காதல் மந்திரம் 2

‘உடையவன் பாராத வேலை ஒரு முழம் கட்டை’ என்பதை நன்கு உணர்ந்த வியாபார வித்தகனான ஆதித்த கரிகாலன்,தனது சொந்த விமானத்தில் சொகுசு பயணம் மேற்கொள்ளாமல் பொருளாதார வகுப்பில் சாதாரண பயணிகளுக்கான தேவைகளை பற்றிய விபரங்களை அறிவதற்காகவும்,அத்தோடு பணியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சரிவர மேற்கொள்கிறார்களா என்பதை ஒரு முதல்வனாக கண்காணிப்பதற்காகவும் இந்த பயணம் மேற்கொண்டிருந்தான்.

எந்தவொரு முன் அறிவிப்புமின்றி தடாலடியாக இறுதி நேரத்தில் தங்களுக்கு உரிமையான ஐந்து விமானத்தில் ஏதேனும் ஒன்றில் பயணம் மேற்கொள்வான் என்பதால்,அந்த நிறுவனத்தில் பணிப்புரியும் சேவகர்கள் எந்நேரமும் விழிப்புடனே இருப்பார்கள்.

அத்தோடு அவனிற்கென்று வணிக வர்த்தக பிரிவிலும் சரி,பொருளாதார வகுப்பிலும் சரி எப்போதும் முன்னிருக்கையில் ஒரு இடத்தை காலி செய்தே வைத்திருப்பவர்கள்,இறுதி நேரத்தில் அவனது வரவை பற்றிய தகவல்களை உதவியாளனின் வழியாக அறிந்து வேறொரு நபருக்கு மாற்றி விடுவார்கள்.

சிறு தவறு என்றாலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையின் அளவு விஸ்தீரணமானது என்பதால்,துப்புரவு ஊழியர்கள் முதல் மேல்நிலை பணியாளர்கள் வரை அவன் விமானத்தினுள் இருந்தாலும் இல்லையென்றாலும் வெகு தூய்மையாகவும் எந்த வித பிழையும் நேராமல் பார்த்துக்கொள்வார்கள்.

அதன்பொருட்டே அவர்களது சக்கரவர்த்தி நிறுவனம் மிக குறுகிய மாதங்களில் பெரும்பாலான மக்களின் மனதில் பிரசித்திப்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அவர்களின் மிகப்பெரிய தொழில் எதிரியான அதிருங்கழகோன் பாண்டியன் அவர்களின் தொழிலை ஒரேடியாக முடக்கி,அதிகாரத்தை கைப்பற்றியதை கேள்வியுற்ற நொடிதனில் அதுவரை இந்தியா ஒன்றையே மறந்தவனாக லண்டனில் தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவி ஆண்டுக்கொண்டிருந்த ஆதித்த கரிகாலனின் பாதம் தமிழ்நாட்டில் வேரூன்ற ஆரம்பித்தது.

அவர்கள் நிறுவனத்தின் முப்பது சதவீத பங்கு அவனின் பெயரில் மாற்றியிருப்பதை கண்டு வீறுக்கொண்டு எழுந்தவனிற்கு,அதன்பிறகு வீழ்ச்சிகள் என்பதே இல்லை.

அவர்களிடத்தே ஐம்பது சதவீத பங்குகள் உரிமையுள்ளதாக இருந்தாலும்,மிக குறைந்த அளவு பங்குகளை கொண்டே அவர்களின் தொழிலை ஆட்டம் காண வைத்திருக்கும் அவர்களின் தொழில் எதிரியின் வியூகத்தையும் திறமையையும் கண்டு வேங்கையவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆனால் அவனின் அபரிமிதமான திறமைக்கும் வல்லமைக்கும் சற்று குறையாத வன்மை பொருந்திய அறிவுக்கூர்மையும் இராஜதந்திரத்தையும் கொண்டவன் தான் சக்கரவர்த்தி குடும்பத்தின் முதல் இளைய வாரிசான ஆதித்த கரிகாலன்.

பழங்கால சோழ வம்சத்தின் வழியில் வந்த செயல் வீரன்.

