உன் நிழல் நான் தொட ep 23

அத்தியாயம் 23

சில நாட்களுக்கு முன்பு…

அனைத்தும் நல்லபடியாக நடந்துவிட்ட மகிழ்ச்சியுடன் ரத்னாவின் குடும்பத்தினரும், அஜீத்தின் குடும்பத்தினரும் கோயம்புத்தூர் நோக்கி வந்துகொண்டிருக்க, சிரிப்பும் சந்தோஷமும் மட்டுமே அவர்களிடையே நிறைந்திருந்தது.

தென்காசியைத் தாண்டி அவர்களின் கார் சென்றுகொண்டிருந்த போது, ரத்னாவின் மனக்கண் முன் பலவிதமான காட்சிகள் வர ஆரம்பித்தன. முதலில் தெளிவற்ற பிம்பங்களாய்த் தெரிய ஆரம்பித்த காட்சிகள், இப்பொழுது முழு வடிவமாய் தன் கண்முன் தோன்றி மறைந்தன.

டெல்லியில் இருக்கும் வரை ரத்னாவின் பெரும்பாலான நேரம் ரோஜாவுடன் பேசுவதிலும், மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்ப்பதுமாகவே கழிந்துவந்தது.

அவ்வாறு ஒருநாள் ரத்னா மாடியிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது, அடுத்த தெருவில் ஏதோ சண்டை நடக்க, ரத்னா அதைக் கவனிக்கலானாள். வாய் வார்த்தையாகத் தொடங்கிய சண்டை கைகலப்பில் முடிந்து, இறுதியில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர்.

ரத்த காயத்துடன் நின்றவர்களை மற்றவர்கள் பிரித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். சண்டையிட்டவர்களின் ரத்த காயம் நிறைந்த முகம் ஒரு நிமிடம் ஜஸ்வந்த் முகத்தை நினைவுபடுத்த, அதன்பின்பு ஏதேதோ சில காட்சிகள் அவளுக்குள் தோன்றி மறைந்தன.

அதன் பிறகும் பலமுறை இதுபோன்ற காட்சிகள் தோன்றி மறைய, ஒவ்வொரு முறையும் ரத்னாவுக்குப் பதட்டமும் மயக்கமும் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. பெரும்பாலும் இவை அனைத்தும் ரத்னா தனியே தன் அறையில் இருந்தபோது நிகழ்ந்ததால், அஜீத் இதை அறிந்திருக்கவில்லை.

ஒருநாள் அஜீத்துடன் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வரும் வழியில், எதிர்பாராதவிதமாகத் தன் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அவர்கள் மேல் மோத வர, அதைக் கவனித்த அஜீத் ரத்னாவை வேகமாகத் தள்ளிவிட்டான். இறுதிநேரத்தில் விலகிச் சென்ற அஜீத்தின் மீது லேசாக அந்தக் கார் உரசிச் சென்றுவிட, அஜீத் சிறு காயத்துடன் தப்பினான்.

பதட்டத்துடன் எழுந்து வந்த அஜீத் ரத்னாவிற்கு ஏதாவது காயம்பட்டிருக்கின்றதா என்று பார்க்க, ரத்னாவின் கவனமோ முழுவதும் அஜீத்தின் முகபாவனையில் மட்டுமே இருந்தது.

அஜீத்தின் நெற்றியிலிருந்து ரத்தம் வந்துகொண்டிருப்பதை கவனித்த ரோஜா, “தம்பி, உங்களுக்கு ரத்தம் வருது. வாங்க சீக்கிரம் ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்” என்றாள்.

அதன்பிறகே கீழே விழுந்ததால் தன் நெற்றியில் ஏற்பட்ட காயத்தையும், அதிலிருந்து வரும் குருதியையும் அஜீத் உணர்ந்தான்.

மருத்துவமனை சென்று காயத்திற்கு மருந்திட்டு வீடு வரும்வரை ரத்னா அமைதியாகவே இருக்க, விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி என்று நினைத்து அஜீத்தும் ரோஜாவும் ரத்னாவின் அமைதியைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

வெளியில் அமைதியாகக் காட்சியளித்தாலும், ரத்னாவின் ஆழ்மனது விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தது. இரவில் அஜீத் உறங்கியதும் எழுந்து அமர்ந்த ரத்னா, இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் அஜீத்தின் முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

எந்தவித கவலையுமின்றி உறங்கிக்கொண்டிருக்கும் அஜீத்தின் முகம் தெளிவாக இருக்க, காலையில் தான் பார்த்த முகத்திற்கும் இப்பொழுது இருக்கும் முகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு ரத்னாவிற்குப் பல விஷயங்களைப் புரிய வைத்தது.

