காதல் மந்திரம் 1

லண்டன் மாநகரம்,

ஹீத்ரோ விமானநிலையம்

அது ஒரு சர்வ தேச விமான நிலையம் என்பதால் பல ஆயிரக்கணக்கான பயணிகளின் வருகையால் அவ்விடமே நிறைந்திருந்தது.

இன்னும் சற்று நேரத்தில் இந்தியா புறப்படவிருக்கும் பயணியர்களுக்கான இறுதி அழைப்பைப் பற்றிய தகவல் ஒலிப்பெருக்கியின் வழியாக தெரிவிக்கப்பட்டு கொண்டிருந்தது.

அனைத்து விமான பயணிகளும் விமானத்தில் ஏறி சாவகாசமாக தங்கள் இருப்பிடத்தில் அமர்ந்த நிலையில்,ஓட்டுனர் இயந்திரங்களை இயக்குவதற்கான பொத்தான்களை அவசரமாக அழுத்த தொடங்கினார்.

இறுதியாக,விமானத்தின் நுழைவாயிலிற்கு செல்வதற்கான வழிகள் கருப்பு நிற பட்டைகள் கொண்டு அடைக்கப்பட்ட நிலையில் “ஹே கேர்ள் ஹோல்ட்…வெயிட் ஐயம் கம்மிங்” என அவ்விடமே அதிர கத்திக்கொண்டே ஒரு இருப்பத்தி மூன்று வயது யுவதி தன்னுடைய உடைமைகள் அடங்கிய பெட்டியை தள்ளிக்கொண்டு மூச்சிறைக்க ஓடி வந்தாள்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய சம்பிராஜ்ஜியமான பாண்டியன் குடும்பத்தின் பெண் வாரிசுகளில் ஒருவள் தான்,இந்த காமினி பாண்டியன்.

வெளிநாட்டில் தன் படிப்பை முடித்துக்கொண்டு பிறந்தகத்திற்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் ஒரு சுப நிகழ்விற்காக இந்தியா செல்லவிருக்கிறாள்.

சுண்டினால் இரத்தம் வரும் பால் வெள்ளை நிறத்தில் இடை வரை தாண்டிய சுருள் சுருளாக விரிந்த கூந்தல் இங்கும் அங்கும் அசைந்தாட,முட்டிக்கு மேலே வரையிலான மஞ்சள் நிற குர்த்தியும்,கீழே நீல நிற லெனின் ஜீன்ஸூம் அணிந்து வந்த வண்ணமயிலை கண்டு அங்கிருந்த ஆண்கள் சிலரின் பார்வை சுவாரசியமாக படிந்தது.

ஆனால் அந்த பெண்ணோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் விமானத்தில் ஏறுவது ஒன்றே குறிக்கோளாக குனிந்து கால் முட்டியின் மீது கையூன்றி மூச்சிறைக்க “நா…ன் உ..ள்ள போ..கணும்” என திக்கி திணறி கூறினாள்.(ஆங்கில உரையாடல் தமிழில்)

மெழுகு பொம்மை போல் ஒப்பனையுடன் நின்றிருந்த அந்த பணிப்பெண்ணோ “சாரி மேம்‌..ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகப்போகுது…சோ நாங்க போர்டிங் க்ளோஸ் பண்ணிட்டோம்” என சிரித்தவாறே உறுதியான குரலில் கூறினாள்.

அவளோ அப்போதும் துவண்டு விடாமல் நிமிர்ந்து நேராக நின்று கண்கள் சுருக்கி “மேம் பிளீஸ்…ஐ ரிக்வெஸ்ட் யூ…டேக்ஸி டிராப்பிக்கில் புகுந்து வர லேட் ஆகிடுச்சு…இல்லைனா நான் சீக்கிரம் வந்திருப்பேன்…இன்னைக்கு நான் என் நாட்டுக்கு போயாகணும்…இட்ஸ் அர்ஜென்ட்” என கெஞ்சல் குரலில் பல வித பாவனைகளுடன் இறைஞ்சியவளை கண்டு பாவமாக இருந்தாலும் “நோ மேம்…உள்ள பய்லெட் சிக்னல் கொடுத்திட்டால் நாங்க போர்டிங் க்ளோஸ் பண்ணிடனும்…இது கம்பெனி ரூல்ஸ்” என்றாள் அழுத்தமான குரலில்.

