மோகனம் 9

உடைந்த கண்ணாடி துண்டுகளை ஒட்ட வைக்க முடியாது என்பதை அறியாமல் மதிவதனியின் அழகு, சுகந்தியின் தவறான போதனைகள், ஊராரின் கூற்றுகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் முழுமையாய் தன்னிலையை இழக்க செய்து மகளிடம் ராட்சசி போல் வாசமல்லியை நடக்க வைத்திருந்தது.

நாட்கள் சில கடந்ததற்கு பிறகே உயிர்ப்பில்லாத மகளின் முகத்தை கண்டவருக்கு நெஞ்சம் பிசைய வெகு தாமதமாக தன் தவறை உணர்ந்துக்கொண்டார் வாசமல்லி.

ஆனாலும் அவள் செய்ததாக யூகிக்கப்பட்ட தவறுகளை மனதில் கொண்டு அவளை சமாதானம் செய்ய முயலவில்லை.

தன் மகனை அவமானப்படுத்தியதால் காந்திமதி மகளின் உறவை அடியோடு அறவே தவிர்த்துவிட்டார்.

அவரின் இல்லத்திற்குச் செல்லாமல் “நன்றி கெட்ட ஜென்மம்…எம்மவன் எம்புட்டு செய்திருப்பான் அவளுக்கு…ஆனா அந்த நன்றி கொஞ்சமும் இல்லாமல் அவனையே எடுத்தெறிஞ்சு பேசிப்புட்டா…அவ வாயில வசம்பு வைச்சு தேய்க்க” என தலையிலடித்து வசைப்பாடிக்கொண்டிருந்தார்.

அப்போதும் நெஞ்சம் முழுவதும் தமக்கையின் மீது வருத்தம் நிறைந்திருந்தாலும்,அதை அந்த நேரத்திற்கான கோபமாகவே கருதி “ஆத்தா அக்கா ஏதோ கோபத்தில சொல்லிடுச்சு…அதையே புடிச்சிட்டு தொங்காம…ஓரெட்டு போய் மதி புள்ளய பாத்துப்புட்டு வாவேன்” என தாயை சமாதானம் செய்தவனை நன்றாக முறைத்தவர்,

“நானெல்லாம் அந்த நன்றி கெட்டவ வீட்டு வாசப்படில காலு வைக்கமாட்டேன்யா…உனக்கு வேணும்னா நீ போ” என காட்டமாக கூறினாலும்,மகனிடமிருந்து வரப்போகும் பதிலுக்காக அவனையே குறுகுறுவென பார்த்தார்.

ஆனால் அவனிடமிருந்து மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்தது.

அன்றைய நாளில் தமக்கையின் வார்த்தையை வருத்தமாக எடுத்துக்கொண்டாலும்,அதனால் உண்டான காயம் இப்போதும் ஆறாத வடுவாய் இருந்தது.

சில நொடிகள் இலக்கின்றி வெறித்த காளையனோ பின்பு மீசையை முறுக்கி தொண்டையை செருமியவன் “நீ போறதுனு போ…இல்லாட்டி விடுத்தா” என ஆழ்ந்த குரலில் உரைத்து வேட்டியை மடித்துக்கட்டி வயலுக்கு புறப்பட்டுவிட்டான்.

போகும் மகனின் முதுகை பார்த்து பெருமூச்சை விட்டவருக்கு மதிவதனியை எண்ணி பெரும் கவலை தொற்றிக்கொண்டது.

இதுவே சாதாரண நேரமாக இருந்திருந்தால், இத்தகைய கொடூரமான சூழ்நிலையில் மதிவதனியை அவனால் ஒரு நொடி கூட பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

அவளை காப்பதற்காக சூர அவதாரம் எடுக்கவும் தயங்கியிருக்க மாட்டான்.

ஆனால் இப்போதோ அந்த இல்லத்தின் வாசலை மிதிக்க,அவனது சுயமரியாதை தடுக்க மௌனித்துவிட்டிருந்தான்.

மதிவதனியின் பெற்றோர்களோ ஏற்கனவே அவளை குற்றுயிராக்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல்,பெண்ணவளை மேலும் வதைக்கவென வேறொரு அறிவிலித் தனமான செயலையும் செய்தார்கள்.

பெண்ணவளிற்கு தங்களது சமுதாயத்திலே ஒரு மணமகனை பார்த்து கட்டி வைத்துவிட வேண்டும் என்று களத்தில் குதித்தார்கள்.

காரிகையோ எந்த வித உணர்வுகளும் அல்லாத உயிரற்ற ஜடம் போலிருந்தாள்.

யாரிடமும் எதுவும் பேசாமல் எந்நேரமும் சூன்யத்தை வெறித்தப்படி இருப்பாள் அல்லது மடியினில் முகம் புதைத்திருப்பாள்.

உணவை தட்டிலிட்டு அறைக்குள் வந்து கொடுத்தாலும்,அதனை தவிர்த்துவிட்டு பிரம்மை பிடித்தது போலவே அவளது அறையினுள் சிறையிருந்தாள்.

