உன் நிழல் நான் தொட ep 24

அத்தியாயம் 24

அதிகாலையில் வழக்கம்போல தூக்கம் கலைந்து எழ முயற்சி செய்த ரத்னா, தான் இருக்கும் நிலை கண்டு முதலில் திகைப்படைந்தாள். இரவு நடந்ததெல்லாம் நினைவுக்கு வர, சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

தன் அருகில் சீரான மூச்சுடன் தலையணையில் முகம் புதைத்துத் தூங்கிக்கொண்டிருந்த அஜீத்தின் முகத்தைப் பார்த்த ரத்னா, மனதுக்குள், ‘நல்லவன் மாதிரி இருந்துகிட்டு பண்றதெல்லாம் அயோக்கியத்தனம்; இருந்தாலும் எனக்குப் பிடிச்சிருக்கே… மாயக்காரன்டா நீ!’ என்று நினைத்துக்கொண்டாள்.

மலர்ந்த புன்னகையுடன் எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். குளித்து முடித்து வந்த பின்னும் அஜீத் உறங்கிக்கொண்டிருக்க, ரத்னா அவனருகில் சென்று தன் முடியிலிருந்து வழியும் நீர்த்துளிகளை அவன் முகத்தில் தெளித்தாள்.

தன் முகத்தில் தெளிக்கப்பட்ட நீரின் ஈரத்தை உணர்ந்து பதறி எழுந்து அமர்ந்த அஜீத், தன் கண்முன் அழகுப் பதுமையாக, வெட்கப்பட்டு நிற்கும் மனைவியைக் கிலுகிலுப்புடன் பார்த்தான்.

ஐந்து வருட கனவு இது!

என்றாவது ஒருநாள் தான் நினைத்தது நடக்கும் என்று காத்திருந்த அஜீத்திற்கு, இன்று தன் காதல் வாழ்க்கை இப்படித் தொடங்கியதை நினைத்து எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

“குட் மார்னிங் மை டியர் அத்தான்” என்று ரத்னா கூற, இன்னும் நம்ப முடியாதவனாய் அவளை விட்டுப் பார்வையை நீக்காமல், தன் இமைகளைக் கூட அசைக்காமல் பார்த்திருந்தான்.

“ரத்னா…” அஜீத்தின் குரல் தாபத்தோடு ஒலிக்க, கட்டிலிலிருந்து சில அடிகள் தள்ளி நின்றுகொண்ட ரத்னா, “என்ன அத்தான்?” என்றாள் குறும்புடன்.

அவளின் எச்சரிக்கை செயலைக் கண்டுகொண்ட அஜீத், முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு எழுந்தான். சிறுபிள்ளைத்தனமான அவனது செய்கையில் ரத்னாவின் இதழ்களில் தானாகவே புன்னகை அரும்பியது.

புன்னகை முகமாக நின்ற ரத்னாவை நோக்கி அவன் தன் கைகளை நீட்ட, அவன் அருகில் வந்தவள் அவன் கையைத் தட்டிவிட்டு, அவனது கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாகப் பதித்துவிட்டு அந்த அறையை விட்டு ஓடிவிட்டாள்.

ஏற்கனவே ஆச்சரியத்தில் இருந்தாலும், அவளது இந்தச் செய்கையால் ஏற்பட்ட இனிமையான அதிர்ச்சியை நினைத்துத் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். ‘பரவாயில்லை அஜீத், காதலைச் சொல்லி ஒரு நாள் முடிவதற்குள் இவ்வளவு பெரிய மாற்றம் உன் வாழ்க்கையில!’ என வியந்தான்.

கீழே வந்த ரத்னா, ஆண்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, விரைவாகச் சமையலறைக்குள் நுழைந்துகொண்டாள். புள்ளிமானாய்த் துள்ளி வந்த மருமகளைக் கண்ட மைதிலி தனக்குள் புன்னகைத்தார்.

“ரத்னா, இப்போ உடம்பு பரவாயில்லையாமா?”

“ம்ம்.. இப்போ ஓகே அத்தை.”

“எதுக்காக சீக்கிரமே கீழே வந்த? காபி சாப்பிட்டுட்டு இன்னும் கொஞ்ச நேரம் நல்லா ரெஸ்ட் எடு.”

“இல்லை பரவாயில்லை அத்தை, நான் இங்கேயே இருக்கேன்.”

