செந்தாழினியின் உடல் மொத்தமாக பயந்தில் நடுங்கியது, யாதவனின் மார்பில் கோழிகுஞ்சாக அடைக்கலம் புகுந்து கொண்டாள்.
யாதவனின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு, “யாதவா சீக்கிரமா வா ஓடிரலாம்” என்றாள் பதட்டமாக. அவனோ அவள் தலையை தன் நெஞ்சோடு மேலும் சேர்த்து அணைத்துக் கொண்டு அசையாமல் நின்றிருந்தான்.
பைராகி அவர்களை நெருங்கி வந்துக் கொண்டிருந்தார். யாதவ் கிருஷ்ணா தன்னவளின் முதுகை ஆதரவாக தடவியபடி அவரையே ஆராய்ச்சியாக பார்த்து கொண்டிருந்தான். அவனிடம் அசைவில்லாமல் போகவே அவளும் அவன் மார்பில் புதைந்து தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
பைராகி அரிவாளுடன் அவர்களை நெருங்கிவிட்டார். யாதவ் எதற்கும் தயாராகவே நின்றிருந்தான். அவர் கை பக்கவாட்டாக அரிவாளுடன் இவர்களின் கழுத்தை நோக்கி உயர்ந்தது. யாதவ் அவர் கையிலிருந்த அரிவாளை பார்க்காமல் நிதானமாக பைராகியின் விழிகளை கூர்ந்து நோக்கினான்.
அவர் பார்வை அவர்களின் மேல் இல்லை, வேறு இடத்தில் இருக்கவும், அவனும் அவர் பார்வை சென்ற திசைப் பக்கம் திரும்பினான். அங்கே இருந்த மூங்கில் மரத்தில் பைராகியின் இலக்கு தெரிந்தது. அவன் கணிப்பு சரியே என்பது போல பைராகி தன் கையிலிருந்த அரிவாளால் அங்கிருந்த மூங்கிலை வெட்டினார்.
யாதவ் அவர் செயலை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். பைராகி சற்று நேரத்தில் அந்த மூங்கிலை சரியான அளவில் வெட்டி, துளையிட்டுக் கொண்டிருந்தார். இப்போது அது புல்லாங்குழல் போல தோன்றியது. அவர் எதற்கு இப்போது இதை செய்து கொண்டிருக்கிறார் என்று புரியாமல் யாதவ் அவரை கேள்வியாக பார்த்தான்.
“யாதவா, இந்த புல்லாங்குழலை வாசிங்க. அப்புறம் இந்த அக்னி குண்டத்தில் இருக்கும் வெப்பம் உங்களை தகிக்காது”
யாதவ் பைராகியை கிண்டலாக பார்த்தான் “இந்த காட்ல இருக்கிறவங்க எல்லாம் ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்கறீங்க? நான் புல்லாங்குழல் வாசிச்சா எப்படி அக்னி குண்டத்தில் இருக்கும் நெருப்பு எங்களை சுடாம இருக்கும்? அது உண்மையோ பொய்யோ, எதுவா வேணா இருக்கட்டும். எனக்கு புல்லாங்குழலே வாசிக்க தெரியாதே, என்னை போய் வாசிக்க சொல்றீங்க? அப்படியே வாசிச்சாலும் அதுக்கப்புறம் இந்த அக்னி குண்டத்துல இறங்கி நாங்க என்ன செய்யணும்?”
“என்னோட குரு எனக்கு இட்ட கட்டளையை செய்து முடிக்க தான் நான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் உயிரோடு இருக்கேன். உங்களோட பிறப்பு ரகசியத்தை சொல்லி, நீங்க இந்த வனத்துக்கு வரும் போது பகவான் ஸ்ரீகிருஷ்ணரோட புல்லாங்குழலை உங்க கிட்ட ஒப்படைக்க சொன்னாரு. அதுக்காக தான் உங்களை இந்த அக்னி குண்டத்துல இறங்க சொல்றேன்.