‘உங்க கம்பெனி ரூல்ஸை சாணியில் முக்கி அடிக்க…நாசமாப்போன ரூல்ஸ் வைச்சு என் உயிரை எடுக்கறான் பாவி பயல்’ என சிரித்தவாறே அந்த வெளிநாட்டு பெண் அறியாமல் தமிழில் முணுமுணுத்தவள்,

“என்கிட்ட விவாதம் பண்ணற நேரத்துக்கு என்னை உள்ள விட்டிருந்தால் இந்நேரம் நான் ஃப்ளைட்டில் ஜாலியா பறந்திருப்பேன்” என கண்ணாடியின் வழியாக புறப்பட ஏதுவாக புசுபுசுவென புகைவிட்டு கொண்டிருந்த விமானத்தை பார்த்து ஏக்க பெருமூச்சுவிட்டாள்.

அவளின் சிறுப்பிள்ளைதனமான செயல் அவர்களை கவர்ந்தாலும் நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்றியாக வேண்டிய கட்டாயம்!!

அதனால் தங்கள் பிடியில் உறுதியாக நிற்க,காமினியோ இறுதி வாய்ப்பாக கண்கள் சுருக்கி “மேம்…மேம்…பிளீஸ்…பிளீஸ்…நான் எதுக்கு இந்தியா போறேன்னு தெரிந்தால் நீங்களே என்னை தூக்கிட்டு போய் ப்ளைட்டில் விட்டிருவீங்க” என இதழை பிதுக்கி பாவமாக முகத்தை வைத்து கூறியவளிடம் “எதுக்கு மேம்?” என பணிப்பெண்ணிற்கு அருகே அதுவரை அமைதியாக நின்றிருந்த ஆடவன் வழிந்துக்கொண்டு ஆர்வமாக வினவினான்.

அதில் முகத்தை சுழித்து ‘ஐய்யே சனியன்…இவன் வேற நேரம் காலம் தெரியாமல் நம்பகிட்ட வழியறான்…பரதேசி’ என சிறிது சத்தமாக முணுமுணுத்து மானசீகமாக தலையலடித்தவள்,

இப்போது அவன் புறம் திரும்பி முகத்தை சோகமாக வைத்து “சார் எங்க தாத்தா செத்துப்போயிட்டார்…தெரியுமா?அவருக்கு காமினினா உசுரு…நான் ஊருக்கு போகாமல் அவர் சமாதிக்கு போகமாட்டேன்னு அடம் பிடிப்… “ என கூறிக்கொண்டே சென்றவள் தன் சொற்களின் முரண்பாட்டை உணர்ந்து ஒற்றை கண் மூடி நாக்கை கடித்தவள் “இல்லை…இல்லை” என தலையசைத்து “என்னை பார்த்தால் தான் அவரோட ஆன்மா சாந்தி அடையுமாம்” என சொற்களை மாற்றி போட்டு வராத கண்ணீரை துடைத்ததோடு,ஏற்கனவே சொர்க்கலோகம் சென்றுவிட்டவரை மீண்டும் ஒரு முறை சாகடித்தாள் இந்த குறும்புக்காரி.

அவள் பல வகையில் நடித்து நாடகமாடியப்போதும் அவர்கள் யாவரும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை என்றானவுடன்,அவளின் வெண்ணிற முகத்தில் சிவப்பேற “அடப்போடி டால்டா தலைச்சு…நீயும் என்னை ஏத்திட்டு போகாத உன் பிளைட்டும் உருப்படாமல் தான் போகும்…ஹூம்” என சப்தமாக அவர்களுக்கு சாபம் கொடுத்து தலையை சிலுப்பி பெட்டியை இழுத்துக்கொண்டு சென்றாள்.

சட்டென்று ஏதோ தோன்றியவளாக ஆவேசமாக அவர்களை நோக்கி திரும்பி வந்த காமினி தன்னையே குறுகுறுவென பார்த்திருந்த வெளிநாட்டவனை தீயாய் முறைத்து “இப்படி என்னையே குறுகுறுன்னு பார்க்கறயே…நீயெல்லாம் அக்கா தங்கச்சிக்கூட புறக்கலையா? பரதேசி…பரதேசி” என பல்லை நறநறவென கடித்து வெளிப்படையாக அவனை ஒற்றை கை நீட்டி திட்டினாள்.

ஆனால் அவர்களோ விருது வழங்கியது போல் ‘ஈ’ என இளித்தப்படி இருக்க,

“சுரணை கெட்ட ஜென்மங்கள்” என வெளிப்படையாக வசைப்பாடி கூந்தலை அள்ளி முடிந்து கொண்டையிட்டு இதழை சுழித்து பழிப்பு காட்டியவாறு பெட்டியை இழுத்து சென்றாள்.

