தீராக் கனவே, மீண்டும் சேராயோ???
“முடிவில்லாமல் என் மனதில் தொடரும் கனவே, நீ என்னிடம் வந்து சேரமாட்டாயா”?
கனவே சேராயோ??-1
அந்தப் பெரிய போக்குவரத்து சாலையில் வாகனங்கள் எல்லாம் மின்னலாய் மறைந்து கொண்டிருக்க. சிவப்பு விளக்கொளியில் வாகனங்கள் கிரீச்சிட்டு நின்றது.
பச்சை மனிதர் சின்னம் சாலையை கடக்கலாம் என்று சமிஞ்சை செய்து கொண்டிருக்க. எண்ணற்ற பாதசாரிகள் அந்த நீண்ட சாலையை கடக்க முற்பட்டனர்.
அதில் கடைசியாக வந்து கொண்டிருந்த ஆண்மகன் திடீரென்று கேட்ட ஆரன் சத்திரத்தில். நடு ரோட்டில் அப்படியே நிலைக்குத்தி நின்று விட்டான்.
வேகமாக வாகனம் ஒன்று அவனை மோதுவது போல வர, கண்களை மூடியவன், வலது புறங்கை கொண்டு தன் முகத்தை மூடினான்.
அப்பொழுது அவன் நினைவலைகளில் ஒரு ஆணின் முகம் மின்னி மறைந்தது. அது அவன் உடல் முழுவதும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அதே முகம் சற்று நேரத்தில் இரத்த வெள்ளத்தில் அவன் மடியிலேயே கிடந்தது. “தீரா” என்று கத்திக் கொண்டே அவன் கூப்பாடிட்டு அழுகிறான்.
சற்றென்று மிருதுவான கரம் அவனை இழுத்திருந்தது. நொடிப்பொழுதில் தன்னை சுதாரித்தவன். அவள் மீது மோதாமலிருக்க, அவள் தோள்களைப் பற்றியபடி நின்றான்.
“என்ன நிர்மல் இது?? இப்படியா நடு ரோட்டில் நிற்ப?? ஒரு நிமிஷம் நான் எவ்வளவு தவிச்சிட்டேன் தெரியுமா?? நான் வந்து இழுக்கலைனா என்ன ஆகிறது?? திரும்பவும் ஒரு ஆக்சிடென்ட்?? அப்பா அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவேன்”? பரிதவிப்பாக அவனுடைய தமக்கை கேட்டுக் கொண்டிருந்தாள்.
தோள்களில் இருந்து கைகளை விளக்கியபடி, அவள் தலையில் கையை வைத்து ஆதுரமாக ஆட்டியவன்.
“ஈஸி அக்கா, அதுதான் என் அக்கா இருக்காள்ள?? அக்கா இருக்க பயமேன்?? நீ என் கூட இருக்குற வரைக்கும் எனக்கு எதுவும் ஆகாது. ஆகவும் விடமாட்ட” அவள் கன்னங்கள் இரண்டையும் பிடித்து ஆட்டியபடி கொஞ்சினான் இளையவன்.
“எல்லாத்துலயும் உனக்கு விளையாட்டு. ஒரு நிமிஷம் என் ஹார்ட் பீட்டே நின்னுடுச்சு தெரியுமா”?? என்றாள்.
“அதுதான் நின்னு, அதுக்கப்புறம் எனக்காக துடிச்சிடுச்சே”?? நிர்மல் அப்போதும் கிண்டல் செய்தான்.
அடுத்த பாதிச் சாலையையும் அவர்கள் கடக்க வேண்டும். ஆனால் இவர்களின் இந்த வாக்குவாதத்திலும் சிக்னல் விழுந்ததிலும், சாலைகள் மீண்டும் வாகனத்தில் நிரம்பியிருக்க. அவர்களால் அதை கடக்க முடியவில்லை.
ஆனால் அவள் கைகளை கட்டிக்கொண்டு, உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு தம்பிக்கு முதுகு காட்டி நின்றுவிட்டாள்.
கோபித்துக் கொண்டாள் என்று தெரிந்தது நிர்மலுக்கு.
