மோகனம் 8

காளையன் அவளது கல்லூரி இருந்த சாலை முழுவதும் இரு மருங்கலும் மதிவதனி தென்படுகிறாளா என்று அலைப்புறும் விழிகளால் துழவிக்கொண்டே வந்தவனிற்கு முகமெல்லாம் வியர்த்து வழிய ஆரம்பித்தது.

சீமைத்துரையும் அவரது மகனும் ஆட்கள் ஏற்பாடு செய்து மதுரை முழுவதும் சல்லடைப்போட்டு தேடிக்கொண்டிருக்க,காளையன் அவளது கல்லூரி சாலையில் தேடிக்கொண்டிருந்தான்.

ஆனால் மதிவதனியோ சுப்பிரமணி துரத்தியதின் விளைவால் ஒரு குறுகலான சாலையில் வழி மாறி ஓடியிருந்தது,அவனிற்கு தெரிய வாய்ப்பில்லை.

ஒரு வழியாக தேடி களைத்து சோர்ந்தவனிற்கு இருந்த ஒரு நம்பிக்கை ஒளியும் அணைந்துவிட்டது போல் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

அதனால் மிகுந்த தீவிரத்துடன் எங்கும் தேடி சோர்ந்துப்போய் தமக்கையின் வீட்டிற்கு வந்தவனின் இமைகளோ இடுங்கியது.

அந்த ஊரிலிருக்கும் அனைத்து மக்கள் திரளும் தமக்கையின் இல்லத்தின் முன்பு சூழ்ந்திருப்பதை கண்டு ‘நான் அம்புட்டு தொல சொல்லியும் இந்தக்கா அடங்காம சனத்தை கூட்டி வைச்சிருக்கு…கொஞ்சமும் கூறு இல்லாத கோட்டி’ என தமக்கையை மனதிற்குள் தாறுமாறாக வசைப்பாடிக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கியவனின் கவனம் முழுவதும் தற்போது மதிவதனியை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதிலே தீவிரமாக இருந்தது.

இல்லத்திற்குள் நுழைய முடியாத வகையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அதனால் வீட்டிலிருந்து சற்று தள்ளி ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தி அதன் மீது சாய்ந்து மார்பிற்கு குறுக்கே கைகட்டி விழி மூடி நின்றுக்கொண்டான் காளையன்.

வாசலில் நின்றிருந்த மதிவதனியின் சகோதரன் செந்தூரப்பாண்டியன் அவனின் வருகையை கண்டு “மாமா அக்கா கிடைக்கலையா?” என தவிப்புடன் கேட்டுக்கொண்டே அவனை நோக்கி ஓடி வந்தான்.

அவனது குரல் கேட்டு இமை திறந்தவனின் கண்கள் இரண்டும் கோவ்வை பழம் போல் சிவந்திருந்தது.

இப்போது ஊர் மக்களின் விழிகளும் அவனையே சுவாரசியமாக அவதானித்துக் கொண்டிருப்பதை அறிந்த காளையன் அடிவயிற்றிலிருந்து ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தான்.

“ஐய்யோ மாமா…உங்கள நம்பித்தேன் நம்பிக்கையோடு இருந்தேன்…இப்போ நீங்களும் கிடைக்கலைனு சொல்லறீகளே?அப்போ அம்மா சொல்லறபோல அக்கா யார் கூடவோ ஓடிப்போயிட்டாளா?” என பயத்துடன் தொடங்கி கோபத்தோடு முடித்தவனை காளையன் ‘தப்பு’ என்பது போல் உறுத்து விழித்தான்.

அதற்குள் மக்களும் வாயிற்கு மெல்ல கிடைத்தது அவுல் என்னும் விதமாக மதிவதனியை பற்றி கிசுகிசுக்க தொடங்கிவிட்டார்கள்.

அதில் ஆத்திரமானவன் “பாண்டி என்ன பேச்சு இது?மத்தவக தப்பா பேசினாக்கா அதட்டறதை வுட்டுப்புட்டு நீயே நம்பு வூட்டு புள்ளய வஞ்சலாமா?” என அடிக்குரலில் சீறினான்.

உயிரை ஊடுருவிய அவனது குரலில் ஓரடி பின்னால் சென்ற செந்தூரன் தலைகுனிந்து “சாரி மாமா” என நலிந்த குரலில் உரைக்க,

“சரி வுடு…அக்காவை வெரசா கண்டுப்புடிச்சிப்புடலாம்” என அவனின் தோள் தட்டி சமாதானம் செய்துக்கொண்டிருந்த நேரத்தில் ஊர் மக்கள் தங்களது வாயிற்கு வந்தது போல் மதிவதனியின் மானத்தை கூறுப்போட தொடங்கினார்கள்.

அச்சமயம் பார்த்து தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் சிலந்தி வலைகளின் வீரியம் அறியாமலே அவளது ஊரின் எல்லையில் வந்திறங்கினாள் மதிவதனி.

