இணை 17

ஆர்யன் கிட்டத்தட்ட தன்னுடைய அலுவலகத்தை நெருங்கி இருந்தான். சிக்னலில் காத்திருந்தபோது, காவலாளி அவனுடைய எண்ணிற்கு அழைத்திருந்தான்.

“சார், இன்டர்காம்ல போன் பண்ணேன், யாரும் எடுக்கல. சின்னம்மாவை தேடி அவங்க மாமானு ஒருத்தர் வந்திருக்காரு, உள்ளே விடலாமா?”

“நான் டிரைவிங்ல இருக்கேன். நீங்க இன்னொரு முறை கால் பண்ணி இன்பார்ம் பண்ணிட்டு உள்ளே அனுப்புங்க”

“சரிங்க சார்” என்று காவலாளி போனை வைத்ததும் ஏதோ மனதை நெருட, காரை ஓரமாக நிறுத்திவிட்டு தன்னுடைய போனில் இருந்து வீட்டின் முன்புற சிசிடிவி காட்சியை பார்த்தான்.

அங்கே நின்றிருந்த இன்பரசுவை கண்டதும், ‘எவ்வளவு தைரியம் இருந்தா இந்த ராஸ்கல் தைரியமா என் வீட்டு வாசல்ல நின்னுட்டு இருப்பான்?’ என்று ஆத்திரம் பொங்கியது. காரை திருப்பி வீட்டிற்கு செலுத்தினான்.

காவலாளி மீண்டும் இன்டர்காமில் அழைத்தபோது வளர்மதி மாடியிலிருந்து வெளிப்புற கேட்டின் அருகே நின்றிருந்த இன்பரசுவை கண்டதும் அதிர்ந்தாள். வீடுவரைக்கும் தேடி வந்திருக்கிறானே, தனியாக இருக்கும் போது இன்பரசுவை வீட்டிற்குள் அழைக்க வளர்மதிக்கு பயமாக இருந்தது. ஆர்யன் வர தாமதமானால் என்ன செய்வது? அதே சமயம் அவனை அப்படியே திருப்பி அனுப்பினால் என்ன விபரீதம் நடக்குமோ என்று பயந்தவள், “அவரை கார்டன்ல இருக்கற சேர்ல வெயிட் பண்ண சொல்லுங்க, நானே வரேன்” என்று கீழே சென்றாள்.

இன்பரசுவின் அருகில் சென்றதும் “இங்கே எதுக்கு வந்தே?” என்று அடிக்குரலில் சீறினாள் வளர்மதி

“மாடிவீட்டு மகாராணி ஆனதும் இந்த மாமன்காரன் வேண்டாதவனா போயிட்டானா? உள்ளே கூப்பிடாம வெளியே உட்கார சொல்லியிருக்கே?” இன்பரசு எகத்தாளத்துடன் பேசினான்.

“உள்ளே கூப்பிட்டு உபசாரம் பண்றதுக்கு நீ தகுதியானவன் இல்ல. என்ன விஷயம்னு சொல்லிட்டு கிளம்பு” தூரத்தில் நின்றபடி அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கும் காவலாளி முன்பு தன் ஆத்திரத்தை காட்டமுடியாமல் பேசினாள்.

“எதுவுமே தெரியாத மாதிரி கேக்கறே? நான் போன்ல சொன்னது உன் காதுல விழலயா? நான் கொடுத்த போனை குப்பை தொட்டியில போட்டுட்டு போயிருக்க, அம்புட்டு தைரியமாடி உனக்கு? இவன் சும்மா மிரட்டறான், எதுவும் செய்ய மாட்டான்னு நினைச்சுட்டு இருக்கியா?”

“நீ செஞ்ச துரோகத்தையெல்லாம் மறந்து இப்ப தான் என் வாழ்க்கைய ஆரம்பிச்சிருக்கேன், அது உனக்கு பொறுக்கலையா? நான் உனக்கு என்ன துரோகம் பண்ணேன்? ஏன் என் வாழ்க்கைய கெடுக்க நினைக்கிறே?”

“சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்த என்னை என்கூட பொறந்த கனிங்கிற சனியனும் அந்த செழியனும் சேர்ந்து கெடுத்துவிட்டாங்க. உன் வாழ்க்கை பத்தி மட்டும் அவங்க ரெண்டு பேருக்கும் எதுக்கு இவ்வளவு அக்கறைனு எனக்கு தெரியல. அந்த செழியனுக்கு அவன் தங்கச்சி மேல இருக்கற பாசத்துல என் கூட பொறந்த சனியனுக்கு இல்லாம போயிடுச்சு.

