விகசனம் 1

“மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!”

என்று புரோகிதரின் அமுத மொழிகள் அந்த திருமண மண்டபத்தையே நிறைக்க “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என தன்னுடைய கணீர் குரலில் அவ்விடமே அதிர குரல் கொடுத்தார்.

அடுத்த வினாடியே,அதுவரை செவிகளுக்கு இனிமையாய் மென்மையாக வாசித்துக்கொண்டிருந்த வாத்தியங்கள் அங்கு கூடியிருந்த மக்களின் காது ஜவ்வை கிழித்துக்கொண்டு இடியாய் முழங்கியது.

“மாங்கல்யத்தை அவா கழுத்துலே கட்டுங்கோ” என அய்யர் குரலெழுப்பி தாலியை மணமகனின் கையில் கொடுத்தவுடன்,அதை வாங்கி சில வினாடிகள் வெறித்து பார்த்திருந்த அந்த விழாவின் நாயகன் பின்பு என்ன நினைத்தானோ, நீண்டதொரு பெருமூச்சை வெளியிட்டு அதனை தன்னருகில் பதுமையாய் அமர்ந்திருந்த வஞ்சிக்கொடியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னுடைய தாரமாக்கினான் அதிருங்கழகோன் பாண்டியன்.

பெயருக்கு ஏற்றது போல் அழகும் கம்பீரமும் நிறைந்த ஆணழகன்.

அனைவரையும் உயர்ந்து பார்க்க வைக்கும் அசாத்தியமான ஆறடி இரண்டு அங்குல உயரம்,மாநிறத்திற்கும் சற்று குறைவான திராவிட நிறம்,நடக்கும் போது நெற்றியின் மீது துள்ளி விளையாடும் கருமைப் பொருந்திய அடர்த்தியான கேசம்,அவனது பராகிரமத்தை பறைச்சாற்றும் முறுக்கிய மீசை,எதிரிகளின் ஆழ்மனதைத் துளையிடும் வாள் போன்ற கூரிய கண்கள்,சிரிப்பு என்பதையே மறந்துவிட்ட கடின இதழ்கள்,உடற்பயிற்சியின் பலனாக கட்டுக்கோப்பாக இருந்த உடல்வாகு, படர்ந்து விரிந்திருந்த மார்போடு அகன்ற முறுக்கேறிய புஜங்களுடன் கூடிய நீண்ட கரங்கள்.

மொத்தத்தில் முழு ஆண்மகனுக்குரிய இலக்கணம் பொருந்திய அத்தனை அம்சங்களையும் பெற்றிருந்தான் பாண்டியன்.

அவனிற்கு அருகே சற்றும் பொருந்தாத வகையில் ஒல்லியான உடல்வாகு…ஐந்தடி உயரம்…குறுக்கி சிறுத்த மெல்லிடை…கோதுமையும் பாலும் குழைந்தெடுத்த நிறம்…ஒளியிழந்த இரண்டு அழகிய மான் விழிகள்…கிளி போன்று வளைந்த நாசி…செர்ரி பழத்தை வெட்டி வைத்தாற் போன்று உதட்டு சாயமில்லாமலே சிவந்த கவர்ச்சியான இதழ்கள் கொண்டிருந்தாள் அவனது மனையாள் சிவதாரணி.

தோற்றத்தில் இருவருக்கும் வேற்றுமைகள் நிறைந்திருந்தாலும் அவர்களின் ஜோடி பொருத்தம் சிலரால் சிலாகிக்கப்பட்டது என்றால்,பலரால் ‘அதிருனுக்கு சற்றும் பொருந்தாத இந்த பெண்ணை எதுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்காங்க?’ என விமர்சிக்கவும் வைத்தது.

“மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன்…என் இல்லத்துணைவியாக,என் சுகதுக்கங்களில் பங்கேற்று,நிறைந்த யோகத்துடன் நீ நூற்றாண்டு காலம் வாழ்வாயாக” மாங்கல்யம் அணிவிக்கும் போது உரைக்கும் அந்த மந்திர வார்த்தையின் உட்கருத்து இதுவே.

