெறிந்து பேசும் சமயங்களிலும் ‘விட்டு கொடுப்பவர் எப்போதும் கெட்டு போக மாட்டார்’ என்று நினைத்து பொறுமையுடன் மனைவிக்கு பதில் சொல்லுவான். ஆனால் அவனை தன்னுடன் அழைத்து செல்வதே அவமானமாக நினைக்கிறாளா? அந்த அளவுக்கா நான் தரம் தாழ்ந்து விட்டேன்? இவள் தந்தையின் தொழிலை தானே கவனித்து கொள்கிறேன். ஏதோ தண்டச்சோறு சாப்பிடுவது போல பேசுகிறாளே என்று கூனி குறுகி போனான்.
“ரோகிணி, நான் உனக்கும் உன் அப்பாவுக்கும் உதவியா இருக்கட்டுமேனு தான் உங்க தொழிலை பார்த்துட்டு நம்ம வீட்டுலேயே, சாரி உங்க வீட்டுலயே தங்கி இருக்கேன். நான் வெளியே போனா இப்பவும் எனக்கு நல்ல சம்பளத்துல ஒரு வேலை கிடைக்கும். நீ என் கூட வர தயாரா இருந்தா சொல்லு, நாளைக்கே நான் வேற வேலையோட வர்றேன்” என்றான் அழுத்தமான குரலில்
“என்ன மாதிரி வேலை கிடைக்கும்? மாச சம்பளம் தானே? அதை நம்பி உங்க கூட வந்து ஒன்டி குடித்தனத்துல இருக்க சொல்றீங்களா?” என்று வெடுக்கென்று கேட்ட மனைவியின் மேல் இப்போது வெற்றிவேந்தனுக்கு கோபம் வந்தது.
“இங்க பாரு, எப்போ என் சுயமரியாதை அடிப்பட்டு போச்சோ, இனி நான் ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க மாட்டேன். என் கூட வாழணும்னா எனக்கு போன் பண்ணு. நான் வந்து உன்னையும் முரளியையும் கூட்டிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் வேகமாக சென்று தன் உடைமைகளை அவசரமாக அள்ளி போட்டுக் கொண்டு வெளியே வந்தான்.
மகளை எதிர்த்து பேச முடியாமல் நின்றிருந்த செல்வ ரத்தினம் வெற்றிவேந்தன் உண்மையாகவே வீட்டை விட்டு கிளம்புவதை பார்த்து பதறிப்போனார். “மாப்பிள்ளை, ரோகிணி குணம் உங்களுக்கு தெரியாதா? அவ ஏதோ கோபத்துல பேசுறா. நீங்க உள்ளே போங்க. நாங்க கல்யாணத்துக்கு போய் வந்ததும் பொறுமையா பேசிக்கலாம். ப்ளீஸ் மாப்பிள்ளை, என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கறதா இருந்தா உள்ளே போங்க” என்றார் செல்வரத்தினம்.
அவர் மேல் இருந்த மரியாதையால் வெற்றிவேந்தன் தயங்கி நின்றான். அதற்குள் டிரைவர் உள்ள வந்து, “அம்மா கார் ரெடியாயிடுச்சு கிளம்பலாங்களா?” என்றார். ஆனால் ரோகிணி அளவுக்கதிமான ஆத்திரத்தில் இருந்தாள். ஏனென்றால் வெற்றிவேந்தன் முதல் முறையாக அவளை எதிர்த்து பேசியிருக்கிறார். அவளிடம் பதில் இல்லாமல் போகவும் டிரைவர் செல்வரத்தினத்தை பார்த்தார்.
அவர்கள் கிளம்பிய பிறகு எங்கே வெற்றிவேந்தன் வீட்டை விட்டு போய் விடுவாரோ என்று பயந்த செல்வரத்தினம், “நீ வீட்லயே வெற்றிவேந்தன் கூட இரு, அவருக்கு தேவையானதை பார்த்துக்கோ. நாங்களே டிரைவ் பண்ணிக்கிறோம்” என்றார். டிரைவர் சம்மதமாக தலையாட்டி கார் சாவியை நீட்டினார். அதை செல்வரத்தினம் வாங்கும் முன் ரோகிணி வெடுக்கென்று சாவியை வாங்கி கொண்டு “வாங்கப்பா போகலாம்” என்று கணவனை நன்றாக முறைத்துக் கொண்டே சென்றாள்.