“நமக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தினதோட விடாம உன் அண்ணன் செழியன் அந்த நிஷாவை வரவச்சு என்னை ஜெயில்ல தள்ளிட்டான். மூணு வருஷம் ஜெயில் கொடுமைய அனுபவிச்சுட்டு வீட்டுக்கு வந்தேன். எப்படியாவது உன்னை சமாதானம் செஞ்சு மறுபடியும் உன்னையும் சொத்தையும் அடையணும்னு நினைச்சேன். ஆனா அந்த செழியன் நான் ரிலீஸ் ஆகப்போறேன்னு தெரிஞ்சுக்கிட்டு அவசர அவசரமா உனக்கு கல்யாணத்தை ஏற்பாடு பண்ணியிருக்கான். 

என்னை பெத்தவங்க வேண்டாத விருந்தாளிய பாக்கற மாதிரி பாக்குறாங்க. என் அம்மாவுக்கு என்னால தான் பொறந்த வீடே இல்லாம போயிடுச்சாம், என் அப்பனுக்கு மானம் மரியாதை போயிடுச்சாம். நான் அவங்க கூட இருந்தா ஊர் உலகம் அவங்களை மதிக்காதாம், அதனால வேற ஊருக்கோ நாட்டுக்கோ போயிடணுமாம். இன்னும் இரண்டு வருஷம் நான் போய் வெளிநாட்டுல வேலை செய்யனுமாம். அப்ப தான் ஊர் உலகம் நான் திருந்திட்டேன்னு நம்பி பொண்ணு கொடுக்குமாம். அவங்க சொல்றத கேட்டா தான் சொத்தை என்பேர்ல எழுதுவாங்களாம், இல்லனா என்னால பாதிக்கப்பட்டவங்களுக்கு தானமா கொடுத்துடுவாங்களாம். 

ஜெயில் வாழ்க்கை போதாதுனு வனவாசம் வேற நான் போகணுமா? இதுக்கு எல்லாம் யார் காரணம்?  உன்னாலயும் உன் குடும்பத்தாலுயும் நான் என் வாழ்க்கைய தொலைச்சிட்டு  இருக்கேன், உன்னை மட்டும் நிம்மதியா வாழ விட்டுருவேனா? எனக்கு இப்போதைக்கு இருக்கற ஒரே துருப்பு சீட்டு, உன்னோட போட்டோஸ் தான். நான் நிம்மதியா கஷ்டபடாம வாழறதுக்கு எனக்கு நிறைய பணம் வேணும். அது உன் மூலமா தான் எனக்கு கிடைக்கும்”

“உன் நிலைமை புரியுது. உனக்கு பணம் தானே வேணும். நான் ஏற்பாடு பண்ணி தொலைக்கிறேன். பணத்தை கொடுத்ததும் நீ இந்த நாட்லயே இருக்க கூடாது. எம்புட்டு வேணும்”

இன்பரசு சொன்ன தொகையை கேட்டு வளர்மதி ஆடிப்போனாள்.

“இவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்?” என்றாள் எரிச்சலுடன்

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ உன் அண்ணன் கிட்டயும் புருஷன் கிட்டயும் விஷயத்தை சொல்லாம ஏதாச்சும் காரணம் சொல்லி பணம் கேளு. உன் வீட்டுக்கோ, உன் அண்ணனுங்களுக்கோ நான் மிரட்றத சொன்னேனா, அவனுங்க என்னை தேடி வர்றதுக்குள்ள நான் ஏற்பாடு பண்ண ஆளுங்க உன் குடும்பத்தல இருக்கற மொத்த உசுரையும் எடுத்துடுவானுங்க. இந்த முறை வாழ்வா சாவானு துணிஞ்சு தான் வந்திருக்கேன். ஒன்னு நான் சாவேன் இல்ல அவனுங்க சாவானுங்க, ரெண்டுல ஒன்னு நடக்கும். நான் செத்தாலும் அவனுங்க ஜெயிலுக்கு போவானுங்க இல்ல?  அதுபோதும். உசுரை விடறதுக்கு முன்னாடி உன்னோட அழகை இன்டர்நெட்ல ஏத்திட்டு தான்டி போவேன்

உன் புருஷன் என் விஷயத்துல தலையிட்டா அடுத்த செகண்ட் உன்னோட போட்டோ முழுசா சோசியல் மீடியால பிரபலம் ஆயிடும். அதுக்கப்புறம் அவன் தலைநிமிர்ந்து நடக்கவே முடியாது. தொழிலதிபர் ஆகணும்ங்கிற அவனோட கனவு எல்லாம் கனவாவே போயிடும். நான் வந்தது தெரிஞ்சு அவன் ஏதாச்சும் கேட்டா என்ன பதில் சொல்றதுனு நீயே யோசிச்சு வச்சுக்க.

