“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?” – பகவத் கீதை
அன்று டெல்லியில் பத்மஸ்ரீ விருது வழங்கும் விழா!
இளம் தொகுப்பாளினி ஒவ்வொரு பெயராக சொல்லிக் கொண்டிருக்க, மேடையேறும் ஒவ்வொருவருக்கும் கைகுலுக்கி தன் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அந்த அவார்டை பரிசளித்தார், இந்திய பிரதமர் உதயேந்திர சிங்.
இப்போது அவள் ஒரு பெயரை சொன்னதும் அங்கே இதுவரை இல்லாத பலத்த கரகோஷம் அந்த நேரு அரங்கத்தை அதிர வைக்க, மீண்டும் ஒரு முறை யார் என்று கேட்டார் பிரதமர். அந்த பெண் இப்போது அந்த பெயரை மீண்டும் சொன்னாள், “ஆர்க்கியாலஜிஸ்ட் முரளி கிருஷ்ணா!”
“இவ்வளவு பேரு கைத்தட்டினதும் நான் கூட சினிமா பிரபலமோனு நினைச்சிட்டேன்” என்றவருக்கு அருகில் இருந்த அவருடைய பி.ஏ பதில் சொன்னார்.
“சார், இந்த முரளி கிருஷ்ணா தமிழ்நாட்டில் பெரிய பணக்காரர்களில் ஒருவர். கிருஷ்ணா குரூப்பின் முதலாளி வெற்றிவேந்தனுடைய ஒரே மகன். இவர் ஆர்க்கியாலஜிஸ்ட்டா இருந்தாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வா இருப்பார் ஆள் பார்க்கவும் ஸ்மார்ட்டா இருக்கிறதால இவருக்கு பாலோயர்ஸ் அதிகம்” என்றாள் அவர் காதருகே குனிந்து
அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆறடி உயரத்தில் உரமேறியிருந்த உடற்கட்டுடன் ஆஜானுபாகுவாய் ஒருத்தன் அழுத்தமான காலடிகளுடன் அந்த மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தான். பிரதமர் கையால் பத்மஸ்ரீ அவார்ட் வாங்க போகிறோமே என்ற ஆர்வம் அவன் முகத்தில் கொஞ்சமும் இல்லை. சட்டையின் இரண்டு பட்டன்களை போடாமல் விட்டிருந்தான். அதில் அவனுடைய உருண்டு திரண்ட திண்ணிய மார்பு அவன் வலிமையை எடுத்து உரைத்தது.
அவனுக்கு 37 வயது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள், சிவந்த நிறத்தில் பார்க்க ஏதோ இந்திபடத்தில் வரும் கதாநாயகன் போல இருந்தான். நடையில் ஒரு துள்ளலுடன் மேடையின் படியேறிய அவனை பார்த்து அங்கே வந்திருந்த அனைத்து பெண்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இருந்த பெண்கள் கூட, “ஆளு செம்ம ஹேண்ட்சம்மா இருக்காரேடி. நான் கூட ஆர்க்கியாலஜிஸ்ட்னா வயதான ஆசாமி தான் வருவார்னு நினைச்சேன், இவ்வளவு யங் அன்ட் சார்மிங்கை எதிர்ப்பார்க்கலைடி” என்று ஒருத்தி வெளிப்படையாகவே ஜொள்ளுவிட
“ஏய் ரொம்ப உருகாதடி, ஆளு பார்க்க தான் ஹீரோ, ஆனா சரியான கடுவன்பூனை. ஒரு முறை பேட்டி எடுக்க போனப்போ சரியா பதில் சொல்லாம ரொம்ப சீன் போட்டான்” என்றார் மற்றொருத்தி.
“இப்படிப்பட்ட ஒருத்தன் சீன் போடாம என்னடி செய்வான்? அப்பா பெரிய பணக்காரரு, இதுல இவன் பெரிய ஆர்க்கியாலஜிஸ்ட், ம் எவளுக்கு கொடுத்து வச்சிருக்கோ” என்றாள் முதலாமவள் பெருமூச்சோடு
அவள் பெருமூச்சிற்கு காரணமான முரளிகிருஷ்ணா, இப்போது பிரதமரிடம் கைக்குலுக்கி அவர் கொடுத்த அவார்டை வாங்கியபடி கீழே இருந்தவர்களை ஒருவித பெருமிதத்துடன் பார்வையிட்டான். கிட்டத்தட்ட எல்லோரும் அவனை பார்த்து பெருமையுடன் கைத்தட்டிக் கொண்டிருந்தனர், குறிப்பாக பெண்கள் இவனை நோக்கி கைகாட்டி ஆர்வமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்களை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் ஒருத்தியை மட்டும் தேடிக் கொண்டிருந்தது அவனின் கழுகு பார்வை!
ஆம், அவன் நினைத்தது சரிதான். அவள் இப்போதும் அவனை கண்டு கொள்ளாமல் தன் அருகில் இருந்த தோழியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். இதுவரை அவன் முகத்தில் இருந்த மலர்ச்சி சட்டென மறைந்து விட்டு கடுமை குடியேறியிருந்தது.
அதையறியாத அந்த தொகுப்பாளினி அவன் கையில் மைக்கை கொடுத்து பேச சொல்ல, யார் மீது இருந்த கோபத்திலோ அங்கே மேடையில் பொரிந்து தள்ள ஆரம்பித்து விட்டான்.
