இணை 18

ஆர்யன் வளர்மதியை கண்டதும் தன் போன் உரையாடலை கேட்டிருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். அவளாகவே பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்க, அவளோ அவன் ஏதாவது கேட்பான் என்று அவனையே பார்த்திருந்தாள். 

“உட்காரு மதி. நீயும் என் கூட சாப்பிடு” என்று அவளை தன்னருகே அமர்த்தினான். 

“இல்லைங்க எனக்கு பசியில்லை. நீங்க சாப்பிடுங்க” என்று அவன் கையில் தட்டை வைக்க அவன் அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தான். 

அவள் கேள்வியாக அவனை பார்க்க, அவனோ பதில் சொல்லாமல் சாப்பிட தொடங்கினான். அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற தவிப்புடன் நின்றிருந்தாள்.

ஆர்யன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதி காத்தவள், “என்னங்க உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா?” என்றாள் தயங்கிக் கொண்டே.

“கேளு மதி”

“நீங்க போன்ல பேசிட்டு இருந்தத கேட்டேன். உங்களுக்கு என்கிட்ட எந்த கேள்வியும் இல்லையா?”

“ஒரே கேள்வி மட்டும் இருக்கு”

“என்ன?” அவளுக்குள் பதட்டம் அதிகரித்தது. இன்பரசு வீடு வரை வந்ததை ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று கேட்பானோ? 

“அவன் உன்னை மிரட்டினானா?”

“இஇல்லையே” அவள் குரலில் தடுமாற்றம்

அவளை பார்த்து முறைத்தான். “அவன் மிரட்டலைனா அப்புறம் எதுக்குடி பயந்து அழுதுட்டு இருக்கே” 

“நான் அவனுக்கு பயப்படலை”

“வேற எதுக்கு பயந்து அழுதே? நான் போய் அரை மணி நேரத்தில திரும்பி வந்துட்டேன். தனியா இருந்ததால பயந்துட்டேன்னு இப்பவும் சொல்ல போறீயா?”

வளர்மதி தலை குனிந்து நின்றிருந்தாள். அவள் கண்களில் வழிந்த கண்ணீர் தரையில் பட்டு தெறித்தது.

அவளின் கரம் பற்றி இழுத்து தன் மடியில் அமர வைத்தான். அவளின் கன்னத்தை பிடித்து அவன் புறம் திருப்பி அவனை பார்க்க வைத்தான்.

“மதி உனக்கு நான் இருக்கேன். எதுவா இருந்தாலும் பயப்படாம சொல்லு”

வளர்மதிக்கு அவன் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை.‌ பார்வையை தழைத்து கொண்டாள்.

“கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தானே ஆச்சு. இவனை எப்படி நம்பறதுனு நீ யோசிக்கிறது கரெக்ட் தான். என்கிட்ட தான் சொல்ல மாட்டே. உன் அண்ணன் கிட்ட சொல்லுவ தானே. இரு செழியனுக்கு போன் பண்றேன்” என்று கைபேசியை எடுத்தான்.

“அய்யோ, அண்ணனுக்கு இந்த விஷயம் தெரியக் கூடாது” என்று அவசரமாக கணவனின் கரத்தை பிடித்தாள்.

அவனோ கைபேசியை தலைக்கு மேல் உயர்த்தி, “ஏன் செழியனுக்கு தெரியக்கூடாது” என்றான்.

“அது வந்து” என்று அவள் மீண்டும் தயங்க, ஆர்யனோ செழியனுக்கு அழைத்து விட்டான். 

அவள் பதட்டத்துடன் ஆர்யனின் கையிலிருந்த கைபேசியை பிடுங்க பார்க்க அவனோ இரு கைகளுக்கும் அதை மாற்றி அவள் கையில் கிடைக்காமல் போக்கு காட்டினான். அவளோ அவன் மீது மொத்தமாக சாய்ந்து அவன் கரத்தை எட்டி பிடிக்கவும் ஆர்யன் முகத்தில் அவளின் மேனி மோதியதில் கையில் இருந்ததை கீழே தவற விட்டான். 

வளர்மதி அதை பிடித்ததும் அழைப்பு ஏற்கப் பட்டிருந்தது. 

“ஆர்யன் நானே உங்க கிட்ட பேசனும்னு நினைச்சுட்டு இருந்தேன். அதுக்கான சந்தர்ப்பம் அமையல. நல்ல வேளை நீங்களே போன் பண்ணிட்டீங்க. பாப்பா பக்கத்துல இருந்தா கொஞ்சம் தனியா வந்து பேசுங்க” என்றான் செழியன்.

