விகசனம் 2

அனைவரின் கண்களும் பெண்ணவளை குற்றம் சாட்டிட,அவளோ அந்நொடியே பூமி இரண்டாக பிளந்து நிலத்தின் உள்ளே புதைந்துவிட வேண்டும் என்பது போன்ற பெரும் அவஸ்தையுடன் நின்றிருந்தாள்.

அவளின் மேல் இரக்கமுள்ள ஒருவராய் சந்திராயினி அவளை தோளோடு அணைத்து “நீ நம்ப வீட்டுக்கு வந்தால் எல்லாம் சரியாகிடும்” என அவளிற்கு சமாதானம் கூறி மேடையிலிருந்து அழைத்துக்கொண்டு கீழே இறங்கினார்.

அவளோ வலுக்கட்டாயமாக அவரை பார்த்து சிரித்து ‘உங்க முகத்தில் இருக்கிற இந்த சிரிப்பு கடைசி வரை நிலைக்காது ஆன்ட்டி’ என மனதிற்குள் எதையோ நினைத்து வருந்தினாள்.

அச்சமயம் தாரணியின் தாய் விஜிதா “அண்ணி மறு வீட்டிற்கு வர சம்பிரதாயமெல்லாம் ஒண்ணும் வேணாம்…நீங்க அவளை உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போங்க…நாங்களும் அங்கேயே வந்து இரண்டு நாளு தங்கிட்டு அப்புறம் வீட்டுக்கு போறோம்” அவரே அழையா விருந்தாளியாய் அவர்களோடு வந்து ஒட்டிக்கொண்டதை கண்டு சந்திராயினிக்கு எரிச்சலாக இருந்தது என்றால்,அவருடைய குடும்பத்தினர் அனைவரின் முகத்திலும் பிடித்தமின்மை அப்பட்டமாக தெரிந்தது.

படீரென்று முகத்தை திருப்பி தங்களது குடும்பத்தினர் அனைவரின் முகத்திலிருந்த உணர்ச்சிகளை அவதானித்த சந்திராயினியோ,அதில் ‘அந்த பொம்பளை மட்டும் வீட்டுக்கு வந்தது…கொன்றுடுவோம்’ என்பது போல் கொலைவெறி தாண்டவமாடியதை கண்டு பெருமூச்சு விட்டார்.

அதனை அறிந்த சிவதாரணியின் முகமும் அவமானத்தில் கறுத்து சிறுத்தது.

இதழ்கடித்து தன்னுடைய வேதனையில் மூழ்கியிருந்தப்போதிலும் சிவதாரணியோ தாயை ‘நீயெல்லாம் ஒரு மனுசியா?’ என்பது போல் ஒவ்வாமையுடன் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தை சுழித்து திருப்பிக் கொண்டாள்.

அவள் தாயின் அனைத்து அக்கிரமங்களையும் பொறுத்துக் கொண்டதற்கு,அவளின் தங்கை ஒருவள் மட்டுமே காரணம்!!

சிறு வயதிலிருந்து இப்போது வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைக்கட்டி வந்து நிற்க,அந்த நினைவுகளின் தாக்கத்தினால் மனதில் பாரமேறியது.

முகம் சுருங்க ‘நான் செய்வது சரியா?’ என குற்றவுணர்ச்சியுடன் அவள் இமைத்தாழ்த்திய வேளையில் “அக்கா” என்ற தங்கையின் குரல் கேட்க அவளது வதனத்தில் பல ஆயிரம் மின்னல் ஒரே சேர தாக்கிய உணர்வில் அவசரமாக நிமிர்ந்தாள்.

பரபரப்புடன் விழிகளை சுழற்றியவளின் கண்ணில் அவளை கண்டவுடன் புத்தொளி பரவிட,இதழ்கள் கூட இலேசாக விரிந்தது.

‘உனக்காக என்ன வேணா செய்யலாம்டா’ என இழந்த திடத்தை மீட்டுக்கொண்டவளின் முகத்தில் ஓர் உறுதி தோன்றியது.

அத்துடன் தன்னை நோக்கி ஓடி வந்த தங்கையின் புறமாக குனிந்து இருகரம் நீட்டி ‘வா’ என அழைப்பு விடுக்க,

அடுத்த வினாடியே “அக்கா” என்ற கூவலுடன் ஓடி வந்து அவளது இடையை அணைத்துக் கொண்டது அந்த சின்னஞ்சிறிய உருவம்.