“நான் ஒரு தொல்லியல் ஆய்வாளராக (ஆர்க்கியாலஜிஸ்ட்) இருந்து அப்படி ஒன்றும் சாதித்து விட வில்லை. பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி திருவாளர் ராவ் அவர்கள் குஜராத்தில் துவாரகா என்ற நகரம் கடலில் முழ்கி விட்டது உண்மைதான். இதன் மூலம் மகாபாரதத்தில் சொல்லப்பட்ட கிருஷ்ணர் தான் துவாரகாவை கட்டியிருக்கிறார் என்பதும், அவர் கடைசியாக துவாரகாவில் வாழ்ந்து இருக்கிறார் என்பதும் உண்மைனு சொல்லி, அங்கிருந்து கற்களை கொண்டு வந்து ஆராய்ச்சி செய்து விளக்கம் கொடுத்தார்.
அதுக்காக நம்ம கவர்மெண்ட் தேவையான நிதி ஒதுக்கி இருந்தால் எகிப்து சீனா நாடுகளை விட நம்ம இந்தியா இன்னும் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதுனு நிரூபிச்சு இருக்க முடியும். தேவையில்லாமல் சினிமா படங்களுக்கு கோடி கோடியா பணம் செலவழிக்கிறாங்க. ஆனா நம்ம நாட்டோட வரலாற்றை நிரூபிக்க முக்கிய காரணமா இருக்கற தொல்லியல் துறைக்கு மட்டும் பணம் இல்லனு கைய விரிக்கறாங்க. மகாபாரதத்துல நம்ம முன்னோர்கள் வாழ்ந்ததா சொல்லப்பட்ட 150 ஊர்களில், 90க்கும் மேற்பட்ட ஊர்கள் இன்னும் அதே பேரோட இருக்கு. இன்னும் அந்த ஊர்களில் மக்கள் வாழ்ந்துட்டு தான் இருக்காங்க. அவங்க வாழுற இடத்துல அகழ்வாராய்ச்சி பண்ண முடியாதுனு நானும் ஒத்துக்கிறேன்.
குறைந்த பட்சம் கடலில் மூழ்கி இருக்கும் துவாராகாவை ஆராய்ச்சி செய்ய வாச்சும் தேவையான நிதி ஒதுக்கலாம் இல்லையா?” என்று அவன் சத்தமாக தன் கம்பீர குரலில் கேட்கவும் அந்த அரங்கமே அமைதியாகி விட்டது.
முரளி கிருஷ்ணாவின் தலைமை அதிகாரி, பிரதமரின் முன்பு இப்படி பேசுகிறானே என்று பதறி போனார். இப்போது அனைவரின் பார்வையும் பிரதமரின் முகத்தில் படிந்திருந்தது. அவர் என்ன சொல்ல போகிறாரோ? கோபப்படுவாரோ என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் முரளி கிருஷ்ணா கொஞ்சமும் அசராமல் நின்று கொண்டிருந்தான். இப்போதும் அவன் கழுகு பார்வை அங்கே அமர்ந்திருந்தவளை ஆழ்ந்து பார்த்தது. அவன் நினைத்தது போல அவள் அவனைத்தான் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்படியோ அவன் அவளின் கவனத்தை தன்னை நோக்கி ஈர்த்திருந்தான். அதில் பரம திருப்தி ஏற்பட்டது அவனுக்கு.
சற்று நேர யோசனைக்கு பின்பு “டிகே, இதுபற்றி பார்லிமென்ட் மீட்டிங்கில் பேசி ஒரு பெரிய தொகையை ஒதுக்க சொல்றேன்” என்றார் பிரதமர்.
இப்போது முரளி கிருஷ்ணாவுடன் சேர்ந்து பணிபுரியும் அவனுடைய சகாக்கள் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் கோரிக்கை வைத்தவன் முகத்தில் ஒரு எள்ளல் மட்டுமே இருந்தது. அவனை அவதானித்துக் கொண்டிருந்த அவள் மட்டுமே அதை உணர்ந்திருந்தாள்.
அவள் தன்னை கண்டுகொண்டதை உணர்ந்தவன் சட்டென்று தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டு பிரதமருக்கு நன்றி கூறி மேடையை விட்டு கீழே இறங்கினான்.
பத்திரிக்கையாளர்கள் அவனை சூழ்ந்துக் கொண்டு, அவனை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர். “சார் அடுத்து நீங்க தான் துவாரகாவை ஆராய்ச்சி செய்ய போறீங்களா? கடவுள் உண்மையுனு இதன் மூலமா நிருபிச்சிடுவீங்களா? கடவுள் இல்லைனு சொல்றவங்களுக்கு என்ன சொல்ல போறீங்க?” என்று ஆளாளுக்கு ஒரு கேள்வி கேட்க
“லுக் இயர், மகாபாரதத்துல போர் நடந்த இடம் சரஸ்வதி நதிக்கரை, போர் கால நேரம் முதல் எல்லாத்தையும் அழகா சொல்லி இருக்காங்க. அதில் குறிப்பிட்டு இருக்கிற நேரத்தை வானவியலாளர்கள் கணக்கிட்டு அது மூவாயிரம் ஆண்டுக்கும் முந்தைய காலத்துல இருந்து இருக்கும்னு சொல்றாங்க. அதில் குறிப்பிடபட்டுள்ள எல்லா இடங்களும் இன்னைக்கும் அதே பேருல இருக்கு. கிருஷ்ணரால் கட்டப்பட்ட துவாரகா என்ற நகரம் கடலில் மூழ்கிட்டதா சொல்ல பட்டிருக்கு. அதையும் உண்மைனு நிருபிச்சு இருக்காங்க. இதன் மூலம் இதிகாசம்னு நாம நினைச்சிட்டு இருந்த மகாபாரதம், உண்மை கதையை தழுவி எழுதப்பட்ட புனைவு கதையா கூட இருக்கலாம். அதில் சொல்லப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் உண்மையா வாழ்ந்திருக்க வாய்ப்பு இருக்குனு தான் நான் சொல்றேன். அவங்க எல்லாம் கடவுளானு கேட்டா அதுக்கான பதில் என்கிட்ட இல்ல. எங்களோட வேலை பழங்கால பொருட்களை ஆராய்ச்சி செய்வதும் அதன் காலத்தையும், வரலாற்றின் உண்மை தன்மையை உறுதி படுத்துவதும் தான். மத்தபடி இந்த மாதிரி மதசார்பான கேள்விகளை எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க” என்றான் அழுத்தமான குரலில்.
