கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தாள் அந்த அலுவலகத்தில் வரவேற்பறையில் அமர்ந்து இருக்கும் பெண் மதி.
“மேம்…” என்று கூறி நீலாம்பரியின் எதிரே நின்றிருந்தவளது கைகளில் தேநீர் அடங்கிய கோப்பை சிறிய பீங்கான் தட்டில் வீற்றிருந்தது.
அவளை பார்த்த நீலாம்பரியோ டேபிளின் மீது வைக்கும் படி வாய் வார்த்தையாக கூறாமல் கண் ஜாடை செய்திருந்தாள்.
அவளும் வைத்து விட்டு திரும்பி செல்ல எத்தனிக்க சொடக்கிட்டு அவளை நிறுத்தியிருந்தாள் நீலா.
மதியோ திரும்பி “எஸ் மேடம்…” என்று கூறியிருந்தாள்.
நிதானமாக தனக்கு அவள் கொண்டு வந்திருந்த தேநீரை எடுத்து குடித்து கொண்டே “டீ குடிக்க போனா அந்த வேலை மட்டும் செய்யனும். அத விட்டுட்டு கேன்டின்ல என்ன வெட்டியா அரட்டை வேண்டிக்கிடக்கு…” என்றாள்.
“மேடம்… அது வந்து… சும்மா தான் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்னு நினைச்சேன்…”
“ஒஹோ… அப்படியா? உங்கள வேலய விட்டு நிறுத்திட்டா கொஞ்ச நேரம் என்ன ரொம்ப நேரமே பேசிகிட்டு இருக்கலாம்… எப்படி பண்ணிடட்டுமா?” என்று ஏற்ற இறக்கங்களுடன் நக்கலாக கேட்டாள்.
அவள் இப்படி கூறுவதை கேட்டு பதறிய மதியோ “ஐயோ… மேடம் அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க… என்னோட சம்பளத்தை நம்பி தான் என் குடும்பமே வாழுது… ப்ளீஸ்… என்னைய வேலைய விட்டு துரத்திடாதீங்க…” என்று அழுவதை போல் கூறினாள்.
“ம்… செய்ய கூடாதுனா அது இனி நீங்க நடந்துக்குற விதத்தை பொறுத்து தான் இருக்கு… இனி மேலாவது இப்படி வெட்டியா உட்கார்ந்து அரட்டை அடிக்கறது நிறுத்திக்கோங்க… கெட் லாஸ்ட்…” என்று திட்டி விட்டாள்.
மதுவோ கண்களில் கண்ணீர் நிரம்ப நீலாம்பரியின் அறையிலிருந்து வெளிவந்தாள்.
கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்து கொண்டு தனது வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டாள்.
நீலாம்பரி வேலையில் கண்டிப்பானவள் தான்… அதற்காக அடுத்தவர் மனம் நோகும்படி என்றும் அவளது செயல்களோ, பேச்சுகளோ இருக்காது. ஆனால் முதல் முறையாக அவளது பேச்சு இன்று ஒருவரை காயப்படுத்தி இருக்கிறது. தனது செயலிற்கான முழு காரணத்தையும் அவள் அறிந்து செய்தாளோ என்னவோ அது அவளது மனதிற்கே வெளிச்சம்.
பிறகு கண்காணிப்பு கேமராவில் எப்பொழுதும் போல் அவளது பார்வை ஆதியை பின் தொடர்ந்தது.
ஆதியோ வேலையில் மூழ்கி இருந்தான். அவனுக்கு எப்படியாவது இந்த வேலையில் நிலைத்து நின்று அவனது திறமையை நிரூபித்து ஆக வேண்டிய கட்டாயம். இந்த வேலை தான் அவனது வாழ்வின் அச்சாரம். அவனது வாழ்வின் முன்னேற்றத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு நூல். அதை பிடித்து கொண்டு அவன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய கட்டாயம். அதற்கு முக்கியமான காரணம் அவனது குடும்பம் மட்டுமே.
அதனால் அவன் வேலையில் தனது கவனத்தை செலுத்தினான். ஆனாலும் அவ்வப்பொழுது நீலாம்பரியின் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை அவனால்.