கோவிலுக்குச் சென்று வரும் வழியில் தன்னை நோக்கி கார் மோத வருவதைக் கவனித்த அஜீத்தின் முகம் ஒரு வினாடியில் கோபத்தில் சிவந்திருந்தது, அவன் கண்களும் அப்பட்டமாக அந்தக் கோபத்தைப் பிரதிபலித்தன.

அந்தக் கோப முகத்துடனேயே அஜீத் ரத்னாவைக் காப்பாற்ற தள்ளிவிட்டிருந்தான். அன்று விபத்து நடந்த நாளில், ஜஸ்வந்த் தன்னை காரிலிருந்து தள்ளிவிடும்போதும் ஜஸ்வந்தின் முகமும் இதே போன்ற உணர்வுகளைத்தான் பிரதிபலித்தது!

கீழே விழுந்த தன்னை நோக்கி நெற்றியில் ரத்தம் வழிய ஓடிவந்த அஜீத்தின் முகம் கோபத்தைத் தொலைத்து, அவன் விழிகள் தன் நலனை ஆராய்ந்துகொண்டிருக்க, அந்த விழியின் தேடல் ரத்னாவுக்கு ஒன்றை உணர்த்தியது—அன்று அரை மயக்க நிலையில் தன்னைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு நடந்த ஜஸ்வந்தின் விழிகளில் இருந்த தேடலும் இதுதான்.

இதை அறிந்த பின்பு ரத்னாவின் மனது மேலும் மேலும் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தது. விபத்து அன்று நடந்த எதுவும் நினைவில்லாமல் இருந்த ரத்னா, தன் மனம் எழுப்பிய கேள்விகளைத் தனக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்க, அதற்குத் தாமதமாக மூளை கூறிய பதிலில் ரத்னா ஸ்தம்பித்துவிட்டாள்.

தெளிவற்ற குரல்கள் காதில் மீண்டும் மீண்டும் கேட்க, அது யார் என்பதை உணர்ந்துகொண்ட பொழுது நடந்த அனைத்தின் பின்னணியில் இருந்த தெளிவை அவள் அறிந்துகொண்டாள். கருணையின் மறுஉருவாய் இருந்தவரா ஜஸ்வந்தை கொலை செய்திருப்பார் என்ற உண்மையை ரத்னாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நடந்த உண்மையைத் தன் மனதிற்கும் மூளைக்கும் புரியவைத்த ரத்னா, அதன்பிறகு தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தனக்குள் முடிவு செய்துகொண்டாள்.

திருமணத்திற்குப் பின் நடந்த அனைத்தையும் தற்போது யோசித்துப்பார்க்கும்போது, தனக்கு ஜஸ்வந்த் மீது ஏற்பட்ட அவநம்பிக்கை, பயம், அஜீத் மீது ஜஸ்வந்த் பொறாமை கொண்டிருப்பதாகத் தான் நினைத்தது என அனைத்தும் திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி என்பது அவளுக்குப் புலப்பட்டது.

ஆனால் எதற்காக அவர் இதைச் செய்ய வேண்டும்? ஜஸ்வந்த் மரணத்தால் அவர்களுக்குக் கிடைக்கப்போவது என்ன என்று யோசித்து யோசித்து ரத்னாவுக்குத் தலை வெடிப்பது போல் இருந்தது.

முதலில் அஜீத்திடம் இதைக் கூறித் தீர்வு காணலாம் என்று நினைத்துக் காத்திருக்க, அன்றுதான் அஜீத்தின் பிரிலிமினரி எக்ஸாம் முடிவு வெளியாகியிருந்தது. அதில் அஜீத் வெற்றி பெற்றதாகத் தன் சந்தோஷத்தைத் தெரிவிக்க, அவன் மகிழ்ச்சியைக் கண்ட ரத்னா தன் முடிவை மாற்றிக்கொண்டாள்.

‘நான் உங்ககிட்ட இப்போ இதைச் சொல்லப் போறது இல்லை. இப்ப நான் உங்ககிட்ட இதைச் சொன்னா, நிச்சயமா நீங்க உண்மையை கண்டுபிடிக்கப் புறப்படுவீங்க. இதனால உங்க கனவு, லட்சியம் எல்லாம் தடைபடும். அது என்னால் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்.’

