உன் நிழல் நான் தொட ep 28 (final 1)

இறுதி அத்தியாயம் & எப்பிலாக் 

பத்து வருடங்களுக்குப் பின்பு…

“இன்றைய சமுதாயத்தில், தனக்குப் பிடிக்காத கணவரைப் பழிவாங்கவும் தண்டிக்கவும் சில பெண்கள் தவறான புகார்களை அளித்து, பிரிவு 498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தைத் தவறான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அதையேதான் எனது கட்சிக்காரர் சேகரின் மனைவி மீனாட்சியும் இங்கே செய்திருக்கிறார்.

ஆண் என்பவன் எப்போதும் பெண்ணைக் கொடுமைப்படுத்துபவனாகவும், அடக்கி ஆள்பவனாகவும் மட்டுமே சித்திரிக்கப்படுவதுதான் இத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகள் பெருகி வருவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இன்று தாங்கள் வழங்கப்போகின்ற தீர்ப்பு, எனது கட்சிக்காரர் சேகருக்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடக்கும் அனைத்து ஆண்களுக்கும் ஒரு விடிவெள்ளியாக, ஆதரவான தீர்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!” எனத் தனது நீண்ட, நெத்தியடி வாதத்தை முடித்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள் வழக்கறிஞர் ரத்னாவதி.

பொறியியல் படிப்பை முடித்திருந்த ரத்னா, சட்டம் பயிலப் போவதாகக் கூறியபோது, ‘இது வேண்டாம்’ என முதலில் தடுத்த குடும்பத்தினரும், அவளது அசாத்திய விருப்பத்தை உணர்ந்து பின்பு அவளுக்கு வழிவிட்டு ஆதரவாக நின்றனர். படிப்பு முடிந்து சில வருடங்கள் ஒரு புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பயிற்சி பெற்றவள், இந்த வருடம்தான் தனியாக வாதாட ஆரம்பித்திருக்கின்றாள். அவளது முதல் முக்கிய வழக்கே இதுதான்!

அனைத்துச் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் தீர ஆராய்ந்து பார்த்த நீதிபதி தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்:

“சாட்சியங்களையும் ஆதாரங்களையும் வைத்துப் பார்க்கும் பொழுது, குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சேகர் தன் மனைவியை வரதட்சணை கேட்டு எந்தவிதக் கொடுமையும் செய்யவில்லை என்பதும், கொலை முயற்சி செய்யவில்லை என்பதும் நீதிமன்றத்திற்குத் தெளிவாகின்றது. எனவே, அவரைச் நிரபராதி எனத் தீர்ப்பளித்து இந்த நீதிமன்றம் இந்த நிமிடமே விடுதலை செய்கிறது. மேலும், சேகர் மீது வன்மத்துடன் பொய்க் குற்றம் சுமத்திய அவரது மனைவி मीனாட்சியையும், அதற்குத் தூண்டுகோலாக இருந்த அவரது தாயார் சௌந்தரவல்லியையும் இந்த நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த வழக்கை மிகத் திறமையாக வாதாடி, மறைக்கப்பட்ட உண்மையை நீதிமன்றத்தின் முன் நிரூபித்த இளம் வழக்கறிஞர் ரத்னாவதியை இந்த நீதிமன்றம் மனதாரப் பாராட்டுகிறது. வரதட்சணை தடுப்புச் சட்டம் என்பது பெண்களை வன்கொடுமையிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தானே தவிர, ஆண்களைப் பழிவாங்கும் நோக்கில் பிரச்சினையில் சிக்க வைப்பதற்காக அல்ல. ஆனால், இன்றைய காலகட்டத்தில் சில பெண்கள் இந்தச் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆண்களுக்கு எதிரான இத்தகைய தவறான புகார்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது, அடிப்படை மனித உரிமைகளை மீறுவதால் இது ஒரு தீவிரமான பிரச்சினையாகக் கருதப்பட வேண்டும். பெண்கள் தங்களின் சட்டவிரோத கோரிக்கைகளை நிறைவேற்றச் சட்டத்தின் விதிகளை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, இனிமேல் இது போன்ற குடும்ப வன்முறை வழக்குகளைக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்கு முன்பு, தீர விசாரித்து, உண்மைத் தன்மையை அறிந்த பின்பே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது.”

