இணை 30 எபிலாக்

அன்று அகல்விழிக்கு திருமண விழா. ஆர்யனின் காவல்துறை நண்பன் விக்ரம் தான் மாப்பிள்ளை. 

 

அகல்விழி வக்கீலுக்கு படிக்க போவதாக கூறவும் சென்னையில் ஆர்யனின் உதவியோடு  சட்டக் கல்லூரியில் சேர்ந்திருந்தாள். அப்போது ஆர்யனுடன் வந்திருந்த விக்ரமை முதன்முதலாக நேரில் சந்தித்தாள்.

 

விக்ரம் அகல்விழியின் அகன்றவிழிகளையே பார்த்துக் கொண்டிருக்க, ஆர்யன் அவனுக்கு தன் மைத்துனியை அறிமுகம் செய்து வைத்தான்.

 

“அகல்விழினு கரெக்ட்டா தான் பேர் வச்சிருக்காங்க” என்றான் விக்ரம் ரசனையுடன். அகல்விழி முறைக்கவும் வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தான். அப்போது ஆர்யன் பெரிதாக எதையும் யோசிக்கவில்லை.

 

ஆரவ்விற்கு முதல் பிறந்த நாளன்று வளர்மதி அகல்விழியை வீட்டிற்கு அழைத்து வரச்சொல்லி ஆர்யனை அனுப்பியிருந்தாள். ஆர்யன் சென்றபோது விக்ரமுடன் இருசக்கர வாகனத்தில் அகல்விழி சென்று கொண்டிருப்பதை கவனித்தான்.

 

அப்போதே விக்ரமிற்கு போன் செய்து, “அகல்விழி எங்கே இருக்கானு தெரியல” என்றான்.

 

“என் கூட தான் இருக்கா ஆர்யா” என்று விக்ரம் உண்மையை ஒத்துக் கொண்டான். இருவரையும் நேரில் வரச்சொல்லி விசாரிக்க, “நானே உன்கிட்ட பேசலாம்னு இருந்தேன் ஆர்யா. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்” என்றான் விக்ரம்.

 

“அவங்க வீட்ல பேசி கல்யாணத்தை முடிக்கற வரைக்கும் ரெண்டு பேரும் வெளியில சுத்தக்கூடாது” என்றான் ஆர்யன் இருவருக்கும் பொதுவாக. 

 

அதன்பிறகு செழியனிடம் விவரம் கூறி இருவரின் வீட்டிலும் பேசி, அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தான். செழியன் வளர்மதியின் திருமணத்தை முன்னின்று நடத்தியது போல ஆர்யன் தன் மைத்துனியின் திருமணத்தை தலைமை ஏற்று நடத்தி முடித்திருந்தான். திருமணம் சென்னையிலேயே நடைப்பெற்றதால் வளர்மதியின் மொத்த குடும்பமும் சென்னைக்கு வந்திருந்தனர்.

 

ஆர்யன்-வளர்மதியின் மகன் ஆரவ் தன் மாமன் செழியனின் தோளை விட்டு இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்க, செழியனின் இரண்டாவது புதல்வன் இலன் அவனை தூக்க சொல்லி அழுது கொண்டிருந்தான். ஆர்யன் வந்து அவனை தூக்கிக் கொண்டு சமாதானம் செய்தான்.

 

“மாப்ளே நீங்க கொடுத்த வாக்கை நிறைவேத்தல” என்றான் செழியன்

 

“நான் என்ன வாக்கு கொடுத்தேன்” என்று ஆர்யன் யோசிக்க “மருமகளை பெத்து கொடுக்கறேன்னு சொல்லி மருமகனை பெத்து கொடுத்துட்டீங்க”

 

“அதுக்கென்ன மச்சான், அடுத்த முயற்சியில கொடுத்த வாக்கை நிறைவேத்திடறேன்” என்று ஆர்யன் மனைவியை பார்த்து கண்சிமிட்ட அகல்விழியின் அருகில் நின்றிருந்தவள் காரணம் புரியாமலே கன்னம் சிவந்தாள்.