சந்திரனிடம் ‘நன்றி’ தெரிவித்துவிட்டு புறப்பட ஆயத்தமானவளை கண்டு “மதி நான் வேணா உன்னைய வூட்டுல ட்ராப் பண்ணவா?” என அக்கறையுடன் விசாரிக்க,

அவளோ “யோவ் போய்யா‌…நானே ஏற்கனவே எங்க வூட்டுல என்ன பூகம்பம் வெடிக்க போகுதுன்னு பயந்திட்டு இருக்கேன்‌…நீ வேற ஏன்யா?சங்கடப்படுத்திட்டு இருக்கவ” என உள்ளுக்குள் நெஞ்சம் படபடக்க அவனை வசைப்பாடியவள் விடைப்பெற்று தனது இல்லத்தை நோக்கி நடைப்போட்டாள்.

கையிலிருந்த சுப்பிரமணியை கீழே இறக்கிவிட்டு அதற்கு நிகராக குனிந்து “சுப்பிரமணி ஏற்கனவே என் அம்மா என்னைய சட்டியில போட்டு தாளிச்சிட்டு இருக்கும்யா…இதில உன்னைய கூட்டிப்போனா மொத்தமா வெளிய தாட்டிவிட்டிரும்…அதனால நீ இங்கனவே எங்கியாவது பதுங்கியிரு…நாளார்னைக்கு உன்னைய மாமா வூட்டுல கொண்டு விடறேன்…அது உன்னைய ராசா மாதிரி பாத்துக்கும்” என ஆதுரத்துடன் மொழிந்து தலையை வருடிவிட்டு எட்டி நடைப்போட்டாள்.

அதுவோ அவளின் பேச்சை கேட்காமல் “லொள்” என குரைக்க,

உடனே பதறிப்போய் அவசரமாக விழியை சுழற்றியவள் அனைவரின் வீடும் சாற்றியிருப்பதை கண்டு பெருமூச்சுடன் “உஷ் சுப்பிரமணி சத்தம் போடாதே‌.‌‌..சொன்ன பேச்சு கேளு” என வாயில் விரல் வைத்து மிரட்டி “இங்கயே இருக்கணும்” என எச்சரித்துவிட்டே தனது இல்லம் நோக்கி நடந்தாள்‌.

சுப்பிரமணியோ “ம்ம்” என சிணுங்கிக்கொண்டே சாலையில் அவ்விடத்திலே தரையில் படுத்துக்கொண்டு அவள் செல்லும் திசையை பாவமாக பார்த்திருந்தது.

“சீமைத்துரைக்கிட்ட அப்போவே சொன்னேன் புள்ளய படிக்க வைக்காதே கண்ணாலம் கட்டி வைச்சிப்புடுன்னு கேட்டானா? இப்போ பாரு எவனையோ இழுத்திட்டு ஓடிருச்சு”

“அதானுங்க ஊரில் இல்லாத அழகினு இல்ல பொத்தி பொத்தி வளத்தாங்க…கூண்டுக்குள்ள அடைச்ச கிளி எம்புட்டு நாளு தான் அடங்கியிருக்கும்…அதேன் பிச்சுக்கிட்டு போயிடுச்சு”

“அந்த புள்ளைக்கு…தான் ரொம்பதேன் வடிவா இருக்கோம்னு கர்வம்…ஊருல ஒருத்தரை மதிச்சு பேசியிருக்கா?யாரையும் மதிக்காம அதுப்பாட்டுக்கு கண்டப்படி பேசிட்டு திரியும்”

“அண்ணே அது கலர் கலரா உடுப்பு போட்டுக்கிட்டு சீவி சிங்காரிச்சுட்டு பள்ளிக்கூடத்துக்கு போவும் போதே நினைச்சேன்…இப்புடி ஏதாவது வந்து விடியும்னு”

“நம்ப சாதிக்கே அவமானத்த தேடி தந்த புள்ளைய வெட்டி பொலிப்போடணும்” என வீணாக மற்றவரின் நெஞ்சில் வன்முறையை தூண்டி,அவளின் அமைதி சுபாவத்தை கூட பல்வேறாக கதைப்புனைந்து,அவளின் அழகில் விளைந்த பொறாமையில் வஞ்சம் வைத்து பேசிக்கொண்டிருந்தவர்களின் அநாகரீக உரையாடலில் கடுப்பான காளையன் “எல்லாரும் மொத நிறுத்துங்கய்யா” என அவ்விடமே கிடுகிடுக்க கர்ஜித்தான்.

ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட காளையனின் விழிகளும் முகமும் ரௌத்திரத்தில் சிவந்திருக்க,நரம்புகள் கிளர்ந்து புடைக்க கைமுஷ்டியை இறுக்கி நின்றிருந்த அவனது தோரணையும் பேச்சும் திகிலை கொடுக்க,அவ்விடமே சிறிது நேரம் மயான அமைதியில் கழிந்தது.

புஜங்கள் விடைக்க காப்பை பின்னுக்கு தள்ளி அங்கு இருக்கும் அனைவரையும் கூறுப்போடும் வகையில் கூர்மையாக பார்த்தவனின் கண்களில் தீப்பொறி பறந்தது.