“ரத்னா, சொன்னா கேட்கணும். பத்து மணிக்கு மேல ஷாப்பிங் போறது, நாளைக்கு ரிசப்ஷன் அப்படின்னு ரெண்டு நாளும் ஃபுல்லா பிஸியா இருந்தா நீ டயர்ட் ஆகிடுவ. அதனால இப்போ போய் நல்லா ரெஸ்ட் எடு. கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு, ராத்திரி சரியாகத் தூங்கவே இல்லை போல! போ, போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு” என மைதிலி மருமகளை மீண்டும் மேலே அனுப்பி வைத்தார்.

ஹாலில் அமர்ந்திருந்த ரத்னாவின் பாட்டி, ரத்னா மேலே சென்றதும், “இப்போ என்னத்துக்கு அவளை மேலே போகச் சொன்ன மைதிலி? பொட்டப் புள்ளைக்கு விடிஞ்சதுக்கு அப்புறம் வீட்டு வேலையைப் பார்க்காம அப்படி என்ன தூக்கம் வேண்டியிருக்கு?” என்றார் முணுமுணுப்புடன்.

“பெரியம்மா, என்னதான் அஜீத் கூட ரத்னா டெல்லியில ஒரே வீட்ல இருந்தாலும், இவன் படிப்பு படிப்புன்னுதான் சுத்திக்கிட்டு இருந்திருப்பான். இப்போ அடுத்த வாரம் முசோரி போயிட்டா, திரும்பி வர ஒண்ணேமுக்கால் வருஷம் ஆகிடும். அதனால அவன் ஊருக்குப் போற வரை அவங்க ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசட்டும்” என்றார் மைதிலி.

எங்கே தன் பேத்தியின் வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர் போல இந்த வீட்டில் மாறிவிடுமோ என்று அதுவரை பயந்து கொண்டிருந்த ரத்னாவின் பாட்டிக்கு, மைதிலியின் பேச்சைக் கேட்டவுடன் மனதிலிருந்த அனைத்துச் சஞ்சலங்களும் மாயமாய் மறைந்துவிட்டன.

“என்னமோ போ மைதிலி, நீ சொல்ற… அதனாலதான் அவளை நான் சும்மா விடுறேன்” என்றவர் மனதுக்குள், ‘காலாகாலத்துல என் பேத்திக்கு ஒரு புள்ள பிறந்துட்டா அது போதும் எனக்கு’ என்று நினைத்துக்கொண்டார்.

அஜீத் குளித்து முடித்து வெளியில் வரும்பொழுது, ரத்னா தன் அறையில் இருப்பதைப் பார்த்து, “என்ன ரத்னா, கொடுத்ததை வாங்கிட்டுப் போகலாம்னு வந்தியா? நல்லவேளை நீயே வந்துட்ட. எனக்குக் கடனாளியாக இருக்கிறது பிடிக்கவே பிடிக்காது. அதனால சீக்கிரம் என்கிட்ட வா, நான் உன்கிட்ட இருந்து வாங்கினதை வட்டியோடு திருப்பிக் கொடுத்துடுறேன்” என்றான்.

தன்னை ஆழ்ந்து பார்த்தபடி அருகில் வந்தவனின் பார்வையில் ரத்னா மொத்தமாகத் தடுமாறிப் போனாள். அவனின் பார்வையை நேர்கொண்டு பார்க்க முடியாமல் முகம் சிவந்து வேறுபுறம் திரும்பிக்கொள்ள, அவளது மனமோ குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

 ‘திரும்பி அவனைப் பார்’ என்று சொன்ன மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு தலைகவிழ்ந்து நின்றாள். ரத்னாவின் இந்தச் செய்கைகள் எல்லாம் தன் காதலிற்கான பிரதிபலிப்பு என்பதை உணர்ந்த அஜீத் கர்வத்துடன் புன்னகைத்தான்; அவள் அதை அறிந்திருந்தாலும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அடுத்த நொடி என்னவென்று யூகிக்கும் முன், ரத்னா அஜீத்தின் கரங்களில் சிறைப்பட்டிருந்தாள். அஜீத்தின் உதடுகள் ரத்னாவின் காதுமடல்களில் கோலமிட்டபடி, “ஐ லவ் யூ ரத்னா” என்றன.

