பத்து வருடங்களுக்கு முன்பு.…
அன்று குமாரின் இறந்த சடலத்தைப் பார்த்த பின்பு, ரூபா முழுமையாகத் தன் மனநிலையை இழந்தாள். இவ்வளவு துரோகங்கள் நடந்த பின்பும், ஹர்ஷத் ரூபாவை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்த்து இறுதிவரை அன்போடு நல்ல முறையிலேயே கவனித்துக் கொண்டான். அதற்கு அவனது மனமுதிர்ச்சியான பதில் இதுதான்.
“சில சமயங்கள்ல காதல் ரொம்ப முட்டாள்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும் நிறைந்ததா இருக்கும். இந்த ரூபா குமார் மேல வச்சிருந்த கள்ளக்காதல் அவளை ஒரு கொடூரமான கொலைகாரியா, மூர்க்கத்தனமா மாத்துச்சு. ஆனா, நான் ரூபா மேல வைத்திருந்த உண்மையான காதல் என்னை ஒரு முட்டாளாகவே மாத்திடுச்சு. இப்போ அவ மனநிலை மாறிப் போயிருந்தாலும், அவளை என்னால யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது” என்றான்.
அன்று அந்தப் பழைய வீட்டில் நடந்த கொடூரச் சம்பவம், அங்கு இருந்த அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் ஹர்ஷத் மற்றும் ராபர்ட்டின் செல்வாக்கால் மூடி மறைக்கப்பட்டது. போலீசாரைப் பொறுத்தவரையில், பழைய குடும்பப் பகையின் காரணமாகவே குமார் ரத்னாவைக் கடத்தியதாகவும், ரத்னாவைக் காக்கச் சென்ற இடத்தில் ரூபா தற்காப்பிற்காகக் குமாரைக் கொலை செய்ததாகவும், அப்பொழுது தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் ரூபா மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் வழக்கு பதிவாகி முடிந்தது.
அந்தச் சம்பவம் நடந்து ஒரு வருடத்திலேயே ரூபா மனநலக் காப்பகத்திலேயே தற்கொலை செய்து கொள்ள, அவளது இறுதிச்சடங்கில் ஒருவித இறுக்கமான மனநிலையுடனே அனைவரும் கலந்து கொண்டனர். என்னதான் ரூபாவின் கொடூரமான சுயரூபத்தை அறிந்து வைத்திருந்தாலும், அவளது மரணத்தை ரத்னா, தங்கவேலு மற்றும் ஹர்ஷத்தால் எளிதில் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து, அனைவரும் ஓரளவு தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். மறந்தும் அந்தப் பழைய கசப்பான பிரச்சினைகளைப் பற்றித் தங்களுக்குள் யாரும் பேசிக்கொள்வதில்லை.
இப்பொழுதெல்லாம் ஆர்த்தி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்தமானவளாக மாறிப் போனாள். அதற்காகத் தன் மாடர்ன் (Modern) குணத்தை அவள் மாற்றிக் கொண்டாள் என்று இல்லை; தன் அடிப்படை சுபாவத்தை மாற்றாமல், குடும்பத்தில் உள்ள அனைவரையும் மதித்து, அவர்களின் அன்பை ஏற்றுத் தானும் ஈர்த்தாள் என்பதே உண்மை.
கிருஷ்ணசந்திரன் தன் மூத்த மகள் அர்ச்சனாவிற்குத் திருமண விஷயத்தில் முழு சுதந்திரம் தர, அர்ச்சனாவோ, “தன் தந்தை காட்டும் நல்ல நபரை மட்டுமே நான் திருமணம் செய்து கொள்வேன்” என்று உறுதியாகக் கூறிவிட்டாள். அர்ச்சனாவிற்கு மூன்று வருடங்களுக்கு முன்புதான் புகழ்பெற்ற டாக்டர் ராம் பிரசாத்துடன் திருமணம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. இப்பொழுது அர்ச்சனாவிற்கு ஒன்றரை வயதில் சூர்ய பிரகாஷ் என்ற ஒரு அழகான மகன் இருக்கின்றான்.
குளியலறையை விட்டு வெளியே வந்த ரத்னாவை, மெதுவாகப் பால்கனிக்கு அழைத்து வந்தான் அஜீத். “ரத்னா, நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லுவேன், நீ கோபப்படக் கூடாது சரியா?” என்றான் ஒரு பில்டப்புடன்.