என்னால உங்களை உணர்ந்துக் கொள்ள முடியுது, ஆனா பஞ்ச பூதங்களும் உங்களோட வரவை தெரிஞ்சுக்கணும் இல்லையா? அதனால தான் இந்த புல்லாங்குழலை வாசிக்க சொல்றேன். நீங்க வாசிச்சா தான் இந்த அக்னி குண்டத்துக்குள்ள இறங்கி இன்னமும் உள்ளே போக முடியும்” என்றார் பைராகி
சலிப்புடன் உச் கொட்டியவன் “நான் சொல்றது உங்களுக்கு புரியுதா இல்லையா? நான் புல்லாங்குழலை தேடி வரல, அதை வச்சிட்டு என்னை என்ன பண்ண சொல்றீங்க? மேடைக்கச்சேரியில வாசிக்க சொல்றீங்களா? நான் வாசிச்சா எல்லாரும் தலை தெறிக்க ஓடிடுவாங்க. எனக்கு எந்த புல்லாங்குழலும் வேண்டாம், அத முதல்ல புரிஞ்சுக்கோங்க. நான் முரளி கிருஷ்ணாங்கறவனை தான் தேடி வந்தேன். முடிஞ்சா அதுக்கு ஹெல்ப் பண்ணுங்க. இந்த புல்லாங்குழல் வாசிக்கிறது, நெருப்புல இறங்குற மாயஜால வித்தையெல்லாம் செய்யறதுக்கு நான் தயாரா இல்ல” என்றான் யாதவ் அழுத்தமான குரலில்.
“உங்களை பொறுத்தவரைக்கும் நீங்க முரளிங்கிற உங்க சகோதரனை தேடி வந்திருக்கலாம். ஆனா யது வம்சத்துல அதுவும் ஸ்ரீகிருஷ்ணரோட அம்சத்துல பிறந்த நீங்க, பகவானோட புல்லாங்குழலை தேடி வரணும்ங்கிறது தான் விதி. இன்னும் கொஞ்ச நாள்ல உலகத்தையே உலுக்குற நோயும், இயற்கை அழிவுகளும் தொடர்ந்து நடக்க போகுது. அதை தடுத்து நிறுத்தி மக்களை காப்பாத்தறதுக்காக இந்த புல்லாங்குழலை உங்க கிட்ட ஒப்படைக்கணும்ங்கிறது எனக்கு கொடுக்கப்பட்ட ஆணை. அதை நிறைவேற்றுவதற்காகவாது நீங்க இதை செய்து தான் ஆகணும்” என்றார் பைராகி
“அய்யோ நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லீங்க. நீங்க ஏதோ என் முகத்தை வச்சு கன்ப்யூஸ் பண்ணிக்கறீங்கனு நினைக்கிறேன். எனக்கு முன்னாடி பொறந்தவன் முரளி, பாக்கறதுக்கு அசப்புல என்னை மாதிரி இருப்பான். அவன் தான் இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் செய்திட்டு இருக்கான். அந்த புல்லாங்குழலை எடுத்து அவன் கிட்ட கொடுத்தீங்கனா அவன் அந்த வேலையை பார்த்துக்குவான். நான் ஒரு சாதாரண ஆளு, என்னை விட்டுங்க ப்ளீஸ்” என்றான் யாதவ்
“எனக்கு உங்க அண்ணன் முரளியை பத்தி நல்லாவே தெரியும். அவரோட எண்ணம் சரியில்ல, அதனால தான் அவர் இன்னமும் கந்தர்வ வனத்துல மாட்டிக்கிட்டு இருக்காரு. நீங்க புல்லாங்குழலை கொண்டு போனா தான் அந்த முரளியையும் உங்க கூட வந்த நண்பனையும் காப்பாத்த முடியும். இல்லைனா அவங்க ஆயுசுக்கும் கந்தர்வ வனத்தை விட்டு வெளியேறவே முடியாது, அதுக்காகவாவது புல்லாங்குழலை எடுக்க அக்னிகுண்டத்துக்குள்ள இறங்குங்க, என்னை நம்புங்க உங்களுக்கு எதுவும் ஆகாது”
“நிஜமா தான் சொல்றீங்களா? நீங்க சொல்றதையெல்லாம் என்னால நம்பவே முடியல” என்றவனிடம் அவன் வாழ்க்கை வரலாற்றை பற்றி அவனிடமே கூறினார் பைராகி. தனக்கு நடந்த அத்தனையும் புட்டு புட்டு வைத்துக் கொண்டிருக்கும் அவரை ஆச்சரியத்துடன் விழி அகல பார்த்தான் யாதவ்.