 

அனைத்து சடங்குகளும் முடிந்த பின்பு அகல்விழி செழியனிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தாள். உடன் பிறந்து கூடவே வளர்ந்தவளிடம் அவ்வளவாக பாசம் கொண்டாடியதில்லையே தவிர செழியனுக்கு அகல்விழியின் மீது அளவு கடந்த அன்பு இருக்கிறது என்பது அவனுக்கே அப்போது தான் தெரிந்தது. அவளை பிரியப் போவதை நினைத்து மனம் கனத்தது.

 

“பாத்து சூதனமா இருந்துக்கோ அகல், உனக்கு புத்தி சொல்ல வேண்டியது இல்ல. உனக்கு என்ன பிரச்சனைனாலும் யோசிக்காம எனக்கு போன் போடு. இல்லனா ஆர்யனுக்கு போன் பண்ணு, சரியா?” என்று அவன் அறிவுரை கூறிக் கொண்டிருந்தான்

 

விக்ரம் செழியனின் மனம் புரிந்தவனாக, “மச்சான், உங்க தங்கச்சி என்கிட்ட மாட்டல, நான் தான் அவகிட்ட மாட்டியிருக்கேன். அவ வக்கீல், நான் போலீஸ். போலீஸ் கண்ணுல விரலை விட்டு ஆட்றது தான் வக்கீலோட வேலை. சோ நீங்க தைரியம் சொல்ல வேண்டியது எனக்கு தான்” என்றான் சிரித்துக் கொண்டே

 

“அப்ப நீங்களும் நம்ம சங்கத்து ஆள் தானா?” என்று பாண்டி கேட்க

 

“என்ன சங்கம்?”

 

“பாவப்பட்ட கணவர்கள் சங்கம்” என்று பாண்டி ஆரம்பிக்க, ஆண்கள் கூட்டம் அங்கே களை கட்ட ஆரம்பித்திருந்தது. 

 

அதன்பிறகு ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுத்துக் கொண்டு அகல்விழியை அவளுடைய புகுந்த வீட்டில் விட்டு அனைவரும் கிளம்பினார்கள்.

 

******

 

“மே ஐ கம் இன் மேடம்” என்று யாரோ கதவை தட்ட, “யெஸ் கம் இன்” என்ற வளர்மதியின் ஆளுமையான குரல் கேட்டதும் உள்ளே நுழைந்தாள் நிஷா.

 

“நிஷா, உனக்கு பலமுறை மேடம்னு கூப்பிடாதேனு சொல்லிட்டேன். உள்ளே வரதுக்கு எதுக்கு பர்மிஷன் கேட்டுட்டு இருக்கே. நாம பிரெண்ட்ஸ் தானே” என்று சலித்துக் கொண்டாள் வளர்மதி.

 

“ஆபிஸ்ல இருக்கறவரைக்கும் நீங்க என்னோட பாஸ் தான் மேடம். கம்பெனியோட எம்டியான உங்களை, ஜிஎம் நானே மரியாதை இல்லாம நடத்துனா, மத்த ஸ்டாப்ஸ் என்ன நினைப்பாங்க, சோ நம்ம பிரண்ட்ஸ்ஷிப் ஆபிஸ்க்கு வெளியில தான்” என்றாள் நிஷா 

 

“உன்னை திருத்தவே முடியாது. என்ன விஷயம்?” என்று கேட்ட வளர்மதியிடம், தான் கொண்டு வந்த கோப்புகளை நீட்டி, “உங்க கையெழுத்து வேணும்” என்றாள்.

 

அதே நேரம் யுகேந்திரன் கதவை தட்டிவிட்டு வெளியே நின்றான். 

