ஆகாய நீல நிற ஜார்ஜெட் புடவையில் கருப்பு நிற கையில்லா இரவிக்கை அணிந்து கொண்டையை உயர்த்திப் போட்டிருந்தாள்.
கால் மீது கால் போட்டுக் கொண்டு விழிகளில் உஷ்ணம் பரவ அவனையே அழுத்தமாக பார்த்தவளது கையில் பேனா சுழன்றுக் கொண்டிருந்தது.
கூரிய பார்வையினால் தலை முதல் கால் வரை அவனை அலசியபடி அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.
அவளை கண்டு புருவத்தை சுருக்கியவன் மெல்ல நடந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வந்துவிட ஆலோசனை ஆரம்பித்தது.
இரண்டு மணி நேரம் நடந்தது.
அனைவரும் தத்தம் வேலையை விளக்கிக் கூற வாசுவின் முறை வந்தது.
அவனும் தனது விளக்கத்தை பவர்பாயிண்ட் பிரசெண்ட்டேஷன் மூலம் விளக்கினான்.
இறுதியாக ஆருத்ரா தங்களுடைய பொருட்களின் தரத்தையும் விலையையும் அவர்கள் ஒத்துக் கொள்ளும் அளவிற்கு அடித்துப் பேசி அவர்களை தங்களுடைய பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்துவிட்டாள்.
வெறுமே நிறுவனத்தையும் அதன் பொருட்களையும் பார்வையிட வந்தவர்களை தங்களுடைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்து விட்டாள்.
நினைத்ததை செய்து முடித்தவிட்ட பெருமிதம் அவளிடம்.
சுழல் நாற்காலியில் சாய்வாக அமர்ந்து சுழன்று கொண்டே அனைவரது வாழ்த்துக்களையும் அலட்சியமாக ஏற்றுக் கொண்டாள்.
அனைவரும் அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு தங்களுடைய இருக்கைக்குத் திரும்பினர்.
அவளைத் தாண்டி செல்ல முற்பட்ட வாசுவை நோக்கி சொடக்கிட்டாள்.
அவனோ அவளைத் திரும்பி பாராமலேயே நின்றிருந்தான்.
“என்ன மிஸ்டர் வாசுதேவன்…? திரும்பி பார்க்காமலேயே அப்படியே நின்னா என்ன அர்த்தம்…? உங்களை ஒன்பதரை மணிக்கே வரச் சொன்னேனே? பத்து மணிக்கு வந்து நிக்குறீங்க? கொஞ்சம் கூட ஃபங்க்ச்சுவாலிட்டியை மெயின்டெயிண் பண்ண மாட்டீங்களா? வீட்ல உங்க வொய்ப் ரொம்ப உங்களை கவனிக்கறாங்களோ? .அது இருக்கட்டும் ஆர்டர் கிடைச்சதுக்கு எல்லாரும் என்னை பாராட்டிட்டு போனாங்க…ஆனா நீங்க மட்டும் விஷ் பண்ணாம போனா என்ன அர்த்தம்?“ என்றாள்.
நிதானமாக திரும்பி அவளை பார்த்தவன், “வாழ்த்துக்கள் மேடம்…” என்றான் எந்திரத்தனமாக.
“அதை அப்படி சொல்லக்கூடாது…” என்றவள் அவனது கரத்தை பிடித்து தன்னுடைய கரத்துடன் இணைத்து, “வாழ்த்துக்கள் ருத்ரா…ன்னு சொல்லணும்…” என அவனது கரங்களை இறுகப்பிடித்துக் கொண்டாள்.
அவனோ தீச்சுட்டதைப் போல அவளது கைகளை உதறித் தள்ளினான்.
“ த்ச்சு…த்ச்சு…ரொம்ப கோவமா இருக்கீங்களே…! மிஸ்டர் வாசு…நா வேணா உங்களை கூல் பண்ணவா…?” என்றபடி அவனை நெருங்கி நின்றாள்.
சட்டென்று நகர்ந்தவன் அவளை முறைத்து விட்டு வெளியேறினான்.