அஜீத் கொடுத்த பில்டப்பிலேயே, அவன் கூறப் போகின்ற விஷயம் தனக்குக் கண்டிப்புடன் கோபத்தைத் தரக்கூடியது என்பதைப் புரிந்துகொண்ட ரத்னா, “முதல்ல நீங்க விஷயத்தைச் சொல்லுங்க அத்தான். அதுக்கப்புறம் நான் கோபப்படணுமா வேண்டாமா என்று நானே முடிவு பண்றேன்” என்றாள் கைகளைக் கட்டிக்கொண்டு.
“அது வந்து… எனக்கு அரசாங்கத்துல இருந்து மறுபடியும் டிரான்ஸ்பர் ஆர்டர் கிடைச்சிருக்குடா. இந்தத் தடவை மதுரைக்கு!” என அஜீத் கூறி முடிப்பதற்குள், பொறுமை இழந்த ரத்னா கத்தினாள்.
“உங்களால ஒரு ஊர்ல உருப்படியா ஒரு வருஷம் கூட இருக்க முடியாதா அத்தான்? நானும் பார்த்துட்டே இருக்கிறேன், இத்தோட ஆறு ஊருக்கு மாறிட்டீங்க! நானும் நீங்க இருக்கிற இடத்துக்கு என் கோர்ட் பிராக்டிஸை மாத்தி வர முயற்சி பண்றதுக்கு முன்னாடி, நீங்க கையில அடுத்த டிரான்ஸ்பர் லெட்டரோடு வந்து நிக்குறீங்க. இப்போ அர்ஜுன அடுத்த க்ளாஸ் சேர்க்கணும், இன்னும் மூணு மாசத்துல பாப்பாவை எல்கேஜில சேர்க்கணும். அப்போ நீங்க போற இடத்துக்கு எல்லாம் நாங்க ஸ்கூல் பேக்கைத் தூக்கிட்டுப் பின்னாடியே வரணுமா?” என்றாள் ஆதங்கத்துடன்.
“என்ன ரத்னா இது? நான் என்ன வேணுமனா டிரான்ஸ்பர் கேட்டு வாங்கிட்டு இருக்கேன்? உங்க புருஷனோட நேர்மையையும் திறமையையும் பார்த்து, ஒவ்வொரு மாவட்டத்து மக்களும் ‘எங்க ஊருக்கு கலெக்டரா வாங்க’ன்னு கூப்பிடுறாங்க. மக்கள் கோரிக்கையை மறுக்க முடியாத நம்ம அரசாங்கமும், ‘நீங்க கொஞ்ச நாள் அந்த ஊர்ல போய்ப் பணியாற்றிட்டு வாங்க’ன்னு என்னை அனுப்பி வைக்குது. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்றான் பாவமாக முகம் வைத்து.
“இப்படி எல்லாம் பாவம் போல மூஞ்சை வச்சுக்கிட்டு சொன்னா நான் ஏமாந்துடுவேனா? நிஜத்தைச் சொல்லுங்க, எதுக்காக உங்களுக்கு இந்தத் தடவை திடீர் டிரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க?”
“வழக்கமான அரசியல் அழுத்தம்தான்டா. இன்னும் கொஞ்ச நாள்ல எலக்ஷன் வரப்போகுது. சோ, நான் நேர்மையா அங்க இருந்தா சில அரசியல்வாதிகளுக்குப் பிரச்சினை. அதான் என்னை மதுரைக்குத் தூக்கியடிச்சிருக்காங்க. ஆனா எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லைடா. மதுரை டு கோயம்புத்தூர் ரொம்பப் பக்கம்.
நீ வெள்ளிக்கிழமை கோர்ட் முடிஞ்சதும் நேரா கார்ல கிளம்பினா, நைட்டு சீக்கிரமா மதுரைக்கு வந்துடலாம். அப்புறம் திங்கட்கிழமை காலையில கோயம்புத்தூருக்குக் கிளம்பினால் போதும்” என்றான் திட்டமிட்டு.
“அடடா… என்ன ஒரு அருமையான பிளான்! ஐயா என்னை பார்க்க மதுரைக்கு வர மாட்டீங்களாம், நான்தான் உங்களைப் பார்க்கக் கோயம்புத்தூர் டு மதுரை அலைஞ்சு போயிட்டு வரணுமா?”