கையை முறுக்கி நாக்கை கடித்தவன் “ஏய்யா நீங்களாம் வூட்டுலிருந்து புறப்படும் போதே மனசாட்சியை கழட்டி வைச்சுப்புட்டு வந்துட்டீங்களா?என்னய்யா பேச்சு இது?உமுட்டு புள்ளைனா இப்படியெல்லாம் பேசுவீகளா?மொத உங்களையெல்லாம் ஆரு பஞ்சாயித்துப்பண்ண கூப்பிட்டது…புள்ளைக்கு என்னாச்சோ ஏதாச்சோம்னு நாங்களே கலங்கிட்டு கிடக்கோம்…நீங்க என்னடானா வெட்டுவோம் குத்துவோம்னு கொலைகாரனுங்க மாதிரி ஏசிக்கிட்டு திரியறீங்க?” என உச்சஸ்தானியில் கழுத்து நரம்புகள் புடைக்க கத்தினான்.

அதில் மற்றவர்கள் மிரண்டு ஓரடி பின்னால் வைக்க “கூட்டத்துல எவன்யா அது சாதிய பத்தி பேசினது…உன் வூட்டுல காசு பணம் இல்லைனா சாதிக்காரனா வந்து சோறு போடப்போறான்…நீ நெதமும் சோலிய பாத்தா தான் ஒரு வாய் சோறு உன்னால தின்ன முடியும்…மொத உன் சட்டை பின்னால ஒட்டியிருக்கிற அழுக்க பாருய்யா…பொறவு அடுத்த வூட்டுக்கு பஞ்சாயத்துக்கு வரலாம்…அதுவுட்டுபுட்டு சாதி ம** மண்ணாங்கட்டின்னு பேச வந்துட்டான்ய” என விழிகளை நாற் புறமும் சுழட்டியவாறு அனைவரையும் தீ ஜூவாலை பொங்க உறுத்து விழித்தான்.

அதற்குள் கூட்டத்திலிருந்து ஒரு பெரியவர் துணிச்சலை வரவழைத்து முன்னே வந்தவர் “ஏய்யா என்ன?நீயும் நம்ப சாதிங்றதை மறந்திட்டு பேசறீயா?இப்படியே பேசிட்டு திரிஞ்சா நம்ப சாதிக்காரவக எவனும் உனக்கு பொண்ணு தரமாட்டான்” என அவ்விடத்திற்கு சற்றும் பொருந்தாமல் அவனின் மீதுள்ள வன்மத்தை கொட்ட,

அவனோ அதற்கெல்லாம் அசராமல் “இப்போ மட்டும் பொண்ணு கொடுக்க அப்படியே லைன் கட்டி நிற்காறனுங்களாக்கும்…போயா அங்குட்டு” என எகத்தாளமாக அந்த பெரியவரை பார்த்து கையசைத்தவன்,

விரல் சொடக்கிட்டு “நீ நெசமான சாதி வெறியன்னா…முடிஞ்சா உன் புள்ளைய எனக்கு கட்டிக்கொடும்யா…அப்படி நீ கட்டிக்கொடுத்தா நீ நம்ப சாதிக்காரன்னு ஒத்துக்கறேன்…என்ன கட்டிக்கொடுக்கிறீயா?” என ஒற்றை புருவத்தை இளக்காரமாக ஏற்றி இறக்கினான்.

அதுவரை அவனிடம் சரிக்கு சமமாக வாயை கொடுத்திருந்தவர்,கப்பென்று தன் வாயை மூடிக்கொண்டார்.

அவனது கேள்வியில் முகமெல்லாம் வியர்த்து வழிய தலைகுனிந்து துண்டால் வியர்வையை பதட்டத்துடன் துடைத்தவரை வெறுப்புடன் பார்த்து இதழை வளைத்த காளையன் “முடியாது இல்லை…அப்போ மூடிட்டு நகரு” என தனது வாயை பொத்தி பின்னால் செல்லுமாறு சைகை செய்தான்.

படிக்காத ஏழை விவசாயிக்கு பெண்ணை தர அவருக்கு கிறுக்குப்பிடித்திருக்கிறதா என்ன?

அதனால் அவர் அடங்கிப்போக,அதனை சுட்டிக்காட்டி “இதான் உங்க சாதி லட்சணம்…இன்னொருக்கா எவனாவது சாதிக்காரன் அது இதுனு நாக்கை தூக்கிட்டு வந்தீங்க…வெட்டி பொலிப்புட்டுருவேன்” என தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று ஒற்றையாளாய் இருநூறு பேரையும் சமாளித்தான் நமது சீறும் காளையன்.