“இனிமேல் நம்ப வீட்டுக்கு வரமாட்டியா அக்கா?உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணறேன்” என விம்மலோடு அழுகையில் தேம்பிக்கொண்டே இருந்த தங்கையின் தலையை பரிவுடன் வருடிவிட்டவளுக்குள் ஆயிரம் பூகம்பம் ஒரு சேர தாக்கிய உணர்வு.

‘நான் எடுத்திருக்கிற முடிவால் உன்கிட்ட திரும்ப உயிரோடு வந்து சேருவனானு தெரியாது தாமி…ஆனால் எனக்கு என்னவாகினாலும் உன்னோட எதிர்க்காலத்திற்கு தேவையானதை செய்துட்டு தான் போவேன்’ என உறுதிமொழியுடன் அவளை தன்னிலிருந்து பிரித்து நெற்றியில் ஈர முத்தம் பதித்து “தாமி நீ எதுக்குடா கவலைப்படுறே?நம்ப வீட்டுக்கும் இப்போ நான் போற வீட்டுக்கும் வெறும் பத்து நிமிஷம் நடை தான்…உனக்கு வேணும் போது என்னை பார்க்க நீ ஓடி வந்திடு…சரியா?” ஒரு குழந்தைக்கு ஆறுதல் கூறுவது அவள் உயரத்திற்கு குறுகி நின்று கண்களில் வழிந்த நீரை துடைத்து விட்டாள்.

“இருந்தாலும் நீ நம்ப வீட்டில் என்னோடு இருக்கிற மாதிரி நெருக்கம் வருமா?என்னோடு சாப்பிட்டு…என்னோடு தூங்கி…எனக்கு தேவையான போது பாடம் சொல்லிக்கொடுத்து…இதெல்லாம் நீ அங்க இருந்தால் எப்படி செய்ய முடியும்…” என அழுகையோடு திக்கி திணறி பேசிய தங்கையின் வார்த்தைகளில் இவளிற்கும் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.

அக்காட்சியை பார்த்து பகையோடு மண்டபத்திலிருந்த அதிருனின் உறவினர் முதற்கொண்டு அனைவரும் ஒரே ஒரு நொடி நெகிழ்ந்துப்போனார்கள் என்றால்,சகோதரிகள் இருவரும் அன்பில் குழைவதை ஏற்க முடியாமல் எரிச்சலோடு இருவரையும் பார்த்த விஜிதா “ஹே தாமினி…அக்கா புகுந்த வீட்டுக்கு போகும் போது எதுக்கு அழுதிட்டு இருக்க…உன் அக்கா நல்லாயிருக்கணுமா வேணாமா?இங்க வா” என பெரும் அதட்டல் போட்டு வெடுக்கென்று அவளை பிடித்து தன்புறம் இழுத்துக்கொண்டார்.

அதில் பதறிப்போய் “அம்மாஆஆ” என தாரணி தங்கையின் கைப்பற்ற முனைய,

அவளை இவளின் கைகளுக்கு சிக்காதது போல் தன் பின்னால் மறைத்து “ஷ் தாரணி…இப்போ நாங்க எங்க போகப்போறோம்…உன்கூட தானே அந்த பெரிய வீட்டுக்கு வரோம்…நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு போகணும்…கிளம்பும்மா” வெளியே அக்கறையோடு பேசினாலும் அவரது கண்கள் வேறு விதமான கட்டளையிடுவதை தலை மகள் மட்டுமே அறிந்து நீண்டதொரு பெருமூச்சை வெளியிட்டாள்.

ஆயினும்,மனம் தாளாமல் தாயை தாண்டி தங்கையின் தலையை தடவி “உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் செல்லம்” என்றாள் ஆதுரத்துடன்.

அவளது தங்கையான சிவதாமினியும் தமக்கையின் கைப்பற்றி “உம்” மட்டும் கொட்டி தலையசைத்து புன்னகைத்தாள்.

அதை கண்டு விஜிதா பல்லை நறநறவென கடிக்க,அதனை உணர்ந்த மகள்கள் இருவரும் அச்சத்தோடு தங்களது கரங்களை விலக்கிக்கொண்டனர்.