வெற்றிவேந்தன் மனைவி திரும்பி வந்ததும் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டாலும் ரோகிணி அவ்வப்போது தன்னை அவமான படுத்திய தருணங்களை நினைத்து பார்த்தான். திருணம் ஆன புதிதில் அவளோடு அன்னியோன்யமாக இருந்த சில மாதங்களை தவிர, மற்ற நாட்கள் எல்லாம் அவள் அவனை மட்டம் தட்டி பேசியதாலோ என்னவோ அவனாகவும் அவளை நெருங்கவில்லை. அவளும் அவனை நெருங்க முயற்சிக்கவில்லை.
சின்ன பெண் சீக்கிரமாகவே கர்ப்பம் பிள்ளைபேறு என்று ஆனதால் ஏதோ மனகுழப்பத்தில் இருக்கிறாள் என்று அவன் நினைத்து அடிபணிந்து போனால் அவள் அவனை அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறாள் என்று இப்போதே அவனுக்கு புரிந்தது. என்ன செய்வது? அவர்களுக்கென்று ஒரு மகன் இருக்கிறானே? அவனுக்காவது இந்த அவமானங்களை கடந்து தான் போக வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே போன் ஓயாமல் அலறியது.
ரிசீவரை எடுத்து காதில் வைக்கும் போதே எதிர்முனையில் ஒரு குரல் பதட்டமாக ஒலித்தது. “இது செல்வரத்தினம் ஐயா வீடு தானுங்களே?”
“ஆமா நீங்க யாரு?”
“சார், ஐயா வந்த காரு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுங்க. அவரை எனக்கு நல்லா தெரியும் அதான் உங்களுக்கு உடனே போன் பண்ணேன். ஆம்புலன்சுக்கும் போன் செய்திருக்கேன். மூணு பேருமே ஆபத்தான நிலையில் தான் இருக்காங்க. கொஞ்சம் சீக்கிரம் வர்றீங்களா?” என்று எதிர்முனையில் இருந்த நபர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வெற்றிவேந்தனுக்கு காது அடைத்துக் கொண்டு மயக்கமே வந்து விட்டது.
டிரைவரும் அங்கேயே இருந்ததால் உடனே அவர் மயக்கத்தை தெளிய வைத்து விஷயத்தை கிரகித்துக் கொண்டான். உடனே வெற்றியை அழைத்துக் கொண்டு மற்றொரு காரில் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றான். அதற்குள் சுதாரித்துக் கொண்ட வெற்றிவேந்தன் ஆஸ்பிட்டல் சென்றதும் மூவரையும் உடனடியாக பிரபல மருத்துவமனைக்கு மாற்றினான், தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தான்.
மனைவியை பார்ப்பதா, மகனை பார்ப்பதா இல்லை தந்தை போன்று வழிகாட்டியாக இருந்த மாமானாரை பார்ப்பதா என்று தெரியாமல் வெற்றி அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான். வெற்றிவேந்தனுக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள பெரிதாக யாரும் இல்லை. அவன் நிலையை பார்த்த டிரைவர் வேலு தான், அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு விவரங்களை சேகரித்துக் கொண்டிருந்தான்.
செல்வ ரத்தினமும், ரோகிணியும் பிழைப்பது கடினம், ஏனென்றால் காரை மிகவும் வேகமாக ஒட்டி வளைவில் இன்டிகேட்டர் போடாமல் வளைத்ததால் எதிரில் வந்த கன்டெயினர் லாரியின் மீது கார்வேகமாக மோதியிருக்கிறது. முன்னிருக்கையில் இருந்த ரோகிணிக்கும் செல்வரத்தினத்திற்கும் பலமான அடிப்பட்டிருக்கிறது. காரின் முன் பகுதியே காணவில்லை என்றால் அவர்களின் நிலை என்னவாக இருக்கும்? பின் இருக்கையில் இருந்த முரளி கிருஷ்ணாவிற்கும் பலத்த அடி பட்டிருக்கிறது என்றாலும் அவன் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்றார் மருத்துவர்.