தன்னை கண்டு பம்மிய கூட்டத்தினரை மொத்தமாய் பார்வையால் எரித்தவன் ‘அசிங்கம் புடிச்ச பயலுக…பாய்ண்ட் பேச வரலைனா உடனே சாதி தூக்கியாந்தறது…பொசக்கெட்டவனுங்க’ என பெருஞ்சினத்தோடு முணுமுணுத்தான்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்த கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு எழ “மறுபடியும் என்னய்யா?” என விழி உயர்த்தி சிடுசிடுத்தவனிடம்,

ஒரு பெண்மணி பவ்யமாக முன்னே வந்து எச்சில் கூட்டி விழுங்கியவர்  “ஏய்யா இப்படியே தாட்டியம் பண்ணிட்டு திரிஞ்சா என்ன செய்யறது?மொத புள்ளைய எங்கனக்குள்ள கண்டுப்பிடிக்கிறது ரோசன பண்ணு…ய்யா” என தயக்கத்துடன் இழுக்க,

அவனோ “அடுத்து என்ன பண்ணி எங்க வூட்டு புள்ளைய கண்டுப்பிடிக்கணும்ன்ற அந்த ஈர வெங்காயமெல்லாம் எங்களுக்கு தெரியாதாக்கும்” என அதற்கும் பல்லைக் கடித்து சீறியவன்,

“ஆவுனா பட்டறைய போட்டறாங்கயா…இவுகளுகெல்லாம் வேற சோலியே கிடையாதா?மேல ஏதாச்சும் பேசினாக்கா இன்னைக்கு இங்க நாலஞ்சு தல தரையில உருளும்…கசகசன்னு குடைச்சல குடுத்திட்டு திரியாம அவன் அவன் வூட்ட பாத்து போங்கய்யா…எங்க புள்ளைய நாங்க கண்டிப்பிடிச்சுக்கிறோம்” என சிறிதும் இரக்கமின்றி‌ இல்லத்தின் வாசல் புறமாக கைகாட்டினான்.

அதில் பெரும் அவமானமடைந்த ஊர் சனம் காளையனின் மீது கொலைவெறியோடு அவனை உறுத்து விழித்தப்படி வெளியேற முயன்றார்கள்.

அதற்குள் இரு ஜோடி கண்கள் மதிவதனி வேறொருவனின் வண்டியில் வந்து இறங்கியதை கண்டுவிட்டு,அவளிற்கு முன்பாக அந்த தகவலை அவளின் வீட்டிற்கு முன்பு கூடியிருந்த மக்களிடம் விஷயத்தை உரைத்திருக்க ‘எங்களையாடா எகத்தாளம் பேசின…இப்போ என்ன பண்ணறோம் பாரு’ என உட்சபட்ச வெறியோடு அவனிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு தயாராகினார்கள்.

அந்த விடயம் காட்டுத் தீயை விட அதிவேகத்தில் அக்கூட்டம் முழுவதும் பரவி,அங்கு சூழ்ந்திருந்த மக்களிடமிருந்து பெரும் கூச்சலை கிளப்பியிருந்தது.

திடீரென்று அவ்விடத்தில் பெரும் கூச்சல் கிளர்ந்தெழவும் ‘என்ன?’ என்று புருவம் சுருக்கி பார்த்த காளையனையும்,அவனோடு இணைத்து மதிவதனியையும் இழிவுப்படுத்தி பேச ஆரம்பித்திருந்தார்கள்.

“அம்புட்டு தொல உன் அக்கா மவளுக்கு வரிஞ்சு கட்டிக்கட்டு வந்தியே…அவ செய்திருக்க காரியத்த பார்த்தியா?” என தொடங்க,

இமைகள் இடுங்க அவரின் முன்பு ஒற்றை கைநீட்டி தடுத்தவன் “நீ ஒண்ணும் பேச வேணாம்…உங்களைய தேன் கிளம்ப சொல்லிட்டேனே…மொத எல்லாம் கிளம்புங்கய்யா” என இதழ்கடித்து குரலுயர்த்தினான்.

“என்னடே எங்களையெல்லாம் அனுப்பிட்டு எவனோடவோ ஊர் மேஞ்சிட்டு வந்தவளை வூட்டுக்குள்ள விட்டிரலாம்னு பாக்கியளோ?”

“அந்த புள்ள பக்கத்து ஊருக்காரனோட மட்டுமா சுத்திட்டு திரியுது…இதோ இங்குட்டு நிற்கறானே…இவன் கூடவும் தேன் ஊரில் மேறமனை போகுது” என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை புனைந்து அவர்களின் மீது அவதூறான பழியை சுமத்தத் தொடங்கினார்கள்.

அதேநேரம் அன்று மாட்டிவண்டியில் இருவரும் செல்லும் போது அவர்களை வம்பிழுத்து இருவரிடமும் வசை வாங்கிய வஞ்சத்தோடு காத்திருந்த அந்த பெரியவர் தன் பங்கிற்கு கொளுத்திப்போட்டார்.

“ஆமாண்ணே…நானே அன்னைக்கு என் இரண்டு கண்ணால பாத்தேன்…வண்டியில் போவும் போதும் வரும் போதும் அந்த புள்ள இவன் பக்கத்துல வந்து உரசிக்கிறதும்…பதிலுக்கு இவன் கொஞ்சறதும்…அவ குழையறதும்…அப்பப்பா…வெட்ட வெளியிலே இம்புட்டு நடக்குதுன்னா அப்போ வூட்டுக்குள்ள எம்புட்டு நடக்கும்” நாக்கில் நரம்பில்லாமல் வாயிற்கு வந்தது போல் பொய்யான பழியை சுமத்தி அவர்களை வஞ்சம் தீர்த்துக்கொண்டார்.