“சாரி அக்கா, உனக்கு தான் என்னோட பிரச்சனை தெரியுல்ல?? திரும்பவும் அந்த முகம் அந்த ஆக்சிடென்ட் எல்லாம் என் கண் முன்னாடி வந்துருச்சு. நான் என்ன பண்றது?? சாரி” நடுரோடு என்றும் பார்க்காமல், காதை பிடித்தபடி மன்னிப்பு யாசித்தான் நிர்மல் குமார்.
அவள் அப்போதும் பதில் பேசாமல் இருக்க. அவன் அவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான். மீண்டும் சாலையைக் கடக்கும் சமிஞ்சையை பார்த்தவள். இம்முறை அவன் கைகளையும் பற்றியிழுதப்படி சாலையை கடந்தாள்.
கடந்தவுடன் அவன் கைகளை விட்டிருக்க. அவன் கைகளைக் கட்டிக் கொண்டு உம்மென்று நின்றுவிட்டான்.
நடக்க ஆரம்பித்தவள். தன் பின்னோடு தம்பி வராததை உணர்ந்து, திரும்பி பார்த்தாள். சற்று நேரம் முன்பு அவள் நின்று கொண்டிருந்தது போலவே அவன் நின்று கொண்டு முகத்தை சுளித்தான்.
ம்ப்ச், ‘இவன் இருக்கானே’? என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள். வேகமாக அவனை நோக்கி வந்தாள்.
“இது நடு ரோடு டா தடியா. கன்னத்தை பிடிச்சு கொஞ்சுற? காது புடிச்சுக்கிட்டு நிக்குற?? பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?? உனக்கு அறிவு இருக்கா இல்லையா”? என்று தமக்கையாக திட்ட ஆரம்பித்து விட்டாள்.
“என்ன நினைப்பாங்க?? எனக்கு அறிவில்ல, நீ கொஞ்சம் கடன் கொடுத்துட்டு போ” என்று அவனும் தோரணையாக கூறினான்.
“எரும மாடு, வீட்டுக்கு வா. உனக்கு நைட்டுக்கு சாப்பாடு போட வேணாம்னு சொல்றேன்” கோபமாக பேசிவிட்டு அவள் முன்னாள் நடக்க ஆரம்பித்தாள்.
“அக்கா அக்கா” என்று கெஞ்சி கொண்டே அவள் பின்னோடு நாய் குட்டி போல நடக்க ஆரம்பித்தான் இருபத்தி மூன்று வயது காளையவன்.
பைகள் எல்லாம் அவள் கையிலிருக்க. அவள் கையில் இருந்து பைகளை தன் கைக்கு இடம் மாற்றிக் கொண்டான். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியில் அவள் ஏறி அமர. அவனும் அவள் பின்னோடு சென்று அமர்ந்துக் கொண்டான்.
“ஹெல்மெட்டை போட்டு தொலடா தடியா” என்றவளின் கோவமான பேச்சில், அவள் கொடுத்த ஹெல்மட்டையும் மாட்டிக் கொண்டான்.
“தோளை பிடி” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல அவள் கூறிக் கொண்டிருக்க. கையில் இருக்கும் பையை அவளுக்கு தூக்கி காட்டினான் இளையவன்.
வாகனத்தை நிறுத்தியவள். அவனை முறைத்து விட்டு, அதை வாங்கி ஸ்கூட்டியின் முன் புறமாக வைத்தவள். கண்களாலேயே தோள்களை பிடிக்கும் படி சமிஞ்சை செய்ய. தமக்கையின் தோள்களை பிடித்துக் கொண்டான்.
சாலையில் சென்று கொண்டிருக்கும் அழகான பெண்களை எல்லாம் அவன் சைட்டடித்துக் கொண்டு வர. பொறுமையாக, பொறுப்பாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றாள் மானசா.
தொகுப்பு வீடுகள் இருக்கும் அந்த சாலையில் நுழைந்தவள். மஞ்சள் வண்ண கேட்டருகே அவள் வாகனத்தை நிறுத்தினாள்.
அவன் அதிலிருந்து இறங்கி, கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். அவள் தன் வாகனத்தை எடுத்துச் சென்று அதன் இருப்பிடத்தில் நிறுத்தினாள்.
வீட்டினுள்ளே அவள் பைகளை எடுத்துக் கொண்டு நடக்க. அவனும் அவள் பின்னோடு வேகமாக நடந்தான்.
