வேங்குழல் 32

யாதவ் கிருஷ்ணா மீண்டுமொருமுறை தன் அலைபேசியில் முரளி அனுப்பி இருந்த வாய்ஸ் மெசேஜை ஓட விட்டான். “யாதவ் என்கிட்ட பேச உனக்கு விருப்பம் இருக்காதுனு தெரியும், ஆனாலும் முக்கியமான விஷயம் உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு, அதான் போன் பண்ணேன். கொஞ்ச முன்னாடி நியூஸ் பார்த்தேன், அதோட லிங்க் உனக்கு அனுப்பி இருக்கேன். இது ஒரு பிரச்சனையானு எனக்கு கன்பார்மா தெரியாது, ஆனா ஒரு வேளை பிரச்சனையா இருந்தா? எதுக்கும் இருக்கட்டும்னு தான் உனக்கு அனுப்பி வச்சேன்” என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தான்.

 

முரளி அனுப்பி இருந்த செய்திக்கான லிங்கை யாதவ் ஓபன் செய்ய செந்தாழினியும் அதை படிக்க தொடங்கினாள். “பல லட்ச வருடங்களுக்கு முன்பு ஆஸ்ட்ராய்டு என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் 15 கிலோமீட்டர் விட்டமுடைய விண்கல் (Asteriods) நம்ம பூமியை தாக்கி இருக்கு, அது சரியா மெக்சிகோ நகரத்தில் இருக்கும் ஒரு பகுதியில வந்து விழுந்து இருக்கு, அந்த விண்கல் வெடிச்சதுல ஆயிரம் கோடி  அணுகுண்டுங்க வெடிச்சா எவ்வளவு எனர்ஜி வருமோ அந்த அளவுக்கு அதோட பாதிப்பு இருந்து இருக்கு, அதனால அந்த விண்கல் விழுந்த இடத்துல இப்பவும் 150 கிலோ மீட்டர் அகலமும் 20 கிலோ மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு பெரிய பள்ளம் இருக்கு. இந்த தாக்குதலால தான் டைனோசர் இனமே அழிஞ்சிருக்கும்னு விஞ்ஞானிகள் அனுமானிக்கிறாங்க.

 

இத்தனை வருஷங்களுக்கு பிறகு அதே மாதிரியான அளவும் எனர்ஜியும்  கொண்ட ஒரு விண்கல் நம்ம பூமியோட சுற்றுப்பாதையில சுத்திட்டு இருக்கறதா நாசா நிறுவனம் அறிவிச்சிருக்கு. அந்த விண்கல் எந்த நேரத்திலயும் பூமியை தாக்கறதுக்கு ஐம்பது சதவீதம் வாய்ப்பிருக்கு, ஒரு வேளை அது தாக்காம கூட போகாலம்.  ஆனா நம்மோட பாதுகாப்பு நடவடிக்கையும் மீறி அந்த விண்கல் நம்ம பூமியை ஒருவேளை தாக்கினா, பூமியோ இல்ல பூமியோட ஒரு பகுதியோ அழிஞ்சு போக நிறைய வாய்ப்பிருக்கு” என்று அந்த செய்தியில் போட பட்டிருக்கவும் யாதவ் அதிர்ச்சியுடன் செந்தாழினியை பார்த்தான், அவளும் அதே அதிர்ச்சியில் தான் இருந்தாள்.

 

அவனிடமிருந்து போனை வாங்கிய செந்தாழினி விண்கல் சம்மந்தமான செய்திகளை நாசா நிறுவனம் எதாவது வெளியிட்டு இருக்கிறதா என்று தேடினாள். “நாசா மற்றும் வேறு சில விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்கற்கள் குறித்து ஏற்கனவே பல ஆராய்ச்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் அதற்காகவே பிரத்யேகமான விண்கலங்களை நிறுவி  பெரிய அகலமான விண்கற்களின் மீது அவற்றை தரை இறக்கி விண்கல்லின் தன்மை, அவற்றின் சுற்றுப்பாதை போன்றவற்றை அறிந்துக் கொள்ள பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

 

மீண்டும் எந்த ஒரு ஆபத்தான விண்கல்லும் பூமியை தாக்க கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கலிபோர்னியாவுல கோல்ட்ன் டீப் ஸ்பேஸ் கம்யூனிகேஷன் (Golden deep space communication) என்கிற இடத்துல ஒரு ரேடார் வச்சிருக்காங்க. இந்த ரேடாரோட முக்கியமான வேலையே, எதாவது விண்கல் நம்ம பூமியோட சுற்றுப்பாதை நோக்கி வந்துச்சுனா நமக்கு சிக்னல் கொடுக்கும், அந்த மாதிரி அது கொடுத்த சிக்னல்னால தான் இப்போ ஒரு விண்கல் பூமியை நோக்கி விழ வாய்ப்பிருக்குனு அறிவிச்சிருக்காங்க.

