ஆர்யனை வளர்மதியை தொடர்ந்து பேச சொல்லி சைகை செய்துவிட்டு அவனுடைய எண்ணில் இருந்து யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பினான்.
“எனக்கு என்ன கிஃப்ட் தர்றதுனு அவருக்கு தெரியலையாம். பிளாங்க் செக்ல கையெழுத்து போட்டு கொடுத்துட்டாரு. அதை உன்கிட்ட கொடுத்துட்டா என் பிரச்சினை முடிவுக்கு வந்துடும்னு போன் பண்ணேன், உனக்கு சந்தேகமா இருந்தா போனை வச்சிடு” என்றாள்
“பார்றா? பொண்டாட்டிக்கு பிளாங்க் செக் கிஃப்ட்டா கொடுத்தாரா ஆர்யன்? அதை எனக்கு வாட்ஸ்அப் பண்ணு பாக்குறேன்” என்றான்.
உடனே ஆர்யன் தன் பேகில் இருந்த செக் புக்கில் நிஜமாகவே கையெழுத்து போட்டு அவளிடம் நீட்டினான்.
வளர்மதியும் அதை புகைப்படம் எடுத்து இன்பரசுவின் எண்ணிற்கு அனுப்பினாள்
இன்பரசு இப்போது வளர்மதிக்கு அழைத்தான்.
“உன்னை நம்பறேன். பட் ஐ நீட் ஒன்லி கேஷ். நீ ஒரு வேலை பண்ணு. நாளைக்கு பேங்க்குக்கு போய் செக்கை பணமா மாத்திட்டு நான் சொல்ற இடத்துக்கு தனியா வர்றே. புரியுதா?”
“புரியுது, முட்டுக்காடு ராயல் ஹோட்டல் தானே”
“இல்ல, அந்த இடத்தை சும்மா கன்ப்யூஸ் பண்ண சொன்னேன். கிளம்பும்போது போன் பண்ணு. அப்போ கரெக்ட் அட்ரஸ் தரேன். இதுல ஏதாவது வில்லங்கம் நடந்துச்சு, அவ்ளோ தான். ஆல்ரெடி போட்டோவை என் லேப்டாப்ல அப்லோட் பண்ணிட்டேன். என்னை சோசியல் மீடியாவுல பப்ளிஷ் பண்ண வச்சிடாதே”
வளர்மதி கலவரத்துடன் கணவனை பார்த்தாள். ஆர்யனின் தாடை எலும்புகள் இறுகி இருந்தன.
“என்ன பதிலையே காணோம்?” இன்பரசு சந்தேகத்துடன் வினவினான்.
“நீ சொல்ற மாதிரி தனியா வர்றேன்” என்றாள்.
“நீ கால் டாக்ஸி புக் பண்ணி தனியா கிளம்பி வந்துடு. நான் சொல்ற இடத்துலே இறங்கி தனியா நில்லு. உன்கூட யாரும் வரலைன்னு உறுதியா தெரிஞ்சதும் நான் உன்னை என் கார்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போவேன். அதுக்கப்புறம் நான் உன்கூட”
அதற்கு மேல் அவனை பேசவிடாமல், “மத்ததை நேர்ல பேசிக்கலாம். நான் கிளம்பும் போது போன் பண்றேன்” என்று போனை கட் செய்தவள் கணவனை கட்டி கொண்டு கண்ணீர் விட்டாள்.
“எனக்கு பயமா இருக்குங்க”
“பயப்படாதே மதி. பொண்ணுங்க தினமும் இந்த மாதிரி கேவலமான ஜந்துக்களை சந்திக்க வேண்டி இருக்கு. அவங்களோட சேர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கு. அவனுக்கு சரியான பாடத்தை நீ தான் கத்து கொடுக்க போறே”
“நானா? நீங்க என் கூட வர மாட்டீங்களா?”
“நான் உன் கூட நிழலா இருப்பேன். ஆனா நீதான் உன்னை காப்பாத்திக்க போறே. நான் உனக்கு பக்கபலமா இருப்பேன்?
“எப்படி?”
ஆர்யன் தன்னுடைய திட்டத்தை விவரித்தான். வளர்மதிக்கு உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும் கணவனின் வழிகாட்டுதலில் அவன் சொன்னதை செய்து விட முடிவு செய்தாள்.
மறுநாள் காலை வளர்மதி மட்டும் கிளம்பினாள். அவள் தனியாக செல்வதை கவனித்த ஆதிசங்கரன், “மருமகளே எங்கேம்மா கிளம்பிட்டே?”
“பேங்க்குக்கு மாமா?”