இதையெல்லாம் தொலைக்காட்சி செய்திகள் வழியாக பார்த்துக் கொண்டிருந்த வெற்றிவேந்தனுக்கு பெருமையாக இருந்தது. மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு தன் அருகே இருந்த வேலைக்காரனை பார்த்து, “பாத்தியா வேலு? நம்ம முரளிய? எப்படி நறுக்கு தெரிச்சாப்புல பேசறான் பாரு?” என்றார்.
“அவரு உங்க மகனாச்சே, கம்பீரத்துக்கும் ஆளுமைக்கும் குறைச்சல் இருக்குமா என்ன?” என்றார் வேலு
********
சென்னைக்கு திரும்பிய முரளி கிருஷ்ணா தன் வீட்டை அடைந்ததும் அவனை ஆரத்தழுவிக் கொண்டார் அவன் தந்தை வெற்றிவேந்தன்.
“முரளி ரொம்ப சந்தோஷம்டா. நம்ம கிட்ட இல்லாத சொத்தா? எதுக்கு இப்படி தேவையில்லாம ஆராய்ச்சினு சொல்லி ஊரு ஊரா சுத்தி அலைச்சல் படணும்னு எனக்கு கவலையா இருந்துச்சு. ஆனா இன்னைக்கு பிரதமர் கையால பத்மஸ்ரீ பட்டம் வாங்கினதும் என் மனசுல இருந்த எல்லா கவலையும் போயிடுச்சு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றார் தன்னை மறந்து
“அப்படியா? எல்லா கவலையும் போயிடுச்சா? நிஜமாவா?” என்றான் மகன் நக்கலாக.
அவன் குரலில் தெரிந்த குற்றச்சாட்டை புரிந்தவர் தலை கவிழ்ந்தார். அவர் முகம் வாடிவிட்டது. அதற்குள் வேலு பேசினார்.
“தம்பி, நீங்க கிருஷ்ணர் கடைசியாக வாழ்ந்த இடமான துவாரகாவை ஆராய்ச்சி செய்ய போறீங்களா?” என்றார் ஆர்வத்துடன்.
“ஏய் உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன்? கால் மீ சார். நான் என்ன உன் அப்பனுக்கு பிறந்தனா? இல்ல நீ என் அப்பனுக்கு பிறந்தியா? எதுக்கு என்னைய பார்த்து தம்பினு கூப்பிடுறே?” என்றான் ஆத்திரத்துடன்
“சாரி சார்” என்றார் வேலு தலையை குனிந்து கொண்டு
“முரளி, நீ டிவியில் பேசினத பார்த்து வேலு ஏதோ ஆர்வத்துல கேட்கிறான். நீ பிறந்ததுல இருந்து உன்னை பக்கத்தில் இருந்து வளர்த்தவன். வயசுல பெரியவன், அவனை ஏன்பா இப்படி மரியாதை இல்லாம பேசுற?” என்றார் வெற்றிவேந்தன்.
“அவன் பக்கத்துல இருந்து பார்த்த வேலை எல்லாம் எனக்கும் தெரியும், என்னைய பேச வக்காதீங்க” என்று அருவெருப்புடன் சொல்லிவிட்டு சென்ற மகனை கவலையுடன் பார்த்தார் வெற்றிவேந்தன்.
“அய்யா, தம்பி.., முரளி சார் ஏதோ கோபத்துல வந்திருப்பார். அவருக்கு என்ன பிரச்சனையோ, அலைச்சலோ. அவர் போக்குல விடுங்க” என்றார் வேலு
“எல்லாத்தையும் அவன் போக்குல விட்டு கொடுத்து தான், நான் இப்போ பாவி ஆகிட்டேன் வேலு” என்றார் வெற்றிவேந்தன் கண்கலங்க
முதலாளிக்கு என்ன சமாதானம் செய்வது என்று புரியாமல் வேலுவும் அமைதியாக சமையலறை நோக்கி சென்றார்.
*********
இரண்டு வாரங்களுக்கு பிறகு
முரளி கிருஷ்ணா தன் தந்தையிடம் வந்து நின்றான். அவன் வந்ததை உணராமல் அவர் செய்தி தாளை படித்துக் கொண்டிருந்தார்.
“க்கும்” என்ற அவனை கனைப்பு சத்தத்தில் நிமிர்ந்தவர், “என்ன முரளி?” என்றார்.