ரத்னாவிடம் உரிமையை நிலைநாட்டும் அஜீத்தின் ஒவ்வொரு செயலையும் தாங்கி நிற்க முடியாமல் அவன் மார்பில் புதைந்துகொண்டவளை, அஜீத்தின் கரங்கள் இறுக்கமாக விலங்கிட்டன. முன்தினம் வரை அவர்கள் இருவர் மனதிலும் காதல் இருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளவில்லை. ரகசியப் பார்வை பரிமாற்றமும், மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற செயல்களும் இருந்ததில்லை; ஆனால் இன்று அனைத்தும் மாறிவிட்டது.

தன்னுள் புதைந்திருந்தவளைப் பிரித்தெடுத்து, அவளின் முகத்தை நிமிர்த்திப் பார்க்க அவன் முயற்சி செய்ய, அவளோ பார்வையைத் தரையை விட்டு அகற்றவில்லை.

“இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வெட்கப்பட வச்சதுக்கு ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடு, நான் கீழே கிளம்புறேன்” என்றான் அஜீத்.

ஏனோ அதுவரை ரத்னாவின் மனதிலிருந்த மாயவலை, “ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடு, நான் கிளம்புறேன்” என்ற அஜீத்தின் வார்த்தையில் சட்டென்று அறுந்து விழ, அவளோ செயலற்று நின்றுவிட்டாள். அவளது நிலையை உணராத அஜீத், 

“உன்னை வீட்டுல எல்லாரும் ‘பாப்பா’ன்னு கூப்பிட்டது தப்பாப் போச்சு… ஒரு முத்தம் கேட்டதுக்கே இப்படி நடுங்குற! என்னை நிமிர்ந்தாவது பாரு, நான் கீழே கிளம்பணும்” எனக் கூறினான்.

ஆனால், ரத்னாவின் நினைவுகளோ, “உன்னை ‘பேபி’ன்னு கூப்பிட்டது தப்பாப் போச்சு… ஒரு முத்தம் கேட்டதுக்கே இப்படி நின்னுட்டே இருந்தா எப்படி? என்னை நிமிர்ந்தாவது பாரு, நான் கிளம்பணும்” என்று அன்று ஜஸ்வந்த் கூறிய இடத்தை நோக்கிப் பயணித்தன.

“ரத்னா, இவ்வளவு நேரம் உன் கண்ணுல எனக்காக வந்த இந்த ஒரு மயக்கம் இப்போ போதும். பட், இன்னைக்கு நைட் இது போதாது. இப்போ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு, நைட் கண்டிப்பா நீ தூங்க முடியாது” என அஜீத் கூற, ரத்னாவின் மனதிலோ, 

“ரதி பேபி, இப்போ உன் கண்ணுல எனக்காக வந்திருக்கிற இந்த ஒரு மயக்கம் இப்போ போதும். பட், நாளைக்கு இது போதாது. நல்லா தூங்கு, நாளைக்குத் தூங்க முடியாது போ” என்று ஜஸ்வந்த் அன்று கூறிய வார்த்தைகள் எதிரொலித்தன.

தந்தை அழைக்கும் குரல் கேட்டு அஜீத் கீழே சென்றதைக் கூட உணராமல், கண்களை மூடித் தரையில் அமர்ந்த ரத்னாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து வந்தது; இதயம் வெடிப்பது போல் வலித்தது.

தன் கையில் எடுத்த கடமையை முடிக்காமல் அஜீத்துடன் தன் வாழ்க்கையைத் தொடங்கியது, தற்போது ரத்னாவுக்குக் கடுமையான குற்றவுணர்ச்சியைக் கொடுத்தது. 

இதுவரை ரோஜா இதழாக வருடிய நினைவுகள் அனைத்தும், கடமையின் நினைவு வந்ததும் முள்ளின் மீது நிற்பது போலவே அவளை உணர வைத்தது. நினைவு வந்தவுடன் அஜீத்தின் காதல் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

‘எப்படி நான் மறந்தேன்? தன்னால் ஒருவன் கொலை செய்யப்பட்டிருக்க, அவனுக்கு நியாயம் பெற்றுத் தராமல் தான் சுயநலமாக நடந்து கொண்டதை நினைத்து ரத்னா வெட்கப்பட்டாள்.