அதன்பிறகு தனக்குத் தெரிந்த உண்மையை ரத்னா தன் மனதுக்குள் புதைத்துக்கொண்டு, சரியான வாய்ப்பு வருவதற்காகக் காத்திருந்தாள்.

அஜீத் அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற்று ஐஏஎஸ் பயிற்சி மட்டும் மீதமிருக்க, ரத்னா தான் கோயம்புத்தூரில் காலேஜில் சேர விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தாள்.

கோயம்புத்தூர் செல்வதாக இருந்தால், தன் மொத்த குடும்பத்தையும் ஒன்று சேர்த்த பின்புதான் அது முடியும் என்பது ரத்னாவுக்கு நன்கு தெரியும். அப்படி குடும்பம் ஒன்று சேரும் நேரம், உண்மையான கொலையாளி தன்னை நெருங்கும்போது அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே ரத்னாவின் திட்டமாக இருந்தது. அதன்படியே அனைத்தும் நடந்தது.

ரத்னாவின் திட்டம் இப்படி இருக்க, இதை அறியாத அஜீத், ரத்னாவை வைத்தே கொலைகாரனைப் பிடிக்க மற்றொரு திட்டம் தீட்டினான். இவர்கள் இருவரின் திட்டத்தையும் அறியாத தங்கவேலு, அவன் வழியில் கொலைகாரனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தான்.

ரத்னா தனது திட்டத்தின் முதல் படியாகத் தனக்குத் தேவையான தகவல்களைத் தனது கல்லூரி சீனியர்  சாகுல், முத்து மற்றும் மணி ஆகிய மூவரின் மூலம் திரட்ட ஆரம்பித்தாள். கிடைத்த தகவல்கள் மூலம் கொலைக்கான காரணமோ, ஆதாரமோ கிடைக்காத பொழுதும், கொலையாளியின் அன்றாட நடவடிக்கைகள் தெரியவர ரத்னாவிற்கு வியப்பு மேலிட்டது.

இனி எதுவாக இருந்தாலும் தான் கோயம்புத்தூரிலோ அல்லது சென்னையிலோ தான் இதைச் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட ரத்னா, அதன்பின் அமைதியாக இருக்க ஆரம்பித்தாள்.

இடையில் அஜீத்தின் காதலைப் புரிந்துகொண்டாலும், அவன் அதைத் தன்னிடம் வெளிப்படுத்தாமல் இருப்பதைப் பார்த்து கோபம் வந்தாலும் அதையும் அவள் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அஜீத், ஜஸ்வந்த் கொலை செய்யப்பட்டான் என்பதைக் கேள்விப்பட்டதில் இருந்தே மிகவும் கவனமுடன் தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பித்தான். அதுவரை அஜீத் சாதாரணமாக நினைத்த அனைத்தும் தற்போது சந்தேகத்திற்குரிய விஷயமாகவே அவனுக்குப் பட்டது.

ஸ்டெல்லாவோடு தான் இணைந்து இருப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படம்; ரத்னாவை விட்டுத் தான் விலக நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யப்பட்ட முயற்சிகள்; டெல்லியில் ஏற்பட இருந்த விபத்து… என அனைத்தும் ரத்னாவையும் ஜஸ்வந்தோடு சேர்த்து கொலை செய்வதற்காக நடத்தப்பட்ட சூழ்ச்சியாகவே நினைக்க வைத்தது.

விசாரிக்க ஆரம்பித்த இரு தினங்களிலேயே, எதிர்பாராத ஒரு நபர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் கொலையாளியை அஜீத் ஓரளவு நெருங்கியிருந்தான்.

எனினும், கொலைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளவும், ஆதாரத்துடன் சட்டத்தின் முன் நிறுத்தவும் அஜீத் தன் திட்டத்தை ரத்னாவின் மூலம் செயல்படுத்த ஆரம்பித்தான். எந்தவொரு சூழ்நிலையிலும் தன் நெருங்கிய நண்பனிடம் கூடத் தன் முழு திட்டத்தையும் அஜீத் கூறவில்லை.

“அஜீத், கொலைகாரன் யாருன்னு தெரியாம நீ எப்படி எல்லாப் பிரச்சினையையும் தனியா சமாளிக்க முடியும்?” என்று பிரபு கேட்டான்.

