உன் நிழல் நான் தொட ep 5

அத்தியாயம் 5

தேனூத்து, தென்காசி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சூழலில் அமைந்துள்ளது. குற்றால அருவிகள் அருகில் உள்ளதால், இவ்வூர் பருவமழைத் தூறலுக்குப் பெயர் போனது.

தேனூத்தில் வைரவேலின் குடும்பத்தைப் பற்றித் தெரியாதவர் என்று யாருமில்லை. ஊரிலேயே மிகப்பெரிய வீடு வைரவேலினுடையது. எனவே, சுற்றியுள்ள ஊர் மக்கள் அனைவரும் வைரவேலின் குடும்பத்தை “பெரிய வீட்டுக்காரங்க” என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். வீட்டைப் போலவே அவர்களுடைய மனதும் பெரிதாக இருந்த காரணத்தால், ஊர் மக்களின் மனதில் அவர்கள் நிலையான இடத்தைப் பிடித்திருந்தனர்.

யார் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும், முதல் அழைப்பு வைரவேல் குடும்பத்திற்குத்தான் இருக்கும். ஊர் நல்ல காரியங்களுக்குச் செலவு செய்வதில் அவர் காட்டிய தாராள மனதால், வைரவேலின் பேச்சுக்கு ஊர் மக்களிடையே மிகுந்த மரியாதை இருந்தது.

ஊரின் மத்தியில் நான்கு மனை அளவு இடத்தில் அமைந்திருந்த அந்தப் பெரிய வீட்டின் நடுவில் இருந்த ஊஞ்சலில், தன் மடியில் படுத்திருந்த 8 வயது தங்கையின் தலையைக் கோதிக்கொண்டே ரூபவதி பாடிக் கொண்டிருந்தாள்:

“சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!”

பெரிய பேத்தியின் இனிய குரலில் தன்னை மறந்து, சாய்வு நாற்காலியில் கண்ணை மூடி அந்தப் பாடலின் இனிமையை அனுபவித்துக் கொண்டிருந்தார் வைரவேல். ரத்னாவைத் தூங்க வைக்கும் ரூபவதியைக் கண்ட பார்வதியும் மாணிக்கமும், பிள்ளைகளின் பாசப் பிணைப்பைக் கண்டு நெகிழ்ந்து. 

“இந்த ஒற்றுமை என்றும் நிலைக்க வேண்டும்” என்று கடவுளை வேண்டிக்கொண்டனர்.

ஒரு வழியாக ரத்னா உறங்கியதும், அவளைத் தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மாணிக்கம் முன்னறைக்கு வர, அதற்காகவே காத்துக்கொண்டிருந்த முத்துவேல், 

“மாணிக்கம், நீ என்ன சொன்னாலும் சரி, நான் ரூபாவை படிக்க சென்னைக்கு அனுப்ப மாட்டேன். படிக்கணும்னு ஆசைப்பட்டா படிக்கட்டும், அதை நம்ம ஊர்ல இருந்தே படிக்கட்டும். அவ்வளவு தூரம் போய் படிக்க வேண்டாம்” என்று உறுதியாகக் கூறினார்.

அண்ணன் பேசியதைக் கேட்ட மாணிக்கம், “அண்ணே, பாவம் ரூபா தாயில்லாத பொண்ணு. அம்மா இருந்திருந்தால் அப்பாவிடம் பேசி அனுப்பியிருப்பார்கள். அந்த ஏக்கம் அவ மனசுல வந்துடக்கூடாது, அதற்காகவாவது படிக்க அனுப்புங்க” என்ற தம்பி பேச்சால் முத்துவேல் சிறிது நேரம் யோசித்தார்.

“நீ சொல்றது சரிதான், ஆனா ரத்னாவை நினைச்சுப் பாத்தியா? ரத்னா ரூபா இல்லாம ஒரு நாள் கூட இருக்க மாட்டா” என்று கவலைப்பட்டார். 