வேகமாகச் சென்று தன் போனை எடுத்துப் பார்க்க, சைலன்ட் மோடில் போடப்பட்டிருந்த அவளது போனில் முத்துவிடமிருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருந்தன. அதைப் பார்த்ததும் தன்னையே நொந்துகொண்ட ரத்னா, முத்துவை அழைத்தாள்.

“ரத்னா, உனக்கு எதுவும் பிரச்சினை இல்லையே? நேத்து நான் உனக்கு எத்தனையோ தடவை கால் பண்ணினேன், ஆனா நீ எடுக்கவே இல்லை” என்றான் முத்து.

“இல்லை, ஏதும் பிரச்சனை இல்லை. சாரி முத்து மச்சான், என்னால அங்க வர முடியல. நம்மளுடைய திட்டம் எல்லாமே என்னால சொதப்பிடுச்சு.”

“அப்படியெல்லாம் இல்லை ரத்னாம்மா. நீ வரல என்றதும் பயத்துலதான் நான் முதல்ல போன் பண்ணுனேன். காலையில ஐந்தரை மணி ஃப்ளைட்ல ஜஸ்வந்த் ஃபேமிலி எல்லோரும் கிளம்பி கோயம்புத்தூர் வராங்க. இந்நேரம் எல்லோரும் கோயம்புத்தூர் ரீச் ஆகியிருப்பாங்க. நான் பஸ்ல கிளம்பி வந்துகிட்டு இருக்கேன்மா. நான் வர்ற வரை நீ கொஞ்சம் கவனமா இரு” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் முத்து.

ரத்னாவின் மனது வேகமாகச் செயல்பட ஆரம்பித்தது. பல ஆழ்ந்த மூச்சுகளை எடுத்துத் தன்னைச் சமப்படுத்திக் கொள்வதற்கும், அர்ச்சனா ரத்னாவை கீழே அழைப்பதற்கும் சரியாக இருந்தது.

ரத்னா கீழே வரும் பொழுது, ஜஸ்வந்தின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ரத்னா பொதுவாக அனைவரையும் வரவேற்றுவிட்டு மைதிலியின் அருகில் சென்று நின்றுகொண்டாள். அதுவரையில் ஜஸ்வந்த் வீட்டாரின் வரவு பிடிக்காமலும், அதை வெளிக்காட்ட முடியாமலும் நின்ற மைதிலிக்கு, ரத்னா தன் அருகில் வந்து நின்றுகொண்டது மன நிம்மதியைக் கொடுத்தது.

அங்கு இருக்கும் சூழ்நிலை ஒரு இறுக்கத்துடன் இருப்பதை அனைவரும் உணர்ந்தே இருந்தனர். தேவராஜ் ரத்னாவிடம், “ரத்னா, நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் இங்க வந்தேன்” என்றார்.

மனதில் பலவித கலவையான உணர்வுகள் இருந்தாலும், அதை எதையும் முகத்தில் பிரதிபலிக்காமல் ரத்னா, “அங்கிள், நான் கூட நீங்க என்னுடைய ரிசப்ஷன்ல கலந்துகிட்டு என்னை வாழ்த்த வந்திருக்கீங்கன்னு நினைச்சுட்டேன்” என்றாள்.

ரத்னாவின் குரலில் இருந்த பேதத்தை அனைவரும் உணர்ந்திருந்தாலும் யாரும் எதுவும் பேசவில்லை. தேவராஜ் தொடர்ந்து, “என்னுடைய ஆசீர்வாதத்தை நான் ரிசப்ஷன் வந்துதான் உனக்குத் தரணும்னு எந்த அவசியமும் இல்லைமா. ஏன்னா அது எப்பவும் உன் கூடத்தான் இருக்கும். நான் இப்போ வந்தது இதை உன்கிட்ட கொடுக்கத்தான்” எனக் கூறிவிட்டுச் சில பத்திரங்களை ரத்னாவின் கையில் கொடுத்தார்.

அனைவரும் அது என்னவென்று பார்த்துக் கொண்டிருக்க, அஜீத்தும் ரத்னாவும் அது ஓரளவு என்னவாக இருக்கும் என்பதை யூகித்திருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

ரத்னா அமைதியாக அதைத் தன் கையில் வாங்கி, அதில் எழுதியிருப்பதைப் படிக்க ஆரம்பித்தாள். ரத்னாவின் அருகிலிருந்த மைதிலியும் அதில் தன் பார்வையைச் செலுத்த, அதில் இருந்த செய்தியைப் புரிந்துகொண்டதும் ரத்னாவின் கையிலிருந்த பத்திரங்களைப் பறித்து விசிறி எறிந்தார்.