“நான் வெளியே கிளம்புறேன், வர எவ்வளவு நாளாகும்னு தெரியாது”
“எப்பவும் அப்படித்தானே போவே. சரி நல்லபடியா போயிட்டு வாப்பா. துவாரகாவை ஆராய்ச்சி பண்ண தானே போறே?” என்றார் வெற்றிவேந்தன்.
அவன் இல்லை என்று தலையாட்டினான்.
“என்ன சொல்றே முரளி? நீதானே ஆராய்ச்சி பண்றதுக்கு போதுமான பணவசதி கவர்மென்ட் கொடுக்கலனு பேசின, இப்போ பிரதமரும் அதுக்கான பெரிய தொகையை ஒதுக்கி இருக்கிறதா அதிகாரபூர்வமா செய்தி கொடுத்திருக்காரே. அதுக்கு காரணமான நீ தானே அங்கே போய் ஆராய்ச்சி செய்யணும்?”
“ஆராய்ச்சி செஞ்சி அவங்க கொடுக்கிற அவார்டை வச்சு நாக்கு வழிக்க சொல்றீங்களா?” என்றான் மகன் எரிச்சலாக
“நம்மகிட்ட இல்லாத பணமா? இந்த பேரு புகழ் அவார்டுக்காக தானே பத்து வருஷமா ஆர்க்கியாலஜிஸ்ட்டா ஊர் ஊரா அலைஞ்சுட்டு இருக்கே? அதுக்காக கல்யாணம் கூட பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டியே?” என்றார் தந்தை திகைப்புடன்
“நான் பத்து வருஷமா அலைஞ்சது பணத்துக்காகவோ இந்த பேரு புகழுக்காகவோ இல்ல. நான் தேடுறது அதுக்கும் மேல! இத்தனை வருஷமா நான் கஷ்டப்பட்டதை அறுவடை செய்யற நேரம் வந்தாச்சு. அதுக்கு தான் இப்போ போறேன். இதுல நான் ஜெயிச்சுட்டால்…” என்று கண்கள் ஜொலிக்க பேசிக் கொண்டிருந்தவனை ஆச்சரியமாக பார்த்தார் வெற்றிவேந்தன்.
“நீ என்ன சொல்ற முரளி? நீ பேசுறது எனக்கு எதுவுமே புரியல? எங்கே போக போறே?”
“நான் ஒரு விஷயத்துக்காக போறேன். அதைபத்தி வெளியில் சொல்றதுக்கு இல்ல. நானும் என் பிரெண்டும் போறோம் வர்றதுக்கு எவ்வளவு நாளாகும்னு சொல்ல முடியாது”
“போறது தான் போறே கல்யாணம் பண்ணிகிட்டு உன் மனைவியையும் கூட்டிட்டு போக கூடாதா? சரி வேணாம் விடு, நான் கல்யாணம் பத்தி பேசினாலே உனக்கு தான் கோபம் வந்திடுமே” என்ற தந்தையிடம்
“கவலபடாதீங்க நான் கல்யாணம் பண்ணிக்க போறதா முடிவு பண்ணிட்டேன். நான் திரும்பி வந்ததும் உங்க ஆசை நிறைவேறும்”
“நிஜமா தான் சொல்றீயா முரளி? நான் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கட்டுமா?”
“தேவையில்ல, என்னோட சாய்ஸ் எப்பவும் தி பெஸ்ட்டா இருக்கும்னு உங்களுக்கு தெரியும் தானே? அப்படி எனக்கு தி பெஸ்ட் சாய்ஸ் ஆன ஒருத்தியை நான் பாத்துட்டேன். இதோ இவ தான் உங்க மருமக. நல்லா இருக்காளா பாருங்க” என்று தன் கைப்பேசியில் இருந்த புகைப்படத்தை அவரிடம் காட்டினான்.
“நீ கல்யாணம் பண்ணிக்கிறேனு சொன்னதே சந்தோஷம்” என்றபடி அவன் கையில் இருந்த போனை வாங்கி பார்த்த வெற்றிவேந்தன் அதில் தெரிந்த அழகி, இல்லையில்லை பேரழகியை பார்த்து ஆச்சரியப்பட்டார்.
தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவகன்னிகை மாதிரி இருந்தாள். இவள் மனித பிறவி தானா என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவரிடம் “இவ தான் உங்களுக்கு வரப்போற மருமகள், பேரு செந்தாழினி!” என்று சொன்ன மகனின் முகத்தில் முதல்முறையாக வன்மம் இல்லா புன்னகையை கவனித்தார் வெற்றிவேந்தன்.
“ரொம்ப சந்தோஷம்ப்பா, இந்த பொண்ணோட விவரம் எல்லாம் கொடு, நீ வர்றதுக்குள்ள அவங்க குடும்பத்தாரோட கல்யாணம் பேசி வைக்கிறேன்”
“அதுக்கான நேரம் இது இல்ல. இப்போ நீங்க போய் கேட்டாலும் அவ என்னை கல்யாணம் கட்டிக்க சம்மதிக்க மாட்டா. நான் திரும்பி வந்த பின்னாடி பாத்துக்கலாம்” என்றவனின் குரலில் இறுக்கம் குடியேறியிருந்ததை உணர்ந்து அமைதியாகிவிட்டார்.
அதன்பிறகு முரளி கிருஷ்ணா வேறு சில முக்கியமான விஷயங்களை தந்தையிடம் சொல்லிக் கொண்டே போக வெற்றிவேந்தனுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது? இதை எப்படி செயல்படுத்த போகிறோம்? என்று மலைப்பாக இருந்தது.
