அத்தியாயம் 6
ஜஸ்வந்தைப் பொறுத்தவரை இந்த 15 நாட்களும் ஆனந்தமான நாட்களாக இருந்தன. ரத்னாவுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு காரணத்திற்காகச் சிரித்துக்கொண்டு, அவளுடன் வம்பிழுத்து, சிறு செல்லச் சண்டைகளும் செல்லக் கோபங்களுமாக ஏதோ ஒரு மாய உலகில் இருப்பதாகவே அவனுக்கு உணர்த்தியது. ஆனால், இவை அனைத்தும் நாளை மாலை வரையில் தான் என்பதை நினைக்கும் பொழுது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சிறுவயதிலிருந்தே ஜஸ்வந்த் வைத்ததுதான் வீட்டில் சட்டமாக இருந்து வந்தது. அவன் ஆசைப்பட்ட எந்த ஒரு பொருளும் அவனுக்குக் கிடைக்காமல் இருந்ததில்லை. அவனிடம் இருக்கும் பொருட்களைப் போலவே ரத்னாவும் தன்னுடன் இருந்துவிட வேண்டும் என்று இப்பொழுது அவனுக்கு ஆசை வந்தது. யோசனையுடன் தன் அறையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த ஜஸ்வந்த், காலையில் ரத்னா தன்னிடம் கூறியதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
காலையில் ஜஸ்வந்த் ரூபாவிடம், “அண்ணி, நீங்க, தங்கவேலு ரெண்டு பேரும் இங்கதானே படிக்கிறீங்க. அது மாதிரி ரத்னாவும் இங்க உள்ள ஸ்கூல்ல படிக்கலாம் தானே?” என்று கேட்டான்.
ரூபா ஜஸ்வந்த்திடம், “நீ கேட்கிற கேள்வி நியாயமானதுதான். எனக்கும்கூட ரத்னா இங்கிருந்து படிச்சா சந்தோஷமாத்தான் இருக்கும். ஆனா நீ இந்த கேள்விய ரத்னா கிட்டதான் கேட்கணும். ரத்னா ஒருவேளை சரின்னு சொல்லிட்டா, அப்பாகிட்டயும் சித்தப்பாகிட்டயும் பேசி அவளை இங்கேயே உள்ள ஸ்கூல்ல படிக்க வைக்கலாம்” என்றாள்.
ரூபாவின் பதிலைக் கேட்ட ஜஸ்வந்த், உடனே ரத்னாவிடம் வந்து, “ரத்னா, நீ ஏன் எங்க ஸ்கூல்ல வந்து படிக்கக் கூடாது?” என்றான்.
பதிலுக்கு ரத்னா, “எனக்கு உங்க ஸ்கூல்ல படிக்கப் பிடிக்கல” என்றாள்.
“ஏன் பிடிக்கல? நீ படிக்கிற ஸ்கூல்ல விட எங்க ஸ்கூல் எவ்வளவு பெரிய ஸ்கூல் தெரியுமா? சென்னையிலேயே ‘தி பெஸ்ட்’ ஸ்கூல்.”
“உங்க ஸ்கூல் உங்களுக்கு வேணா பெஸ்ட்டா இருக்கலாம். அதுக்குன்னு நான் படிக்கிற ஸ்கூல் ஒன்னும் நல்லா இல்லைன்னு அர்த்தம் கிடையாது. அதுமட்டுமில்லாம, இங்க எனக்குப் பிடிச்ச என்னோட பிரண்ட்ஸ் யாருமே இல்லை.”
“ஏன் ரத்னா, நான் உன்னோட பிரண்ட் இல்லையா?”
“நீ என் பிரண்டுதான். ஆனா நீ என் கிளாஸ்ல படிக்க மாட்டே தானே?”
“நீ இங்கேயே சென்னையிலிருந்து படிச்சா சண்டே பீச்சுக்கு போகலாம், மால் எல்லாம் சுத்திப் பார்க்கலாம், தீம் பார்க் இருக்கு, பெரிய தியேட்டர்ல படம் பார்க்கலாம். நான் உனக்கு செஸ், கேரம், வீடியோ கேம்னு நிறைய சொல்லித்தர்றேன். இது எதுவுமே உங்க ஊர்ல உனக்குச் சொல்லித்தர யாரு இருக்கா?”