அவர்களோ அவள் பேசிவிட்டு சென்ற சொல்லின் பொருள் அறியாமல் திருதிருவென விழித்திருந்தார்கள்.

‘எல்லாம் என்கூட சுத்தற ஏழரையால் வந்தது…எப்போ பார்த்தாலும் என்னையே சுத்தி வரீயே…உனக்கு மனசாட்சியே இல்லையா?போவேன் போய் மீதியிருக்கிற பதினொன்னையும் புடிச்சுக்கிட்டு தொங்க வேண்டியது தானே…நீ மட்டும் கையில் கிடை…மவனே உனக்கு சங்கு தான்டி’ என சனிப்பகவானையும் விட்டு வைக்காமல் அவரையும் வாயிற்குள் போட்டு மென்று அரைத்துக்கொண்டே நடந்தவளிற்கு பசி வேறு வயிற்றை கிள்ளியது.

காமினி வேறு ‘என்ன நடந்தாலும் சோறு முக்கியம் பிகிலு’ என்னும் ரகம்!!

தற்போது அவளிற்கு இருக்கும் அகோர பசியினாலும் கோபத்தினாலும் அவளின் விருப்பமான உணவான ‘பிரியாணி’ சாப்பிட வேண்டும் போல் தோன்றியது.

‘இங்கு அயல் நாட்டு விமான நிலையத்தில் பிரியாணி என்ன?ஒரு ஆணி‌ கூட கிடைக்காது’ என தன்னை தானே சமாதானம் செய்துக்கொண்டு துரித வகை உணவுகள் அடங்கிய விடுதி ஒன்றினுள் நுழைந்தாள்.

தனக்கு தேவையான சில வகை உணவுகளை வாங்கி உண்டதற்கு பிறகே அவளின் கோபம் மட்டுப்பட,அடுத்ததாக இந்தியா செல்வதற்கான விமானம் எப்போது என்ற விபரத்தை ஆராய முனைந்தாள்.

‘விளங்கிடும்…நீ இன்னைக்கு இந்தியா கிளம்பின மாதிரி தான்’ என சலித்த மனசாட்சியை ‘நீ செத்த உன் திருவாய மூடு’ என அடக்கிவிட்டு தேடுதலில் ஈடுப்பட்டாள்.

அவளின் நல்ல நேரம் அன்றே வேறொரு நிறுவனத்தை சார்ந்த விமானத்தில் அவளிற்கு இடம் கிடைத்தது.

“ஊப்” என இழுத்து வைத்த பெருமூச்சை வெளியிட்டவள் ‘நல்லவேளை இடம் கிடைச்சிருச்சு இல்ல இந்த டாடி சாமிக்கிட்ட யாரு திட்டு வாங்கறது?’ என மனதிற்குள் புலம்பிக்கொண்டே,விமானத்திற்கான பரிசோதனை பிரிவிற்கு சென்றாள்.

ஒரு சில நிறுவனங்கள் விமானத்தின் நுழைவாயிலிலும் உடைமைகளுக்கான பரிசோனையை மேற்கொள்ளும்.

அவ்வகையில் ‘சக்கரவர்த்தி ஏர்லைன்ஸ்’ என்ற நிறுவனமும் பயணிகளின் உடைமைகளையும் ஆட்களையும் அனைவரின் பாதுகாப்பிற்காக மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்தப்பிறகே விமானத்தினுள் அனுப்புவார்கள்.

இதனை அறிந்த காமினி ‘எங்கயிருந்துடா வரீங்க நீங்கயெல்லாம்?’ என தனக்குள்ளே வடிவேல் பாணியில் முனகிக்கொண்டே,தன்னுடைய பரிசோதனையை முடித்துக்கொண்டு ஒரு வழியாய் விமானத்தில் ஏறி தன் இருக்கையில் ‘ஹப்பாடா’ என தொப்பென்று அமர்ந்தாள்.

அவசரமாக விமானத்தில் பயணச்சீட்டை பதிவு செய்திருந்ததால் அவளிற்கு வர்த்தக வகுப்பினர் பிரிவில் இடம் கிடைக்கவில்லை.