அவள் உணவருந்தாமல் பிடிவாதமாக இருப்பதை கண்டுவிட்டு வாசமல்லி அதற்கும் அவளை இழுத்துப்போட்டு அடித்தார்.

“ஏன்டி எங்க மான மருவாதய கெடுத்ததும் இல்லாம இப்போ சாப்பிடாம எங்க உயிரையும் சேர்த்து எடுக்கவே பொறந்திருக்கியா? சனியனே…சாப்பிட்டு தொலடி” என வாயிற்கு வந்தது போல் தாறுமாறாக திட்டி அவளின் முதுகில் சரிமாரியாக அடித்து தள்ளினார்.

ஒரு கட்டத்தில் அவளை அடித்து ஓய்ந்தவர், கோபத்தில் மூச்சிறைக்க “இந்தாடி…தின்னு” என அவளின் முடியை கொத்தாக பிடித்து ஆட்டி தட்டை முகத்தின் முன்பு நீட்டினார்.

அதற்கும் அவளிடமிருந்து எந்த வித எதிர்வினையும் இல்லாமல் இருப்பதில் தலைமுடியை விடுவித்து மகளின் முகம் நோக்க,அதுவோ வழக்கத்திற்கு மாறாக வெளிறி எந்த வித உணர்வையும் பிரதிபலிக்காமல் உயிரற்ற பிணம் போல் இருந்தது.

அதைக்கண்டு அவரது சர்வ அங்கமும் நடுங்கியது என்றால்,அவளின் பார்வை அசையாமல் ஒரே இடத்திலே நிலைத்திருந்ததும்,அவளின் அழுத்தம் முதன்முறையாய் உள்ளுக்குள் ஓர் அச்சத்தை தோற்றுவித்தது.

அதனால் உணவு தட்டை அவளின் முன்பு வீசிவிட்டு சேலையின் தலைப்பால் வாயை பொத்தி அழுதவாறே அறையிலிருந்து வெளியேறினார்.

நாளுக்கு நாள் அவளின் உடல் நிலை மோசமடைவதில் துணுக்குற்ற பெற்றோர்கள்,அப்போதும் அவளிடம் அமர்ந்து மனம் விட்டு பேச முயலாமல் விரைவில் அவளை யாரின் கையிலாவது பிடித்து கொடுத்துவிடும் முனைப்புடனே இருந்தார்கள்.

‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்னும் பழமொழிக்கு ஏற்ப எப்போதும் இளக்காரமாக தமக்கையை நடத்தும் செந்தூரப்பாண்டியனோ சகோதரியின் நிலையறிந்து நொறுங்கிப்போனான்.

அதனால் பள்ளிக்கூடம் விட்டு இல்லம் வருபவன் தினந்தோறும் அவளிடம் இரண்டு நிமிடமாவது பேசிவிட்டுச் செல்வான்.

“அக்கா உன்னைய எனக்கு சுத்தமா புடிக்காது தேன்…ஆனா இப்படி பித்துப்பிடிச்ச மாதிரி உன்னைய என் கண்கொண்டு பாக்க முடியல…நீ இவ்வளவு அழுத்தமா இருக்கிறத பாக்கும் போது உன் மேல எந்த தப்பும் இருக்காதுனு தோணுது?அப்படி தானேக்கா” என வாழ்வில் முதன்முறையாய் அவளை ‘அக்கா’ என்று முறை வைத்து ஆதுரத்துடன் பேசியவனை பாவையவள் விழி உயர்த்தி நோக்கினாள்.

அவளின் கண்ணில் சடுதியாக மின்னல் வெட்டி சென்றது போல் ஒரு உணர்வு பாண்டியனுக்கு எழுந்தது.

ஆனால் அவளின் விழிகளை உற்று கவனிக்கும் போதோ அவை தன்னுடைய பிரம்மை என்ற முடிவிற்கே அவனை வரவழைத்தது.

அதனால் சிகையை அழுந்தக்கோதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு “பிளீஸ்க்கா இப்படியே எம்புட்டு நாளுதேன் வூட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடப்பா…மனசு விட்டு யார்கிட்டயாவது பேசுக்கா…யார்ட்டையும் பேசலைனா ஒரு கட்டத்தில பைத்தியமே பிடிச்சிடும்…நான் எந்த தப்பு பண்ணலைனாவது சொல்லேன்கா” என இறைஞ்சதலுடன் ஆரம்பித்து ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கத்தினான்.

அவற்றிற்கும் அவளிடமிருந்து எந்த வித எதிர்வினையும் இல்லை.

அதே அசையாத உயிரற்ற பார்வையையே பதிலாக தந்தவளை கண்டவனிற்கு கோபம் பஞ்சாய் பறந்துப்போக கண்ணோரம் நீர் துளிர்த்தது‌.

மீசை அரும்பிய அந்த வாலிபனோ தனது தமக்கைக்கான அழுகையை அவளிடம் காட்ட விளையாமல் இதழ்கடித்து அங்கிருந்து அவசரமாக எழுந்துச் சென்றான்.

அவன் அந்த அறையிலிருந்து வெளியேறிய அடுத்த வினாடியே அத்தனை நாட்களாய் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அழுகையாய் வெளிவந்தது.