 

ஆனா அதே சமயம், அந்த விண்கல்லோட சுற்றுப்பாதையின் திசையை மாற்றிவிடற டெக்னிக் கொண்ட விண்கலம் ஏற்கனவே ஸ்பேஸ்ல சுத்திட்டு இருக்கு, அதனால பயப்படுறமாதிரி எதுவும் நடக்காதுனு நாசாவில் இருக்கும் விஞ்ஞானிகள் நம்பிக்கை கொடுத்திருக்காங்க” என்று செய்தி வாசிப்பாளர் சொன்னதும் தான் செந்தாழினி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

 

“யாதவ் இனி பயமில்ல, நாசாவோட விண்கல் ஆராய்ச்சி பத்தின ஆர்டிக்கல  நானும் படிச்சிருக்கேன். அவங்க ஏற்கனவே எல்லாத்துக்கும் தயாரா தான் இருப்பாங்க, சோ டோன்ட் வொர்ரி” என்றாள்

 

“இல்ல ராதி, எனக்கென்னவோ இதுக்காக தான் என் கையில புல்லாங்குழல் கிடைச்சிருக்கும்னு தோணுது. ஏதோ ஒரு பெரிய ஆபத்து வரப்போகுதுனு எனக்கு தோணிட்டே இருந்துச்சு, இப்போ அது கரெக்ட் தான்ங்கிற மாதிரியே எல்லாமே நடக்குது. உன் கையில எரிகல்லோட சாம்பல் விழுந்தப்பவே எனக்கு அது ஒரு அலர்ட் மாதிரி தோணுச்சு. சரியா அதே நேரத்துல முரளி இந்த நியூஸ் அனுப்பி இருக்கான். எனக்கும் மேல இருந்து கல் விழுற மாதிரி அப்பப்ப கனவுல வந்துட்டே இருந்துச்சு. எல்லாத்தையும் வச்சு யோசிச்சு பார்த்தா, நாம இந்த விஷயத்துல அலர்ட்டா இருக்கணும்னு தோணுது”

 

“உங்களுக்கு இப்படி ஒரு உள்ளுணர்வு தோணும் போது அதை ஈசியா எடுத்துக்க கூடாது, நீங்க சொல்றது சரி தான் யாதவ். நாம தொடர்ந்து இன்டர்னேஷனல் சேனல்ல நாசாவோ நியூஸ் பாத்துட்டே இருப்போம், நம்மால முடிஞ்ச அளவுக்கு பூமிக்கு எந்த சேதாரமும் வராம பாத்துக்குவோம்” என்றாள் செந்தாழினி

 

“சரி, வா போகலாம்” என்று மனைவியை அழைத்துக் கொண்டு தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்றான் யாதவ்.

 

*******

 

அதே சமயம் வெற்றிவேந்தன் டிவியில் ஒளிப்பரப்பபட்ட செய்தியை பார்த்து திகைத்தார். முரளியை அழைத்து, “என்ன முரளி என்னென்னவோ சொல்றாங்க? விண்கல் வந்து பூமியில விழப்போகுதாம், அதனால பூமியே அழியப்போகுதாமே” என்றார் லேசான பதட்டத்தோடு

 

“அப்பா அந்த அளவுக்கு போகாம தடுக்கறதுக்கு தேவையான டெக்னிக் நம்ம விஞ்ஞானிங்க கிட்ட இருக்கு, சோ பயப்பட தேவையில்ல” என்று அவன் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அருவி இடையிட்டாள்.

 

“விண்கல்னா என்ன மாமா? ஒரு வேளை வேற்று கிரகத்துல இருந்து யாராவது நம்ம பூமி மேல கல்லு போடாறாங்களா மாமா” என்று அப்பாவியை கேட்ட மனைவியை அழுத்தமாக பார்த்தான்.