“என்ன முழிக்கிறீங்க? முடியுமா? முடியாதா?” என்றான் எரிச்சலாக
மகனின் பேச்சுக்கு எப்போதும் போல தன்னையறியாமல் தலையாட்டினார் வெற்றிவேந்தன்.
*******
ஆறு மாதங்களுக்கு பிறகு,
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு மதுரையை சேர்ந்த அலங்காநல்லூரை நோக்கி தன் காரில் டிரைவருடன் பயணம் செய்து கொண்டிருந்தார் வெற்றிவேந்தன், அவர் அருகில் வேலுவும் அமர்ந்து இருந்தார்.
பல்வேறு வீடுகள் கட்டப்பட்டு இருந்தாலும், பெரிதாக எந்த மாற்றம் இல்லாததால் அவர்கள் தேடி வந்த வீட்டை எப்படியோ கண்டுபிடித்துவிட்டனர். அதே ஓட்டு வீடு! முன்பு பார்த்தபோது சுவரெல்லாம் விழுந்து விடுவது போல இருந்தது. ஆனால் இப்போது நன்றாக சிமெண்ட் பூசப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வாசலில் இருந்த மாட்டு கொட்டகை காலியாக இருந்தது. ஒருவேளை மாட்டை அழைத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு போய்விட்டார்களா? என்ற யோசனையுடன் வெற்றிவேந்தன் உணர்ச்சியற்ற முகத்துடன் இறுக்கத்துடன் காரிலேயே அமர்ந்திருக்க, வேலு தான் இறங்கி சென்று வாசலில் நின்றபடி குரல் கொடுத்தார்.
“செல்வி, அம்மா செல்வி, வீட்டில இருக்கியா?”
“யாரது? அங்கனயே சித்த இருங்க, வந்துடுறேன்” என்று உள்ளிருந்து கேட்ட குரலில் வெற்றிவேந்தன் உள்ளம் உருகி வழிந்தது. கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டார்.
நலுங்கிய அழுக்கான உடையில் மெல்லிய தேகத்தோடு வந்து நின்ற செல்வியை கண்கலங்க பார்த்தார் வேலு.
“எப்படி இருக்க செல்வி?” என்றவரின் குரலில், கண்களை சுருக்கி சில நிமிடங்கள் அவரையே கூர்ந்து பார்த்த அந்த பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் கரைபுரண்டு ஓடியது.
“வேலுண்ணா…” குரல் கமறியது. தொண்டையை செருமிக் கொண்டு, “இப்போ தான் இந்த தங்கச்சிய பாக்கணும்னு உனக்கு தோணுச்சா? அவுக எப்படி இருக்காங்க” என்று அழுது கொண்டே கேட்டவளுக்கு பதில் தரும்விதமாக வேலு காரை திரும்பி பார்க்க, செல்வியும் அவர் பார்வை சென்ற திசையை பார்த்து அதிர்ந்து போனார்.
உடல் உதற தொடங்கியது, “அவுக வந்திருக்காங்களா” குரல் தடுமாறியது.
வேலு, ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினார்.
“ஆத்தி, என்னால நம்ப கூட முடியலயே, இந்த ஓட்டு வீட்டுக்குள்ள அவுகள எப்படி உள்ளார வரச்சொல்லுவேன்” என்று பதறினாள்
காரில் அமர்ந்திருந்த வெற்றிவேந்தன் ஆழ்ந்த பெருமூச்சை எடுத்து விட்டபடி காரில் இருந்து கீழே இறங்கினார். அவரைக் கண்டதும் புடவை தலைப்பை எடுத்து தன் தோளில் போர்த்திக் கொண்ட செல்வி தலையை குனிந்துக் கொண்டு, “வாங்க” என்றாள்.
“என்ன செல்வி, உன்னால மட்டும் எப்படி இவ்வளவு பொறுமையா நடந்துக்க முடியுது? வேறொருத்தியா இருந்தால் என்னை விளக்கமாத்தால அடிச்சு துரத்தி இருப்பா. நீ என்னடான்டா வாங்கனு சொல்றே” என்றவரின் குரலில் அத்தனை வலி இருந்தது.
“என்ன பேச்சு இதெல்லாம்? உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லங்க. கிட்ட இருந்து என் மூத்த மகனை கண்குளிர பார்க்க முடியலையேனு தான் வருத்தம்” என்றாள் தலையை குனிந்து கொண்டு
“சின்னவன் எங்கே?” என்றார் ஆர்வமாக பார்வையை உள்ளே செலுத்தியபடி
“அதை ஏன் கேக்கறீங்க. அவன் அலம்பல் தாங்க முடியல. இப்போ கூட மாட்டை கூட்டிக்கிட்டு ஜல்லிக்கட்டுக்கு போயிருக்கான். எப்ப பார்த்தாலும் கூடவே பத்து இளவட்டங்க கூட சுத்தறதே வேலை அவனுக்கு. நான் திட்டினாலும் எதையாவது சொல்லி என்னை சிரிக்க வச்சுபுடுவான் போக்கிரி பையன்” என்றாள் செல்வி பூரிப்போடு மகனை நினைத்துக் கொண்டு
“போக்கிரினு இப்போ யாரை சொல்ற? சின்னவனையா? என்னையா?”