முட்டுக்காடு ராயல் ரிசார்டில  ரூம் புக் பண்ணி இருக்கேன். ரெண்டு நாள் உனக்கு டைம். பணத்தை எடுத்துட்டு தனியா வர்றே. ஒருமுறை என்கிட்ட படுத்துட்டு,  பணத்தை கொடுத்துட்டு போயிட்டே இரு. நானும் உன் வழியில தலையிட மாட்டேன். இது தான் லாஸ்ட் வார்னிங், இதுக்கப்புறம் நான் உன்னை தேடி வரமாட்டேன். நீதான் என்னை தேடி வரணும். வரலைனா நான் என்ன பண்ணுவேன்னு அடிக்கடி சொல்ல வேண்டியது இல்லனு நினைக்கிறேன்”

“ச்சீ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? கல்யாணம் ஆன பொண்ணுக்கிட்ட இப்படி பேசறீயே உனக்கு வெக்கமா இல்ல?”

“நான் ஆசப்பட்ட பொண்ணையெல்லாம் இதுவரைக்கும் அடையாம விட்டதே இல்ல. உன்னை மட்டும் லேசுல விட்டுட்டு போயிடுவேனா? மாமன் பொண்ணுங்கிறதுக்காக உனக்கு ஒரு சலுகை தரேன். பேசாம உன் புருஷன்கிட்ட இருக்கற எல்லா பணத்தையும் சேர்த்து எடுத்துட்டு என்கூடவே வந்துடு, நாம ரெண்டு பேரும் துபாய்க்கு போய் சந்தோஷமா வாழலாம். என்ன சொல்றே?”

“த்தூ” என்று  துப்பினாள்

“என்னையாடி துப்பறே? நான் சொன்னது ரெண்டு நாள்ல நடக்கலனா ஊர் உலகமே உன்னை தாண்டி காரி துப்ப போகுது” என்றவன் அவள் கையில் இருந்த கைபேசியை பிடுங்கி அதிலிருந்து அவன் எண்ணுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டான். பின்பு கைபேசியை அவளிடமே கொடுத்துவிட்டு என் நம்பர் இதுல இருக்கு. பணம் ரெடி ஆனதும் போன் பண்ணி சொல்லு” என்று விட்டு வெளியேறினான். 

வளர்மதி பற்களை கடித்து தன் ஆத்திரத்தை அடக்கி கொண்டு அவன் வெளியேறும் வரை அப்படியே நின்றாள். 

இன்பரசு அங்கிருந்து சென்ற பின் வீட்டிற்குள் சென்றவள், அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மாடியில் அவர்களின் அறைக்கு ஓடிச் சென்று கட்டிலில் விழுந்து கதறி அழ தொடங்கினாள்.

ஆர்யன் காரில் வேகமாக சென்று வீட்டை அடைந்ததும், “மதி” என்று சத்தமாக அழைத்து கொண்டே உள்ளே நுழைய, கணவன் குரலை கேட்டதும் மாடியிலிருந்து வளர்மதி ஓடிவந்தாள்.  ஆர்யனும் தாவி குதித்து மாடிப்படி ஏறினான். 

பல வருடங்களாக கணவனை பிரிந்திருந்த மனைவி போல ஓடிச் சென்று அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

“மதி” என்று அவன் மீண்டும் விளிக்க, அவனை கட்டிக் கொண்டு கதறி அழ தொடங்கினாள்.

“என்னாச்சு மதி? ஏன் அழறே?” என்று அவளை தன் மார்பில் சாய்த்து தலையை வருடிக் கொடுத்தான். 

இன்பரசுவின் வருகையால் பயந்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. அவன் அவளை ஏதும் மிரட்டி இருப்பானோ? அதனால்தான் இப்படி அழுகிறாளா?