 

“யார கேக்கற அருவி, அப்பாவையா?” என்றான்

 

“இல்ல மாமா, உங்கள தான் கேக்கறேன்” என்றவளை கண்களாலே கபளீகரம் செய்தான். அவனிடம் பதில் வராமல் பார்வையால் தின்று கொண்டிருந்தவனை எதிர்கொள்ள முடியாமல் ‘இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி பாக்கறாரு’ என்று தனக்குள் முனகிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

 

அவள் பின்னாலேயே சென்ற முரளி அறைக் கதவை தாளிட்டான். சத்தம் கேட்டு திரும்பிய அருவி, “என்ன மாமா?” என்றாள்.

 

அவள் இடையில் கரம் வைத்து தன்னிடம் இழுத்து அணைத்தபடி நிறுத்தி அவள் கண்களை ஆழ்ந்து பார்த்த முரளி, “என்னைய என்னனு கூப்பிட்ட?” என்றான்

 

அவளோ குழப்பத்துடன் அவனை பார்த்து, “மாமானு கூப்பிட்டேன் ஏன்?” என்றவளால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை, அவளின் இதழ்கள் அவன் இதழ்களுக்குள் சிறைப்பட்டிருந்தது. அடுத்து அவன் என்ன செய்யபோகிறான் என்று புரிந்து போனதால் தன் இருகைகளால் அவன் நெஞ்சில் குத்தி, “விடுங்க மாமா” என்று அவன் வாய்க்குள் முனகினாள்.

 

முரளியோ முரட்டு தனமாக தன்னவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் கிடத்தினான். விலகி ஓடப்போனவளை அப்படியே பிடித்து தன் கைகளுக்குள் சிறைப்பிடித்தான். அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தபடி “என்னடி புதுசா மாமானு கூப்பிடுற” என்றான் ஹஸ்கி வாய்சில்.

 

“வேறெப்படி கூப்பிட முடியும், பேர் சொல்லியா கூப்பிட முடியும், அதான் மாமானு கூப்பிட்டேன், உங்களுக்கு புடிக்கலையா?” என்றாள்.

 

“புடிச்சதுனால தான்டி உன்னை இப்படி புடிச்சு வச்சிருக்கேன்” என்றவன் மேலும் முன்னேறினான். “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, என்ன பண்றீங்க” என்று சிணுங்கினாள்.

 

“என்ன கேட்ட?” என்றான் புரியாமல். அவள் சற்றுமுன்பு விண்கல்லை பற்றி கேட்ட சந்தேகத்தை மீண்டும் சொல்ல, அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

 

“யாரும் கல்லை எல்லாம் தூக்கி போட மாட்டாங்க அருவி, பூமி மாதிரி ஏதோ சில கிரகங்கள் வெடிச்சு சிதறி பெரிய பெரிய கல்லா அண்டவெளியில சுத்திட்டு இருக்கும். அது முக்கியமா செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்துக்கு இடையில தான் அதிகமா இருக்கும். ஏன்னா வியாழனோட ஈர்ப்பு சக்தி ரொம்பவே அதிகம். அதனால அந்த கல்லுங்க எல்லாம் வியாழன சுத்திட்டு இருக்கும். சில சமயம் அது சுத்தற பாதையில ஏதாவது தடங்கல் ஏற்ப்பட்டு பாதை மாறி பூமி பக்கம் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. 

 

அப்படி வர்ற கல்லுங்க பூமியை நோக்கி கீழே விழுந்தாலும், அது தரையை அடையறதுக்குள்ள உடைஞ்சு தூசியாகி காணாம போயிடும். அதே சமயம் அளவுல பெரிய கல்லு வந்து விழுந்தா அது பூமிக்கு பிரச்சனையா முடியும். அந்த கல்லுங்களை தான் விண்கல்னு சொல்வாங்க. நீ சொல்றது போல வேற கிரகத்துல இருந்து யாரும் பூமிக்கு அதை தூக்கி வீச எல்லாம் முடியாது” என்று விளக்கினான்.

