பிழை-1
திங்கட்கிழமை காலை…
அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் காலைப் பொழுது. சிலருக்கு சற்று சோம்பலாக, சிலருக்கு பரபரப்பாக .
வாரத்தின் முதல் நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் நாள்.
“ சந்தியா….! சந்தியா..! டிபன் ரெடியா..? காலையில முக்கியமான மீட்டிங் இருக்கு ம்மா…. சீக்கிரம் போகணும். “ என்று கூறியபடியே முழுக்கை சட்டையின் பொத்தான்களை போட்டபடியே உணவு மேசைக்கு வந்தான் வாசு என்கிற வாசுதேவன் .
“ ஒரு நிமிஷம் இருங்க…தாளிச்சிட்டு இருக்கேன். நீங்க அதுக்குள்ள அனுவக்கு லன்ச் ஃபேக் எடுத்து சாப்பாட்டை பேக் பண்ணி வைங்க…வர்றேன்….” என சமயலைறையின் உள்ளிருந்து குரல் கொடுத்தாள் சந்தியா.
அவள் கூறியபடியே ஐந்து வயது மகளது உணவுக் கூடையையும் தண்ணீர் போத்தலையும் சிறிய பூந்துவாலையும் எடுத்து வைத்து விட்டு நிமிர்ந்தான்.
அதற்குள் அவனுக்கு உணவை தயார் செய்து அவன் கையில் கொடுத்தாள் சந்தியா. அவனது மனைவி .
“ உக்காருங்க….” என்றபடி தட்டை வைத்து விட்டு ஹாட்பாக்ஸையும் சாம்பார் பாத்திரத்தையும் அவன் புறம் நகர்த்தி , “ போட்டுக்கோங்க…” என்றாள்.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு “இன்னைக்கும் இட்லி சாம்பாரா?” என முணுமுணுத்தபடியே லேசாக முகத்தை சுளித்தான் வாசுதேவன்.
அவ்வளவு தான் எங்கிருந்து வந்ததோ அவ்வளவு ஆத்திரம் , “இந்த வீட்டுல வேலை செஞ்சே என் இடுப்பு ஒடிஞ்சு போச்சு…. ஆளாளுக்கு ஒண்ணொன்னு சமைச்சு தர எனக்கென்ன பத்து கையா இருக்குது. இல்ல வகை வகையான சமைச்சு தர அவ்வளவு சம்பளம் தான் வாங்குறீங்களா? நீங்க வாங்குற சம்பளத்துக்கு இவ்வளவு தான் என்னால் சமைக்க முடியும். வேணும்னா சாப்பிடுங்க… இல்லைன்னா குப்பையில கொட்டிட்டு போங்க…எனக்கென்ன வந்துச்சு…மதியத்துக்கு கறிகாய் எதுவும் இல்லை. அதனால சாம்பார் சாதத்துக்கு அப்பளம் தான் பொரிச்சி வச்சிருக்கேன். அதையும் ஏதாவது குறை சொல்லாதீங்க…உங்களுக்கும் உங்கம்மாக்கும் சமைச்சு போட்டே எனக்கு கை கால் ஓஞ்சி போச்சு….சே….! இந்த வீட்டுல நான் மட்டும் அடிமை மாதிரி எப்ப பார்த்தாலும் வேலை செஞ்சிட்டே இருக்கணும்…இங்கயும் வேலையை முடிச்சிட்டு வேலைக்கும் போகணும் நானு…உங்களுக்கு அது புரியுதா…? இல்லையா? .ஒழுங்கா சமைக்கறதை சாப்ட்டுட்டு கிளம்பற வழியைப் பாருங்க. எப்பப் பாரு குறை சொல்லிட்டு….ச்சை..!” அலுத்துக் கொண்டவள் ,”ஏய் அனு…! இங்க வந்துத் தொலை டி. உனக்கு தலையை வேற பின்னனும் . எரிச்சலா வருது. எப்ப பாரு டி.வி முன்னாடியே உக்காந்துட்டு என் உயிரை வாங்குறா….கழுதை…! சீக்கிரம் வந்து தொலை ”என கத்திக் கொண்டே இருந்தாள்.