தன் மக்களுக்காக யோசிக்கும் பெரியவரைப் பார்த்து, பார்வதி மென்மையாக, “பெரிய அத்தான், ரத்னா கவலையை நினைச்சு ரூபாவை படிக்க அனுப்பாமல் இருக்க முடியுமா? நாளைக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கும்போதும் வேற இடத்திற்குத்தானே அனுப்புவோம்? அப்போவும் இவ கவலைப்படுவாள்ன்னு பார்த்தால் முடியுமா? ரெண்டு நாள் கவலைப்படுவா, அப்புறம் பழகிவிடுவாள்” என்றார்.

தம்பி மனைவியின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த முத்துவேல், “சரி, படிக்கப் போகட்டும். ஆனா தினமும் போன் பண்ணி ரத்னா கிட்ட பேசிடணும். படிச்சு முடிச்சதும் நான் சொல்ற மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் பண்ணனும். காதல் கீதல்னு எதையாவது இழுத்துட்டு வந்து நின்னா, கொலை பண்றதுக்குக் கூட நான் தயங்க மாட்டேன்” என்று மறைமுகமாகச் சம்மதம் தெரிவித்துவிட்டு அறைக்குள் சென்றார்.

“தேங்க்யூ சித்தப்பா! அப்பா சென்னைக்கு அனுப்ப ஒத்துப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை” என்று பார்வதியைத் தழுவி மகிழ்ந்தாள் ரூபா.

தன் சிறிய தங்கையைச் சமாதானப்படுத்திவிட்டு, ரூபாவதி சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தாள். அங்கு அவளுக்கு அறிமுகமானவன்தான் ஹர்ஷத்.

ஹர்ஷத்தின் தந்தை தேவராஜ் தமிழர். மும்பையில் தொழில் செய்தவர், அங்கு அறிமுகமான மேக்னாவைத் திருமணம் செய்துகொண்டார். 

ஹர்ஷத், ரூபா படித்த அதே கல்லூரியில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தான். அழகான தோற்றம், வசதி எனப் பல பெண்கள் அவனைச் சுற்றி வந்தாலும், அவன் மனம் வேறு எங்கும் திரும்பவில்லை. அந்த ஆண்டு கல்லூரி விழாவில் ரூபாவின் பாடலைக் கேட்ட ஹர்ஷத், அவளின் குரலின் இனிமையிலும், எளிமையான அழகிலும் ஈர்க்கப்பட்டு அவளைக் காதலிக்க ஆரம்பித்தான்.

இதற்கிடையில் தங்கவேலுவிற்குச் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க, அவனும் சென்னை வந்தான். அவனுக்கு வெளியிடங்களில் உணவு ஒத்துவராததால், பெற்றோர்கள் இருவருக்காகவும் சென்னையில் ஒரு வீடு எடுத்து, வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்து சகல வசதிகளையும் செய்து கொடுத்தனர். 

தமக்கையின் காதலைத் தெரிந்துகொண்ட தங்கவேலு, முதலில் கோபப்பட்டாலும், ஹர்ஷத்தை நேரில் சந்தித்த பிறகு, அவனது குணத்தைப் பார்த்துத் தன் அக்காவின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டினான்.

ஒருமுறை செமஸ்டர் விடுமுறையில், தங்கவேலுவிற்குப் பரீட்சை நடக்க, ரூபா வீட்டிற்குச் செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டாள். ரத்னா தன் அக்கா மற்றும் அண்ணனைச் சந்திக்க அடம்பிடிக்க, வேறு வழியில்லாமல் மாணிக்கம் ரத்னாவைச் சென்னை அழைத்து வந்தார்.

“ரத்னாவைக் கவனமா பார்த்துக்கணும். லீவு முடியும் வரை ரத்னா இங்க இருக்கட்டும், அப்புறம் வந்து கூட்டிட்டுப் போறேன்” என்று கூறிவிட்டு மாணிக்கம் ஊருக்குத் திரும்பினார்.

தங்கவேலு படித்துக்கொண்டிருக்க, சகோதரிகள் இருவரும் கோவிலுக்குச் சென்றனர். அங்கே ஹர்ஷத் வந்து ரூபாவின் கையைப் பிடித்துப் பேசிக்கொண்டிருக்க, இதைப் பார்த்த ரத்னா அதிர்ச்சியடைந்தாள்.