வழக்கு நல்லபடியாக முடிந்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ரத்னாவை, மீடியாக்கள் சூழ்ந்துகொண்டன. இடைவெளியில்லாமல் பல்வேறு கேள்விகளால் செய்தியாளர்கள் ரத்னாவைத் துளைத்தெடுக்க, அவளோ சற்றுப் பொறுமையாகவே புன்னகையுடன் அனைவருக்கும் பதிலளித்தாள்.

“மேடம், நீங்களும் ஒரு பெண்ணா இருக்கிறீங்க, அப்படி இருக்கும்போது ஒரு ஆணுக்கு ஆதரவாக இந்த வழக்கில் வாதாட எப்படி ஒத்துக்கொண்டீர்கள்?” என ஒரு நிருபர் மைக் நீட்டினார்.

“நான் என்னைக்கும் ஆண்களைப் பெண்களின் எதிரியாக நினைத்ததே இல்லை. அதனால்தான் என்னால இந்த வழக்கில் ஒரு ஆணுக்குச் சாதகமாக, நியாயத்தின் பக்கம் நின்று வாதாட முடிந்தது. அதுமட்டுமில்லாமல், நான் சட்டம் படித்தது நீதியைக் காப்பாற்ற! அப்படி இருக்கும் பொழுது தவறு செய்தவர் யாராக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர் ஆண், பெண் என யாராக இருந்தாலும் எனக்கு நீதி ஒன்றுதான்” என்றாள் தீர்க்கமாக.

“இந்த வழக்கின் வெற்றி மூலமா மக்களுக்கு நீங்க சொல்லக் கூடிய கருத்து ஏதாவது இருக்கா மேடம்?”

“நிச்சயமாக! ஆண்கள் எல்லோரும் பெண்களுக்கு எதிரானவர்கள் இல்லை, எதிரிகளும் இல்லை. இன்று பெண்கள் சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் வெற்றி பெறுவதற்குப் பல சமயங்களில் அவர்களின் பின்னால் ஆண்கள்தான் உறுதுணையாக இருந்து வராங்க. அப்படி இருக்கும் பொழுது, பெண்களின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்ட ஒரு சட்டத்தை, ஆண்களுக்கு எதிராகப் பழிவாங்கும் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது” என்றாள்.

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தகுந்த பதிலை அளித்துவிட்டு, நீண்ட நேரம் தாமதமாக வீட்டிற்கு வந்த ரத்னாவை எதிர்கொண்டு வரவேற்றாள், முகத்தில் புன்னகையோடு நின்ற ரத்னாவின் மாமியார் மைதிலி.

“ரத்னா, இன்னைக்கு கோர்ட்ல கேஸ் நல்லபடியா முடிஞ்சுதாமா?” என மைதிலி ஆசையாக ரத்னாவிடம் விசாரித்துக் கொண்டிருக்க, அங்கே வந்த கிருஷ்ணசந்திரன் மனைவியைக் கண்டித்தார்.

“மைதிலி! மருமகள் இப்பதான் கோர்ட்ல இருந்து கலைப்பாக வீட்டுக்குள்ள வர்றா. வந்ததும் வராததுமா உன்னுடைய விசாரணையை ஆரம்பிச்சிடுவியா? இப்பதானே வீட்டுக்குள்ள வந்திருக்கா, அவளுக்குக் குடிக்கத் தண்ணியும் சாப்பிட ஏதாவது பலகாரமும் கொடு. அதுக்கப்புறம் பொறுமையா நீ கேட்கலாம்” என்றார்.