“இதெல்லாம் சொல்லித்தர எங்க ஊர்ல யாரும் இல்லைதான். ஆனா எங்க ஊர்ல பெரிய அருவி இருக்கு, மாந்தோப்பு இருக்கு. எங்க அக்கா எனக்குப் பாரதியார் பாட்டு ஒன்னு பாடிக்காட்டுவாங்க, அந்தப் பாட்டுல வர்ற மாதிரியே தென்னந்தோப்பு நடுவுல ஒரு வீடு இருக்கு. அதுமட்டுமில்லாம அங்கதான் என் அப்பா, அம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி எல்லாரும் இருக்காங்க. இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் எங்க அக்கா ஊருக்கு வந்துடுவாங்க. அதனால எனக்கு எங்க ஊருதான் பிடிக்கும், இந்த ஊரு எனக்குப் பிடிக்கல.”
“ரத்னா, அப்படின்னா நீ என்னை விட்டுட்டு உங்க ஊருக்குப் போறியா?”
“ஆமா, நான் எனக்குப் பிடிச்ச எங்க ஊருக்குப் போறேன்.”
இரவு தம்பியின் அறையில் வெளிச்சம் தெரிவதைப் பார்த்த ஹர்ஷத் உள்ளே வந்து, “ஜஸ்வந்த், தூக்கம் வரலையா?” என்று கேட்டான்.
அண்ணனிடம் வந்த ஜஸ்வந்த், “இல்ல ண்ணா” என்றான்.
“ஏன் என்னாச்சு? ஏதாவது பிரச்சினையா?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ண்ணா.”
“எதுக்காக தூக்கம் வரல? ஏதோ யோசிச்சுகிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. என்னன்னு சொல்லு, என்னால முடிஞ்சா நான் வாங்கித் தர்றேன்.”
சிறிது நேரம் யோசித்துவிட்டு அண்ணனிடம், “அண்ணா, நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும். அது எப்படி ஒவ்வொரு தடவையும் நான் கேட்காமலேயே எனக்கு ஏதாவது தேவைப்படுதுன்னு நீங்க புரிஞ்சுக்குவீங்க?” என்று கேட்டான்.
தம்பியைப் பார்த்து ஒரு சிரிப்புடன் ஹர்ஷத் கூறினான், “ஜஸ்வந்த், நான் உன்னை கிட்டத்தட்ட 17 வருஷமா பார்த்துக்கிட்டு இருக்கேன். உனக்கு ஏதாவது தேவைன்னா அதை நீ என்கிட்ட கேட்கறதுக்கு முன்னாடி இப்படித்தான் நைட் டைம்ல ரூம்ல குறுக்கும் நெடுக்கும் நடந்துகிட்டு இருப்ப. சொல்லு, என்ன வேணும்?”
“அண்ணா, எனக்கு ரத்னா வேணும்.”
தம்பி ஏதாவது ஒரு பொருளைக் கேட்பான் என்று நினைத்துக்கொண்டிருந்த ஹர்ஷத் அதிர்ச்சியுடன், “வாட்! நீ என்ன சொல்ற?” என்றான்.
“அண்ணா, எனக்கு ரத்னா வேணும்னு சொன்னேன்.”
“ஜஸ்வந்த், நீ என்ன விளையாடுறியா? நீ கேட்டது ஒன்னும் கடையில விக்கிற பொருள் கிடையாது, உனக்கு வேணும்னா வாங்கிட்டு வந்து தர.”
“ஐ நோ தட் அண்ணா. யூ நோ ஒன் திங், இந்தப் பதினைந்து நாளும் நான் ரொம்ப ஹாப்பியா இருந்தேன். அதுக்கு ரத்னா மட்டும்தான் காரணம். எனக்கு என் வாழ்க்கை முழுக்க சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா இருக்கு. அதுக்கு ரத்னா என்கூடவே இருக்கணும்.”