ஒரே ஒரு நொடி சகோதரிகளின் பாசப்பிணைப்பில் உருகிய ரத்தினவேல் குடும்பம் ‘எல்லாம் வெறும் நடிப்பு’ என தலையை உலுக்கி வெறுப்போடு இக்காட்சியை கண்ணில் காண விரும்பாமல் வேறுப்புறம் திரும்பிக்கொண்டார்கள்.

அதற்குள் சந்திராயினி மெல்லிய குரலில் “விஜிதா நீ இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு பெரிய வீட்டுக்கு வந்தால் சரி வராது…முதல்ல உன் பொண்ணும் என் பையனும் நல்லப்படியா சேர்ந்து வாழட்டும்…அதுவரை நீ அங்க வராமல் இருப்பதே நல்லது” சுற்றி வளைக்காமல் முகத்திற்கு நேரே சாதுர்யமாக பேசி அவரை வரவிடாமல் செய்துவிட்டு மருமகளை தங்களது கப்பல் போன்ற பெரிய மகிழுந்தில் ஏற்றி இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

மகள் சந்திராயினி அரவணைப்பில் செல்வதை ‘இதெல்லாம் இன்னும் எத்தனை நாள்னு பார்க்கறேன்’ என வன்மம் கலந்த புகைச்சலோடு பார்த்திருந்தார் விஜிதா.

கண்ணில் நீர் வழிய நின்றிருந்த இளைய மகளிடம் “அடச்சீ…வா சனியனே…அவ தான் உன்னை கண்டுக்காமல் போயிட்டாளே…பின்ன எதுக்கு அவளுக்காக நீலிக்கண்ணீர் வடிச்சிட்டு இருக்கே” அவளிடம் நாக்கு என்னும் சாட்டையால் சுழன்றடித்து,

அச்சிறுப்பெண்ணின் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தவர்,அவள் “ஆ” என்று அலறியதை பொருட்படுத்தாமல் “ரொம்பதேன் கத்தாமல் வாடி…நீ என்னைக்கு பொறந்து தொலைச்சியோ, அன்னைக்கு பிடிச்சது எனக்கு ஏழரை சனி…நீ இப்படி பொறந்ததுக்கு பிறக்காமலே இருந்திருக்கலாம்…நானாவது நிம்மதியா இருந்திருப்பேன்…சனியன்…சனியன்” என அவளை வசைப்பாடிக்கொண்டே அவர்களது இல்லத்தை நோக்கி இழுத்துச் சென்றார்.

பிறந்ததிலிருந்து இப்போது வரை லட்சமாவது முறையாக இதே வார்த்தைகளை கூறி,தாய் தன்னை வசவுகளால் தன் இயலாமையை இழிவுப்படுத்தி கூறியதினால் அவை அந்த சிறு இதயத்தை சுருக்கென்று தைத்தது.

இது தினந்தோறும் நடக்கும் நிகழ்வு என்றாலும்,தற்போது மடியில் படுக்க வைத்து ஆறுதல் கூறுவதற்கு தமக்கை அருகில் இல்லாதது சிவதாமினிக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.

எந்தவொரு தாயாகினும் உடன்பிறந்த சகோதரிகள் இருவரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அவர்கள் இருவரின் மீதும் சரிசமமான அன்பை செலுத்தி பாசத்தை பற்றிய பாடம் எடுத்து அவர்களின் உறவை காலத்திற்கும் நீடித்து நிலைக்க வைக்கவே விரும்புவார்.

ஆனால் விஜிதாவோ சகோதரிகள் இருவரின் பாசப்பிணைப்பையும் பிரிப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து,அதில் தோல்வியை தழுவியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் அவருக்கு இளைய மகள் என்றுமே ஒரு இளக்காரம்!!

அதற்கு காரணம் சிவதாமினி கருவில் உருவாகிய நேரம்,விஜிதாவிற்கும் அவளது கணவருக்கும் உண்டாகிய சண்டையின் விளைவால் ‘இந்த குழந்தை வேண்டாம்’ என மருத்துவரின் ஆலோசனையின்றி கருவை கலைக்கும் மாத்திரைகள் உட்கொண்டிருந்தார்.

ஆனால் யாவரும் முற்றிலும் எதிர்ப்பாராத விதமாக துரதிர்ஷடவசமாக கருவில் உருவாகிய குழந்தை அழியாமல் அது வளர்ந்து விருட்சமாகியது.

அதன் விளைவு ஒன்பது மாதத்திற்கு பிறகு பிறந்த அந்த குழந்தை முழு வளர்ச்சியின்றி உடல் ஊனமுற்ற குழந்தையாக பிறப்பெடுத்திருந்தது.