அப்படி அவன் மிரட்டி இருந்தால் அவன் உயிர் அவனுக்கு நிரந்தரம் இல்லை. அப்போதே அவனை அடித்து நொறுக்கி குடலை பிடுங்கி ஏறியும் ஆவேசம் பொங்கியது. 

மனைவியின் கண்ணீர் அவன் கைகளை கட்டி போட்டு இருந்தது.  அவளை மேலும் தனக்குள் அழுத்திக் கொண்டு, “மதி, நான் உன் கூட தானே இருக்கேன், ஏன் அழறே? என்னாச்சுனு சொல்லும்மா? எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கறேன்”

ஆர்யனை கண்டதும் தன்னையும் மறந்து ஓடிச் சென்று அவனை கட்டி பிடித்து அழுது விட்டாள். இப்போது அழுவதற்கான காரணத்தை அவன் கேட்கவும் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். உண்மையை கூறினால் நிச்சயம் ஆர்யன் அவளுக்கு துணையாக நிற்பான் என்பதில் அவளுக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை. அவன் இன்பரசுவை தண்டிக்காமல் விடமாட்டான். ஆனால் இன்பரசு சொன்னது போலவே செய்து விட்டால் அவள் மானத்தோடு அவள் கணவனின் மானமும் அல்லவா பாதிக்கும்? 

“என்னை ஏன் தனியா விட்டு போனீங்க? நானும் உங்க கூட வரேன்னு சொன்னேனே. நீங்க இல்லாம வீட்ல தனியா இருக்கறப்போ  எனக்கு பயமா இருந்துச்சு” என்று அவன் மார்பில் புதைந்துக் கொண்டு விசும்பினாள்.

“என் மதிக்கு பயமா? நீ தைரியமான பொண்ணுனு நினைச்சேனே, காலேஜ்ல சிலம்பம் போட்டியில ஜெயிச்ச என் மதி இப்போ எங்கே? அவ இப்படி எல்லாம் அழவே மாட்டா தெரியுமா? எம்பி மகனை அடிச்சு மூஞ்சிய உடைச்ச பெண் சிங்கம் அவ, சொறி நாய்க்கு எல்லாம் பயப்படலாமா?” 

வளர்மதியின் அழுகை சட்டென நின்றது. அதிர்ச்சியுடன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். 

“மதி உனக்கு ஒரு பிரச்சினைனா என்கிட்ட ஏன் சொல்ல மாட்டேங்கிறே? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?”

“நீங்க எத பத்தி பேசறீங்க?” பதட்டத்தை மறைக்க முடியாமல் தடுமாறினாள்.

ஆர்யன் பதில் சொல்லாமல் கண்களில் வலியுடன் மனைவியை பார்த்தான். மனைவியாக ஒரு கணவனிடம் தன் இறந்த காலத்தை அவள் சொல்ல தயங்குவது அவனுக்கு புரிந்தது. 

அதைப் பற்றி வெளிப்படையாக பேசினால் அவள் சங்கடப்படுவாள் என்று அவனே தயங்கும் போது அவள் என்ன செய்வாள்? 

பேச்சை மாற்றும் பொருட்டு, “மதி பசிக்குது. சாப்பிட ஏதாச்சும் எடுத்துட்டு வரியா?” என்றான். 

“சாரிங்க, நீங்க வந்ததும் உங்கள சாப்பிட சொல்லாம லூசு மாதிரி அழுதுட்டு இருக்கேன்.‌ ரெண்டே நிமிஷம் இருங்க. சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்று வெளியே ஓடினாள்.

வளர்மதியின் மனதை சங்கடப்படுத்தாமல் இன்பரசு வீட்டிற்கு வந்து சென்ற விஷயத்தை எப்படி கேட்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான். 

நீள் இருக்கையில் கால் நீட்டி அமர்ந்து செழியனுக்கு அழைக்கலாமா என்று கைப்பேசியை எடுத்தான். அப்போது யுகேந்திரன் இடமிருந்து அழைப்பு வந்தது. 

“சொல்லுடா, நீயும் உன் பொண்டாட்டியும் வேலைக்கு வரலைனு சொல்லி பேப்பர் போட்டீங்கனு கேள்வி பட்டேன். நான் சமாதானம் செய்யாம உனக்கு கோபம் போகாதுன்னு நினைச்சேன். நீயே கால் பண்ணி இருக்க. கோபம் எல்லாம் போயிடுச்சா”

“அதெல்லாம் அப்படியே தான் இருக்கு. நான் வேற விஷயமா கால் பண்ணேன்”

“என்ன விஷயம்?”