செல்வரத்தினம் மட்டும் கண்திறந்து வெற்றிவேந்தனை பார்க்க வேண்டும் என்று மருத்துவரிம் கூறியதால், அவனை ஐசியுவிற்குள் அனுமதித்தனர். “வெற்றி நான் பிழைக்க மாட்டேன். என் மகளையும் பேரனையும் என் சொத்தை வித்தாவது காப்பாத்திடு, என் பொண்ணையும் பேரனையும் கண்கலங்காம பார்த்துக்க. என் மகளுக்கு முன்கோபம் அதிகம், அவ குணம் தான் முரளிக்கும் இருக்கு. அவங்க உன்னை அவமான படுத்தறாங்கனு அவங்களை விட்டுடாதே.
ஏன் சொல்றேன்னா, இன்னைக்கு ஒரு முறை நீ எதிர்த்து பேசினதையே ரோகிணியால பொறுத்துக்கவே முடியல. கார்ல வரும் போது உன்னை திட்டிட்டே காரை ஓட்டிட்டு இருந்தா. அந்த கோபத்துல காரின் வேகம் அதிகமாயிட்டே போச்சு. அப்பவே சொன்னேன், காரை நான் ஒட்றேன்னு. ஆனா என் பேச்சை அவ கேக்கல. கடைசியில் அவளோட முர்க்கத்தனம் எங்கே கொண்டு வந்து விட்டு இருக்கு பாரு. அவளை ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன், வேற வழியில்ல நீ தான் கொஞ்சம் பணிஞ்சு போகணும், மத்தபடி அவ உன் மேல உசுரையே வச்சிருக்கா. என் மகளை பார்த்துப்பியா வெற்றி?” என்று ஈனஸ்வரத்தில் கேட்டவரின் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டு கதறிவிட்டான் வெற்றிவேந்தன்.
“மாமா அப்படி எல்லாம் சொல்லாதீங்க, நானும் ரோகிணி மேலயும் முரளி மேலயும் உசுரையே வச்சிருக்கேன். இனி நான் அவங்களை எதிர்த்து பேசவே மாட்டேன். நீங்களும் பிழைச்சு வந்துடுங்க மாமா, என்னை புரிஞ்சுக்கிட்டது நீங்க ஒருத்தர் தான். நீங்களும் இல்லைனா நான் அனாதை ஆயிடுவேன் மாமா, பிழைச்சுக்கோங்க ப்ளீஸ்” என்று அவர் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு அவன் கதறிக் கொண்டு இருக்கும் போதே அந்த கைகள் தொய்ந்து கீழே விழுந்தது.
“மாமா” என்று அதிர்ச்சியோடு நிமிர்ந்து செல்வ ரத்தினத்தை பார்த்தான் வெற்றிவேந்தன். அப்போதே அவர் உயிர்பிரிந்து விட்டு இருந்தது. அதை உள் வாங்குவதற்குள் ஒரு நர்ஸ் ஒடி வந்தார், “டாக்டர் மிஸஸ் ரோகிணி கன்டிஷன் ரொம்ப வர்ஸ்டா இருக்கு, கொஞ்சம் வாங்களேன்” என்றாள் பதட்டமாக.
டாக்டருடன் சேர்ந்து ஓடினான் வெற்றிவேந்தன். தந்தையின் உயிர்போகும் போதே ரோகிணியின் உயிர் பிரிந்து விட்டிருக்கிறது. நர்ஸ் அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் டாக்டரை அழைத்திருக்கிறாள். ரோகிணியை பரிசோதித்த டாக்டர், “ஷி ஆல்சோ நோ மோர்” என்றார் வருத்தமான குரலில்
வெற்றிவேந்தன் தான் ஒரு ஆண்மகன் என்பதையும் மறந்து பெருங்குரலெடுத்து அழ தொடங்கினான். வேலுவால் அவனை சமாதானம் செய்யவே முடியவில்லை. இதையெல்லாம் அறியாத நான்கு வயது முரளி கிருஷ்ணா சிகிச்சையின் பலனாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
****
அடுத்த மூன்று மாதங்கள் வெற்றிவேந்தன் ஒரு நடைபிணமாக நடமாடிக் கொண்டிருந்தான். ஆபிஸ், மருத்துவமனை என்று அலைந்து கொண்டிருந்தான். இரவில் மகனுடன் மருத்துவமனையில் இருந்து விட்டு அங்கேயே தயாராகி ஆபிசிற்கு சென்று வந்தான். கடைசியாக முரளி கண்விழித்ததும் தன் அருகில் இருந்த தன் தந்தையை ஒரு எதிரியை போல பார்த்தான்.