“அந்த முரளி உங்களை வச்சு பகவானோட புல்லாங்குழலை அடையணும்னு நினைச்சான். ஆனா அது உங்களுக்கு சேர வேண்டியது. அவன் உங்களை வச்சு ஒரு திட்டம் போட்டான். ஆனா கடவுள் அவனை வச்சு ஒரு திட்டம் போட்டார். உண்மையில் புல்லாங்குழல் உங்க கையில் சேர்றதுக்கு அவன் ஒரு துருப்பு. அவ்வளவு தான்.
மனுஷனால செய்ய முடியாத நல்ல விஷயத்துக்கு மட்டும் புல்லாங்குழலை பயன்படுத்துங்க. அதை பயன்படுத்தணும்னு உங்களுக்கு தோணும் நேரத்துல மட்டும் அதை உபயோகப்படுத்துங்க. மத்த நேரத்தில் அதை பத்தி மறந்துடுங்க.
கந்தர்வ வனத்துல பாதிக்கப்பட்டவங்கள இந்த புல்லாங்குழல் மூலமா குணப்படுத்த முடியாது. ஏன்னா அது அவங்களுக்கு கிடைச்ச தண்டனை. ஆனா அது மூலமா நீங்க அவங்களை கந்தர்வன வனத்தைவிட்டு உங்களோட அழைச்சிட்டு போக முடியும். என்னை கேட்டா புல்லாங்குழல் கிடைச்சதும், முரளியை அப்படியே கந்தர்வ வனத்துல விட்டுட்டு போயிடுங்கனு தான் சொல்வேன்” என்றார் பைராகி
“அதெப்படி முடியும்? நான் என் அம்மாவுக்கு அவனை கூட்டிட்டு வர்றேன்னு வாக்கு கொடுத்திருக்கேனே. எனக்கு புல்லாங்குழலை விட அவனை மீட்கறது தான் முக்கியம். நான் கிளம்பி வந்ததே அதுக்கு தானே? புல்லாங்குழலோட போனா அந்த முரளியை மீட்டெடுக்க முடியும்னு உறுதியா சொல்லுங்க, நீங்க சொல்றதை நானும் செய்யறேன்” என்றான் யாதவ் முடிவாக
விதி வலியது அதை யாரால் மாற்ற முடியும்? என்று தனக்குள் நினைத்துக் கொண்டே, “கட்டாயம் பான்சூரி (முரளி) புல்லாங்குழலை எடுத்துட்டு போனா நீங்க நினைக்கிற காரியம் நடக்கும். அது வெறும் இசைக் கருவினு மட்டும் நினைக்காதீங்க. அது கிட்டத்தட்ட ஒரு மந்திரக் கோல் மாதிரி. யாரும் அதை அழிவுக்கு பயன்படுத்தக்கூடாதுனு தான் உங்க கையில ஒப்படைக்க நினைக்கிறேன். அதை வச்சு நீங்க உலகத்தையே காப்பாத்தாலாம் அந்த முரளி உட்பட.
ஆனா ஒண்ணு இந்த புல்லாங்குழலை நீங்களா யாருக்கும் கொடுக்ககூடாது. முக்கியமா உங்க சகோதரன் முரளி கிருஷ்ணா கைக்கு இது கிடைக்கவே கூடாது. அப்படி ஒரு நிலைமை வராம கவனமா இருங்க” என்றார் பைராகி எச்சரிக்கையாக
“சாமி ஒருவேளை யாதவ் கிட்ட புல்லாங்குழல் இருக்கிறது தெரிஞ்சுகிட்டு யாராவது திருடிட்டோ பிடுங்கிட்டோ போயிட்டா என்ன செய்றது?” என்றாள் செந்தாழினி
“புல்லாங்குழலை யாதவனிடமிருந்து யாராலயும் திருடவோ அபகரிக்கவோ முடியாது. ஆனால் யாதவ் தன் கையால அந்த புல்லாங்குழலை யார்கிட்டயும் கொடுக்க கூடாது” என்றார் பைராகி சற்றே அழுத்தி
முதல் வாக்கியத்தை மட்டும் உள்வாங்கியிருந்த யாதவ் அடுத்ததாக பைராகி சொன்ன எச்சரிக்கையை இன்னமும் ஆழமாக உள்வாங்கி இருக்க வேண்டும். அப்படி உள்வாங்கி இருந்திருந்தால் பின்னாளில் அவதி பட வேண்டிய நிலை வந்திருக்காதோ என்னவோ? விதி வலியது என்று பைராகியே நினைக்கும் போது நாம் என்ன செய்வது?