“தனியாவா போறே? ஆர்யனை அழைச்சிட்டு போயேன்”
“அவருக்கு வேலையிருக்குனு சொன்னாரு, அதான்”
ஆதிசங்கரனுக்கு கோபம் வந்திருந்தது.
“ஆர்யா” சத்தமாக மகனை அழைத்தார்.
“என்னப்பா?” என்று வந்தவனை முறைத்தவர், “உன் பொண்டாட்டிய வெளியே கூட்டிட்டு போறதை விட உனக்கு என்னடா வேலை? பேங்க்குக்கு தனியா போறேன்னு சொல்றா?”
“தனியா போனா தானே தைரியம் வரும், போய் வரட்டுமே, எனக்கு வேற முக்கியமான வேலை இருக்கு” என்றான் விட்டேற்றியாக.
“வேலை வேலைனு போய் உன் அம்மாவை பறிகொடுத்துட்டு ஒத்தையில இருக்கேன். என்னை பார்த்தும் புத்தி வரலயா உனக்கு. ஒழுங்கா மருமகளை கூட்டிட்டு போ” என்றார் ஆதிசங்கரன்.
வேறுவழியில்லாமல் ஆர்யன் வளர்மதியை அழைத்துக் கொண்டு தன் காரில் வங்கிக்கு கிளம்பினான்.
“மதி, உன்னோட போன்ல ஜிபிஎஸ் லோகேஷனை எனக்கு ஷேர் பண்ணிடு. பேங்க்ல இருந்து பணத்தை எடுத்துக்கிட்டு நீ மட்டும் தனியா தான் போக போறே. இன்பரசு கூடவும் பயப்படாம போ. நான் அவனுக்கு தெரியாம உன்னை பாலோவ் பண்ணிட்டு வந்துடுவேன். புரியுதா?”
“ம், நீங்க வர்ற வரைக்கும் நான் அவனை எப்படிங்க ஹேண்டில் பண்றது?”
“உன்னால அவனை சமாளிக்க முடியலனா, இதுல இருக்கறத யுஸ் பண்ணு” என்று அவளின் கைப்பையில் எதையோ வைத்தான்.
“என்னங்க அது?” என்று அதை திறந்து பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறைதான். இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டாள்.
ஆர்யன் மனைவியின் கன்னத்தை தட்டி, “தட்ஸ் மை கேர்ள்” என்றான்.
இருவரும் பேங்க்கை அடைந்ததும் மனைவியை மட்டும் இறங்க சொல்லி ஆர்யன் கிளம்பி சென்றான். வளர்மதி இன்பரசுவிற்கு போன் செய்தாள்.
“செக்ல ஒரு கோடி ரூபாய எழுதி பேங்க்ல வித்ரா பண்ணு. அந்த பணத்தை வீடியோ எடுத்து எனக்கு வாட்ஸ்அப் பண்ணு” என்றான்.
“ஒரு கோடியா? டூ மச், உனக்கே ஓவரா தெரியலையா?” என்றாள் வளர்மதி ஆத்திரத்துடன்
“இதுவே கம்மி தான். ஊர்ல இருக்கற சொத்தை வித்தா இன்னும் அதிகமா கிடைக்கும். ஆனா செழியனுக்கு தெரியாம அதை வித்து பணமாக்கறது எல்லாம் அவ்வளவு ஈசி இல்ல. வேற வழியில்லாம தான் இந்த சின்ன அமெளண்ட்டே போதும்னு விட்டுட்டேன்” என்றான்.
“சரி பணத்தை எடுத்துட்டு உனக்கு போன் பண்றேன்” என்றாள் வளர்மதி
“நிஜமாவா? என்னால நம்பவே முடியலையே. உன்னை என் வழிக்கு கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம்னு நினைச்சேன். ஆனா நீயே எனக்கு போன் பண்ணி பணம் ரெடினு சொல்றே. நான் சொல்ற அமெளன்டை பத்தியும் பெரிசா கவலப்படல. எல்லாத்தையும் விட உன்னை எனக்கு தரவும் ரெடியா இருக்கே. உன்னை நம்பறதா வேணாமானு குழப்பமா இருக்கே. ஒருவேளை நீயும் உன் புருஷனும் ஏதாச்சும் பிளான் பண்ணி இருக்கீங்களா?” இன்பரசு சந்தேகத்துடன் கேட்க வளர்மதி எச்சரிக்கை அடைந்தாள்.