தம்பி கண்களில் தெரியும் தீவிரத்தைப் பார்த்த ஹர்ஷத் அவனருகில் அமர்ந்து, “ஜஸ்வந்த், நீ மூணு வயசுல சைக்கிள் கேட்ட, நாங்களும் உனக்கு வாங்கித் தந்தோம். பட், ஜஸ்ட் ஒன் வீக்ல அது பிடிக்கலன்னு தூரப் போட்டுட்ட. அதே மாதிரி 14 வயசுல ஒரு பைக் கேட்ட, அதோட விலை என்னன்னு தெரியுமா? கிட்டத்தட்ட 13 லட்சம். ஆனா அதை நீ ஒரு மாசத்துல பிடிக்கலைன்னு சொல்லிட்ட. இப்போ அது நம்ம வீட்டுல கார் ஷெட்டுல சும்மாதான் நிக்குது. ரத்னா ஒன்னும் அந்த பைக் மாதிரியோ இல்லை சைக்கிள் மாதிரியோ ஒரு பொருள் கிடையாது. நீ கேட்டதும் வாங்கிட்டு வந்து கொடுக்கிறதற்கும், உனக்கு வேண்டாம்னா அதைத் தூரப் போடுவதற்கும். நாளைக்கு ரத்னா ஊருக்குப் போயிட்டா அதுக்கப்புறம் நீங்க பார்க்கப்போறது கூட இல்லை. ரத்னா இங்க வர வாய்ப்பு கூட ரொம்ப கம்மிதான்” என்றான்.
“அண்ணா, உனக்கு எப்படி ரூபா அண்ணி தேவையோ, அது மாதிரி எனக்கு ரத்னா வேணும்.”
“ஜஸ்வந்த், புரியாம பேசாத. நாங்க லவ்வர்ஸ். அதைவிட முக்கியமான விஷயம், உனக்கு வயசு 17, ரத்னாவுக்கு 11. இன்னும் கொஞ்ச நாள் போனா நீயே ரத்னாவை வேண்டாம்னு சொல்லிடுவ.”
“நான் சொல்ல மாட்டேன் அண்ணா.”
“நீ ஒருவேளை சொல்லாம இருக்கலாம். ஆனா ரத்னா சொல்லுவா நீ வேண்டான்னு. ரத்னா குழந்தைடா, அவளுக்குக் குடும்பம்தான் முக்கியம், நீ இல்ல.”
தம்பியின் யோசனை படர்ந்த முகத்தைப் பார்த்து, “கவலைப்படாமத் தூங்கு. ஒன்னு ரெண்டு மாசத்துல நீயே ரத்னாவை மறந்துடுவ” என்று தம்பியைச் சமாதானப்படுத்திவிட்டதாக நினைத்துத் தன் அறைக்கு வந்துவிட, இரவு முழுவதும் தூங்காமல் யோசித்துக் கொண்டே இருந்தான் ஜஸ்வந்த்.
அடுத்த நாள் காலை முதல் வேலையாக நகரின் மிகப்பெரிய நகைக்கடைக்கு வந்தான். கடை முழுவதையும் அலசி ஆராய்ந்து ரத்தினக் கற்கள் பதித்த வளையல்களை வாங்கிக்கொண்டு ரூபாவின் வீட்டிற்கு வந்த ஜஸ்வந்த், ரத்னாவிடம், “ரத்னா, நீ இன்னைக்கு ஊருக்குப் போகப்போற தான? சோ, நான் உனக்கு ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்தேன். இதைப் பார்க்கிற போது உனக்கு என் ஞாபகம் வரும் தானே?” என்று அந்த வளையல்களைத் தந்தான்.
அதைப் பார்த்த ரத்னா, “நீங்க என்ன வேலை செய்யுறீங்க ஜஸ்வந்த்?” என்று கேட்டாள்.
“நான் வேலை பாக்கல, படிச்சுக்கிட்டு இருக்கிறேன்.”
“அப்படின்னா இது எனக்கு வேண்டாம். எங்க பெரியப்பா சொன்னாங்க, சம்பாதிக்கிறவங்க மட்டும்தான் செலவு பண்ணனும்னு. நீங்க தான் சம்பாதிக்கவே இல்லையே, அப்புறம் எப்படி எனக்குப் பரிசு வாங்கித் தரலாம்?”
“ரத்னா, இது எங்க அப்பா எனக்காகத் தந்த பணத்துல வாங்கினேன்.”
“உங்க அப்பா உனக்காகத் தந்தது, எனக்காக இல்ல. எனக்கு வேண்டாம்.”