அதைக்கேட்டு கொதித்தெழுந்த காளையன் “என்னடா சொன்ன?” என அவ்விடமே அதிர கர்ஜித்து,அவரின் சட்டையை கொத்தாக பற்றி மண்ணில் போட்டு புரட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டான்.

அவனிற்கு ஆத்திரமென்றால் அப்படியொரு ஆத்திரம்!

கண்முன்னே இருப்பவர்களை வெட்டி கூறுப்போட்டு மண்ணிற்குள் புதைக்கும் அளவு ஆத்திரம்!

அவர்கள் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை கூட பொறுத்துக்கொண்டிருப்பான்,ஆனால் அவன் உயிரையே வைத்திருக்கும் மதிவதனியின் மீது அநியாமான குற்றச்சாட்டை சுமத்தியவர்களை அவனால் சாதாரணமாக விடமுடியவில்லை.

அவனது செயலில் அவ்விடத்தில் ஒரு பெரும் கலவரமே வெடிக்க,அதுவரை இல்லத்தினுள் இடிந்துப்போய் அமர்ந்திருந்தவர்கள்,வாசலில் பெரும் இரைச்சலுடன் கூடிய மக்கள் கூச்சலை கேட்டு அவசரமாக வெளியே ஓடி வந்தார்கள்.

அங்கு காளையன் சீறும் காளையின் ஆக்ரோஷத்தோடு உடலுள்ள ஒட்டுமொத்த நரம்புகளும் புடைக்க அங்கிருந்த பலரின் வாயை உடைத்து,வீண் பழி சுமத்திய பெரியவரின் எலும்புகளை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்ததான்.

அவனது கட்டுப்பாடில்லாத ஆவேச தாக்குதலை கண்டுவிட்டு அவனை இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் தடுத்து நிறுத்த முயல,வாடி வாசலில் பல உயிர்களை வேட்டையாட துள்ளி திரியும் காளையை போன்று “ஏய் விடுங்கய்யா…இன்னைக்கு அந்த ஆள கொண்டேப்புடறேன்” என ஆத்திரத்தோடு திமிறிக்கொண்டிருந்தான்.

அந்த பெரியவர் அணிந்திருந்த வெள்ளை சட்டையில் உதிரம் கொட்டும் அளவு வெறித்தனமாக அவன் அடித்த அடியில் மற்றவரின் கைப்பிடியில் மயங்கி நின்றிருக்க,இன்னும் சிறிது நேரம் விட்டால் அவரின் உயிர் பிரிந்துவிடக்கூடும் என அனுமானித்த உறவினர்கள் அவனை தடுத்து நிறுத்தினார்கள்.

ஊர் மக்கள் அனைவரையும் பகையாக்கி தனித்து நின்று சண்டையிட்ட தீரனால் தனது சொந்தங்களின் “ஏய்யா காள நிறுத்துய்யா…வேணாம்யா…அண்ணே…பிளீஸ்…ஏய்யா கொல கேஸூ ஆகிப்போவம்யா” என்ற தவிப்பான பல குரல்கள் கேட்டே அமைதியடைந்தான்.

தன்னுடைய பந்தங்களுக்காக மௌனமானலும் அவர்களது வஞ்சமுள்ள குற்றச்சாட்டில் நெஞ்சில் கோபம் கனன்றுக் கொண்டிருந்தது.

அங்கிருந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை ஒற்றையளாய் தீரத்துடன் எதிர்த்து நின்ற புஜப்பலங்களை கொண்ட அவனது வீர பராகிரமத்தை கண்டு அனைவரும் நெஞ்சில் திகில் உறைய நின்றிருந்தார்கள்.

வாயை திறந்து அடுத்து ஒரு சொல் சொல்வதற்கே அஞ்சி நடுங்கியிருக்க,தன்னை பிடித்திருந்த ஆண்களை நோக்கி உஷ்ணப்பார்வையை செலுத்தி “அடச்சீ விடுங்கய்யா” என தேகம் முழுவதையும் சிலிர்த்து ஒரு முறை குலுக்கி அவர்களை உதறி தள்ளினான்.

கைமுஷ்டியை இறுக்கி தோளை குலுக்கி சட்டையை இழுத்துவிட்டு மீசையை முறுக்கி விட்டவனின் முகத்திலிருந்த எஃகிரும்பின் இறுக்கத்தில் மற்றவர்கள் அச்சத்துடனே பின்வாங்கினார்கள்.

“இங்க என்னய்யா பிரச்சனை?” என சீமைத்துரை விஷயம் அறியும் பொருட்டு ஏனையவர்களை பார்த்து வினவ,

அதற்காகவே காத்திருந்தாற் போன்று உஷ்ண பெருமூச்சோடு தங்களை முறைத்திருந்த காளையனை மிரட்சியோடு நோக்கிவிட்டு மடைத்திறந்த வெள்ளமென அனைத்து உண்மைகளையும் கொட்டினார்கள் ஊர்காரர்கள்.

