மோகனம் 13

வெளியேச் சென்ற காளையனுக்கோ பளிங்கு நிற கரங்களில் இருந்த காயமே கண் முன் வந்துப்போக,அவனால் பணியில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை.

அதனால் தனது நண்பனான கதிர்வேலை வயலை பார்த்துக்கொள்ளுமாறு பணித்துவிட்டு,வரப்போடு ஒட்டியிருந்த சிறு மோட்டார் அறையிலுள்ள கயிற்று கட்டிலில் சென்று படுத்துவிட்டான்.

அவனது எண்ணம் யாவிலும் அவளவனே நிறைந்திருந்தாள்.

அவளின் நேசமும் அன்பும் அவனை ஒரு வகையில் நெகிழ செய்தாலும்,தன்னுடைய பாசத்தை பகடைகாயாகப் பயன்படுத்தி அவள் திருமணம் செய்துக்கொண்ட விதம் இப்போதும் அவனை உறுத்திக் கொண்டே இருந்தது.

அவனது நினைவுகள் திருமண நாளன்று காலையில் நடந்த ஒரு நிகழ்வை சுற்றியே பயணித்தது.

அதுவரை மதிவதனியை அந்த மீளமுடியா சிறையிலிருந்து மீட்டெடுக்கும் உத்வேகத்துடன் சுற்றி திரிந்தவனிற்கு அவளின் வாய் மூலமாக வெளிவந்த வார்த்தைகளின் பின்னணியில் இருந்த சாராம்சத்தை அறிந்துக் கொண்டவனிற்கு பயங்கரமாக எதிலோ தோற்ற உணர்வு!

சின்னஞ்சிறிய பெண்ணால் தான் முட்டாளடிக்கப்பட்ட விதம் ஆண்மகனது தன்மானத்தை சீண்டி உசுப்பேற்றிவிட்டிருந்தது.

அவளின் காதலை வெற்றி பெற செய்வதற்காக அதனை செய்திருந்தாலும்,அவள் செய்தது பெரும் பிழை என்ற எண்ணம் இப்போதும் நீர் பூத்த நெருப்பாய் அவனிற்குள் கனன்றுக் கொண்டிருந்தது.

மேலும்,இருவருக்குமிடையே உள்ள அனர்த்தங்களும் இணைந்து அவனை மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளியிருந்தது.

பொருத்தமில்லாத மனிதர்களை இணைத்து அர்த்தமானதாக மாற்ற கூடிய ஓர் உன்னத பந்தமே கணவன் மனைவி உறவு!!

அந்த திருமண பந்தத்தின் சூட்சமத்தை அறியாமல் அவளின் நேசத்தின் பெருமையை நிலைநாட்ட வேண்டி செய்த அந்தவொரு செயலை பெரிதாக கருதி அவளை விலக்கி நிறுத்தியிருக்கிறான் காளையன்.

சில நிமிடங்கள் கடந்தும் தன்னவள் பற்றிய சிந்தையிலே ஆழ்ந்திருந்த காளையனின் மனதினோரம் ஏனோ ஒரு இதம் பரவியிருந்தது.

அன்று காலையில் வயலிற்கு வந்த காளையனை சுற்றிலும் உள்ள மக்கள் விசித்திரமாக நோக்கினார்கள்.

மணமாகிய அடுத்த நாளே அவன் பணிக்கு வந்ததை கண்டு மக்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்.

கதிர்வேலோ நண்பனின் முகம் சரியில்லாததை கவனித்து “என்ன மாப்பிள்ள?” என தோளில் கைப்போட்டு விசாரித்ததற்கு யாரிடமாவது தன்னுள் புதைந்திருந்த இரகசியத்தை வெளியிட்டால் கனம் குறையும் என்பதினால் அவனிடம் விஷயத்தை பகிர்ந்தான்.

அதனை கேள்வியுற்ற கதிர்வேலின் முகத்திலோ வியப்பு,அதிர்ச்சி,அதிசயம்,பிரம்மிப்பு,பொறாமை என பல கலவையான உணர்வுகளின் ஆக்கிரமிப்பு!!

அத்தோடு தோழனின் இருளடைந்த வாழ்வில் ஒளியேற்றிய மதிவதனியின் பிழைகள் கூட அவனால் மன்னிக்கப்பட ‘என்ன பொண்ணுடா சாமி’ என தனக்குள்ளே சிலாகித்துப்போனான்.