வாகன சத்தத்தில் வெளியே வந்த சிவமதி முறுக்கிக் கொண்டே செல்லும் தன் பிள்ளைகளை பார்த்து. இரு பக்கமும் தலையாட்டி விட்டு சென்று, அவர்கள் எதிரில் அமர்ந்தார்.
“அம்மா இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா?? இவன்” என்று அவள் ஆரம்பிக்க.
“அம்மா நடு ரோட்டில் திரும்பவும் அந்த ஞாபகம் வந்திருச்சு. நான் என்ன பண்றது? அதுக்காக அக்கா கோவப்பட்டாங்க. நான் அதை பொறுத்துக்கிட்டேன். ஆனா, இவங்க கோச்சிக்கிட்டாங்க. நான் என்ன பண்றது”? என்று அவளுக்கு முன்னால் புகார் வாசித்தான் இளையவன்.
“அம்மா நான் அதுக்காக கோச்சுக்கல. நடு ரோட்ல கன்னத்தை பிடித்து ஆட்டுறான். காதைப் பிடிச்சிட்டு நிக்குறான். பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?? இவனுக்கு எப்ப தான் பொறுப்பு வரப்போகுதுன்னு தெரியல?? தப்புன்னு சொன்னா ஏன் இவன் திருந்திக்க மாட்டேங்குறான்”? கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தாள் மானசா.
மானசா, நம் கதையின் நாயகி. இருப்பதி ஆறு வயது அழகு தேவதை அவள். பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் பேரழகுடையவள்.
“அப்படி என்ன நினைச்சுருவாங்களாம்?? அக்கா என்னை விட பார்க்க சின்னவளா தான் இருக்காங்க. அதுக்காக”?? என்று வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்தினான் நிர்மல்.
இளவரசனின் கம்பீரத்துடன் இருப்பவன். வசீகரமான புன்னகைக்கு சொந்தக்காரன். தன்னை சுற்றியும் அந்தப் புன்னகையை தக்க வைத்துக் கொள்பவன்.
“அவள் சொன்னா கேட்டுக்கோ. அதை விட்டுட்டு தேவையில்லாத பேச்சு பேசாத? உன் நல்லதுக்கு தானே அவள் சொல்வாள்”? என்று கேட்டார் சிவமதி.
இவர்களின் இந்த அழகே தன்னிடமிருந்து தான் வந்தது என்ற கர்வம் அவருக்கு எப்பொழுதும் உண்டு. அது உண்மையும் கூட.
“ரொம்ப அதிகமா கற்பனை பண்ண கூடாது. ஏன் அக்கா தங்கச்சியை எல்லாம் யாரும் கொஞ்ச கூடாதா?? தப்பா தான் பார்ப்பாங்களா என்ன?? ஒருவேளை அப்படி பார்த்தாங்கனா?? அது பார்க்கிறவங்களோட தப்பு. என்னுடையதில்லை. என் அக்காவுக்கு கல்யாணமாகி, குழந்தை பிறந்து, அவங்க பேரன் பேத்தி எடுத்தாலும், நான் என் அக்காவை இப்படித்தான் கொஞ்சுவேன்” என்று திடமாக கூறினான் நிர்மல்.
“அறிவு கெட்டவனே, உன்னை கொஞ்ச வேணாம்னு யாரும் சொல்லல. ஆனா நடு ரோட்டில் செய்யாதன்னு தான் சொன்னேன்” மீண்டும் சண்டைக்கு தயாராக நின்றாள் மானசா.
“நான் அப்படித்தான் பண்ணுவேன். எங்க அக்காவை நான் கொஞ்சுவேன். வீட்லையும் கொஞ்சுவேன். நடு ரோட்டுலையும் கொஞ்சுவேன். அது என்னோட இஷ்டம்” என்று பேசினான் நிர்மல்..
“பாத்தீங்களாம்மா, அவன் எப்படி பேசுறான்னு”? என்றாள் மானசா
நிர்மல் வக்கலம் காட்டினான்.
இவர்கள் இரண்டு பேர் சண்டையில், எப்பொழுதும் போல சிவமதி தலையில் கையை வைத்துக் கொண்டார்.
“போங்க, எப்படியோ போங்க” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
இரண்டு தளங்களைக் கொண்ட அந்த டூப்ளெக்ஸ் வீட்டில், கீழ்த்தளத்திலிருந்து மேலே செல்லும் மாடிப்படிகளில் மானசா வேகமாக ஏற ஆரம்பித்து விட்டாள்..
