உன் நிழல் நான் தொட
–செசிலி வியாகப்பன்
ஹாய் மக்களே…
நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்குக் கதை எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது விளையாட்டாக நான் எழுதிய முதல் கதைதான் இது!
அதற்குப் பிறகு நான் பல கதைகளை எழுதி, அதில் சில புத்தகங்களாகவும் வெளியாகிவிட்டன. இருந்தாலும், ஆரம்பக் காலத்தில் எவ்விதப் பயிற்சியும் இன்றி, தப்பும் தவறுமாக நான் எழுதிய இந்த முதல் கதைக்கு எப்போதுமே என் மனதில் ஒரு தனித்துவமான ‘ஸ்பெஷல்’ இடம் உண்டு.
என் எழுத்துப் பயணத்தின் தொடக்கப் புள்ளியான இந்தக் கதையைப் படித்துப் பார்த்துவிட்டு, உங்கள் அன்பான கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
செசிலி வியாகப்பன்
அத்தியாயம் 1
அது ஒரு அழகிய காலைப் பொழுது. கோவை மாநகரம் அந்த காலை வேளையில் பரபரப்பாய் இருக்க, அதன் மக்களும் தங்கள் வாழ்வின் கனவை, கவலைகளுடன் அடையப் பயணிப்பதில் சற்று பரபரப்பான நிலையில் இருந்தது. அத்தகைய கவலை எங்களுக்கு இல்லை என்று சீருடை என்னும் கூட்டிலிருந்து வெளிவந்த வண்ணத்துப் பூச்சிகளாக மாணவ மாணவிகள் பலப்பல கனவுகளுடன் அந்தப் புகழ்பெற்ற **பொறியியல் கல்லூரியில்** அடியெடுத்து வைத்தனர்.
அந்தக் கல்லூரி வாசலில் அடியெடுத்து வைத்தான் அவன், அஜீத் சந்திரன். ஆறடிக்கும் சற்று குறைவான உயரம், கோதுமை நிறம், மீசை இல்லா முகம், ஒரு சாக்லேட் பாய் லுக். அவனுக்கு இந்தக் கல்லூரியில் படிப்பதில் துளியும் விருப்பம் இல்லை. அவன் கனவு **ஆசிரியர் பணி**, ஆனால் அவன் தந்தை அவனை ஓர் **இன்ஜினியராக** மாற்ற விரும்பினார். பிறந்தது முதல் தந்தையை எதிர்த்துப் பேசாதவன், முதல் தடவை பேசினான்; அல்லது முயன்றான். ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.
கிருஷ்ண சந்திரன் (அஜீத் தந்தை) வீட்டுத் திண்ணையில் அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார். தன் பக்கத்தில் ஆரவாரம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார். அதை அனுமதியாக எடுத்துக்கொண்டு அவர் முன்பு தைரியத்தைத் திரட்டி அஜீத் பேச ஆரம்பித்தான். தன் வீரம், தைரியம் அனைத்தையும் ஒன்று திரட்டி தன் தந்தையிடம்,
“அப்பா……. எனக்கு இங்க படிக்கப் பிடிக்கலை. நான் இஞ்சினியரிங் படிக்க……….”
மேற்கொண்டு பேசும் முன்பு தந்தையின் பார்வை அவனைத் தடுத்தது. தன் முன் பேசும் மகனை ஒருமுறை கூர்ந்து பார்த்துவிட்டு, “நீ வாங்குன மார்க்குக்கு இந்த இஞ்சினியரிங் காலேஜ் போதும். ஒழுங்காப் படிக்கிற வழியைப் பாரு” என்று கூறிவிட்டு, அத்துடன் பேச்சுவார்த்தை முடிந்தது என்று தன் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார். விதியை நொந்துகொண்டான். இதற்கும் அவன் மோசமான மதிப்பெண் பெறவில்லை, தேர்வு நேரத்தில் உடல்நிலை சரியில்லாத போதும் 89 சதவீத மதிப்பெண் பெற்றான். அவன் தந்தைக்கு அது போதாது. (சுருக்கமா சொல்லணும்னா நம்ம ஹீரோ தந்தை, ‘அப்பா’ படத்தில் வரும் தம்பி ராமையா மாதிரி).