அதனால் நண்பனிற்கு எதிரே வந்து நின்று அவனின் முகத்தை ஆச்சரியமாக ஏறிட,அவனது முகமோ இறுகிய கல்லாய் இருந்தது.

அவனது நியாயமற்ற சினம் தேவையில்லாத ஒன்று என்பதினால் “ஏய்யா…இதுக்கு எதுக்கு நீ அந்த புள்ளகிட்ட வெடச்சிட்டு கிடக்கிறவ…இந்த மாதிரி ஒரு பொண்ணு நம்ப வாழ்க்கையில வந்திடாதான்னு நம்ப ஊரு பசங்க தண்ணீப்பட்ட பாடா லோலோன்னு பொம்பளை பொற்னாடி அலைஞ்சிட்டு திரியறானுங்க…நீ என்னடானா கையில வந்த சீதேவி எட்டி உதைக்கிற” என மதிவதனிக்கு ஆதரவாக கொடி பிடித்தான்.

ஆனால் காளையனோ நிதானமாக நண்பனை ஏறிட்டு “இல்ல மாப்பிள்ள…என்ன இருந்தாலும் அந்த புள்ள பண்ணது தப்புடே” என இருபக்கமும் தலையசைத்து அவளின் செயலை ஏற்க முடியாமல் மறுப்பு தெரிவித்தான்.

அதில் கடுப்பானவன் “சும்மா கசகசன்னு பண்ணாத மாப்பிள்ளை…நீ ஏன் அத தப்பா பாக்கற?உன் மேல எம்புட்டு லவ் இருந்தாக்கா அது தன் மானத்த பணயம் வைச்சிருக்கும்…அப்படியா பட்ட புள்ளைய நிராகரிக்கறது‌…எனக்கு என்னவோ சரியாப்படல” என ஆரூடம் கூற,

காளையனோ ‘என்ன?’ என அவனை இமைகள் இடுங்க நோக்க “சொன்னா கேளு மாப்பிள்ள…அந்த புள்ளையோட நல்ல மனச புரிஞ்சுக்கிட்டு குடும்பம் நடத்தி வெரசா நாலஞ்சு புள்ளக்குட்டிய பெத்து தள்ளு…பொறவு பாரு இந்த வீம்பு,முறுக்கெல்லாம் இருந்த இடம் தெரியாம காணாம போயிடும்” என அவனிற்கு அறிவுரை கூறினான்.

ஆனால் அவனோ நண்பன் பிள்ளை பேறு பற்றி பேசியதில் கடுப்பாகி ஒவ்வாமையுடன் முகத்தை சுழித்தவன் “டேய் மிதிச்சேன்னு வை…கோட்டித்தனமா ஏதாவது பேசினா நொக்கிப்புடுவேன்டா…சின்ன புள்ளய போய்…” என நாக்கை மடக்கி அவன் ஆவேசமாக ஆரம்பிக்கும் போதே,

அவனிடமிருந்து சிறிது தள்ளிச் சென்று நின்றவன் “டேய் நிறுத்து” என ஒற்றை கரம் நீட்டி அவனை தடுத்து நிறுத்தினான்.

இடுப்பில் கைவைத்து அவனை மேலிருந்து கீழாக ஒரு கணம் பார்த்தவன் “ஏன்டே நல்லா மாடு கணக்கா வளந்திருக்கியே புத்தி இருக்காய்யா உனக்கு” என்னும் போதே,

“டேய்” என நாசி விடைக்க கை முஷ்டியை இறுக்கி ஓங்கியவனின் கரத்தை வெடுக்கென்று தட்டிவிட்டு “ஏலே ஆவுனா கைய ஓங்கிட்டு வந்தா நீ பெரிய சண்டியரோ?கைய கீழிறக்குடா” என குரலுயர்த்தி சீறியவன்,

அவன் விறைப்புடன் நின்று தன்னை முறைப்பதை பார்த்து “பின்ன என்னடே இருபது வயசெல்லாம் சின்னப்புள்ளையில சேத்தினா என் பொஞ்சாதிக்கு அந்த வயசுல வயித்தல ஒண்ணு கையில ஒண்ணு இருந்துச்சு…அம்புட்டு ஏன் உன் ஆத்தாவுக்கு இருபது வயசுல நீங்க நாலு பேரும் பொறந்திட்டீங்க…அத என்னத்த சொல்லறது?” என நிதர்சனம் உரைத்து பதில் கேள்வி எழுப்ப,

அவனோ அப்போதும் உம்மென்ற முகத்துடன் “குழந்தையா இருக்கும் போது தூக்கி வளத்த புள்ளைய பொஞ்சாதியா பாக்க எனக்கு மனசு ஒப்பல கதிரு” என்றான் முணுமுணுப்பாக.