மைதிலியின் இந்தச் செயலை யாரும் எதிர்பார்க்காத நிலையில், கிருஷ்ண சந்திரன் தன் மனைவியை நோக்கி, “மைதிலி, எதுக்காக இப்படி நடந்துக்கிற? அதுல இருக்கிற விஷயம் உனக்கு பிடிக்கலைன்னா அதற்காக இப்படித்தான் தூக்கி எறிவியா?” என்றார். அனைவரும் முன் தன் கணவர் தன்னைக் கண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மைதிலி, 

“அதுல என்ன எழுதி இருந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்றார் கோபமாக.

“எதுவா வேணாலும் இருக்கலாம், அதனைப் பேசித் தீர்த்துக்கணும். அதை விட்டுட்டு இப்படி கோபப்படக்கூடாது” என்றார் கிருஷ்ண சந்திரன்.

இவர்கள் இருவரும் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, கீழே விழுந்த பத்திரங்களைக் கையில் எடுத்த அஜீத், அதைப் படித்துப் பார்த்துவிட்டு தேவராஜிடம் வந்து, “சாரி சார், இது எதுவும் ரத்னாவிற்குத் தேவையில்லை” என்றான் அழுத்தமாக.

“அஜீத், நீயாவது தயவுசெஞ்சு கொஞ்சம் புரிஞ்சுக்கோ. இதெல்லாம் ரத்னாவுக்குச் சேர வேண்டியது” என்றார் தேவராஜ்.

“நீங்கதான் புரியாமல் பேசுறீங்க. இதெல்லாம் நீங்களும் உங்க பிள்ளைகளும் சம்பாதித்த சொத்து. அப்படி இருக்க, இது எப்படி ரத்னாவுக்குச் சேர வேண்டியதாக இருக்கும்?”

“என்னுடைய சொத்து எல்லாமே என்னுடைய இரண்டு பையன்களுக்கு மட்டும்தான். ஹர்ஷத் பங்கு ஏற்கனவே அவருடைய பெயருக்கு மாத்திட்டேன். இதெல்லாம்…”

மேற்கொண்டு தேவராஜ் பேசும் முன்பு, ஓரளவு விஷயத்தை யூகித்த கிருஷ்ண சந்திரன், “இதெல்லாம் உங்களுடைய இரண்டாவது பையனுடைய சொத்து, அதுக்கும் ரத்னாவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது” எனக் கூறிவிட்டு, மாணிக்கவேலிடம் திரும்பினார்.

“சம்மந்தி, நான் ரத்னாவை இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வரும்பொழுது சில விஷயங்களைச் செய்து முடிச்சிட்டுதான் கூட்டிட்டு வந்தேன். அதாவது சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் ரத்னா அஜீத்துடைய மனைவியாகவும், இந்த கிருஷ்ண சந்திரன்-மைதிலியின் மருமகளாகவும் மட்டும்தான் இனி இருக்கணும். இதை உங்க அண்ணனுடைய சம்மந்திக்கு புரிய வையுங்க” என்றார்.

தான் ஒன்றை நினைக்க, அது வேறு விதமாகத் திரும்புவதை உணர்ந்த தேவராஜ், கிருஷ்ண சந்திரனிடம், “நீங்க தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கிறீங்க. ரத்னாகிட்ட எந்த உரிமையையும் நாங்க எதிர்பார்க்கல. ரத்னாவை நான் என்னுடைய பொண்ணாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது இது அவகிட்ட இருக்கணும்னு நான் ஆசைப்பட்டது எந்த விதத்துல தப்பு?” என்றார்.

“தப்புதான்! இனி இந்த உலகத்திற்கு முன்னாடி ரத்னாவின் கடந்த காலம் ஒரு விமர்சனத்திற்கு வருவது எனக்குத் துளியும் விருப்பமில்லை. அப்படி இருக்கும் பொழுது இந்தச் சொத்தை ரத்னா ஏத்துக்கிட்டா, எப்படி, எதுக்குன்னு 1008 கேள்விகள் வரும்; அது எங்களுக்கு அவசியமில்லை. ஒருவேளை நீங்க தருவதை நாங்க ஏத்துக்கிட்டா, சொத்துக்காகத்தான் ரத்னாவை நாங்க சேர்த்துக்கிட்டோம்னு பேசுவாங்க. எங்ககிட்ட இருக்கிற சொத்தே என் பிள்ளைகளுக்கும் மருமகளுக்கும் போதும்” என்றார் கிருஷ்ண சந்திரன்.