“என்ன பிளான் பண்றது? நீதான் எதுவுமே பண்ண முடியாத மாதிரி என்னை சிக்கல்ல மாட்டி வச்சிருக்கியே. அவர்கிட்ட நான் உண்மையை சொன்னா, எனக்கு தானே பிரச்சனை? அவரோட நான் இனிமே சேர்ந்து வாழ முடியுமா?” என்றாள்
“அதுவும் சரிதான். எந்த புருஷனும் பொண்டாட்டிக்கு இன்னொரு லவ் இருந்ததையே அக்சப்ட் பண்ணிக்க மாட்டான். இதுல என்கிட்ட உன்னோட அந்தரங்கம் இருக்குனு தெரிஞ்சா சும்மாவா இருப்பான்? அந்த யுகி தான் மானம் கெட்டுப்போய் நிஷாவை கட்டிக்கிட்டு வாழ்க்கை கொடுத்திருக்கான். ஆர்யன் எவ்வளவு பெரிய பணக்காரன், உன்னை மாதிரி ஒரு ஒழுக்கம் கெட்டவள கட்டிக்கணும்னு அவனுக்கென்ன தலையெழுத்தா? உன் அண்ணங்காரன் செழியன் தான் சோப் போட்டு உன்னை அவன் தலையில கட்டியிருப்பான்” என்று இன்பரசு ஏகத்துக்கும் பேச வளர்மதி பல்லை கடித்து தன் பொறுமையை இழுத்து பிடித்தாள்.
“பெரிய அமெளண்ட் எடுக்கணும், பேங்க்ல என்ன சொல்லுவாங்களோ தெரியல, நீ பேசி முடிச்சுட்டா, நான் அவங்கள போய் பார்ப்பேன்” என்றாள் அழுத்தமான குரலில்
“அதையே சாக்கா வச்சு பணத்தை எடுக்க முடியலனு சொல்லிடாதே. பணத்தை எப்படியாவது எடுத்துட்டு எனக்கு போன் பண்ணு. மத்ததை நேர்ல பேசிக்கலாம்” என்று அழைப்பை துண்டித்தான்.
வளர்மதி காசாளரிடம் செக்கை கொடுத்ததும், அவர் அதிர்ந்து அவளை நிமிர்ந்து பார்த்தார். “நீங்க?” என்றார் கேள்வியாக
“நான் மிஸஸ் ஆர்யன்”
“இவ்ளோ பணத்தை கேஷ்ஷா எடுக்கறதுக்கு நீங்க மட்டும் தான் வந்தீங்களா? ஆர்யன் வரலையா?” என்றார் ஆச்சரியத்துடன்
“அவருக்கு வேற முக்கியமான வேலை இருக்கு, அதான் என்னை எடுக்க சொன்னாரு”
“ஓகே வெயிட் பண்ணுங்க, மேனேஜர் அப்ரூவல் வாங்கிட்டு பணத்தை எடுத்துட்டு வரேன்” என்று கிளம்பி சென்றார்.
காசாளர் மேனேஜரிடம் விவரத்தை தெரிவிக்க, “புதுசா கல்யாணம் ஆகியிருக்கு, எதுக்கும் நாம ஆர்யனுக்கு போன் செஞ்சு கன்பார்ம் பண்ணிக்கலாம்” என்ற மேனேஜர் ஆர்யனுக்கு போன் செய்ய, அவனோ யுகேந்திரனிடம் தன் திட்டத்தை போனில் விவரித்துக் கொண்டிருந்தான்.
வெகுநேரம் அழைப்பு ஏற்கப்படாமல் இருக்கவும் அவர் ஆதிசங்கரனுக்கு போன் செய்து விட்டார். “சார், உங்க மருமக பேங்க்குக்கு வந்திருக்காங்க”
“ஆமா என்கிட்ட சொல்லிட்டு தான் கிளம்பினாங்க. ஏன் வரக்கூடாதா? அதை ஏன் எனக்கு போன் பண்ணி சொல்லிட்டு இருக்கீங்க?” என்றார் ஆதிசங்கரன்.
“உங்க கிட்ட சொல்லிட்டு தான் வந்தாங்கன்னா எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல சார். பெரிய அமெளண்ட்டா இருக்கேனு தான் கிராஸ் வெரிபிகேஷன் பண்ண போன் பண்ணேன்”
“பெரிய அமெளண்ட்டா? எவ்வளவு?”
“ஒரு கோடி”
பெரிய அமெளண்ட் என்றதும் ஒரு லட்சமாக இருக்கும் என்று நினைத்திருந்த ஆதிசங்கரன் ஆடிபோய் விட்டார்.
“ஆர்யன் கூட தானே இருக்கான்?” என்றார்
“அவர் வந்திருந்தா உங்களுக்கு போன் பண்ணியிருக்க மாட்டேனே சார்”
ஆதிசங்கரன் யோசனையில் ஆழ்ந்தார்.