“அய்யோ உங்கள போயி சொல்வேனுங்களா? அவனை தான் சொன்னேனுங்க. நான் ஒரு கிறுக்கச்சி வெளியே நிக்க வச்சே பேசிட்டு இருக்கேன் பாருங்க. உள்ளாற வாங்க” என்றாள் செல்வி
“இல்ல செல்வி, ரொம்ப நாளாச்சு. நான் என் மகனை பார்க்கணும். எங்க ஜல்லிக்கட்டு நடக்குதுனு சொல்லு, நானே போய் அவனை கூட்டிட்டு வர்றேன்” என்றார் வெற்றிவேந்தன்.
“உங்களுக்கு சொன்னா புரியாதுங்களே, இருங்க அதோ போறாளே அந்த பொண்ணை கூட்டிட்டு போங்க அவ வழி சொல்லுவா” என்றவள்
“ஏய் கருப்பாயி, கொஞ்சம் இவங்க கூட காரில் போயி என் மவன் இருக்கி இடத்தை காட்டி, நான் கையோட அவனை கூட்டிட்டு வர சொன்னதா சொல்லி கூட்டியாடி” என்று அடிக்குரலில் கத்தினாள் செல்வி
“ஏய் கிழவி, என்னைய கருப்பினு சொல்லாதேனு எத்தனை முறை சொல்லி இருக்கேன். உன் மவனும் நீயும் மட்டும் ரொம்ப செவப்போ? கருவண்டு கணக்கா இருந்துக்கிட்டு என்னைய கருப்பாயினு கூப்பிடுறதே உனக்கும் உன் புள்ளைக்கும் வேலையா போச்சு” என்று முகவாளை தோளில் இடித்தாள் அந்த பெண்
“எடுப்பட்ட சிறுக்கி, என்னை வேணா கருப்புனு சொல்லு, என் மவன் கோதும நிறம்டி” என்றாள் செல்வி.
“புள்ளைய சொன்னா பொத்துக்கிட்டு வந்துடுமே இந்த கிழவிக்கு” என்று நொடித்துக் கொண்டே வந்தவள் “அந்த கருப்பனை பார்க்க வந்தீங்களா?” என்றாள் வெற்றிவேந்தனிடம்
“அவனுக்கு பேரு இருக்கு, யாதவ் கிருஷ்ணா” என்றார் வெற்றிவேந்தன் சற்று அதிக அழுத்தத்துடன்
“கிழவிக்கு தான் புள்ளைய சொன்னதும் பொறுக்காது, உங்களுக்கு என்ன இவ்வளவு கோபம் வருது?” என்றாள் அந்த பெண் அதிசயத்துடன் அவரை பார்த்து
“கோபம் வராதா? அவர் புள்ளைய அவர்கிட்டயே கருப்பன்னு சொல்லி கிண்டல் பண்ணுறியே ஆத்தா” என்றார் வேலு
வாயில் தன் கையை வைத்துக் கொண்டு, “ராஜா கணக்கா செவப்பா இருக்காரு, இவர் தான் நம்ம யாதவனோடு அப்பாவா? இம்புட்டு நாளா நான் பார்த்தது இல்லையே” என்றாள்
“நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க ஐயா, கிராமத்தில் இருக்கிறவங்க எல்லாம் இப்படித்தான் உள்ளே எதுவும் வச்சுக்காம வெளிப்படையா பேசுவாங்க. நீங்க வாங்க நாம யாதவ் தம்பியை அழைச்சிட்டு வந்திடுவோம்” என்றார் வேலு
பின்பு மூவரும் காரில் ஏறி ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு சென்றனர். செல்வி அரக்கபரக்க சின்ன பெண் போல ஓடி அவசரத்திற்கு சமைக்க வீட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்தார். எதுவுமே இல்லை, பால் தயிரை தவிர, உடனே பாத்திரத்தில் இருந்த தயிரை எடுத்து மோர் கடைய தொடங்கினார், “அவுகளுக்கு மோர் குழம்புனா ரொம்ப புடிக்கும்” என்று தனக்குள்ளே பேசியபடி சமையலறைக்கு சென்றார் செல்வி.
**********
வாடி வாசல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அங்கே இருந்த மூங்கில் கொம்பு தடுப்புகளை சுற்றி அவர்கள் நின்று இருந்ததால் பந்தைய காளைகள் இருக்கும் இடம் கண்களுக்கு புலப்படவில்லை. வாடிவாசலின் வழியாக ஒவ்வொரு பந்தைய காளையாக அனுப்பி கொண்டிருந்தனர். அந்த காளையின் பெயர் அதன் முதலாளியின் பெயரோடு சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. மைக்கில் பேசி கொண்டிருந்த நபரின் குரலை விட அங்கிருந்த மக்களின் ஆரவாரம் விண்ணை பிளந்துக் கொண்டிருந்தது
“என்ன வேலு, இந்த கூட்டத்துல யாதவனை எப்படி பார்க்குறது இப்போ?” என்றார் வெற்றிவேந்தன்.
“அய்யா நீங்க இருங்க, நான் உள்ளே போய் எப்படியாவது அவரை கூட்டியாந்துடுறேன்” என்றாள் காரில் வந்த பெண்.
“நீ எப்படி மா இந்த கூட்டத்துல போக முடியும்?”
