அத்தியாயம் 8
அன்று ஒரு முக்கிய இதய அறுவை சிகிச்சை நடைபெறவிருக்க, அனைவருமே முன்னேற்பாடு அறையில் இருந்து அதற்காக தயாராகி கொண்டு இருந்தனர்
பிருந்தாவும் கைகளை கழுவிய படி, அந்த நீல நிற உடையை அணிந்து கொண்டிருக்க, அதே வேளை அவ்வறையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் சிம்மன்.
அவனை கண்டதும் மற்றவர்கள் அவசரமாக தயாராக,
அங்கே ஏற்கனவே அவனுக்கான உடையுடன் தயாராகி நின்றிருந்த கார்த்திகாவும் வழக்கம் போல அந்த உடையை அவனுக்கு அணிவிக்க அருகில் வந்தாள்.
ஆனால், சிம்மனின் பார்வையோ அங்கே ஓரமாக நின்ற பிருந்தாவின் மீதே படிந்தது.
அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்க தைரியம் இல்லாமல், தலையை குனிந்த படி நின்று இருந்தாள்.
அவள் எண்ணம் அவனுக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும் அவளை வம்பிழுக்க தானே அவனுக்கு பிடிக்கும்.
தன் அருகில் உடையை அணிவிக்க வந்த கார்த்திகாவை கைகளால் தடுத்து நிறுத்தியவன், “நீ மத்தவங்களுக்கு போய் ஹெல்ப் பண்ணு” என்று சொல்லி விட்டு,
“மிஸ் பிருந்தா” என்று அவளை அழைத்தான்.
பெண்ணவளும் அவன் குரலில் சட்டென நிமிர்ந்து பார்க்க,
சிம்மனோ “வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்றான் அதிகாரம் நிறைந்த குரலில்.
கார்த்திகாவுக்கோ ஒரு மாதிரி ஆகிப் போனது. இத்தனை காலம் அவள் தான் இந்த வேலையை பார்த்து இருந்தாள்.
ஆனால் இன்று திடீரென அவளை தடுத்து விட்டு பிருந்தாவை அழைப்பது அவளுக்கு ஏனோ தன் உரிமையை பறி கொடுத்தது போன்ற உணர்வையே கொடுத்தது.
அங்குள்ள மற்ற வைத்தியர்களுமே ஒருவரை ஒருவர் புரியாமல் தான் பார்த்து கொண்டனர்.
கார்த்திகாவும் அவனை எதிர்த்து பேச முடியாமல் “ஓகே சார்” என்றவள், தன் கையில் உள்ள உடையை அங்குள்ள மேசையில் வைத்து விட்டு பிருந்தாவை சற்று முறைத்த படி அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்.
பிருந்தாவும் வேறு வழி இல்லாமல் அந்த உடையை எடுத்து கொண்டு அவன் அருகில் நெருங்கி வர,
சிம்மனும் புன்னகையை அடக்கிய படி, இரு கைகளையும் உயர்த்தி நின்றான்.
அவளும் அந்த உடையை போட்டு விட்டவள், பின்னால் சென்று அதன் முடிச்சை கட்டினாள்.
அவன் உயரத்திற்கு வேறு அவளுக்கு கொஞ்சமும் கை எட்டவில்லை.
சற்று எம்பி நின்று தான் அந்த முடிச்சையே போட்டாள்.
ஆனால் அவனோ “ரொம்ப லூஸா இருக்கு. இன்னும் கொஞ்சம் டைட் பண்ணு” என்று உத்தரவு போட்டு விட,
அவளும் “ம்ம்” என்ற படி, அதை அவிழ்த்து விட்டு மீண்டும் கொஞ்சம் இறுக்கமாக கட்ட,
அவனோ “இன்னும் கொஞ்சம் டைட்டா இருந்தா நல்லா இருக்கும்” என்று அவளை பார்த்த படியே கிறக்கமான குரலில் சொல்ல,
அவளோ கடுப்பாகி விட்டாள்.