“ரத்னா, ப்ளீஸ் செல்லம்… புரிஞ்சுக்கோடா” என அவளது தோள்களைப் பற்றினான்.
“புரியுது அத்தான். இருந்தாலும் எனக்கு எப்போதும் உங்க கூடவே இருக்கணும் போலத் தோணுது. நம்ம காலேஜ் டேஸ்ல மோஸ்ட்லி நீங்க என் கூடவேதான் இருந்தீங்க. ஆனா இப்போ நீங்க ஒரு இடத்துல, நான் ஒரு இடத்துல இருக்க வேண்டியதா இருக்கு” என்றாள் ரத்னா வருத்தமாக.
“எனக்கு மட்டும் இதுல வருத்தமா இல்லையாடா? அதனாலதான் இந்தத் தடவை நமக்காக ஒரு அதிரடி முடிவு எடுத்துட்டுத்தான் இங்க வந்திருக்கேன்” என்றான் அஜீத் புன்னகையுடன்.
“என்ன முடிவு?”
“நீ இந்தத் தடவை கோயம்புத்தூர்லயே இருக்கப் போறது இல்லை, பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு மதுரைக்கு என் கூடவே வர்ற! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அங்க வீடு செட் பண்ணலாம்” என்றான்.
ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த ரத்னா, அடுத்த நிமிடம் யோசனையுடன், “அப்போ அர்ஜுன், ஆரு படிப்பு…?” என்றாள்
.
“அடியே! அவன் என்ன ஐஏஎஸ் படிப்பா படிக்கிறான்? அவன் படிக்கிறத இங்க படிச்சா என்ன, மதுரையில படிச்சா என்ன? எல்லாமே ஒன்னுதான். சரி சரி… முறைக்காதே! அடுத்த வாரம் நாம மதுரையில இருக்கணும். அதுவரைக்கும் இங்க இருக்குற வரை உங்க அத்தானைக் கொஞ்சம் நல்லாக் கவனி” என்றான் கண்ணசைவில்.
“அத்தானே! உங்களை மதுரையில போய் கவனிச்சுக்கிறேன். முதல்ல கிளம்புங்க, நாளைக்குக் காலைல நம்ம பிரபுவுக்குக் கல்யாணம்! நாம இன்னைக்கு நைட்டே ரிசப்ஷனுக்கு அங்க போகணும், சீக்கிரம் கிளம்புங்க” என அவனைத் துரிதப்படுத்தினாள்.
அன்று இரவு, நகரின் முக்கிய இடத்தில் இருந்த அந்தப் பிரம்மாண்டமான திருமண மண்டபம் நண்பர்களாலும் உறவினர்களாலும் நிரம்பி வழிந்தது. மேடையில் மணமகன் உடையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த பிரபு, தனது பக்கத்தில் மணப்பெண் உடையில் அமர்ந்திருந்த அபிராமியைத் தன் காதல் பார்வைகளால் விழுங்கிக் கொண்டிருந்தான்.
அபிராமி பிரபுவின் தூரத்து முறைப்பெண். சிறுவயதிலிருந்தே அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் பின்னாலேயே ஜொள்ளு விட்டுக் கொண்டு திரிந்தவன், இப்போது சும்மாவா இருப்பான்? நாளை அதிகாலையில் தன் மனைவியாக வரப் போகிறவளை முழு உரிமையுடன் மேடையிலேயே சைட் அடித்துக் கொண்டிருந்தான். பிரபுவின் ஆசைப் பார்வையை உணர்ந்து, தலை நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டு, வெட்கத்தால் அபிராமி முகம் சிவந்து தலை குனிந்து நின்றாள்.
சுற்றியிருந்த கல்லூரி நண்பர்கள் அனைவரும் பிரபுவைக் கேலி செய்ய, பிரபு எதையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையைத் தொடர்ந்து செய்தான். பிரபுவின் அருகில் மாப்பிள்ளைத் தோழனாக அஜீத்தும், அவனுடன் கோட்-சூட் அணிந்து அர்ஜுனும் நிற்க, அபிராமியின் மணப்பெண் தோழியாகப் பட்டுப்புடவையில் ரத்னாவும், அவளருகில் ஆராதனாவும் நின்று கொண்டிருந்தனர்.