தான் தந்த வளையலை வாங்க மறுத்த ரத்னாவை ஒரு அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு, மேற்கொண்டு எதுவும் பேசாமல் வெளியேறிய ஜஸ்வந்த், அதன் பிறகு ரத்னாவைச் சந்திக்க ஆறு வருடங்கள் எடுத்துக்கொண்டான். படிப்பை முடித்துத் தந்தையின் தொழிலில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய பின்னரே ரத்னாவைச் சந்திக்க வந்தான்.
இடையில் நடந்த அண்ணனின் பதிவுத் திருமணத்திற்கும் சரி, பல பிரச்சனைகளைக் கடந்து அனைவரின் முன்னிலையில் நடந்த திருமணத்திற்கும் சரி, எதிலும் அவன் கலந்து கொள்ளவில்லை.
தம்பியின் அமைதியான நடவடிக்கையைப் பார்த்து ஜஸ்வந்த் ரத்னாவை மறந்துவிட்டான் என்று ஹர்ஷத் நினைத்துக் கொண்டிருந்தான். அதனால் ஜஸ்வந்தின் அமைதி ரத்னாவை நோக்கி எடுத்து வைக்கின்ற அடி என்பதை அவன் கவனிக்கத் தவறிவிட்டான்.
“ஜஸ்வந்த்த்த்த்தத்!” என்று தன் காதுக்கு அருகில் வந்து கத்திய ரத்னாவின் சத்தத்தில் நிகழ்காலத்திற்கு வந்தான் ஜஸ்வந்த். ரத்னாவைப் பார்த்து, “ரதி… சாரி சாரி, உங்களை அப்படி கூப்பிட்டா உங்களுக்குப் பிடிக்காது. ரத்னா, நீங்க சீக்கிரம் கிளம்புங்க. உங்க பிரண்ட் வேற உங்களுக்காக வெயிட்டிங்” என்றான்.
“ப்ளீஸ் ஜஸ்வந்த், சத்தியமா எனக்கு உங்களை அடையாளம் தெரியல. கடைசியா நான் பார்க்கும்போது மீசை இல்லாம ஒல்லியா இருந்தீங்க. ஆனா இப்போ ஆளே மாறிட்டீங்க. சரி, நான் தான் தப்பு பண்ணிட்டேன், சாரி சாரி சாரி! இப்பமாவது ரூபா அக்கா பத்திச் சொல்லுங்க.”
“ஓகே ரத்னா, உன் சாரி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பட், என்னை நீ மறந்ததுக்குத் தண்டனையா 20 நாளுக்கு அப்புறம்தான் உன் ரூபா அக்கா பத்திச் சொல்லுவேன்.”
“அவ்வளவு நாளா! என்னால முடியாது, இப்பவே சொல்லுங்களேன்.”
“சொல்ல முடியாது. ம்ம்… உன்னைப் பார்த்தா கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு. சோ, நாளைக்கு நீ என்னை காலேஜ் பக்கத்தில இருக்கிற பார்க்கு ஈவினிங் வா. அப்போ நான் சொல்றேன்.”
இப்பொழுது ஜஸ்வந்திடமிருந்து ரூபாவைப் பற்றி எந்தச் செய்தியையும் பெற முடியாது என்பதைப் புரிந்துகொண்ட ரத்னா, கோபமாக அந்த அறையை விட்டு வெளியேற, அவள் பின்னே வந்தான் அஜீத்.
“ரத்னா, ரொம்ப நேரமாகிட்டு, உங்க ஹாஸ்டல் வார்டன் திட்ட மாட்டாங்களா?”
தன்னுடன் வரும் அஜீத்தைக் கவனித்த ரத்னா, “இல்ல அஜீத், நான் பிரைவேட் ஹாஸ்டல்ல தான் இருக்கேன். எங்க ஹாஸ்டல்ல ஈவினிங் எட்டு மணி வரைக்கும் அவுட்டிங் உண்டு, போகலாம். சோ திட்ட மாட்டாங்க, நான் பார்த்துப் போயிடுவேன். நீ அந்த ரூம்ல இருக்குற எருமையை யார்கிட்டயாவது விட்டுட்டுப் போ” என்று சொன்ன பிறகும் ரத்னாவை ஆட்டோ ஒன்றில் ஏற்றிவிட்டு,
“ஓகே ரத்னா பாய், பார்த்துப் போயிட்டு வா” என்று கூறி வழியனுப்பி வைத்தான்.