“இருக்கட்டும் மாமா. அத்தை ஆர்வமாக என்கிட்ட கேட்கும்போது பதில் சொல்லாமல் வேற எதையும் என்னால செய்ய முடியாது” என்று சந்திரன் மாமாவிடம் கூறிவிட்டு, தனது அத்தையிடம் திரும்பினாள். “உங்க மருமகள் ஜெயிச்சிட்டேன் அத்தை! இப்போ உங்களுக்குச் சந்தோஷமா?” என்றாள்.

சந்தோஷத்தில் தன் மருமகளைக் கட்டியணைத்துக் கொண்ட மைதிலி, “என் செல்ல மருமகள் ஜெயிச்சா எனக்குச் சந்தோஷம் இல்லாமல் இருக்குமாடி! நீ போய் முதல்ல டிரஸ்  மாத்திட்டு முகம் கழுவி கீழே வா. அதுக்குள்ளேயும் உனக்கு விசேஷமா பிடிச்ச ஸ்வீட் ரெடி பண்ணி வைக்கிறேன்” என்றாள் பாசத்துடன்.

“சரி அத்தை, நான் டென் மினிட்ஸ்ல ரெடியாகி கீழே வர்றேன்” என்று கூறிவிட்டு ரத்னா படிக்கட்டுகளில் ஏற முயல, அதற்குள் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டே தன் மூன்று வயது மகளைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கி வந்தான் அஜீத்!

“அம்மா! இதெல்லாம் ரொம்ப ஓவர்மா. நான் என்னைக்காவது ஆசையா பால் பாயாசம் வச்சுத் தாங்கன்னு சொன்னா ‘முடியாது’ன்னு சொல்லிடுறீங்க. சரி, அதுகூடப் பரவாயில்லை… இதோ என் செல்லக்குட்டி ஆராதனா ஒரு லட்டு கேட்டா, ‘பூச்சி வரும், பல் சொத்தையாகி விழுந்துடும்’னு சொல்லிக் கொடுக்க மாட்டேங்குறீங்க. இதுவே உங்க மருமகள் மட்டும் கோர்ட்ல ஜெயிச்சிட்டு வந்தா, அவ கேட்காமலேயே எல்லாத்தையும் செஞ்சு உடனே கொடுக்குறீங்க. ரொம்ப ஓரவஞ்சனை பண்றீங்கமா!” எனப் போலியாக அழுத்துக்கொண்டான் அஜீத்.

அஜீத்தின் கைகளில் இருந்த மூன்று வயது ஆராதனா, தன் மழலை மொழியில் அப்பாவிற்குப் பரிந்து பேசினாள்: “ப்பா… ப்பாச்சி (அப்பாச்சி) கேட்டா ததாது (தர மாட்டாங்க). நீ ம்மாச்சி (அம்மாச்சி) கேட்டா நிய்ய ததுவாங்க (நிறைய தருவாங்க). ப்பாச்சியை விட துப்பரா (சூப்பரா) செஞ்சு ததுவாங்கப்பா. நீ இவங்களோட ‘டூ’ (டூ விட்டுடு) போடுப்பா. நீ ஆரு பாப்பா, ஆது (அர்ஜுன்) அண்ணா… எல்லாரும் ம்மாச்சி வீட்டுக்குக் போகலாம்ப்பா” எனத் தன் மழலை மொழியில் கூறினாள்.

அவள் பேசிய மழலையைக் கேட்டுத் தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டாலும், ரத்னா மகளிடம் வம்பிழுத்தாள்: “ஆரு குட்டி! நீ சொன்னா உங்க அப்பா உடனே கேட்டுடுவாராக்கும்? எங்க… உங்க அப்பாவைக் கூட்டிக்கிட்டு உங்க அம்மாச்சி வீட்டுக்கு இப்போவே கிளம்பிப் போ பார்க்கலாம்!” என்றாள்.

அப்போது ரத்னாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த ஏழு வயது மகன் அர்ஜுன், தாய்க்கு ஆதரவாக, “அம்மா! யூ டோன்ட் வொர்ரி. நான் எப்பவும் உன் கூடத்தான் இருப்பேன். நான் எங்கேயும் வரல” என்றான் சமத்தாக.