நண்பர்கள் ஒவ்வொருவராகப் பரிசைக் கொடுத்துக் கீழே செல்ல, அப்பொழுது ஸ்டெல்லா தனது கணவன் டேனியல் மற்றும் தனது ஒரு வயது பெண் குழந்தை பிரின்சியுடன் மேடைக்கு வந்தாள். அவளது முகம் இப்போது அமைதியாகவும் நிறைவாகவும் இருந்தது.
மணமக்களை வாழ்த்திப் பரிசளித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கும் பொழுது, அவள் ரத்னாவை ஒரு நிமிடம் நேருக்கு நேராகப் பார்த்து, தன் கடந்தகாலத் தவறுகளுக்காக “சாரி” என்று உதட்டசைவில் மட்டும் கூறிவிட்டு, கணவன் மற்றும் தன் மகளுடன் கைகோர்த்து மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.
அன்று தன் பேச்சைக் கேட்காமல் தந்தை ராபர்ட் ரத்னாவுக்கு உதவச் சென்றதால் கோபம்கொண்ட ஸ்டெல்லா, கத்தியால் தன் கைகளைக் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாள். ஆனால், சரியான நேரத்தில் வீட்டின் வேலையாட்கள் பார்த்து மருத்துவமனையில் சேர்த்ததால் அவள் உயிர் பிழைத்தாள்.
அதன் பிறகு வந்த நாட்களில் ராபர்ட் தன் தொழிலை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தன் மகள் அருகிலேயே எப்போதும் இருந்து அவளைப் பாசத்துடன் கவனித்துக் கொள்ள, ஸ்டெல்லா மனதில் அஜீத்திற்காக இருந்த வக்ரமான ஆசை இடம் தெரியாமல் காணாமல் போனது.
பின்பு தான் செய்த துரோகங்களை எண்ணி ஸ்டெல்லா மனதார வருந்தினாலும், மன்னிப்பு கேட்பதற்காகக் கூட மீண்டும் அஜீத்-ரத்னா வாழ்வில் குறுக்கிட அவள் விரும்பவில்லை.
ஸ்டெல்லா படித்து முடித்ததும் வேலைக்குச் செல்ல விரும்பியபோது, ராபர்ட் அவளுக்காக ஒரு கம்பெனியையே விலைக்கு வாங்கத் தயாராக இருந்தார். ஆனால், அவளோ அதை மறுத்துவிட்டு, தன் சொந்தக் காலில் நிற்க ஒரு தனியார் நிறுவனத்தில் சாதாரணப் பணியில் சேர்ந்தாள். அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் மகன்தான் டேனியல்.
நாட்கள் செல்ல இருவரின் இடையிலும் நல்ல காதல் மலர்ந்தது. ஸ்டெல்லா தன் வாழ்வில் நடந்த கடந்தகால கசப்பான சம்பவங்கள் எதையும் டேனியலிடம் மறைக்கவில்லை. அனைத்தையும் புரிந்து கொண்டு, அவளது நேர்மையைப் பாராட்டி ஸ்டெல்லாவை முழுமனதுடன் டேனியல் ஏற்றுக்கொண்டான். இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நல்லபடி நடந்தேறியது.
மண்டபத்தை விட்டுச் சென்ற ஸ்டெல்லாவை விழி அகற்றாமல் ரத்னா பார்த்துக் கொண்டிருக்க, அவளது மனதில் கடந்தகால நினைவுகள் வந்து சென்றன. ஸ்டெல்லா வந்து சென்றதும் ரத்னா மற்றும் அஜீத்தின் முகத்தில் ஏற்பட்ட லேசான மாற்றத்தைக் கவனித்த விபரம் தெரிந்த பிரபு, அருகில் இருந்த தன் மற்ற நண்பர்களிடம் வம்பை இழுத்தான்.
“டேய் போதும்டா! என்னை எவ்வளவு நேரம்தான் கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பீங்க? உங்களுக்கு இந்த அஜீத்தோட பழைய லவ் ஸ்டோரி தெரியுமா?” எனப் பிரபு கூற, அதில் ஆர்வமாகி மற்ற நண்பர்கள் அனைவரும் அவர்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினர். அனைவரின் முகத்தில் இருந்த உற்சாகம் அஜீத் மற்றும் ரத்னாவின் கவனத்தைப் பிரபுவின் பக்கம் திருப்பியது.