 

“அய்யோ அப்போ பெரிய மாமா சொல்றது போல அந்த கல்லு நம்ம பூமி மேல விழுந்தா இந்த உலகமே அழிஞ்சிடுமா?” என்றாள் கண்களை அகலவிரித்து அப்பாவியாக

 

அலங்காநல்லூரில் அருவியின் தன்னம்பிக்கையை பார்த்து வியந்தவனுக்கு அவளுடைய அப்பாவித்தனமும் மிகவும் பிடித்திருந்தது. வேண்டுமென்றே அவளிடம் வம்பு செய்வதற்காக, “ஆமா உலகம் அழியப்போகுது” என்றான் சீரியசான குரலில்.

 

“அய்யோ இப்போ என்ன மாமா பண்றது?”

 

“எப்படியும் உலகம் அழியப்போகுது, அதுக்குள்ள எவ்வளவு சந்தோஷமா வாழ முடியுமோ வாழ்ந்திடலாம், ஓகேவா” என்றான் குறும்பாக சிரித்து

 

“உலகம் அழியப்போகுதுனு தெரிஞ்ச பின்னாடி எப்படிங்க சந்தோஷமா வாழமுடியும்?” என்று சிணுங்கினாள்.

 

“இப்படி” என்றபடி அவளுடைய முந்தாணையை பிடித்து இழுத்தான். அவன் சொன்னதை அப்படியே நம்பியவள் இப்போது அவனுக்கு தடை போடாமல் அவனுடன் ஒத்துழைத்தாள். இருமனமும் சம்மதித்து சங்கமிக்கும் போது அந்த கூடல் அளவில்லாத இன்பத்தை இருவருக்குமே அள்ளித்தர, கரைசேரமுடியாமல் இருவரும் ஆனந்தகடலில் திளைத்திருந்தனர்

 

வாழும் வாழ்க்கை ஒரு முறைதான், இனி இந்த வாழ்க்கை திரும்ப கிடைக்காது என்று ஒவ்வொருவரும் நினைத்தால் தாங்கள் வாழும் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் மகிழ்ச்சியுடன் வாழலாம், என்பதற்கு அவர்களின் கூடலே ஒரு சாட்சியாக இருந்தது. இனி கிடைக்கவே கிடைக்காது என்பது போல இருவரும் ஒருவருக்குள் ஒருவர் புதைந்துக் கொண்டிருந்தனர். 

 

*********

 

யாதவ் கிருஷ்ணா விண்கல்லை பற்றின அனைத்து செய்திகளையும் கண்காணித்து வந்து கொண்டிருந்தான். அவன் பயந்தது போலவே பூமியை சுற்றிக் கொண்டிருந்த விண்கல் (Asteriod) இப்போது பூமியை நோக்கி பயணிப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.

 

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டிருந்த சமயம் திடீரென விண்வெளியில் அவர்களால் பறந்துக் கொண்டிருந்த விண்கலத்திலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை என்றனர். அந்த விண்கலத்தை (Satilite) வைத்து தான் விண்கல்லின் சுற்றுப்பாதையை திருப்ப முயன்றுக் கொண்டிருந்தனர். இப்போது விண்கலத்தில் இருந்து எந்த ரெஸ்பான்சும் வராததால் அவர்களால் விண்கலத்தை இயக்க முடியவில்லை.

 

விண்கல்லோ விண்கலம் இருக்கும் சுற்றுப்பாதையை கடந்து கீழ்நோக்கி பறந்து வந்துக் கொண்டிருந்தது. உலகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவானது, மக்கள் அனைவரும் வீட்டில் அமர்ந்தபடி டிவியில் ஒளிப்பரப்பாகும் செய்தியையே பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது அந்த கல் எங்கே வந்து விழும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. அது வந்து விழப்போகும் இடம் மட்டுமில்லாது சுற்றிஇருக்கும் பலஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதால் எல்லாருமே உயிர் பயத்தில் உறைந்து போயிருந்தனர்.

 

எங்கு விழப்போகிறது என்று தெரிந்தாலாவது வேறு இடத்திற்கு சென்று உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதுவிழப்போகும் இடமே தெரியாததால் அனைவருமே பதற்றத்தில் இருந்தனர். எல்லா நாடுகளில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் விண்கல்லின் சுற்றுப்பாதையை மாற்றுவதற்கான முயற்சியில் இரவுபகல் பாராமல்  முயன்றுக் கொண்டிருந்தனர். இன்னும் இரண்டே நாளில் அந்த விண்கல் பூமியை அடைந்துவிடும் என்ற செய்தி அனைவரின் தலையில் இடி இறக்கியது போல இருந்தது.