கிருஷ்ண சந்திரன் நகரின் நடுவே பல கட்டிடங்களைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார், அவற்றுள் ஒன்றில் மளிகைக் கடை ஒன்றும் நடத்திக்கொண்டிருந்தார்.
அவரைப் பொறுத்தவரை மருத்துவம், பொறியியல் பணி மட்டுமே உயர்ந்தது. மற்ற படிப்புகள் பற்றி யோசிப்பது கூட இல்லை. மனைவி மைத்திலி, கணவன் சொல்வாக்கே மந்திரம் என்று சொல்லக்கூடிய பொறுப்பான குடும்பத் தலைவி. மூத்த மகள் ஆர்த்தி, தந்தை விருப்பப்படி கணித இளங்கலை முடித்துவிட்டு பி.எட் படிக்கும் பெண். மகன் அஜீத், நம்ம ஹீரோ, இவரைப் பற்றி கதையில் தெரிந்துகொள்ளலாம்.
இளைய மகள் அர்சனா +2, அப்பா முன் அமைதியாகவும், மற்றவர்களிடம் தன் அடாவடித்தனத்தால் வம்பு இழுக்கும் சுட்டிப்பெண். இவர்கள் அனைவரையும் அவர் விருப்பப்படி செயல்பட வைக்கும் பெருமை வாய்ந்தவர் திரு. கிருஷ்ண சந்திரன்.
பழைய நினைவுகளில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் கல்லூரிக்குள் நுழைந்தான். அவன் தன் தந்தை தனக்காகத் தேர்ந்தெடுத்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையை நோக்கிச் செல்ல, அங்கு மூத்த மாணவர்கள் தங்கள் இளவல் மாணவர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர்.
இந்தக் கல்லூரியில் ரேகிங் கிடையாது, இருந்தாலும் யார் கேங் பெருசு, எந்த டிபார்ட்மென்ட் பெருசு அப்படின்னு போட்டி உண்டு. சில சமயம் போட்டி பொறாமையாக மாறி, பொறாமை போர்க்களமாகவும் மாறும். அதன் வெற்றியையும், தோல்வியையும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் காலேஜ் எலக்ஷன், ஸ்போர்ட்ஸ் டே, இன்டர் டிபார்ட்மென்டல் காம்படிஷன் மூலம் தீர்மானித்துக்கொண்டனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நம்ம ஹீரோயினின் என்ட்ரி கொடுக்கிறாங்க. ஹீரோயினைப் பற்றிச் சொல்லணும்னா பெயர் ரத்னாவதி, ஐந்தரை அடிக்குச் சற்று அதிகம், உருவத்தைப் பார்த்தாலே கிராமத்துப் பொண்ணுன்னு கண்டுபிடிச்சிரலாம். இந்த 21-ம் நூற்றாண்டில துப்பட்டாவை ரெண்டு பக்கம் பின் பண்ணி, எண்ணெய் தேய்த்து, கனகாம்பரப் பூ வைத்து வந்தால் எப்படி? (என்ன கொடுமை சார் இது!) சும்மா போறவனுக்குக் கூட கிண்டல் பண்ணத் தோணும். ஆனால் ரத்னாவதிக்குத் தன் தோற்றத்தைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது.
கல்லூரி நுழைவாயிலில் எந்தெந்த டிபார்ட்மென்ட் எப்படிப் போக வேண்டும்னு ரூட் மேப் இருந்தது. ஆனால் ரத்னாவிற்கு இங்கிலீஷ்னாலே அலர்ஜி, சோ எந்தப் பக்கம் செல்ல வேண்டும் எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குரூப் கடந்து செல்ல, அவர்களிடம் வழி கேட்டாள். அவளைப் பார்த்தவர்களுக்குக் கேலி செய்ய ஆசை வந்தது.