“இந்தாங்க புல்லாங்குழலை வாசிங்க” என்று தன் கையில் இருந்த மூங்கில் குச்சியை அவனிடம் கொடுத்தார் பைராகி.
யாதவனுக்கு நம்பிக்கையே இல்லாமல் அதை வாங்கி தன் வாயில் வைத்து மெல்ல ப்பூ என்று தான் ஊதினான். ஆனால் அதுவே இனிமையான இசையாக கேட்டது. ஆச்சரியத்துடன் அதை தன் இதழில் பொறுத்தி வாசிக்க தொடங்கினான். அவனையும் அறியாது அவன் அதை ராகத்துடன் இசைக்க செந்தாழினி அவனை நிமிர்ந்து ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
இனிமையான இசை அந்த காடு முழுவதும் பரவி அங்கிருந்த ஜீவராசிகள் அனைத்திற்கும் ஒரு பரவச நிலையை ஏற்படுத்தியிருந்தது. யாதவனின் இசையில் மொட்டாக இருந்த மலர்கள் எல்லாம் மலர்ந்து அவன் தோள் சேர்ந்துவிட ஏங்கியது. யாதவ் மற்றும் செந்தாழினியின் மனநிலை இப்போது முற்றிலும் ஏகாந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. இமை மூடி அவன் வாசித்து கொண்டிருக்க, செந்தாழினியோ அவன் இதழ்கள் தன்னை வாசிக்காதா என்று ஏங்கும் நிலையில் மலரிதழ்களை விரித்து அவனை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அக்னி குண்டம் மலர் குண்டமாக மாறி இருந்தது.
கழுகுகள் கூட்டம் கூட்டமாக அந்த இடத்தை சுற்றி வட்டம் அடித்துக் கொண்டிருந்தன. பைராகி கண்களில் ஆனந்த கண்ணீருடன் அந்த கண் கொள்ளா காட்சியை பார்த்தபடி பரவச நிலையில் இருந்தார். சற்று நேரத்திற்கு எல்லாம் அந்த பகுதியில் இருந்த ஆடு மாடுகள் எல்லாம் அங்கே ஆஜராகி இருந்தன,
மாயோனை கண்டுவிட்ட மகிழ்ச்சியில் ஆடுமாடு எல்லாம் ஆனந்த கூச்சலிட சுயம் பெற்று கண்திறந்த இருவரும் ஆச்சரியத்துடன் அங்கே இருந்த சூழ்நிலையை பார்த்து திகைத்தனர், “இப்போ நீங்க இதுக்குள்ள இறங்குங்க, வழியில் எந்த தடை வந்தாலும் புல்லாங்குழலை எடுத்து வாசிங்க, தானாவே அந்த தடைகள் நீங்கிடும், ஒரு கட்டத்துல உங்களுக்கு பான்சூரி புல்லாங்குழல் இருக்கிற இடம் தெரிஞ்சுடும் அதை எடுத்துட்டு நீங்க வெளியே போகும் போது மறுபடியும் கந்தர்வ வனத்துல இருப்பீங்க. அங்கிருந்து நீங்க வெளியே போகலாம். அந்த புல்லாங்குழலை நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. போய் வாங்க” என்றார் பைராகி.
யாதவ் கிருஷ்ணா செந்தாழினியை கேள்வியாக பார்த்தான். அவளோ அவன் இசையில் மெய்மறந்து காதலுடன் அவனை ஆழ்ந்து பார்த்தபடி அரைமயக்கத்தில் நின்றிருந்தாள். “ராதி போகலாமா?” என்றான் அவள் காதில் கிசுகிசுப்பாக. மயக்கத்திற்கு காரணமானவன் மார்பிலேயே சாய்ந்தபடி சம்மதமாக அவள் தலை அசைக்கவும், ஒரு கையில் வேங்குழலையும் மறுகையில் வேங்குழலியையும் பற்றியவாறே அந்த அகண்ட குழிக்குள் இறங்கினான்.
பூக்குழிக்குள் இறங்கியவர்கள் அதள பாதளத்திற்குள் செல்வது போல போய் கொண்டே இருந்தார்கள். செந்தாழினி அவன் தோளில் சாய்ந்தபடி இருக்க, யாதவ் கீழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான். அங்கே ஏதோ தட்டுப்படவும் அதன் மேல் தன்னை சமாளித்துக் கொண்டு நின்றான். அவர்கள் நின்றிருந்த இடம் வழுக்கி கொண்டே செல்வது போல இருக்கவும் செந்தாழினி மெல்ல குனிந்து பார்த்தாள், அவர்கள் நின்றிருந்தது ஐந்து தலை நாகத்தின் மேல்!
