அருவி அங்கே கதறிக் கொண்டிருக்க முரளியோ பொறுமையாக சட்டை பட்டனை கழற்றியபடி, “உனக்காக தான் அருவி, உனக்கு தானே மாட்டை அடக்கறது புடிக்கும், அதுக்கு தான்” என்றான்
“இதென்ன முட்டாள் தனம்? இதுக்கு முன்னாடி எந்த அனுபவமும் இல்லாம இதுல இறங்கறது உயிருக்கே ஆபத்தா முடியும். முதல்ல அவனை வெளியே வரச் சொல்லுங்கப்பா” என்று கர்ஜித்தான் யாதவ் கிருஷ்ணா.
வெற்றி, வேலு, செல்வி, அருவி என்று ஆளாளுக்கு கூச்சலிட, முரளியோ அதை கண்டு கொள்ளாமல், சட்டையை கழற்றி அருவியின் பக்கமாக வீசி விட்டு, பேண்டை முழங்கால் வரைக்கும் ஏற்றிவிட்டான்.
செந்தாழினிக்குமே பதட்டமாக இருந்தது. யாதவ் சிறுவயதில் இருந்தே இந்த விளையாட்டில் தேர்ச்சி பெற்றவன். அவன் விளையாட்டை பார்க்கும் போதே பதட்டமாக தான் இருந்தது. முரளிக்கு அப்படி இல்லை, அருவியை பார்க்கவே பாவமாக இருந்தது. இதுவரை அவள் முகத்தில் தென்பட்ட தைரியம் எல்லாம் எப்போதோ மாயமாக மறைந்து போயிருந்தது, பயத்தில் கண்கலங்க அதிர்ச்சி மாறாமல் உறைந்திருந்தாள்.
அதற்குள் மைக்கில் பேசிக் கொண்டிருந்தவன் முரளியை பார்த்து விட்டு, “யாரோ வெளியூர்காரர், இல்ல இல்ல நம்ம அருவியோட புருஷனாட்டம் இருக்குது, அவரு களம் இறங்கி இருக்காரு. பாக்கலாம் நம்ம ஊரு பொண்ணை கட்டிக்கிட்டதுக்கு தகுதியானவரானு பாத்துடலாம் இன்னைக்கு” என்றான்.
அதற்குள் முத்துக்கருப்பன் முரளியை நோக்கி சீறி பாய, முரளி யாதவனின் ஆட்டத்தை பார்த்திருந்ததால் அதே மாதிரி செய்ய முயற்சி செய்தான். பார்க்கும் போது எளிதாக தோன்றிய விளையாட்டு இப்போது உயிர்பயத்தை கொடுத்திருந்தது முத்துகருப்பன் தன் கூரிய கொம்பால் முரளியின் வயிற்றை வேகமாக கிழிக்க வந்தது.
முரளி அதன் கொம்பை தன் இரு கரங்களால் பிடித்து நிறுத்த முயற்சி செய்தாலும் அவன் உள்ளங்கைகளை கிழித்து ரத்தம் பீறிட்டது. அருவி, “மாமா” என்று அலறியவள், இப்போது யாதவனை பிடித்து உலுக்கினாள், “யாதவா எப்படியாவது என் புருஷனை உன் அண்ணனை காப்பாத்து, என் புள்ளையும் அப்பா இல்லாம வளரக் கூடாது யாதவா” என்று அவனை உலுக்கினாள்.
யாதவனுக்கு அவள் சொல் மிகவும் வலியை கொடுத்தது, அப்பா இல்லாமல் வளர்ந்த வலியை அவனோட சேர்ந்து அருவியும் அல்லவா அனுபவித்து இருக்கிறாள். இப்போது அவள் பிள்ளைக்கும் அதே நிலை வரக்கூடாது என்று நினைத்தவன் மைதானத்திற்குள் குதித்தான்.
“செல்லாது சொல்லாது, யாதவா நீ தானே மாட்டுக்கு சொந்தகாரன், நீயே உள்ளார குதிச்சா எப்படி செல்லும், வெளியே போ, இப்போ தான் ஆட்டம் சூடு புடிச்சிருக்கு” என்று யாரோ மைக்கில் கத்த,
“என் மாடு போட்டியில கலந்துக்கணுமா, வேணாமானு நான் தான் முடிவெடுக்கணும், என் மாட்டை நான் கூட்டிட்டு போறேன்” என்று பதில் சொல்லிவிட்டு “கருப்பா வாடா என்னோட” என்று கத்தினான்.