“அம்மா எங்கே?” என்றவனுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினான் வெற்றி. வேலு தான் இடைபுகுந்து, “வீட்டில் இருக்காங்க தம்பி” என்றார்
“நான் உனக்கு தம்பியா? சின்னையானு கூப்பிடு” என்றான் மருத்துவமனை படுக்கையில் படுத்துக் கொண்டு
வேலுவும் முகம் கோணாமல், “சரிங்க சின்னையா” என்றார். அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் முரளியால் உடனடியாக எழுந்து நடக்க முடியாது, ஆறு மாதங்களாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியிருந்தார்.
வெற்றிவேந்தன் மகனை கையில் ஏந்திக் கொண்டு வீட்டில் நுழைந்ததும் முரளி தன் தாய் மற்றும் தாத்தாவின் போட்டா ஹாலில் மாட்டப்பட்டு அதற்கு மாலை போட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனான். அந்த சின்ன வயதில் அவனுக்கு எல்லாம் புரிந்தே இருந்தது. தந்தையை ஆத்திரத்துடன் பார்த்து, “நீ அம்மாவை திட்டினதால தான் அம்மா செத்து போய்ட்டாங்க, எல்லாம் உன்னால தான். ஐ ஹேட் யூ. என்னை கீழே இறக்கி விடு” என்று அடிக்குரலில் கத்தினான்.
மகன் அதிர்ச்சியில் இருக்கிறான் என்று புரிந்தது தந்தைக்கு. அவனை கட்டிலில் கிடத்தி விட்டு சமாதானம் செய்ய முயன்றான். ஆனால் அவன் அருகில் சென்றாலே கத்த தொடங்கி விட்டான்.
படுக்கையில் இருந்தவனை கவனித்துக் கொள்ளவும் முடியாமல், ஆபிஸ் வேலையை பார்த்துக் கொள்ளவும் முடியாமல் திணறினான் வெற்றி. நடக்க முடியாமல் இருக்கும் மகனுக்கு அருகில் இருந்து கவனித்துக் கொள்ள ஆள் வேண்டுமே என்று யோசனையுடன் இருந்தவனிடம் வேலு வந்து நின்றான்.
“ஐயா நானும் உங்க நிலைமயை பார்த்துக்கிட்டு தான் இருக்கேன், நான் ஒரு யோசனை சொல்லட்டுங்களா?” என்றான்
“சொல்லு வேலு”
“என் ஒண்ணுவிட்ட சித்தி பொண்ணு இருக்கா, அவளுக்கு ரொம்ப நாளா கல்யாணம் ஆகல, எங்க சித்தி திடீர்னு போன வருஷம் செத்து போச்சு. இப்போ தனியா கிடந்து அல்லாடறா. அவளை இங்கே கூட்டிட்டு வந்து நம்ம முரளி ஐயாவை பார்த்துக்க சொல்லலாமா? உங்க பிரச்சனையும் தீரும், அவளுக்கும் பாதுகாப்பான இடம் கிடைச்ச மாதிரியும் இருக்கும்” என்றான் வேலு
“நான் சொல்ல என்ன இருக்கு வேலு? முரளி கிட்ட சொல்லு, அவனுக்கு சம்மதம்னா அந்த பொண்ணை வரசொல்லு” என்று சொல்லிவிட்டு சென்றான் வெற்றிவேந்தன்.
வேலுவும் முரளி கிருஷ்ணாவிடம் விஷயத்தை கூறி சம்மதம் கேட்கவும், அந்த சின்ன வயதிலேயே அவன் தான் முதலாளி. அவன் அனுமதிக்கு அங்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற பெருமிதத்தோடு, “சரி வரச்சொல்லுங்க” என்றான் முரளி கிருஷ்ணா.