வாசு அவளது காலை சுப்ரபாதத்தை சலிப்புடன் கேட்டபடியே உணவை வேகமாக சாப்பிட்டு முடித்துக் கொண்டான்.
அவள் செய்த சாம்பாரை வாயில் வைக்க முடியவில்லை.
உப்பு இல்லை காரம் இல்லை…சப்பென்று இருந்தது.
அதைக் கூறினால் இன்னும் அதிகமான வார்த்தைகள் வெளிவரும் என்பதால் அமைதியாக உண்டு விட்டு எழுந்தான்.
“ ப்ளீஸ்…! பாப்பாவை சத்தம் போடாத…சந்தியா. அமைதியா சொன்னாலே அவ கேட்டுப்பா…” என்றான் உணவு பையை கையிலெடுத்துக் கொண்டே.
“ அடடா….! உடனே சப்போர்ட் பண்ண வந்தாச்சு. எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான் அவ என்னோட சொல் பேச்சு கேட்க்காம இவ்வளவு அடம்பிடிக்குறா… இப்படியே செல்லம் கொடுத்து கெடுங்க. நாளைக்கு எவனையாவது இழுத்துட்டு ஒடுவா…அப்பவும் நீங்க கையலாகாத்தனமா வேடிக்கை தான் பாப்பீங்க..” என ஆங்கராமாக அவள் கூறி முடிப்பதற்குள் அவளை ஓங்கி அறைந்திருந்தான் வாசு.
“ பிச்சிடுவேன் டி….! என்ன பேச்சு பேசுற நீ? அவ குழந்தை டி. அவளுக்கு என்ன தெரியும்..? ச்சை…! மனுஷனுக்கு நிம்மதியே இல்ல இந்த வீட்டுல… காலங்காத்தால மனுஷனை டென்ஷன் ஏத்திட்டு இருக்க. “என்று கடுப்புடன் கூறியவன் மென்மையான குரலில் ,”அனு…! இங்க வாடா குட்டி…”என்று அன்பாக அழைத்தான்.
தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருந்தவள் தந்தையின் அழைப்பைக் கேட்டதும் ஓடி வந்தாள்.
“ ப்பா….! அம்மா எப்பவும் என்னைய திட்டிட்டே இருக்காங்க.“ என்று புகார் வாசித்தபடியே அவனது காலைக் கட்டிக் கொண்டாள்.
அவளை தூக்கிக் கொண்டு ,“அம்மா உன் நல்லதுக்கு தானே சொல்றாங்க. ரொம்ப நேரம் டி.வி பார்த்தா கண்ணு வலிக்கும் டா பட்டு. அதனால தான் பாக்காதன்னு சொல்றாங்க. அம்மா பேச்சே கேட்டு குட் கேர்ளா இருந்தா தான் அப்பா உன்னை ஈவினிங் ரவுண்டஸ் கூட்டிட்டு போவேன்…சரியா..?” எனத் தலை சரித்து கேட்டான்.
“ஓகே…அப்பா…!” என்றவள் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு இறங்கினாள் .
சந்தியாவினருகே தயங்கியபடி அனு நிற்க , அவளோ அனுவின் தலையை பின்னாமல் கைக்கட்டி நின்றிருந்தாள்…
அவள் அசையாமல் நிற்பதை கண்டவனுக்கு தான் செய்த தவறு புரிய, தன்னையே கடிந்து கொண்டவன் உடனே மன்னிப்பை வேண்டினான்.
“சாரி…சந்தியா…! கோவிச்சுக்காத டி. கோபத்துல அடிச்சுட்டேன். எனக்கு டைம் ஆச்சு. சீக்கிரம் கிளம்பணும்… ப்ளீஸ்…! பாப்பாவை ரெடி பண்ணி அனுப்பிடு டி….” என்றான் இறைஞ்சுதலாக.