சட்டென அந்த கயிறை இழுத்து கட்டி விட,
“ஸ்ஸ்” என்றவனோ “என் கழுத்தை நெரிச்சி கொல்லப் பார்க்குறியா என்ன?” என்று நக்கலாக கேட்க,
அவளோ அவனை முறைத்து பார்த்தவள், ‘வேணும்னே இதெல்லாம் பண்ணிட்டு இருக்கான்’ என்று வாய்க்குள்ளேயே முணு முணுத்துக் கொண்டாள்.
ஒரு வழியாக அந்த முடிச்சை கட்டி விட்டு அங்கிருந்த முகக் கவசத்தை எடுத்தவளுக்கு ‘ஐயோ! இப்போ இதையும் மாட்டணுமா?’ என்று எண்ணும் போதே சற்று சங்கடமாக இருந்தது.
அவனோ பெண்ணவளின் முக மாற்றங்களை ரசித்து கொண்டே,
அவன் உயரத்திற்கு அவளால் எட்ட முடியாது என்பதால், சற்றே குனிந்து தன் முகத்தை அவளுக்கு நேராகக் கொண்டு வந்தான்.
அவனது அந்த நெருக்கத்தில் பெண்ணவளின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
அவன் விழிகளோ அவள் விழிகளுடன் கலக்க, அவனின் சூடான மூச்சுக் காற்று அவள் முகத்தில் பட்டு, ஒரு வித சிலிர்ப்பையே அவளுள் எற்படுத்தியது.
சற்று நடுங்கிய கரத்துடன், அந்த முகக் கவசத்தை அவனுக்கு அணிவிக்க, ஆடவனோ அவளை விழி மூடாமல் ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.
இல்லை இல்லை பார்வையாலேயே அவளை மொத்தமாக பருகிக் கொண்டிருந்தான்.
அவளின் அங்குமிங்கும் அலை பாயும் விழிகளை ரசனையாக நோக்கியவன் பார்வையோ சற்று கீழே சென்று அவள் செவ்விதழ்களில் தான் பதிந்தது.
அதை தீண்ட அவன் இதழ்கள் அவா கொண்டாலும் இதழ் கடித்து தன்னை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான் ஆடவன்.
அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யம் தான்.
பல பெண்களை தீண்டிய அவனுக்கு இன்று இவளிடம் மட்டும் தன் உணர்வுகளை அடக்க இத்தனை பாடு படுகிறானே!
ஒரு வேளை அந்த அறையில் மட்டும் யாரும் இல்லாதிருந்தால் அவன் இந்த அளவுக்கு தன்னை கட்டுப்படுத்த வேண்டி இருந்திருக்காதோ என்னவோ!
அவனுக்கே அப்படி என்றால் அவள் நிலை அதை விட மோசம் தான்.
அவனின் பார்வையை அவளால் எதிர் கொள்ளவே முடியவில்லை.
அவனை நெருங்கி வந்தாலே அவளுள் ஒரு இனம் புரியா உணர்வே தோன்றி அவளின் இதயத் துடிப்பையே எகிற வைத்தது.
எங்கே அவனுக்கே அது கேட்டு விடுமோ என்று தான் பயந்து போனாள் பாவை.
எச்சிலை கூட்டி விழுங்கிய படியே, அந்த கவசத்தை ஒரு வழியாக கட்டி முடித்தவள், அவசரமாக அவனிடம் இருந்து விலகி விட்டாள்.
சிம்மனும் அவளை ஒரு ஏளனமான பார்வை பார்த்து விட்டு, “லெட்ஸ் கோ” என்ற படி வெளியேற, மற்ற வைத்தியர்களும் அவசரமாக சென்றனர்.