“என்னடே ஒரு பொம்பள புள்ளைய கலியாணம் கட்டி மனசு ஒப்பல காது ஒப்பல மூக்கு ஒப்பலன்னு சலம்பிட்டு கிடக்கிற…உனக்கு எப்படியோ அந்த புள்ள உன்னைய மட்டுமே நெஞ்சில சுமந்து கலியாணம் கட்டியிருக்கு…அது மனசை நோவடிக்காம வாழ்க்கைய நடத்தற வழிய பாரு” என்ற குரலுயர்த்தி அதட்டினான்.

அவனோ பிடிவாதமாக “இல்லடா” என ஆரம்பிக்கும் போதே,

“இந்த இல்லடா நொள்ளடாவெல்லாம் என் காது கேட்காது…மூடிட்டு…மொத என் தங்கச்சிய பொண்டாட்டியா பாரு…பொறவு காதல் தன்னால வரும்…காதல் பத்திக்கிச்சுன்னா காட்டெருமை கூட நம்ப கண்ணுக்கு அம்சமா தெரியும்…பொண்டாட்டி தெரிய மாட்டாளா என்ன?” என கோபத்தோடு ஆரம்பித்து இறுதியில் நமுட்டு சிரிப்புடன் முடித்தான்.

அத்தோடு தோழனின் முகம் அருகே குனிந்து “அடுத்து என்ன?நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்…” கண்சிமிட்டி உடலை நளினத்துடன் பெண் போல் வளைத்து நெளித்து குறும்பாக பாட்டு பாடி ஆட,

அதுவரை இறுக்கமாக இருந்தவனிற்கு நண்பனின் அந்த சரச நடனம் சிரிப்பை வரவழைக்க “அடச்சீ பேச்ச பாரு… நாசமாப்போனவனே…போடா” என அவனை எட்டி உதைக்க காலை உயர்த்த,

தோழனோ ”சில்வண்டு சிக்கும் சிறுத்த சிக்காதுல” என பழிப்பு காட்டி துள்ளி குதித்து அவனிடம் சிக்காமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம் பிடித்தான்.

பின்பு அந்த முரட்டு தேக ரணதீரனிடம் அடி வாங்கி பத்து நாள் படுக்கையில் விழுந்து கிடக்க,அவனிற்கு கிறுக்கு பிடித்திருக்கிறதா என்ன?

அவன் அங்கிருந்து ஓடியதை கண்டவனின் இதழில் தானாக முறுவல் மலர்ந்தது.

‘சரியான‌ குசும்பு பிடிச்சவன்’ என செல்லமாக வஞ்சியவனின் மனம் இலேசானது.

அவனின் உருவம் கண்ணிலிருந்து மறையும் வரை அவனையே பார்த்திருந்தவனிற்கு,அவன் சென்ற பிறகு காளையனது முகத்தில் யோசனையின் சாயல் படர்ந்தது.

அந்த சிந்தனையின் முடிவு என்னவாக இருக்கும் என்பது அவன் ஆழ் மனம் மட்டுமே அறிந்த நிஜம்!!

அன்றைய பகல் பொழுது இல்லத்தினுள் நிரம்பியிருந்த உறவுகளினால் புது மணப்பெண்ணிற்கு கலகலப்பாக ஓடியது.

அவ்வப்போது சுகந்தியும் மதுவந்தியும் எரிச்சலூட்டும் விதமாக பேசி அவளை சீண்டினாலும்,அவர்களுக்கு திருப்பிக்கொடுக்கும் தக்க தருணத்தை எதிர்நோக்கி பல்லை கடித்து காத்திருந்தாள்.

இரண்டாம் இரவுக்காக கையில் பால் கூஜாவுடன் தங்கள் அறைக்குள் நுழையப்போன மதிவதனியை தடுத்து நிறுத்தினாள் கயல்விழி.

“என்ன சித்தி?” என கேட்டுக்கொண்டே திரும்பியவள்,கயல்விழியின் கைகளில் இருந்த கண்ணாடி வளையல்களை புரியாமல் ஒரு கணம் பார்த்துவிட்டு கேள்வியாக அவள் முகம் நோக்கினாள்.