“அய்யா இது எங்க ஊரு, நான் எப்படியாவது நுழைஞ்சு போயிடுவேன்” என்று காரில் இருந்து இறங்கியவள் அங்கே பெரிதாக கட்டப்பட்டு இருந்த திரையை ஆவென பார்த்தாள். “இந்த வருஷம் வாடிவாசல்ல நடக்கறத அப்படியே பெரிய டிவியில தெரியறாப்பல செஞ்சுருக்கானுங்க, ஐயா, அதோ பாருங்க உங்க மவன் எப்படி ஐயனார் கணக்கா நின்னுட்டு இருக்காரு” என்று காட்டிவிட்டு கூட்டத்திற்குள் சென்றாள் அந்த பெண்
அவள் காண்பித்த திசையில் வெற்றிவேந்தனும் வேலுவும் பார்த்தார்கள். இருவரும் திகைப்புடன் ஒருவரை ஒருவர் அர்த்ததுடன் பார்த்துக் கொண்டார்கள். அந்த பெண் சொன்னது போல ஆறடி உயரத்தில் திண்ணிய உடற்கட்டோடு கையில்லாத பனியனையும், அரைகால் பேண்ட்டையும் அணிந்துக் கொண்டு கையில் ஒரு காளை மாட்டை பிடித்திருந்தான் இளம் காளையன் யாதவ் கிருஷ்ணா!
“ஐயா, யாதவன் அப்படியே உங்க சாயல்ல இருந்தாலும் நம்ம முரளி தம்பியை உரிச்சு வச்சிருக்காரே, சின்ன வயசுல பார்க்கும் போதே நினைப்பேன். யாதவன் அப்படியே முரளியை போலவே இருக்கானேனு” என்ற வேலுவை பார்த்து உயிர்ப்பில்லாத சிரிப்பை உதிர்த்தபடி
“என்கிட்ட சொன்னது போல முரளி எதிரிலே சொல்லியிருந்தா உன்னைய அப்பவே கடிச்சு வச்சுருப்பான்” என்றார் மெல்லிய சிரிப்புடன்
“அய்யோ, வேற வினையே வேணாம், அவர்கிட்ட சொல்லுவேனுங்களா? இரண்டு பேருக்கும் வித்தியாசமே அவங்க நிறம் தான். முரளி தம்பி யாதவனை போல பெரிசா மீசையை முறுக்கி விட்டு இருக்கமாட்டாரு. பெரியவரு உங்களைப் போல நல்ல நிறம். யாதவன் செல்வியை போல கொஞ்சம் நிறம் கம்மி, மத்தபடி வயசு வித்தியாசம் கூட தெரியல, இரண்டு பேரும் இரட்டை மாதிரி இல்ல இருக்காங்க, இப்போ யாதவ்க்கு என்ன வயசுங்க ஐயா?” என்று கேட்டுக் கொண்டே முதலாளியை பார்த்தார் வேலு
வெற்றிவேந்தன் கண்கள் கலங்கி இருந்தது. விழி நகர்த்தாமல் திரையில் தெரிந்த உருவத்தை மேலிருந்து கீழாக பார்த்தவர், “அநேகமா 27-28 வயசு இருக்கும் வேலு. பதினைந்து வருஷமாச்சு என் மகனை கண்ணால பார்த்து” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையை அடைத்தது.
“ஐயா அங்கே பாருங்க”
திரையில் யாதவ் கிருஷ்ணா காளையின் திமிலை பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்தான். அங்கிருந்த மக்கள் எல்லாம் “யாதவா, யாதவா” என்று கூச்சலிட்டு கொண்டிருந்தார்கள். அந்த முரட்டு காளையின் வாலை பிடித்து யாரோ முறுக்கி விட, அது கோபத்தில் தலை தெறிக்க ஓடியது, அதில் யாதவன் தூக்கி எறியப்பட்டான். பதறிக் கொண்டு காரிலிருந்து கீழே இறங்கினார் வெற்றிவேந்தன். ஆனால் யாதவனின் உடல் தரையை தொட்டிருக்கவில்லை, அவன் குதித்தபடி தரையில் நின்று ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் போல ஓடி அந்த காளையில் திமிலை இறுகப்பற்றி அதை அடக்க முயன்றான்.
அனைவரும் சத்தம் போடாமல் உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த மாட்டின் கொம்புகள் சீவிய வாளை போல கூர்மையாக இருந்தன. கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் விளையாடிக் கொண்டிருந்த மகனை பார்க்கையில் தந்தையின் மனம் பதறியது, “வேலு எப்படியாவது அதை நிறுத்த சொல்லு, யாதவனுக்கு எதாவது ஆயிடப் போகுது” என்று கத்தினார்.
பக்கத்தில் இருந்த இளம்பெண்கள், “எங்க யாதவனுக்கு எதுவும் ஆகாது, அவரு எப்படி காளைய அடக்கறாருனு மட்டும் பாருங்க. நாங்க எல்லாம் அவர் கழுத்துல மாலையே போட தயாரா இருக்கோம்” என்றனர். அனைவரின் கைகளிலும் ரோஜா மாலை, மல்லிகைப்பூ மாலை என்று இருந்தது.
சற்று நேரத்தில் “நம்ம யாதவ் கிருஷ்ணா, சீவலப்பேரி காளையை அடக்கி முதல் பரிசு பெற்றிருக்காரு. அதுக்காக அவருக்கு ஒரு சவரன் தங்க காசும் ஒரு பட்டுபுடவையும் பரிசா கொடுக்கிறோம்” என்று அறிவித்தனர்.
அங்கிருந்த பெண்கள் எல்லாம் இப்போது யாதவனை நோக்கி ஓடினர். ஆளாளுக்கு அவன் கழுத்தில் மாலையிட முயற்சி செய்ய, யாருக்கும் தன் கழுத்தை காண்பிக்காமல் போக்கு காட்டினான் யாதவ் கிருஷ்ணா.