அதனால் அந்தந்த வயதிற்குரிய வளர்ச்சியின்றி ஆரோக்கிய குறைப்பாடுடன் மண்ணில் உதித்த சிவதாமினியை அறவே வெறுத்தார்.

சில சிகிச்சைகளின் மூலம் ஓரளவு அந்த பெண்ணின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்தாலும்,பதினெழு வயதை கடந்ததற்கு பிறகும் மூன்றடி உயரத்திற்கு மேல் வளராமல் உயரம் குன்றிய குழந்தையாகவே இருந்தாள் சிவதாமினி.

அதனால் சிவதாமினியை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு ஆத்திரமும் துவேசமும் அதிகரித்தாலும் மனதினோரம் சிறு துளியளவு தாய்மை உணர்வு இருப்பதினாலே இன்று வரை அவளை வளர்த்து வந்திருந்தார்.

அவளுக்கு தேவையான பணத்தை கொடுப்பது மட்டுமே விஜிதாவின் வேலை என்றாலும்,அவளை சீராட்டி வளர்த்தது மொத்தமும் சிவதாரணி.

அத்தோடு வெள்ளை நிறத்தில் குட்டி கைகால்களுடன் பிறந்திருந்த தங்கையை குழந்தையிலிருந்து ‘பேபி டால்’ என அன்போடு அரவணைத்து இதுவரை முழுமையாய் வளர்த்து வந்திருந்தது சிவதாரணி என்ற தனியொருத்தி மட்டுமே!!

அவர் முற்றிலும் சாபமாக கருதி வெறுத்து ஒதுக்கும் சிவதாமினி தாரணிக்கு என்றும் வரமே!!

தங்கையை தங்கமாய் தாங்கும் தாரணி,அவள் மீது காட்டிய பாசமே விஜயாவின் பகைமையை சம்பாதிக்க வைத்திருந்தது.

அதனால் ஒட்டி பிறந்த இரட்டையர் போல் எந்நேரமும் பின்னி பிணைந்திருந்த சகோதரிகளை பிரிப்பதற்கு எதையாவது ஒன்றை செய்துக்கொண்டே இருப்பார்.

ஆனால் சகோதரிகளின் பாசத்திற்கு முன்பு இவரின் சதிவேலை என்றுமே நிலைத்து நிற்காது.

அதுவே இருவரின் மீதும் அளவுகடந்த துவேசத்தை கொடுத்து ஒரு விபரீத விளையாட்டில் மகள்கள் இருவரின் வாழ்க்கையையும் பணயம் வைக்க வைத்திருக்கிறது.

‘அந்தம்மா சொன்னுச்சுனு நீயும் ஒரு வார்த்தை பேசாமல் என்னை கண்டுக்காமல் போன தானே…தாயின் மனசை கஷ்டப்படுத்திட்டு போற நீ என்னைக்கும் நல்லாவே இருக்கு மாட்ட…நாசமா தான் போவ’ என தன் உயிரில் ஜனித்து உதிரத்தின் திசுக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பெற்றெடுத்த மகளின் வாழ்வையே சபித்தார்.

‘தாயின் அன்பிற்கு இவ்வுலகத்தில் வேறு எதுவும் நிகரில்லை’ என்பது போல் உலகத்திலுள்ள ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளுக்கு கூட தங்களின் உதிரத்தினால் உருவாகி பிறந்த குட்டியின் மீது அளவிட முடியாத அன்பும் பாசமும் இருக்கும்.

ஆனால் பெற்றெடுத்த புதல்வியின் வாழ்வே நிர்மூலமாக வேண்டும் என்று எண்ணும் இந்த கொடிய மனம் கொண்ட விஜிதா தாயா?அரக்கியா?

சற்று நேரத்திற்கு முன்பு மண்டபத்திலிருந்து புறப்படும் வேளையில் சந்திராயினி அவர்களது குடும்பத்தை சேர்ந்த இளவட்ட பெண்கள் இருவரிடம் “அம்மு…பப்பி நீங்க இரண்டு பேரும் அண்ணி கூட அந்த காரில் வாங்க” என கூறியதற்கு,

“முதல்ல எங்க அண்ணனை இவளை பொண்டாட்டியா ஏத்துக்க சொல்லுங்க…அதுக்கு பிறகு இவளை நாங்க அண்ணியா மதிக்கிறோம்” என தலையை சிலுப்பிக்கொண்டு ஒரு அருவருப்பான பார்வையை தாரணியின் மீது செலுத்தி விட்டுச் சென்று வேறு வண்டியில் ஏறிக்கொண்டனர்.