அவளோ சிறிது தயக்கத்துடன் “நான் ஒண்ணு சொல்லறேன்…ஆனாக்க நான் உன் பர்சனல்ல தலையிடறேன்னு கோவப்படாதடி” என பீடிகையோடு ஆரம்பித்தவளை செல்லமாக விழி சுருக்கி முறைத்தவள் “சித்தி இன்னுமா நான் காலையில பேசினதே நினைச்சிட்டு கிடக்கற…நான் தேன் மன்னிப்புக்கேட்டேனே…பொறவு என்ன?எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு” என அவளை சொல்லுமாறு ஊக்குவித்தாள்.

அவளோ சிறிது தயக்கத்துடனே விழிகளை சுற்றிலும் ஒரு முறை சுழற்றிவிட்டு மதியிடம் திரும்பியவள் “மதி உனக்கும் அண்ணனுக்கும் நேத்து எதுவும் நடக்கலைனு எனக்கு தெரியும்” என அவள் பட்டென்று விஷயத்தை போட்டு உடைக்கவும்,

மதிவதனி ஒரு நிமிடம் திகைத்து விழி விரித்தவள் “அதெல்லாம் இல்லை” என அவசரமாக மறுப்பு கூற முயலும் போதே,

“வேணாம் மதி…என்ட்ட பொய் பேசி சிரமப்படாத” என அவளின் வாயை ஒரே வாக்கியத்தில் அடைத்தாள்.

மதிவதனியோ பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தலைக்குனிந்து கூஜாவின் மீது ஒரு விரலால் கோடிழுத்தவாறு மௌனமாக இருப்பதை கண்டவளிற்கு வருத்தமாக இருந்தது.

அதனால் அவளின் நாடியை பற்றி உயர்த்தியவள் “மதி நீங்க ஏன் வாழ்க்கைய ஆரம்பிக்கலைனு நான் கேட்கமாட்டேன்…அதுக்கான பதிலை என்ட்ட நீ சொல்லணும்னு அவசியமில்ல…ஏனால் இது புருஷன் பொண்டாட்டி முடிவெடுக்க வேண்டிய விஷயம்” என்றவுடன்,

ஆச்சரியமாக தனது சித்தியை ஏறிட்டவளின் முகத்தில் ‘பிறகு எதுக்கு இதை சொன்ன?’ என்ற கேள்வி தொக்கி நிற்க,

அவளின் நாடியிலிருந்து கையை அகற்றியவள் “மதி உன்ட்ட இப்போ ஏன் இதை சொல்லறேனா?முதலிரவு நடந்து முடிஞ்ச பொண்ணுக்கும் நடக்காத பொண்ணுக்கும் இருக்கிற வித்தியாசம் அவ முகத்திலே தெரியும்…உன்னோடதை சொல்லவே வேணாம்…உள்ளதை உள்ளப்படி காட்டும் பளிங்கு முகம்… எனக்கு உன் முகம் காட்டின அந்த வித்தியாசத்தை மத்தவங்க கவனிச்சு உன்னையும் என் அண்ணனையும் கேவலமா பேசறதுக்கு முன்னாடி உனக்கு முன்னாடியே எச்சரிக்கை பண்ணனும்னு தோணுச்சு…அதேன் சொன்னேன்” என மெல்லிய குரலில் அவளிற்கு மட்டும் கேட்கும் விதமாக கூறினாள்.

பாவையவளோ அவள் கூறுவதை புரிந்து “சரி சித்தி…இனி கவனமா இருக்கேன்” என ஒப்புதலாக தலையாட்டினாள்‌.

அதில் புன்னகை பூத்தவள் “நல்ல பிள்ளை” என அவளின் கன்னம் தட்டி “கவலைப்படாத…வெரசா எல்லாம் சரியாகிடும் மதி” என அவளிற்கு ஆறுதல் கூற,

அவளின் கரம் பற்றி “எனக்கும் அந்த நம்பிக்க இருக்கு” என பதிலுக்கு அவளும் பற்கள் பளீரிட புன்னகை சிந்தினாள்.

அதில் வெளிப்பட்ட அவளின் அழகில் பெண்ணாகிய அவளே மதி மயங்க “அழகுடி நீ” என அவளின் கன்னம் வழித்து நெற்றியில் சொடக்கிட்டவள்,

திடீரென்று தன் தலையிலே தட்டி “நான் ஒரு கிறுக்கி…வந்த காரியத்தை மறந்திட்டேன் பாரு” என்றவாறு மதிவதனியின் முன்பு கண்ணாடி வளையலை நீட்டினாள்.