இவன் தற்போதைய சக்கரவர்த்தி சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடாமன்னான அமர்வேல் சக்கரவர்த்தியின் ஒரே இளவரசன்.

அமர்வேல் சக்கரவர்த்தி நயவஞ்சகத்தனத்தையும் குள்ளநரியின் தந்திரப்புத்தியையும் மொத்தமாக உருவெடுத்து பிறந்தவர்.

அவரது சகதர்மினியான யமுனா தேவி அவர் குணங்களுக்கு முற்றிலும் எதிர்மறையாக கருணை,இரக்கம்,அன்பு,பாசம் போன்ற நற்குணங்களை அடிப்படையாக கொண்டவர்.

அமர்வேல் சக்கரவர்த்தி தன்னுடைய மகனிற்குள்ளும் தன்னுடைய தீய எண்ணங்களை புகுத்துவதை கண்டு,ஒரு தாயாய் மகனின் வாழ்க்கையை பற்றி சிந்தித்து கலங்கிப்போவார்.

ஆனால் ஆணாதிக்கம் கொண்ட தனது கணவர் அமர்வேல் சக்கரவர்த்தியை மீறி எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் மகனிற்கு தனிமையில் நற்குணங்களை போதிக்க ஆரம்பித்தார்.

சிறு வயதிலிருந்தே எதிலும் தோல்வியுற்று பழக்கமிராத ஆதியிற்கோ தாயின் நற்போதனைகளை விட தகப்பனரின் குறுக்கு வழியும் தந்திரமும் அவனின் இலக்கை அடைவதற்கு உதவியாக இருந்தது.

அதனால் ‘தான்’ என்ற அகந்தை அவனுள் உள்ளூர ஊறியதால் வெற்றியென்னும் இலக்கை அடைவதற்காக யாரையும் பழிகொடுக்கலாம் எதையும் செய்யலாம் என்ற கொள்கை அவனுள் ஸ்திரமாக உருவெடுத்திருந்தது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு,தங்களது தொழிலின் ஆணிவேரை ஆழமாக களத்தில் ஊன்றுவதற்காக தன் அடையாளத்தை வெளியுலகத்திற்கு தெரியாமல் மறைத்து அதிருன் போட்டிருந்த வேலிகளை சிறிது சிறிதாக சிக்கலின்றி அகற்ற ஆரம்பித்திருந்தான்.

அத்தோடு தங்களது நிறுவனத்திலிருந்தே அதிருனிற்கு விசுவாசமாக செயல்பட்ட பங்குதாரர்களையும் பணியாளர்களையும் கண்டறிந்து அவர்களது பலவீனத்தை தந்திரமாய் அறிந்து,அதனை வைத்தே அவர்களை வீழ்த்தி மீதமிருந்த இருபது சதவீதத்தையும் ஆராஜகமாய் கைப்பற்றியிருந்தான்.

வெளி உலகிற்கு தெரியாமல் திரை மறைவில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்தப்போதும்,சில ஊடகவியலாளர்கள் அவனின் இருப்பையும் தலையீட்டையும் மோப்பம் பிடித்து கண்டுப்பிடித்தார்கள்.

ஆனால் ‘தான் வெற்றி கொள்வதற்காக எதையும் செய்யும் ரகம் அவன்’ என்பதை அறியாமல் இவனது வழியில் நுழைந்தவர்களின் நிலை தற்போது ‘என்ன?’ என்று அறியாத வகையில் அடையாளம் காணாமல் உலகத்திலிருந்தே மறைந்துப்போனார்கள்.

இன்றளவும் அவர்களின் நிலையை பற்றிய நிஜம் அறிந்த ஒருவன் இருக்கிறான் என்றால்,அது இந்த ஆதித்த கரிகாலன் மட்டுமே!!

ஒரு வழியாய் திரை மறைவில் இருந்தே வியூகம் அமைத்து அனைத்து திருவிளையாடலையும் மேற்கொண்ட ஆதியின் முயற்சிக்கான பலன் அவனிற்கு கிடைத்தது.