“யாரு அக்கா இவங்க? நம்ம சொந்தக்காரங்களா? ஆனா நான் பார்த்ததே இல்லையே?” என்று ரத்னா கேட்க, ரூபா விழித்துக்கொண்டாள். ஹர்ஷத் நட்புடன், 

“ஹாய் குட்டிமா” என்று ரத்னாவிடம் பேச வர, ரத்னா கோபமாக, 

“அப்படிச் சொல்லாதீங்க! எங்க வீட்டுல உள்ளவங்க மட்டும்தான் என்னைக் கூப்பிடணும். தெரியாதவங்க யாரும் அப்படிச் சொல்லக்கூடாது” என்று சிறுபிள்ளைத்தனமாகப் பதிலளித்தாள்.

“சரி ஓகே, இனி அப்படி கூப்பிடலை. என் பேரு ஹர்ஷத். நான் உங்க அக்காவோட பிரண்டு, சோ என்னை உன்னோட பிரண்டா ஏத்துக்குவிய?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், ரத்னா தன் அக்காவையும், அவள் கரங்களோடு கோர்த்திருந்த ஹர்ஷத் கையைப் பார்த்துவிட்டு, “வா அக்கா, போகலாம்!” என்று தமக்கையின் கையைப் பிடித்து இழுத்த வண்ணம் கோவிலை விட்டு வெளியேறினாள். தங்கையின் செயலின் காரணம் புரியாத ரூபா, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்ல, அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷத், அவர்கள் வெளியேறியதும் வீடு நோக்கிச் சென்றான்.

வீட்டிற்கு வந்ததும், ரூபா ரத்னாவிடம் பேச முயற்சி செய்ய, ரத்னா எதையோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள். படித்து முடித்துவிட்டு உணவருந்த வந்த தங்கவேல், ரத்னா அமர்ந்திருந்த நிலையைப் பார்த்துவிட்டு ரூபாவின் அருகில் சென்று, “என்ன ஆச்சு? எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படி யோசிச்சுக்கிட்டு இருக்கா?” என்று கேட்டான்.

தம்பியைப் பார்த்துப் பரிதாபமாக விழித்த ரூபா, “இன்னைக்கு கோவிலுக்குப் போய் இருந்தோம். அங்க ஹர்ஷத் வந்திருந்தான். என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதே என் கையைப் பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டா. அதுக்கப்புறம் பேசாம யோசிச்சுக்கிட்டே தான் இருக்கா. என்னன்னு தெரியல” என்றாள்.

அக்காவின் நிலையைப் புரிந்துகொண்ட தங்கவேலு, ரத்னாவிடம் சென்று, “செல்லக்குட்டி, என்ன ஆச்சு? எதுக்காக இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?” என்று கேட்டான். 

அண்ணனைப் பார்த்த ரத்னா, “நான் சும்மா உட்காரல, யோசிச்சுக்கிட்டு இருக்கேன்” என்றாள்.

“அப்படி என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க?”

“நான் பண்ணது சரியா, தப்பானு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.”

“நீ என்ன பண்ண, சொல்லு? சரியா தப்பானு நான் சொல்றேன்.”

“தெரியாத ஒருத்தர் நம்மளைச் செல்லப் பெயர் வச்சு கூப்பிடக்கூடாது தானே?”

“ஆமாம், கூப்பிடக்கூடாது.”

“அதே மாதிரி பிரண்டாவே இருந்தாலும், ஆம்பளைப் பிள்ளைங்களும் பொம்பளைப் பிள்ளைங்களும் தொட்டுப் பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க. அது சரிதானே?”

“சரிதான். இப்ப அதுக்கு என்ன?”

“அப்ப நான் செஞ்சது சரிதான். ரூபா அக்கா தான் தப்பு பண்றாங்க. ஏன் தப்பு பண்றாங்கன்னு கேளுங்க.”

“சரி, அக்கா கிட்ட கேக்குறேன். வா வந்து சாப்பிடு.”

