இரு வாரங்கள் சென்றிருந்தது.
“ கீது….உன்னோட ஸ்கேன் ரிப்போர்ட்டை எல்லாம் குடு . என்னன்னு பாக்கணும். நானும் ரெண்டு வாரமா கேட்டுட்டு இருக்கேன். நீ தான் ரிப்போர்ட்டை காமிக்க மாட்டேங்குற. போய் ரிப்போர்ட்ஸையெலலாம் எடுத்துட்டு வா. அந்த குட்டி உருவத்தை பார்க்கணும்னு ஆசையா இருக்கு…போ….போ….போய் எடுத்துட்டு வா..” என்று அவளது தோளைப் பிடித்து அறைக்கு நகர்த்தினான் அவளை.
கீதாஞ்சலி தயக்கத்துடன் உள்ளறைக்கு செல்ல முயன்றாள்.
அப்போது மிருகேனின் அலைப்பேசி ஒலிக்கவே , அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
வஜ்ரவேல் தான் அழைத்திருந்தார்.
“சொல்லுங்கய்யா…என்ன விஷயம்?” என்றபடி பால்கனிக்கு சென்றான்.
பால்கனிக்குச் சென்றவனை வெறித்துப் பார்த்திருந்தாள் கீதாஞ்சலி..
அவன் பேசிவிட்டு வரும் வரை அமைதியாக அதே இடத்தில் நின்றிருந்தாள்.
“ சரிங்கய்யா நான் பாத்துக்குறேன்….நமக்கு குடைச்சல் கொடுத்துட்டு இருந்தா பாத்துட்டு சும்மா இருக்க சொல்றீங்களா? போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருக்கணும்…அவங்களுக்கெல்லாம் பாவ புண்ணியம் பாத்துட்டு இருக்கு முடியாது…சரிங்கய்யா வச்சிடுறேன்.அப்பறமா பேசுறேன்”என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
யோசனையுடன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டான்.
“ சோ…நீ என்ன சொன்னாலும் கேக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கீங்க இல்ல..திரும்பத் திரும்பத் அந்த “ என்றவளின் பேச்சு அதீத கோபத்தில் தடைப்பட்டது. முகம் இறுக கைகளை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
“என்ன சொல்ற கீது?”என்றான்.
“என்ன…என்ன கீது?. உ உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது பாருங்க..இதை நான் இன்னும் விளக்கி வேற சொல்லணுமா? வஜ்ரவேல்ங்கற சாக்கடையில போய் விழுந்தே தீருவேன்ன்னு ஏன் இப்படி கங்கணம் கட்டிட்டு இருக்கீங்க? அந்தாள் உங்களை நல்லா யூஸ் பண்ணிக்குறாரு. அது உங்களுக்கு புரியுதா இல்லையா? “ என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவளது கழுத்தை பிடித்திருந்தான் மிருகேன்.
“ இதைப் பத்தி பேசாதேன்னு எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன் கீது. திரும்பத் திரும்ப பேசி என்னைய வெறியேத்தாத….அவரைப் பத்தி தப்பா பேசுறதுக்கு உனக்கு எந்த ரைடட்ஸூம் இல்லை. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின அப்பறம் வேற விதமான மிருகனை தான் பாப்ப…ஜாக்கிரதை… “ என்று வார்த்தைகளை கடித்துத் துப்பியவன் அவளை வேகமாக தன்னிடமிருந்து விலக்கி விட்டு வெளியேறினான்.
அவனது முரட்டுக்கரம் அழுத்திப் பிடித்ததில் கன்றிச்சிவந்து விட்டது அவளது கழுத்துப் பகுதி.
கழுத்தை அப்படியிப்படி அசைத்து சரி செய்து கொண்டவளுக்கு வஜ்ரவேலிடமிருந்து மிருகேனை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் சுனாமியாக சுழன்றடித்தது.
நான்கு நாட்களாக மிருகேன் வீட்டிற்கு வரவேயில்லை
கீதாஞ்சலியும் வீம்புடன் இருந்தாள்.