 

“கேண்டின் டைமா?” என்று கடிகாரத்தை பார்த்தாள். இரு அலுவலகத்திற்கும் பொதுவான கேண்டின் என்பதால் மாலை நேரத்தில் நால்வரும் நண்பரகளாக கேன்டீனில் சந்தித்துக் கொள்வது வழக்கம்.

 

விரைவாக கையெழுத்து போட்டு விட்டு நிஷாவுடன் கேன்டீனுக்கு சென்றாள். ஆர்யன் ஏற்கனவே அவளுக்காக காத்திருந்ததால் கணவன் அருகில் அமர்ந்தாள்.

 

“புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து எங்களுக்கு பிரமோஷன் தரதா சொல்லி  எங்களை பிரிச்சிட்டீங்க” என்று ஆரம்பித்தான் யுகேந்திரன்

 

“ஏன் நிஷா, பிரமோஷன் தந்தா சந்தோஷம் தானே படணும்?” என்றான் ஆர்யன்.

 

“ஒரே ஆபிஸ்ல பிரமோஷன் கொடுத்தா பரவால்ல. ரெண்டு பேரையும் உங்க ரெண்டு ஆபிஸூக்கும் ஜிஎம்மா போட்டு எங்களை பிரிச்சிட்டிங்களே”

 

“ஒரே ஆபிஸ்ல ரெண்டு ஜிஎம் எப்படி இருக்க முடியும்? அதுவும் ரெண்டு ஆபிஸும் பக்கத்துல தானே இருக்கு? நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பாத்துட்டு தானே இருக்கீங்க?” என்றாள் வளர்மதி

 

“இருந்தாலும் ஒரே ஆபிஸ்ல வேலை செய்யற மாதிரி இருக்குமா?”

 

“உன் கஷ்டம் இப்போ தான்டா எனக்கும் புரியுது. பேசாம ரெண்டு பில்டிங்க்கும் நடுவுல பொதுவா ஒரு எம்டி ரூம், ஒரு ஜிஎம் ரூம் போட்டுடலாம்” என்றான் ஆர்யன்.

 

“சூப்பர், டபுள் ஓகே” என்று யுகேந்திரன் நண்பனுக்கு கைக்கொடுக்க, வளர்மதி கணவனை முறைத்தாள்.

 

ஏற்கனவே ஆர்யன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவள் அறைக்கு வந்து அவளை சீண்டிக் கொண்டே இருந்தான். மனைவியின் மன ஓட்டத்தை உணர்ந்து ஆர்யன் கண்சிமிட்ட உதட்டை சுழித்தாள். கணவன் பார்வை மாற்றத்தை உணர்ந்து, “எனக்கு வேலை இருக்கு” என்று எழுந்து கொண்டாள்.

 

ஆர்யனும் எழுந்து அவளுடனே வந்து அவள் அறைக் கதவை மூட, “என்னங்க நீங்க? யாராச்சும் பாத்தா என்ன நினைப்பாங்க?” மெல்லிய குரலில் சிணுங்கினாள்.

 

“உன் கூட சேர்ந்து காபி குடிச்சுட்டு கிளம்பிடறேன் மதி” என்ற ஆர்யன் கையில் இருந்த காபி கப்பை அவள் வாயருகே வைக்க, அவன் இனி என்ன செய்வான் என்று புரிந்தவளாய் காபியை நகர்த்தி அவளாகவே அவன் இதழ்களில் இதழ் பதித்தாள்.

 

ஆர்யன் அதிர்ந்து பின்பு அவளின் இதழ் அணைப்பை தனதாக்கி அவள் இதழ்களில் மூழ்க தொடங்கினான். அப்போது மேஜையில் இருந்த தொலைபேசி ஒலிக்கவும் இருவரும் திடுக்கிட்டு விலகினர்.