பொருளாதார வகுப்பில் அதிலும் முன்னிலையில் உள்ள இருக்கையிலே கிடைத்ததினால் வேறு வழியின்றி சமாளித்துக்கொள்ளலாம் என்றெண்ணி சகஜமாக அமர்ந்து விழி மூடினாள்.

அப்போது அவளருகே உள்ள காலியான இருக்கையில் ஆள் அமரும் அரவம் உணர்ந்தாள்.

அவள் சற்றே தாராளமாக காலை விரித்து உட்கார்ந்திருந்ததால்,அருகே அமர்ந்த ஆளின் கால் பெண்ணவளின் தொடையை உரசிச்சென்றது.

அதில் தன் தேகமெல்லாம் மின்சாரம் தாக்கிய உணர்வில் விதிர்விதிர்த்து கண் திறந்தவள்,அவசரமாக காலை தன்புறம் இழுத்துக்கொண்டாள்.

தலையை திருப்பி தன்னருகே அமர்ந்திருந்த ஆசாமியை ஒரு வழி செய்வதற்காக திரும்பியவளின் விழிகள் இரண்டும் திகைப்பில் முகிழ்ந்தது.

ஏனெனில்,அவளின் அருகே அமர்ந்திருந்த அந்த ஆண்மகன் பிரபல திரைப்பட கதாநாயகன் டோவினோ தாமஸின் உருவ ஒற்றுமையை ஒத்து இருந்ததினால்,

‘ஒருவேளை அவர் தான் என்னோட பயணம் செய்ய போறாரோ?’ என மனம் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க குதுகலித்தாள்.

வசீகர தோற்றுத்துடன் இருந்த அந்த ஆண்மகனை கண்டு இமைகளை சாசர் போல் விரித்து தனது குட்டி செப்பு இதழை பிளந்து இருக்கையில் தனது கைமுட்டியை ஊன்றி கன்னத்தில் வைத்தவள் ‘இதுவும் ஒரு மாதிரி ஜாலியா தான் இருக்கு இல்லை’ என அவனை ரசனையோடு பார்த்திருந்தாள்.

சந்தனமும் வெண்ணையும் குழைந்தெடுத்த நிறத்தில் ஆண்மையின் அழகை பிரகடனம் படுத்தும் வகையில் ஆறடி இரண்டு அங்குல உயரத்தில்,கருப்பு நிற முழுக்கை சட்டை அணிந்து கைகளை முட்டிக்கு மேலே மடக்கி விட்டிருந்ததால் அதன் வழியாக வெளிப்பட்ட முறுக்கேறிய புஜங்களும்,இறுக்கிப்பிடித்த சட்டையின் மூலம் திமிறிக்கொண்டு வெளிப்படும் புடைத்திருந்த மார்புகளின் திண்ணக்கமும் பறவையின் இறக்கை போல் பரந்து விரிந்திருந்த தோள்களும்,உடற்பயிற்சினால் உருண்டு திரண்டிருந்த தசைக்கோளங்களும் என ஒட்டுமொத்த ஆண்மகனின் தீரத்தை வெளிப்படுத்திய கம்பீர தோற்றமும் தோரணையும் பெண்ணவளை மிகவும் கவர்ந்தது.

அதனால் அவனின் மீதூறும் கண்களை அகற்ற முடியாமல் அசையாமல் பார்த்திருந்தவளின் பார்வை அருகில் இருப்பவனிற்கு ஒரு மாதிரி சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அதனால் அவன் “ம்க்கும்” என தொண்டையை செரும,

அவளோ வாயில் ‘ஈ’ போவது கூட தெரியாதது போல் திறந்த வாயை மூடாமல் இருப்பதை இமைகள் இடுங்க நோக்கியவன் “எக்ஸ்க்யூஸ் மீ” என்றான் சினம் மிகுந்த குரலில்.

அதில் கவனம் களைந்து இமை சிமிட்டி படபடத்தவள் “நீங்க மலையாளம் ஆக்டர் டோவினோ தானே?” என ஆர்வமாக வினவ,

அவனோ அவளை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தியவன் “பார்டன்” என எரிச்சலாக வினவினான்.

வெளிநாட்டில் கல்வி பயின்றவளிற்கு அச்சொல்லின் பொருள் விளங்கினாலும்,தனது கனவு நாயகனின் மீது உண்டான மயக்கத்தால் உளற ஆரம்பித்தாள்.