தனது விலையுயர்ந்த கூலர்ஸை எடுத்து அணிந்து கொண்டவள் ஒயிலாக மேசையில் சாய்ந்து நின்றபடியே, “ எங்க போனாலும் எப்படியும் என் கிட்ட வந்து தான் ஆகணும் மிஸ்டர் வாசுதேவன்…அழகு டா….நீ.”என நினைத்தவளுக்கு மனம் ரணமாய் வலித்தது.
அவளை முறைத்து விட்டு வெளியே வந்து நின்றவனுக்கு அப்போது தான் சுவாசம் சீரானது போன்ற உணர்வு.
நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.
தனது இருக்கைக்கு சென்றவன் அலைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அதில் மகளரசியின் புகைப்படம். அழகாக சிரித்தபடி அவனது கழுத்தினை கட்டிக் கொண்டிருந்தாள். அவளது பிம்பத்தை தனது கரங்களால் மெல்ல வருடிக் கொடுத்தான்.
தனது வேலையை முடித்து விட்டு மாலை அனுவை அழைக்க க்ரச்சிற்கு சென்றான்.
அங்கிருந்த ஆசிரியரோ, “ சார்..! சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு ஏதாவது கொடுத்து விடுங்க . மத்த குழந்தைக்கு சாப்பிடறப்ப அவ அவங்களை வேடிக்கை பாத்துட்டு நிக்கறா…பாக்கவே பாவமாக இருக்கு. ஒரு நாள் ரெண்டு நாள்ன்னா பரவாயில்ல வாரத்துல அஞ்சு நாளும் இப்படி தான் நடக்குது. அவங்க அம்மாவுக்கும் ஃபோன் பண்ணி பார்த்தாச்சு. எடுக்கவே மாட்டேன்றாங்க. என்ன தான் வொர்க்கிங் வுமென்னா இருந்தாலும் இப்படியா அசால்ட்டா இருக்குறது..? கொஞ்சம் குழந்தையையும் கவனிச்சுக்கோங்க. ரொம்ப நாளா உங்க கிட்ட சொல்லணும்னு நினைப்பேன். ஆனா நீங்க வர்ற நேரத்துக்கு எனக்கு ஏதாவது வேலை வந்துட்டே இருந்தது. இப்ப தான் உங்களை பாக்க நேரம் கிடைச்சது. ஆரோக்கியமான உணவுகளை கொஞ்சம் கொடுங்க.” என்றார்.
“ ம்ம்…சாரி மேடம். நாளையிலிருந்து அவளுக்கு தேவையானதை கரெக்டா அவங்க அம்மா எடுத்து வச்சிடுவாங்க.” என அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.
“ ப்பா…பசிக்குது ப்பா…” என்றாள் வயிற்றில் கை வைத்து கொண்டு.
அவனுக்கோ மனம் இளகியே விட்டது.
சிறிய சிற்றுண்டி கடையில் நிறுத்தியவன் அவளுக்கு திண்பண்டம் வாங்கிக் கொடுத்து விட்டு தானும் ஒரு தேநீரை அருந்திக் கொண்டிருந்தான்.
அவ்வழியே காரில் சென்ற ஆருத்ரா வாகனத்தை ஒரு கணம் நிறுத்தி அவர்கள் இருவரையும் பார்த்தாள்.
மகளுடன் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தான் வாசு.
அனுவோ கிளுக்கிச் சிரிக்க அவளுடன் கன்னக்குழி விழ சிரித்துக் கொண்டிருந்தவனை விழியகற்றாமல் பார்த்திருந்தவளுக்கு கண்கள் லேசாக கலங்கத் தொடங்கியது.
முழுக்கை சட்டையை நன்றாக மேலேற்றிக் கொண்டு , முகத்தில் களைப்பு இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வசீகரமாக சிரித்தான்.