அப்போது வெளியே வந்த பிரபு, “என்னடா ரத்னாவை வழியனுப்பி வச்சிட்டியா?” என்று கேட்டான்.
“ம்ம், இப்பதான்டா ஆட்டோ ஏத்தி அனுப்பினேன். நீ ஏண்டா இங்க வந்து நிக்கிற? உள்ள அவரு தனியா இருப்பார் இல்ல?”
“ரொம்ப ஓவரா பண்ணாத. அந்த ஆளுக்கு அடி ஒன்னும் பெருசா இல்ல, வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க. அவர் பிரண்ட் இப்ப வர்றேன்னு சொல்லிருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல நீ உங்க வீட்டுல இல்லைன்னா வை, உங்க அப்பா அடிக்கிற அடியில நாளைக்கு நீ தான் ஆஸ்பத்திரியில இருப்ப. வா போகலாம்” என்று நண்பனின் கையை இழுத்துக் கொண்டு வந்து பைக்கில் ஏற்றிய பிறகு, பிரபு அஜீத்திடம் சொன்னான்:
“அஜீத், எனக்கு என்னமோ அந்த ஜஸ்வந்தை பார்த்தா சந்தேகமா இருக்கு.”
“ஏண்டா அப்படிச் சொல்ற?”
“பின்ன என்னடா, ரத்னா அவ அக்காவைப் பத்திக் கேட்கும்போது சொல்லணும், இல்லாட்டி சொல்லாம போகணும். அதை விட்டுட்டு ஹாஸ்டல்ல இருக்குற பொண்ணுகிட்ட நாளைக்கு ஈவினிங் என்னை மீட் பண்ணனும்னு சொல்றது சரியில்லை தானே?”
“நீ சொல்றதும் கரெக்டாதான் மச்சான். நாளைக்கு காலையில இதைப் பத்திப் பேசலாம்.”
பேச்சை அத்துடன் அஜீத் முடித்துக்கொள்ள, பிரபுவின் மனம் மட்டும் ஏதோ சரியில்லை என்று கூறிக்கொண்டிருந்தது.
அங்கு மருத்துவமனையில் ஜஸ்வந்தை பார்க்க வந்த அவனது நண்பன் கார்த்திக், “நீ பண்றது கொஞ்சமாவது உனக்கு நல்லா இருக்கா? அண்ணிகிட்ட ரத்னா ஹாஸ்டல் போன் நம்பர் கொடுத்தா அவங்க ரெண்டு பேரும் பேசிக்கப் போறாங்க. இல்லனா ரத்னாகிட்ட ரூபா அண்ணி போன் நம்பர் கொடுத்தா போதாதா? இதுக்கு ஏன்டா ரெண்டு வாரமா கோயம்புத்தூரை சுத்திச் சுத்தி வந்துகிட்டு இருக்க?” என்று கேட்டான்.
நண்பனைப் பார்த்த ஜஸ்வந்த், “நான் இங்கே என் பிசினஸை விட்டுட்டு வந்தது ரூபா அண்ணியையும் அவங்க குடும்பத்தையும் சேர்த்து வைக்க இல்லை; ரத்னாவை என் கூடவே கூட்டிக்கிட்டுப் போறதுக்கு!” என்றான்.
“என்னடா சொல்ற?”
“எஸ். ரத்னாவுக்கு அவ குடும்பத்தை மட்டும்தான் பிடிக்கும், அதை மாத்தி என்னை மட்டும் பிடிக்கிற மாதிரி செய்யப்போறேன். அதுக்கப்புறம் என்னோட ரதி பேபி என்கூட மட்டும் தான் இருப்பா. நீ வேணா பாரு, நாளைக்கு என்னோட முதல் முயற்சிய வெற்றிகரமா முடிச்சுக் காட்டுறேன்.”
வீட்டிற்கு வந்த அஜீத் தன் அறைக்கு வந்ததும் அவன் மனம், ‘பிரபு சொல்ற மாதிரி அந்த ஜஸ்வந்தால் ரத்னாவுக்கு ஏதாவது பிரச்சனை வரப்போகுதா? நோ நோ, அப்படி ரத்னாவுக்கு எந்தப் பிரச்சினையையும் நான் வர விடமாட்டேன்’ என்று மனதில் ஒரு உறுதியான முடிவை எடுத்த பின்பு உறங்கச் சென்றான்.