“அப்பா, நான் பேசிக்கிறேன்” எனக் கூறிவிட்டு அஜீத் தேவராஜிடம் திரும்பினான்.

 “அங்கிள், நீங்க ரத்னாவை உங்க பொண்ணா பார்க்கிறதா சொன்னீங்க, அதனால இதை ரத்னாவிற்குத் தர நினைச்சிருக்கலாம். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு கணவன் மட்டும்தான் மனைவிக்கு எல்லாமுமாக இருந்து எல்லாம் செய்யணும். என்னால செய்ய முடியும் அப்படிங்கிற போது, உங்க மூலமா மட்டுமில்லை, ரத்னா வீட்டுல இருந்தும் எனக்கு எதுவும் தேவையில்லை” என்றான்.

அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரத்னா, “அஜீத் அத்தான், மாமா… இதை நான் பேசினால்தான் சரியா இருக்கும்” எனக் கிருஷ்ணன் மற்றும் அஜீத்திடம் கூறிவிட்டு தேவராஜிடம் திரும்பினாள்.

“அங்கிள்…” என அவள் அழைக்க, 

தேவராஜ், “உன்னோட முடிவு என்ன என்கிறது நீ ‘அங்கிள்’ அப்படின்னு கூப்பிட்டதிலேயே நான் புரிஞ்சுகிட்டேன்மா. உன்னுடைய வாழ்க்கையில் எங்களுக்கான இடம் என்ன அப்படிங்கிறதை உன்னுடைய அந்த ஒரு வார்த்தை புரிய வச்சிடுச்சு. நிச்சயமா இதில நான் உன்னைத் தப்பு சொல்ல மாட்டேன். சரிமா, நீ சொல்ல வந்ததைச் சொல்லு” என்றார்.

“எனக்கு உங்களைக் கஷ்டப்படுத்தணும்னு எந்த நோக்கமும் இல்லை. ஆனால் நான் எடுக்கிற முடிவு உங்களைக் கஷ்டப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க. இந்தச் சொத்து எதுவும் எனக்குத் தேவையில்லை” என்றாள் ரத்னா.

“ரத்னா, இந்தச் சொத்து எல்லாத்தையும் நான் உன்னுடைய பேர்ல எழுதி வைக்கல. ஜஸ்வந்த் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடியே என்னுடைய பசங்க இரண்டு பேருக்கும் சொத்தை நான் பிரிச்சுக் கொடுத்துட்டேன். ஏன், எதுக்குன்னு எனக்குக் காரணம் தெரியாது, ஜஸ்வந்த் தன் சொத்து முழுவதையும் உன்னுடைய பெயரில்தான் எழுதி வச்சிருக்கான். சோ, எங்களால ஒன்னும் பண்ண முடியாது. கண்டிப்பா நீ இந்தச் சொத்துக்களை எல்லாம் ஏத்துக்கணும். அவன் எழுதி வச்சிருந்தாலும், நாங்க இதை எங்களுடைய முழு விருப்பத்தோடுதான் உன்கிட்ட கொடுக்கிறோம்” என்றார் தேவராஜ்.

“ஓகே அங்கிள், நான் இதை ஏத்துக்கிறேன்” என்று ரத்னா கூறிய பதில் அங்கிருந்த பலருக்கு விருப்பமில்லை. அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைவரும் தெரியப்படுத்தினர். அனைவரின் கருத்தையும் ஏற்றுக்கொண்ட ரத்னா, பின்பு அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டுப் பேசினாள்.

“எனக்கு நிச்சயமாகப் பணத்தின் மீது எந்த ஆசையும் இல்லை. ஆனா, இந்தச் சொத்து இப்போ என்னுடைய பெயரில் இருக்கு. விருப்பமில்லாமல் என் பேர்ல இருக்கிற சொத்தை, நான் விருப்பப்பட்டு ஒருத்தருக்கு எழுதி வைக்கத் தயாராக இருக்கிறேன்.”