“நான் இப்போ யாரையும் நம்புற மனநிலைமையில இல்லை பிரபு.”

“அதுதான் எனக்கு நல்லா தெரியுதே! என்னைக் கூடவா நீ நம்பல?”

“ஏன்டா இப்படி பேசுற? உன்னை நம்பாமலா யார்கிட்டயும் உதவி கேட்காம உன்கிட்ட உதவி கேட்டுக்கிட்டு இருக்கேன்?”

“எஸ்! நீ என்கிட்ட உதவி மட்டும்தான் கேட்கிற, உன்னுடைய பிரச்சினையை முழுசா ஷேர் பண்ணிக்கல. நீ எந்தவொரு விஷயமும் யோசிக்காமல் செய்ய மாட்ட அஜீத். உனக்குக் கொலைகாரன் யாருன்னு நிச்சயமா தெரிஞ்சிருக்கு. தெரியாம இவ்வளவு பெரிய ஆபத்தான விஷயத்துல ரத்னாவை நேரடியாகச் சம்பந்தப்படுத்த நினைக்க மாட்ட” எனக் கூறும் பிரபுவின் கண்களில் இருந்தது, தன் நண்பன் தன்னை நம்பவில்லையே என்ற ஆதங்கம் மட்டுமே.

“உண்மையை உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நான் நினைக்கல பிரபு. என்னால உன்னுடைய லைஃப்ல எந்தப் பிரச்சினையும் வந்துடக் கூடாதுன்னுதான் உன்கிட்ட இருந்து நான் கொஞ்சம் தள்ளி நிக்கிறேன்.”

“பிரச்சனைன்னு வந்தா உதவி பண்றது தாண்டா உண்மையான நட்பு. அது இல்லாட்டி நட்புக்கு என்னடா மரியாதை இருக்கு?”

“நான் உண்மைய மறைக்க இன்னொரு காரணம், நீ வருத்தப்படக் கூடாதுன்னுதான்.”

“என்னடா சொல்ற?”

“உனக்குத் தெரியாமலேயே எங்க வாழ்க்கையில பிரச்சனை நடக்க உன்னைப் பயன்படுத்தி இருக்காங்க.”

“என்னையா? யாருடா அது? தயவுசெய்து சொல்லித் தொலை!”

“மிஸ்டர் ராபர்ட்.”

“ஸ்டெல்லாவோட அப்பாவா?!”

“எஸ், அவர்தான்.”

“அவர் எதுக்காக இதெல்லாம் பண்ணனும்?”

“எப்படி எல்லாத்தையும் செஞ்சாருன்னு கண்டுபிடிச்ச என்னால, எதற்காக இதையெல்லாம் செய்தாருன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல.”

“சரி, உனக்கு இதையெல்லாம் யாரு சொன்னா?”

“ஸ்டெல்லா… எங்க வாழ்க்கையில நானும் ரத்னாவும் பெயர், புகழ் சம்பாதிக்கிறதுக்கு முன்னாடியே நல்ல நண்பர்களைச் சம்பாதிச்சிருக்கோம். எனக்கு என்னுடைய நட்புக்கு நீ எப்படி உண்மையாகவும் உறுதுணையாகவும் இருக்கிறியோ, அதே மாதிரி ஸ்டெல்லா ரத்னாவின் நட்புக்கு எந்த விதத்திலும் குறைந்து போய்விடவில்லை.”

நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்கு ஸ்டெல்லா வர, “ஹாய் ஸ்டெல்லா” என்றான் அஜீத்.

“ஹாய் அஜீத், ஹாய் பிரபு. சாரி அஜீத், அப்பா இவ்வளவு பிரச்சனை பண்ணியிருப்பாருன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல.”

“விடு ஸ்டெல்லா, உங்க அப்பா பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ?”

“இல்லை அஜீத், எங்க அப்பா அன்னைக்கு ‘உனக்கு அஜீத்தைப் பிடிக்குமா?’ன்னு கேட்டாரு. நானும் அன்னைக்கு நீயும் ரத்னாவும் ரொம்ப நாளுக்கு அப்புறம் எங்க அப்பா கூட என்னை அதிகமா டைம் ஸ்பெண்ட் பண்ண வச்ச சந்தோஷத்துல ‘ரொம்ப பிடிக்கும்’னு சொல்லிட்டேன்.