“பாடவா?சாரி எனக்கு ஆட மட்டும் தான் வரும் பாஸ்” என வாயெல்லாம் பல்லாக இளித்ததோடு,

“நான் பாடினால் கழுதை கூட பின்னங்கால் பிடரியில் அடித்து ஓடிரும்…நான் சொல்லலை…என் சிஸ்டர் யாமினி லூசு தான் சொன்னாள்…பாஸ் உங்களுக்கு வேணும்னா நான் ஆடிக்கட்டவா?” என கையில் அபிநயம் பிடித்து கண்களை உருட்டியவளின் கரம் ஆடவனின் நெஞ்சுரம் கொண்ட மார்பின் மீது அழுத்தமாக மோதி சென்றது.

அதில் வெகுண்டவனின் முகம் கோபத்தில் இறுகிவிட “ஷிட்” என சத்தமாக முணுமுணுத்து கீழே குனிந்து அவள் கரம் பட்ட இடத்தை ஒவ்வாமையுடன் தன் காகித கைக்குட்டை கொண்டு துடைத்தான்.

அவளோ தன் கரம் பட்டு அவனது சட்டையில் ஏதேனும் ஆகிவிட்டதோ என பதறி “டோவினோ சார்…சாரி…என் கைப்பட்டு அந்த இடம் அழுக்காகிடுச்சா?எங்க காட்டுங்க…நான் துடைச்சு விடறேன்” என எட்டி அவளின் பூங்கரம் கொண்டு அவனின் மார்பை அழுத்தி தேய்க்க,

அதில் ருத்ரமூர்த்தியாய் சிவந்தவன் வெடுக்கென்று அவளின் கரத்தை தட்டிவிட்டு எழுந்து நின்றான்.

குனிந்து அவளை வெறுப்போடு நோக்கி “ஆர் யூ மேட்?” என இதழ்பிரித்து அதிக சத்தம் வராமல் அதேசமயம் கர்ஜனையுடன் வெளிவந்த அவன் குரல் கேட்டு பாவையவளின் மெல்லிய மேனி அச்சத்தில் சிலிர்த்தது.

ஆயினும்,குழந்தையுள்ளம் கொண்ட குமரியவளோ அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் அவனை ஏறிட்டு “சார் உங்க வாய்ஸ் படத்தில் ஒரு மாதிரி இருக்கு…நேரில் ஒரு மாதிரி இருக்கு…மலையாளம் உங்க லேங்குவேஜ் தானே…அப்புறம் ஏன் டப் பண்ணறீங்க?” என கன்னத்தில் கை வைத்து அதி முக்கியமான சந்தேகத்தை கேட்டாள்.

அவனோ கண்கள் இரண்டும் நெருப்பாய் தகிக்க எரிமலையின் சீற்றத்தோடு பெண்ணவளை தீயாய் உறுத்து விழித்தான்.

அவையனைத்தும் இரண்டு வினாடி மட்டுமே!

அடுத்த நொடியே,தலையை சிலுப்பி இரண்டு அடி தள்ளி நின்றிருந்த ஒரு பணிப்பெண்ணை விரல் சொடக்கிட்டு அருகழைத்தான்.

அவள் “சார்” என பதட்டத்துடன் அருகே வந்தவுடன் “இந்த ஜந்துவை இமிடியட்டா டிஸ்போஸ் பண்ணு” என காமினியை ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்ட,

அந்த பெண்ணோ ‘ஏதே’ என திருதிருவென விழிக்க,

அதுவரை ஆசுவாசமாய் அமர்ந்திருந்த காமினியிற்கோ அவனின் சொற்கள் கட்டுக்கடங்காத சினத்தை கொடுத்தது.

அதனால் சண்டக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டு அவனிற்கு நிகராக எழுந்து நின்றவள் “எது நான் ஜந்துவா?” என பல்லை கடித்து சீறினாள்.

அவனின் விழிகளோ ஒரு நொடி இளமை பொங்கும் பெண்மையின் மீது அழுத்தமாக படிந்து மீள “இடியட்…டோன்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்?” என பற்களை கடித்து துப்பி சிகையை அழுந்தக்கோதினான்.

பாவையவளோ அவனின் சற்றே எல்லை மீறிய பார்வையை அறியாமல் “அதெல்லாம் எனக்கு நிறையவே இருக்கு…உங்களுக்கு தான் இல்லைன்னு நினைக்கிறேன்” என எகிற,

“ஷட் அப்…டோன்ட் மேக் ஆ சீன்” என இவளிடம் கத்திவிட்டு அந்த பணிப்பெண்ணிடம் திரும்பி “இவளை பிடிச்சு முதல்ல பிளைட்டிலிருந்து வெளிய தள்ளு…கீழே விழுந்து சாகட்டும்” என நாசி விடைக்க தமிழும் ஆங்கிலமும் அல்லாத வேறொரு மொழியில் உறுமினான்.