முதல் பார்வையில் அவனது மனதை கொள்ளையடித்தவள் அவள். தனது முதல் காதல். ஆனால் சிறு மொட்டு பெரிதாகி இதழ் விரித்து வாசம் கொடுக்கும் முன்னேயே கருகி விடுவது போல் அவனது காதலும், தன் காதலை உணர்ந்து அதனை முற்று முழுதாக உணர்ந்து மகிழ்ச்சி அடைவதற்கு முன்பேயே கருகி விட்டது. அதன் வடு அவன் வாழ்நாள் முழுவதும் இருக்கும் அல்லவா…
அந்த காயத்தின் வலியை தினமும் உணர்வதை போல் அவன் தினமும் அவளை காண வேண்டும். அனுதினமும் அவனுக்கு இந்த வலியை அனுபவித்தாக வேண்டிய கட்டாயம். அவளது முகத்தை காணும் பொழுதே அவனுடைய முதல் காதலின் வலி உள்ளிருந்து எழும்.
அனைத்துக்கும் அவன் தனது மனதினை தயாராக்கி கொள்ள வேண்டும். அவனும் முயன்று கொண்டு தான் இருக்கிறான்.
அன்று நாள் முடியும் தருவாயில் ஆதியும், மாதேஷும் வெளியே பேசி கொண்டே வந்தனர்.
“டேய்… வேலை எப்படி போச்சு?” என்று மாதேஷ் கேட்டான்.
“ம்… குட்…” என்றான் ஒரே வார்த்தையில்.
“ஆதி… இந்த வேலையிலயாவது நிலைக்கனும்டா… ப்ளீஸ்… நம்ம திறமையை நிரூபிச்சாகனும்… உன்னோட நிலைமை என்னனு உனக்கே தெரியும்னு நினைக்குறேன்…”
“எல்லா தெரியும் டா… எனக்கு கிளாஸ் எடுக்காத…”
“இல்ல டா… பழைய வேலையில இருந்து வலுக்கட்டாயமா வேணும்னே வெளிய வந்த மாதிரி இங்கயும் இருக்காத.. ஒகே…”
“டேய்… இங்க எல்லாம் அப்படி இருக்காது… ஏனா இங்க தான் கண்ணுக்கு குளிர்ச்சியா நிறைய ஃபிகர்ஸ் இருக்காங்களே… அதுவும் ரிஷப்ஷனிஸ்ட் மது… அவ ஒருத்தி போதுமே…” என்றான் ஆதி…
அதை கேட்டு சிரித்த மாதேஷோ “உனக்கு மடியாத பொண்ணுகளே இல்லைடா…” என்றான்.
“டேய்… நான் என்னமோ பார்க்குற எல்லா பொண்ணையும் கரெக்ட் பண்ணி ரூம் போட்ட மாதிரி பேசிட்டு இருக்க…” என்று பொய்யாக கோபப்படுவது போல் நடித்தான்.
“அடப்பாவி… உனக்கு அந்த ஆசை எல்லாம் இருக்கா என்ன?”
“ஆம்பளைனா எல்லாத்துக்கும் ஆசைப்படனும் டா… இல்லைனா வேற மாதிரி நினைச்சுக்குவாங்க…”
“உன்ன எல்லாம் பச்ச புள்ளைனு எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க பாரு அவங்கள சொல்லனும்…”
“நான் எப்படா உன்னை அப்படி நினைக்க சென்னேன்… இந்நேரம் எனக்கு விபத்து நடந்து கோமாவுக்கு மட்டும் போகாம காலா காலாத்துல எல்லாம் சரியா நடந்திருந்தா அப்படியே வரிசையா புள்ளையா பெத்து போட்டு இருப்பேன் தெரியுமா?”