மாமனிற்கு அடுத்ததாக தன்னுடைய இல்லத்திலும் அவள் மீது நம்பிக்கையுள்ள ஒருத்தர் இருக்கிறார் என்ற ஆனந்தத்தினால் விளைந்த கண்ணீர் அது!!

அதற்கு அடுத்த நாட்கள் தொட்டு அவளின் சகோதரன் உணவை எடுத்து வந்தால் மட்டுமே சாப்பிடுவாள்.

அவற்றிலும் தனக்குள்ளே ஒரு நிபந்தனை விதிப்பதை போல் மூன்று வேளைகளில் ஒரு வேளை உணவு மட்டுமே உட்கொள்ளுவாள்.

உயிர் வாழுவதற்கு அது ஒன்றே ஆகாரமாகவும் ஆதாரமாகவும் இருந்தது.

உணவை அறவே தவிர்த்து வந்தவளின் இத்தகைய மாற்றமே தற்போது ஒரு சிறு மலர்ச்சியை சகோதரனிடத்தில் கொண்டு வந்திருந்தது.

அதனால் சகோதரன் அந்த அறைக்குள் வந்தால் மட்டுமே அவளின் முகத்தில் சிறு மாற்றம் ஏற்படும்.

அவனை தவிர வேறு யார் அங்கு வந்தாலும் அவளின் அதே அழுத்தம் குடியேறி விடும்.

செந்தூரப்பாண்டியனோ இங்கு இல்லத்தில் நடக்கும் அனைத்தையும் காளையனிடம் எடுத்துரைக்க,அதன்பிறகே மனதை அடைத்துக்கொண்டிருந்த பாரம் சிறிது விலகியது போல் இருந்தது.

ஏனெனில்,காளையனே பாண்டியனை திரை மறைவிற்கு பின்னிருந்து மதிவதனியை மீட்டு வருவதற்காக அவன் மூலமாக போராடிக்கொண்டிருந்தான்.

அவனெடுத்த அந்த முயற்சி வெற்றி வாகை சூடிட,விரைவில் அவளை பழைய மதிவதனியாக மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை நெஞ்சில் உதித்தது.

இவன் அவளை இருட்டு அறையிலிருந்து காப்பாற்ற முயற்சிக்க,அவனின் உறவுகளோ பெண்ணவளை மீண்டும் குழிக்குள் உயிரோடு புதைக்கும் காரியங்களை சத்தமில்லாமல் செய்துக்கொண்டிருந்தார்கள்.

சீமைத்துரையோ அன்றைய நாட்கள் தொட்டு மகளை முற்றிலும் வெறுத்தவராக அவளை திருமணம் செய்து வேறு வீட்டிற்கு அனுப்புவதற்காக ஊரெங்கும் மணமகன் தேடி அலைந்தார்.

ஆனால் அவளை பற்றிய விடயங்கள் பக்கத்து ஊர் வரை பரவி விரிந்திருந்ததால்,பெண்ணவளின் நடத்தை கேள்விக்குறியாகியிருந்தது.

அதனால் யாவரும் காரிகையவளை திருமணம் செய்ய முன் வராத காரணத்தினால் சீமைத்துரை சுவற்றில் அடித்த பந்தாய் மீண்டும் நின்ற இடத்திற்கே வந்துவிட்டார்.

எங்கு சுற்றிலும் தோல்வியை மட்டுமே தழுவியதோடு ஊரின் முன்பு அவரை தலைகுனிய வைக்கும் அளவு அவரின் வளர்ப்பையும் முன்னோர் சந்ததியையும் இகழ்ந்து பேசி கூனிக்குறுகி நிற்க வைத்தார்கள்.

அதில் உடைந்து நொறுங்கிப்போன சீமைத்துரைக்கோ அதற்கெல்லாம் காரணமான மதிவதனியின் மீதே ஆத்திரம் முழுவதும் திரும்பியது.

அதன்பொருட்டு பூப்படைந்ததற்கு பிறகு பெற்ற மகளை பார்வையால் கூட தீண்டியிராதவர்,முதன்முறையாய் அவளை ஆக்ரோஷம் தீரும் வகையில் அடித்து குற்றுயிராக்கினார்.

வாசமல்லி கோவில் சென்றிருக்க, செந்தூரப்பாண்டியன் பள்ளி சென்றிருந்த வேளையில் இந்நிகழ்வு நடந்தேறியதால் அவரின் அசுர தாக்குதலை தடுக்க ஒருவரும் இல்லை.

மதிவதனியோ அவரின் ஒவ்வொரு அடிக்கும் சிறிதும் கலங்காமல் எஃகிரும்பின் உறுதியோடு விறைத்து நின்றிருந்தாள்.

தொண்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்த கதறலை பற்களை கடித்து அடக்கியிருக்க,

ஒரு கட்டத்தில் அவளின் உடம்பை புண்ணாக்கியவரின் கரமெல்லாம் செக்கசெவ்வேலென சிவந்து விட்டது.