அதற்கான அர்த்தம் பாவையவளிற்கு புரியவில்லை என்றாலும்,அவன் தன்னை பற்றி ஏடாக்கூடமாக ஏதோ உரைத்திருக்கிறான் என்பதை பணிப்பெண்ணின் வித்தியாசமான பாவனை கொண்டு அறிந்தவள் “ஹலோ நீங்க பெரிய ஹீரோவா இருக்கலாம்…அதுக்காக என்னை பத்தி அந்த பொண்ணுகிட்ட கழுவி ஊத்துவீங்களா?இன்னையிலிருந்து என் ஃபேவரைட் ஹீரோ கேட்டகிரியிலிருந்து உங்களை தூக்கிட்டேன்” என அரசாளும் மகாராணியின் தோரணையோடு தெனாவட்டாக பேசியவளை ‘வெட்டவா? குத்தவா?’ என்பது போல் முறைத்தான் சக்கரவர்த்தி விமான நிறுவனத்தின் தற்போதைய ஒற்றை ஆண் வாரிசான ஆதித்த கரிகாலன்.

அவளோ தனது கனவு நாயகன் டோவினோ தாமஸ் என்ற ரீதியில் இளக்காரமாக பேசிக்கொண்டிருக்க, உலகத்தையே தன் ஒற்றை கரத்தில் சிறைப்பிடிக்க நினைக்கும் ஏ.கே என்ற அசகாயசூரனான வியாபார தந்திரியிடம் விவாதம் செய்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் போனாள்.

அவளை கண்ணால் உறுத்து விழித்தவன் “யூ டேம் இட்” என வார்த்தையை கடித்து துப்பிவிட்டு பணிப்பெண்ணிடம் “எனக்கு இந்த லேடி பக்கத்தில் உட்கார விருப்பமில்லை…வேற சீட் அரேன்ஜ் பண்ணு” என மற்றொமொரு ஆணை பிறப்பித்தான்.

“சார் யூ பிளீஸ் பீ சீட்டெட்…கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…ஃபிளைட் மேலே பறந்த பிறகு உங்களுக்கு வேற சீட் அரேன்ஜ் பண்ணி தரேன்…கேப்டன் கிளம்பறதுக்கான சிக்னல் கொடுத்திட்டார்” என இறைஞ்சல் குரலில் கேட்டதினால் வேறு வழியின்றி அதே இருக்கையில் அமர்ந்தான்.

கூடவே விமானத்தில் இருப்பவர்களின் பார்வை தங்களின் மேல் சுவாரசியமாக பதிவதை விரும்பாமல் ‘எல்லாம் இவளால் தான்’ என கழுத்து நரம்புகள் புடைக்க அவளை முறைத்துக்கொண்டே அமர்ந்துக்கொண்டான் ஆதி.

‘ஆமா இவர் பெரிய மதகன மகாராஜா…சொன்னவுடனே சீட் மாத்திவிடுவாங்க…ஹூம்’ என இதழை சுழித்து பழிப்புக்காட்டி உம்மென்ற முகத்துடன் அவளும் அமர்ந்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு,ஆடவன் இடது புருவம் உயர தனக்கு வலதுப்புறமாக பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்தவளை நோக்கி திரும்பினான்.

அவளின் மீது எகத்தாளமான பார்வை ஒன்றை செலுத்தியவன் “கீப் டிஸ்டன்ஸ்” என ஒற்றை விரலால் இருவருக்குமிடையே உள்ள இடைவெளியை சுட்டிக்காட்டினான்.

அதில் கடுப்பாகி அவன்புறம் திரும்பியவள் “அதையே தான் நானும் சொல்லறேன்…நீங்களும் என்னை விட்டு தள்ளியே இருங்க…எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு” என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி தெனாவெட்டாக.

அதற்கு இகழ்ச்சி கலந்த பார்வையை அவள் மீது வீசிய ஆடவனின் இதழ்களோ “அந்த அப்பாவி ஜீவனுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என முணுமுணுத்து வைத்தது.

நல்லவேளையாக அவனின் பேச்சுகள் பாவையவளின் செவியில் விழவில்லை.