அத்தோடு அந்த பெண்களின் அன்னையான சந்திராயினியின் ஓரகத்தி ஞானசேகரியோ “அக்கா உங்களுக்கு வேணும்னா ஒரு பிச்சைக்காரியை மருமகளா ஏத்துக்கலாம்…ஆனால் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கண்டவளையும் அனுசரித்து போக வேண்டிய அவசியமில்லை” என முகத்திலடித்தாற் போன்று எரிச்சலோடு கூறிவிட்டு அவரும் வண்டியில் சென்றுவிட,இவளிற்கோ அந்த நொடி உடையின்றி மற்றவரின் முன்பு நிர்வாணமாக நிற்பது போல் உடல் கூசி தலைகுனிந்தாள்.

ஆனால் சந்திராயினியோ அவளின் தலையை தடவி “நீ எதுக்கும் கவலைப்படாதே தாரணி…அதிருன் உன்னை ஏத்துக்கிட்டால் இப்போ உன்னை தப்பா பேசினவங்க எல்லாரும் நாளைக்கு உன்கிட்ட அன்போடு நடந்துக்குவாங்க” என்றார் அனுசரணையான குரலில்.

அதில் விறைத்த அவளின் தேகம் சாதாரணமாக மாற ‘நீங்க சொன்ன மாதிரி நல்லது நடக்குமா?’ என நிராசையுடன் அவரை நிமிர்ந்து பார்க்க,

அதனை உணர்ந்தவரும் சிறு முறுவலுடன் “எல்லாம் சீக்கிரமே நடக்கும்‌‌..‌.சரி வா…என் மருமகள் கூட நானே வரேன்” என அவளிற்காக கதவை திறந்து விட்டு உள்ளே அமர வைத்து தானும் மருமகளோடு அமர செல்ல,

அதை பொறுக்காத ரத்தினவேல் பாண்டியன் சிடுசிடுப்புடன் “சந்திரா வந்து இந்த வண்டியில் ஏறு” என உரக்க குரல் கொடுக்க,

கதவின் மீது ஒரு கை வைத்து கணவரின் புறம் திரும்பி “ஏங்க தாரணி தனியா இருப்பாள்…அவக்கூட வரேன்” என்னும் போதே அவரின் கண்களில் கனல் கூட,வண்டியினுள் அமர்ந்திருந்த மருமகளை புழுவை விட கேவலமான ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘உனக்கு நான் முக்கியமா?அவள் முக்கியமா?’ என பிடிவாதமாக மார்பிற்கு குறுக்கே கைகட்டிக்கொண்டு ஒரு உரிமைப்போராட்டத்தை நிகழ்த்தினார்.

தனிமையில் வாடியவளிற்கு மாமியாரின் அரவணைப்பு வேண்டுமென்றாலும் சுயநலமாக தன்னால் அவர்கள் இருவருக்குமிடையே பிரிவை உண்டாக்கிட மனமில்லை அந்த வெள்ளை உள்ளம் கொண்டவளிற்கு!!

அதனால் வேறு வழியின்றி சிவதாரணியே “ஆன்ட்டி அவர் ஏற்கனவே என் மேல் கோபமா இருக்காரு…இதனால் அவருடைய கோபம் உங்க மேலே திரும்பிடப்போகுது…நீங்கள் அங்கிளோட போங்க” என விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது‌.

அவரோ புதிதாக திருமணமாகிய பெண்ணை தனித்து விடவும்,அதேசமயம் இத்தனை வருடங்களாய் அளவுகடந்த அன்பை செலுத்தி வந்த கணவரின் வார்த்தையை மீற முடியாமலும் இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தார்.

அதனால் மருமகளிடம் “தாரணி நீ எப்படி தனியா…” என்னும் போதே அவசரமாக “ஆன்ட்டி காரில் என்கூட தான் டிரைவர் அண்ணா இருக்காரே…நான் தனியா வரப்போறதில்லை‌…அதனால் நீங்க அங்கிளோடு போங்க” அவரை மேலும் பேசவிடாமல் இடைமறித்து பதிலுரைத்தாள்.