சாப்பிடும்போது அக்காவின் புறம் திரும்பாத ரத்னா, சாப்பிட்டு முடித்ததும் அமைதியாகச் சென்று உறங்கிவிட்டாள். தங்கவேல் அக்காவிடம் வந்து, “கோவில்ல வச்சு என்ன நடந்துச்சு?” என்று கேட்க, ரூபா நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் தன் தம்பியிடம் கூறினாள்.

“ரத்னா சொன்னது சரிதான் அக்கா, தப்பு எல்லாமே உன் மேல தான் இருக்கு.”

“நான் என்னடா தப்பு பண்ணினேன்?”

“ரத்னா இருக்கும்போது ஹர்ஷத்தை நீ வர சொல்லியிருக்கக் கூடாது. அப்படியே அவர் வந்திருந்தாலும் ரத்னா முன்னாடி கையைப் பிடிச்சுக்கிட்டுப் பேசியிருக்கக் கூடாது.”

“நான் வேணும்னு எதுவும் செய்யலடா.”

“உன்னோட நிலைமை எனக்குப் புரியுது. அதே மாதிரி ரத்னாவைப் பத்தி நீ நினைச்சுப் பார்த்தியா? இதுவரைக்கும் நாம என்ன சொல்றோமோ அதை மட்டும்தான் செய்வா. நாமளே அதை மீறினால் அவ என்ன செய்வா? இனிமே பார்த்து நடந்துக்கோ.”

அன்று ஏனோ ரூபாவிற்கு உறக்கம் வரவில்லை. எனவே ஹர்ஷத்தை அழைத்து வீட்டில் நடந்த அனைத்தையும் கூறினாள். ஹர்ஷத், “சின்ன விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாத. நாளைக்கு பத்து மணிக்கு உன் தங்கச்சிய மாலுக்குக் கூட்டிட்டு வா. ரத்னாவைச் சமாதானப்படுத்துற வேலையை நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

“சரி கூட்டிட்டு வர்றேன்.”

“ஓகே பாய். கவலைப்படாமத் தூங்கு.”

“ம்ம் சரி பாய்.”

காலையில் தன்னுடன் வர மறுத்த ரத்னாவைச் சமாளித்து, நகரின் நடுவில் இருந்த மாலுக்கு ரூபா அழைத்து வந்தாள். அவர்கள் வருவதற்கு முன்பே ஹர்ஷத்தும், அவனுடைய +1 படிக்கும் தம்பி ஜஸ்வந்தும் காத்திருந்தனர். 

நேற்று கோவிலில் சந்தித்த அந்த புதியவருடன் இன்னொருவரையும் பார்த்த ரத்னா, “அக்கா வா, வீட்டுக்கு போகலாம். இப்ப நீ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலைன்னா, நான் அண்ணாவுக்கு போன் பண்ணி நீ தப்பு பண்றதைச் சொல்லிடுவேன்” என்றாள்.

“ரத்னா ப்ளீஸ், கொஞ்ச நேரம் நான் சொல்றதை கேளு.”

“நான் கேட்கமாட்டேன் அக்கா, இப்போ உடனே என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ!”

சகோதரிகள் இருவரின் உரையாடலில் இடையில் புகுந்த ஜஸ்வந்த், ரத்னாவின் அருகில் வந்து, “ஏய் குட்டைக் கத்தரிக்காய்! யார் என்ன பேசினாலும் முழுசா கேட்காம இப்படித்தான் தையத்தக்கான்னு குதிச்சுக்கிட்டு இருப்பியா?” என்று அவள் உயரத்தைக் கிண்டல் செய்தான்.

ஜஸ்வந்த் புறம் திரும்பிய ரத்னா, “யாரைப் பார்த்து குட்டைக் கத்தரிக்காய் என்று சொன்ன?”

“ஏன், உனக்குக் காது சரியாகக் கேட்கலையா? உன்னைப் பார்த்துதான் சொன்னேன்.”

“ஒழுங்கு மரியாதையா இப்ப என்கிட்ட மன்னிப்பு கேளு.”