முத்துகருப்பன் தன் ஓட்டத்தை நிறுத்திவிட்டு எசமானை பார்த்து தயங்கி நின்றது. “யாதவா என் மேல உனக்கு நம்பிக்கை இல்லைனா மாட்டை கூட்டிட்டு போ” என்றான் முரளி தன் தம்பியை பார்த்து நேரடியாக.
“இது ஒண்ணும் சாதாரண விளையாட்டு இல்ல, கரணம் தப்பினா மரணம், இதுல தான் உன் வீரத்தை காட்டணும்னு இல்ல. முதல்ல மைதானத்தை விட்டு வெளியே போ” என்று கத்தினான் யாதவ்
“முடியாது, என்னோட அருவிக்கு இது புடிச்சிருக்கு, அவளை சந்தோஷப்படுத்தணும், அவளை கட்டிக்கிட்டது சரியான வீரன் தான்னு இந்த ஊருக்கு தெரியப்படுத்தணும் நான் வரமாட்டேன்” என்றான் முரளி கைகைளை கட்டிக் கொண்டு
“அவளை கொஞ்சம் பாரு, புள்ளதாச்சி பொண்ணு எப்படி பயந்து போயிருக்கானு, என் பொறுமையை சோதிக்காதே, நீயா வெளியே போனா சரி, இல்லனா நான் தான் உன்னை தூக்கி வெளிய போட வேண்டி வரும்” என்றான் யாதவ் மிரட்டலாக
“அதையும் பாத்துடலாம்” என்ற முரளியை அலேக்காக தன் தலைக்கு மேலே தூக்கினான் யாதவ், முரளி அப்படியே பல்டி அடித்து இப்போது யாதவனை தூக்கினான்.
“அடேய் வாடிவாசல்ல ஜல்லிக்கட்டு நடக்குதுனு பார்த்தா, இங்கே என்னடா குஸ்தி சண்டை நடக்குது” என்று மைக்காரன் அலற, அனைவருமே இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
முரளியை யாதவ் மைதானத்தை விட்டு வெளியேற்ற முயல, அவனோ தம்பிக்கு பிடி கொடுக்க முடியாமல் நழுவிக் கொண்டிருந்தான். இருவரும் ஒருவருக்கொருவர் குறைவில்லை என்பதாக கட்டிப்புரண்டு கொண்டிருக்க, செல்வி அழத்தொடங்கினார். “அண்ணன் தம்பி சண்டை வீட்டுக்குள்ள தான் இத்தனை நாளா இருந்துச்சு, இப்போ ஊரே வேடிக்கை பாக்கற மாதிரி ஆயிடுச்சே” என்று புலம்ப, செந்தாழினி அவரை சமாதானம் செய்தாள், “அத்தை அது சண்டையில்ல, யாதவ் முரளியை காப்பாத்தணும் நினைக்கிறார். சண்டை போடற மாதிரி தெரிஞ்சாலும் இரண்டு பேருமே கட்டினு உருளுறாங்களே தவிர ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கிறாங்களா பாருங்க” என்றாள்.
செல்வியும் வெற்றியும் உற்று நோக்க, சின்ன மருமகள் சொன்னது போல தான் நடந்துக் கொண்டிருந்தது. முரளி மூச்சு வாங்க, “டேய் உனக்கு என்ன தான்டா பிரச்சனை?” என்றான் யாதவனை தடுத்துக் கொண்டே
“உன் உயிர் போக கூடாது, அவ்வளவு தான்” என்றான் யாதவ்.