வெற்றிவேந்தன் வந்திருந்த பெண் யாரென்று கூட விசாரிக்காமல் தன் வேலையை பார்க்க தொடங்கி இருந்தான். செல்வி முரளி கிருஷ்ணாவை மிகுந்த பொறுப்புடனும் பாசத்தோடும் பார்த்துக் கொண்டாள். அவனும் அவளிடம் நன்கு ஒட்டிக் கொண்டான். ஆனால் தன் தந்தையை மட்டும் அறைக்குள் வர அவன் அனுமதிக்கவில்லை. வேலைக்கார பெண் முன்னே அவமானப்படவும் முடியாமல் வெற்றிவேந்தன் மகன் அறைக்கு செல்வதை வெகுவாக குறைத்துக் கொண்டான். அவன் உறங்கும் போது மட்டும் அவன் படுக்கையில் படுத்துக் கொண்டு தலையை வருடி விடுவான். அந்த மாதிரி சமயங்களில் செல்வி எழுந்து வெளியே போய் விடுவாள்.
முரளி ஆறுமாதத்தில் எழுந்து நடக்க தொடங்கி இருந்தாலும் எதற்கெடுத்தாலும் செல்வி அம்மா என்று நொடிக்கொருமுறை அழைத்துக் கொண்டே இருந்தான். செல்வியிடம் மட்டும் முரளி தன் அதிகாரத்தை காட்டாமல் பாசத்தை காட்டியது வெற்றிவேந்தனுக்கும் வேலுவுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
“செல்வி அம்மா” என்று மகன் அழைக்கும் போது தான் வெற்றிவேந்தனுக்கே அந்த பெண்ணின் பெயர் செல்வி என்று தெரியும். அவனாக அவளை அழைத்து ஒரு வேலையும் சொன்னதே இல்லை. அவள் மொத்தமாக முரளிகிருஷ்ணாவிற்காகவே அந்த வீட்டில் இருந்தாள். அவள் இருக்கும் நிம்மதியில் வெற்றிவேந்தன் தொழிலில் கவனத்தை செலுத்தி தன் வருமானத்தை பலமடங்கு கூட்டியிருந்தான்.
முரளி கிருஷ்ணா, செல்வியை தனக்கு கிடைத்த தாயாகவே நினைக்க தொடங்கி இருந்தான். செல்வியும் அவனை பெறாத மகனாகவே பாவித்தாள். இப்படியே மூன்று வருடங்கள் ஓடிவிட்டது.
ஒரு நாள் வேலு வந்து, “ஐயா செல்வியை பெண் கேட்டு எங்க சொந்தத்துல ஒரு வரன் வந்திருக்கு. இங்கே கிடைத்த சம்பளத்தை வச்சு அவளுக்கு நகை நட்டு வாங்கி வச்சிருக்கேன். வர்ற தை மாசம் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு இருக்கேன்” என்று தலையை சொறிந்தான்.
“அதுக்கென்ன வேலு, பேஷா முடிச்சுடலாம். எதாவது பணம் வேணும்னா சொல்லு தர்றேன். அவளோட புருஷனையும் நம்ம கம்பெனியில வேலை பார்க்க சொல்லிடலாம்” என்றான் வெற்றி.
“அதுல தாங்க ஐயா சிக்கல், அவன் பொண்டாட்டியை வீட்டு வேலைக்கு எல்லாம் அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டான். அதான் செல்வியை ஊருக்கு அழைச்சிட்டு போகலாம்னு இருக்கேன்”
“அதுக்கென்ன? தாராளமா உன் தங்கச்சியை அழைச்சிட்டு போ. முரளி தான் இப்போ நல்லா இருக்கானே. அவனே குளிச்சிட்டு தயாராகி ஸ்கூலுக்கு போற அளவுக்கு வளர்ந்துட்டானே. அவன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அழைச்சிட்டு போ. கல்யாணம் எப்போனு சொல்லு நானே எல்லா செலவையும் ஏத்துக்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றான் வெற்றி.