“கேட்கலைன்னா என்ன செய்வ?” என்று திமிருடன் பேசினான் ஜஸ்வந்த். அவனை அடிக்கச் சுற்றும் முற்றும் பார்த்த ரத்னாவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. மீண்டும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காத ஜஸ்வந்த், “ஜெம்ஸ் மிட்டாய், தேவையில்லாம யோசிக்காதே. பேர்ல இல்லாத மூளையை ரொம்ப கஷ்டப்படுத்தாதே. உன் மண்டையில இருக்கிறது களிமண்ணுதான்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடப் போகுது” என்றான்.

அதற்கு மேல் பொறுக்க முடியாத ரத்னா, ஜஸ்வந்த் அருகில் சென்று அவன் கையை வேகமாகக் கடித்து வைத்தாள். இதைப் பார்த்த ஹர்ஷத்தும் ரூபாவும் இருவரையும் பிரித்தனர். ஜஸ்வந்த் கையில் ரத்னாவின் பற்கள் பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. இருவரும் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது, தன் தங்கையைத் தனியே அழைத்து வந்த ரூபா, “உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? இவ பெரிய கவரிமானா? ஒரு சொல் பொறுத்து போக மாட்டியா? நேத்து என்னடான்னா கோவில்ல இருந்து என் கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு வர்ற, இன்னைக்கு விளையாட்டா ஜஸ்வந்த் பேசிக்கிட்டு இருக்கும்போது கடிச்சு வச்சிருக்க?” என்று கோபமாகக் கத்தினாள்.

ரூபாவின் அருகில் வந்த ஹர்ஷத், “ரூபா விடு, ரத்னா சின்னப் பொண்ணு. தெரியாம செஞ்சிருப்பா” என்று தங்கைக்குச் சாதகமாகப் பேச, ரூபா, 

“யாரு இவ சின்னப் பொண்ணு? பேச்சு எல்லாம் பெரிய மனுஷி மாதிரி பேசிக்கிட்டு இருக்க!” என்றாள். அதன் பின் அவர்களின் பேச்சு ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்க, ரத்னாவிற்கு எதுவும் புரியவில்லை. அவளுக்குப் புரிந்தது ஒன்றுதான்; பிறந்தது முதல் யாரிடமும் திட்டு வாங்காத தன்னை, தன் அன்பு அக்கா திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதுதான்.

அவர்கள் இருவரும் டாக்டர் அறைக்குள் சென்றுவிட, அருகில் இருந்த ஒருவரிடம் சென்று, “அண்ணா ப்ளீஸ், உங்க போன் கொஞ்சம் தாங்களேன். நான் என் அண்ணா கிட்ட பேசிட்டு தர்றேன்” என்று போனை வாங்கினாள்.

“அண்ணா, நான் ரத்னா பேசுறேன்.”

“ரத்னா, என்னம்மா இது? யாரு போன் இது?”

“என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க அண்ணா.”

“என்ன நடந்துச்சு? சொல்லுமா.”

“என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க அண்ணா.”

“அக்கா எங்கம்மா?”

“என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க அண்ணா.”

சொன்னதையே திரும்பத் திரும்ப ரத்னா சொல்ல, ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்த தங்கவேலு, “சரி அண்ணன் வரேன். நீ எங்…” என்று கேட்கும் முன் ரத்னா போனை அணைத்துக் கொடுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

சிகிச்சை முடிந்து மூவரும் வெளியே வந்ததும், ஜஸ்வந்திடம் சென்ற ரத்னா, “என்னை மன்னிச்சிடுங்க. நான் கோபத்துல கடிச்சு வச்சுட்டேன், சாரி” என்று கண்ணீர் மல்கக் கரம் கூப்பி மன்னிப்பு கேட்டாள். 

அந்நேரம் அங்கு வந்த தங்கவேலு, “அக்கா, என்ன நடந்துச்சு? எக்ஸாம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் நீங்க இல்லன்னு போன் பண்ணா ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு சொல்ற? எதுக்கு ஹாஸ்பிட்டல் வந்தீங்க?” என்று கேட்க, ரூபா பேசும் முன்பு ரத்னா, “அண்ணா, வீட்டுக்கு போகலாம் ப்ளீஸ்” என்றாள்.