“உன்னை விட அந்த காளையே மேல்டா, இந்நேரம் நானே அதை அடக்கிட்டு வந்திருப்பேன். என்னை காப்பாத்தறதா சொல்லி அரைமணிநேரமா என் ஸ்டாமினாவை மொத்தமா உறிஞ்சிட்டியேடா, என் பொண்டாட்டி முன்னாடி நான் கெத்தா இருக்கணும்னு நினைக்கிறேன், இது ஒரு தப்பா டா” என்றான் முரளி மூச்சு வாங்கி கொண்டே
அவன் அப்படி சொன்னதும் யாதவ் அப்படியே நின்றான். “சரி டா பத்திரமா விளையாடிட்டு வா” என்று விலகி நடந்தான். அடப்பாவி என்னோட சக்தியெல்லாம் போன பின்னாடி இப்படி விட்டுட்டு போறானே என்று மனதிற்குள் புலம்பியபடி முரளி இப்போது முத்துக்கருப்பனை பார்க்க, அது முன்பை விட உக்கிரமாக அவனை பார்த்து முறைத்தது.
தன் எஜமானுடன் சண்டை போட்டவனை எப்படி சும்மா விடுவது என்பதாக அது முரளியை நோக்கி சீறி பாய, முரளி எப்படியோ குதித்து திமிலை பிடித்தபடி அதன் மேலேயே தொங்கினான். அவனை கீழே விழ வைக்க அது கண்மண் தெரியாமல் அந்த மைதானத்தையே வட்டமாக சுற்றிக் கொண்டு வந்தது. முரளியோ அதன் மேலேயே பாதி மயக்கத்தில் சாய்ந்திருந்தான்.
வேகமாக ஓடிக்கொண்டிருந்த கருப்பன் தீடிரென்று தன் வேகத்தை நிறுத்த யோசனையோடு முரளி அந்த முரட்டு காளையை பார்த்தான், அதன் பார்வை ஒரிடத்தில் நிலைக்குத்தியிருக்க, யாதவ் கூட்டதிற்கு வெளியே லட்சுமியை பிடித்தபடி நின்றிருந்தான். தன் ஜோடியை பார்த்து முத்துகருப்பன் விட்ட ஜொள்ளை கவனிக்காத ஊர்மக்கள், கைத்தட்டி ஆரவாரித்தனர்.
“அருவியோட புருஷன், நம்ம ஊர் மருமகன்னு நிருபிச்சிட்டாரு, யாராலயும் அடக்க முடியாத முத்துகருப்பனை அடக்கினதுக்காக முரளிகிருஷ்ணா தான் இந்த வருஷம் முதல் பரிசை பெற்றிருக்காரு, அவரோட தம்பி யாதவ் கிருஷ்ணா இரண்டாம் இடத்தை பெற்றிருக்காரு” என்று அந்த மைக்காரன் அறிவிப்பை வழங்க, “ஏன்டா” என்பது போல முரளி யாதவனை பார்த்தான். அவன் அங்கே பாரு என்பது போல சைகை செய்ய, அருவி, வயிற்றை தள்ளிக் கொண்டு அந்த மைதானத்திற்குள் ஓட்டமும் நடையுமாக வந்தாள்.
“மாமா, எனக்கு காளையை அடக்கற ஆம்பிளை தான் புருஷனா வரணும்னு ஆசைப்பட்டேன். எனக்காக நீ களத்துல இறங்கினதும் என் உயிரே என்கிட்ட இல்ல, கருப்பன் உன்னை எதுவும் செஞ்சிடுவானானு பயந்தேன், ஆனா நீ யாதவனையும் ஜெயிச்சி, கருப்பனையும் ஜெயிச்சிட்டியே மாமா, என்ன இருந்தாலும் நீ யாதவனோட அண்ணன் தானே, அவனை விட நீ தான் மாமா பலசாலி” என்று அவனை தன் பெருத்த வயிறு அழுந்த கட்டிக் கொண்டாள்.
முரளிக்கோ தர்மசங்கடமாக இருந்தது, யாதவனை பார்த்து முறைத்தான். யாதவ் லட்சுமியை விட்டுவிட்டு மைதானத்தில் குதித்து அவர்கள் அருகில் வந்தான், “ஏய் கருப்பி, உங்க ரொமான்சை எல்லாம் வீட்டுக்குள்ள வச்சிக்கோங்க, இங்கே என்ன பிரி ஷோ காமிசிட்டு இருக்கே” என்று அதட்டினான்.
“போடா கருப்பா, உனக்கு பொறாமை, என் புருஷன் உன்னை விட பலசாலி, முதல் பரிசை வாங்கிட்டார்னு பொங்காதே” என்றாள் உதட்டை சுழித்து
“அருவி என்ன பேச்சு இது?” என்று அதட்டினான் முரளி.