அதைக்கேட்டு வாசமல்லி “யாத்தே” என நெஞ்சில் கைவைத்துக்கொண்டு அதிர்ந்தவர் “ஐய்யோ ஐய்யோ என் குல பெருமைய கெடுக்க வந்த சண்டாளி…இப்படி பெத்த வயித்தில நெருப்பு அள்ளிக்கொட்டிப்புட்டாளே…நாசமா போனவ…” என வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு தனது ஒப்பாரியை தொடங்கிவிட்டார்.

அவ்விடத்தில் காளையன் மட்டுமே “யக்கா என்னா பேசற?அவ நம்புட்டு பொண்ணு” என காட்டமாக மொழிய,அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் மகளின் நல்வாழ்வை கெடுக்கும் விதமாக தானாகவே சேற்றை வாரி இறைத்துக்கொண்டிருந்தார்.

அவனோ திரும்பி சீமைத்துரையை அழுத்தமாக பார்க்க,அவரோ இடிந்துப்போய் தலைக்குனிந்து நின்றிருந்தார்.

தீர விசாரிப்பது மெய்.

ஆனால் இங்கோ மெய் அறியாமலே ஒரு அப்பாவி பெண்ணவளின் மீது குற்றம் சுமத்தி கழுவேற்றினார்கள்.

காளையனோ யாரிடமும் எதுவும் பேச முடியாமல் ஒரு வித வெறுப்போடு ஓரமாக ஒதுங்கி நின்றுவிட்டான்.

வெளியாட்கள் தங்கள் பெண்ணை இழிவுப்படுத்தினால் ஒரு தனி மனிதனாக அவர்களுக்கு எதிராக நிமிர்ந்து நின்று போராடி வெல்ல முடியும்.

ஆனால் இங்கோ அவளது இரத்த சொந்தங்களே அவளிற்கு எதிராக சதி செய்கையில் அவனால் என்ன செய்திட முடியும்.

அதிலும்,தனக்கு உயிரானவர் மற்றொரு உயிரான ஜீவனை தூற்றும் போது,அவனால் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையோடு ‘ச்சை’ என முகம் கறுக்க கைமுஷ்டியை இறுக்கி அருகிலிருந்த சுவற்றில் ஓங்கி குத்தி தமக்கையை வெறித்தான்.

ஏனையவர்களும் அவருக்கு ஒத்து ஊதுவது போல் மௌனமாக கண்ணீர் வடித்த விதம்,அவனை முழுமையாய் சோர்வுற செய்தது.

அவளின் மீது அப்போதும் நம்பிக்கை வைத்திருந்த ஒரே ஜீவன் அவன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மனம் குறுகிப்போய் அங்கிருந்த தூணில் சாய்ந்திருந்த வேளையில் “அம்மா அக்காஆஆ” என செந்தூரப்பாண்டியனின் காட்டு கத்தலில் அனைவரின் கவனமும் ஒரு சேர வாசல் நோக்கி திரும்பியது.

முகம் வெளிறி கண்ணிலிருந்து தாரை தாரையாக வழிந்த நீருடன் உடல் வெடவெடக்க மதிவதனி நின்றிருந்த தோற்றமே,அங்கு நடந்த அனைத்து களேபரங்களையும் வாக்குவாதங்களையும் அறிந்திருக்கிறாள் அவள் என்பது காளையனிற்கு தெரிந்துப்போனது.

அவளிற்கோ வலி என்றால் அப்படியொரு வலி…

உயிரோடு இருக்கும் போதே உடலில் இருந்து உயிரை உருவி எடுக்கும் அளவிலான மிகையான வலி…

ஆசையோடு வளர்த்த ஆட்டை கழுத்தை வெட்டி பலிக்கொடுக்கும் வகையிலான வலி…

சபையின் முன்பு நிர்வாணமாய் கூனி குறுகி நிற்பது போன்ற ஒரு வலி…

தாயின் சொற்களால் வலிக்க வைக்க முடியும் என்பதை முன்பே அறிந்திருந்தவளிற்கு,முதன்முறையாய் சொற்களால் ஒருத்தரை உயிர் மறித்துப்போகவும் செய்ய முடியும் என்பதை பாவையவள் அந்நொடி அறிந்தாள்.

மகள் சிறிது சிறிதாக தன் வார்த்தையால் மரித்துக்கொண்டிருப்பதை அறியாத வாசமல்லியோ ஆத்திரத்தில் மதியிழந்து விரிந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்தார்.

சுற்றியிருந்த யாவரும் சற்றும் எதிர்ப்பாராத வகையில் திண்ணயில் இருந்த கீற்று விளக்கமாற்றை எடுத்துச் சென்று அவளை விளாசி தள்ள ஆரம்பித்துவிட்டார்.

அதுவரை சிலையாய் நின்றிருந்த பாவையவளிற்கு உயிர் வந்தது போல் உடலெங்கும் ரணமாய் மாற “அம்மாஆஆ” என அவ்விடமே கிடுகிடுக்க கத்தியவளின் குரல் நெஞ்சை பிளக்க வைத்தது.