நான் சொன்னதுக்காக இப்படிப் பண்ணுவாருன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. அவரால உங்க ரெண்டு பேரோட லைஃப்ல இவ்வளவு பிரச்சினையும் வந்திருக்கு. இப்பக் கூட உனக்கும் ரத்னாவுக்கும் இடையில எங்க அப்பாவால்தான் பிரச்சினை வந்திருக்குன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.”

“சரி விடு ஸ்டெல்லா, உன்னைக் கஷ்டப்படுத்திக்காதே.”

“என்னால விட முடியாது. உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியல. ஆனா ரத்னா இதனால சென்னைக்கு போகணும்னு சொல்றா. இன்னைக்கு நைட் அப்பா வந்ததும் நான் அவர்கிட்ட இதைப் பத்திப் பேசப் போறேன்.”

“உங்க அப்பா இங்கே வரப் போறாரா?”

“ஆமா, அப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போன்ல சொன்னாங்க.”

“ஏற்கனவே ரொம்ப நேரம் ஆகிட்டு, நீ வீட்டுக்குப் போ. தயவுசெஞ்சு உங்க அப்பாகிட்ட இதைப் பற்றி இப்போது எதுவும் பேசாதே. நானே உங்க வீட்டுக்கு வர்றேன், அப்பப் பேசிக்கலாம்.” ஸ்டெல்லா அங்கிருந்து கிளம்பியதும் பிரபு கேட்டான்:

“என்னடா, ஸ்டெல்லாதான் உன்கிட்ட எல்லாமே சொன்னான்னு சொன்ன? அவளுக்குப் பெருசா எதுவும் தெரிஞ்ச மாதிரி தெரியலையே?”

“அவளுக்கு முழு விவரமும் தெரியாது. இப்போ அது பிரச்சனை இல்லை. அவ.ராபர்ட் சென்னையில் இருக்கிறதால மட்டும்தான் ரத்னாகிட்ட கொஞ்சம் கடுமையா பேசினேன். ஜஸ்வந்த் பத்திக் கேட்டா கோபப்பட்டு ரத்னா சென்னைக்குக் கிளம்புவான்னு நினைச்சா, அந்த ஆள் இங்க வரப்போறாரு! எப்படியாவது ரத்னாவை சென்னைக்குக் கிளம்ப விடாமல் செய்யணும். காலையில மீதியைப் பேசிக்கலாம்” என்றான் அஜீத்.

பிரபுவிடம் பேசிவிட்டுத் தன் வீட்டிற்கு வந்த அஜீத், தன் அறையில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த ரத்னாவிடம் வந்து, “ரத்னா…” என்றான்.

எதிர்பாராத அழைப்பில் அதிர்ந்து திரும்பிய ரத்னா, அஜீத்தைப் பார்த்ததும், “சொல்லுங்க அத்தான்” என்றாள்.

“தூக்கம் வரலையா ரத்னா?”

“இல்லை.” ஒற்றைச் வார்த்தையில் ரத்னாவிடமிருந்து பதில் வர,

“இப்போ உன் மனசுல ரொம்ப குழப்பம் இருக்கும். உன்னுடைய குழப்பத்திற்கான எல்லா விடையையும் நான் முசோரி போறதுக்கு முன்னே சொல்லிட்டுதான் போவேன்.”

ஒரு நிமிடம் அஜீத்தை நிமிர்ந்து பார்த்த ரத்னா, தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு, “காலம் கடந்து கிடைக்கக்கூடிய எதுவும் நமக்கு நிம்மதியே தராது” என்றாள்.

“ரத்னா ப்ளீஸ், தயவுசெஞ்சு இப்படிப் பேசாதே. நான் உன்கிட்ட சொல்ல வேண்டியது, பேச வேண்டியது நிறைய இருக்கு. ஆனா இப்பப் பேச முடியாது. ரிசப்ஷன் முடியட்டும், அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு.”

“பொறுமையாகத்தான் இதுவரைக்கும் நான் இருந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருஷமா, என்னோட வாழ்க்கையில நடந்த எல்லா விஷயங்களையும் சகித்துக்கொண்டு பொறுமையாதான் இருக்கிறேன். இதுவரைக்கும் நான் பெருசா எதையும் எதிர்பார்த்தது இல்லை. என் வாழ்க்கையில முதல்முறையா நான் ஒரு விஷயத்தை எதிர்பார்த்தேன், அது நடந்துச்சு. ஆனா ரொம்ப காலதாமதமாக நடந்துச்சு, அதுல யாருக்குமே சந்தோஷம் இல்லை. அதுல ஒருவேளை உங்களுக்கும் சந்தோஷம் இல்லாட்டி சொல்லிடுங்க, நான் நிரந்தரமா உங்க வாழ்க்கையை விட்டுப் போயிடுவேன்” என்றாள்.