அதனால் வலிப்பொறுக்க முடியாமல் தனது கரங்களை உதறியவருக்கு சுருக்கென்று நெஞ்சம் தைத்தது.

சட்டென்று மகளை நிமிர்ந்து பார்க்க,அவரின் கைரேகைகள் மங்கையவளின் முகத்திலும் உடம்பிலும் ஆழப்பதிந்து அழியா சின்னத்தை உருவாக்கியிருந்தது.

ஆனால் மதிவதனி மட்டும் இறுகிய கற்சிலை போன்று இதழோரம் குருதி கசிய குமுறிய நெஞ்சம் அடக்கி எங்கோ வெறித்திருந்தாள்.

அவளின் அந்த தோற்றம் தந்தையின் மனதிற்குள் பெரும் பூகம்பத்தை உருவாக்க ‘ஐய்யோ என் புள்ளைய நானே அடிச்சிட்டனே’ என மௌனமாய் கண்ணீர் வடித்தாலும்,

சடுதியில் நிமிர்ந்து நின்றவர் ‘அவளால் தானே நான் ஊரின் முன்பு அவமானப்பட்டேன்…நல்லா வலிக்கட்டும்’ என இரக்கமின்றி தன்னை சமாளித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியவர் தன் அவப்பெயர் நீக்க,அடைக்கலம் சென்ற இடம் காளையனின் இல்லமே!!

அங்கிருந்த யாவரும் முற்றிலும் எதிர்ப்பாராத வகையில் “மாப்பிள்ள உன் கால்ல வுழுந்து கெஞ்சி கேட்கறவ… என் புள்ளைய கலியாணம் கட்டிக்க” என நெடுஞ்சாண்கிடையாய் காளையனின் காலில் விழுந்துவிட்டார்.

காந்திமதி அவரின் செயல் கண்டு “யாத்தே” என நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தார் என்றால்,

காளையனோ பதறிப்போய் ஓரடி பின்னால் நகர்ந்து “மாமாவ் என்ன இப்படி கசகசன்னு பண்ணறீக?என் கால்ல போய்…” என அதட்டலாய் ஆரம்பித்தவனிற்கு அடுத்த வார்த்தை பேச முடியாமல் தடுமாறி அவரின் தோள் தொட்டு தூக்கி நிறுத்தினான்.

‘தான்’ என்ற அகந்தையுடன் நெஞ்சை நிமிர்த்தி மீசையை முறுக்கிக்கொண்டுச் செல்லும் மாமன் இவ்வாறு அவனது காலில் விழுந்தது பெரும் சங்கடத்தை கொடுத்தது.

பிறப்பிலிருந்து செல்வந்தராய் இருந்தவருக்குள் இருந்த கர்வம் மகளுக்காய் கண்ணாடி தூளாய் சிதறிப்போயிருந்ததை அறிந்து,

“மாமாவ் என்ன காரியம் செய்யறீக?கோளாறு தெரிஞ்ச நீனே இப்படி செய்யலாமா?” என வருத்தம் தொய்ந்த குரலில் அவன் கேட்க,

அவரோ கண்கள் கலங்க “எல்லாம் தெரிஞ்சு என்னய்யா பிரோசனம்…ஒத்த பொம்பளை பிள்ளைய வளர்க்கறதில சோட போயிட்டேனே…” என கரகரத்த குரலில் தொண்டையடைக்க பேசியவர்,

இரண்டு கையெடுத்து கும்பிட்டு “ஏவூட்டு மான மருவாதயெல்லாம் இப்போ நீர் சொல்லற முடிவுல தான் காளை இருக்கு…ரோசனை செஞ்சு சொல்லு…இல்லைனா அவள மகளா பெத்ததுக்கு நாங்களாம் நாண்டுக்கிட்டு சாவறோம்” என உணர்ச்சிவசத்தோடு பேசியவரின் தேகமோ நிற்க முடியாமல் தள்ளாடியது.

அதில் பதட்டமடைந்த காளை “மாமாவ் மொத உட்காருக நீங்க…” என அவரை பிடித்து அருகிலிருந்த கற்பலகையில் அமர வைத்தவன்,

“மாமாவ் நீரு ரொம்ப களைப்பா தெரியறீக…மொத ஆசுவாச ஆவுங்க” என அவரின் நெஞ்சை பிடித்து நீவி விட,

அவரோ மனதில் உள்ள சஞ்சலத்தினால் தேகம் வெடவெடக்க “நான் உசுரா நினைச்ச மானமே போச்சு…ஒசக்க உசுரு போனா ம*ரா போச்சு” என்றார் ஆதங்கம் கலந்த கோபத்துடன்.

அதற்குள் அவனது தாய் கண்ணில் நீருடன் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க,அதை வாங்கி “மாமாவ் மொத தண்ணீய குடிங்க” என அவரின் கையில் கொடுக்க முனைந்தான்.

அந்தோ பரிதாபம் அவரின் கரங்கள் நடுங்கிக் கொண்டிருப்பதை கண்டுவிட்டு அவனது முரட்டு தேகத்தினுள் மெல்லியதாய் ஒரு நடுக்கம் இழையோடியது‌‌.