பல்லை கடித்து பத்ரகாளியாய் உருமாறியிருந்த வாசமல்லி “உனக்கெல்லாம் இந்த வயசுல மாப்பிள்ள துணைக்கேட்குதா? அப்படியென்னடி உடம்பு தெனவெடுத்து ஆடுது…உடல் சுகம் தேன் பெருசுன்னு முன்னவே சொல்லியிருந்தாக்க சமஞ்சவுடனே கலியாணம் கட்டி அனுப்பியிருப்பனில்ல…உனக்கெல்லாம் எதுக்கு படிப்பு?எவனோடடி மேஞ்சிட்டு வந்த?” என எல்லை மீறிய அவரது வார்த்தைகளை கேட்கவே உடல் கூசிப்போனவள்,

செவிகளை பொத்தி “அ…அம்மா நா…ன் சொ…ல்லறதை கேளு…ம்மா…நா…நான் எந்த தப்பும் செய்யல” என வலியில் அலறி துடித்தவளை கண்டவர்களின் இதயமோ தாறுமாறாக துடித்தது.

அத்தனை நேரமாக அவளின் மீது அவதூறான பழியை சுமத்திய சிலருக்கே வாசமல்லியின் பேச்சுகள் அபஸ்வரமாய் செவியில் ஒலித்து முகத்தை சுழிக்க வைத்தது.

அங்கிருந்த சில ஆண்களோ நெஞ்சை நிமிர்த்தி ‘பாத்தியா நாங்க நினைச்சது தேன் நடந்திருக்கு’ என எள்ளலாக காளையனை ஆணவத்துடன் ஏறிட,

அவனோ தமக்கையின் அடியை தாங்க முடியாமல் வலியில் சுருண்டு கீழே தொய்ந்து விழுந்தவளின் காயங்களில் கண்ணீர் பெருக ஓடி வந்து “ஆத்தா போதும் விடுத்தா…அவ நம்பூட்டு இளவரசி” என தமக்கையின் கையை பிடித்து தடுக்க முயல,

ஆத்திரத்தில் மதியை இழந்திருந்தவரை பற்றி கூறவும் வேண்டுமோ?

வெடுக்கென்று அவனை நோக்கி திரும்பி அவனது கரங்களை அருவருப்புடன் உதறி தள்ளியவர் “என் குடும்ப விஷயத்துல தலையிட நீ யாருடா?” என்ற ஒற்றை வரியிலே அவனை ஒரேயடியாக தள்ளி நிறுத்திவிட்டார்.

அதைக்கேட்டு உலகமே தன் சுழற்சியை நிறுத்தியது போல் ஸ்தம்பித்தவனிற்கு சுயமரியாதை துள்ளி எழ,அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் அவமானத்தில் முகம் கறுக்க நடையை கட்டிவிட்டான்.

செல்லும் முன் ‘நீயா பேசியது’ என்பது போல் அவரின் மீது ஒரு வெற்று பார்வையை செலுத்தவும் தவறவில்லை.

அங்கிருந்த அனைவரும் இப்படியொரு சூழ்நிலையை எதிர்ப்பாராமல் உறைந்துப்போனார்கள்.

தரையில் விழுந்த மீனாய் துள்ளி துடித்துக்கொண்டிருந்த பேதையவளோ கண்ணில் ஜீவனின்றி போகும் தனது மாமனை பரிதவிப்புடன் நோக்கினாள்.

அந்த கூட்டத்தில் தன்னை நம்பிய அந்த ஒற்றை ஜீவனும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் தனியே விட்டுச் செல்வது போல் தோன்றிட,

அந்த மான் குட்டியோ இதழ் துடிக்க “மா…மா… “ என உயிரை உருக்கும் குரலில் திக்கி திணறி அவனின் புறம் ஒற்றை கைநீட்டி அழைத்தாள்.

பெண்ணவளின் அந்த தடுமாற்றமான அழைப்பில் சட்டென்று நின்றவன்,மெதுவாக அவளை நோக்கி திரும்பினான்.

அவள் கண்களில் இருந்த இறைஞ்சுதலில் அவனது உடலின் ஒட்டுமொத்த அணுவும் அதிர,அவளை அந்நொடியே தன்னோடு சிறையெடுத்துச் செல்லும் படி ஆவித்துடித்தது.

அவளின் சிவந்த மேனியில் பதிந்திருந்த காயங்களின் வடுக்களை கண்டவனின் இதயத்தில் உதிரம் கொட்ட “பாப்பா” என நலிந்த குரலில் அழைத்து ஓரடி முன்னே வைத்த வேளையில் “அவனைய எதுக்குடி கூப்பிடற?அவனாலதேன் வெனையே வந்தது…உன் மாமனை உரச தேன் அம்மாச்சி வூட்டுக்கு போறேன்‌…போறேன்னு அங்கியே கதினு பலி கிடந்தியாடி?” என ஆக்ரோஷமாக கேட்டு அவனை நோக்கி நீண்ட பெண்ணவளின் கையில் ஓங்கி ஒரு அடி வைத்து மீண்டும் சரமாரியாக தாக்க ஆரம்பித்துவிட்டார்.