 

வளர்மதி அழைப்பை ஏற்றதும், “மருமகளே கிளம்பிட்டீங்களா?” என்றார் ஆதிசங்கரன்

 

“இன்னும் இல்ல, ஏன் மாமா? ஆரவ் ஆழறானா?”

 

“அவன் விளையாடிட்டு தான் இருக்கான். ஆனா உன்னை தேடறான், அடிக்கடி வாசல் பக்கம் எட்டி பாக்கறான்” 

 

“இதோ கிளம்பிட்டோம்” என்று அவள் அழைப்பை துண்டித்ததும் ஆர்யன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான். 

 

ஆரம்பத்தில் வளர்மதி ஆர்யனுடன் இருப்பதற்காகவே அலுவலகத்திற்கு வர தொடங்கியிருந்தாள். ஆதிசங்கரன் தன் கம்பெனியின் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்துவிடுவதாக கூறியும் மறுத்து விட்டாள். ஆர்யனும் அவளை வற்புறுத்தவில்லை.

 

ஆனால் வளர்மதி கணவனுடன் இருக்கும் போது தொழிலை பற்றி ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொள்வாள். ஆர்யனும் அவளுக்கு எல்லாவற்றையும் சொல்லி கொடுத்தான். இதற்கிடையில் வளர்மதிக்கு குழந்தை ஆரவ் பிறந்துவிட அவள் அலுவலகத்தை மறந்து குழந்தையுடன் வீட்டிலேயே இருந்தாள். ஆரவ்விற்கும் ஒரு வயது முடிந்த பின்பு, ஆதிசங்கரனுக்கு பேரனோடு நேரம் செலவிடுவதிலேயே மிகுந்த நாட்டம் இருந்தது. 

 

சமீபத்தில் ஆதிசங்கரன் உயர் இரத்த அழுத்ததத்தால் மூர்ச்சையாகிவிட மருத்துவர் அவரை ஓய்வெடுக்க சொல்லியிருந்தார். எனவே ஆர்யன் இரு கம்பெனிகளையும் கவனித்துக் கொண்டான். ஆனால் வேலை பளுவினால் அவன் வீட்டிற்கு வர தாமதமானது. எனவே கணவனின் வேலை பளுவை குறைக்கவும் மாமனாருக்கு ஓய்வு அவசியம் என்றும் உணர்ந்த வளர்மதி ஆதிசங்கரன் கம்பெனியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.

 

கம்பெனியின் சேர்மனான ஆதிசங்கரன் வாரத்திற்கு ஒரு முறை அலுவலகத்திற்கு வந்து கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்வார். அதுவும் வளர்மதியின் வற்புறுத்தலால் நடந்தது. கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கிளம்பி அலுவலகம் வந்து மாலையில் ஒன்றாகவே வீடு திரும்புவது வழக்கம்.

 

மாலையானதும் மகன் மீது மனைவியின் கவனம் திரும்பி விடும் என்பதால் ஆர்யன் அமைதியாகவே காரை செலுத்தினான்.

 

அவர்கள் வீட்டிற்குள் சென்றபோது ஆதிசங்கரன் வழக்கம் போல நான்கு காலில் நடந்து கொண்டிருந்தார். ஆரவ் அவர் முதுகை பிடித்துக் கொண்டு தத்தி நடை பழகி கொண்டிருந்தான்.

 

வளர்மதியை கண்டதும், சட்டென அமர்ந்து நான்கு கால் பாய்ச்சலில் சென்று அவள் கால்களை பிடித்துக் கொண்டு நிமிர்ந்து ஆர்யனை பார்த்து பொக்கை வாயால் புன்னகைத்தான். அவன் விழிகள் ஆர்யனை போல் இருந்தாலும் முகம் வளர்மதியின் ஜாடையிலேயே இருந்தது.