****
பிருந்தாவோ “செம்ம டயட்ல!” என்று களைப்பாக சொல்ல,
அவளோடு வந்த ஜானவியும், “ம்ம்… எனக்கும் தான் பிருந்தா. கை கால் எல்லாம் ரொம்ப பெய்னா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே இருவரும் ஓய்வறைக்குள் நுழைந்தார்கள்.
பிருந்தாவோ அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து விட,
ஜானவியோ அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தன் உடையை சரி செய்தபடி, “இன்னக்கி எனக்கு நைட் ஷிப்ட் வேற. எற்கனவே ரொம்ப டயர்டா இருக்கு. தூங்கி தூங்கி தான் வேலை பார்க்கணும் போல” என்று கடுப்பாக சொல்ல,
பிருந்தாவும் “ம்ம் கஷ்டம்ல!” என்றாள்.
ஜானவியும் “சரிடி நாளைக்கு பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட,
பிருந்தா மட்டும் தான் அவ்வறையில் இருந்து தனது பையை சரி செய்து கொண்டு இருந்தாள்.
அப்போது அவளது பையில் உள்ள சில சில்லறை காசுகள் சிதறி, அங்கிருந்த பெரிய மர மேசைக்கு அடியில் உருண்டு ஓடின.
“ஐயோ.. இது வேற!” என்று சலித்துக்கொண்டே, தரையில் மண்டியிட்டு அந்த மேசைக்கு அடியில் புகுந்து ஒவ்வொரு காசாகத் தேடி எடுத்துக்கொண்டிருந்தாள்.
அதே வேளை அவ்வறையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர் கார்த்திகா மற்றும் ஷாலினி.
“ஏய் கார்த்திகா இன்னக்கி என்னாச்சு உனக்கு? ரொம்ப மூட் அவுட்டா இருக்க?” என்று ஷாலினி கேட்க,
அவளோ கடுப்பாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள், “ஒன்னும் இல்லடி” என்றாள் சலிப்பாக.
ஷாலினியோ ” சும்மா பொய் சொல்லாத எனக்கு நல்லாவே தெரியும். இன்னக்கி சார் பண்ணத நினைச்சு தானே மேடம் ரொம்ப மூட் அவுட்டா இருக்கீங்க?” என்று புருவம் உயர்த்தி கேட்க,
கார்த்திகாவோ “அதான் தெரிதுல்ல. அப்புறம் எதுக்கு அதையே கேக்குற?” என்றாள் வெடுக்கென
இவர்கள் இருவரும் அங்கே யாருமே இல்லை என்று நினைத்து தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஷாலினியோ “சில் ஹனி எதுக்கு கோப படுற? சாரை பத்தி தான் தெரியும்ல! அவருக்கு எப்போவும் புதுசு மேல ஒரு கண் இருக்கும். ஆனா, கடைசியில உன்கிட்டதானே வருவாரு.” என்று நக்கலாக சொல்ல,
கார்த்திகாவோ சற்று கண் கலங்கிய படி, “ஆனா என் மேல அவருக்கு லவ் இல்லையே! இது ஜஸ்ட் ஒரு பிஸிக்கல் ரிலேஷன் ஷிப் அவ்ளோ தானே! அதுவும் அவருக்கு புடிச்ச மாதிரி தான் எப்பவுமே பண்ணுவாரு.” என்று விரக்தியோடு சொன்னவள்,
“மத்த பொண்ணுங்களை மாதிரி தான் அவர் என்னையும் பார்க்குறாரு ஷாலு. போர் அடிச்சதுன்னா தூக்கி போட்ருவாரு. அத நினச்சா தான் பயமா இருக்குடி.” என்று கலங்கிய விழிகளுடன் சொல்ல,
இதை கேட்டுக்கொண்டிருந்த பிருந்தாவோ அதிர்ந்த படி வாயில் கை வைத்துக் கொண்டாள்.