ஆராதனாவோ அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “ப்பா… ப்பா, நம்ம போகலாம்ப்பா” எனக் கேட்க, ரத்னாவும் அஜீத்தைப் பார்த்து, ‘என்னை விட்டுட்டு நீ போயிடுவியா?’ என்பது போலத் தனது புருவத்தை அழகாக உயர்த்திக் காட்டினாள்.

தன் மனைவியின் விழி மொழியில் வழக்கம்போலத் தன்னைத் தொலைத்த அஜீத், தன் கையில் இருக்கும் மகளைப் பார்த்துச் சத்தமாகக் கூறினான்: “ஆருமா! அம்மா பாவம் இல்லையா? நீ இல்லாட்டி யாரு அம்மாவை நல்லாப் பார்த்துப்பாங்க? நீ இல்லாம அம்மா தனியா தூங்கப் பயப்படுவாங்கதானே?” என சத்தமாகக் கூறிவிட்டு, மகளின் காதுக்குள் ரகசியமாகக் கிசுகிசுத்தான்.

“நாம போயிட்டா உங்க அம்மா தனியாகவே வீட்டில் இருக்கிற எல்லா ஐஸ்கிரீம்களையும் சாப்பிட்டு காலி பண்ணிடுவாங்கடா. அதுமட்டுமில்லாம, உங்க அம்மாவும் எங்க அம்மாவும் (அப்பாச்சி) சேர்ந்து ரொம்பச் சேட்டை பண்ணுவாங்க. அவங்களைக் கண்டிக்க நம்ம ரெண்டு பேரும் இங்கதானே இருக்கணும்? சோ , நாம இங்கேயே இருப்போம்” என்றான் குறும்பாக.

அஜீத் தன் மகளிடம் என்ன ரகசியம் பேசியிருப்பான் என்பதை அவனது உதட்டசைவிலேயே துல்லியமாக அறிந்துகொண்ட ரத்னா, அஜீத்தைக் கோபமாக முறைத்துப் பார்த்தாள்.

அதைத் கவனித்த ஆராதனா, “ப்பா… ம்மா கோவமா பார்க்கிறாங்கப்பா. நான் ப்பாச்சிகிட்ட போறேன்” என அஜீத்தின் கையிலிருந்து நழுவி கீழே இறங்கி மைதிலியிடம் ஓடிவிட்டாள்.

ரத்னா போலியாகக் கோபித்துக்கொண்டு, “நான் என்ன சாப்பாட்டு ராமையாவா? என்னமோ நான்தான் உங்க வீட்டுச் சொத்து எல்லாத்தையும் சாப்பிட்டே காலி பண்ற மாதிரி பேசுறீங்க! பாருங்க அத்தை, உங்க பையன் என்னைப் பற்றி என்ன சொல்றான்னு. எனக்கு ஒன்னும் நீங்க செய்யுற ஸ்வீட் எதுவும் வேண்டாம், அவருக்கே கொடுத்துடுங்க” எனக் கூறிவிட்டுத் தன் கையைப் பிடித்திருந்த அர்ஜுனை அழைத்துக் கொண்டு கோபமாகத் தங்கள் அறைக்குள் புகுந்து கதவைச் சாத்தினாள்.

மைதிலி மகனைக் கடிந்துகொண்டாள்: “ஏண்டா அஜீத்! வந்ததும் வராததுமா அவளை இப்படி வம்புக்கு இழுத்துக் கஷ்டப்படுத்துற? என்னமோ நீ ஐஏஎஸ் கலெக்டரா இருக்கிறதால மாசத்துல ஒரு நாள், ரெண்டு நாள்தான் லீவ்ல வீட்டுக்கு வர்ற. வரும்போது கூட அவளைக் கிண்டல் பண்ணி இப்படித்தான் கோபப்பட வைப்பியா? உன்னால அவ நான் செஞ்ச பலகாரம் வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டா. ஒழுங்கு மரியாதையா இதை அவளுக்குக் கொண்டு போய் கொடுத்துச் சாப்பிட வை!” என்று தான் ஆசையாகச் செய்திருந்த கேரட் அல்வாவையும் வெங்காயப் பக்கோடாவையும் ஒரு தட்டில் வைத்துக் கையில் தந்தாள்.