பெண்ணவளோ அதை ஒற்றை கையால் வாங்கி “எதுக்கு சித்தி இது?” என விபரம் கேட்க,

“சிறுப்பிள்ளை வெள்ளாமை வந்து சேராதுன்னு இததேன் சொல்லுவாங்க போல‌…அசடு” என அவளின் நெற்றியில் தட்டியவள்,

மதிவதனியின் காதோரம் குனிந்து “முதலிரவு முடிஞ்சு வரப்புள்ளைங்களோட வளையல தேன் மொத நம்ப ஊருல பொம்பளைங்க பாப்பாங்க…அந்த பொண்ணு புருஷன் கூட எம்புட்டு சந்தோஷமா இருந்தானு தெரிஞ்சக்கவும்,அந்த ஆம்பளையோட வீரியம் என்னனு அந்த கண்ணாடி வளையலோட எண்ணிக்கைய வைச்சுதேன் மத்தவங்க தெரிஞ்சுப்பாங்க” என கிசுகிசுக்கவும்,

அதைக்கேட்ட காரிகையின் முகம் நாணத்தில் சிவந்து விட “சீய்” என முகத்தை சுழித்தவளின் தலையில் தட்டி “என்னடி சீய்…எங்க அண்ணனால ஒவ்வொரு வளையல் உடையும் போது நான் ஏன் அப்படி சொன்னேனு உனக்கே தெரியும்” என குறுஞ்சிரிப்புடன் கண்சிமிட்டினாள்.

எதிரில் இருந்தவளிற்கோ அந்த இனிய கனவில் இதயம் சொக்கி நிற்க தலைக்குனிந்து வெட்க புன் முறுவல் பூத்தவளிடம் “இப்போதைக்கு இந்த கண்ணாடி வளையல நீயே உடைச்சிட்டு தினமும் புதுசு போட்டுக்கோ…எதிர்காலத்தில எங்க அண்ணன் உடைக்கட்டும்” என விஷமத்துடன் மொழிந்தாள்.

அதில் “சித்தி” என ஒற்றை காலை தரையில் தட்டி சிணுங்கியவளிடம் “இந்த சிணுங்கலாம் உன் மாமன்ட்ட வைச்சுக்கோ…பொறவு காலையில என்னை பாரு என் அழகை பாருன்னு கலையாத சேலையோடு வந்து நிக்காதடி…” என மேலும் சில விவரங்களை எடுத்துரைக்க,

பள்ளியறை பாடத்தின் சில இரகசிய பாடங்களை பள்ளி மாணவியாக தலையாட்டி கேட்டுக்கொண்டவளிடம் “மதி பொம்பள விலகிப்போனா ஆம்பளைங்களும் விலகிதேன் போவாங்க…அதே அவ நெருங்கிப்போனால் அவங்களும் தன்னால வழிக்கு வருவாங்க…நேத்து என்ட்ட ஒண்ணு சொன்ன இல்ல…ஏன் பொம்பளைங்க ஆம்பளைங்களை காதலிச்சு பின்னாடி சுத்தனா என்ன தப்புன்னு?அது தப்பே இல்லை…அதிலும் எங்க அண்ணா மாதிரி விறைப்பா சுத்திட்டு இருக்கிற ஆட்களுக்கு எல்லாம் உன் மாதிரி ஆளுதேன் சரி…எண்ணி இரண்டு மாசத்தில என் அண்ணனை ‘மதி…மதி’னு உன் பொற்னாடி சுத்தி வர வை…அது உன்னோட சமத்து” என அவளின் கன்னம் கிள்ளி சோர்ந்து இருந்தவளிற்கு உத்வேகமான வார்த்தைகளை கொடுத்த கயல்விழியை அணைத்து “தேங்க்ஸ் சித்தி” என்றாள் இதயம் பனிக்க.

அவளை தன்னிலிருந்து விலக்கி “சரி…சரி போதும்…போதும்…உனக்காக என் அண்ணன் ரொம்ப நேரமா காத்திருக்கு…கையில் ஏதோ களிம்பு கொண்டு போச்சு” என்றவள் அவளின் கையை ஒரு முறை நீவி “ஒருவேள உனக்கு தேன் இருக்கும்னு நினைக்கிறேன்…ஜமாய்” என இரண்டு கண்ணையும் சிமிட்டி அவளை வழியனுப்பி வைத்தாள்.