தன்போக்கில் பேசிக்கொண்டிருந்த ரத்னாவைத் தடுத்து நிறுத்தியது அஜீத்தின் கவலை நிறைந்த முகமே.

“ஏன் ரத்னா நிறுத்திட்ட? சொல்லு, உன் மனசுல இருக்குற எல்லாத்தையும் சொல்லிவிடு. இந்த உலகத்திலேயே உன்னைப் புரிஞ்சுகிட்டு, உன்னைச் சந்தோஷமா வச்சுக்கக்கூடிய ஒரே ஆள் நான் மட்டும்தான்னு இதுவரைக்கும் நினைச்சுக்கிட்டு இருந்தேன். அது இல்லைன்னு இப்போ நான் புரிஞ்சுகிட்டேன்” என்றான் அஜீத்.

அஜீத்தின் கவலை நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட ரத்னா, கட்டிலின் அருகில் மடங்கி அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தாள்.

“எதுக்காக அத்தான் என்னை அன்னைக்கு வேண்டாம்னு சொன்னீங்க? நீங்க மட்டும் அப்பவே என்னை கல்யாணம் பண்ணியிருந்தா இவ்வளவு பிரச்சனை நடந்திருக்காதுதானே? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று அழுதுகொண்டிருந்த ரத்னாவின் அருகில் அமர்ந்த அஜீத், அவளைத் தேற்றினான்.

“ரத்னா அழாதே, இங்க பாரு, என்னை ஒரு நிமிஷம் பாரு. நான் பண்ணது தப்புதான், நடந்ததை என்னால மாத்த முடியாது. ஆனால் நடக்கப்போகிறதை நல்லபடியா நடக்க வைப்பேன்” என ஆறுதல் கூற, ரத்னா அஜீத்தின் மார்பில் சாய்ந்து தேம்பிக்கொண்டிருந்தாள்.

தேம்பிக்கொண்டிருந்த ரத்னாவின் முகத்தைத் தன் இரு கரங்களிலும் ஏந்தி, “ஐ மிஸ் யூ ரத்னா… ஐ மிஸ் யூ பேட்லி… ஐ வாண்ட் ரத்னா இன் மை லைஃப்! ஐ லவ் யூ ரத்னா… நாலு வருஷமா என்னை உன்னுடைய நண்பனா மட்டும் பார்த்த நீ, என்னை காதலனாகவும் கணவனாகவும் ஏத்துக்க மாட்டியோ என்கிற பயம் மட்டும்தான் என்னுடைய காதலை உன்கிட்ட சொல்ல முடியாமல் தடுத்துட்டு” என்றான் அஜீத்.

தன் முகத்தைப் பிடித்திருந்த அவன் கையைத் தட்டிவிட்டு எழுந்து நின்ற ரத்னா, “இதுவரைக்கும் நீங்க சொன்னது எல்லாமே நான் செஞ்சிருக்கேன். அப்படி இருக்கும்போது உங்க காதலைச் சொல்லியிருந்தாலும் நான் நிச்சயம் யோசிச்சுப் பார்த்திருப்பேனே தவிர மறுத்திருக்க மாட்டேன்” எனக் கூறிவிட்டு, பால்கனியில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டாள்.

ரத்னாவின் பின்னே வந்த அஜீத், “ஏய் குட்டிப் பாப்பா, அழுமூஞ்சிப் பாப்பா… அதான் அத்தான் இவ்வளவு சொல்றேன் இல்ல, இந்த அத்தானைப் பார்த்தா உனக்குப் பாவமா இல்லையா?” என்றான்.

“அதெல்லாம் பாவமா இல்லைடா, உனக்கெல்லாம் இனிமேல் நான் பாவம் பார்க்க மாட்டேன்” என்று பழைய ரத்னாவாக வெளிவருவதைக் கண்ட அஜீத், 

“ஏய், என்ன மரியாதை எல்லாம் ரொம்ப குறையுது?” என்றான் சிரிப்புடன்.