சந்திராயினியோ வெகு தாமதமாக ‘என்னோட சுயநலத்துக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை பலிக்கொடுத்து விட்டேனோ?’ என வருந்தியவாறு “நான் வரேன்மா…நீ எதுவும் நினைக்காமல் வா” என்று அங்கிருந்து தன் கணவனோடு வண்டியில் ஏறினார்‌.

சிவதாரணியோ எப்போதும் கிடைத்ததை வைத்து வாழும் வழக்கமுடையவள் என்பதால்,தனித்து விடப்பட்ட தன் நிலையை நினைத்து சுயபட்சாதாபத்தில் கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக்கொண்டு நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள தயாராகினாள்.

‘இன்று ஒரே நாளில் சோர்ந்துவிட்டால் எப்படி?இனி தினந்தோறும் தீயில் முக்குளித்து உன்னை நிரூபிக்க வேண்டுமே’ என பரிகாசம் செய்து சிரித்தது விதி‌!!

அதை யாவும் அறியாமல் பத்து நிமிட நேர வாகன பயணத்திற்கு பிறகு அவ்வூரிலே மிகப்பெரிய பங்களா ஒன்றின் முன்பு அந்த பாண்டியன் குடும்பத்தினரின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுத்து வந்து நின்றது.

ஒவ்வொரு வாகனத்திலிருந்தும் அந்த பாண்டியன் குடும்பத்தின் வாரிசுகள் இறங்க தொடங்கினார்கள்.

அந்த குடும்பத்தின் மூத்த தலைமுறையினர் அதிவீரராம பாண்டியன் மற்றும் அவரது மனைவி சிவகாமி தேவி.

அவர்களுக்கு மூன்று மகன்கள் மட்டுமே!!

முதலில் நின்ற வாகனத்திலிருந்து அதிவீரராம பாண்டியன் குடும்பத்தின் மூத்த வாரிசான ரத்தினவேல் பாண்டியனும் அவரது மனையாள் சந்திராயினியும் இறங்கி நின்றார்கள்.

அந்த தம்பதியினருக்கு அதிருங்கழகோன் பாண்டியன் என்னும் ஒரு ஆண் மகவு மட்டுமே!!

இரண்டாவதாக நின்றிருந்த மகிழுந்திலிருந்து இறங்கி நின்றார்கள் அந்த இல்லத்தின் நடு வாரிசான சுந்தரவேல் பாண்டியனும் அவரது இல்லப்பிராட்டி ஞானசேகரி.

அவர்களுக்கு காமினி,யாமினி என்று இரண்டு பெண் மகவுகள் இருந்தனர்.

அடுத்ததாக,இருந்த வாகனத்திலிருந்து அந்த வீட்டின் இளைய வாரிசான வெற்றிவேல் பாண்டியனும் அவரது மனைவியான ரதிதேவியும் இறங்கினார்கள்‌.

அதே வண்டியில் பின்னாலிருந்த இருக்கையிலிருந்து அந்த குடும்பத்தின் கடைக்குட்டி பதினெட்டு வயதே நிரம்பிய ருத்வேந்திர பாண்டியன் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

இறுதியாக,நின்ற மகிழுந்திலிருந்து நெஞ்சில் பாரமேறிய உணர்வுடன் கழுத்தில் மாலையுடன் கசப்பான நினைவுகளுடன் கீழிறங்கி நின்றாள் சிவதாரணி.

நண்பகல் பன்னிரெண்டு மணி என்பதால் சூரிய ஒளி அந்த பளிங்கு நிற பங்களாவின் மீது பட்டு அவளின் முகத்தை நோக்கி எதிரொளித்ததால் கண்கள் கூச விழி மூடினாள்.

சந்திராயினி வெளியே இருந்தவாறே உள்நோக்கி குரல் கொடுத்தார்‌.

“ஜானகி ஆராத்தி தட்டு எடுத்திட்டு வா” என்றவுடன்,

“ஒண்ட வந்த பிடாரிக்கு இது ஒண்ணு தான் குறைச்சல்” என ரதிதேவியின் கடுப்பு கலந்த முணுமுணுப்பு சிவதாரணியின் செவியில் தெளிவாகவே விழுந்தது.

அதில் படீரென்று இமைகளை திறந்து அவரை பிரயாசையுடன் நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அப்பட்டமாக வேதனை தென்பட்டது.