“இங்கே பாருங்கடி, எங்க அம்மா ஏற்கனவே சொல்லிருச்சு, கட்டிக்க போறவ போடுற மாலையை தான் நீ உன் கழுத்துல வாங்கணும். போறவ வர்றவ போடுற மாலையை எல்லாம் நீ வாங்க கூடாதுனு சொல்லியிருக்கு. அதனால வம்பு பண்ணாம எல்லாரும் போயிருங்க” என்றான் யாதவ் கிருஷ்ணா
“அப்ப சரி என்னைய கட்டிக்க” என்று கோரசாக சொல்லியபடி அந்த பெண்கள் மாலையுடன் அவனை துரத்த, அவன் பதறிக் கொண்டு அந்த மைதானத்தில் ஓடினான்.
“காளை மாட்டை துரத்திபிடித்த காளையனை இப்போ பொண்ணுங்க துரத்தறாங்க டோய்” என்று மைக்கில் யாரோ சொல்ல அங்கிருந்த கூட்டம் மொத்தமும் பக்கென்று சிரித்தனர்.
வெற்றிவேந்தனும் வேலுவும் அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். எப்படியோ அந்த பெண்களிடம் தப்பித்து கூட்டத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தவனை கையை பிடித்து இழுத்தாள் அவர்களுடன் வந்த பெண். “ஏய் கருப்பி, வீட்டு பக்கத்துல இருக்கறதால உனக்கு அம்புட்டு தைரியமா? என் கையவே பிடிச்சு இழுப்பியா நீ?” என்றான் யாதவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி.
அதற்கே அந்த கருப்பியின் முகம் சிவந்து போனது, “உங்க அம்மா உன்னை கையோட வீட்டுக்கு கூட்டியாற சொல்லுச்சு, உன்னை பாக்க யாரோ காருல வந்திருக்காங்க”
“என்னை பார்க்கவா? யாரது” என்றான் ஆச்சரியமாக
“உன்னை பாக்க தான் வந்திருக்காங்க, அதோ பாரு அங்கன தான் இருக்காங்க” என்று அவள் காட்டிய திசையில் பார்த்தான். அங்கே வெற்றிவேந்தன் கண்களில் கண்ணீருடன் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
சட்டென்று வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு வேறு திசையில் நடக்க தொடங்கினான். “யாதவா, அவரு தான் உன் அப்பாவாமே? வா அவங்க கூட காருல போலாம்” என்று இழுத்தவளை,
“அருவி, எனக்கு அப்பான்னு யாரும் இல்ல. கையை விடு” என்று அவன் கைகளை அவளிடமிருந்து உருவினான். கோபத்தில் இருந்தால் மட்டுமே அவள் பெயரை உரைப்பான். மத்தபடி எப்போதும் கருப்பி என்று தான் அழைப்பான். அதை உணர்ந்து அவள் அவன் கைகளை விட்டிருக்க விறுவிறுவென்று நடக்க தொடங்கினான்.
புசுபுசுவென்று தனக்குள் கிளர்ந்த கோபத்தை எதன் மீது காட்டுவது என்று புரியாமல் பின்னந்தலையை தட்டியபடி நடந்தவனின், எதிரே இருந்த சைக்கிள் ஸ்டாண்டில் இருந்த ஒரு இரண்டு சக்கர மோட்டார் வண்டியை அவன் தன் நீண்ட காலால் ஓங்கி எட்டி உதைக்க, அங்கிருந்த எல்லா வண்டிகளும் பெரும் சத்தத்துடன் ஒவ்வொன்றாக கீழே விழுந்து கொண்டிருந்தது. அதுவே அவன் கோபத்தின் வேகத்தை அவர்களுக்கு உணர்த்தி இருந்தது.
யாதவ் கிருஷ்ணா வெற்றிவேந்தனை பார்த்தாலே கோபப்படுவான் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அவனாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று தான் அவர் இத்தனை வருடங்களாக அவன் கண்ணிலேயே படாமல் இருந்தார். ஆனால் இதற்கெல்லாம் காரணமான முரளி கிருஷ்ணா, தான் கிளம்பும் போது ஒரு விஷயத்தை சொல்லி சென்றிருந்தான். அதற்காக தான் இன்று யாதவ்வை சந்தித்து பேச வந்திருக்கிறார்.
முரளி கிருஷ்ணா கிளம்பும்போது தன் தந்தையிடன் அப்படி என்ன சொல்லி சென்றான்? இத்தனை வருடங்கள் கழித்து வெற்றிவேந்தன் எதற்காக தன் இளைய மகனை பார்க்க வந்திருக்கிறார்?
இதை தெரிந்துக்கொள்ளும் முன்பு, தமிழ்நாட்டிலேயே பெரிய நிறுவனமான கிருஷ்ணா குரூப்பின் ஓரே வாரிசு முரளி கிருஷ்ணா என்ற பெயருடன் அவன் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, யாதவ் கிருஷ்ணா மட்டும் ஏன் இந்த கிராமத்தில் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும்?
வெற்றிவேந்தனின் வாழ்க்கையில் நடந்தது என்ன? அவர்கள் குடும்பம் ஏன் பிரிந்திருக்கிறது என்பதை அடுத்து வரும் அத்தியாயங்களில் சின்னதாக ஒரு பிளாஷ் பேக் பார்த்து விட்டு யாதவனின் முரளியை தேடி செல்வோமா?
(தொடரும்)