தங்கையின் கலங்கிய முகத்தைப் பார்த்த தங்கவேலு, “சரி அக்கா, நான் ரத்னாவைக் கூட்டிட்டுப் போறேன். நீ ஹர்ஷத் கூட வந்துடு” என்று கூறிவிட்டு அழைத்து வந்தான். வீட்டிற்கு வந்ததும், 

“குட்டிமா, என்ன ஆச்சு?” என்று அண்ணன் கேட்க, அவள் பதில் கூறாமல் 

“நான் வீட்டுக்குக் கிளம்புறேன்” என்றாள்.

“சரி, சித்தப்பா கிட்ட கூட்டிட்டுப் போகச் சொல்றேன். அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.”

அண்ணனை ஒரு நிமிடம் பார்த்த ரத்னாவின் கண்கள், அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரைச் சிந்தின. பதறிய தங்கவேலு கண்ணீரைத் துடைத்துவிட்டு, 

“குட்டிமா அழாதீங்க, நீங்க அண்ணா கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்” என்றான். ரத்னா அண்ணனைக் கட்டிப்பிடித்துத் தேம்பித் தேம்பி, 

“அண்ணா, தெரியாதவங்க செல்லப் பெயர் வச்சு கூப்பிடக்கூடாதுன்னு அப்பா என்கிட்ட சொன்னாங்க, அதான் அவங்ககிட்ட நான் பேசல. பசங்க பொண்ணுங்களைத் தொட்டுப் பேசக்கூடாதுன்னு அம்மா சொன்னாங்க, அதான் அக்காவைக் கோவில்ல இருந்து கூட்டிக்கிட்டு வந்தேன். யாராவது தப்பு பண்ணா மன்னிப்பு கேட்கணும்னு நீங்கதானே சொன்னீங்க? அதான் இன்னைக்கு அந்தப் பையனை மன்னிப்பு கேட்கச் சொன்னேன். ஆனா அவங்க மன்னிப்பு கேட்காம, பட்டப் பெயர் வச்சு கூப்பிட்டான். அதான் கோபத்துல கடிச்சுட்டேன். அக்கா என்ன திட்டிட்டாங்க, நான் அம்மா கிட்ட போறேன்” என்று அழுது கொண்டே கூறினாள்.

அவளைச் சமாதானப்படுத்திச் சாப்பிட வைத்துத் தூங்க வைத்தான். தூக்கத்திலும் விம்மிக்கொண்டிருந்த தங்கையைப் பார்த்த தங்கவேலு, அக்கா மீது வந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்.

வீட்டிற்குள் வந்த ரூபாவிடம், “ஏன் இவ இப்படி நடந்துக்கிறா? ஹர்ஷத் என்ன நினைப்பான்?” என்று ரூபா ரத்னாவைக் குறை சொல்ல, தங்கவேலு, 

“நீங்க ஏன்கா இப்படி நடந்துக்கிறீங்க? ரத்னா உங்களைப் பத்தி என்ன நினைப்பா?” என்று ரத்னா கூறிய அனைத்தையும் சொல்லிவிட்டு, 

“நீங்க மாறிட்டீங்க அக்கா. உங்களுக்கு உங்க காதலும், அவங்க வீட்ல உள்ளவங்களும் முக்கியமா இருக்கலாம். அதுக்காக ரத்னாவக் காயப்படுத்தாதீங்க. அக்கா, ரத்னாவுக்கு 10 வயசுதான் ஆகுது. அவளுக்கு நாம மட்டும்தான் உலகம். நாம என்ன சொல்றோமோ அதை மட்டும்தான் செய்வா. அத தாண்டி வேற எதைப்பத்தியும் யோசிக்கக் கூட மாட்டா. அதை நீங்க புரிஞ்சு நடந்துகிட்டா நல்லது” என்றான்.