“ஒரு நாள் இவங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிட்டல்ல சீரியஸா பேசிக்கிட்டு இருக்கிறதை நான் பார்த்தேன். அப்போ நான் என்ன நினைச்சேன் தெரியுமா மச்சி…?” என ராகம் போட்டு பிரபு பேச, அருகில் இருந்த நண்பர்கள்
“என்ன நெனச்ச, அதைச் சொல்லுடா?” என்றனர் ஆர்வமாக.
“இவன் போற வேகத்தைப் பார்த்தா, நாலு வருச படிப்பு முடிஞ்சு பட்டம் வாங்குறதுக்கு முன்னாடியே கல்யாணத்தையே முடிச்சிடுவான்னு நினைச்சேன். இவனும் அதே மாதிரி பட்டம் வாங்கி வேலைக்கு, அதாவது ஐஏஎஸ் ஆகுறதுக்கு முன்னாடியே ரத்னாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதுமட்டுமா…”
“வேற என்னடா விசேஷம், சொல்லு?” என ஆர்வமாகக் கதையில் ஒன்றி மற்றவர்கள் கேட்க, பிரபு அஜீத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.
“ஆத்தா… நான் ஐஏஎஸ் ஆயிட்டேன் அப்படின்னு வந்து சொல்லுவான்னு பார்த்தா, இவன் ‘நான் அப்பாவாகிட்டேன்’னு வந்து சொல்றான்டா!” எனப் பிரபு கூற, கூடியிருந்த நண்பர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கலகலவென மகா ஜோராகச் சிரித்தனர். ரத்னா வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
“அவ்வளவுதானா? வேற எதுவும் சீக்ரெட் இருக்கா பிரபு?” என அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மணப்பெண் அபிராமி கேட்க, பிரபு ஒரு நிமிடம் அபிராமியைக் காதலாகப் பார்த்தான்.
அருகில் இருந்த நண்பர்கள், “டேய் மாப்பிள்ளை, கதையை முழுசா சொல்லி முடிடா!” என்றனர்.
“உங்களை எல்லாம் வச்சுக்கிட்டு நிம்மதியா என் ஆசைப் பொண்ணைச் சைட் கூட அடிக்க விட மாட்டீங்களேடா! சொல்றேன் கேளுங்க… சார் அப்போ சப்-கலெக்டராக இருந்தார். அவருக்கு அப்புறம் கலெக்டர் புரமோஷன் கிடைச்சது. அதுக்காக நான் வாழ்த்து சொல்ல அவங்க வீட்டுக்கு போனேன். அப்பதான் தெரிஞ்சது, இன்னும் ஆறு மாசத்துல நம்ம ஆராதனா பாப்பா உலகத்துக்கு வரப்போறான்னு!” எனப் பிரபு கூறி முடிக்க, அருகில் இருந்த அஜீத் அவனது முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்து,
“இதுல உனக்கு ரொம்ப வருத்தம் போல!” என்றான் சிரிப்புடன்.
“வருத்தம் எல்லாம் ஒன்னுமில்லை மச்சி. நானும் இதோ பக்கத்துல இருக்காளே அபிராமி, இவளைப் பத்தாவது படிக்கும்போதுல இருந்து சின்சியரா லவ் பண்றேன். ஆனா எங்க வீட்டுல உள்ளவங்க அதை இப்போ புரிஞ்சுகிட்டு எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கவே இத்தனை வருஷம் ஆகியிருக்கு. அதை நினைச்சாதான் மச்சி எனக்குக் கொஞ்சம் ஃபீலிங்ஸ்.” என்றான் பிரபு.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ரத்னா, இப்போதைக்கு பிரபு தன் பேச்சை நிறுத்தப் போவதில்லை என்பதை உணர்ந்து, “டேய் பிரபு! இந்த வயசுல ஓவர் ஃபீலிங்ஸ் உடம்புக்கு ஆகாதுடா” என்றாள் கிண்டலாக.
“ரத்னா! இன்னைக்கு நான்தான் இந்த மண்டபத்துக்கே மாப்பிள்ளை. அதனால நீ என்னை ‘அண்ணே’ன்னு மரியாதையா கூப்பிடணும், அதை நல்லா ஞாபகம் வச்சுக்கோ” என்றான் பிரபு கெத்தாக.