அவளுக்கு இறங்கிப் போய் பேச சிறிதும் பிடிக்கவில்லை. ஆனால் அவனை தன்னிடத்திற்கு வரவழைத்தே ஆக வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தாள் .
நீண்ட நேரமாக யோசித்தவள் , ஒரு முடிவுடன் அவனது அலைப்பேசிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள்.
“அர்ஜெண்ட். கம் ஃபாஸ்ட். ஐ யம் நாட் வெல். சம்திங் ஹேப்பனிங்..” என்று தட்டச்சு செய்து அனுப்பினாள்.
தனது கருப்பு நிற ஸ்கார்ப்பியோவில் பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தான் மிருகேன்.
அலைப்பேசியில் குறுஞ்செய்தி வந்ததற்க்கான ஒலி எழ , எடுத்துப் பார்த்தான்.
கீதாஞ்சலியிடமிருந்து வந்திருந்தது.
அதனைப் பார்த்தவனின் முகம் பதற்றத்தை தத்தெடுத்தது.
உடனே அவளது அலைப்பேசிக்கு அழைத்தான் . அவனது அழைப்பு ஏற்கப்படவில்லை.
அதில் இன்னமும் பதட்டமானவனின் கரங்களில் வாகனம் சீறிப்பாய்ந்தது.
அழைத்து அழைத்துப் பார்த்தவனுக்கு ஒரு கட்டத்தில் கோபமே வந்து விட்டது.
“டாமிட் ….ஃபோன் காலை எடு டி…” என ஸீடிரிங்கில் அழுத்தத்தை கொடுத்து கோபத்தில் கத்தியவன் வாகனத்தை அதி வேகத்தில் செலுத்தினான்.
மனமோ தன்னவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதை உருப்போட்டுக் கொண்டே இருந்தது.
அறுபது கிலோமீட்டருக்கு அப்பால் இருந்தவன் முக்கால் மணி நேரத்தில் வந்து சேர்ந்தான். அவ்வளவு பதற்றத்திலும் கூட தனது வாகனத்தை கவனமாக நிறுத்தி விட்டு வேகமாக வந்தான்.
பதட்டத்தில் முகத்தில் பூத்திருந்த வியர்வையை சட்டையில் துடைத்துக் கொண்டவன் கதவை தட்டினான்.
பத்து நிமிடங்களுக்கு மேல் தட்டியும் கதவு திறக்காததால் தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு கதவினைத் திறந்து வீட்டினுள்ளே நுழைந்தான்.
வீடே நிசப்தமாக இருந்தது.
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவன் உள்ளறையை ஓசையில்லாமல் மெதுவாக திறந்தான்.
அங்கே அவன் கண்ட காட்சி அவனது இரத்த அழுத்தத்தை எகிற வைத்தது.
முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொண்டு கண் மூடி அமர்ந்திருந்தாள் கீதாஞ்சலி.
அவன் உள்ளே நுழைந்ததை கூட அவளால் உணர முடியவில்லை.
கை முஷ்டி இறுக அவளருகே வந்து நின்றான்.
அவளோ செவ்விப்பொறியை மாட்டிக் கொண்டு காதில் ஒலித்த பாட்டிற்கு ஏற்ப தலையசைத்து பாடிக் கொண்டிருந்தாள்.
“ என்ன பண்ற கீது?” என்று அவளது தோளை அழுத்தமாக உலுக்கினான்.
அவனது ஸ்பரசத்தை உணர்ந்ததும் சற்று திடுக்கிட்டு தான் போனாள்.
இவ்வளவு விரைவாக அவன் வருவான் ஒன்று அவளே எதிர்பார்க்கவில்லை.
“அ.. அதுக்குள்ள வ..வந்துட்டீங்களா?” என்றாள் தடுமாற்றத்துடன்.
பளாரென்று அறைந்து விட்டான் அவளை.
அவள் சுதாரிப்பதற்குள் முழங்கையைப் பிடித்திழுத்தவன் அருகிலிருந்த பூந்துவாலையை எடுத்து அவளது முகத்திலிருந்த முகப்பூச்சை பரபரவென்று தேய்த்து எடுத்தான்.