ஆனால் அவன் சொன்னது போல விஷயம் அத்தனை எளிதாக முடியவில்லை. செல்வி வீட்டை விட்டு போக போகிறாள் என்று தெரிந்ததும் ஏழு வயது சிறுவனான முரளி அந்த வீட்டையே ரண களம் செய்து கொண்டிருந்தான். மகனை சமாதானம் செய்ய முடியாமல் விழி பிதுங்கினான் வெற்றிவேந்தன். கவலையுடன் வேலுவை பார்க்க, “ஐயா செல்விக்கு ஏற்கனவே நிறைய வரன் தட்டி போய்ட்டே இருந்துச்சு. தாயில்லாத பொண்ணு, இப்போ வந்திருக்கிறது நல்ல வரன். இதையும் விட்டுட்டா அவ காலத்துக்கும் கன்னியா தான் இருக்கணும். முரளி ஐயா இந்த அளவுக்கு அடம்பிடிப்பார்னு தெரிஞ்சு இருந்தா நான் செல்விய இங்கே கூட்டியாந்தே இருக்க மாட்டேன், அவளும் எத்தனை நாளைக்கு ஒண்டி கட்டையா இருப்பா?” என்று வேலு கேட்பதும் நியாயமாகவே பட்டது.
வெற்றிவேந்தன் முரளியின் அறைக்கு சென்று கோபமாக பேச தொடங்கினான், “முரளி நீ என்ன நினைச்சிட்டு இருக்கே, அவங்க போனா வேறே ஆளை வேலைக்கு வச்சுக்கலாம். சும்மா அடம் பிடிச்சிட்டு இருந்தால் என்ன அர்த்தம்?” என்றுதான் கேட்டான்.
“இப்படி திட்டி திட்டி தான் என் அம்மாவை சாகடிச்சீங்க, இப்போ என்னையும் திட்டிறீங்க, நானும் செத்து போறேன்” என்று கத்தினான்
வாயடைத்து போனான் வெற்றிவேந்தன். “முரளி சொன்னா புரிஞ்சுக்கோ, அவங்களுக்கு கல்யாணமாம், கல்யாணம் ஆகிட்டா அவங்களோட புருஷன் கூட தானே இருக்கணும்?” என்று மீண்டும் கனிவாக பேச தொடங்கினான்
“அவங்க யாரையோ கல்யாணம் கட்டிகிட்டு அவங்க கூட போறதுக்கு, நீங்களே அவங்களை கல்யாணம் பண்ணிக்கோங்க, அப்போ அவங்க இங்கே தானே இருப்பாங்க?” என்று தெரிந்து சொன்னானே தெரியாமல் சொன்னானோ முரளியின் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை வந்ததும் வேலுவும் செல்வியும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வெற்றிவேந்தன் மகனை அடிக்க கையை ஓங்கி விட்டார், பயத்துடன் பார்த்த மகனை பார்த்து எரிச்சலுடன் “வாய் இருக்குதுனு என்னவேனா பேசுவியாடா நீ? நம்ம வீட்டில வேலை செய்ய வந்த பெண்ணை நானே எப்படி கல்யாணம் பண்ணிக்கறது? அதுவும் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு, எனக்கு மனைவினா அது உங்க அம்மா தான்” என்றான்.
“ஏன் நீங்களும் இந்த வீட்டுக்கு வேலைக்காரனா தானே வந்தீங்க, என் தாத்தா உங்களுக்கு எங்க அம்மாவை கட்டித் தரலையா? வேலைக்காரனா இருந்த உங்களுக்கு ஒரு வேலைக்காரியை கட்டிக்க முடியாதா?” என்று கேட்ட தன் ஏழு வயது மகனை அதிர்ந்து போய் பார்த்தான் தந்தை.
வயசுக்கு மிஞ்சின பேச்சை பேசுகிறான், இதற்கெல்லாம் காரணம் ரோகிணி மகனின் முன்னிலையில் தன்னை தரக்குறைவாக பேசி இருப்பாள் என்று வெற்றிவேந்தனுக்கு புரிந்தது.
“சும்மா என் அம்மா மேல பாசம் இருக்கிறது போல நடிக்காதீங்க. நீங்க திட்டினதால தான் அம்மா கோபமா வண்டி ஒட்டி ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. இப்போ நீங்க மட்டும் ஜாலியா இருக்கீங்க. என்னை பார்த்துக்க யாரு இருக்காங்க? எனக்கு செல்வி அம்மா வேணும்” என்ற மகனை அடிக்கவோ அதட்டவோ முடியாத கையாலாகத்தனத்தோடு சிலையாக நின்றான் வெற்றிவேந்தன்.