கயல்விழியிடம் பேசியதற்கு பிறகு அவளின் நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்த பாரம் விலகி ஓடிட,தெளிவான முகத்துடன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினாள் மதிவதனி.

தனது மாமன் நேற்று போல் உறங்கியிருக்கக்கூடும் என எண்ணியவளை திகைப்பூட்டும் விதமாக அவன் கட்டிலில் அமர்ந்திருந்தான்.

கையிலிருந்த களிம்பு மருந்தை ஒரு கணம் பார்த்தவளிற்கு சிறகில்லாமல் வானத்தில் பறப்பது போல் ஜிவ்வென்று இருந்தாலும்,அவன் மீதுள்ள கோபத்தில் இதழை சுழித்து வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டுச் சென்றாள்.

இப்போது சினம் குறைந்திருந்தாலும் ‘நேத்து என்ன எப்படியெல்லாம் திட்டின…அதுக்கு அனுபவி ராஜா’ என வேண்டுமென்றே போலியான கோப முகமூடி பூசியவள்,கூஜாவை நங்கென்று தரையில் வைத்துவிட்டு வளையலை அங்கிருந்த மர அலமாரியில் பத்திரப்படுத்தினாள்.

பின்பு அங்கு அறையில் ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணமே இல்லாதவள் போல்,தன்னுடைய முக வடிவை விரல்களால் அளந்தவாறு கண்ணாடியில் இப்படியும் அப்படியுமாக வதனத்தை திருப்பி நோட்டமிட்டாள்‌.

‘இந்த முகத்துல முதலிரவு நடக்கலைனு அப்படியா அப்பட்டமா எழுதி ஒட்டியிருக்கு?’ என கண்கள் சுருக்கி மேலும் கீழுமாக தலையசைத்து கூர்ந்து நோக்கியவளின் வித்தியாசமான நடவடிக்கையை புரியாமல் பார்த்திருந்தான் ஆடவன்‌.

அவள் அவனை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் மெத்தனமாக நடந்துச் சென்றாலும்,ஓரவிழிகளால் அவனை அவதானித்துக் கொண்டிருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தரையில் பாயை விரித்து மெத்தையிலிருந்த தலையணையை எடுத்து கீழே போட்டு படுத்துவிட்டாள்.

அதுவரை அவள் செல்லும் திசையெங்கும் கண்களால் பின் தொடர்ந்துக்கொண்டிருந்தவன், அவள் தரையில் படுக்கவும் “ஏ புள்ள எதுக்கு இப்போ நீ கீழப்படுக்கற?” என இமைகள் இடுங்க வினவ,

அவளோ அவனை ஏறிட்டு ‘ஏன்னு உனக்கு தெரியாதாக்கும்’ என கண்கள் சுருக்கி முறைத்தாள்.

அவள் தன்னிடம் பதில் கூறாமல் பார்வையால் எரிக்கவும் “இப்போ நான் என்ன கேட்டேன்னு ரூட்டா பாக்கறவ?” என அதட்டலாய் கேட்டான்.

காரிகையோ புடவையை ஒரு கையால் இழுத்துப்பிடித்து அவன் புறமாக திரும்பி படுத்தவள் “நான் எங்க படுத்தா உனக்கு என்ன?நீ போய் உறங்க வேண்டியது தான?” என்றாள் குரலுயர்த்தி.

அதில் கடுப்பாகி அவளை ஆழ்ந்து பார்த்தவன் “மதி என்ன நிரூபிக்க இந்த மாதிரியெல்லாம் நீ பண்ணிட்டு திரியற?” என கேட்க,

அவனது பார்வை வீச்சில் ஒரு நொடி தடுமாறி இமைத்தாழ்த்தியவள்,பிறகு துணிச்சலாய் விழி உயர்த்தி அவனை ஏறிட்டு “நான் எதை நினைச்சு இதை பண்ணறதா நீ நினைச்சியோ?சந்தேகமே வேணாம்…நான் அத நினைச்சுதேன் இத பண்ணறேன்…நீ நினைக்காததையும் சேர்த்து பண்ணுவேன்” என படபடவென புரியாத மொழியில் பொரிந்து தள்ளியவள் “இது போதுமா?எனக்கு தூக்கம் வருது” என வெடுக்கென்று மொழிந்து கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

இறுதியில் அவளின் அகமுடையானோ ‘இவ என்ன கமலு மாதிரி புரியாம பேசிட்டா…இப்போ இவ என்னதான் சொல்ல வராள்?’ என சிந்தை குழம்பி அவளையே புரியாமல் பார்த்திருக்க,

பாவையவளோ மனதிற்குள் அவனை எண்ணி நக்கலாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பூமுகத்தையே ஒரு கணம் அசையாமல் பார்த்திருந்தவனிற்குள் மீண்டும் கண்ணில் மின்னல் வெட்டியது.