 

நான், என்னுடையது என்ற எண்ணம், பேராசை கோபம், வெறுப்பு, போட்டி பொறாமை, துவேசம், துரோகம் பகை என்ற அனைத்தும் மாயமாக மறைந்து போனது அந்த ஒரு விண்கல்லினால். உலக மக்களின் ஒரே வேண்டுதல், அந்த கல் பூமியை அடையக்கூடாது என்பது தான். எல்லாருக்கும் பொதுவான ஒரு ஆபத்து வந்தால் மட்டும் அனைவருமே ஒரே மாதிரி தான் சிந்திக்கிறார்கள், அவர்களுக்குள் இருக்கும் தெய்வத்தன்மை அப்போது தான் வெளியே வருகிறது. உலகம் காக்கப்படவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்ததால், அது அந்த ஆகாய வண்ணனுக்கும் புரிந்தது.  தூங்கிக் கொண்டிருந்த யாதவனுக்குள் ஒரு சிலிர்ப்பு, சட்டென எழுந்து அமர்ந்தவன், உடனே தயாராகி புல்லாங்குழலுடன் வெளியே செல்ல ஆயத்தமானான்.

 

அவன் கிளம்புவதை பார்த்த ராதி, “யாதவா எங்கே போறீங்க, நானும் வரேன்” என்றவளையும் அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான். அங்கே மந்திர சக்தியால் அவன் வரவழைத்த குட்டி விமானம் இருந்தது, இருவரும் அதற்குள் அமர்ந்து வானத்தில் பறந்தனர்.

 

விண்கல் எந்த திசையில் வருகிறது என்று தெரியாததால் யாதவனுக்கு அதை எப்படி தடுக்க போகிறோம் என்று மலைப்பாக இருந்தது. ஆங்காங்கே விமானத்தை நிறுத்தி தன்னிடமிருந்த புல்லாங்குழலை வாசித்தான், ஆனால் விண்கல் பயணிக்கும் திசை தெரியாமல் இருந்ததால் இருட்டில் தேடப்படும் குண்டூசியை போன்ற நிலையில் இருந்தான் யாதவ்

 

ஆங்காங்கே அலைந்து கடைசியாக அவர்கள் சென்ற விமானம் இமயமலையின் உச்சியில் இருக்கும் சிகரத்தில் தரை இறங்கியது. யாதவ் அங்கிருந்து தன் புல்லாங்குழலை வாசிக்க அவன் கண்களுக்கு இப்போது விண்கல் தெரிந்தது.

 

தன் புல்லாங்குழல் இசையால், அதை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்தான். ஆனால் அது மேலும் முன்னேறி பூமியை நோக்கி வந்த வண்ணம் இருக்கவே “யாதவ் இப்போ என்ன பண்றது? எப்படி இந்த கல்லை தடுத்து நிறுத்தப்போறோம்” என்றாள் ராதி கவலையுடன். தீர்க்கமான யோசனையில் இருந்தவன் மனைவியை அழைத்துக் கொண்டு தாங்கள் வந்திருந்த விமானத்தின் மூலம் பத்ரிநாத் கோயிலை அடைந்தான். உலகமே உயிர்பயத்தில் வீட்டில் உறைந்திருந்ததால் கோயில் பிரகாரம் ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்தது.

 

இருவரும் கோயிலுக்குள் நுழைந்து கர்ப்பகிரகத்துக்குள் சென்றனர். அங்கே  மூலவரான பத்ரிநாராணயனர் நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் வீற்றிருந்தார். தன் இடது கையில் சங்கும், வலது கையில் சக்கரமும், மற்ற இருகைகளில் யோக முத்திரைக் காட்டி அபயம் அளிப்பது போல வீற்றிருந்தவரை இருகரம் கூப்பி வணங்கினான்.

 

“யாதவா விண்கல் பூமிக்கு கிட்ட வந்துடுச்சு, இன்னும் சில மணி நேரத்துல தாக்க வாய்ப்பிருக்கு, என்ன செய்ய போறோம்? புல்லாங்குழல் இசையால கல்லோட திசையை மாத்த முடியலயே என்ன பண்ண போறோம் யாதவா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று கணவனை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள் ராதி

 

பத்ரிநாராயணனை பார்த்தபடி நின்றிருந்த யாதவ் தன் பார்வையை விலக்காமல், “நமக்கு ஆயுள் முடியப்போகுதோனு பயப்படுறீயா ராதி?”