அவர்களில் ஒருவன், “அம்மா மாரியம்மா, இந்த பக்கம் போ” என்று சொல்ல,
இன்னொருவன், “டேய், இது மாரியம்மா இல்ல மரிக்கொழுந்துடா. அதுவும் இந்த மச்சானோட மரிக்கொழுந்து, சரிதானடா?”
மற்றொருவன், “நீ சொன்னா சரிதான் மாப்ள.”
சரியாக அந்த நேரம் வைஸ் பிரின்சிபால் தேவசகாயம் வர, அமைதியானது. உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. காரணம் தேவா சார் ஒரு கண்டிப்பானவர். தப்பு செய்தால் டி.சி. கிழித்துக் கையில கொடுத்து அனுப்பிடுவார்.
அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, “இங்க என்ன நடக்குது? நீங்க எல்லாரும் செகண்ட் இயர்ஸ் தான? கிளாஸ்க்குப் போகாம என்ன பண்றீங்க?” பின் ரத்னாவிடம் திரும்பி,
“நீ பாக்க ஃபர்ஸ்ட் இயர் மாதிரி இருக்க, இவங்க உன்கிட்ட வம்பு பண்ணாங்களா?” என்று கேட்க, அவர்கள் ‘இல்ல’ன்னு சொல்லும் விதமாகச் சைகை செய்ய,
அதைப் பார்த்து மனம் இரங்கி, “இல்ல சார், முதலாமவனை காட்டி இவரு என் மச்சான், அதான் பேசிட்டு இருந்தோம்னு” சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்து குறும்புத்தனம் நிறைந்த பார்வை வீச, அந்த மாணவர்கள் கலவரம் ஆயினர்.
VP அனைவரையும் முறைத்துவிட்டு, “All of you go back to your class” என்று கத்திவிட்டுச் செல்ல, அவர்களிடம் நிம்மதி பிறந்தது.
“தேங்க்ஸ் மா, நீ மட்டும் உண்மைய சொல்லியிருந்தா நாங்க இன்னைக்கு சட்னி தான்.” என்று பெருமூச்சு விட்டனர். “இவங்க சுப்புரமணி, முத்து, என் ப்ரெண்ட்ஸ். நாங்க B.E. கம்ப்யூட்டர் சயின்ஸ் செகண்ட் இயர். உனக்கு என்ன உதவின்னாலும் தயங்காம கேளு, நாங்க செய்யக் காத்துக்கிட்டு இருக்கோம்” என்று கூற,
ரத்னா அவர்களை நோக்கித் தன் கையை நீட்டி, “நான் ரத்னாவதி. சொந்த ஊரு தென்காசி பக்கத்துல தேனூத்து. இஞ்சினியரிங் படிக்க வந்திருக்கேன். ஹாஸ்டல் தான், எனக்கு உங்ககிட்ட இருந்து நிறைய உதவி தேவைதான். ஆனா இப்போ எனக்கு கிளாஸ்க்கு வழி சொன்னா போதும்” என்று கூறி நகர, இந்நிகழ்வை ஒரு ஜோடி விழிகள் ரசித்துக்கொண்டிருந்தன.
ஒரு வழியாக கிளாஸ்க்கு வந்த பிறகு, எங்க இடம் இருக்குன்னு தேட, நடு வரிசையில் முதல் பெஞ்சில் மட்டும் தான் இடம் இருந்தது. வேறு வழி இல்லாமல் அங்கு சென்று அமர்வதற்கும், பேராசிரியர் வருவதற்கும் சரியாக இருந்தது.
முதல் நாள் என்பதால் அறிமுகப் படலம், அறிவுரை படலம், வழிகாட்டும் படலம் முடிய நம்ம ஹீரோ, ஹீரோயின் நொந்து போயிட்டாங்க. சப்டைட்டில் இல்லாம புரியாத மொழி படம் பார்க்கிற எஃபெக்ட்ல ரத்னாவும், வேண்டா வெறுப்புல அஜீத்தும் இருந்தனர். அன்று எல்லா வகுப்பு முடிந்தவுடன் அனைவரும் வீட்டை நோக்கியும், ஹாஸ்டலை நோக்கியும் சென்றனர்.