அவரின் நிலை ஆடவனின் நெஞ்சை உலுக்க,அவனே அவரின் வாயில் சொம்பை வைத்து நீரை புகட்டினான்.

சீமைத்துரையோ காரியத்தில் கண்ணாய் “காளை” என்று அவனை ஒரு வித எதிர்ப்பார்ப்புடன் பார்க்க,

அவனால் அவரின் முகத்தை நேருக்கு நேர் காண முடியாமல் முகத்தை வேறுப்பக்கம் திருப்பிக்கொண்டான்.

அவரது இழந்த மானத்தை மீட்டு தரக்கூடிய ஒரே ஆள் அவன் மட்டுமே என்பது உறுதியாக தெரிந்ததினாலே தங்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகளை மறந்து அவனை தேடி வந்திருக்கிறார்.

அவரின் விழிகள் தன்னுடைய பதிலுக்காக எதிர்ப்பார்ப்புடன் நோக்கியிருப்பதை அறிந்தும் காளையன் இதழ்கடித்து வேறெங்கோ வெறித்திருந்தான்.

காந்திமதியும் மகனின் முடிவிற்காக தோளை சுற்றி போர்த்தியிருந்த புடவை தலைப்பை கசக்கியப்படி பதட்டத்துடன் காத்திருந்தார்.

சிறிதுநேரம் அவ்விடத்தில் ஒரு மயான அமைதி நிலவ ‘இந்த பிரச்சனையை இன்றே பேசி முடித்துவிடவேண்டும்’ என்ற முனைப்புடன் தனது கனத்த தொண்டையை செருமினான்.

பின்பு தனக்கு எதிரே திட்டில் அமர்ந்திருந்த மாமனை அழுத்தமாக நோக்கி “ஏன்யா இப்படி என்னைய சங்கடப்பட வைக்கறீங்க…நீரு சொல்லறது எமக்கு புரியாம இல்ல…ஆனா அதுக்காக நா(ன்) தூக்கி வளர்த்த புள்ளைய கட்டிக்கிறதெல்லாம் சரி வராதுய்யா” என தனக்கே உரிய கணீர் குரலில் தன் முடிவை தெரிவித்தான் காளையன்.

அத்தோடு நிறுத்தாமல் அன்று புழுவாய் துடித்த மதிவதனியின் நினைவில் முகம் இறுக “அன்னைக்கு நம்ப புள்ளைய போட்டு அக்கா அந்த அடி அடிக்கையில நீங்க வேடிக்கை பார்த்தது எனக்கு கொஞ்சமும் புடிக்கல மாமா…இத்தின நாளா ஆசாப்பாசத்தோடு வளத்தப்புள்ளைய பலிக்கொடுக்க நினைக்கிறது எந்த விதத்தில் நியாயம்?நம்ப புள்ளைய நாமளே நம்பலைனா வேற ஆரு நம்புவாங்க…அது நம்ப கண்ணு முன்னக்க வளந்த இளம் குருத்து…அது தப்பு செய்யுமானு ஒரு தரவ ஓசனை பண்ணியிருக்கலாம்” என மாமனின் தவறை சுட்டிக்காட்டி மதிவதனிக்காக நியாயம் கேட்டான்.

அவரோ அப்போதும் அதே இடத்தில் ஜீவனின்றி வெறித்திருக்க “நா(ன்) வேணா ஒரு ரோசனை சொல்லுதேன் மாமாவ்…நம்ப ஊருல தேன் இளந்தாரி பயலுக தண்ணீ பட்டப்படா சுத்திட்டு திரியறானுங்களே…அதில நம்ப புள்ளைக்கு ஏத்த சோடிய புடிச்சு இன்னும் இரண்டு மாசத்துல நானே ஊர் மெச்சற அளவு ஜாம்ஜாம்னு கலியாணம் கட்டி வைச்சிப்புடறேன்…அதுக்கு ஊடால நீங்க கொண்டக்க மண்டக்க எதுவும் பேசாதீக” என தன் அதட்டலான தோரணையிலே பேசியவன்,

“நீங்க எத நினைச்சும் சஞ்சலப்படாமல் ரவைக்கு இங்கனவே உறங்குங்க… இன்னும் இரண்டு நாளில் நம்ப புள்ளைக்கு ஏத்த மாப்பிள்ளைய கூட்டியாறேன்” என நன்றாக சிந்தித்து ஒரு உறுதியான முடிவிற்கு வந்தவனை தயக்கத்தோடு ஏறிட்டார் அவர்.

‘என்ன?’ என புருவம் உயர்த்தியவனிடம் “இரண்டு நாள்ல உன் யோசன சரியா வரலைனா…நீயே புள்ளைய கட்டிக்கணும்யா..‌.அதுக்கு உமக்கு சம்மதமா?” என அவர் தன் பிடியில் பிடிவாதமாக நிற்கவும்,

‘என்ன பேச்சு இது’ என இமைகள் இடுங்க எரிச்சலடைந்தாலும் ‘அப்படி ஒண்ணு நடந்தா தானே’ என இளக்காரமாக உள்ளுக்குள் புன்னகைத்த காளையன் மாமனை தீர்க்கமான பார்வை பார்த்துவிட்டு “சரி” என தலையசைத்தான்.