“முடியாது…என்ன தைரியம் இருந்தா என்னைய கையை நீட்டி அடிப்பீங்க? என்னால உங்க பொண்ணை ரெடி பண்ண என்னால முடியாது. உங்களுக்கு காரியம் ஆகணும்ன்னா காலைப் பிடிப்பீங்க… கையைப் பிடிப்பீங்க. சரியான சுயநலப் பிசாசு நீங்க. எனக்கு நேரமாச்சு…நான் கிளம்புறேன். நீங்களே அவளை ரெடி பண்ணிட்டு ஆஃபிஸ் கிளம்புங்க…” என்றபடி தனது அலைப்பேசியை எடுத்துக் கொண்டு தங்களுடைய அறைக்குச் சென்று விட்டாள் .
முதல் நாளின் துவக்கமே அய்யோவென்றிருந்தது அவனுக்கு. தலை சுற்றியது. அவனுக்கு தலைப் பின்னத் தெரியாது. நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது.
ஒன்பதரை மணிக்கு மீட்டிங் ஆரம்பித்து விடும். மணி இப்போதே எட்டரை ஆகியிருந்தது. தனது இருசக்கர வாகனத்தில் சென்றால் கூட குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். இதில் வாகன நெரிசலில் சிக்கி விட்டால் அவ்வளவுதான் ஒன்றரைமணி நேரம் முழுதாக கடந்து விடும்.
தங்களுடைய அறைக்குச் சென்றவன் மனைவியை பார்த்தான்.
மெத்தையில் ஒய்யாரமாக சாய்ந்து அமர்ந்து கொண்டு இன்ஸாடவில் ரீவ்ஸ் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
“ ப்ளீஸ் சத்தியா….! சாரிம்மா…! குழந்தையை ரெடி பண்ணு…தெரியாம அடிச்சிட்டேன். நீ குழந்தையை பேசினதுனால தான் கோபம் வந்துடுச்சு….இனி இப்படி நடக்காது டா…” என காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தான்.
மெத்தையில் இருந்து எழுந்து வந்தவள் அறையின் கதவை படீரென அறைந்து சாற்றினாள்.
அதில் ஆணவனின் தன்மானம் அடி வாங்கியது.
எரிச்சலுடன் நெற்றியை தேய்த்துக் கொண்டவன் குழந்தைக்கு பள்ளி சீருடையை அவசர அவசரமாக அணிவித்து உணவை ஊட்டி விட்டு, முடியாத தன்னுடைய தாயிற்கு சந்தியா சமைத்து வைத்ததை எடுத்து வைத்து , மாத்திரை மருந்துகளை அருகில் எழுதி வைத்து விட்டு வெளியே வந்தவன் அனுவை தயார் செய்து பக்கத்து வீட்டு சுந்தரி அக்காவின் வீட்டினை தட்டினான்.
கதவை திறந்த சுந்தரி, “என்னப்பா…? என்ன வேணும் …? உள்ள வா..“ என்றார்.
“இருக்கட்டும் க்கா…எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு . சந்தியாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. நான் பாப்பாவை ரெடி பண்ணிட்டேன். தலை மட்டும் நீங்க பின்னி விட்டுடுறீங்களா? அவ இங்கயே இருக்கட்டும். ஆட்டோ இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும். அவளை ஆட்டோல மட்டும் ஏத்தி விட்டுடுங்கக்கா…உங்களை அடிக்கடி தொந்திரவு பண்ணுறேன். மன்னிச்சுக்கோங்க…” எனத் தயக்கத்துடன் கூறி விட்டு நின்றிருந்தான்.
அவனது நிலையை நன்கு அறிந்தவர் சின்ன சிரிப்புடன், “பரவாயில்ல வாசு…நான் அனுப்பிடுறேன். நீ கிளம்பு. ஆமா…அனு சாப்பிட்டாளா? இல்ல எங்க வீட்ல பொங்கல் வச்சிருக்கேன் . அதை வேணா கொஞ்சம் ஊட்டி விட்டுடுடவா..?” என்றார் கரிசனமாக.