ஆனால் அவனது ஒரே தலையாய எதிரியான அதிருனிடமிருந்து தங்களது பங்கை மீட்பதற்கான முயற்சியில் கடந்த ஒரு வருடமாக ஈடுப்பட்டிருக்கிறான்.

அவனது ஒரே பலவீனம் எது என்று அலசி ஆராய நேர்கையில் அவனிற்கு விடையாக கிடைத்தது,அவனது குடும்பம்!!

அவனது குடும்பத்தின் சந்தோஷத்திற்காகவும் நிம்மதிக்காகவும் எதையும் செய்ய துணிவான் என்பதை கேள்விஞானத்தால் அறிந்தவனின் இதழ்கள் கோணலாய் வளைந்தது.

அத்தோடு அதிருனின் குடும்பமான பாண்டியன் குடும்பத்திற்கும் அவர்களது குடும்பத்திற்கும் பல தலைமுறைகளையும் தாண்டி ஒரு பனிப்போர் நிகழ்ந்துக்கொண்டிருப்பதையும் தெரிந்தக்கொண்டவனிற்கு ‘அவனை மட்டுமில்லை…அவனது குடும்பத்தையும் வேரோடு அழிக்க வேண்டும்’ என்ற விபரீதமான முடிவையும் ஆடவனை எடுக்க வைத்தது‌.

சுருங்கக்கூறினால்,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற மொழியை ஏற்று அவரின் நஞ்சு தொய்ந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்க உத்தேசித்திருந்தான் தவப்புதல்வன்.

அதனால் இத்தனை நாட்கள் தான் மறைந்திருந்து பகைவர்களுக்கு எதிராக காய் நகர்த்தி வெற்றி கொண்ட காலம் முடிவு பெறுவதற்கான நாள் நெருங்கவிருப்பதை எண்ணி பூரித்தான்.

இது நாட்கள் வரை அந்த குடும்பத்தை நெருங்க முடியாமல் அரணாக இருந்த அதிருன் அவர்களது குடும்பத்திற்குள் ஏற்பட்ட மனக்கசப்பினால் வேறொரு நாட்டிற்கு ஜாகையை மாற்றிக்கொண்டான் என்பதை அறிந்து உவகை கொண்டு தன்னுடைய திட்டமிடலை துவங்கினான்.

அவன் வெளிநாட்டிற்கு சென்ற இந்த ஒரு சந்தர்ப்பமே இவர்களது குடும்பத்தில் நுழைந்து தான் நினைத்த காரியத்தை முடிப்பதற்கான ஒரே மார்க்கம் என்றறிந்து தனக்கு உரிய புத்திக்கூர்மையுடன் தந்திரத்தை மேற்கொண்டான்.

பகைவர்களோடு உறவுக்கொண்டு அவர்களுள் ஒருவனாக ஊடுருவி பிரதி உபகாரம் செய்வது போல் பிரதியோகி ஆகும் வித்தை அறிந்த தந்திரக்காரனாய் ஒவ்வொன்றையும் செயல்படுத்த தொடங்கியிருந்தான் ஆதித்த கரிகாலன்.

அதனால் வெளிப்படையாக சக்கரவர்த்தி சாம்ராஜ்ஜியத்தின் அத்தனை பொறுப்பையும் தானே பொறுப்பேற்று நடத்த தொடங்கியிருந்தான்.

மேலும்,அவர்களது தொழிலை தமிழ்நாட்டிலிருந்து உலகமெங்கும் பரவி விரவிட செய்வதற்காக அவன் செயல்படுத்தி நிறுவியதே,இந்த ‘சக்கரவர்த்தி ஏர்லைன்ஸ்’!!

அவன் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் தற்போது காமினி அவன் வாழ்வில் எதிர்ப்பாராமல் குறுக்கே நுழைந்திருந்தாள்.

பாண்டியன் குடும்பத்தில் கடைசி பெண் வாரிசு வெளிநாட்டில் படிப்பதாக கேள்வியுற்றிருந்தான்.ஆனால் அவளை புகைப்படத்தில் கூட கண்டதில்லை.

தற்போது காமினி தன் எதிரி குடும்பத்தின் குலவிளக்கு என்பதை அறிய நேர்ந்தால்,அவனது நடவடிக்கை என்னவாக இருக்கும்.