வளர்மதி உதட்டில் விரல் வைத்து ஆர்யனை பேசும்படி சைகை காட்டினாள்.‌

“சொல்லுங்க மச்சான். தனியா தான் இருக்கேன். இன்பரசு மேட்டரா?” என்றான் மனைவியை அழுத்தமாக பார்த்துக்கொண்டே. அவள் கண்கள் தெறித்து விழாதது தான் குறை என்பது போல கண்களை அகல விரித்து கணவனை பார்த்தாள்.

“எப்படி மாப்ளே சரியா சொல்றீங்க? அவன் அங்கே வந்தானா?” செழியன் பதட்டத்தோடு கேட்டான்.

வளர்மதி கணவனை பார்த்து தலையசைத்து சொல்ல வேண்டாம் என்று சொல்ல ஆர்யனும் மனைவியின் பேச்சிற்கு கட்டுப்பட்டு, “அதெல்லாம் இல்ல. தனியா பேசணும்னு சொன்னதால கேட்டேன்” என்றான். 

“அப்பாடா. ஒரு நிமிஷம் பதறிட்டேன். உங்க கல்யாணத்துக்கு முதல் நாள் அந்த இன்பரசு ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகி இருக்கான். அவன் ரிலீஸ் ஆக போறது எனக்கு முன்னாடியே தெரியும். அதனால அவனோட அப்பாவையும் அம்மாவையும் நான் உங்க கல்யாணத்துக்கு அழைக்கலை. எனக்கும் மதிக்கும் அவங்க சொந்த அத்தை மாமா. என் மனைவியோட அப்பா அம்மா. இருந்தாலும் அவன் ரிலீஸ் ஆகப்போகிற நேரத்துல இவங்க கல்யாணத்துக்கு வந்தா அவனும் கல்யாணத்தை கேள்விப்பட்டு மண்டபம் வரைக்கும் வந்துருவானோனு நினைச்சு அவங்களை கல்யாணத்துக்கு அழைக்க வேணாம்னு சொல்லி இருந்தேன். ஆனா எங்க வீட்டு பெருசுங்க என் பேச்சை கேட்காம அவங்களை எனக்கு தெரியாம கல்யாணத்துக்கு அழைச்சிருக்காங்க.

அன்னைக்கு ராத்திரி கல்யாண மண்டபத்தில நான் அவங்களை பாத்ததும் டென்ஷனாயிட்டேன். வீட்ல பொறந்த பொண்ணை கல்யாணத்துக்கு அழைக்கலனா எப்படினு கேட்டு என்னை சமாதானம் வேற செய்தாங்க. அவன் ரிலீஸ் ஆகி வீட்டுக்கு வரச்சே அவங்க வீட்டில இருக்கனும், உடனே கிளம்பி போக சொன்னேன். என் அப்பா நிலைமை புரியாம தங்கச்சி பாசத்துல பேசிட்டே இருக்கவும் நீங்களே கல்யாணத்தை நடத்திக்கோங்கோனு கோபமா போயிட்டேன்”

“ஓஹோ அன்னைக்கு ராத்திரி நீங்க கோபமாக பேசிட்டு இருந்தத நானும் மாடியில் இருந்து பார்த்தேன். விசாரிக்கலாம்னு நினைச்சேன்.  அப்பா தான் நீங்களா சொல்லாம தலையிடக்கூடாதுனு தடுத்துட்டாரு” 

“உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல. கல்யாண நேரத்துல உங்க மூடை கெடுக்க வேண்டாம்னு தான் சொல்லல. வளர் விஷயத்துல உங்க கிட்ட மறைக்க என்ன இருக்கு? எல்லா விஷயமும் உங்களுக்கு தெரியுமே! மெதுவா சொல்லிக்கலாம்னு இருந்தேன். அத்தையும் மாமாவும் நான் சொல்றத புரிஞ்சிகிட்டாங்க.‌ எப்படியாவது இன்பரசுவ வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கறதா என்கிட்ட வாக்கு கொடுத்துட்டு கிளம்பி போனாங்க. அவங்க சொன்ன மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்கறதா கேள்வி பட்டேன். இருந்தாலும் ரெண்டு நாளாவே மனசு என்னமோ கிடந்து அடிச்சுக்குது. உங்க காதுல விஷயத்தை போட்டு வைக்கலாம்னு தோணுச்சு. இன்னொருமுறை அவன் என் தங்கச்சிய அழ வச்சான்னா அவனை உசுரோட விடமாட்டேன். நீங்களும் பாத்து கவனமா இருங்க”