 

“இல்லவே இல்ல, உலகம் அழியக்கூடாதேனு தான் பயப்படுறேன்”

 

“அப்போ இங்கே நடக்க போறதை பார்த்து பயப்படாம இரு” என்று விட்டு அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். தன் புல்லாங்குழலை எடுத்து வாசிக்க தொடங்கினான்.

 

விண்கல்லின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏதும் தெரிகிறதா என்று ராதி ஆகாயத்தை அண்ணாந்து பார்க்க தொடங்கினாள். ஆனால் புல்லாங்குழலின் இசையால் தன் கணவனின் உருவத்தில் மாற்றம் ஏற்ப்பட்டுக் கொண்டிருப்பதை அவள் உணரவில்லை. விண்கல் இப்போது பூமிக்கு மிகவும் அருகாமையில் ஒரு நிலவு போல தெரிய கண்களை அகல விரித்தாள்.

 

“யாதவா இப்போ என்ன பண்ண போறீங்க” என்று அதிர்ச்சியுடன் தன் அருகே இருந்த கணவனை திரும்பி பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறைதான், அவளுடைய உயரத்திற்கு பல நூறு அடிகளுக்கு மேல் யாதவனின் கணுக்கால் மட்டும் தெரிய, முடிந்தமட்டும் அண்ணாந்து பார்த்தாள், அவன் முழங்காலே தெரிந்தது,  மகாபலியின் ஆணவத்தை அடக்க வாமன அவதாரம் எடுத்து உலகை அளந்த பெருமாளாகவே அவன் தன் கண்ணுக்கு தெரிய, கண்ணீருடன் தலைக்குமேல் இருகரம் கூப்பி வணங்கி நின்றாள்.

 

யாதவனோ புல்லாங்குழலை வாசித்தபடி வானை நோக்கி வளர்ந்து கொண்டே போனான். பின்பு ஒரு கரத்தால் புல்லாங்குழலை பிடித்தபடி, மறு கரத்தை தலைக்குமேல் உயர்த்தி, தன் ஆட்காட்டி விரலை ஆகாயத்தை நோக்கி நீட்டினான்.

 

அவ்வளவு தான், வேறுபாதையை நோக்கி சென்று கொண்டிருந்த விண்கல் இப்போது ரிவர்ஸ் எடுத்து யாதவனை நோக்கி பறந்து வந்து இரும்பில் அமர்ந்து கொள்ளும் காந்தம் போல அவன் விரலில் சொகுசாக அமர்ந்துக் கொண்டது. யாதவனின் ஆட்காட்டி விரலில் சுற்றிக் கொண்டிருந்த அந்த விண்கல், ராதியின் கண்களுக்கு விஷ்ணுவின் விரலில் சுற்றிக் கொண்டிருக்கும் சக்கரத்தை போன்று தெரிந்தது.

 

தன்னையும் அறியாமல் இருகரம் கூப்பி கண்ணீர் மல்க, நின்றிருந்தவள், குனிந்து அவன் பாதத்தை தொட்டு வணங்கினாள். அவள் கண்களில் இருந்த கண்ணீர் துளி யாதவனின் காலில் பட்டு தெறித்தது. அப்படியே மயங்கி சரிந்தாள்.

 

யாதவன் தன் விரலில் சுற்றிக் கொண்டிருந்த விண்கல்லை ஆகாயத்தை நோக்கி வீச, அது மீண்டும் விண்வெளியில் பறந்து வியாழனின் சுற்றுப்பாதையில் தஞ்சம் புகுந்தது. சற்று நேரத்திற்கு எல்லாம் சிக்னலும் கிடைத்துவிட, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், பூமியின் சுற்றுப்பாதையில் இப்போது எந்த விண்கல்லும் இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்தனர்.