எந்தவிதச் சலனமும் இன்றி ஒரு வாரம் கடந்தது. அனைத்து மாணவர்களும் தங்களை அந்தப் புதிய சூழ்நிலையுடன் பொருத்திக்கொண்டனர். சில அழகான காதலும், பல ஆழமான நட்பும் உருவாகும் முதல் படியில் இருந்து, இந்நிலையில் பாடங்கள் நடத்தப்பட ஆரம்பித்தன. என்னதான் பிடிக்காத பாடம் என்றாலும் கவனத்துடன் படிக்க ஆரம்பித்தான்.
புக்கையும், போர்டையும் மட்டும் பார்த்த அஜீத், தனக்கு பக்கத்து பெஞ்சில் இருந்த ரத்னாவை மட்டுமில்லை, எந்தப் பெண்களையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவன் அப்பா வளர்ப்பு அப்படி. அவன் மனம் திறந்து பேசுகின்ற ஒரே நபர் பிரபு (பள்ளி & கல்லூரி தோழன்), ஏழு வருட நட்பு. பிரபு கலகலப்புப் பேர்வழி. எதிர் எதிர் துருவங்கள் ஈர்த்து நண்பர்கள் ஆகிட்டாங்க.
அஜீத்திற்கு நேர் மாறாக, ரத்னாவிற்குப் பல குழு நண்பர்கள் & நண்பிகள். கலகலப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது.
அன்று பேராசிரியர் ராம்குமார், ஒரு இன்ஜினியரிங் பாடம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். இடையில் சில மாணவர்களை வாசிக்கவும் கூறினார். ரத்னாவின் முறை வர, அவள் வாசிக்க முடியாமல் திணற வகுப்பறையில் சிரிப்பலை.
அதில் நிமிர்ந்த அஜீத், முதல் தடவை ரத்னாவைப் பார்த்தான். இது எதுவும் என்னை பாதிக்காது என்று நின்றிருந்த ரத்னாவைப் பார்த்து மேலும் சிரிக்க, ரத்னா அனைவரையும் பார்த்து, “இங்கு சிரிப்பவர்கள் சிரிப்போம், அது ஆணவ சிரிப்பு” என்று ஒரு பாடலைப் பாடிவிட்டு, “மை டியர் ப்ரெண்ட்ஸ், எனக்கு இங்கிலீஷ் தெரியாது. நான் அதுக்கு ஃபீல் பண்ணல. என்ன, நான் தெரியாத விஷயத்தைக் கத்துக்க வந்திருக்கேன். தெரியல, பிடிக்கல அப்படின்னு வருத்தப்படாம அனுபவிச்சுப் படிப்பேன். அதுவரைக்கும் சேர்ந்து சிரிச்ச மாதிரி சேர்ந்து சப்போர்ட் பண்ணுங்க” என்று பேசி முடிக்கவும் பெல் அடிப்பதற்கும் சரியாக இருந்தது. பேராசிரியர் ஒரு சிரிப்புடன் விடைபெற, அனைத்து மாணவர்களும் அவளிடம் மன்னிப்பு கேட்டனர்.
அன்று இரவு ரத்னா பேசியதை நினைத்துக்கொண்டிருந்தான் அஜீத். “தெரியல, பிடிக்கல அப்படின்னு வருத்தப்படாம அனுபவிச்சுப் படிப்பேன்”. மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்க, தெளிவான முடிவுடன் உறங்கச் சென்றான். அதே நேரத்தில் ரத்னாவின் செயல்களை ரசித்த இரு விழிகள், ரத்னாவதி புகைப்படத்தின் முன் தூக்கத்தைத் தொலைத்து நின்றுகொண்டிருந்தது.