தன் அறைக்கு வந்ததும் உறங்கிக் கொண்டிருந்த ரத்னாவின் கண்ணீர்க் கோடுகளைப் பார்த்துப் பதறிப்போன ரூபா, தான் செய்த தவறைப் புரிந்துகொண்டாள். மறுநாள் விடிந்ததும், ரூபா ரத்னாவிடம் வந்து, 

“அக்காவை மன்னிச்சிடு, நான் நேத்து கோபத்துல உன்னைத் திட்டிட்டேன். நான் பண்ணது தப்புதான்” என்று மன்னிப்பு கேட்க, ரத்னா அக்காவைக் கட்டிக்கொண்டு, 

“இனிமேல் நீ என்ன திட்டக்கூடாது சரியா? நீ திட்டினா எனக்கு ரொம்ப அழுக அழுகையா வருது” என்றாள்.

“சரி, இனிமேல் நான் உன்னை எப்போதும் திட்டவே மாட்டேன்” என்று சத்தியம் செய்தாள். இருவரும் சமாதானமாகி சிரிப்புடனும் விளையாடுடனும் காலை உணவை உண்டு கொண்டிருந்தனர். அப்போது ஹர்ஷத்தும் ஜஸ்வந்தும் உள்ளே வர, ரத்னா சிரிப்பதை நிறுத்தி மௌனமாகிவிட்டாள். ரூபா அவர்களை அழைத்து அமரவைத்து பழச்சாறு கொடுத்தாள்.

ஜஸ்வந்த் ரத்னாவிடம் வந்து, “சாரி, நான் உன்னை கிண்டல் பண்ணுவதற்காக அப்படிப் பேசல. உங்க அக்கா பெரியவங்கதானே, அவங்க முன்னாடி நீ சத்தமாப் பேசக்கூடாதுங்கிறதுக்காகத்தான் அப்படிப் பேசிட்டேன். அதுமட்டுமில்லாம நீ ரொம்ப ஸ்வீட்டா இருப்பேன்னு உங்க அக்கா சொன்னாங்க, அதான் உன்ன ஜெம்ஸ் மிட்டாய்னு சொன்னேன். சாரி, என்னை மன்னிச்சிடு” என்று விளக்கமாகக் கூறி மன்னிப்பு கேட்டான்.

தன் அறையிலிருந்து வெளிவந்த தங்கவேலு ரத்னாவிடம், “குட்டிமா, ஜஸ்வந்த் வந்து மன்னிப்பு கேட்டுட்டாங்க தானே? இனிமேல் கோபப்படக்கூடாது சரியா?” என்றான்.

“சரின்னா, இனிமேல் நான் கோபப்பட மாட்டேன்.”

“இனிமேல் ஜஸ்வந்த் உனக்கு பிரண்டு தான், அதனால நீ பேசலாம்.”

“சரி அண்ணா.”

“அதே மாதிரி ஹர்ஷத் அத்தான் நம்ம அக்காவோட பிரண்டு, அவரு அக்கா கிட்ட பேசுறதுக்காக எப்பவாவது வருவாரு, அதை நீ பார்த்து கோபப்படக்கூடாது, புரிஞ்சுதா?”

“புரிஞ்சுது அண்ணா.”

அதன்பிறகு வந்த நாட்களில் ஜஸ்வந்தும் ரத்னாவும் நல்ல நண்பர்களாயினர். பெண் குழந்தைகள் இல்லாத காரணத்தாலோ என்னவோ, ஜஸ்வந்திற்கு ரத்னாவின் சேட்டைகள் மிகவும் பிடித்துவிட்டன. 

ரத்னாவிற்கும், தன் அக்காவிடம் உரிமையாகப் பேசும் ஹர்ஷத்தை விட, தன்னிடம் தோழமையாகப் பழகும் ஜஸ்வந்தை மிகவும் பிடித்துவிட்டது. அவளுக்குப் புரியாதவற்றை விளக்கிச் சொல்வது என நாட்கள் நகர, விடுமுறை முடிந்து ரத்னா ஊருக்குச் செல்லும் நாளும் வந்தது.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top