அத்தியாயம் 22
நண்பனே!
நட்பு வட்டத்திற்குள் நாம் இருந்தபோது,
உன் ஸ்பரிசம் ஊட்டவில்லை காதலுணர்வை…
காலம் சில கடந்த பின்பு,
என் மனம் எழுப்பிய சர்ச்சையில்,
நண்பனே உன்னைக் கணவனாக்கிக் கொண்டேன் என் மனதில்…
என் நண்பனே என் கணவனான பின்பும்,
என் மனம் குழம்பித் தவிக்கின்றதுவே உன்னால், உன் நினைவால்…
நம் நட்பின் ஆழத்தில் காதலையும்…
என் விழியோர நீரில் நட்பினையும்…
தேடித் தவிக்கின்றேனடா!
ரத்னா தன்னைக் காதலிக்கிறாள் என்ற எண்ணமே அஜீத்திற்குள் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அவன் பேச முற்படும் முன், வெளியே இருந்து தங்கவேலு அவனைக் கூப்பிட, “வந்து பேசிக்கொள்ளலாம்” என்று நினைத்து அஜீத் வெளியேறினான்.
அவன் அறையை விட்டு வெளியேறியதும் கட்டிலில் பொத்தென்று அமர்ந்த ரத்னா, வாய்விட்டுப் புலம்ப ஆரம்பித்தாள்.
‘அத்தான், நீங்க எதுக்கு ஜஸ்வந்த் பத்தி என்கிட்ட கேக்குறீங்க? நான் எப்பவும் யாருகிட்டயும் பொய் சொல்ல மாட்டேன், ஆனா இன்னைக்கு உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன். ஆக்சிடெண்ட் ஆன அன்னைக்கு நடந்த பல விஷயம் எனக்கு ஞாபகம் இருக்கு, ஆனா என்னால அதை உங்ககிட்ட சொல்ல முடியாது. நீங்க யாரும் ஜஸ்வந்த் பத்தித் தப்பா நினைக்கிறதை என்னால அனுமதிக்க முடியாது.
ஒருவேளை நான் சரியா நடந்துகிட்டிருந்தா இந்தத் பிரச்சனை எதுவும் வராமல் இருந்திருக்கலாம். என்னை மன்னிச்சிடுங்க ஜஸ்வந்த், நான் உங்க காதலுக்கு உண்மையா இல்லை. இப்போ என் மனசுல அஜீத் அத்தான் மட்டும்தான் இருக்குறாங்க, அதை நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்.’
தன் யோசனையில் தவித்துக் கொண்டிருந்த ரத்னாவைத் தோள் தொட்டுத் தன் புறம் திருப்பிய ஸ்டெல்லா, “ரத்னா, என்ன ஆச்சு? நான் உன்னை எவ்வளவு நேரமா கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்” என்றாள்.
“ஸ்டெல்லா, நீ எப்ப வந்த…” எனக் கூறிவிட்டுத் தோழியைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.
தன் தோளின் மீது பட்டுத் தெறித்த நீர்த்துளி தோழியின் கண்ணிலிருந்து வந்தது என்பதை உணர்ந்த ஸ்டெல்லா, “ரத்னா, எதுக்கு இப்பொழுது அழுதுகிட்டு இருக்க? அதான் இப்போ எல்லா பிரச்சினையும் முடிஞ்சிருச்சே, உங்க ரெண்டு பேரையும் அஜீத் வீட்டுல ஏத்துக்கிட்டாங்க, அப்புறம் என்ன? வேற ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்டாள்.
“இந்த வீட்டுல இருக்கிற யாராலயும் எனக்குப் பிரச்சனை இல்லை ஸ்டெல்லா, என்னோட பிரச்சினையே நான் மட்டும்தான்.”
“கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றியா?”
“சொல்றேன், அதுக்கு முன்னாடி நீ எப்படி இப்ப வந்த அதைச் சொல்லு.”
“நீங்க வந்திருக்கிறதா அப்பா சாயங்காலம் தான் சொன்னாங்க. எனக்கு உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு, அதான் உடனே வந்துட்டேன். உன் கல்யாணத்துக்குத்தான் கூட இருந்து எதுவும் செய்ய முடியல, சோ ரிசப்ஷன் முடியுற வரை மணப்பெண் தோழியா நான் உன் கூடத்தான் இருக்கப் போறேன்” என்றாள் ஸ்டெல்லா.