அவனுக்கு என்று இருக்கும் ஒரே ரத்த உறவு தன் மகன் மட்டும் தான். அவன் முகத்தில் இறந்து போன தன் மனைவி ரோகிணியை பார்க்கிறான். என்னதான் ரோகிணி அவனை புரிந்து கொள்ள வில்லை என்றாலும் அவனை பொறுத்தவரை அவள் அவனுக்கு காதல் மனைவிதான். முரளி ரோகிணியை போன்று நல்ல சிவந்த நிறம், அவனை பார்க்கும் போதெல்லாம் மனைவியின் முகமே நினைவில் வந்தது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே தன்னை வெறுத்துக் கொண்டிருக்கும் மகன் மேலும் மேலும் சண்டையிட்டு மொத்தமாக விலகி விடுவானோ என்று பயந்தான்.
தந்தை மகனுக்கிடையே நடந்து கொண்டிருந்த சண்டையை பார்த்த செல்வி தன் அண்ணன் வேலுவிடம் வந்து, “அண்ணா, முரளியை பார்த்தா பாவமா இருக்கு. அவனை என் மகன் போல தான் நானும் நினைக்கிறேன். எனக்கும் அவனை விட்டு பிரியறது கஷ்டமா தான் இருக்கு, அதனால…”
“செல்வி” என்று அதட்டினான் வேலு. “அவன் தான் சின்ன பையன் புரிஞ்சுக்காம பேசறான், உனக்கு அறிவில்லையா? வெற்றிவேந்தன் ஐயா இதை கேட்டா என்ன நினைப்பாரு? அவரை விடு, ஊருல இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க? வேலைக்காரியா வந்தவ வீட்டு ஆம்பளையை மயக்கி வீட்டுக்காரியா ஆயிட்டானு சொல்ல மாட்டாங்களா? நான் தான் உன்னைய இங்கே கூட்டியாந்தேன். என்னை கூட்டி கொடுக்கிறவன்னு சொல்ல மாட்டாங்களா?” என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே
“அண்ணா” என்று கத்திவிட்டாள் செல்வி
“செல்வி, இவங்க பணக்காரங்க, நாம வேலை செய்ய வந்திருக்கோம். வந்த வேலையை செய்துட்டு போயிட்டே இருக்கணுமே தவிர இங்கனயே தங்கணும்னு ஆசைப்படக்கூடாது” என்றார் வேலு
“வேலுண்ணா என்னை பார்த்தா அப்படி பட்டவளா தோணுதா உனக்கு” என்று கண்ணீர் விட்டாள் செல்வி. “நான் ஒன்னும் அவரை கட்டிக்கிறேன்னு சொல்ல வரல. என் கல்யாணத்தை நிறுத்திடுனு தான் சொல்ல வந்தேன். நானும் அந்த ஐயா படற பாட்டை பார்த்துட்டு தான் இருக்கேன். பெத்த மகனே அவரை ஒதுக்கி வைக்கிறான். இப்போ என்னால அவங்களுக்குள்ள மேலும் பிரச்சனை வருதேனு தான் இதுக்கு வழி சொன்னேன். கல்யாணம் பண்ணிக்காமலே நான் இங்கனயே அந்த புள்ளைய பார்த்துக்கிறேன். நீங்க கல்யாண பேச்சை இத்தோட நிறுத்திடுங்க” என்றாள்
“செல்வி, இன்னும் எத்தனை நாளைக்கு தனியாவே இருக்க போறே?” என்று கண் கலங்கினான் வேலு.
“அது பழகி போன விஷயம் தானே, எனக்கு தான் என்னை அம்மானு கூப்பிட முரளி இருக்கானே, அதுவே போதும்” என்று சொல்லிவிட்டு சென்ற செல்வியை பரிதாபமாக பார்த்தான் வேலு.