ஆனால் அந்த வேத உபவாசத்திற்கு எதிர்மறையாக ‘பெண்ணே! மனைவியாக நீ இல்லத்தில் இருக்கலாமே ஒழிய என்றுமே நீ என் மனதை கவர்ந்த காதலியாக இருக்கமுடியாது…காலம் முழுவதும் கணவனாய் உனக்கான கடமையை நிறைவேற்றுவேனே தவிர என்றுமே அதில் நேசம் தொய்ந்து இருக்காது…என் இல்லத்துணைவியாக,என் பிள்ளைகளுக்கு தாயாக,என் தாயிற்கு மருமகளாக வாழும் யோகத்துடன் நீ நீண்ட காலம் நீடித்து வாழவேக்கூடாது’ என்ற சாபத்துடனே பெண்ணவளின் கழுத்தில் மங்கல நாணை பூட்டியிருந்தான் அந்த இருபத்தெட்டு வயது வாலிபன்.

அந்த சுப மங்கள நாளில் அமங்கல வார்த்தைகளோடு அனைவரின் ஆசியோடே அவர்களது இல்வாழ்க்கை ஆரம்பமானது.

தற்போது அவனுடைய தாயான சந்திராயினி “மகனே தாரணி நெத்தியிலும் தாலியிலும் குங்குமம் வை” என்றவுடன்,

சட்டென்று நிமிர்ந்து அவரை இமைகள் இடுங்க அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த மகனின் விழிகளை எந்த வித பயமுமின்றி எதிர்க்கொண்ட அவனது தாயோ “வைடா மகனே” என அவனிற்கு தானும் சற்றும் சளைத்தவரில்லை என்பது போல் மிடுக்குடன் கட்டளையிட்டார்.

அதில் ஆடவனின் கண்கள் இரண்டும் கொவ்வை பழம் போல் சிவந்தாலும் தங்களின் சுற்றத்தாரின் முன்பு தரம் தாழ்ந்து போக விருப்பமின்றி தன் இல்லாளின் நெற்றியில் தன் முரட்டு கரங்களை அவளை சுற்றிக் கொண்டுச் சென்று வேண்டா வெறுப்பாய் குங்குமம் வைத்தான்.

பின்பு பெண்ணவளின் மாங்கல்யத்திலும் அதே குங்குமத்தை சூட்டுகையில் அதுவரை கல்லாய் இறுகி அமர்ந்திருந்தவளின் கண்ணிலிருந்து இரு பெரிய நீர்மணிகள் அவனது கரங்களின் மீது விழுந்தன.

அதில் ஒரு நொடி கல்லாய் இறுகிய அவனது ஒட்டுமொத்த முரட்டு தேகமும் சட்டென்று சகஜநிலைக்கு மாறியது.

அடுத்த நொடியே தன் கையில் விழுந்த அவளின் கண்ணீருக்கு கூட தன்னை தீண்ட தகுதியில்லை என்பது போல் வெடுக்கென்று அதனை உதறி மணமேடையிலிருந்து எழுந்துக்கொண்டான்.

உடனே புரோகிதரோ “நான் சொல்றதுக்கு முன்னாடியே அக்னியை வலம் வர எழுந்துட்டீங்களோன்னா?” சிறிது கேலியாக கேட்க,

அவரை தன் பார்வையாலே எரித்து சாம்பலாக்கியவனை கண்டு அவர் கப்பென்று வாயை மூடிக்கொள்ள தேனில் கற்கண்டு கலந்த தித்தித்திப்பான குரலில் “அம்மாடி எழுந்திரி…அக்னியை வலம் வரணும்” என சிவதாரணியின் தோளை பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பி விட்டார் அவளின் தாய் விஜிதா.

அவளோ மந்திரத்திற்கு கட்டுண்டது போல் மற்றவர் கூறியதை செய்ய ஆயத்தமானாள்‌.