“சரி இப்ப சொல்லு, என்ன பிரச்சனை? எதுக்காக அழுதுட்டு இருந்த?”
“ஒரு நிமிஷம் இரு, நாம பேசுறது யாராவது கேட்டிடப் போறாங்க” என்று கூறி வேகமாக அறைக்கதவைப் பூட்டிவிட்டுத் தோழியை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு வந்த ரத்னா,
“ஸ்டெல்லா, எனக்கு உன்கிட்ட இருந்து ஒரு உதவி தேவை, உன்னால பண்ண முடியுமா?” எனக் கேட்டாள்.
“ரத்னா, நீ என்ன உதவி கேட்டாலும் நான் செய்கிறேன்.”
“நான் இன்னைக்கு நைட் சென்னைக்கு போகணும்.”
“என்னடி சொல்ற! உனக்கு ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்காங்க, அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?”
“நல்லா ஞாபகம் இருக்கு, ஆனா நான் கண்டிப்பா சென்னை போகணும்.”
“சரி, அப்படி நீ கண்டிப்பா போக வேண்டியது இருந்தா, அஜீத் கிட்ட சொல்ல வேண்டியதுதானே?”
“இல்லை ஸ்டெல்லா, நான் எதுக்காகப் போகப்போறேன்கிறது யாருக்கும் தெரியக்கூடாது, குறிப்பா அஜீத்துக்குத் தெரியக்கூடாது.”
“யாருக்கும் தெரியாமல் நீ போனாலும், தெரிஞ்சதுக்கு அப்புறம் பெரிய பிரச்சனை வரும்டி.”
“ஸ்டெல்லா, நான் இன்னைக்குப் போகலைன்னா அதை விடப் பெரிய பிரச்சனை வரும். அதை இங்க உள்ள யாரும் தாங்கிட மாட்டாங்க. உன்னால எனக்கு உதவி பண்ண முடியுமா முடியாதா?”
“பண்றேன்… பதினொரு மணிக்கு எங்க வீட்டுக் காரைக் கொண்டு வர்றேன், அதிலேயே போகலாம்” என்றாள் ஸ்டெல்லா நிலைமையைப் புரிந்து.
“இல்லை கார் வேண்டாம், நீ வரவும் வேண்டாம். நான் மட்டும் போறேன். எனக்கு நைட் ஃப்லைட் டிக்கெட் அரேஞ்ச் பண்ணு, அதே மாதிரி மார்னிங் ரிட்டன் டிக்கெட்டும் எடு. அப்புறம் எனக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுது, அதை மட்டும் நீ எனக்கு வாங்கித் தா.”
“எல்லாம் ஓகே, பட் நீ இன்னும் என்ன பிரச்சனைன்னு சொல்லவே இல்லையே?”
“முடிக்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு ஸ்டெல்லா, முடிச்சிட்டு வந்து சொல்றேன்.”
“ரத்னா, எனக்குப் பயமா இருக்கு, நீ ஏதாவது ஆபத்துல மாட்டிக்கப் போறியோன்னு…”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை, நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காதே” என்று கூறி ஸ்டெல்லாவை அனுப்பினாள். அவசரமாக தனது கல்லூரி சீனியர் முத்துவை போனில் அழைத்து,
“ஹாய் முத்து, நான் 1.30-க்கு சென்னை வந்துடுவேன்” என்றாள் ரத்னா.
“ரத்னாம்மா, பிரச்சனை பெருசு. நம்மளால தனியா சமாளிக்க முடியாது” என்றான் முத்து.
“இல்லை முத்து, இது என்னோட பிரச்சனை, நான் தான் சமாளிக்கணும்.”
“ம்ம்ம் சரி வா, பாத்துக்கலாம்” என அழைப்பு துண்டிக்கப்பட்டது.
போனை வைத்த ரத்னா, அறைக்குள் வெறுமையை நோக்கி, “ஜஸ்வந்த், எனக்கு என்னமோ நீங்க என்னைப் பார்த்துக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கு. உங்களைக் கொலை பண்ணவங்களை நான் கண்டுபிடிச்சு, சட்டத்து முன்னாடி நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுப்பேன். அதுக்குத்தான் நான் சென்னை போறேன்” என்றாள் உறுதியாக.