அதைப் பார்த்த அஜீத், “அம்மா! இது உனக்கே நல்லா இருக்காமா? ஒரு கலெக்டரை இப்படி எடுபிடி வேலை பார்க்க வைக்கிறியே!” என்றான் அதிர்ச்சியாக.

“ஊரு உலகத்துக்கு நீ கலெக்டரா, என்ன கொம்பனா வேணாலும் இருந்துட்டுப் போடா! ஆனா, இந்த வீட்டுக்குள்ள நீ எனக்குப் பையன், ரத்னாவுக்குப் புருஷன்! அதை மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கோ. இப்போ இதை ரத்னா சாப்பிட வச்சா மட்டும்தான் உனக்கு நைட்டு சாப்பாடு, இல்லைன்னா நீ இன்னைக்குப் பட்டினியாதான் கிடக்கணும், ஞாபகம் வச்சுக்கோ!” என அன்பாக மிரட்டி விரட்டிவிட்டுத் தன் பேத்தியைத் தூக்கிக்கொண்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் மைதிலி.

அஜீத் சோபாவில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பார்த்து, “அப்பா! அம்மா என்னை எவ்வளவு வறுத்தெடுக்குறாங்க, நீங்க என்னடான்னா இப்படி வேடிக்கை பார்க்கிறீர்களே? ஏம்பா இப்படி?” என்றான் நொந்துபோய்.

“இனிமேல் உன் வாழ்க்கை எல்லாம் இப்படித்தான் மகனே! உனக்குத்தான் நல்லா தெரியுமே… உங்க அம்மாவுக்கு யாராவது ரத்னாவைப்பற்றி ஏதாவது குறை சொன்னா பிடிக்காதுன்னு. அதுவும் நீ ரத்னா சாப்பிடுற விஷயத்தை வைத்து கிண்டல் பண்ணா உங்க அம்மா சும்மா இருப்பாளா? ஒழுங்கு மரியாதையா போயி ரத்னாவைச் சமாதானப்படுத்திச் சாப்பிட வை. இல்லைன்னா உங்க அம்மா சொன்ன மாதிரி இன்னைக்கு உனக்குச் சோறு கிடையாது” எனக் கூறிவிட்டுத் தன் அறைக்குள் சென்று மறைந்தார் சந்திரன்.

“என்ன வாழ்க்கைடா இது? லீவ்ல சொந்த வீட்டுக்கு வந்தா நல்லாக் கவனிப்பாங்கன்னு நினைச்சா, வந்தவுடனே நம்மள இப்படித் தட்டு தூக்க வச்சுட்டாங்களே! எவ்வளவோ பார்த்துட்டோம், இதைப் பார்க்க மாட்டோமா?” எனப் புலம்பிக் கொண்டே அஜீத் தட்டுடன் தங்கள் அறைக்குள் வரும்பொழுது, உள்ளே அர்ஜுன் தன் தாயிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

“எதுக்குமா இப்போ இப்படி மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்க?” என்றான் அர்ஜுன்.

“நீ வேறடா மகனே! உங்க அப்பாகிட்ட கோபமா பேசிட்டு, அப்பாச்சி செஞ்ச சுடச்சுட கேரட் அல்வாவையும் வெங்காயப் பக்கோடாவையும் சாப்பிடாம மேல வந்துட்டேன். அத நினைச்சாதான் எனக்குக் கவலையா இருக்குடா” என்றாள் ரத்னா வருத்தமாக.

“அம்மா, நீ வேணா பாரு! அப்பாச்சி அப்பாவை நல்லாத் திட்டி, உனக்கு எல்லாத்தையும் மேல கொடுத்து விடுவாங்க பாரு” என்றான் அர்ஜுன் தேற்றுகிறான்.