ஆடவனோ சமுதாயத்தில் அவனிற்கென்று இருக்கும் அந்தஸ்து பெயரை நீடித்து நிலைக்க வைப்பதற்காகவே தன்னவளின் கரங்களை வெடுக்கென்று பற்றி அக்னியை வலம் வரத்தொடங்கினான்.

அவளின் குட்டி பூங்கரங்கள் தன் கரடுமுரடான கரங்களுக்குள் அழுந்தி புதைந்துப்போனதை கூட அறியாமல் சீற்றத்துடனே தன் வேக எட்டுகளால் இரண்டு நிமிடத்தில் ஏழுமுறை அக்னியை சுற்றி வந்திருந்தான்.

பாவையவளின் கரங்களை முதல் முறை பற்றும் போது அவனுள் சட்டென்று ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு மனதிற்குள் எழுந்து அடங்கிட,அதுவே அவனுள் இருந்த ஆக்ரோஷத்தை தட்டியெழுப்பி அவளின் மென்கரங்களை இறுக்கி பிடிக்க வைத்ததோடு அவளை தன்னோடு வேகமாக இழுத்துச் செல்ல வைத்தது.

தாரணியின் மெல்லிய மேனியோ சிலிர்ப்பு என்ற உணர்வையே அறியாமல் ‘எதற்கு இந்த திருமணம்?யாருக்காக விருப்பமில்லாத இந்த திருமணம்?’ என்று ஒன்றும் புரியாத சிந்தனையுடன் தன் வேதனையில் உழன்றப்படியே அவனது இழுப்பிற்குச் சென்றுக்கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் அவனது கரங்களின் இறுக்கத்தின் வழியே ஆடவனின் சினத்தை உணர்ந்தவளிற்கு நெஞ்சம் சில்லிட்டுப்போனது.

அவனுடனான அவளது எதிர்க்கால வாழ்வு கண்முன் விஸ்தாரமாய் விரிய,அவளிற்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது.

அவன் கைப்பற்றிய இடத்தில் இரத்த ஓட்டம் தடையுற,அதில் வலி உச்சந்தலை வரை பரவினாலும் இதழை கடித்து விரக்தியான புன்னகையோடு சிங்கத்தின் பின்னே செல்லும் குட்டி முயலாய் அவனின் வேக நடைக்கு ஓடியவள்,அவன் ஒரு கட்டத்தில் ஏழுமுறை தன் சுற்றை முடித்துக்கொண்டு நின்றதை அறியாத தாரணியோ அவனது இழுப்பிசையின் வேகம் சற்றும் குறையாமல் தடுப்பானின்றி ஒரு மாமிச மலையின் மீது அழுத்தமாக மோதி தடுமாறினாள்.

அவனது பரந்து விரிந்த முதுகில் அவளின் மிருதுவான மதிவதனம் இடித்து வலி உயிர்ப்போக “ஸ்ஆஆஆ” என மெல்லியதாக அலறியவளிற்கு தலை கிறுகிறுப்பது போல் இருந்தது.

அவளின் சத்தத்தில் அனைவரும் அவளை ‘என்னவாகிற்று’ என்பது போல் நோக்க தன்னிச்சையாய் தன் கரம் கொண்டு நெற்றியை அழுந்த தேய்த்தவளின் விழிகள் இயலாமையில் கலங்கிப்போனது.

அவனோ பெண்ணவளின் புறம் திரும்பி அவளை மேலிருந்து கீழாக மார்க்கமாக ஒரு பார்வை பார்த்தவன்,அவளின் நலனில் அக்கறை சிறிதுமில்லாதவனாய் அலட்சியத்துடன் தோளை குலுக்கி எஃகிரும்பின் உறுதியோடு இறுகி நின்றிருந்தவனின் மனமெங்கும் வன்ம தீ கொளுந்து விட்டு எரிந்தது.