ஏனெனில்,அவள் எப்போதோ தனது இருக்கை பட்டியை போட்டுக்கொண்டு இதழை குவித்து அலைப்பேசியில் தன்னுடைய உருவத்தை புகைப்படங்களாக சேமிக்க தொடங்கியிருந்தாள்.

தான்மி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த சுவாரசியத்திலோ அல்லது இவன் திரைப்பட நடிகன் என்பதலோ ஏதேச்சையாக அவன் புறமாக சாய்வது போல் அவனையும் தன்னோடு இணைந்து ஒரு புகைப்படத்தை எடுத்திருந்தாள்.

நாளை தனது தோழிகள் அனைவரிடமும் ‘நடிகர் டோவினோ தாமஸோடு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்’ என அதனை காட்டி பெருமைகொள்ளவதற்கு எத்தனித்தாள்.

அவனோ இவளது அட்டகாசத்தில் எழுந்த சினத்தை இமை மூடி அடக்க போராடிக்கொண்டிருந்தான்.

உறக்கத்திலும் ஐம்புலன்களையும் விழிப்புடனே வைத்திருப்பவனிற்கு பெண்ணவளின் இச்செயல் கடும் சீற்றத்தை உருவாக்க,படீரென்று இமைகளை திறந்து அவளை தீயாய் உறுத்து விழித்தான்.

ஆனால் ஒற்றை காலை சற்றே தரையிலிருந்து தூக்கி அவன் புறமாக பட்டும் படாமல் சாய்ந்து இதழை குவித்து இரண்டு விரலை முகத்திற்கு நேரே நீட்டி போஸ் கொடுத்துக்கொண்டிருந்தவளிற்கு,அப்போது தான் தன் அருகே அமர்ந்திருந்தவனின் கண்கள் விழிப்புடன் இருப்பதையும்,கூடவே நெருப்பில்லாமல் தன்னை எரிப்பதையும் கண்டு திடுக்கிட்டாள்.

அவள் அதிர்ந்த அதே நேரத்தில் விமானமும் விண்ணில் பார்ப்பதற்கு தயாராகி தரையிலிருந்து மேலெழும்பியதினால் விமானத்தில் உண்டான பெரும் அதிர்வில்,மேலே தூக்கியிருந்த கால் ஆட்டம் கண்டதால் அவளால் முழுமையாக தன்னை சமாளிக்க முடியாமல் “அம்மாஆஆ” என கத்தி அலைப்பேசியோடு அவன் மடி மீது விழுந்து வைத்திருந்தாள்.

ஆனால் உடனே பதறிப்போய் தன்னை சுதாரித்து அவன் மீதிருந்து எழுந்தவள் இமைகள் படபடக்க பதட்டத்துடன் “டோவினோ சார்…ஐயம் சாரி…தெரியாமல்…” என்னும் போதே உக்கிரமூர்த்தியாய் அமர்ந்திருந்தவனின் கரம் பெண்ணவளின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.

அந்நேரத்தில் விமானம் விண்ணை நோக்கி சென்றுக்கொண்டிருந்ததால் அதன் சப்தத்தில் இவனது அடியின் அதிர்வெண் அமிழ்ந்துப்போயிருந்தது.

“ஆ” என வாய் பிளந்து கிரகிக்க முடியாமல் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தவளின் பொறி கலங்கியிருந்தது.

தலை சுற்றுவது போலிருக்க நடப்பதை யூகிக்கும் ஆற்றலற்று சிந்தை கலங்கிப்போயிருந்தாள்.

சில கணங்களுக்கு பிறகு சுய உணர்விற்கு வந்தவளிற்கு,அப்போது தான் அவன் தன்னை கைநீட்டி அடித்திருக்கிறான் என்ற நிஜம் உறைத்தது.

அவனோ அவளை அடித்த கரத்தை ஒரு முறை உதறி,அவள் தீண்டத்தகாதவள் என்பது போல் காகித கைக்குட்டையினால் அழுத்தி துடைத்துக்கொண்டிருந்தான்.

அதனை கண்டு ஆவேசத்தோடு “ஹவ் டேர் யூ டூ ஸ்லேப் மீ?” என விரல் நீட்டி அழுகையில் குமுறிய தொண்டையை செருமி பேசியவளை நேருக்கு நேராக பார்த்து இகழ்ச்சியாக இடதுபுருவம் உயர்த்தி “நீ எதுக்கு ட்ரை பண்ணறேன்னு எனக்கு நல்லாவே தெரியும்…என் வாழ்க்கையில் உன்னை மாதிரி மேலே விழுந்து பழகற பொம்பளைங்க நிறைய பேரை பார்த்திருக்கேன்” என இதழை கோணாலாக வளைத்து கூறியவன்,அத்தோடு தன் பணி முடிந்தது போல் தோளை குலுக்கி திரும்பிக்கொண்டான்.