 

*******

 

அனைத்து சேனல்களும் இந்த செய்தியை டிவியில் ஒளிப்பரப்ப, வெற்றிவேந்தனின் குடும்பம் மொத்தமும், அதைப் பார்த்து சந்தோஷப்பட்டனர். “எப்படியோ விண்கல்லை கண்டுபிடிச்சது மட்டுமில்லாம, விஞ்ஞானிங்க எல்லாருமா சேர்ந்து நம்ம உலகத்தையே காப்பாத்திட்டாங்க” என்றார் நிம்மதி பெருமூச்சுடன்

 

“விஞ்ஞானிங்க என்னவெல்லாமோ கண்டுபிடிக்கலாம், அவங்க கண்டுபிடிச்சாங்கங்கறதுக்காக, அது அப்போ தான் புதுசா வந்துச்சுனு அர்த்தம் இல்ல, ஏற்கனவே இருக்கறது தான், நம்மளோட அறிவுக்கு அது எட்டியிருக்கலைனு வேணும்னா சொல்லலாம். வரப்போற ஆபத்தை அவங்க கண்டுபிடிக்கலாம், அதை தடுக்க நடவடிக்கையும் எடுக்கலாம். ஆனா கடைசியில நம்மளை காப்பாத்தறது ஒரு பெரிய சக்தி, அது தான் நம்மளை எப்பவும் காப்பாத்துது, சில சமயம் நமக்கு தெரிஞ்சு, பலசமயம் நமக்கு தெரியாமலே நம்மளை காப்பாத்திட்டு தான் இருக்கும்” என்றான் முரளி கிருஷ்ணா

 

“நீ என்ன சொல்ல வர்ற முரளி எனக்கு புரியல” என்றார் வெற்றிவேந்தன்.

 

“ஒரு பேச்சுக்கு சொல்றேன், ஒரு வேளை நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தோன்றாத காலக்கட்டத்துல இது மாதிரி விண்கல் இருந்திருக்காதுனு நினைக்கறீங்களா? இருந்திருக்கும் தானே, அப்படி அது எப்பவாவது பூமியை நோக்கி வந்திருக்கும் தானே? அப்போ எல்லாம் அதுகிட்ட இருந்து பூமியை காப்பாத்தினது எது? ஏதோ ஒரு சக்தி காப்பாத்தியிருக்கும் இல்லயா? இப்பவும் அதுபோல தான் நடந்திருக்கும்னு சொல்றேன்” என்றான் முரளிகிருஷ்ணா

 

“எப்படி எதோ ஒரு சக்திதான் காப்பாத்தியிருக்கும்னு அவ்வளவு உறுதியா சொல்றே? அந்த சக்தி எதுனு உனக்கு தெரியுமா முரளி?”

 

“காக்கும் சக்தி தான் வெறென்ன? அந்த சக்தி எதாவது ஒரு உருவத்துல வந்து உலகத்தை காப்பாத்திட்டு தான் இருக்கும். இந்த முறை புல்லாங்குழல் மூலமாவும் நம்ம யாதவ் மூலமாவும் அந்த சக்தி உலகத்தையே காப்பாத்தியிருக்கு”

 

“என்ன? நம்ம யாதவனா இத செஞ்சது?” என்றனர் அனைவரும் கோரசாக.

 

ஆமோதிப்பாக தலையை அசைத்தவன் “நல்லா யோசிச்சு பார்த்தா, புல்லாங்குழல் யாதவ் கையில கிடைக்கிறதுக்கு காரணமே இப்படி ஒரு ஆபத்துல இருந்து பூமியை காப்பாத்தறதுக்கு தான்னு இப்போ தோணுதுப்பா. அவன் தான் புல்லாங்குழலோட சக்தியால விண்கல்லோட பாதையை மாத்திவிட்டிருப்பான். யாதவனை பிள்ளையா பெத்ததுக்கு நீங்க புண்ணியம் பண்ணி இருக்கீங்களானு எனக்கு தெரியாது.

 

ஆனா நான் அவனோட முகசாயல்ல இருக்கறதுக்கும், அவனோட அண்ணனா பிறந்ததுக்கும் கண்டிப்பா புண்ணியம் பண்ணியிருக்கேன்” என்றான் முரளிகிருஷ்ணா உணர்ச்சி மிகுந்த குரலில்.

 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த செல்வியும் அருவியும், “அப்போ யாதவ் சாமியா? அவன் நம்ம கூட எல்லாம் இனி இருக்கமாட்டானா?” என்றனர் கலக்கத்துடன்.

 

“தெரியலம்மா, பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றான் முரளிகிருஷ்ணா

 

 

(தொடரும்)

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top