“சார், ஆர்யன் சாரே லைன்ல வர்றாரு. நான் அவர்கிட்டயே கன்பார்ம் பண்ணிக்கிறேன்” என்று மேனேஜர் அழைப்பை துண்டித்திருந்தார்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆதிசங்கரனின் எண்ணிற்கு ஆர்யனின் செக்கை பயன்படுத்தி வளர்மதியால் ஒரு கோடி ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்திருந்தது. ஆதிசங்கரனும் ஆர்யனும் ஜாய்ன்ட் அக்கவுன்டில் இருந்தனர். ஆர்யன் தான் பண பரிவர்த்தனைகளை கவனித்துக் கொள்வான். இருந்தாலும் அதற்கான குறுஞ்செய்திகள் வங்கி தரப்பிலிருந்து இருவருக்குமே அனுப்பப்படும். அதை ஆர்யன் மறந்திருந்தான்.
இப்போது இவ்வளவு பெரிய தொகைக்கு அவசியமென்ன? பணத்தை எடுக்க ஆர்யன் ஏன் உடன் செல்லவில்லை என்று அவருக்குள் கேள்வி எழ மகனுக்கு போன் செய்தார், அவன் அழைப்பை ஏற்கவில்லை. வளர்மதிக்கு போன் செய்தால் அது பிசியாக இருப்பதாக வந்தது. குழப்பத்துடன் அமர்ந்திருந்தார்.
வளர்மதி இன்பரசுவுடன் பேசிக் கொண்டிருந்தாள். “அட்ரஸ் சொன்னா, நான் டாக்சி புக் பண்ணிட்டு பணப்பெட்டியோட வந்துடறேன்”
“தேவையில்லை, நானே உனக்கு டாக்சி புக் பண்ணியிருக்கேன். ஆல்ரெடி பிளாக் கலர் கார்ல டிரைவர் கீழே வெயிட் பண்ணிட்டு இருக்கான். பணப்பெட்டிய எடுத்துக்கிட்டு கிளம்பி வா” என்றான் இன்பரசு
இன்பரசு தான் இருக்கும் விலாசத்தை சொன்னதும் அவள் புக் செய்ய வேண்டிய டாக்சி எண்ணை ஆர்யன் ஏற்கனவே கொடுத்திருந்தான். அதில் அவனுக்கு தெரிந்த டிரைவர் இருப்பார் என்பதால் தைரியமாக செல்லும் படி கூறியிருந்தான். இப்போது இன்பரசு அனுப்பிய காரில் ஏற வேண்டும் என்றதும் வளர்மதிக்கு வியர்த்து விட்டது. அதை அவனிடம் காட்டிக் காெள்ளாமல், “சரி வரேன்” என்று அழைப்பை துண்டித்தாள்.
அவள் கீழே இறங்கி அவளுக்காக காத்திருந்த காரில் ஏறியதும், இன்பரசு போன் செய்து, “இனிமே நீ எனக்கு போன் செய்யணும்னு அவசியம் இல்ல. நான் டிரைவர் கிட்ட பேசிக்குவேன். உன் போனை அவன்கிட்ட கொடு” என்றான்
“எதுக்கு?”
“போன் ஜிபிஎஸ் வச்சு, டிராக் பண்ணி உன் புருஷன் உன்னை பாலோவ் பண்ணி வராம இருக்கறதுக்கு” என்று இன்பரசு சொன்னதும் அவள் ஒரு கொடிய மிருகத்திடம் மாட்டிக் கொண்டது போலவும் தப்பிக்கவே முடியாதது போல அனைத்து கதவுகளும் அடைத்து விட்டது போலவும் இருந்தது.
வேறுவழியின்றி தன் கைபேசியை அந்த டிரைவரிடம் கொடுத்தாள். அவன் அதை ஸ்விட்ச் ஆப் செய்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். ஆதிசங்கரனும் ஆர்யனும் ஒரே நேரத்தில் அவளுக்கு போன் செய்தனர். அவள் கைபேசி அணைத்து வைத்திருப்பதை அறிந்ததும் ஆர்யன் பதறி விட்டான். தந்தை விடாமல் அழைத்துக் கொண்டிருக்கவும் அதை ஏற்காமல் அழைப்பை துண்டித்து கொண்டே இருந்தான்.
வளர்மதி சென்று கொண்டிருந்த கார் வேகமெடுத்தது. சென்னையை கடந்து திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லை பகுதியில் ஆந்திர எல்லை தொடங்கும் ஆள் நடமாட்டமில்லாத வெறிச்சோடிய சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. வளர்மதியின் நெஞ்சில் நீர் வற்றி போயிருந்தது.
(தொடரும்)