‘சொத்து சுகம் இல்லாத குடும்பத்தில் பிறந்ததை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லையே?எதற்காக என்னை வெறுக்கிறீர்கள்?’ என உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அவளது அழகிய கண்கள் அவரை நோக்கி கேள்வி எழுப்ப,

அவரோ அலட்சியமாய் தோளை குலுக்கி தன் கணவனிடம் ஓரக்கண்ணால் இவளை பார்த்தப்படியே “ஏங்க உங்க அண்ணிக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லை…கண்ட நாயையும் கூட்டிட்டு வந்து நடுவீட்டிலே வைக்கறாங்களே?கடைசியாக அது புத்திய காட்டிட்டு தான் போகப்போகுது” அவளிற்கு கேட்கவேண்டும் என்று சற்றே சப்தமாகவே பேசினார்.

அவரது அந்த வார்த்தைகள் ஈயத்தை காய்ச்சி முகத்தில் ஊற்றியது போல் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் வலியில் துடிக்க வைத்தது.

‘கொண்டவன் துணையிருந்தால் கோபுரத்திலும் கோலூச்சலாம்’ என்ற நிலையில், இங்கோ தாலி கட்டிய சில நிமிடங்களிலே வேட்டையாடும் மிருகங்களிடம் ஒரு புள்ளி மானை தனித்து விட்டுச் சென்றிருந்தான் காரிகையின் கண்ணாளன்.

அதை சிந்தித்தவளின் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்து வர காத்திருந்தாலும்,அதை இதழ் கடித்து அடக்கியவளின் மனமோ ‘நீ எந்த தப்பும் செய்யாமல் யாருக்காக அழணும்’ அவளுடன் பிறந்த சுயமரியாதை தலைத்தூக்கி எதிர்க்குரல் கொடுத்தது.

அதன் பலனாய் அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இயலாமையோடு பார்த்து ‘நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நானில்லை’ உரக்க கூற வேண்டும் என்ற ஆவேசம் தோன்றினாலும் தற்போதைய சூழ்நிலையில் எதையும் கூறாமல் தலைக்குனிந்து அமைதி காத்தாள்.

அதற்குள் குடும்ப நபர்கள் ஒவ்வொன்றாக பேசுவதை கண்டு சந்திராயினி மருமகளின் பால் இரக்கம் கொண்டு “நீங்கயெல்லாம் எதுக்கு வெயில்ல நிற்கறீங்க?உள்ள போங்க…நானே ஆராத்தி எடுத்து தாரணியை கூட்டி வரேன்” என நயமாக பேசி அவர்களை உள்ளே அனுப்பி வைத்தவருக்கு இன்று சில மணி நேரங்களே மூச்சடைப்பது போல் இருந்தது.

அவர்களும் குடும்பத்திற்கு வாழ வந்திருக்கும் பெண்ணிற்கான மரியாதையை வழங்காமல் விட்டேத்தியாக உள்ளேச் சென்றுவிட்டனர்.

‘இனி வரும் நாட்களில் எப்படி இந்த பொண்ணை இவர்களிடமிருந்து காப்பேன்’ என்ற நினைப்பே விஸ்வரூபம் எடுத்து அவரை மிரட்டியது.

மீண்டும் ஒரு முறை மருமகளிற்கு சமாதானம் கூறியவர்,ஜானகி என்ற பணியாள் எடுத்து வந்திருந்த தட்டை தன் கையால் வாங்கி ஆராத்தி சுற்றி “நீ நீண்ட ஆயுளோடு என் பையன் கூட நீடுழி வாழணும்” என தலையில் கைவைத்து ஆசிர்வதித்தவர்,

தட்டை அந்த ஜானகியிடம் கொடுத்து “வெளியே ஊத்திடு” என ஆணை பிறப்பித்தார்.

பின்பு அவளது கணவன் இல்லாத குறையை தீர்ப்பதற்காக மருமகளின் தோளில் கைவைத்து “நீ வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாம்மா” என பரிவுடன் கூறி,எந்த வித பாகுபாடுமின்றி அவரும் அவளோடு இணைந்து நடந்தார்.

மெட்டி இல்லாத மென்பாதங்களை வாசல் படியை தாண்டி உள்ளே வைத்த,அதேநேரம் பாண்டியன் குடும்பத்திற்கு உரிமையான தொழிற்சாலை ஒன்றில் தீப்பற்றி எரிந்தது.
 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Select your currency
INR Indian rupee
Scroll to Top