அவளின் பளிங்கு முகமும் வைர கல்லின் ஒளி கீற்றும் ஒரு சேர அவனது இதயத்தை ஊடுருவி புகைப்படமாய் சேமிக்கும் உத்வேகத்துடன் மனதை துளையிட ஆரம்பிக்க,படீரென்று தலையை உலுக்கி அதிலிருந்து வெளியே வந்தவனின் கருவிழிகளோ சுவற்றை நோக்கி திரும்பியது‌.

கீழுதட்டை கடித்து கைமுஷ்டியை இறுக்கி சில நிமிடங்கள் சுவற்றையே வெறித்தவனின் கவனத்தை கைகளில் இருந்த களிம்பு மருந்து ஈர்த்தது.

இலேசாக விலகியிருந்த வளையல்களின் ஊடாக தெரிந்த விரல்தடங்கள் கன்றி சிவந்திருந்ததை பார்த்த காளையன் பெருமூச்சுடன் “மதி” என்றழைத்தான்.

அவளோ கண்களை திறக்காமலே “ப்ச்” என சலித்து “என்னா மாமா?எனக்குதேன் தூக்கம் வருதுன்னு சொன்னேன்…இல்ல” என முகத்தை சுழிக்க,

“ஏய் புள்ள கண்ண திற” என கணீர் குரலில் அதட்ட,

‘இவர் பேச்சிலிருந்து தப்பிக்கலாம்னு நினைச்சா விடமாட்டாரு போல…விடாது கருப்பு’ என முணுமுணுத்து இமை திறந்தவளை ஆதுரத்துடன் நோக்கிய காளையன் “ஏ புள்ள இந்தா இந்த களிம்பை தடவிக்கோ” என கொட்டாங்குச்சியில் இருந்த களிம்பு மருந்தை அவளின் முகத்தின் முன்பு நீட்ட,

அது ‘என்ன’ என்பது அறிந்தாலும் வேண்டுமென்றே தலையை தூக்கி அதனை எட்டிப்பார்த்துவிட்டு “எனக்கு வேணாம்” என்றாள் ஒற்றை சொல்லாக.

“ஏன்?” என அவன் புருவம் உயர்த்த,

தலையணையில் தலைசாய்த்து அவனையே ஊடுருவியவள் “ஏன்னா?எனக்கு வலிக்கல” என்றாள்.

“பொய்யு பேசாத பாப்பா…உண்ணும் போது உன் கைய பாத்தேன்…நல்லா கன்னி சிவந்துப்போயிருக்கு…எதித்து பேசாம மருந்து போட்டுக்கோ…இந்தா” அவளை கடிந்து எட்டி அவளின் கையில் மருந்தை திணிக்க,

அவளோ தன் கரம் கொண்டு அதனை அவனின் புறம் தள்ளிவிட்டு “ஏன் மத்தவீங்களுக்காக என் கைய நசுக்கும் போது தெரியலையாக்கும் எனக்கு வலிக்கும்னு…எனக்கு மருந்தும் வேணாம் ஒண்ணும் வேணாம்” என முறுக்கிக்கொண்டு அவனிற்கு முதுகுக்காட்டி படுத்துவிட்டாள்.

“ஏ புள்ள சொன்ன பேச்சு கேளு…வலிக்கப்போகுது” என அவன் கத்த,

அவளோ காதில் வாங்காமல் பிடிவாதமாக படுத்திருக்க “ஆனாலும் உனக்கு இருக்க அதுப்பு வேற யாருக்கும் இருக்காதுடி…பாவம்னு நினைச்சேன் பாரு…எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்” என அவனும் அவளை கடுகாய் பொரிந்து தள்ளிவிட்டு தரையின் மற்றொரு மூளைக்குச் சென்று படுத்துக்கொண்டான்.