“இதுவரைக்கும் மதியை அழ வச்சதுக்கே அவன் வாழ்நாள் முழுக்க வருத்தப்பட வேண்டியிருக்கும். இது விஷயமா இனி நீங்க கவலைப் படாதீங்க. நான் பாத்துக்கிறேன்”

இருவரின் பேச்சைக் கேட்டு வளர்மதி முகம் மேலும் வெளுக்க, ஆர்யன் அவளிடமிருந்த கைபேசியை பிடுங்கி தனியே சென்றான்.

“அப்புறம் இன்னொரு விஷயம்”

“என்ன மச்சான்?”

“எப்படி கேக்கறதுனு சங்கடமா இருக்கு. கேக்காமலும் இருக்க முடியல. தங்கச்சி கூட சந்தோஷமா இருக்கீங்களா? அவளா மனசு மாறட்டும்னு காத்திட்டு இருக்காம கொஞ்சம் அதிரடியா” செழியன் தயக்கத்தோடு பேச்சை நிறுத்தினான்.

“உங்களோட மருமக அடுத்த வருஷம் உங்க கையில இருப்பா. நீங்க பொறக்க போற என் மருமகனை  பத்திரமா பாத்துக்கோங்க” என்றான்.

செழியன் மனம் விட்டு சிரித்தான். “ரொம்ப சந்தோஷம் மாப்ள” என்று அவன் போனை வைத்ததும், ஆர்யன் திரும்பி வந்தான். அப்போதும் வளர்மதி அதே நிலையில் அசையாமல் அமர்ந்திருந்தாள்.

அவள் காதுகளில், ‘வளர் விஷயத்துல உங்க கிட்ட மறைக்க என்ன இருக்கு?’ என்று செழியன் கூறிய வார்த்தைகளே ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்தன. 

“மதி” என்று அவள் கண் முன் சொடுக்கினான். அவள் அதிர்ந்து அவனை பார்க்க, “என்ன யோசிச்சிட்டு இருக்கே? செழியன் என்கிட்ட எதையும் மறைச்சதில்ல. ஆனா  நான் உனக்காக செழியன் கிட்ட இன்பரசுவ பத்தி எதுவும் சொல்லல. போதுமா?” என்றான்.

“உங்களுக்கு என்னை பத்தின எல்லா விஷயமும் தெரியுமா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

“என்ன திடீர்னு இப்படி ஒரு கேள்வி?” புருவம் உயர்த்தினான்.

“சொல்லுங்க”

“தெரியும். உன்னை பத்தி தெரியாமலா மூணு வருஷமா வெயிட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்?”

“என்ன தெரியும்?”

“இது என்ன கேள்வி? உன்ன பத்தி உன் செழியன் அண்ணாவுக்கு என்ன தெரியுமாே அது எல்லாம் எனக்கும் தெரியும்”

‘இன்பரசுவிடம் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை பற்றி தெரிந்து இருக்குமா? அது தெரிந்தும் அவளை திருமணம் செய்து கொண்டானா?’ கலவரத்துடன் கணவனை பார்த்தாள்.

“மதி என்கிட்ட வெளிப்படையா பேசு. நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி. நமக்கு இடையில மறைக்கிறதுக்கு எதுவுமே இல்லை. இன்பரசுவால நிஷா பாதிக்கப்பட்ட அளவுக்கு உனக்கு பாதிப்பு இல்லை. அவளே நடந்தத மறந்துட்டு கல்யாணமும் பண்ணிகிட்டு யுகேந்திரனோட சந்தோஷமா இருக்கா. நீயேன் நடந்ததை நினைச்சு பயப்படறே? நீ என்கிட்ட உன் பிரச்சனைய சொல்லாம இருக்கறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? உனக்கு என் மேல இன்னும் முழுமையா நம்பிக்கை வரலங்கிறத காட்டுது”

வளர்மதி ஆர்யனை இமைக்காமல் பார்த்திருந்தாள். அவள் பயந்தது போல் இல்லை, அவள் கணவனுக்கு அவளை பற்றிய ரகசியங்கள் அனைத்துமே தெரிந்திருக்கிறது, தெரிந்தும் அதை பற்றி அவளிடம் அவன் ஒரு வார்த்தை கேட்கவில்லை. 