இதைக் கவனித்த ஜஸ்வந்தின் ஆன்மா, ‘வேண்டாம் ரத்னா வேண்டாம்… நான் யரையும் பழி வாங்க நினைக்கல. அதனால நீ போகக் கூடாது’ எனப் புலம்பியது. இது எதுவும் ரத்னாவின் காதுகளை எட்டாத போதும், அவளது உள்மனம் சொல்வது போல,
“நான் போவேன், கண்டிப்பா போவேன்” என்றாள்.
‘அவங்க உன்னைக் கொன்னுடுவாங்க ரத்னா!’ என்று ஆன்மா அலறியது.
“எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, அவங்களைச் சும்மா விட மாட்டேன். உங்க காதலுக்கு நான் தகுதியானவள் இல்லை. ஆனா, அவங்களுக்குத் தண்டனை கிடைச்சா மட்டும்தான் என்னால நிம்மதியா அஜீத் கூட வாழ முடியும். உங்களுக்கு நல்லா தெரியும், எனக்குப் பாரதியார் பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். என் மனநிலைக்குத் தகுந்த மாதிரி நான் பாட்டு கேட்பேன். இப்போ என் மனநிலைக்கு ஞாபகம் வர்ற பாட்டு என்ன தெரியுமா?” என்று பாரதியாரின் ‘பெண் விடுதலை’ கவிதையை முணுமுணுத்தாள்:
ஆடவரின் காதலுக்கும் பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும், மாற்றமுண்டோ?
பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட்கின்றான்!
வாடாத பூப்போன்ற மங்கைநல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல்தீதோ?
பாடாத தேனீக்கள், உலவாத்தென்றல்,
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ?
இளமைதந்தாய், உணர்வுதந்தாய், இன்பங்காணும்
இன்னுயிரும் தந்திட்டாய் இயற்கைத்தேவி,
வளமையற்ற நெஞ்சுடையார் இந்நாட்டார்கள்
மறுக்கின்றார் காதலினைக் கைம்மைகூறி!
தளைமீற வலியில்லேன்! அந்தோ! என்றன்
தண்டமிழின் இனிமைபோல் இனியசொல்லான்
உளமாரக் காதலித்தான் என்னை! அன்னோன்
ஊர்நிந்தை ஏற்பதனைச் சகிப்பேனோநான்!
ஓருயிரும் இரண்டுடலும் நாங்கள்! எம்மை
உளிகொண்டு வெட்டிவிட்ட கட்டுப்பாடே,
தீராத காதலினை நெஞ்சத்தோடு தீய்த்துவிட்டாய்…
“மனைவி இறந்துட்டா கணவன் உடனே புது மாப்பிள்ளையா மாறிவிடுகிறான். ஆனால் பொண்ணுங்களுக்கு எங்க மனசுல இருக்குற காதலை வெளியே சொல்ல முடியாது. சொன்னா இந்த உலகம் அவங்களை ரொம்ப கேவலமாத்தான் பார்க்கும். ஒருவேளை நான் அங்ககிட்ட ஜஸ்வந்த் கொடுமைக்காரரா இருந்தாருன்னு சொல்லியிருக்கலாம், ஆனா என்னால அப்படிப் பொய் சொல்ல முடியல. இப்போது யோசித்துப் பார்க்கும்போது, அந்த இரண்டு நாளைத் தவிர நீங்க என்கிட்ட எப்பவும் கோபப்பட்டது கிடையாது. அதுக்கு வேற எதுவும் காரணம் இருந்திருக்கும், நான் தான் அதைச் சரியா புரிஞ்சுக்கல. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, ஆக்சிடெண்ட் ஆன அன்னைக்கு நடந்த பல விஷயங்கள் இப்போ எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.”
“நான் நடந்ததை அஜீத் அத்தான் கிட்ட சொல்லிட்டு, அப்புறமா சென்னைக்கு போகணும்னு நினைச்சேன். பட், எப்போ அஜீத் அத்தான் உங்களைப் பத்திக் கேட்டாரோ, அப்பவே முடிவு பண்ணிட்டேன் சொல்லக் கூடாதுன்னு. என்னால அத்தானுக்கு ஆபத்து வர்றதை என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. இந்தத் பிரச்சனை முடிந்ததுக்கு அப்புறம், அஜீத் மனசுல என்ன குழப்பம் இருந்தாலும் அதை பேசிச் சரி பண்ணிடுவேன். எங்க வாழ்க்கை நிச்சயம் சந்தோஷமாக இருக்கும்” என்று தனக்குள் கூறிக்கொண்டாள் ரத்னா.