“அது என்னவோ வாஸ்தவம் தாண்டா… ஆனா இப்ப மட்டும் என்ன தடுக்குது உன்ன… மக்கள் தொகைய பெருக்கற வேலைய ஆரம்பிக்க வேண்டியது தானே…”
“செய்யலாம்… செய்யலாம்… இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்… அதுக்குள்ள வேற சில கடமைகள் இழுக்குது என்னை… அதை முடிச்சுட்டு தான் இந்த வேலைய தொடங்கனும்…” என்றான் ஆதி…
“அது சரி தான்…” என்று இருவரும் பேசி கொண்டே வாகனம் நிறுத்துமிடத்திற்கு வந்தனர்.
அவர்கள் இருவரும் பேசியதை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நீலாவும் கேட்டு கொண்டிருந்ததை இருவரும் அறியவில்லை.
மாதேஷ் வண்டியில் அமர்ந்து சாவியை அதில் போடும் பொழுதே பின்னிருந்து சொடக்கிடும் சப்தம் கேட்டு இருவரும் சிரிப்பதை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தனர்.
“இங்க வந்தமா வேலைய ஒழுங்கா செய்தமா வீட்டுக்கு போனமானு இருக்கனும்… அதை விட்டுட்டு உங்களோட திறமைய நிரூபிக்கறேனு ஏதாவது செஞ்சுட்டு இருந்தீங்க அப்புறம் என்னொட செய்கை வேற மாதிரி இருக்கும்… மைண்ட் இட்…” என்றாள்.
அவளது பேச்சினுள் இருந்த கோபத்தை உணர்ந்தவனோ “ஒகே மேடம்…” என்றான் மாதேஷ்.
ஆனால் ஆதியோ அவளது முகத்தினை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான். அவள் கூறியதற்கு எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் நின்றிருந்தான்.
மறுபடியும் ஆதியின் முகத்தின் முன்னே சொடக்கிட்ட நீலாம்பரியோ “என்ன மிஸ்டர்… புரிஞ்சுதா… இப்ப நான் சொன்ன விசயம் எல்லாம் உங்களுக்கு தான்…” என்றாள்.
அவன் ஏதும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினான்.
அவனது முகத்தினை பார்த்து கொண்டே அவளும் தனது வண்டியை நோக்கி நகர்ந்தாள்.
“டேய்… யார் நமக்கு பின்னாடி வர்றாங்கனு எல்லாம் பார்த்து பேச மாட்டியா? இப்ப பாரு மேடம் நம்மள ஏதோ தப்பா நினைச்சுகிட்டு போறாங்க…”
“இங்க பாரு மாதேஷ்… அடுத்தவங்க பேசறத ஒட்டு கேட்கறது ரொம்ப தப்பு… அதுவும் அவங்களோ தனிப்பட்ட வாழ்க்கையை பத்தி பேசிட்டு இருக்கும் பொழுது அத கேட்கறது ரொம்ப தப்பு… தப்பெல்லாம் அவங்க செஞ்சுட்டு நம்மள என்னவோ குத்தம் சொல்லி எச்சரிக்கை பண்ற மாதிரி பேசிட்டு போறாங்க… இதெல்லாம் நல்லதுக்கு இல்ல…” என்று தனது நண்பனிடம் பொறிந்து தள்ளி கொண்டிருந்தான் ஆதி.
அவர்களின் அருகே தனது வண்டியை நிறுத்திய நீலாம்பரியோ காரின் கண்ணாடியை இறக்கி விட்ட படி, “தனிப்பட்ட வாழ்க்கையை பத்தி பேசறவங்க இப்படி நாலு பேர் கேட்கற விதமா பேசிட்டு போக கூடாது. அப்படி பேசினா நான் இப்படி தான் ரியாக்ட் பண்ணுவேன். அதோட இங்க வேலை செய்ய வர்ற பொண்ணுகளுக்கு எந்த விதமான பாதுகாப்பற்ற உணர்வும் வர கூடாது. அவங்களுக்கு அத செஞ்சு கொடுக்க வேண்டியது என் பொறுப்பு…” என்றவள் தனது குளிர் கண்ணாடியை அணிந்த படி “நைட் மப்பு ரொம்ப அதிகமாகிடுச்சோ…” என்று காரின் கண்ணாடியை ஏற்றி விட்டு காரினை எடுத்து கொண்டு சென்று விட்டாள்.