“அப்படியா சொல்ற அர்ஜுன்?”

“எஸ்மா! போன தடவை நீ கோபமா இருக்கும்பொழுது அப்படித்தான் பண்ணாங்க. எனக்கு நல்லாத் தெரியும்.”

“ஓகே, இருந்தாலும் நீ மெதுவா கீழே போயி, அம்மாவுக்குக் கொஞ்சம் எடுத்துத் தனியா வச்சிடுடா. உங்க அப்பா தட்டு கொண்டு வரலன்னா, அப்புறமா எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் நான் கீழே வந்து சாப்பிடுறேன்” என்றாள் ரத்னா.

“ஒருவேளை அப்பா கொண்டு வந்தாலும் பரவாயில்லைம்மா, நீ கொஞ்சம் நான் கொஞ்சம் ஷேர் பண்ணிச் சாப்பிடலாம்” என அர்ஜுன் கூற, அவனது திட்டத்தைக் கேட்டு ரத்னா தன் கட்டை விரலைத் தூக்கிக் காட்டி, 

“ஓகே டன் அம்மாச்சி பையனே! நீ கீழே போடா” எனக் கூறிவிட்டுச் சிரித்தாள்.

இவையனைத்தையும் வாசலில் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த அஜீத், மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் கம்பீரமாக நுழைந்தான்.

“என்ன செல்லக்குட்டி! இப்படி உங்க அத்தான் மேல கோபப்படலாமா?” என்றான் தட்டை மேஜையில் வைத்துவிட்டு.

“என்ன செல்லம்னு கொஞ்ச வேண்டாம்! உங்களுக்கு எப்பவுமே உங்க பொண்ணு ஆராதனா தானே பிடிக்குது? அவ இல்லாட்டி மட்டும் என்னமோ என்னை ரொம்பப் பிடிக்கிற மாதிரி நடிக்காதீங்க” என்றாள் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

“ஏய்! இதெல்லாம் ரொம்ப அநியாயம்டி ரத்னா. உன்னை எனக்குப் பிடிச்சு நான் கொஞ்சாமல் தான், நம்ம அச்சுவும் (அர்ஜுன்) ஆருவும் (ஆராதனா) வந்தாங்களாக்கும்?” என்றான் அஜீத் கண் அடித்து.

ரத்னா அஜீத்தின் இந்தக் குறும்புத்தனமான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து மௌனமாக நின்றாள். அவள் அருகில் நெருங்கி வந்த அஜீத், “ஒருவேளை நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல ரொம்ப கேப்  விட்டதனால் உனக்கு எல்லாம் மறந்து போயிருக்கும்னு நினைக்கிறேன். இட்ஸ் ஓகே, மறந்ததை இப்போ சீக்கிரமா ஞாபகப்படுத்திடலாம்” என்றான் அவளது கையைப் பற்றி இழுத்து.

தன்னிடம் நெருங்கி வந்த அஜீத்தை மெதுவாகக் கட்டிலில் தள்ளிவிட்டு, ரத்னா சட்டென்று ஓடிப் போய் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள். கதவைச் சாத்துவதற்கு முன்பு, 

“என்கிட்டயேவா? நீங்க எப்போ எப்படிப் பேசுவீங்கன்னு எனக்குத் தெரியாதாக்கும்!” என நாக்கை துருத்திக் காட்டிவிட்டுச் சிரிப்புடன் கதவை உள்பக்கமாகத் தாளிட்டுக் கொண்டாள்.

வெளியில் இருந்த அஜீத் கட்டிலில் அமர்ந்து, “நீ எவ்வளவு நேரம் உள்ளே இருப்பேன்னு நானும் பார்க்கிறேன்டி. எப்படியும் இந்த அல்வாவைச் சாப்பிட வெளியே வந்துதானே ஆகணும்!” எனச் சிரித்துக் கொண்டான்.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top