“ ம்ம்ச்…. விடுங்க…என்ன பண்றீங்க?இப்ப எதுக்காக என்னை அடிச்சீங்க?” என்று முகம் சிவக்கக் கத்தினாள்.
“பிரக்னென்ட்டா இருக்கியேன்னு பாக்குறேன் இல்லன்னா நடக்குறதே வேற.. என்னைய பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?” என்றவன் கேசத்தை அழுந்தக் கோதி தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்.
சில கணங்கள் மௌனமாக கழிய , கீதாஞ்சலியினருகே வந்து நின்றான்.
ஒற்றைக் கையில் அவளது தாடையை இறுகப் பிடித்து நிமிர்த்தியவன், “உன்னை பாத்தா உடம்பு சரியில்லாத மாதிரி தெரியல. என்னோட ஃபோன் காலையும் எடுக்கல நீ. சொல்லு என்ன காரணத்துக்காக நீ இப்படி பண்ணுற? கொஞ்ச நேரத்துல எப்படி பதறி துடிச்சேன் தெரியுமா? நூத்தி முப்பது கிலோமீட்டர் ஸ்பீடுல விரட்டிட்டு வந்தேன். எப்படி வந்து சேர்ந்தேன்னு எனக்கேத் தெரியல.. இனி இந்த மாதிரியெல்லாம் ஏதாவது சொல்லி என்னைய பயமுறுத்தாதே டி.”என்றவன் இறுக அணைத்துக் கொண்டான்.
அவனது இதயத்துடிப்பு அதிவேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது. அவளால் அதை உணர முடியாவிட்டாலும் கூட அவனது அவனது கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. மெல்லிய புன்னகை தோன்றியது அவளிதழில்.
அவனை இறுக அணைத்துக் கொண்டவள், “ஐ லவ் யூ மிருகேன் . அண்ட் ஐ யம் சாரி…நீங்க என் மேல எவ்வளவு லவ் வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்க தான் இப்படி பண்ணுனேன். நீங்க ஹர்ட் ஆகியிருந்தா ஐ யம் சோ சாரி…” என்றவள் அவனது செவி மடலில் முத்தமிட்டாள்.
இருப்பினும் அவனது மனது எளிதில் சமாதானம் ஆகவில்லை.அவளது பேச்சு இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியதே ஒழிய அமைதிப்படுத்தவில்லை. மனம் உலைகலனாக கொதிக்க அவளை விட்டு விலகியவன் , “நான் வெளியே போயிட்டு வர்றேன்..நீ கதவை சாத்திக்கோ….” என்று அவளது முகத்தை பார்க்காமல் கூறி விட்டு நகர முயன்றவனின் கரங்களை பிடித்துக் கொண்டாள்.
முகத்தை அவன் மறுபுறம் திருப்பிக் கொண்டான்.
ஜிவஜிவுவென சிவந்திருந்த அவனது முகமே காட்டிக் கொடுத்தது அவனது கோபத்தின் அளவை..
தயக்கத்துடன் அவனை பார்த்தவள், “மிரு…அது…நான் தப்பு….சாரி…” என்று வார்த்தைகள் தடுமாற அவனிடம் ஏதோ கூற வந்தவளின் கரங்களை விலக்கி விட்டு, “ தயவு செஞ்சு எதுவும் பேசிடாத…. என்னை கொஞ்சம் தனியா இருக்க விடு…” என்றுகூறி விட்டு வெளியேறினான். மேலும் இருந்தால் அவளை அதிமாக காயப்படுத்தி விடுவோம் என்பதால் வெளியேறி விட்டான்.
செல்லும் அவனையே வெறிக்கப் பார்த்திருந்தவள் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்.
அவன் மீதிருந்த கண்மூடித்தனமான காதல் அவளை எந்த எல்லைக்கும் செல்ல தயாராக வைத்திருந்தது.
அவளுக்கு அவன் மட்டும் வேண்டும். வஜ்ரவேலிடமிருந்து பிரித்து தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் வெறியாகவே மாறியிருந்தது.