அவளை பற்றி அறிவதற்கு முன்பே பெண்ணவளின் பிம்பம் அவனின் நெஞ்சில் தவறாக பதிந்து,அவளின் மீது வெறுப்பும் கோபமும் நீக்க மற நிறைந்திருந்தது.

காமினியோ அவன் இப்போதும் திரைப்பட நடிகர் டோவினோ தாமஸ் என்று நினைத்துக்கொண்டிருந்தது பெரும் கொடுமை!!

பணிப்பெண் அனைவருக்குமான உணவை பங்கிட்டு கொடுத்துக்கொண்டிருந்ததை கண்டவளிற்கு நாக்கில் உமிழ்நீர் ஊறியது.

அந்த பணிப்பெண் பணிவுடன் சிரித்த முகமாக “மேம் வெஜ் ஆர் நான் வெஜ்?” என குனிந்து அவளிடம் வினவ,

‘ஏர்போட்டில் தான் பிரியாணியை ஒரு கட்டு கட்டலாம்ன்னு நினைச்சேன் முடியலை…இங்கியாவது ஒரு பிடி பிடிக்கணும்’ என விழிகளை உருட்டி நாக்கால் இதழ்களை ஈரம் செய்து “நான் வெஜ்” என கண்கள் பளபளக்க கூறினாள்.

அவளது அருகிலிருந்த ஆதியோ அவளை இமைகள் இடுங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது மடிகணிணியை மூடினான்.

“ஓகே மேம்” என அந்த பெண் அவளிற்கான உணவை கொடுத்துவிட்டு ஆதியிடம் மிகவும் பவ்யமாக “சார் உங்களுக்கு?” என்று வினவ,

ஆதியோ மடிகணிணியை தனது பையில் எடுத்து வைத்தவாறே “வெஜ்” என்றுரைத்தான்.

அந்த பெண் உணவை தள்ளு வண்டியிலிருந்து எடுப்பதற்காக கீழே குனிந்த நேரத்தில்,அவன் உணவை வைப்பதற்கான பலகையை எடுத்து தனக்கு நேராக இருக்கும் படி விரித்து அதனை காகித கைக்குட்டை கொண்டு சுத்தமாக துடைத்து தயாராக வைத்தான்.

அவளும் உணவு பொட்டலத்தை எடுத்து தங்கள் முதலாளியிடம் நீட்டி “சார் வாட் வுட் யூ லைக் டு டிரிங்க்?” என கேட்க,

அவன் நிமிர்ந்து பதில் கூறுவதற்கு முன்பு பாவையவள் முகம் சிவக்க “ஹலோ மேடம்…எனக்கு மட்டும் நீங்க எந்த டிரிங்கும் கொடுக்கலை…கொஞ்ச அழகா இருந்தால் அவருக்கு மட்டும் எல்லாம் கொடுப்பீங்களா?இதெல்லாம் அநியாயம்…அக்கிரமம்…நீங்க ஓரவஞ்சனை செய்யறீங்க?இதுக்காகவே இந்த ஃபிளைட் மேலே கேஸ் போடுவேன்” என சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டு சண்டையிட தொடங்கியவுடன்,

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த மூவர் இவர்களை கவனிப்பதை கண்ட ஆதிக்கு அவமானமாய் இருந்தது. 

ஆயினும்,கடுகடுத்த முகத்தை கட்டுப்படுத்தி பணிப்பெண்ணிடம் “மிஸ் ஷீத்தல் கஸ்டமர்ஸ் எல்லாம் நமக்கு கடவுள் மாதிரி…அதனால் முதல்ல அவங்களுக்கு தேவையானதை கவனிச்சிட்டு பிறகு எனக்கு கொடுங்க” என வலுக்கட்டாயமாக தங்கள் நிறுவனத்தின் பெயரை காப்பாற்றுவதற்காக சிரித்தப்படி கூறினான்.

ஆனால் உள்ளுக்குள் அவளின் மேலிருந்த கோபம் இப்போது சிறிது சிறிதாக வெஞ்சினமாக உருவெடுக்க ஆரம்பித்திருந்தது.