‘ஏன் புண்ணாக்க தெரிஞ்சவருக்கு அந்த காயத்த ஆத்த தெரியாதாக்கும்’ அவளின் நேசமனம் அவனே வந்து மருந்துப்போட்டுவிட வேண்டும் என ஆவலாக எதிர்ப்பார்த்திருக்க,

‘எல்லாம் திமிரு…அகம்புடிச்ச கழுத…சொன்ன பேச்சு கேட்குதா பாரு…நோவ அனுபவிக்கட்டும்…அப்பத்தேன் புத்தி வரும்’ என இவன் உள்ளுக்குள் கரித்துக்கொட்டினான்.

ஆயினும்,அவள் கீழே படுத்திருப்பது அவனிற்கு ஒரு மாதிரி இருக்க பக்கவாட்டாக அவளை நோக்கி திரும்பியவன் “உனக்குதேன் கீழப்படுத்தா தூக்கம் வராதில்ல…பொறவு எதுக்கு இந்த விஷப்பரிச்ச…மேல படுத்தா” என இறுதியாக ஒரு முறை சொல்லி பார்க்க,

அவளோ திரும்பாமலே “ராமன் இருக்க இடம்தேன் சீதைக்கு அயோத்தியாம்” என சம்பந்தமின்றி ஒரு பதிலை கொடுக்க,

“என்ன புள்ள?” என அவன் புருவம் சுருக்கி புரியாமல் கேட்க,

தலையை மட்டும் திருப்பி அவனை இமைகள் இடுங்க ஏறிட்டவள் ‘அது புரிஞ்சா நீ அங்கியும் நான் இங்கியும் ஏன் இருக்கோம்?காட்டான்’ என முனக,

“என்னடி அங்க முணுமுணுப்பு?” என இவன் பதிலுக்கு குரலுயர்த்த,

“இப்படி தினமும் தனியா சுவத்துக்கிட்ட பேசினா நல்லதாம்” என அவள் கழுத்தை நொடிக்க,

அவளை உற்று நோக்கிய காளையன் “யாருக்கு நல்லதாம்?” என புருவம் உயர்த்த,

தன் நெஞ்சிலே அடித்து “வேற யாருக்கு எனக்குதேன்…பின்ன உன்னலாம் கட்டிக்கிட்டு இந்த சுவத்தோடையும் தரையோடையும்தேன் குடும்பம் நடத்தணும்” என முதல் பாதியை அவனிடம் சத்தமாக உரைத்தவள் இரண்டாம் பாதியை தனக்குள்ளே முனகிக்கொண்டாள்.

ஆனால் தனது செவியை கூர்த்தீட்டி வைத்திருந்தவனிற்கு அவளின் அந்த புலம்பலும் விழுந்து வைத்திருந்தது.

அதில் முகம் சிவக்க “ஆனாலும் உனக்கு இந்த ஏத்தம் ஆகாது” என நாக்கை கடித்து சிடுசிடுக்க,

மாமனின் கோப முகம் பார்த்தவளோ சட்டென்று சுவற்றின் புறம் திரும்பி படுத்துக்கொண்டு “நான் உறங்கி ரெம்ப நேரமாச்சு மாமோய்…நீ யார்ட்ட பேசிட்டு இருக்க” என நக்கலாக உரைத்தவளின் வார்த்தையில் அந்த முரட்டு மனிதனின் இதழில் குறுநகை தோன்றியது.

மீசையை முறுக்கி “சரியான எகத்தாளம் புடிச்சவ” என வசைப்பாடினானா அல்லது கொஞ்சினானா என்பது அவன் ஆழ் மனம் மட்டுமே அறியும்.

அவளை வெளிப்படையாக ஒதுக்கி வைத்தாலும் சிறு பிள்ளையிலிருந்து அவளை தூக்கி வளர்த்த பாசம் பசுமரத்தாணி போல் ஆழமாக இருந்தது.

அதன்பலன்,நள்ளிரவு மனையாள் உறங்கிய வேளையில் அவளே அறியாமல் களிம்பு மருந்து அவளின் காயங்களை அலங்கரித்திருந்தது.

உபயம்,திருவாளர் காளையன்!!

அவளிற்கு பஞ்சு மெத்தையில் படுத்தால் உறக்கம் வரும்.

அவனிற்கோ தரையில் படுத்தால்  உறக்கம் வரும்.

ஆனால் இங்கு காதலுக்காக தனது சொகுசு வாழ்வை துறந்தாள் பாவையவள்.

இவளின் தியாகம் அவனின் மனதில் காதலை உயிர்தெழ செய்யுமா அல்லது பாசமென்னும் முகமூடியினுள் மறைந்துப்போகுமா?

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
USD United States (US) dollar
Scroll to Top