“அவ அப்படி தான் என்கிட்ட பேசுவா, நீ விடு” என்றவன், “உன் புருஷன் பரிசை வாங்கிட்டு வெளியே வருவாரு, அப்போ கொஞ்சிக்க, இப்ப ஆளை விடு” என்றான் கிண்டலாக. அருவி அவனை பார்த்து “வெவ்வே” என்று சொல்லிவிட்டு மைதானத்தை கடந்தாள்.
தன் தம்பியிடம் தயக்கத்தை எல்லாம் மறந்து “ஏன்டா இப்படி செஞ்சே, என் பொண்டாட்டி முன்னாடி பொய்யா வீரன்னு காட்டிக்க வச்சிட்டீயே” என்றான் முரளி
“சரி, விடு அடுத்த முறை நடக்கற ஜல்லிக்கட்டுல நீ உண்மையாவே ஜெயிப்ப, அதுக்கு நானே உனக்கு டிரைனிங் கொடுக்கறேன். அருவி வயித்துல புள்ளையோட இருக்கா, இந்த நிலைமையில உனக்கு எதாச்சும் ஆச்சுனா அவளால தாங்க முடியுமா? நீ என்னவோ புட்பால் மேச்மாதிரி டக்குனு மைதானத்துல குதிக்கிற? நானே முத்துகருப்பனை வச்சு உனக்கு அப்புறமா டிரைனிங் கொடுக்கிறேன். இப்போ கொடுக்கற பரிசை மறுக்காம வாங்கிக்க, இல்லைனா ஊர்மக்கள் எல்லாம் என்னை சந்தேகமா பாப்பாங்க, இத்தனை வருஷமா இப்படி தான் ஜெயிச்சேனானு நினைச்சுபுடுவாங்கடா, என் மானத்தை எப்படியாவது காப்பாத்துடா அண்ணா” என்று பாவமாக சொன்னவனை இழுத்து அணைத்துக் கொண்டான் முரளிகிருஷ்ணா.
அண்ணனின் கண்ணீர் யாதவனின் தோளை நனைத்தது, “இப்படி ஒரு தம்பியை கிட்ட சேர்த்தாம உன்னைய அநாதையா ஆக்கினது மட்டுமில்லாம நானும் அநாதையா வாழ்ந்திருக்கேனேடா யாதவ்” என்றான் தழுதழுத்த குரலில், “என்னைய மன்னிச்சுடுடா” என்றான் மனதார
“சரி சரி விடு, இந்த எமோசஷனல் எல்லாம் உனக்கும் எனக்கும் செட் ஆகல, எல்லாரும் நம்மளை தான் பாக்கறாங்க, மேடைக்கு போகலாம் வா” என்று யாதவ் அவன் முதுகை தடவிக் கொடுத்து விலகினான்.
வாய் கொள்ளா சிரிப்பும் முகம் கொள்ளா புன்னகையுடனும் வேலு, வெற்றிவேந்தன், செல்வி, அருவி, ராதி என ஐவரும் இவர்களை தான் பாத்திருந்தார்கள். வரலாற்றில் குறிக்கப்படவேண்டிய விஷயமல்லவா இது? இரு துருவங்களும் இணைந்து கைகோர்த்தபடி மேடையை நோக்கி செல்வதை பார்க்க அவர்களுக்கு பத்து ஜோடி கண்கள் போதவில்லை, விழிகள் தெறித்து கீழே விழுந்து விடும்படி பார்த்துக் கொண்டனர்.
இருவரும் ஒன்றாக மேடையேறி முதல் இரண்டு பரிசுகளை வாங்கிக் கொள்ள முதல் பரிசு பெற்ற முரளிக்கு மாலையிட வந்த அந்த ஊர் எம்எல்ஏவை நிறுத்தி இருவருக்கும் ஒரே மாலையை போட செய்தான் முரளிகிருஷ்ணா.
யாதவனும் முரளியும் ஓரே மாலையில் படியிறங்கி வர, வெற்றி செல்வியின் கண்களில் ஆனந்த கண்ணீர் நிறைத்தது.