“யாதவா” என்று கத்தியபடி அவன் மேலேயே மயங்கி சரிந்தாள். அப்போது தான் யாதவ் அவளை ஒரு கையால் பிடித்துக் கொண்டே கீழே குனிந்து பார்த்தான். அவர்கள் நின்றிருந்தது ஐந்து தலை ராஜ நாகத்தின் மேல், அதை சுற்றி கீழே எண்ணிலடங்காத பாம்புகள் படமெடுத்து நின்று கொண்டிருந்தன.
யாதவ் சற்றும் யோசிக்காமல் தன் கையிலிருந்த புல்லாங்குழலை எடுத்து வாசிக்க, அதற்கேற்ப அந்த நாகங்களும் அசைந்தாடின. அவர்களை சுமந்திருந்த நாகம் அப்படியே மெல்ல நகர்ந்து ஒரு மிகப்பெரிய பிரமாண்ட அறையின் வாசலின் அருகே நின்றது.
அந்த அறைக்குள் செல்ல அது குறிப்பு கொடுக்கிறது என்று புரிய, யாதவ் கதவை திறக்க முயன்றான். ஆனால் அதன் திறப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே மீண்டும் புல்லாங்குழலை தன் இதழில் பொருத்தி இசை மீட்டினான். கதவுகள் மெல்ல திறந்தன.
அந்த அறைக்குள் மைனஸ்டிகிரியில் இருக்கும் குளிர் பிரதேசம் போல இருந்தது. எங்கும் பனி சூழ்ந்திருந்தது. செந்தாழினியின் உடல் குளிரில் விறைத்துக் கொண்டது. அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு தன் உடல் உஷ்ணத்தை அவளுக்கு கொடுத்தபடி, அவள் காதில் தன் மீசை உரோமங்கள் உரசும்படி “ராதி என்னை கட்டிபிடிச்சுக்கோ, சீக்கிரம் இங்கிருந்து போயிடலாம்” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவள் மறுக்காமல் தன் இருகைகளால் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். நீண்ட உஷ்ண பெருமூச்சை அவள் மேல் வீசியவன் “கொல்றடி, எனக்கென்னவோ ஹனிமூன் வந்தமாதிரி இருக்கு” என்று அவள் காதில் முணுமுணுத்தான்.
“இருக்கும் இருக்கும், குளிர்ல இங்கே உயிர் போற மாதிரி இருக்கு. ரொமான்ஸ் பண்ற நேரமா இது? வந்த வேலையை பாரு யாதவ்” என்று சிணுங்கினாள்.
“ராதி இந்த இடத்தில ஒரு ஸ்வீட் மெமரி வேணும்டி” என்றவன் அவள் என்ன என்று கேட்பதற்கு முன் அவள் இதழில் தன் இதழை அழுத்தமாக பதித்தான். அந்த குளிரிலும் செந்தாழினியின் உடலெங்கும் சூடு பரவியது. அவளை அப்படியே தன் கை வளைவில் வைத்துக் கொண்டு அந்த குளிர்ந்த பிரதேசத்திற்குள் நுழைந்தான்.
இருவராலும் ஒரு கட்டத்திற்கு மேல் குளிரை தாங்கவே முடியவில்லை. இன்னும் தாமதித்தால் பனிக்கட்டியோடு சேர்ந்து அவர்களும் பனிக்கட்டியாக வேண்டியது தான். அது மட்டுமில்லாமல் அவர்கள் முன்னே பனிபாறை ஒன்று பாதையை அடைத்துக் கொண்டு இருந்தது. யாதவ் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த பாறையை அசைக்ககூட முடியவில்லை. வந்த வழியே திரும்பி செல்லலாம் என்று பார்த்தான்.
அவர்கள் வந்த பாதையும் பனி பாறையால் அடைக்கப்பட்டு இருந்தது. புல்லாங்குழலுக்குள் பனி சிதறல்கள் குவிந்து இருந்தது. அதை எடுத்து ஊதினாலும் அதிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை. யாதவ் திடுக்கிடலோடு செந்தாழினியை பார்த்தான். அவளையும் அச்சம் சூழ்ந்துக் கொண்டது.