அவரோ விடாக்கண்டனாக “என் தல மேல கைய வைச்சு சத்தியம் பண்ணு” என மச்சானை விழிகளால் துளைக்க,

நெற்றியை நீவி ‘இப்போவே கண்ண கட்டுதே’ என உள்ளுக்குள் புலம்பி இருபுறமும் தலையசைத்து ‘இது நடக்காது’ என்ற திடத்துடனே “சத்தியம் மாமாவ்” என அவரின் தலையின் மீது தன் கரம் வைத்து விலகியவன்,

“மாமாவ் இப்போவாது நீரு நிம்மதியா சோறு தின்னுட்டு உறங்கு…நான் ஒரு சோலியா வெளிய போயிட்டு வாரேன்” என்றவன்,

தாயிடம் ‘பார்த்துக்க’ என்பது போல் கண்ணை காட்டிவிட்டு அணிந்திருந்த வேட்டியை தூக்கி முட்டிக்கு மேலே கட்டி நாக்கை கடித்தவாறே ‘இம்புட்டு தகரியம் இருந்தாக்க என் வீட்டு புள்ள மேல பழிய சுமத்தி கண்டப்படி பேசியிருப்பானுங்க…இந்தா வாரேன்…வந்து உங்களையெல்லாம் வெட்டி பொலிப்போடுறேன்டா…பரதேசி பயலுகளா’ என மீசையை முறுக்கிவிட்டு தன்னுடைய புல்லட்டில் ஏறி சீறிப்பாயவிருக்கும் காளை போல சீற்றத்தோடு புறப்பட்டான் காளையன்.

அவர்களது இல்லத்து இளவரசியின் மீது பழி சுமத்திய அனைவரையும் வஞ்சம் தீர்க்க புறப்பட்டது ஜல்லிக்கட்டு காளை.

அரக்கர்கள் ஒருவரையும் தனது கொம்பால் குத்தி கொல்லாமல் அது திரும்பி வராது என்பதை அறிந்த பெற்ற உள்ளமோ கதிகலங்கியது.

மகனின் கருமுகத்தை மீறி வெளிப்பட்ட உஷ்ணத்தை கண்டுவிட்டு காந்திமதி பதறிப்போய் “ஏய்யா ராசா…பார்த்து சூதானம்யா” என உரக்க குரல் கொடுக்க,

அவனோ அதற்கெல்லாம் செவிக்கொடுக்கும் நிலையை எப்பொழுதோ கடந்து விட்டிருந்தான்.

அதனால் மின்னல் வேகத்தில் வண்டியை விரட்டிச் சென்ற மகனை பார்த்து அடி வயிறு கலங்க ‘இன்னைக்கு அவங்களை கொல்லாமல் வீட்டுக்கு வரமாட்டான்’ என தடதடத்த நெஞ்சத்தோடு மருமகனை கவனிக்க உள்ளேச் சென்றார்.

சீமைத்துரைக்கோ தன்னுடைய கௌரவம் மட்டுமே பிரதானமாக இருக்க,காளையன் சத்தியம் செய்ததற்கு பிறகே நெஞ்சில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது.

முகம் தெளிவடைய ‘இதுக்கு மேல் அவன் பார்த்துப்பான்’ என்ற நிம்மதியோடு உண்டு உறங்கிவிட்டார்.

காந்திமதிக்கோ அன்றைய இரவு தூங்கா இரவாகிப்போனது.

வீட்டை விட்டு வெளியேச் சென்ற மகன் வரும் திசையை எதிர்ப்பார்த்துக்கொண்டே மிரட்சியோடு அவன் வருகை வேண்டி காத்திருந்தார்.

ஆனால் அவரது மகனோ பொழுது புலர்ந்த வேளையிலே இல்லத்திற்கு தனது மோட்டார் வண்டியில் வந்தான்.

அவனை கண்டு பதறிப்போய் “ஏய்யா ராசா?” என வயதை பொருட்படுத்தாமல் ஓடி வந்தவரின் முன்பு ஒற்றை கரம் நீட்டி தடுத்து “ஆத்தா கிட்டக்க வராதே…எழவு வூட்டுக்கு போயிட்டாந்திருக்கே…கொல்லை பக்கம் வெரசா போய் வெந்நீ வைய்யு‌…நான் உடுப்பு களைஞ்சிட்டு வரேன்” என இறுகிய குரலில் உரைத்த மகனின் கையிலும் காலிலும் குருதி கசிந்துக்கொண்டிருந்தது.

அதை கண்டவரின் மெல்லிய மேனி தூக்கிவாரிப்போட “ஏய்யா காளை” என வாயில் கைவைத்து அதிர்ச்சியோடு கூவியவரை நோக்கி வெடுக்கென்று திரும்பியவன் “ஆத்தா…ஒத்த சொல்லு சொன்னா கேட்கமாட்டியா?போய் நான் சொன்ன சோலிய செய்” என விழியில் தீயிட்டு எரித்து சாம்பலாக்கியவாறே அணிந்திருந்த சட்டையை கழட்டினான்.