“ரத்னா, இது உனக்கான சொத்து.”

“இல்லை அங்கிள், எனக்கானது என்னுடைய குடும்பமும், பாசத்தைக் காட்டுற உண்மையான உறவுகளும் மட்டும்தான்; அது போதும்.”

“அப்படின்னா இதை என்ன செய்யப் போற?” எனப் பத்திரங்களைக் காட்டி தேவராஜ் கேட்க, “இதை நான் ஒருத்தருக்கு எழுதி வைக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றாள் ரத்னா.

ரத்னாவின் பேச்சை அதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ரூபா, “நிச்சயமாக இது எங்களுக்குத் திரும்ப வேண்டாம். எங்க ஜஸ்வந்த் எங்க கூட இல்லாதப்போ, அவனுடைய சொத்து எனக்கு என் குடும்பத்துக்கும் தேவையில்லை” என்றாள் விரக்தியாக.

“கவலைப்படாதீங்க அக்கா, இது யார் பெயரில் இருந்தா எல்லாருக்கும் சந்தோஷமோ, யார் பெயரில் இருந்தா ஜஸ்வந்தின் ஆன்மா சாந்தியடையுமோ… அவங்களுக்குத்தான் எழுதி வைக்கப் போறேன்” என்றாள் ரத்னா தீர்க்கமாக.

ரத்னா ‘சொத்துக்களை வேண்டாம்’ என்று கூறியதில் இரு குடும்ப உறுப்பினர்களும் அமைதியாகிவிட்டனர்—ஜஸ்வந்த் குடும்ப உறுப்பினர்களைத் தவிர. இருந்தும், ரத்னா யார் பெயரில் சொத்துக்களை எழுதப் போகின்றாள் என்பது ஒரு கேள்வியாக அனைவர் மனதிலும் இருந்தாலும், எவரும் அதைக் கேட்க நினைக்கவில்லை.

கோவை நகரின் மையத்தில், பிரதான இடத்தில் இருந்த அந்தத் திருமண மண்டபம் நகரின் முக்கியப் பிரமுகர்களினாலும், நண்பர்கள் கூட்டத்தினாலும் நிரம்பி வழிந்தது.

மேடையின் மீது ரிசப்ஷனிற்காக ரத்னா தேர்வு செய்த நேவி ப்ளூ கலர் கோட் சூட்டில் கம்பீரமாக நின்ற அஜீத்தின் அருகில், அஜீத் தேர்வு செய்த இளஞ்சிவப்பு நிற டிசைனர் புடவையில் தேவதையாக ரத்னா நின்றுகொண்டிருந்தாள். பெரும்பாலும் அங்கு வந்த கூட்டத்தினர் அனைவரும் ரத்னாவின் கடந்தகாலம் அறியாத, கிருஷ்ண சந்திரனின் தொழில் தொடர்புடைய நபர்களும், அஜீத்-ரத்னாவின் நலனை மட்டும் விரும்பும் நண்பர்களுமாகவே இருந்தனர்.

ரத்னாவின் கடந்தகாலம் பற்றி எந்தவொரு விமர்சனமும் இன்றி, வரவேற்பு நிகழ்வு ஆட்டம், பாட்டம், மகிழ்ச்சி என நன்றாகவே சென்றுகொண்டிருந்தது. ஓரளவு கூட்டம் குறையத் தொடங்கியதும், நண்பர்கள் அனைவரும் ரத்னாவையும் அஜீத்தையும் சூழ்ந்து நின்று கேலி செய்துகொண்டிருக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த இருவருக்கு மட்டும் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

‘சிரி ரத்னா சிரி… இதுதான் உன் கடைசி சிரிப்பா இருக்கப் போகுது! எனக்குக் கிடைக்க வேண்டியதைத் தட்டிப்பறித்த நீ, இனி சந்தோஷமா இருக்கவே கூடாது. நாளைக்கு இதே நேரம் மணப்பெண்ணாக இருக்கிற நீ பிணமாய் இருப்ப! உன்னைச் சுற்றிச் சிரிச்சுகிட்டு இருக்கிறவங்க எல்லாம் நாளைக்குக் கதறி அழப் போறாங்க’ என ஒரு நபர் தனக்குள் வன்மத்துடன் நினைக்க…

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top