‘ஆமா…இவன் என்னமோ ஃப்ளைட் ஓனர் மாதிரி ரொம்ப தான் சாம்பிராணி போடறான்…ராஸ்கல்’ என மனதிற்குள் குமைந்தாள் காமினி.

அந்த பெண்ணோ இருவரின் முக மாற்றத்தையும் அறிந்து ‘தன்னுடைய வேலை பறிப்போய் விடுமோ?’ என்ற அச்சத்தில் முகம் வெளிற “சாரி சார்…சாரி மேம்…கோபப்படாதீங்க…சார்கிட்ட கேட்டுட்டு உங்ககிட்ட கேட்கலாம்ன்னு நினைச்சேன் மேம்” என அந்த பெண்ணின் குரல் நலிந்து ஒலித்தது.

அதில் இரக்கம் கொண்ட காமினி “சரி…சரி…உங்களை மன்னிச்சிட்டேன்” என்று அவளிடம் சாதாரணமாக மொழிந்தாலும்,தன் மெத்தனத்தை விட்டுக்கொடுக்காமல் “மலையாள சூப்பர் ஸ்டார் டோவினோவே சொன்ன பிறகு உங்களை நான் மன்னிக்கலைனா எப்படி?” என ஆடவனையும் வம்பிழுத்து வைத்தாள்.

அதில் ஆதியின் முகம் கடும்பாறையென இறுகியது.

அவளோ அவனின் கோபத்தை தூசியாக தட்டிவிட்டு திருப்தியாக பழச்சாறை வாங்கி பருகத்தொடங்கினாள்.

அவளின் அந்த செய்கை ஆடவனின் சீற்றத்தை அதிகரித்து,காரிகையின் கழுத்தை நெறித்து கொல்லும் வெறியை அவனுள் கொழுந்துவிட்டு தீயாய் எரிய வைத்தது.

அவள் அமைதியானதற்கு பிறகே பின்னால் இருந்த மூவரும் உணவு உண்ணும் பணியை மேற்கொள்வதை கண்டு சிறிது ஆசுவாசமடைந்தவன்,அந்த பணிப்பெண்ணிடம் “எனக்கு சாப்பாடு வேணாம்…எடுத்திட்டு போ” என என்றான் அழுத்தமான குரலில்.

“சார்” என அந்த பெண் கவலையோடு அழைக்கும் போதே,

அவனின் கண்களில் கனல் கூடுவதை கண்டு “ஓகே சார்” என அதனை அப்படியே எடுத்து குப்பை தொட்டியில் வீசினாள்.

ஒருவரின் கரத்திற்கு சென்றதற்கு பிறகு,அதனை மீண்டும் உள்ளே பாதுகாத்து மற்றவருக்கு கொடுக்கக்கூடாது என்பது நிறுவனத்தின் விதி என்பதால் அவற்றை அவள் சரியாக பின்பற்றினாள்.

பெண்ணவளோ இவனின் செயலை ஓரக்கண்ணால் கண்டுக்கொண்டாலும் தோளை அலட்சியமாய் குலுக்கி ‘சோறு…சோறு…குழம்பு…குழம்பு’ என்று உணவு ஒன்றே உயிர் வாழ்வதற்கான அருமருந்து என்பது போல் உணவை வாயிற்குள் திணித்துக்கொண்டிருந்தாள்.

அவளிற்கு பிடித்த அறுசுவை பிரியாணி இல்லையென்றாலும் இந்தியாவின் உணவை ஒத்த சாப்பாட்டின் ரூசியை கொண்டு இருந்ததால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திருப்தியான உணவை உண்டாள்.

ஆதியின் நெஞ்சமெல்லாம் தீயாய் தகிக்க,அவனின் உஷ்ணம் அருகில் இருந்தவளை எரிக்கும் சந்தர்ப்பம் வேண்டி காத்திருந்தது‌.

ஆனால் சமயோஜிதமாய் யோசித்து ‘இது அதற்கான இடமில்லை’ என்று உச்சக்கட்ட சினத்திலும் வெடிக்க காத்திருக்கும் எரிமலையை அடக்கி கண்கள் மூடி தனக்குள்ளே குமுறி கொண்டிருந்தான்.