ஷாலினியோ “இதெல்லாம் தெரிஞ்சி தானே அவர் கூட இந்த ரிலேஷன் ஷிப்ல இருக்க ஒத்துக்கிட்ட! இப்போ லவ் பண்ணுறேன்னு சொன்னா என்னடி அர்த்தம்?” என்க,
“நான் அவரை லவ் பண்ணுறதுனால தான்டி அவர் சொன்ன எல்லாத்துக்குமே ஒத்துக்கிட்டேன். எனக்கு அவரை கல்யாணம் பண்ணி அவர் கூட வாழனும்” என்று சொல்ல,
ஷாலினியோ அவள் அருகில் வந்து அமர்ந்து, “ஆனா அவருக்கு தான் இந்த லவ், மேரேஜ் இதுல எல்லாம் எந்த இன்ட்ரெஸ்ட்டும் கிடையாதே! அப்புறம் எப்படி?” என்றாள் கேள்வியாக.
கார்த்திகாவோ “அதான் ஷாலு என்னாலயும் இந்த விஷயத்தை பத்தி அவர் கிட்ட எதுவுமே பேச முடில்ல. அவரே புரிஞ்சிப்பாருன்னு நானும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஆனா அதுக்குள்ள அந்த பிருந்தா வந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுடுவாளோன்னு பயமா இருக்குடி” என்று எரிச்சலுடன் சொல்ல,
அவள் பேசியதை கேட்ட பிருந்தாவோ, ‘நானா?’ என்ற படி எழ பார்க்க, அவள் எழுந்த வேகத்தில் நங்கென மேசையில் தலை இடிக்க, “ஆ!” என்று வலியில் கத்தினாள் பிருந்தா.
அவள் சத்தத்தில் ஷாலினி மற்றும் கார்த்திகா இருவரும் சத்தம் கேட்ட திசையை திரும்பி பார்க்க, அங்கே பிருந்தா தான் தலையை தேய்த்த படி மேசைக்கு அடியில் இருந்து எழுந்து நின்றாள்.
அவளை அங்கு கொஞ்சமும் எதிர் பார்க்காத அவர்கள் இருவரும் அதிர்ந்து தான் போனர்.
ஷாலினியோ “நீ…. நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்று தடுமாற்றத்துடன் கேட்க,
பிருந்தாவோ தன் தலையைத் தடவிக்கொண்டே, “சில்லறை காசு கீழே விழுந்துடுச்சு, அதைத்தான் தேடிட்டு இருந்தேன்” என்றாள்.
ஷாலினியோ “ஓஹ்” என்ற படி, கார்த்திகாவை திரும்பி பார்க்க, அவளோ அமைதியாக நின்று இருந்தாள்.
“சாரி நீ இங்க இருந்தது எங்களுக்கு தெரியாது” என்று ஷாலினி சமாளிக்க,
பிருந்தாவும் கார்த்திகாவை ஒரு கணம் பார்த்து விட்டு தனது பையை எடுத்து கொண்டு அங்கிருந்து போகப் பார்க்க,
கார்த்திகாவோ “பிருந்தா ஒரு நிமிஷம்” என்று அவளை தடுக்க,
அவளும் என்ன என்பது போல திரும்பிப் பார்த்தாள்.
கார்த்திகாவோ அவள் அருகில் வந்து, “நான் கேக்குறனேன்னு தப்பா எடுத்துக்காத. உனக்கு…. அது…. சிம்மன் சார் மேல ஏதாவது பீலிங்ஸ் இருக்கா?” என்று கேட்டு விட,
பிருந்தாவோ “வாட்?” என்று அதிர்ச்சியாக கேட்டவள்,
“எனக்கு எங்கேஜ்மண்ட் ஆயிடுச்சு கார்த்திகா. சிம்மன் சார் மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு. மத்த படி நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணும் இல்லை” என்று வெடுக்கென சொன்னவள்,
அதற்கு மேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறி இருந்தாள்.