“லவ் யூ தேவ்…லவ் யூ சோ…மச். இந்த கன்னக்குழி தான் என்னைய ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுது….பா…” என்று கூறி அவனது இருக்கன்னங்களிலும் அழுத்தமாக முத்தமிட்ட நினைவுகள் மனக்கண்ணில் வந்து போனது ஆருத்ராவிற்கு.
விருட்டென்று காரை எடுத்தவள் வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றாள் .
வீட்டிற்குச் செல்ல மனமில்லாமல் கடற்கரைக்கு காரை செலுத்தினாள் .
முகப்பு விளக்கினை எரிய விட்டவள் காரின் கதவினை அறைந்து சாற்றினாள்.
பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் ஆர்பரித்து கரையைத் தொடும் அலைகளைப் போல அவளது மனமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
ஐந்து வருடங்களாக தூக்கம் தொலைத்து, சிரிப்பை மறந்து, நிம்மதியை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றாள் பெண்ணவள்.
அவளது மென் பாதங்களை தொட்டுச் கொண்டுச் சென்றது கடலலைகள் . இதே பௌர்ணமி நிலவில் எத்தனையோ நாட்கள் அவனது கரம் கோர்த்து, தோள் சாய்ந்து , ஈர மணலில் கால் புதைய நின்று நிலவினை ரசித்து மகிழ்ந்த தருணங்கள் ஏராளம்.
சிலீரென்ற கடல் காற்று அவளது உடலைத் தழுவிச் செல்ல அவனது அணைப்பில் மெய்மறந்து நின்ற ஞாபகங்கள் கண் முன் வந்து அவளது தேகத்தை நெருப்பாக தகிக்கச் செய்தது.
“ தேவ்…தேவ்…” என உதடுகள் உச்சரித்துக் கொண்டேயிருந்தது.
மகளுடன் வீட்டிற்கு வந்தவன் சமயலறைக்குச் சென்று பார்த்தான்.
அவனது தாய் அரசி மெதுவாக காய்களை நறுக்கிக் கொண்டிருந்தார்.
“ அம்மா…என்னம்மா…நீங்க..? உங்களுக்கு தான் உடம்புக்கு முடிய மாட்டேங்குதுல்ல..அப்பறம் ஏன் அடுப்படிக்கு இப்படி வந்து நின்னு சிரமப்பட்டுட்டு இருக்கீங்க.? நான் வந்து நைட்டுக்கு சமைச்சுடுவேன்ல?” என்றபடி அவனிடமிருந்து கத்தியை எடுத்தவன் காயை அரிய ஆரம்பித்தான்.
“ பரவாயில்ல ப்பா…நீ எவ்வளவு வேலை தான் பாப்ப? உனக்கு உதவி பண்ணுற நிலையில கூட கடவுள் என்னை வச்சிருக்கல. என்ன பாவம் பண்ணுனேனோ..? தெரியல.” என ஆதங்கப்பட்டார்.
“ ம்மா…கண்டதையும் போட்டு குழப்பிக்காம அனுவோட போய் ஹால்ல உட்காருங்க…நான் டின்னர் ரெடி பண்ணிட்டு வந்துடுறேன். பாப்பா தூங்காம பாத்துக்கோங்க..” என்றவன் மளமளவென சமையல் வேலையை ஆரம்பித்து முடித்தான்.
சாம்பார் வைத்தவன் தோசை ஊற்றி தாயிற்கு கொடுத்து விட்டு மகளிற்கு ஊட்டிவிட்டான்.
சிறிது நேரம் கழித்து தானும் உண்டு விட்டு சமயலைறையை சுத்தம் செய்தான்.
நேரத்தை பார்த்தான். மணி ஒன்பதை தாண்டியிருந்தது.
மனைவியின் அலைப்பேசிக்கு அழைத்து அழைத்துப் பார்த்தான். அவள் எடுக்கவேயில்லை . தாயிற்கு மாத்திரையை கொடுத்து உறங்க வைத்துவிட்டு ஹாலில் மகளுடன் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அனு அவனது மடியிலேயே உறங்கி விட்டாள்.
மீண்டும் நேரத்தை பார்க்க மணி பத்தை தாண்டியிருந்தது.