அவன் கூறிய சொற்களின் அர்த்தத்தை அவளின் மூளை கிரகிக்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

அவற்றை அறிந்ததற்கு பிறகு பெண்ணவளின் தேகம் விதிர்விதிர்த்து போக ‘என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டான்?’ என எண்ணியவளிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

அவர்களது வீட்டில் கடைக்குட்டி என்பதால் பிறந்ததிலிருந்து செல்லமாக வளர்க்கப்பட்ட பெண்ணை குடும்பத்திலுள்ள யாவரும் கடிந்து கூட ஒரு சொல் கூறியதில்லை.

ஆனால் தற்போதைய அவனின் சொற்கள் அவளின் மேனியில் மிளகாயை அரைத்து பூசியது போன்று பற்றி எரிய வைத்தது.

அதனால் முகமெல்லாம் கோபத்திலும் அவமானத்திலும் சிவக்க அவன் புறம் திரும்பி ஒற்றை விரல் நீட்டி “உன் மனசில் என்ன பெரிய ஆணழகன்னு நினைப்பா?” என குரல் கீறிச்சிட சீறினாள்‌.

அவனோ தலையை இடதுபுறமாக சாய்த்து ஒற்றை விரல் கொண்டு காதை குடைந்தான்.

அதில் மேலும் வெகுண்டவள் “ஏய் ஓவரா சீன் போடாதே…நீயெல்லாம் என் கால் தூசிக்கு சமம்…உனக்கெல்லாம் அவ்வளவு ஒண்ணும் சீன் இல்லை…நீ படு கேவலமா இருக்கே…உவ்வே…” என விதவிதமாக பல்வேறு வகையில் அவனை அவள் வசைப்பாடிக்கொண்டிருக்க,

அவனோ காது குடையும் சாக்கில் எப்போதோ பஞ்சை காதில் வைத்து அடைத்திருந்தான்.

அத்தோடு விமானம் மேலே சீரான நிலையில் சென்றுக்கொண்டிருந்ததால் இருக்கையின் பட்டியை அவிழ்த்துவிட்டு கால் மேல் கால் போட்டு தன்னிருக்கையில் நன்றாக சாய்ந்து கண்ணில் குளிர்கண்ணாடி அணிந்து இதழ்வளைவு புன்னகையுடன் தோரணையாக அமர்ந்திருந்தான்.

அவனிற்கு அவள் காது ஜவ்வு கிழிய பேசுவது ஊமைப்படம் போலவே இருந்தது.

ஒரு கட்டத்தில் அவனை திட்டி சோர்வடைந்த பாவையவள் தன் இருக்கைக்கு நேரே எதிரே உள்ள பொத்தானை அழுத்தினாள்.

இப்போது கவனமாக ஜன்னல் திரையின் பக்கம் சாய்ந்து அமர்ந்திருந்தவளிடம் “எக்ஸ்க்யூஸ் மீ மேம்…என்ன வேணும்?” என அந்த பணிப்பெண் பவ்யமாக வினவினாள்.

“தண்ணீர் வேணும்” என வாயில் கைவைத்து இதழ்பிதுக்கி சைகை செய்தவளிடம் “ஓகே மேம்” என சிறு புன்னகையுடன் தலையசைத்தவள்,

“சார் உங்களுக்கு எதுவும் வேணுமா?” என தங்கள் முதலாளியிடம் வினவ,

தனது காதில் அடைத்திருந்த பஞ்சை அகற்றியவன் “எஸ்…ஐ நீட் ரெட் வைன்” என்றான் அமர்த்தலான குரலில்.

‘அடப்பாவி…அப்போ இவ்வளவு நேரம் நான் மூச்சு வாங்க பக்கம் பக்கமா டைலாக் எல்லாம் பேசினது செவிடன் காதில் ஊதின சங்கு தானா?’ என திகைப்பில் வாயை பிளந்தாள் காமினி.

அவள் பலரை தன் குறும்பால் ஆட்டி படைக்கும் ஜகஜால கில்லாடி என்றால்,அவன் எத்தனுக்கெல்லாம் எத்தன்!!

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Select your currency
USD United States (US) dollar
Scroll to Top