பாவையவளோ கணவனின் அக்கறையை கூட எதிர்ப்பாராதவளாய் ‘இது தான் தனக்கு விதித்த வாழ்க்கை’ என நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு அவலநிலையோடு நின்றிருந்தாள்.

அச்சந்தர்ப்பத்தில் அவளின் பூ மாலையை சரி செய்வது போல் மகளை நெருங்கிய அவளது தாய் விஜிதா “ஏய் எதுக்கு இப்போ அழுது இம்சையை கூட்டுற?நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல…இந்த கல்யாணத்தில் ஏதும் சொதப்பிச்சு நானும் உன் தங்கச்சியும் தூக்கில் தொங்கிடுவோம்” என்று சற்று நேரத்திற்கு முன்பிருந்த இனிமை முற்றிலும் அற்றவராய் பேசிய தாயின் நிஜமான சொரூபத்தை அறிந்தவளின் கண்கள் ஓரமாய் நின்றிருந்த தங்கையின் மீது படிந்து மீண்டது.

இவளின் விழியில் இருந்த நீர் சகோதரியின் சிறு பிம்பத்தை மறைத்தாலும்,அவளின் நிலைக்கண்டு மனதை தேற்றிக்கொண்டு கண்களை அழுந்தத்துடைத்து மற்றவருக்காக அழகான புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

அதை கண்டு திருப்தியுற்ற அந்த தாயுள்ளம் “மாப்பிள்ளை போனதுக்கு பிறகு வந்து உன்னை தனியா சந்திக்கிறேன்” என்ற முணுமுணுப்போடு அவளிடமிருந்து தள்ளிச் சென்றவர்,தன்னை சந்தேகத்துடன் பார்த்திருந்த சந்திராயினியிடம் ‘ஈ’ என்று முப்பத்தி இரண்டு பல்லை காட்டி இளித்து வைத்தார்.

அதற்குள் புகைப்பட கலைஞர் இருவரையும் ஒன்றாக நிற்கும் படி பரிந்துரைக்க ‘இது ஒண்ணு தான் குறைச்சல்’ என எரிச்சலோடு முணுமுணுத்தப்படி அவளருகே நெருங்கி நின்றவுடன்,பெண்ணவள் அன்னிச்சையாய் அந்நிய ஆண்மகனின் ஸ்பரிசம் தன்னை தீண்டியது போல் பதறி விலகி நின்றாள்.

அதை கண்டவனின் உள்ளம் உலைக்களமாய் கொதித்தது.

அதனால் உண்டான ஆத்திரத்தோடு மனையாள் சற்றும் எதிர்ப்பாராத நேரத்தில் சிவதாரணியின் மெல்லிடையை வெடுக்கென்று பற்றி தன் தேகம் மொத்தமும் உரசுவது போல் ஒட்டி நிற்க வைத்தான்.

அதில் பாவையவளின் நெஞ்சில் பயத்தினால் உண்டான படபடப்போடு தன்னவனை நிமிர்ந்து பார்த்திருந்த வேளையில்,அவனோ இறுகிய முகத்துடன் புகைப்படக்காரனை நோக்கி பாவித்திருந்தான்.

மனையாளின் பார்வையை உணர்ந்தவனின் கரமோ பிடித்திருந்த மெல்லியாளின் இடையில் மேலும் அழுத்தமாக பதிந்து அவளிற்கு நன்றாக வலிக்க வைத்தது.

முகத்தில் எந்த வித உணர்ச்சியுமின்றி வெறும் இதழை மட்டும் அசைத்து “என் முகத்திலே உன் காதலனோட முகம் தெரியுதானு பார்க்கறீயா?” என்றவுடன் பெண்ணவளின் மேனி மொத்தமும் விதிர்விதிர்த்து போக ‘என்ன வார்த்தை பேசறீங்க?’ என்பது போல் கணவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவளின் தொண்டையடைத்தது.