வீட்டிற்கு வந்ததும் ராதி அறைக்குள் நுழைந்து கொள்ள, யாதவ் மனைவியின் பின்னாலே சென்றான், “ராதி உன்கிட்ட ஒருவிஷயம் சொல்லணும்டி” என்றான்.
“எனக்கு தெரியும்”
“என்னடி தெரியும்?” என்றான் ஆச்சரியமாக
“ம் நீ லஷ்மியை கூட்டிட்டு வந்து கருப்பனை டைவர்ட் பண்ணதும் தெரியும், அண்ணனுக்காக உதவி செஞ்சதும் தெரியும்” என்றாள் உதட்டை சுழித்து
“ஏய் உன் கண்ணுல எதுவுமே தப்பிக்காதாடி, செம்ம பிரில்லியண்ட் டி, இதுல உனக்கெதுவும் வருத்தம் இல்லயே”
“நிச்சயமா இல்ல, முரளி ஜெயிச்சதுல அருவி கண்ணுல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? எனக்கென்னவோ அவ சின்ன வயசுல உன்னை விரும்பியதுக்கு காரணம் கூட, அந்த ஜல்லிக்கட்டு தான்னு நினைக்கிறேன். அவ முகத்துல அவ்வளவு சிரிப்பு. இது போதும், ஒரு முறையாவது என் மாமா ஜெயிச்சதே, அதுவே போதும்னு சொல்லிட்டே இருந்தா” என்றாள் ராதி
“ஆமா ராதி, அவளுக்காக இந்த முரளியும் உயிரை பணயம் வைக்க துணிஞ்சிட்டான், அதுக்காக தான் இப்படி பண்ணேன், தேங்க்ஸ்டி நீ எல்லாரையும் நல்லாவே புரிஞ்சுக்கிறே” என்றபடி மனைவியை அணைத்துக் கொண்டான்.
குடும்பத்துடன் சேர்ந்து அருவிக்கு கோலாகலமாக சீமந்தம் செய்து முடித்தனர். அதன் பிறகு முரளி மட்டும் டெல்லிக்கு போவதும் வருவதுமாக இருந்தான். செல்வி பிரசவம் முடிந்து ஐந்து மாதம் கழித்து தான் அவர்களை அனுப்ப முடியும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார் செல்வி.
முரளி அடிக்கடி வந்து சென்றதில் யாதவ்வுடன் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தான்.
*********
ஐந்து மாதங்கள் கழித்து அருவிக்கு பிரசவத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. “கோகுல கிருஷ்ணா” என்று திருநாமம் சூட்டினர். முரளி கிருஷ்ணா மூன்று மாதங்களுக்கு விடுமுறை சொல்லிவிட்டு எப்பாேதும் மனைவி மற்றும் குழந்தையோடு நேரத்தை செலவழித்தான்.
தான் தந்தையான பின்பு தான் தன் தந்தையின் அருமை புரியும் என்பார்கள், அதை இப்போது முழுமையாக உணர்ந்த முரளி, வெற்றிவேந்தன் காலில் விழுந்து மனதார மன்னிப்பு கேட்டான். “முரளி எதுக்குப்பா இதெல்லாம், நீ என்னை புரிஞ்சுக்கிட்டியே அதுவே போதும்” என்று மகனை அனைத்துக் கொண்டார்.
மொத்த குடும்பமும் கோகுலை கொஞ்சி மகிழ்வதை யாதவன் புன்சிரிப்போடு பார்த்துவிட்டு கடந்து செல்வதை பார்த்த செந்தாழினிக்குமே இப்போது குழந்தையின் மேல் ஆர்வம் பிறந்தது. அன்றிரவே தன் கணவனிடம் வந்து, “யாதவ் நீங்க சொன்னதை செய்ய மறந்துட்டீங்க” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.
“நான் என்ன சொன்னேன்?” என்றான் விளங்காமல்
“அன்னைக்கு பத்ரிநாத்துல அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்னு நான் கேட்டதுக்கு உன்னை அம்மாவாக்கறதுனு தான்னு சொன்னீங்க. இங்கே வந்தா அதுக்கான முயற்சி செஞ்ச மாதிரியே தெரியலயே” என்றாள் உதட்டை சுழித்து.