“அவள் மேல உயிரையே வச்சிருக்க. அப்புறம் எதுக்குடா அவள் பேசுறது ஒவ்வொன்னுத்துலையும் விதண்டாவாதம் பண்ற”? என்று கேட்டார் சிவமதி.
“எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டா? ரொம்ப போரடிக்கும் அம்மா. உங்களுக்கும் ஒரு என்டர்டைன்மென்ட் வேணாமா? ஆனா இந்த வாட்டி என் மேல தப்பு இல்லைன்னு தான் தோணுது. என் அக்காவை நான் கொஞ்சினேன். அதுல என்னாகிட போகுது”? என்றவன் மீண்டும் கேட்க.
“நீ திருந்த மாட்ட” என்று கூறிவிட்டு அவரும் அடுக்கலைக்குள் சென்று விட்டார்.
“அப்படி என்ன பண்ணிட்டேன் திருந்துறதுக்கு”?? என்று வாய்விட்டு சொன்னவனுக்கு, அந்த சொற்ப நொடிகளில் அவன் மணக்கண்ணில் மின்னி மறைந்த ஆண் மகனின் முகம் தான் எழுந்து நின்றது.
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான்.
‘இப்படி அடிக்கடி வர்ற முகம் ஒரு பொண்ணு முகமா இருந்தால் கூட பரவாயில்லை?? ஆம்பள முகமா இருக்கே?? நம்ம ஹார்மோனை கொஞ்சம் செக் பண்ணனும்னு நினைக்கிறேன்’?? என்று நினைத்தபடி தலையை உலுக்கிக்கொண்டான்.
யார் அவன்?? எதற்காக நிர்மலின் மனக்கண்ணில் அடிக்கடி வருகிறான்?? அதுவும் இக்கட்டான சூழ்நிலையில் அவன் வருவதற்கான காரணம் என்ன?? இதை அவனே அறியவில்லை.
ஆனால் காலம் அவனுக்கு அறிய வைக்க காத்திருக்கிறது. அதுவும் இன்னும் சொற்ப நாட்களில்.
……….
டால்பின்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த அந்த டைல்ஸ் சுவரில் தன் இரண்டு புஜங்களையும் அழுந்த பற்றியபடி கண்களை மூடி நின்று கொண்டிருந்தான் அவன்.
சாரல் மழைத்துளியைப் போல ஷவரிலிருந்து நீர் துளிகள் அந்த ஆறடி ஆண் மகனின் முதுகை வேகமாக நனைத்து கொண்டிருந்தது. தலையை சற்று குனிந்தபடி சாய்ந்து நின்று எதையோ யோசித்துக் கொண்டிருந்தவனின் தலையை அது பாதித்திருக்கவில்லை.
சற்று நிதானப்பட்டவன். தலையை தண்ணீருக்கடியில் கண்களை மூடியபடி உயர்த்தினான்.
நிழல் உருவமாக யாரோ கதறிக் கொண்டிருப்பது தெரிந்தது. அதுவும் அவனுக்கு சம்பந்தம் இல்லாத பெயரை சொல்லி. எந்த உருவங்களும் அவனுக்குத் தெளிவில்லாமல் ஒரு நெகட்டிவ் போல காட்சியளித்துக் கொண்டிருக்க. அதற்கான விடை தெரியாமல் அவனும் தன்னை நிதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான்.
குளியலறை தட்டும் சத்தம் கேட்டு அவன் ஷவரை ஹாப் செய்ய.
“தேஜா” என்று அவனின் பெயரின் பாதிச்சுருக்கத்தை சொல்லி அழைத்துக் கொண்டிருந்தது அவனுடைய தாயார் காவியா தான்.
தாயின் குரலுக்கு உடனே செவி சாய்த்தவன். அங்கிருந்த பாத்ரோப்பை எடுத்து உடுத்தியபடி ஈரம் சொட்ட சொட்ட கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றான் ‘தேஜா’ என்று அழைக்கப்படும் சாய் தேஜா.
(இந்த சாய் தேஜா என்ற பெயருக்கு பதிலா, தேஜா கூட வேற ஏதாவது பெயரை சொல்லுங்க. கதைக்கு பொருத்தமா இருந்தா மாத்திக்கலாம்)