—
மறுபுறம், அஜீத் தன் நண்பனுடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான். “பிரபு, எல்லாமே என் பிளான்படி கரெக்டா நடந்துக்கிட்டு இருக்கு. ரத்னா நிச்சயமா இன்னைக்கு நைட் 12 மணிக்கு இங்க இருந்து சென்னைக்குக் கிளம்பிடுவா. அதுக்கு முன்னாடியே நானும் சென்னை வந்துருவேன். அங்க எல்லா ஏற்பாட்டையும் நீ பண்ணிடு.”
“அஜீத், எனக்குத் தெரிந்து இந்த விஷயத்துல பெரியவங்க யாரோட உதவியாவது நீ கேட்கிறது நல்லதுடா” என்றான் பிரபு.
“இல்லை பிரபு, நான் இப்போ யாரையும் நம்பத் தயாராக இல்லை. என்னுடைய யூகம் சரியா இருந்துச்சுன்னா, எங்க குடும்பங்கள்ல உள்ள ஒருத்தர்தான் ஜஸ்வந்தை கொலை பண்ணியிருக்கணும்.”
“என்னடா சொல்ற! வீட்ல உள்ளவங்க எதுக்காக ஜஸ்வந்தை கொலை பண்ணணும்? அப்படி என்ன காரணமாக இருக்கும்?” என்று பிரபு அதிர்ந்தான்.
“ஹர்ஷத், ரூபா, தங்கவேலு, ஜஸ்வந்தோட அப்பா, ரத்னாவோட அப்பா, பெரியப்பா, ஏன்… என்னோட அப்பாவாகக் கூட இருக்கலாம்! யாராக இருந்தாலும் அது இந்த மூணு குடும்பங்கள்ல உள்ளவங்களா மட்டும்தான் இருக்க முடியும். சோ, இதுல நான் யாருடைய உதவியையும் கேட்கத் தயாராக இல்லை.”
“அப்போ உன் திட்டம் தான் என்ன?”
“கொலைகாரன் யாரென்று ரத்னாவுக்குத் தெரியல, ஆனா ரத்னாவை அந்த கொலைகாரனுக்குக் கண்டிப்பா தெரியும். இப்போ ரத்னா சென்னைக்குத் தனியா போற வாய்ப்பை அந்த கொலைகாரன் கண்டிப்பா பயன்படுத்தப் பார்ப்பான். அந்த நேரம்தான் நாம அந்த கொலைகாரனைப் பிடிக்கணும்.”
“இதுல ஆபத்து ரொம்ப அதிகம் அஜீத், ரத்னாவுக்கு ஏதாவது ஆகிட்டா?” என பிரபு கவலைப்பட்டான்.
“ரத்னாவுக்கு எதுவும் ஆக விடமாட்டேன் பிரபு. பிரச்சனை எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் ரத்னாகிட்ட என்னுடைய காதலைச் சொல்லிட்டு, அப்புறமாதான் நான் முசோரி போவேன்” என்றான் அஜீத் உறுதியாக.
“இதுல போலீஸ் கேஸ் ஏதாவது ஆயிட்டா உன்னால முசோரி போக முடியாதுடா.”
“எல்லாத்தையும் நிச்சயமா நான் சமாளிப்பேன். என்னுடைய காதல், கனவு இரண்டையும் நான் அடைந்தே தீருவேன். ரத்னா இன்னைக்கு தைரியமா என் கண்ணைப் பார்த்து அவளுடைய காதலைச் சொன்னாடா… அந்த ஒரு நிமிஷம் எனக்குள்ள அவ கொடுத்த தைரியம், எல்லாப் பிரச்சினையையும் தனியா நின்னு சமாளிக்கிற மன வலிமையை எனக்குக் கொடுத்திருக்கு!” என்றான் அஜீத் கண்களில் ஒரு புதிய ஒளியுடன்.