அவளோ தனது வயிற்றை நிரப்பியதற்கு பிறகு தனக்கு எதிரே உள்ள மின்னணு திரையில் ‘மிஸ்டர் பீன்’ படத்தை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

அவள் சிரிப்பின் ஒலி அவனின் காதில் விழுந்து குடைய ‘பார்த்த முதல் நாளே என் நிம்மதியை பறித்துவிட்டு நீ மட்டும் சந்தோஷமா இருப்பாயா?இனி ஒவ்வொரு நாளும் உனக்கு நரகம் என்றால் என்னவென்று காட்டறேன்’ என உள்ளுக்குள் பழி வாங்கும் வெறியோட சூளுரைத்தவனின் தந்திரத்தால் பட்டாம்பூச்சியாய் சுற்றிக் கொண்டிருக்கும் பாவையவளின் சிறகுகள் முறிந்துவிடுமா அல்லது எரிந்து சாம்பலாக்குமா?

ஒரு வழியாய் காமினியின் உபயத்தால் வெறும் வயிற்றோடு இந்தியா வந்திறங்கியவனின் விழிகள் இரண்டும் வன்மத்தில் சிவக்க “இனி என் வாழ்க்கையில் உன்னை ஒரு முறை கூட பார்க்கக்கூடாது…அப்படி என்னைக்காவது உன்னை நான் திரும்ப பார்த்திட்டன்னா அன்னைக்கு நீ தொலைஞ்சே…காட் இட்” என அவனது ஆவேசம் கலந்த பேச்சில் பெண்ணவளின் இதயம் அச்சத்தில் உறைந்தாலும் அவளிற்கே உரிய குறும்பு குணம் தலைதூக்க “உங்களோட அடுத்த படத்தோட சினிமா டயலாக்கா?ரொம்ப கேவலமா இருக்கு டோவினோ சார்…பை” என இகழ்ச்சியாக உரைத்துவிட்டு தனது பெட்டியை தள்ளிக்கொண்டு செல்ல ஆரம்பித்தாள்.

தனது நீண்ட கரங்கள் கொண்டு பெண்ணவளின் பெட்டியின் கைப்பிடியை இறுக பற்றி அவளை நிறுத்தியவன்,அவள் புருவம் நெறிய ‘என்ன’ என்று திரும்பி பார்க்கவும்,

தனக்கே உரிய அகந்தையுடன் ஒற்றை புருவத்தை எகத்தாளமாக உயர்த்தி நிமிர்ந்து நேராக நின்றிருந்தவனின் தோற்றம் கிலியை கொடுத்தது.

அத்தோடு ‘நான் சொன்னதை கண்டிப்பாக செய்வேன்’ என்ற தீரம் அவன் கண்களில் தெரிவதோடு அதிலிருந்த உறுதியான செய்தி கன்னிகையின் நெஞ்சத்தில் குளிர்ப்பரவ செய்தது.

அதுவரை விளையாட்டாக அவனை நினைத்திருந்தவளிற்குள் இப்போது அவனது வார்த்தைகளும் பார்வையின் வீச்சும் சிறிது சிறிதாக தேகத்தில் ஒரு நடுக்கத்தை கொடுத்தது.

அதனால் அவனின் கண்களை நேருக்கு நேராக பார்க்க இயலாமல் திடுக்கிட்டு இமைகளை தாழ்த்தி படபடப்புடன் “பாஸ் நான் போகணும் விடுங்க” என முணுமுணுத்தவளை கண்டு இதழை கோணலாக வளைத்து புன்னகைத்தவன் “இனி நம்ப சந்திப்பு நிகழக்கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கோ…அப்படி நிகழ்ந்தால் அதுவே உன் அழிவிற்கான ஆரம்பம்” என்றவுடன்,

அவளின் தேகம் தூக்கிவாரிப்போட விதிர்விதிர்த்து போய் நிமிர்ந்தவளின் கண்களை நேருக்கு நேராக சந்தித்தவன்,அவளின் காதருகே குனிந்து “மரணத்தை விட கொடூரமான ஒரு தண்டனை கிடைக்கும்” உயிரை ஊடூருவும் குரலில் அதே சமயம் ‘நிச்சயம் செய்வேன்’ என திடமாக சொற்களை உரைத்து,காரிகையின் உள்ளத்தில் பெரும் திகிலை ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டான்.