யாதவ் சிறிது நேரம் யோசித்து, பின்பு செந்தாழியின் இடையைப்பற்றி தன்னிடம் சேர்த்து அணைத்தவன், அவள் நெற்றியில் தன் இதழ்களை பதித்தான். பின்பு அவன் இதழ்கள் அவள் முகமெங்கும் ஊர்வலம் சென்று இதழில் குடிபுகுந்து கொண்டது.
அவன் உடல் மொத்தமாக அவளை சுற்றி வளைத்திருக்க, கைகள் அவள் மேனியில் ஆங்காங்கே அழுத்தம் கொடுக்க, அதிர்ந்து விழித்தாள் பெண்ணவள். கண்சிமிட்டியபடி அவள் விடும் உஷ்ண மூச்சின் அருகே தன் கையிலிருந்த புல்லாங்குழலை நீட்டினான். அவள் விடும் சூடான மூச்சுக்காற்றில் அந்த குழலுக்குள் இருந்த பனித்துளி கரைந்து ஓட இப்போது அந்த புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான் யாதவன்.
வாசித்துக் கொண்டே தன்னவளை நோக்கி எப்படி? என்பது போல கண்சிமிட்டினான். “திருடா” என்று செல்லமாக அவனை முறைத்தாள். அவளை பார்த்து மோகனமாக சிரித்துக் கொண்டே தன் வாசிப்பை தொடர்ந்தான். இப்போது பனிச்சுவர் அப்படியே சரிந்து விழ அங்கே அழகான மண்டபம் ஒன்று இருந்தது. அதற்குள் இருவரும் சென்றார்கள்.
அங்கே நடுநாயகமாக இருந்த அரியாசனத்தின் மேல் ஒரு தங்க பெட்டி இருந்தது. அதன் மேல் கருநாகம் படமெடுத்தபடி நின்றிருந்தது. யாதவ் அதன் அருகே சென்று தன் கைகளை நீட்டினான்.
அது அவன் கையில் வளைந்து நெளிந்து அவன் முழங்கையை சுற்றிக் கொண்டது.
“யாதவ் என்ன பண்றீங்க?” அலறினாள் செந்தாழினி.
“பயப்படாதே ராதி, எனக்கு ஊர்ல எல்லாம் பாம்பு பிடிச்சு பழக்கம் தான். அதை பாக்கும் போதே தெரியும், அது கொத்த வருதா? இல்லையானு. இது சும்மா தான் நம்மளை பாக்குதே தவிர அதுகிட்ட நம்ம மேல கோவம் இல்ல என்றவன் அந்த பாம்பை மற்றொரு கையால் லாவகமாக எடுத்து கீழே விட்டான். அடுத்த நிமிடம் அது மறைந்து போனது. பின்பு அந்த தங்க பேழையை திறந்தான்.
அந்த பெட்டியில் மீன் பிடியோடு இருந்த புல்லாங்குழல் கண்ணை பறிக்கும்படி தங்க நிறத்தில் ஜொலித்தது. அதை பார்க்கும் போதே எடுத்து வாசிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, ஆர்வமாக அதை எடுத்து அப்போதே வாசிக்க தொடங்கினான். அந்த இடமே அரண்மணை போல மாறியது. செந்தாழினி அவன் இசையில் மெய் மறந்து நின்றபடி யாதவனை காதலுடன் பார்த்தாள்
என்ன? என்பது போல ஒற்றை புருவம் உயர்த்தினாலும் இசை மீட்டுவதை அவன் நிறுத்தி இருக்க வில்லை. அவன் பார்வை அவளில் ஆழ்ந்திருக்க, இதழ்கள் மட்டும் இசை மீட்டிக் கொண்டிருந்தது.
“மாதவா யாதவா குழலூத வா
என் இதழோடு இசையாக வா
உன் மார்பே என் மாகாணம்
உன் பார்வை என் பூங்கானம்
எந்தன் வாயில் தீந்தேனுறுதே
உன் நாவா? என் நாவா?
கண்ணா வா….