“இப்படி பார்த்தால் உண்மை இல்லைனு ஆகிடுமா?நீ பெரிய உத்தம பத்தினி தான்” என நாக்கு என்னும் தேள் கொண்டு இதழை வளைத்து பெண்ணவளை இழிவுப்படுத்தி பேசிய கணவனிடம் எதுவும் பேசாமல் இமை தாழ்த்தி இதழ்கடித்து துக்கத்தை அடக்கினாள்.

அதற்குள் புகைப்பட கலைஞர் “சார் பொண்ணு தோளில் ஒரு கையும் இடுப்பில் ஒரு கையும் வைச்சு அவங்க நெத்தியில் கிஸ் பண்ணற மாதிரி நிற்க முடியுமா?” என புகைப்பட கருவியை தன்னிலிருந்து பிரித்தப்படி கேட்க,

“ஏன் இங்கேயே குடும்பமும் நடத்தி குழந்தையும் பெத்துக்கிறேன்…அதையும் போட்டோ எடுத்துப்போடு பிளடி ராஸ்கல்…” என சத்தம் வராமல் இதழுக்குள் கெட்ட வார்த்தைகளோடு அவனை சேர்த்து திட்டியதை கேட்டவளிற்கு நாராசமாய் இருந்தது.

‘இப்படியெல்லாம் பேசுவீங்களா?’ என்பது போல் அவள்‌ அதிர்ச்சியில் விழி விரித்து அவனை ஏறிட,

அவனோ புதைப்படக்காரனிடம் தன் கூரிய வாள் போன்ற கண்ணாலே அவனை வெட்டி கூறுப்போடுவது போல் பார்த்து ‘நீ போட்டோ எடுத்தவரை போதும்’ என்பது போல் இரண்டு விரலை கத்திரிப்பது போல் சைகை காட்டி மிரட்டிக் கொண்டிருந்தான்.

புகைப்படக்காரனோ அச்சத்தில் ‘தெரியாத்தனமா வந்து சிக்கிட்டோமா?ஆத்தி பேமண்டாவது ஒண்ணாவது’ என தனக்குள்ளே புலம்பி முகம் வெளிறி மண்டபத்திலிருந்து ஓடியே விட்டான்.

சந்திராயினியும் மகனின் சினம் எல்லையை கடந்துக்கொண்டிருப்பதை அறிந்து திருமண விழாவிற்கு வந்தவர்களை விருந்துண்ண அனுப்பி வைத்திருந்தார்.

அதிருங்கழகோன் பாண்டியனின் தந்தையான ரத்தினவேல் பாண்டியனோ தனக்கும் இந்த விழாவிற்கும் தொடர்பில்லாதது போல் மூன்றாம் மனிதராய் மணமேடைக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் அவஸ்தையுடன் அமர்ந்திருந்தார்.

அவரை போலவே அவரது குடும்பத்தில் இருந்த இதர உறுப்பினர்களும் சிவதாரணியின் மீது புழுவை விட கேவலமான அற்பமான பார்வையை வீசியிருந்தார்கள்.

அதிருங்கழகோனிற்கோ தனக்கு இணையாய் நின்றிருந்த சிவதாரணியையும் அவளது தாயையும் பார்க்கையில் எல்லாம் ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே இருந்ததினால் அவனது தாயிடம் “அம்மா உங்க ஆசைக்கு கல்யாணம் பண்ணியாச்சு‌…இப்போவாது நான் கிளம்பலாமா?” என சிடுசிடுப்போடு வினவ,

அவரோ “மகனே!! வீட்டுக்கு போய் பால் பழமெல்லாம் கொடுத்திட்டு மறுவீட்டுக்கு போகணும்” என்றவுடன்,

கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழட்டிவிட்டு “மறுவீட்டுக்கெல்லாம் என்னால் போக முடியாது…அதற்கான அவசியம் எனக்கில்லை…வேணும்னா இவளை தனியா அனுப்பி விடுங்க..‌.வேற?” என ஆணவமாய் புருவம் உயர்த்த,

“டேய் இதெல்லாம் சம்பிரதாயம் டா மகனே…செய்து தான் ஆகணும்” என்னும் போதே “கோ டூ ஹெல் வித் யுவர் ரிச்சுவெல்ஸ்” என முகத்திலடித்தாற் போன்று கூறி விட்டு அங்கிருந்து செல்ல முனைந்தவனால் ஒரு அடிக்கு மேல் எடுத்து வைக்க முடியவில்லை.