அஜீத் கூறிய பின்புதான் தான் அஜீத்தை ஒருமையில் அழைத்ததையும், ‘டா’ போட்டுப் பேசியதையும் உணர்ந்த ரத்னா, உள்ளுக்குள் ஏற்பட்ட உற்சாகத்தை மறைத்துக்கொண்டு, 

“இனிமேல் அப்படித்தாண்டா ‘டா’ போட்டு கூப்பிடுவேன், என்னடா பண்ணுவ?” என்றாள் சவாலாக.

ரத்னாவின் முகம் உற்சாகத்தை மறைத்தாலும், குரலில் இருந்த துள்ளலும் கண்களில் இருந்த ஒரு குறுகுறுப்பும் அவனைக் காட்டிக்கொடுத்துவிட, “டா-வா? ஓகே, நீயே கூப்பிட்டுக்கோ! பட், ‘மிஸ் யூ’னு சொன்னா கிட்ட வருவேன்னு பார்த்தா பால்கனிக்கு ஓடி வர்ற… இனி எப்படி என்னை விட்டுத் தள்ளிப் போறேன்னு நானும் பார்க்கிறேன்” எனக் கூறிக்கொண்டே, நாற்காலியில் அமர்ந்திருந்த ரத்னாவைத் தன் இரு கரங்களிலும் ஏந்திக்கொண்டான்.

“ஐயோ அத்தான் ப்ளீஸ்! அத்தான் ப்ளீஸ் கீழே இறக்கி விடுங்க, எனக்குப் பயமா இருக்குது, கீழே போடப் போறீங்க!”

பயத்தில் ரத்னா தன் இரு கரங்களையும் அஜீத்தின் கழுத்தில் மாலையாக்கிக் கொள்ள, ரத்னாவின் காதுக்கு அருகில் குனிந்த அஜீத், தன் உதடுகளால் ரத்னாவின் கன்னத்தில் கோலமிட்டபடி, “இன்னைக்கு உன்னுடைய மொத்த பயத்தையும் நான் உன்னை விட்டு விரட்டப் போறேன்” என்று பேசிக்கொண்டே ரத்னாவைக் கட்டிலில் கொண்டு வந்து இறக்கினான்.

அஜீத்தின் பார்வையில் இருந்த மாற்றத்தைக் கண்டுணர்ந்த ரத்னா, “அத்தான், நான் ப்ளீஸ்… வேண்டாமே… இதெல்லாம்… இது சரியில்லை… நீங்க ரொம்ப நல்ல பையன்னு நினைச்சேன்…” என ரத்னாவின் வாய்மொழியில் மறுப்பு தெரிந்தாலும், அது உண்மையான மறுப்பு அல்ல என்பதை அறிந்து கொண்ட அஜீத், “சரியா, சரியில்லையான்னு அப்புறமா பேசலாம். நீ என்னை நல்லவன்னு நினைச்சா அதற்கு நானா பொறுப்பு?” என்றான் லேசான மயக்கத்துடன்.

“அத்தான், நான் உங்க மேல கோவமா இருக்கேன்.”

“இருந்தா இருந்துட்டுப் போ, ஆனா நான் இப்போ ரொம்ப ரொமான்டிக் மூடில்  இருக்கேன்” எனக் கூறிக்கொண்டு ரத்னாவின் அருகில் நெருங்கி வந்தான்.

“கிட்ட வராதீர்கள், வந்தா நான்…”

அவளது பலகீனமான எதிர்ப்பு அனைத்தும் அஜீத்தின் பலமான காதலின் முன்பு காற்றோடு கரைந்தன.

காதலைக் கூறப் பயந்தவன், இன்று கணவனாக அவளை ஆட்கொண்டான். காதலைத் தன்னிடம் தெரியப்படுத்தவில்லை என்ற கோபத்தில் இருந்தவள், கணவனின் கரைகடந்த காதலில் கரைந்து உருகிப் போனாள்.

கவிதைகளால் காதல் உணர்வைக் கேட்டவளின் ஒவ்வொரு அணுவிற்கும் தன் காதலை உணர்த்தினான் அந்த காதல் கணவன்.

இருவரும் அனைத்தையும் மறந்தனர்—ஜஸ்வந்த், கொலைகாரன், தங்களின் தனித்தனி திட்டங்கள் என அனைத்தையும் மறந்தனர். விடியும் வரை இருவரின் நினைவிலும் இருந்தது எல்லாம் அவர்கள் மட்டுமே! விடிந்த பின் ஒருவர் மற்றவரின் நிழலாயினர்.

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top