எப்பேர்பட்டவனாக இருந்தாலும் தன் மனைவியின் அந்தரங்க புகைப்படம் இன்னொருவன் வைத்திருக்கிறான் என்று அறிந்தால் ஒரு நொடியாவது தன் மனைவியை கீழாக நினைக்கக்கூடும். அது இயல்பே என்றாலும் தன் கணவன் தன்னை அப்படி பார்த்து விடக்கூடாது என்பதே வளர்மதியின் தடுமாற்றம். 

இன்பரசு வீடுவரை வந்திருப்பது தெரிந்து தான் உடனே வீட்டிற்கு திரும்பி இருக்கிறான். அது தெரியாமல் அவன் வந்ததை இவள் மறைத்தாலும் அவன் அவளிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. மாறாக அவளுக்கு தெரியாமலே அவள் பிரச்சனையை முடிக்க நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். இப்படி ஒரு இனியவன் அவளின் இணையாவது தான் அந்த இறைவன் போட்ட முடிச்சா?

பெயரில் இன்பத்தையும் உடலெங்கும் விஷத்தையும் வைத்திருக்கும் இன்பரசு உடனான திருமணம் கனியின் மூலம் நின்றதும், செழியனுக்கு நண்பனாக அறிமுகமாகி, அவளின் இணையாக இணைவது தான் இனிய விதியோ? மனைவியின் மனபோக்கை அறியாமல் ஆர்யன் தொடர்ந்து பேசினான்.

“இங்க பாரு மதி. என்கிட்ட சொல்லலனாலும் நீ பிரச்சனைய தைரியமா பேஸ் பண்ணா நான் உனக்கான ஸ்பேஸ் கொடுப்பேன். ஆனா நீ பயந்து அழறே. பொண்ணுங்க தைரியசாலியா இருக்கிறதுக்கு தற்காப்புக் கலை மட்டும் போதாது. மனசுலயும் தைரியம் இருக்கணும். இன்பரசு என்ன சொல்லி உன்னை மிரட்றான்னு தைரியமா சொல்லு. இல்லனா இதை எப்படி டீல் பண்ணனும்னு எனக்கு தெரியும்” என்று அவன் வெளியேற எத்தனிக்க அவனின் கரம் பிடித்து நிறுத்தினாள்.

“நான் பயப்படறது எனக்காக இல்ல, உங்களுக்காக” என்றாள்

“புரியல”

இன்பரசு மிரட்டியதை அழுதுகொண்டே சொன்னாள். 

“இதுவே கல்யாணத்துக்கு முன்னாடி அவன் மிரட்டியிருந்தான்னா உன்னால ஆனதை பாத்துக்கோடானு சொல்லி நானும் அவனை ஒரு கை பார்த்திருப்பேன். ஆனா இப்போ அவன் டார்கெட் பண்றது உங்களோட கெளரவத்தையும் தான். அதுமட்டுமில்லாம ஊர்ல அண்ணனுங்க கிளம்பி வந்தா அங்கே இருக்கற அண்ணிங்களையும், பெரியவங்களையும் ஏதாவது பண்ணிடுவேன்னு மிரட்டுறான். அதனால தான் பயப்படறேன்” என்றாள் கண்கலங்க.

ஆர்யன் முகம் சடுதியில் இருண்டது. இதை எப்படி மறந்தேன்? என்று நெற்றியை தேய்த்துக் கொண்டான் ‘செழியன் இன்பரசுவோட போனை அழிச்சுட்டதா சொன்னாரு. அத்தோட பிரச்சனை முடிஞ்சதுனு சாதாரணமா இருந்திருக்க கூடாதோ? செழியனுக்கு இதைப்பத்தி தெரியலனாலும், நானும் யுகியும் இந்த ஆங்கில்ல யோசிச்சிருக்கணும்.  அவன் ஜிமெயில் பேக்அப் வச்சிருப்பான்னு யோசிக்காம விட்டதால தானே மறுபடியும் அவன் பயமில்லாம வீடு வரைக்கும் வந்து மிரட்டிட்டு பாேய் இருக்கான். மதியோடது மட்டுமில்ல இன்னும் வேற எந்த பொண்ணுங்க போட்டோஸையும் வைச்சிருக்கானோ தெரியலையே’ என்று ஆர்யன் யோசித்து கொண்டிருக்கும் போதே யுகேந்திரனிடம் இருந்து போன் வந்தது.