மகனின் இடையில் இருந்த வெட்டு காயத்தை பார்த்தவரின் கண்கள் கலங்கிட ‘வாய்விட்டு அழுதால் திட்டுவிழும்’ என்றெண்ணி சேலையால் வாய்பொத்தி அழுகையை அடக்கியவாறே பின்பக்கம் நடந்துச் சென்றார்.

தாயின் கண்ணீர் அவன் இதயத்தை உருக்கினாலும் மனம் இறங்காமல் விறைத்து நின்றவனிற்கு ‘மதிக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய வேண்டும்’ என்ற பிரதான எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால் அவன் நினைத்தது போல் அது அத்தனை சுலபமான காரியமல்ல என்பதை அந்நொடி அறியவில்லை.

இங்கு ஒருவளோ தனது மாமன் ஒருவனின் வருகைக்காக மட்டுமே வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்.

அவளது வீட்டிலிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நரக வேதனையை அனுபவித்துக்கொண்டிருந்தவளிற்கு அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த மாமனின் மீது காதல் அதிகரிக்க செய்தது.

இந்த நரகத்திலிருந்து தன்னை காப்பாற்றி கவர்ந்துச் செல்ல தனது கந்தர்வன் வந்துவிடமாட்டானா என அவளது இதயம் ஒவ்வொரு முறையும் அவனிற்காக மட்டுமே துடித்துக்கொண்டிருந்தது.

தந்தை அவளை கண் முன் தெரியாமல் அடித்து விட்டுச் சென்ற நாட்களுக்கு பிறகு மீண்டும் அவள் தனது கூட்டுக்குள் சென்று விட்டது போல் சகோதரனின் முகம் பார்ப்பதை கூட தவிர்த்துவிட்டாள்.

செந்தூரப்பாண்டியனோ முதன்முறையாய் தமக்கையின் மீதிருந்த காயங்களை கண்டு கொதித்தெழுந்து தந்தையிடம் சண்டைக்குச் சென்றான்.

அவரோ “என்னடா மீசை முளைச்சவுடனே அப்பன்கிட்ட சண்டைக்கு வரீகளோ?” என இளக்காரமாக வினவ,

“ஆமா அப்படிதேன்…அதுக்கு என்ன இப்போ?” என அவனும் பதிலுக்கு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு எகிறினான்.

அதுவரை பொறுமையாய் இருவரின் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்திருந்த வாசமல்லி படீரென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

வளர்ந்ததற்கு பிறகும் தன்னை குழந்தைப்போல் தாங்கிய தனது அன்னையா அடித்தது என நம்பாமல் அவரையே வெறிக்க “அப்பாரையே எதிர்க்கிற அளவு வந்தாச்சா?என்ன பழக்கம்டா இது?” என் பல்லை கடித்து சீறியவர்,

“என் முன்னாடி என் புருஷனை மருவாத இல்லாம பேசின வெட்டி பொலிப்போட்டிருவேன்” என பத்திரகாளியாய் மாறி முகம் சிவக்க கத்தினார்.

அவனோ கண்கள் கலங்க “அம்மாஆஆ” என அழைக்க,

அவனின் முன்பு ஒற்றை கரம் நீட்டி தடுத்து “பேசாத…மொத உள்ள போடா” என கர்ஜிக்க,

பாண்டியனோ கன்னத்தில் கைவைத்து “அக்காதேன் எந்த தப்பும் செய்யலையே…மறுபடியும் மறுபடியும் எதுக்கு அவள அடிச்சிட்டே இருக்கீங்க?” என முனகலாய் கேட்டுக்கொண்டே உள்ளேச் சென்றவனை கண்டு ஆழ்ந்ததொரு பெருமூச்சை விட்ட சீமைத்துரையோ துண்டை உதறி தோளில் போட்டார்.

அவர் சோர்வுடன் அமரப்போனதை கண்டு “மாமா என்னாச்சு?” என பதறிப்போய் அருகே வந்த மனையாளிடம் “ஒண்ணுமில்லை மல்லி…இப்பத்திய புள்ளைகளுக்கு மீச முளைச்சவுடனே நாம பெரிய சூரன்னு நினைப்பு போல” என கேலியாக கூறி புன்னகைக்க முயன்றார்.

அவரின் முகத்தில் உயிர்ப்பு இல்லாததை கண்டுவிட்டு “மாமா கவலைப்படாதீக…ஏதோ மதி மேல இருக்கிற பாசத்துல இப்படி பேசிப்புட்டான்…அதுக்குதேன் அவனைய வஞ்சிப்புட்டனே…விடுங்க” என கணவரின் காலடியில் அமர்ந்தவரின் முகத்தில் கலக்கம் தெரிந்தது‌.