கார்த்திகாவோ “நான் தான் அவளை தப்பா நினைச்சுட்டேன் போல!” என்று வருத்தமாக சொல்ல,
ஷாலினியோ “அதான் உண்மை தெரிஞ்சிடுச்சுல்ல. இனி இவளால உனக்கு பிராப்ளம் இல்லை” என்றவள்,
“ஆனா அவருக்கு உன் மேல லவ் வருமாங்குறது தான் சந்தேகமா இருக்கு.” என்று கன்னத்தில் கை வைத்த படி சொல்ல, கார்த்திகாவோ பெரு மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்.
*****
வீட்டுக்கு வந்த பிருந்தாவுக்கோ தான் என்ன மன நிலையில் இருக்கிறோம் என்றே புரியவில்லை.
சிம்மனை பற்றி அரசல் புரசலாக சில விடயங்களை கேள்விப் பட்டிருக்கிறாள் தான். ஆனால் இந்த அளவுக்கு இருக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை.
அவனுக்கு பெண்கள் வெறும் உடல் தேவைக்காக மட்டும் தான் தேவை படுவார்கள் என்றால், தன்னையும் அவன் அந்தப் பட்டியலில் தான் வைத்திருக்கின்றானா?
அப்படி என்றால் அந்தப் புகைப்படத்தை வைத்து மிரட்டுவது கூட அந்த ஒரு கீழ்த்தரமான எண்ணத்திற்காகத் தானா?
அதை நினைக்கும்போதே பிருந்தாவிற்கு உள்ளுக்குள் நடுக்கமே வந்து விட்டது.
ஒரு வேளை அப்படி மட்டும் நடந்தால் என்ன செய்வாள்?
“இவன் எல்லாம் ஒரு டாக்டரா? சரியான காம பிசாசு. இவன் கிட்ட போயி நான் இப்படி மாட்டிக்கிட்டேனே! இப்போ என்ன பண்ணுவேன் ஆண்டவா!” என்று அவள் கத்த,
அதே வேளை அவள் அறையின் பக்கமாக சென்ற கீதாவுக்கு அவள் கூச்சலிட்ட சத்தம் கேட்க,
அவரோ ‘இந்த நேரத்துல இந்த பொண்ணு என்ன கத்துறா?’ என்று எண்ணி பயந்தவர்,
“அடியேய் எதுக்குடி உள்ள இருந்து கத்துற?” என்று கதவை தட்டி கேட்க,
பிருந்தாவோ ‘ஐயோ!’ என்று தலையில் அடித்துக் கொண்டவள்,
“ஒன்னும் இல்லம்மா சும்மா ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்.” என்று கேவலமாக சமாளிக்க,
“என்ன இந்த நேரத்துல ப்ராக்டிஸ் பண்ணுறியா? அதுவும் இப்படி கத்தி கத்தி என்னடி ப்ராக்டிஸ் பண்ணுற?” என்று புரியாமல் கேட்க,
பிருந்தாவோ ‘ஓஹ் காட் இவங்க வேற என் நிலைமை புரியாம பேசுறாங்க’ என நொந்து கொண்டவள்,
“அது உனக்கு சொன்னா புரியாதும்மா. நீ போய் தூங்கு” என்று சொல்ல,
அவரும் “என்ன பொண்ணோ” என்று தலையில் அடித்த படி அங்கிருந்து சென்றார்.
கட்டிலில் குப்புற விழுந்த பெண்ணவளுக்கோ, சட்டென இன்று சிம்மனோடு நெருக்கமாக இருந்த அந்த நினைவுகள் வந்து போக,
“சீ அந்த பொறுக்கிய பத்தி எதுக்குடி நினைக்குற?” என்று தன்னை தானே திட்டியவளுக்கு கார்த்திகா சொன்ன விடயங்களும் நினைவுக்கு வந்து விட, “இனி அவன் கிட்ட ரொம்பவே கேர் புல்லா தான் இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டாள்.