அவள் இடையை தன்னோடு இறுக்கி, “உனக்கு வேலை கீழடியில, ஏற்கனவே அலைச்சல் படுறீயேனு சும்மா விட்டா, என்னையே குறை சொல்றீயா? அப்போ கூட இடைவிடாம உன்னைய நான் வாசிச்சுட்டு தானேடி இருந்தேன்” என்றான் ஒரு மாதிரி குரலில்
“ச்சீ நான் அதை சொல்லல, இனி எந்த கட்டுப்பாடும் வேணா, நமக்கும் குழந்தை வேணும்னு சொன்னா, நீ என்னென்னவோ பேசிட்டு” என்று அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
“சரி வா, இப்பவே அதுக்கான வேலையில இறங்கலாம், என்றபடி மனைவியை தூக்கிக் கொண்டு கட்டில் போட்டு அவள் மீது படர்ந்தான்.
*******
அன்று கோகுலாஷ்டமி என்பதால் செல்வியை கையில் பிடிக்க முடியவில்லை, கிருஷ்ணனுக்கு மட்டும் பிறந்த நாள் இல்லையே, அவருடைய சின்ன மகன் யாதவனுக்கும் அன்று தான் பிறந்த நாள்.
அத்தோடு அவர் வேண்டுதலின் படி இப்போது இருமகன்களும் தங்கள் மனவேறுப்பாட்டை மறந்து ஒன்றாக பேசி ஒரே வீட்டில் இருக்கின்றனர். கூடுதல் பரிசாக அந்த மாயோன் முரளியின் மனைவி அருவியின் கையில் கோகுல கிருஷ்ணனையும், யாதவின் மனைவி செந்தாழினியின் மணிவயிற்றில் மாயக்கண்ணனையும் அல்லவா உதிக்க செய்திருக்கிறான்? ஆம் இப்போது செந்தாழினி மூன்று மாதம் கர்ப்பம்.
யாதவ் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை அறைக்குள் இழுத்துச் சென்று, “வேங்குழல் வாசிக்கணும்டி” என்றபடி அவள் இதழிலும், வயிற்றிலும் இடைவிடாது தன் முத்திரையை பதித்துக் கொண்டே இருந்தான்.
ராதி கணவனின் முத்த யுத்தத்திலிருந்து தப்பித்து வந்தவள் நான்கு மாத சிசுவான கோகுல கிருஷ்ணன் கவிழ்ந்துக் கொண்டு பொக்கை வாயோடு சிரிப்பதை பார்த்து, அவன் அழகில் மயங்கி நின்றாள். அவளே அவனுக்கு கிருஷ்ணர் போல அலங்காரம் செய்து அவன் கூந்தலை முடிந்து மயில் பீலியை கட்டினாள். அதை பார்த்த, மொத்த குடும்பமும் குழந்தை கிருஷ்ணனே வீட்டிற்கு வந்தது போல நினைத்து உள்ளம் பூரித்தனர். செல்வி அரிசி மாவை அந்த பிஞ்சு கால்களில் தோய வைத்து வீடெங்கும் அவனை தூக்கிக் கொண்டு கோலமிட்டார்.
“ம்ம் வருஷா வருஷம் என்னோட கால்ல தான் பாதம் வரைவீங்க, இப்போ என்னடான்னா என்னை விட்டுட்டு இந்த கோகுலை பிடிச்சிட்டீங்களா?” என்று பொய்யாக கோபித்துக் கொண்டான் யாதவ்
மற்ற அனைவரும், “இனிமே சின்ன கண்ணன் இருக்கும் போது வளர்ந்த நீ எதுக்கு” என்று கொல்லென்று சிரிக்க, யாதவ் அவர்களுக்கு அழகு காட்டி முகத்தை திருப்பிக் கொண்டான்
முரளியோ இன்னொரு மாவு கின்னத்தை தூக்கிக் கொண்டு வந்து யாதவ் முன்னால் வைத்து, அவன் காலை பிடித்தான். “ஏய் முரளி என்ன பண்றே, நான் அவங்க கிட்ட விளையாட்டுக்கு தான்டா கேட்டேன். எனக்கு கோவம்லா இல்ல” என்று பதறினான்
“காலை தூக்குடா, நீ தான்டா இந்த வீட்டோட கிருஷ்ணன், இதுக்கு பின்னாடி யார் வந்தாலும், உனக்கு தான் முதல் மரியாதை” என்றபடி தம்பியின் காலைப்பற்றி அந்த மாவில் தோய வைத்து, “கோகுல் பாதம் இருக்கறதுக்கு பக்கத்துல உன்னோட பாதத்தை வைடா, குழந்தை கிருஷ்ணனும் வளர்ந்த கிருஷ்ணனும் நம்ம வீட்ல தான் இருக்காங்கனு அப்போ தான் இங்கே இருக்கறவங்களுக்கு தெரியும்” என்றான்
வீட்டில் இருந்த அனைவரும் வாய் மேல் கைவைத்துக் கொண்டு விழிகள் தெறித்து விடுவது போல பார்க்க, யாதவ் ஒற்றை கண்ணை அடித்து, “எப்படி?” என்பது போல காலரை தூக்கி காட்டினான். முரளியோ கர்மமே கண்ணாக தன் தம்பியின் பாதத்தை வாசலில் இருந்து பூஜை அறைவரை தடம்பதிக்க செய்த பின்பே அவனை விட்டான்.