“ஆர்யா, இன்பரசு உன் வீடு வரைக்கும் வந்ததை நிஷா கிட்ட சொன்னேன். அந்த ராஸ்கலை நிஷாவும் ரிசப்ஷன்ல பார்த்திருக்கா. அவளையும் மிரட்டி பணம் கேட்டிருக்கான். என்கிட்ட சொல்றதுக்கு தயங்கிட்டு இருந்திருக்கா.  இப்ப என்னடா பண்றது?”

“ராஸ்கல்,  அவன் திருந்தற ரகம் இல்லனு எனக்கு அப்பவே தெரியும்டா. என் வீட்டுக்கே வந்து மதிய மிரட்டிட்டு போயிருக்கான், அவனை சும்மா விடக்கூடாது” என்ற ஆர்யனின் கண்கள் ரத்தமென சிவந்து போய் இருந்தது. 

“அவன் எங்கே இருக்கான்னு தெரிஞ்சா தானேடா நாம ஏதாச்சும் பண்ண முடியும். பழைய நம்பரை மாத்திட்டு இருக்கான். அவனை தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் நான் விசாரிச்சுட்டேன். யாருக்குமே அவன் இருக்கற இடம் தெரியல. தங்கச்சிகிட்ட ஏதாச்சும் சொன்னான்னானு விசாரிச்சு பாரு. நிஷாவுக்கு போன் வந்தா, அவளையும் விசாரிக்க சொல்றேன்” என்று போனை வைத்தான் யுகேந்திரன்.

சில நிமிடங்கள் யோசித்த ஆர்யன் தன் மனைவியிடம் “பணத்தை எடுத்துட்டு உன்னை எங்கே வரச்சொன்னான்?” என்று விசாரித்தான்

“முட்டுக்காடு ராயல் ஹோட்டல்”

ஆர்யன் என்ன எதிர்வினையாற்ற போகிறானோ என்ற நடுக்கத்துடன் கணவனை பார்த்திருந்தாள். அவனோ அவசரமாக சென்று அலமாரியில்  எதையோ தேட என்னவென்று புரியாமல் நின்றிருந்தாள் வளர்மதி.

கணவன் கையில் பிஸ்டலை பார்த்ததும் பதறிப்போய் அவன் முன்னால் ஓடிச்சென்று கதவை சாத்தினாள்.

“மதி வழியை விடு.  அவனை கொல்லாம விடமாட்டேன். எவ்வளவு தைரியம் இருந்தா அவன் உன்கிட்ட இவ்வளவு கீழ்தரமா பேசியிருப்பான். ஜெயில்ல இருந்து வந்தும் திருந்தலைனா அவன் இருக்கிறதே இந்த பூமிக்கு பாரம். இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கைய சீரழிக்க போறானோ. அவன  விடக்கூடாது” என்று மனைவியை பக்கவாட்டில் இழுத்தான்.

“இதுக்கு தான் உங்க கிட்ட சொல்லாம மறைச்சேன். நீங்க அவனை தேடுறது தெரிஞ்சா என்னையும் அசிங்கப்படுத்தி உங்களையும் தலைநிமிர முடியாம செஞ்சிடுவான். என்னால நீங்க தலைகுனிய வேணாம்”

“அதுக்கு அவனை அப்படியே விட்டுட சொல்றீயா?” கர்ஜனையுடன் பற்களை கடித்தான். முதன்முறையாக கணவனின் கோபத்தை கண்டு விதிர்விதிர்த்து போனாள்.

இவன் கோபத்தை பார்க்கையில் அவள் அண்ணன் செழியனே மேல் என்று தோன்றியது. வெளியே விட்டால் இன்பரசுவை கொல்லாமல் விட மாட்டான் போலும். அவன் கண்களில் அவ்வளவு தீவிரம்!

“பதில் சொல்லு மதி. அவனை அப்படியே விட்டுடலாமா? உனக்கு மட்டும் இல்ல, ஆபிஸ்ல வேலை செஞ்ச பல பொண்ணுங்களை உன்னை மிரட்டின மாதிரி மிரட்டி தான் காரியத்தை சாதிச்சிருக்கான். விவசாயம் பண்ணும் போது களையை பிடுங்கி எறியற மாதிரி சமுதாயத்துல இருக்கற திருந்தாத ஜென்மங்களையும் வேரோடு அறுக்கணும்”

“சரிங்க அதுக்கு அப்புறம் என்னோட நிலைமைய யோசிச்சீங்களா? அண்ணா கிட்ட சொன்னா என்ன நடக்கும்னு பயந்தேனோ நீங்களும் அதையே தான் செய்றீங்க”

“மதி இந்த பிரச்சினைய எப்படி டீல் பண்ணனும் எனக்கு தெரியும். நீ வழியை விடு” என்றான் பொறுமையை இழுத்து பிடித்து.