*******
இப்படியே நாட்கள் கடக்க, தனிமை காரணமாக வெற்றிவேந்தன் குடிக்க வேறு தொடங்கி இருந்தான். ஒரு நாள் தள்ளாடிக்கொண்டே வந்தவனை பிடித்து அவன் அறையில் படுக்க வைத்த வேலு, “ஐயா, என்னங்க இது புது பழக்கம்? முரளிக்கு புத்தி தெரியற வயசுல நீங்க இப்படி எல்லாம் செய்யலாமா?” என்றான் வேலு உரிமையுடன்
“என்ன செய்ய சொல்ற வேலு? முரளி கேக்கிறத என்னால செய்ய முடியலயே. என்னை என்ன பண்ண சொல்றே? நீ உன் தங்கச்சியை கூட்டிட்டு போனதும் அவனை எப்படி சமாளிக்கிறதுனு தெரியல வேலு. தோளுக்கு மேல வளரலனாலும் அவன் பேச்சு எல்லை தாண்டி போகுது பார்த்தியா? ரோகிணி மாதிரியே அவன் சொல்றது தான் நடக்கணும்னு அடமென்டா இருக்கான். அவனை அடிச்சு வளர்த்தா இன்னும் அடங்காம போயிடுவானோனு பயமா இருக்கு. அரவணைச்சு வளர்க்கலாம்னா என்னை கிட்டவே சேர்க்க மாட்டேங்கிறான். என்னை என்ன பண்ண சொல்றே வேலு” என்றான் கரகரப்பான குரலில்.
“நீங்க கவலைப்படாதீங்க ஐயா, செல்வி இனிமே இங்கே தான் இருப்பா. நான் கல்யாணத்தை நிறுத்திட்டேன்” என்றான் வேலு
“என்ன சொல்றே? ஏன் கல்யாணத்தை நிறுத்திட்டே? அவளாவது நிம்மதியா வாழட்டும், அவளை கூட்டிட்டு போயிடு வேலு” என்றான் வெற்றிவேந்தன்.
“இல்ல ஐயா, இது செல்வி எடுத்த முடிவு, அவ கல்யாணம் பண்ணிக்காம இங்கனயே இருந்துடுறேன்னு சொல்லிட்டா”
“வேலு புரியாம பேசாதே. நானோ மனைவியை இழந்தவன். அவ எத்தனை வருஷத்துக்கு இங்கேயே கல்யாணம் ஆகாம இருக்க முடியும்? அதெல்லாம் சரிவராது, அவளை கூட்டிட்டு போயிடு” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே முரளி வந்தான். தந்தை பேசியதை கேட்டிருப்பான் போலும்.
“செல்வி அம்மா இங்கே தான் இருப்பாங்க, நீங்க அவங்களை வெளியே அனுப்பினா நானும் போயிடுவேன்” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான். அதற்கு பிறகு தந்தையின் முகத்தை திரும்பியும் பார்ப்பதில்லை அவன். மகனின் பாராமுகம் வெற்றிவேந்தனுக்கு வேதனையை கொடுத்தது.
அடுத்து இரண்டு நாட்கள் நன்றாக யோசித்து இறுதியாக வெற்றிவேந்தன் ஒரு முடிவுக்கு வந்தான். வேலு செல்வி இருவரையும் அழைத்து பேசினான், “வேலு உனக்கும் உன் தங்கச்சிக்கு விருப்பம்னா நான் செல்வியை கல்யாணம் பண்ணிக்கிறேன். என்னால ஊரறிய இதை செய்ய முடியாது. உன்னோட முக்கியமான சொந்தங்களை கூப்பிட்டு கல்யாணத்தை முடிச்சிடலாம். அவளோட சம்மதத்தை கேட்ட பின்னாடி எல்லா ஏற்பாட்டையும் வீட்டிலேயே செஞ்சுடு. இந்த விஷயத்தை முரளிகிட்ட சொல்லிடு” என்று சொல்லி விட்டு யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று அங்கிருந்து சென்று விட்டான்.
பின்னே ஒரு சிறுவனின் கட்டாயத்தால் நடக்க போகும் திருமணம் அல்லவா? யார் முகத்தையும் பார்க்க முடியாமல் கூனி குறுகி போயிருந்தான். ஆனால் தன் மகன் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையை சேர்ந்தவன், எந்த செல்விக்காக இப்போது மல்லுக்கு நிற்கிறானோ, பின்னாளில் அந்த செல்வியை வீட்டை விட்டு அனுப்பும்படியும் செய்ய போகிறான் என்று தெரிந்திருந்தால் அன்றே அந்த கல்யாணத்தை நடத்தி இருக்க மாட்டானோ என்னவோ? ஆனால் மகனின் குணம் புரிவதற்குள் காலம் கடந்திருந்தது!
(தொடரும்)