என்று அவள் கானம் இசைக்க அதற்கேற்றாற் போல கண் மூடி வாசித்து கொண்டிருந்தான் யாதவன். இருகைகையும் விரித்து அவனிடம் தன் இதழில் இசை மீட்ட அழைத்தாள். அதை கண்டு கொள்ளாமல் இசையில் லயித்திருந்தான் அவன், ஏனோ அந்த நிமிடம் அந்த புல்லாங்குழல் மேல் பொறாமையாக இருந்தது அவளுக்கு. அவளுக்கு சொந்தமான தன் யாதவனின் இதழ்களை அந்த புல்லாங்குழல் எப்படி சொந்தமாக்கி கொள்ளலாம் என்று நினைத்தவளாய் அவன் அருகில் சென்று அந்த புல்லாங்குழலை விலக்கி அவன் இதழோடு தன் இதழை பொருத்திக் கொண்டாள்.
கண்மூடி வாசித்து கொண்டிருந்தவனுக்கு எது புல்லாங்குழல்? எது தன்னவளின் இதழ்கள்? என்று பிரித்தறிய முடியாதா என்ன? தெரியாதது போலவே தன் இதழ்களால் அவள் இதழ்களில் ஊதிக் கொண்டிருந்தான் அந்த கள்வன்! இடைவிடாது அவள் இதழ்களில் மூச்சு பயிற்சி செய்து கொண்டிருந்தவன் கள்வனை போல மெல்ல தன் ஒற்றை கண்ணை திறந்து பார்க்க, அவளோ அவனை செல்லமாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
கலகலவென்று சத்தமாக சிரித்தான் யாதவ்! அந்த சிரிப்பு சத்தம் புல்லாங்குழல் இசையை விட இன்னும் இனிமையானதாக இருந்தது. சரியாக அந்த நேரத்தில் அரண்மனையின் கதவு படாரென்று திறந்தது
எங்கிருந்தோ காட்டாற்று வெள்ளம் பூமிக்கு அடியில் இருந்த அந்த அரண்மனைக்குள் நுழைந்து விட இப்போது அந்த இடமே முழ்கும் தருவாயில் இருந்தது. யமுனை அன்னைக்கும் யாதவனை அந்த நிலையில் பார்த்துவிடும் ஆசை வந்து விட்டதோ என்னவோ?
யாதவ் அந்த பான்சூரி என்கிற முரளியை எடுத்து தன் சட்டைக்குள் வைத்துக் கொண்டு, செந்தாழினியின் கரம் பற்றி இழுத்துக் கொண்டு அந்த அரண்மனையை கடக்க முயன்றான்.
எந்த பக்கம் செல்வது என்றே தெரியவில்லை. திரும்பிய இடமெல்லாம் தண்ணீரால் நிறைந்திருந்தது. யோசிக்க நேரமில்லை. அவசரமாக அந்த இடத்தை விட்டு போய் எங்காவது கரை சேரவேண்டும் என்ற முனைப்பில் அவசரமாக நீருக்குள் சென்று தன்னவளோடு நீந்த தொடங்கினான்.
எதிர்பாராமல் தண்ணீர் அந்த இடத்தை நிரப்பி விட்டதால் செந்தாழினி நிறைய தண்ணீர் குடித்து இருந்தாள். நீந்த முடியாமல் மயங்கி சரிந்தவளையும் இழுத்துக் கொண்டு யாதவ் தண்ணீருக்குள் வெகுநேரம் நீந்தினான்.
வெகுநேரம் நீந்தியதில் ஒரு வழியாக கரையை அடைந்திருந்தான். செந்தாழினியை கரையில் கிடத்தி அவள் வயிற்றை பிடித்து அழுத்தினான். அதில் அவள் குடித்திருந்த நீர் வாய் வழியாக வந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தாள். யாதவ்வும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவன் பார்வை அவள் கண்களை தாண்டி அவள் மேடுபள்ளங்களில் நிலைத்திருந்தது. அவள் கண்விழித்த பின்னரும் கையை விலக்காமல் வெற்றிடையை பிடித்து அழுத்திக் கொண்டே இருந்தவன் அவளை நோக்கி குனிந்தான். செந்தாழினி சுற்றும் முற்றும் பார்த்தாள். அது அவர்கள் முதலில் வந்திறங்கிய கந்தரவ வனம் போலிருந்தது. அப்படியென்றால் அவர்கள் யமுனை ஆற்றை நீந்தி கந்தரவவனத்தின் கரையை சேர்ந்து இருக்கிறார்கள். பைராகி சொன்னது போல இனி அவர்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற முடியும் என்று தோன்றியதும் “யாதவா நாம எங்கே இருக்கோம்னு கவனிச்சியா?” என்றபடி எழுந்தவளை அப்படியே தள்ளி அவள் மீது படர்ந்தான் யாதவ்.