 

“மதி உன் மகனும் உன்னை மாதிரியே பண்றான்டி. நான் முதன்முதலா உன்னை உன் வீட்ல வச்சு பாக்கும் போது நீ நாலு கால் பாய்ச்சல்ல வாசல் வரைக்கும் வந்து என்னை நிமிர்ந்து பார்த்த பார்வையையே என்னால மறக்க முடியல. இவன் ஒவ்வொரு நாளும் அதே சீனை ரீகிரியேட் பண்ணிட்டு இருக்கான்” என்றான் ஆர்யன் மனைவிக்கு மட்டும் கேட்கும் குரலில்

 

வளர்மதி கணவன் பேச்சை கேட்டபடி மகனை தூக்கி கொண்டு கீழே இருந்த அறைக்குள் சென்றாள். அம்மா தினமும் காலையில் சென்று மாலையில் வருவதை உணர்ந்திருந்த மகன் அவள் வரும் நேரம் ஆனதும் வாசலையே பார்த்துக் கொண்டிருப்பான். வர தாமதமானால் அழ தொடங்கி விடுவான். அன்னை வந்ததும் அவனின் பசியாற்ற வேண்டும் என்று அடம்பிடிப்பான். இன்றும் அவன் கை அவள் புடவையை விலக்கி பசியாற துடிக்க, மகனின் பசி உணர்ந்து அவளும் பசியாற்றி விட்டு கீழே இறக்க அவன் நான்கு கால் பாய்ச்சலில் ஓடினான்.

 

அவனை பிடிக்க வளர்மதியும் நான்கு காலில் அவன் பின்னால் ஓடிவர, ஆரவ்விற்கு குஷியாகி போனது. இன்னும் வேகமாக வாசல் வரை சென்றவன் அங்கே ஆர்யனை கண்டதும் அவனை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றான். ஆர்யன் மகனை தூக்கி கொண்டு மண்டியிட்டு அமர்ந்திருக்கும் மனைவியை அழுத்தமாக பார்த்தான்.

 

“என்ன பாக்கறீங்க?” என்று ஆடையை சரிசெய்தாள்

 

“செழியனோட பாப்பாவுக்கு இன்னொரு பாப்பாவை கொடுத்திடலாமானு பாக்கறேன்” என்று ஆர்யன் கண்சிமிட்ட அவள் “போங்க நீங்க” என்று சிணுங்கினாள்.

 

மனைவியின் சிணுங்கலில் ஆர்யனின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தது. கையில் இருந்த ஆரவ்வும் சிணுங்கினான்.

 

“உனக்கென்னடா?” என்று மகனை கேட்டான், அவன் “தாத்தா” என்று சிணுங்க, “என் மகன் சமத்து” என்று ஆர்யன் மகனை கீழே இறக்கி விட்டான். அவன் நான்கு கால் பாய்ச்சலில் ஆதிசங்கரனை தேடிச் சென்றான். அவன் சென்றதும் கதவை சாத்தி விட்டு மனைவியை அழுத்தமாக பார்த்தான் ஆர்யன்.

 

வளர்மதி வெட்கத்தில் முகத்தை மூடிக்கொள்ள ஆர்யன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டான். வளர்மதி கணவனின் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தாள். 

 

இனியவனின் இருவிழி பழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலையாக அவளின் நிலை இருந்தது. அவனில் இருந்து அவளின் பார்வையையே அவளால் விலக்கி கொள்ளவே முடியவில்லை. அப்படியிருக்கும் போது அவனை விட்டு எங்கனம் விலகுவாள்?

 

எல்லையில்லாத காதலும், சொல்லில் அடங்காத நேசமும்

என்ன முடியாத ஆசையும், இருவரிடத்திலும் இடைவிடாது 

தோன்றிக் கொண்டே இருப்பதால் 

இருவரின் சங்கமமும் இடைவேளையின்றி 

தொடர்ந்து கொண்டே இருந்தது.

 

வளர்மதியின் இனிய இணை ஆர்யனே!

 

 

(சுபம்)

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
4 Comments
error: Content is protected !!
Scroll to Top