“ஓ… நல்லா ஞாபகம் வச்சிருக்கேனே பிரபு! எனக்கு இப்போ என்ன ஞாபகம் வருதுன்னா… நாம ஃபைனல் இயர் படிக்கும்போது, ஃபர்ஸ்ட் இயர் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் மீரா பின்னாடி நீ ஜொள்ளு விட்டுக்கிட்டு சுத்துனியே, அதுதானே? அந்த மீரா அதோ அங்க ரிசப்ஷனுக்கு வர்றா பாரு!” என ரத்னா இல்லாத ஒன்றை மேடையைக் காட்டிப் பொய் கூற, அதுவரை வெட்கப்பட்டுச் சிவந்திருந்த அபிராமியின் முகம், சட்டென்று கோபத்தால் அனலாகச் சிவந்தது!
“அபிராமி… அவ சும்மா பொய் சொல்றாடா, நான் யாரையும் பார்க்கல” என அலறிய பிரபு, பல்வேறு வழிகளில் அரும்பாடுபட்டு உருகி உருகி முயன்று அபிராமியைச் சமாதானம் செய்தான்.
அடுத்த நாள் காலை, மங்கள வாத்தியங்கள் முழங்க, சுற்றமும் நட்பும் வாழ்த்த, அபிராமியின் கழுத்தில் பிரபு மூன்று முடிச்சுகளிட்டு மங்கள நாண் பூட்டி, அவளைத் தன் வாழ்வின் சரிபாதியாக்கிக் கொண்டான். இப்போது அபிராமியின் முகத்தில் இருந்த கோபம் முற்றிலும் மறைந்து, திருமணப் பெண்ணிற்கே உரிய வெட்கம் மட்டுமே நிரந்தரமாக நிலைத்திருந்தது.
திருமணச் சடங்குகள் அனைத்தும் இனிதே முடிந்து இரவு வீடு வந்து சேர்ந்ததும், மைதிலி பேரப்பிள்ளைகள் இருவரையும் தங்களின் அறைக்கு அழைத்துச் சென்று, “இன்னைக்கு அச்சுவும் ஆருவும் எங்க கூடவே தூங்கட்டும்” என்று கூறி அழைத்துச் சென்றுவிட, ரத்னா நிம்மதியாகத் தங்களது அறைக்குள் நுழைந்தாள்.
ரத்னா உள்ளே வந்ததும், கதவின் பின்னால் மறைந்திருந்த அஜீத் அவளது கையைப் பற்றித் தன்பக்கம் இழுக்க, அவனது மார்பில் பூவென விழுந்தவளைத் தன் கைகளுக்குள் இறுக அணைத்துக் கொண்டான் அஜீத். அவள் காதுகளில் மெதுவாக,
“ரத்னா… ஆர் யூ ஹேப்பி?” எனக் கேட்க, அவனது அணைப்பிலிருந்து செல்லமாக விலகி எழுந்த ரத்னா,
“அதை நீங்க இன்னும் ரெண்டு பிள்ளைங்க பெத்ததுக்கு அப்புறம் என்கிட்ட கேட்டுருக்கலாம் மிஸ்டர் கலெக்டர்!” என்றாள் குறும்புடன்.
“ஓகே!” என ஒற்றை வார்த்தையில் அஜீத் புன்னகையுடன் பதிலளிக்க,
“என்ன ஓகே?” எனப் புரியாமல் கேட்டாள் ரத்னா.
“இன்னும் ரெண்டு பிள்ளைங்க பெத்துக்க எனக்கு முழு சம்மதம், ஓகே!” எனக் கூறி, ரத்னாவைத் தப்பவிடாமல் மீண்டும் தன் முழுமையான காதல் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான் அஜீத்.
இனி அஜீத் சந்திரன் மற்றும் ரத்னாவதி வாழ்க்கையில் என்றும் மாறாத மகிழ்ச்சியும் காதலும் மட்டுமே பேரன்பாக நிலைத்திருக்கும்! இருவரும் தங்கள் குழந்தைகளுடன் நீடூழி வாழ வாழ்த்தி விடைபெறுவோம்.
**♥-♥-♥-♥-♥- முற்றும் -♥-♥-♥-♥-♥**