ஏனெனில் அவனது வாழ்வை போலவே அவனுடைய வஸ்திரமும் பெண்ணவளின் புடவை முந்தானையோடு பின்னி பிணைந்திருந்தது.

புருவங்கள் இரண்டு நெரிய “ஷிட்” என நெற்றியை நீவியவன்,அடுத்த நொடியே சிறிதும் யோசிக்காமல் தோளில் அணிந்திருந்த வஸ்திரத்தை கழட்டி பெண்ணவளின் முகத்தில் வீசிவிட்டு விறுவிறுவென்று மண்டபத்தின் வாசலை நோக்கி தனது நீண்ட கால்களால் எட்டி நடைப்போட்டான்.

மங்கள நாணை பூட்டிய சில நிமிடங்களிலே கணவன் தன்னை உதாசீனம் செய்து தனித்து விட்டுச் செல்வதை கண்டு பாவையவள் அவமானத்தில் கூனி குறுகிப்போனாள்.

அச்சமயம் அதிருன் மண்டபத்தின் பின்னால் இருந்த இருக்கையில் தனித்து சோகமே உருவான திருவுருவாய் அமர்ந்திருந்த ஒரு இளைஞனை இகழ்ச்சியாய் இதழை வளைத்து பார்க்கவும் தவறவில்லை.

அவனது உஷ்ண பார்வையின் வீச்சை அறிந்தவனாய் தலையை உயர்த்திய அந்த இளைஞனும் அவனது விழிகளில் தெரிந்த வஞ்சத்தில் தேகம் தூக்கிவாரிப்போட நடுங்கிப்போனான்.

அவனோ ஆடவனின் கண்களில் தெரிந்த சீற்றம் கண்டு முகமெல்லாம் வியர்த்து வழிய எழுந்து நிற்பதை அறிந்தவனின் விழியில் பழிவெறியும் ஏளனமும் கூட ‘நீயெல்லாம் எனக்கு இணையானவனா?’ என்பது போல் மேலிருந்து கீழாக எகத்தாள பார்வை பார்த்தவாறே அப்படியே தலையை திருப்பி மேடையில் தனித்து நின்றிருந்த அவனுடைய மனையாளின் மதிமுகத்தில் இருந்த உணர்வுகளை அவதானித்தான்‌.

அவன் நினைத்தது போலவே அத்தனை பேரின் பார்வையை மீறி பெண்ணவளின் கண்கள் சில நொடிகள் அந்த இளைஞனை கண்டு ஏக்கத்தோடு பதிந்து மீண்டு தன் கணவனின் மீது நிலைத்தது.

அவளின் விழிகளில் ஒரு நொடி வந்து சென்ற ஏக்கத்தை அவனது கூரிய கண்கள் அளவெடுத்து கண்களில் தீப்பொறி பறந்தது.

அச்சமயம் அவனின் பக்கவாட்டிலிருந்து “மாமா” என்ற சிறுப்பெண்ணின் கூக்குரல் அவனது செவியின் வழியே இதயத்தில் நுழைந்து அவனது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பலத்த அதிர்வை கொடுக்க,சடுதியாக தலையை உலுக்கி அதிலிருந்து வெளிவந்த அதிருங்கழகோன் இருவரையும் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மண்டபத்திலிருந்து வெளியேறினான்‌.

அதனை கண்ட அனைவரின் பார்வையும் குத்தீட்டியாய் பெண்ணவளை நோக்கி உக்கிரத்துடன் பாய்ந்தது.
 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Select your currency
INR Indian rupee
Scroll to Top