பாவையவளோ அவன் கூறி சென்ற வார்த்தைகளின் கணம் தாங்காமல் அச்சத்தில் உறைந்துப்போய் அவ்விடத்திலே சில நிமிடங்கள் நின்றுவிட்டாள்.

அப்போது சிலையாய் உறைந்து இருந்தவளின் தோளின் மீது ஒரு வலிய கரம் பதிந்தது.

அதில் திடுக்கிட்டு துள்ளி விலகியவளின் முன் அவளின் தந்தையான சுந்தரவேல் நின்றிருந்தார்.

“பாப்பு ஃப்ளைட் வந்து இவ்வளவு நேரமாகிடுச்சு..‌.இன்னும் இங்க நின்னு என்ன கனவு கண்டுட்டு இருக்க?” என சற்றே கடித்தவர்,மகளின் வெண்ணிற முகம் மேலும் வெளிறியிருப்பதை கூர்ந்து கவனித்து “பாப்பு ஏதாவது பிரச்சனையா?” என்றார் புருவங்கள் சுருங்க.

அதன்பிறகே தலையை உலுக்கி நிகழ்விற்கு வந்த காமினி ஏதோ நினைவில் “ஒண்ணுமில்லை டாடி சாமி…ஒரு ராஸ்கல் என்கிட்ட ஓவரா பேசிட்டான்” என்றவுடன் ஒரு தந்தையாக கொதித்தெழுந்தவர் “யாரு பாப்பு அவன்?அதுவும் பாண்டியன் குடும்பத்து பொண்ணுகிட்டே தப்பா நடந்துக்கிறான்னா அவனுக்கு என்ன நெஞ்சழுத்தம் இருக்கும்?நீ யாருன்னு மட்டும் சொல்லு…அவனை இன்னைக்கே கொன்னு மண்ணுக்குள்ள வைச்சு புதைச்சிடறேன்” என சரமாரியாக கேள்விகளை எழுப்பி மீசையை முறுக்கிவிட்டு ஆவேசமாக சண்டைக்கு தயாராகி அக்கம் பக்கத்தில் ஆளை தேட ஆரம்பித்தார்.

தந்தையின் அந்த அன்பில் நெகிழ்ந்தவள்,சுந்தரவேலின் கன்னத்தை பற்றி கிள்ளி “டாடி அப்படி எவனாவது பண்ணியிருந்தால் அவனை நான் சும்மாவா விட்டிருப்பேனா நினைக்கிறீங்க…இது வேற…அந்த ஆள் எல்லாம் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை…அவன் கிடக்குறான்..
லூசுப்பையன்…நீங்க வாங்க…போகலாம்” என அவரை சமாதானம் செய்து அழைத்துச்சென்றவளின் மனதிற்குள் சிறு நெருடல் இருந்துக்கொண்டே இருந்தது.

ஆயினும்,அதற்கு மேல் ஒரு நடிகனான அவனை பற்றிய எண்ணங்கள் அவசியமில்லை என்று நினைத்து அதனை ஒதுக்கிவிட்டாள்.

ஆனால் அவனின் வார்த்தைகளை வெகு சாதாராணமாக நிராகரித்தற்கான தண்டனையை அவள் மிக விரைவிலே அனுபவிக்கப்போகிறாள் என்பதை அப்போது அறியவில்லை.

பூகம்பம்,சூறாவளி இரண்டும் ஒரே நேரத்தில் ஆதித்த கரிகாலன் என்னும் வடிவில் விஸ்வரூபம் எடுத்து பெண்ணவளை வாட்டி வதைக்கவிருக்கிறது என்பதையும் அறியாமல் போனது இந்த பேதை உள்ளம்!!

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Select your currency
USD United States (US) dollar
Scroll to Top