“என் மேல சத்தியம் பண்ணிட்டு போங்க”

“என்னனு?”

‘அவன் எதை சொல்லி மிரட்டினானோ அது நடக்க கூடாது. என் மானம் மட்டும் இல்ல உங்களோட கௌரவமும் என்னால கெடக்கூடாது” 

“நீ இதை என்கிட்ட சொல்லனுமா? உன் பேரை வெளிய வர விட்டுடுவேனா? என்னை பத்தி உனக்கு முழுசா தெரியல. என்னை நம்பு, வழிய விடு”

“நீங்க அவன் உயிரையும் எடுக்க கூடாது. என்னால நீங்க கொலைகாரனா ஆவறதை நான் ஒத்துக்க மாட்டேன்”

“வேற என்ன தாண்டி பண்ண சொல்றே? திரும்பியும் ஜெயிலுக்கு அனுப்பினாலும் அவன் திருந்த மாட்டான்” என்றான் சலிப்புடன்.

“நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. உங்களுக்கும் என் பொறந்த வீட்ல இருக்கிற யாருக்கும் எந்த பிரச்சனையும் வராத மாதிரி என்ன வேணாலும் பண்ணுங்க. நான் தடுக்க மாட்டேன்” என்றாள் உறுதியாக

மனைவியின் உறுதியை கண்டு சில நிமிடங்கள் யோசித்தவன் தன் கையிலிருந்த பிஸ்டலை மீண்டும் உள்ளே வைத்து விட்டு கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

“டிடெக்டிவ் ஏஜென்சியா? முட்டுக்காடு ராயல் ஓட்டல்ல தங்கி இருக்கிறவங்க அண்ட் ரூம் புக் பண்ணி இருக்கிறவங்க டீடெயில்ஸ் வேணும்” என்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் அவனுக்கு அழைத்தார்கள்.

“சார் நீங்க சொன்ன ஹோட்டல்ல சூட்டிங் போயிட்டு இருக்கு. அதனால ஒரு மாசமா யாருக்கும் ரூம் கொடுக்கலனு சொல்றாங்க” என்று தகவல் கூறினார்.

ஆழ்ந்த யோசனைக்கு பின் மனைவியிடம் திரும்பியவன் “மதி, இன்பரசு நம்பருக்கு போன் பண்ணு” என்றான்.

“எதுக்குங்க” 

“நான் சொல்ற மாதிரி அவன் கிட்ட பேசு” என்று அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தாள்.

“நான் உனக்கு வாக்கு கொடுக்கறேன். நமக்கோ உன் பொறந்த வீட்டுக்கோ பிரச்சினை வராம இன்பரசுவை லாக் பண்றேன். உனக்கு உன் மேல தன்னம்பிக்கையும் என் மேல நம்பிக்கையும் இருந்தா அவனுக்கு போன் பண்ணி பேசு” என்றான் அழுத்தமாக

இதற்கு மேல் கணவனை தடுக்க முடியாது என்று நினைத்தவள் ஆழ்ந்த மூச்சை வெளியேற்றிவிட்டு இன்பரசுவிற்கு போன் செய்தாள். உடனே அழைப்பு ஏற்கப்பட்டதும் ஸ்பீக்கரில் போட்டாள்.

“வாவ், வாட் எ சர்ப்ரைஸ்? நீ இன்னைக்கே போன் பண்ணுவனு எதிர்பார்க்கல. பணம் அதுக்குள்ள ரெடியாயிடுச்சா?” என்றான் இன்பரசு

வளர்மதி நிமிர்ந்து கணவனை பார்க்க அவளை பேசும்படி சைகை செய்தான். 

“ரெடி ஆயிடுச்சு. இப்போ நீ எங்கே இருக்கே?”

“ஏன் உன் புருஷனால கண்டுபிடிக்க முடியலைனு உன்னை விட்டு பேச சொன்னானா?” என்று சத்தமாக சிரித்தான் இன்பரசு

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
3 Comments
error: Content is protected !!
Scroll to Top