“ரிசப்ஷனுக்கு வீடியோ கவரேஜ் பண்ணவன் போன் பண்ணி இருந்தான்.  யாரோ சந்தேகப்படுற மாதிரி வீடியோவுல பதிவாகியிருக்கிறதா சொன்னான். அதை என் போனுக்கு அனுப்பி இருக்கறதாகவும் சொன்னான். யார்னு பார்த்தா இன்பரசு! உனக்கு உடனே இன்பார்ம் பண்ணனும்னு தான் ஃபோன் பண்ணேன்”

“உன்ன நம்பி ரிசப்ஷன் ஏற்பாடு பண்ண சொன்னா, எந்த அழகுல ஏற்பாடு பண்ணி இருக்கப் பாரு? அவன் உள்ளே வந்ததும் போனதும் யாருக்கும் தெரியல. வீடியோ கவரேஜ்ல அவன் இல்லனா, இப்ப கூட உனக்கு தெரிஞ்சு இருக்காது. இதுதான் நீ ஃபாலோவ் பண்ண லட்சணமா?” எரிந்து விழுந்தான் ஆர்யன்

“இல்லடா இன்விடேஷன் இல்லாத யாரையும் உள்ளே அனுப்ப வேண்டாம்னு தான் சொல்லியிருந்தேன். அவன் ஏற்கனவே நம்ம கம்பெனியில் வேலை செஞ்ச ஐடி கார்டை காமிச்சு உள்ளே வந்திருக்கான். செக்யூரிட்டி கிட்ட விசாரிச்சேன். இப்பதான் எனக்கு விஷயம் தெரிஞ்சுது. 

“உன்னையும் நிஷாவையும் பார்த்தா மதிக்கு இன்பரசுவோட கடந்த காலம் ஞாபகத்துக்கு வரும். அதனால மறுபடியும் சங்கடப்படுவானு தான் கல்யாணத்துக்கு உன்னையும் நிஷாவையும் நான் கூப்பிடல. ஆனா அந்த இன்பரசுவே ரிசப்ஷனுக்கு வந்து போய் இருக்கான். மதி அப்பவே அவனை பார்த்து பயந்து போய் இருக்கா. அதனால தான் உடனே வீட்டுக்கு போகணும்னு சொல்லி இருக்கா. இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த நாயை அப்பவே அடிச்சு போட்டு இருப்பேன். இன்னைக்கு என் வீடு வரைக்கும் வந்து என் பொண்டாட்டிய மிரட்டிட்டு இருந்திருக்க மாட்டான்”

“என்னடா என்னென்னவோ சொல்ற? இன்பரசு உன் வீட்டுக்கு வந்தானா?”

“ஆமா, நீங்க ரெண்டு பேரும் ஜாப் ரிசைன் பண்றதா அப்பா சொன்னதும் நான் உன்னை சமாதானப்படுத்தலாம்னு ஆபீஸ்க்கு கிளம்பி வந்தேன். நான் கிளம்பி போனதை பாத்துட்டு வீட்டுக்கு வந்து அவளை மிரட்டி இருக்கான். என்ன சொல்லி மிரட்டினான்னு தான் தெரியல”

“தங்கச்சி கிட்ட கேக்குறது தானே?”

“அவ ரொம்ப சென்சிடிவ்வா இருக்காடா. பொறுமையா தான் விசாரிக்கணும். அந்த நாய் எங்கே தங்கி இருக்குனு விசாரி”

“விசாரிக்கலாம், அவன் உஷாராயிட்டா?”

“எந்த பொண்ணையாவது பேச வை. எங்கே இருக்கான்னு உளறிடுவான். புரியுதா?”

“புரியுது. நான் பாத்துக்கறேன்‌. டீடெயில்ஸ் கிடைச்சதும் போன் பண்றேன்” என்று யுகேந்திரன் அழைப்பை துண்டித்தான்.

நீண்ட பெருமூச்சோடு ஆர்யன் நிமிர்ந்த போது சாப்பாட்டு தட்டை எடுத்து வந்த வளர்மதி அதிர்ச்சியில் உறைந்து போய் சிலையாக நின்று இருந்தாள்.

(தொடரும்)

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
4 Comments
error: Content is protected !!
Scroll to Top