“என்னயிருந்தாலும் பொட்ட புள்ளைய அடிச்சது தப்புதேன்…புள்ள இப்போ எப்படி இருக்கு?” என மகளின் அறையை ஒரு முறை பார்த்துவிட்டு மனைவியிடம் நலிந்த குரலில் விசாரிக்க,

அவரின் கண்ணில் நீர் நிறைய “என்னால புள்ளைய கண்கொண்டு பாக்க முடியல மாமா…உடம்பெல்லாம் பட்டப்பட்டையா வீங்கி கிடக்கு…மருந்து வைக்க கிட்டக்கப்போனா கூட வுடமாட்டிக்குது அந்த புள்ள…சோறு கொடுத்தாலும் உண்ண மாட்டிக்குது…திட்டினாலும் அடிச்சாலும் ஜடம் மாதிரியே கிடக்கா…எனக்கே கொஞ்சம் பயமாதேன் இருக்கு மாமா” என பெற்றவருக்கே உரித்தான தவிப்பில் கூறிய வாசமல்லியின் தலையில் கைவைத்து நீவியவரின் கண்ணிலும் நீர் தடங்கள்!!

மதிவதனியின் மீது பெற்றவர்களுக்கு பாசம் மிகுந்திருந்தாலும் அதை சரியாக காட்டிக்கொள்ள தெரியாத மனிதர்கள் தான் இவர்கள் இருவரும்!!

ஆனால் வெளிக்காட்டாத நேசத்திற்கோ பாசத்திற்கோ என்றுமே மதிப்பில்லை என்பதை அவர்கள் அறியும் தருணமும் விரைவில் அமையும்.

சில நிமிடங்கள் அமைதியில் கழிய தொண்டையை செருமி நீண்டதொரு பெருமூச்சுடன் காளையனிடம் அவர் பேசிய விபரங்களை பற்றி மனையாளிடம் பகிர்ந்தார் சீமைத்துரை.

அதைக்கேட்டு பேரதிர்ச்சியடைந்த வாசமல்லியோ கொதித்தெழுந்தார்.

வெடுக்கென்று தலை உயர்த்தி கணவரை ஏறிட்டவர் “என்னா மாமா சொல்லுறீக?உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா?மதிக்கும் அவனுக்குமா?இரண்டு பேருக்கும் ஒரு பொருத்தம் கூட இல்லையே…மதிய விட காளைக்கு வயசும் கூட…வேணாம் மாமா…இதெல்லாம் சரிவராது…மொத இந்த கலியாண ஏற்பாட்டை நிறுத்துங்க” என படபடவென பொரிந்து தள்ளிய மனையாளை உற்று நோக்கியவர்,

“மல்லி நீ புரிஞ்சுதேன் பேசறீயா?காளையன் வேற யாரோ இல்லை…உன் தம்பி தேன்…அந்த ஞாபகம் இருக்கா?” என பொறுமையை இழுத்துப்பிடித்து வினவ,

வாசமல்லியோ முகத்தை சுழித்து “என் தம்பியா இருந்தாலும் அவனெல்லாம் வேணாமுங்க…ஊருக்குள்ள அவன பத்தி என்ன என்னவோ சொல்லுறாக…சிலரு அவன் ஆம்பளையே இல்லைனு கூட சொல்லுறாக…இதனால நம்ப புள்ள வாழ்க்கதேன் நாசமாப்போகும்” என மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு இரக்கமின்றி பேசினார்.

சீமைத்துரையோ சிடுசிடுப்புடன் “எனக்கு அது பத்தியெல்லாம் எந்த கவலையுமில்ல…நம்ப சாதியில ஒரு மாப்பிள்ள எனக்கு வேணும்…அவன் எப்படியிருந்தாலும் எனக்கு கவல இல்ல…என்னோட கவுரவம்தேன் முக்கியம்…அத இந்த கலியாணத்தால மட்டும்தேன் மீட்டு கொண்டாற முடியும்…அதனால நல்ல காரியம் பேசும் போது அசமஞ்சமா எதுவும் பினாத்திட்டு திரியாம கலியாணத்துக்கு புள்ளைய தயார் பண்ணு” என வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி மீசையை முறுக்கிச் சென்ற கணவரின் முதுகை வெறித்தார் அவர்.

அன்று தனது சகோதரனுக்காக பூர்ணிமாவிடம் சண்டைக்குச் சென்றவர்,இன்றோ தனது மகளை அவனிற்கு கட்டிக்கொடுக்காமல் இருப்பதற்காக தம்பியின் மானத்தை காவுக்கொடுத்தார்.

தங்களுடைய உதிரத்தோடு இணைந்து உருவாகிய ஜீவனாகினும் தாங்கள் என்று வருகையில் கணவர்,மனைவி இருவருக்கும் சுயநலம் மட்டுமே பிரதானமாக இருக்க,இவர்கள் இருவரும் வேண்டா வெறுப்பாக இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்கள்.

இந்த திருமண விடயத்தை கேள்வியுற்றால் முதலில் மகிழ்ச்சியுறும் ஒரே ஜீவன் மதிவதனி மட்டுமே!!

ஆனால் பெண்ணவளிற்கோ அந்த திருமண விடயம் தெரிவிக்கப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

அதனால் விஷயம் அறியும் முன்பே அவளால் ஒரு விபரீதமும் நிகழ்ந்திருந்தது.

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top