அவள் மேனியை அழுத்தியவனின் கரம் பற்றி, “யாதவ் என்ன பண்றீங்க? நாம இப்போ கந்தர்வ வனத்துல இருக்கோம். அதனால தான் கண்ட்ரோல் இல்லாம நடந்துக்கறீங்கனு நினைக்கிறேன். இங்கே கண்ணுக்கு தெரியாம நிறைய பேர் இருப்பாங்க, விடுங்க யாதவ்” என்றாள் சிணுங்கலோடு
“ராதி ப்ளீஸ்டி எனக்கு நீ வேணும் இப்பவே” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் யாதவ் கிருஷ்ணா.
அப்போது ஒரு குரல் கேட்டது. “அய்யோ என்னை காப்பாத்துங்க, என்னை என் அப்பாகிட்ட கூட்டிட்டு போங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று கேட்கவும் திடுக்கிட்டு எழுந்தான் யாதவ் கிருஷ்ணா.
“ராதி என்ன இங்கே யாரோ அழற சத்தம் கேட்குது?”
“ஆமா யாதவ் எனக்கும் கேட்குது. நான் சொன்னேன் இல்ல. இப்போ நாம கந்தர்வ வனத்துல இருக்கோம். பைராகி சொன்னது போல புல்லாங்குழல் நம்ம கைக்கு கிடைச்சதும் நாம தானாவே கந்தர்வ வனத்துக்கு வந்துட்டோம். கையில் புல்லாங்குழல் இருக்கிறதால நமக்கு இங்கே மாட்டிக்கிட்டவங்க குரல் கேட்குது”
“ராதி அப்போ முரளி, பிரதாப் எல்லாம் இங்கே தான் இருப்பாங்கனு நினைக்கிறேன். வா அவங்களை தேடலாம்” என்று அவளை விட்டு எழுந்தான்.
ஈர உடையில் எழுந்து நின்றவளை அவன் ஒரு மாதிரியாக பார்க்க, “நம்ம பயணத்த ஆரம்பிக்கும் போது எப்பேர்பட்டவங்களும் தடுமாறும் இந்த கந்தர்வனத்துலயே சாமியார் போல என்னை விட்டு தள்ளி தள்ளி போனீங்க. இப்போ என்ன பார்வை பேச்சு செயல்னு எல்லாம் மாறி இருக்கு? என்றாள் தலையை குனிந்து கொண்டு மெல்லிய குரலில்
“ராதி உன்னை பார்த்ததுமே எனக்கும் பிடிச்சு தான்டி இருந்துச்சு. ஆனா முரளி விரும்பி இருக்கான்னு தெரிஞ்சதும் என்னோட ஐம்புலன்களையும் அடக்கிட்டேன். உன்னை கொஞ்சமா பார்த்தா கூட எங்கே என்னோட லிமிட்டை தாண்டிடுவேனோனு தான் விலகி விலகி இருந்தேன். ஆனா நாம இரண்டு பேரும் தான் சேரணும்னு விதி இருக்கு என்ன பண்றது? நம்மையும் மீறி நம்ம கல்யாணம் நடந்துருச்சு, இனி நீ என்னோட உடைமைனு ஒரு உரிமை உணர்வு இருந்துட்டே இருக்கு. அதான் என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியல” என்றவன் தன் பார்வையை வஞ்சனையின்றி அவள் மேல் மேய விட
“போதும், எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போனதும்” என்றபடி குத்திட்டீயாய் குத்தும் அவன் கண்களை தன் உள்ளங்கையால் மூடினாள். அவள் கரத்தை பற்றி உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டவன், “வீட்டுக்கு போனதும் நீ தான் என்னோட புல்லாங்குழல், ஒரு இடம் விடாம வாசிக்க போறேன்” என்று அவன் சொன்னதும் செந்தாழினியின் முகம் குப்பென்று செங்காந்தள் மலரென சிவந்து போனது.
அவளை ரசனையுடன் பார்த்தபடி “சரி சீக்கிரம் வா, முரளியும் பிரதாப்பும் கிடைக்கறாங்களானு தேடிப்பார்க்கலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு அந்த கந்தர்வ வனத்திற்குள் நுழைந்தான்.
அதுவரை அவர்களின் உரையாடலை ஒரு வித திடுக்கிடலோடு கேட்டுக் கொண்டிருந்தது அங்கிருந்த மாய உருவம்!
(தொடரும்)