“இல்லக்கா…அவ சாப்டுட்டா…நீங்க தலை பின்னிட்டு ஆட்டோ வந்தவுடனே அனுப்பி மட்டும் வச்சிடுங்க. நா ஈவினிங் போல க்ரச்ல இருந்து கூட்டிட்டு வந்துடுறேன்..” என்றவன் குழந்தையின் புறம் குனிந்து, “ அனு குட்டி…! அவங்களை தொந்தரவு பண்ணாம சமத்தா கிளம்பிடணும் சரியா?” என்றான் .
“ஓகே ப்பா….! அனு ஆல்வேல் குட் கேர்ள் தான். அம்மா தான் பேட் கேர்ள். எப்ப பார்த்தாலும் உங்களை திட்டிட்டே இருக்காங்க…” என்றாள் முகத்தை சுருக்கிக் கொண்டே.
குழந்தையின் மனதில் சந்தியாவினுடைய பிம்பம் சரிந்து கிடப்பதை எண்ணி கலக்கமடைந்தவன் ,சுந்தரி அக்காவை தயக்கத்துடன் பார்த்தான்.
அவரோ அமைதியாக நின்றிருந்தார்.
ஒரு பெருமூச்சுடன், “ தங்கம்…நம்ப அம்மா தானே…! இப்படியெல்லாம் பேசக்கூடாது சரியா..? அப்பா தப்பு பண்ணுனதுனால தானே அம்மா திட்டினாங்க. ஸ்கூல்ல நீ தப்பு பண்ணினா மிஸ் திட்டுவாங்கல்ல அது மாதிரி இதுவும் …” என்றான் மனைவியை விட்டுக் கொடுக்காமல்.
அவளுக்கு என்ன புரிந்ததோ சரியென தலையாட்டிவள் , “நீங்க தப்பு பண்ணலா கூட அம்மா திட்டுறாங்களே? ஆனா மிஸ் அப்படியில்லையே…தப்பு பண்ணலன்னா திட்ட மாட்டாங்க. குட் சொல்லுவாங்க..” என்றாள் வெகுளித்தனமாக.
ஏனோ தன் முதல் ஹீரோவான தகப்பன் எப்போது பார்த்தாலும் சந்தியாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பது போல் குழந்தைக்கு தோன்றியது போலும்.
அதனை கோர்வையாக சொல்ல தெரியா விட்டாலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக வார்த்தைகளை கோர்த்து தான் கூற முயற்சித்ததை கூறினாள்.
வாசுவிற்கோ மனம் கனத்து தான் போனது. நேரமாகி விட்டதை உணர்ந்தவன் குழந்தையின் கன்னத்தில் முத்திமிட்டு, “அதெல்லாம் சும்மா தான் குட்டிம்மா… சரி அப்பா ஈவ்னிங் வந்து உன்னை ரவுண்ட்ஸ் கூட்டிட்டு போறேன்….பை…!” என்றவன் கிளம்பி விட்டான் .
அவன் வீட்டிலிருந்து கிளம்பும்போதே மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது .
இரு சக்கர வாகனத்தை விரட்டிக் கொண்டு வந்தான் .
ஆயிரம் யோசனைகளுடன் ஒட்டியவன் எப்படி எந்த வாகனத்தில் மேலும் மோதாமல் அலுவலகம் வந்தடைந்தான் என்பது ஆச்சர்யமே…!
அவனது இருப்பிடத்திற்கு வந்து தோள் பையை வைத்து விட்டு நிமிரும் போது மணி பத்தை கடந்திருந்தது.
வேக வேகமாக தனது பையிலிருந்து பென்ட்ரைவை எடுத்துக் கொண்டு மீட்டிங் ஹாலிற்கு ஓடினான்.
கதவை திறந்து உள்ளே நுழைந்தான். அனைவரும் அமர்ந்திருந்தனர். நல்லவேளையாக வெளிநாட்டிலிருந்து வர வேண்டிய முக்கிய வாடிக்கையாளர்கள் இன்னும் வந்திருக்கவில்லை.
ஒரு பெருமூச்சுடன் கதவில் லேசாக சாய்ந்தவனது பார்வை அந்த மிகப்பெரிய தொடுதிரைக்கு அருகில் அமர்ந்திருந்தவளின் மீது படிந்தது.