அங்கே பெண்கள் பூஜைக்கு தயார் செய்துக் கொண்டிருக்க, முரளி மகனை மடியில் வைத்துக் கொண்டு தன் தந்தையின் அருகில் அமர்ந்தான். அனைவரும் பூஜையில் கவனமாக இருக்க, யாதவ் அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு மெல்ல படியேறி மொட்டை மாடிக்கு சென்றான்.
யோசனையோடு அவன் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்க, அவன் சந்தேகப்பட்டது போல கந்தர்வர்கள் வானில் பூந்தேரில் பறந்து யாதவ் இருந்த மொட்டை மாடியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
இடையில் கைவைத்துக் கொண்டு, அவர்களை முறைக்க முயன்று தோற்றவனாக, “நான் தான் இதெல்லாம் வேண்டாம், சராசரி மனுஷனா வாழ விடுங்கனு சொல்லிட்டு தானே வந்தேன்” என்றான் பொறுமையாக
“யாதவா, நாங்க உங்களை தொல்லை செய்ய மாட்டோம். வருடத்துக்கொருமுறை உங்க பிறந்த நாளன்று மட்டும் உங்களுடைய இசையை கேட்கும் வரம் மட்டும் கொடுங்க, அது போதும்” என்றனர்.
“என்னிடம் தான் எந்த இசைக்கருவியும் இல்லயே?” என்றவனிடம் தங்க பேழையை நீட்டினார்கள்.
“என்ன இது?” என்று புருவம் சுருக்கினான்
“யாதவா நின் வேங்குழலே” என்றனர் கோரசாக
“அது எனக்கு தெரியாதா?” என்று ஒற்றை புருவம் உயர்த்தினான்.
“யாதவா வழக்கம் போல வாசிச்சுட்டு எங்க கிட்டயே கொடுங்க, நாங்க அதோட இடத்துல பாதுகாப்பா வச்சிடுவோம்” என்றனர்.
ம்ம் என்றவன் அவர்களிடத்தில் இருந்த வேங்குழலை எடுத்து வாசிக்க தொடங்க, வேங்குழலியும் தானாகவே அங்கே வந்திருந்தாள்.
யாதவன் வேங்குழலை ஒரு கையில் பற்றிக்கொண்டு வேங்குழிலியையும் இடையோடு சேர்த்தபடி வாசிக்க, கந்தர்வர்கள் தங்கள் இசைக்கருவிகளால் இன்னிசை கச்சேரியை ஆரம்பித்தனர். அந்த இசையில் வீட்டின் உள்ளே இருந்த அனைவரும் நித்திரையில் ஆழ்ந்தனர்.
யாதவனின் இசை காற்றோடு கலந்து, உலகமெங்கும் அவன் அருளை பரவச் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. யாதவனின் வேங்குழலோடு பயணித்த அனைத்து உள்ளங்களும் இன்புற்று வாழ்ந்திட வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன், நன்றி! வணக்கம்!
சுபம்!
இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் டியர்ஸ், வேறோரு வித்தியாசமான கதை களத்தில் மீண்டும் சந்திப்போம். நன்றி கூறி விடைபெறுவது நான் உங்கள் சிவயாழினி