சொற்களால் அமிலத்தை அள்ளி வீசி ஒருவரை வதைக்க முடியும் என்பதை ஆடவன் முதன்முறையாய் உணர்ந்தான்.

அதற்கு காரணமான தமக்கையை கண்டவனிற்கு முதன்முறையாய் சகோதரியின் மீது வெறுப்பாக வந்தது.

அதனால் அடுத்த அடி எடுத்து வைக்க விளையாமல் தேகம் விறைக்க கைமுஷ்டியை இறுக்கி கண் மூடி அவ்விடத்தில் சில நொடிகள் நின்றுவிட்டான்.

வாசமல்லியோ அத்தோடு நிறுத்தாமல் “சொல்லுடி?உன் மாமனை மட்டும்தேன் உரசப் போனீயா?இல்ல வேற எவனையும் தேய்க்க அங்க போனீயா?” என எல்லையின்றி பேசிய மகளின் சொற்கள் காந்திமதிக்கே மிகுந்த அருவருப்பைக் கொடுத்தது.

மதிவதனியோடு சேர்த்து மகனையும் இழிவுப்படுத்துவதை கண்ட பெற்ற தாயின் உள்ளம் பொங்கி எழ,முந்தானையை ஒரு முறை உதறி சொருகியவர் ஒரு குருஷேத்திர யுத்தத்திற்கு தயாரானார்.

அதனை அறிந்தவனாய் பட்டென்று விழி திறந்த காளையன் தாயை சிவந்து கண்களுடன் ஏறிடவும்,அவரோ தவிப்புடன் ஒரு பார்வை பார்த்து பல்லை கடித்து மகளை ஏச விளைந்தார்.

ஆனால் அவனோ அப்போதும் ‘வேண்டாம்’ என்பது போல் தலையசைத்து மறுக்க,அவனது கண்களோ மதிவதனியை எண்ணி கலங்கி சிவந்திருந்தது.

மகனின் ஒற்றை பார்வைக்கு கட்டுப்பட்டு அவர் மௌனமானாலும் அவனிற்காக நெஞ்சம் துடித்தது.

காளையனோ விழிகளை திருப்பி கண்களால் தன்னை யாசிப்புடன் நோக்கியவளை கண்டு பெருமூச்சுவிட்டவன் மனதை கல்லாக்கி கொண்டு திரும்பி நடந்துவிட்டான்.

இதற்கு மேலும் அவளிற்காக அவன் களம் இறங்கி வாதாடினால்,மற்றவரின் முன்பு கூறுப்போடப்பட்டிருக்கும் பெண்ணவளின் மானம் தன்னோடு இணைத்து வைத்து அவளை உயிரோடு கொன்று புதைத்துவிடும் என்பதை கருத்தில் கொண்டே உணர்வுகளை கழட்டி வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

செல்லும் முன்பு சுற்றி நின்று அங்கு நடக்கும் அநியாயத்தை திருவிழா போல் வேடிக்கை பார்க்கும் ஒவ்வொருவரையும் காறி உமிழாத குறையாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

கூடவே தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் நின்றிருந்த சீமைத்துரையையும் செந்தூர பாண்டியனையும் ‘ச்சை நீங்களாம் மனுசங்களா?’ என்பது போல் வெஞ்சினத்துடன் விழிகளால் உறுத்து விழித்தவனின் இதயமோ ரணமாய் வலித்தது.

அவள் புறமிருந்த நியாயத்தை கேட்காமல் செவியில் விழுந்ததை வைத்து பெண்ணை இரக்கமின்றி அடி வெளுத்திருந்தார் வாசமல்லி.

ஆண்கள் அனைவரும் அவள் அடி வாங்குவதை கண்ணாற ரசித்துக்கொண்டிருக்க,பெண் இனத்தவர்களின் நெஞ்சில் சிறிது ஈரம் இருந்ததின் விளைவாக “ஏ மல்லி…புள்ளைய வுடு…என்ன தப்பு செய்தாலும் அவ நம்புட்டு புள்ள…நிறுத்தத்தா” என ஒரு வழியாக பெண்கள் அனைவரும் இணைந்து அவரது ஆக்ரோஷத்திற்கு தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள்.

ஆனால் காலம் கடந்ததற்கு அடையாளமாய் மனதளவில் மரித்துப்போயிருந்தவள்,இப்போது உடலில் ஏற்பட்ட காயத்தால் மூர்ச்சையாகியிருந்தாள்.

தூக்கிலிடப்போகும் கைதிகளுக்கு கூட ஒரு முறை பேச வாய்ப்பளிக்கும் மனிதாபிமானமுள்ள சமுதாயத்தில்,குற்றமே செய்யாமல் அவள் புறம் இருந்த நிஜத்தை கேட்காமலே பெற்ற தாயே அவளை துள்ளத்துடிக்க தூக்கிலிட்டிருந்தார்.

உயிர் மரித்துப்போனவளின் ஜீவனை யாவரேனும் உயிர்த்தெழ செய்வார்களா அல்லது மேலும்,உயிரை பல கூறாக்கிப்போடுவார்களா??

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top