சில நொடிகளுக்கு பிறகு,ருத்ரமூர்த்தியாய் கழுத்து நரம்புகள் புடைக்க அவனிருந்த தோற்றத்தை அவதானிக்கும் உத்தேசத்துடன் கண்திறந்தவளின் விழிகள் அச்சத்தில் விரிந்தது.
அவனது முகத்திலிருந்த உக்கிரத்தை காண காண அவளின் நெஞ்சுக்கூடு சில்லிட இமைக்கொட்டி அவனை பார்த்தவாறே “மா…மா” என உமிழ் நீர் கூட்டி விழுங்கியவளை வெறித்தவனிற்கு தன் மீதே ஆத்திரம் வந்தது.
அவள் ‘அம்மா’ என்று அழைத்ததை விட ‘மாமா’ என்று அழைத்தது தான் அதிகம் என்ற நிதர்சனம் அறிந்தவன் ஓங்கிய கரத்தை ஒரு கணம் வெறுப்பாக நோக்கினான்.
அவளின் வெளிறிய முகம் இதயத்தை இறுக்கி பிசைய,அவளை அடிக்க உயர்த்திய கரத்தை கீழிறக்கி மீசையை ஒற்றை விரலால் அழுந்த தேய்த்து சினத்தை கட்டுப்படுத்தினான்.
பின்னங்கழுத்தை வருடியவாறே அவளை நேருக்கு நேராக ஏறிட்டவன் “மதி என் மேல துளியளவாது மருவாத இருந்தா எதுவும் பேசாம கம்முன்னு போய் படு” என்றான் அழுத்தமான குரலில்.
பாவையவளோ கண்கள் கலங்க அவனையே சில நொடிகள் பாவமாக வெறித்திருந்தவள்,பின்பு தரையில் கையூன்றி எழுந்துக்கொண்டாள்.
அவனிடம் ஒன்றும் பேசாமல் உம்மென்ற முகத்துடன் மெத்தையில் சென்று அமர்ந்தவளை உட்கார்ந்திருந்த நிலையிலே பின்னால் திரும்பி பார்த்தவனிற்கு இரக்கம் சுரந்தது.
தான் தூக்கி வளர்த்த பிள்ளையின் வாடிய முகம் அவனிற்கு ஊசியாய் குத்தியது.
ஆயினும்,அவள் செய்த காரியத்தை நினைத்தால் இப்போதும் அவனின் உள்ளம் கொந்தளிக்க, மீசையை முறுக்கிவிட்டு அவளை தீயாய் உறுத்து விழித்தான்.
மதிவதனியோ மெத்தையை தட்டியவாறு ‘என்ன சொல்லிப்புட்டன்னு இந்த மாமன் இப்படி நாய் மாதிரி வல்லுன்னு விழுது’ என தனக்குள்ளே புலம்பியவளின் விழிகளோ சட்டென்று விரிந்தது.
கரங்கள் வேலை நிறுத்தம் செய்திட, கருவிழிகளோ அங்குமிங்கும் வேகமாக அலைப்பாய்ந்தது.
அவளின் மீதே கவனமாய் இருந்தவன் ‘இப்போ என்ன?’ என யோசனையுடன் புருவங்கள் நெரித்த வேளையில்,
அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல் “ஐய்யோ” என தலையில் கைவைத்து அலறினாள் வஞ்சியவள்.
அதனை சற்றும் எதிர்ப்பாராத காளையன் விதிர்விதிர்த்துப்போய் “என்னாச்சு பாப்பா?” என தன்னை மீறி நெஞ்சம் படபடக்க கேட்டிருந்தான்.
அவளோ பதட்டத்துடன் அவனை நோக்கி “மாமா…மாமா…அன்னைக்கு நான் காலேஜில் தனியா நின்னுட்டு இருக்கும் போது…” என தொடங்கியவள் அன்று தன்னுடைய ஆபத்து காலத்தில் துணையிருந்த சுப்ரமணியை பற்றியும்,நடந்த நிகழ்வை பற்றியும் சிறுப்பிள்ளை போல் தவிப்புடன் மடமடவென ஒப்பித்தாள்.
‘என்னவோ ஏதோ?’ என பதறியவன்,
அவள் கூறியதை முழுமையாய் கேட்டுவிட்டு தாடையை தடவி “நாயா?” என அலட்சியமாக வினவி ஆசுவாசமடைந்தவனை கண்கள் சுருக்கி இடுப்பில் கைவைத்து முறைத்தவள் “அதென்ன நாயா?அதுவும் நம்மளை மாதிரி ஒரு உசுரு தானே?” என குரலுயர்த்தி அதட்ட,
அவனோ “ப்ச்” என முகத்தை சுழித்து “ஏ புள்ள அது ரோட்டோர நாயு…நீ வர வரைக்கும் அங்கனக்குள்ளவே காத்திட்டிருக்குமாக்கும்…இந்நேரம் அது வேற எங்கியாவது போயிருக்கும்” என அலுப்புடன் விளக்கமளித்தான்.
பெண்ணவளோ அப்போதும் சமாதானமடையாமல் இதழ் பிதுக்கி “பாவம் அது நான் வருவேன்னு எம்புட்டு நேரம் அங்கியோ காத்திருந்துச்சோ…என்ன இருந்தாலும் அதுக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாத்திருக்கணும்…இந்நேரம் எங்க போய் அது சஞ்சலப்பட்டுட்டு இருக்கோ தெரியலையே?” என அழுக்குரலில் புலம்பியவள்,
நெற்றியில் பின்னங்கையால் ஒரு தட்டு தட்டி “நான் ஒரு மட்டி…என்னைய பத்தியே யோசிச்சுட்டு அதப்போய் டீல்ல விட்டுட்டேன்” தன்னை தானே குற்றம் சுமத்தியவளின் மனம் குற்றவுணர்வில் தவித்தது.
காளையனோ அவளின் வருத்தத்தை பெரும் ஆச்சரியத்துடன் விழி உயர்த்தி பார்த்தான்.
ஏனெனில்,உயிரற்று வெறும் கூடாகி இப்போது தான் மீண்டு வந்திருந்த நிலையில் மற்றைய உயிர்களுக்காக பரிதாபம் கொள்பவளை விசித்திரமாக நோக்கியிருந்த சமயத்தில் பாவையவள் “மாமா நாளைக்கு விடிஞ்சவுடனே என்னைய எங்க வூடு வரை கூட்டிட்டு போறீயா?ஓரெட்டு அதை பார்த்திட்டு வருவோம்” என்றாள் மனம் தாளாமல்.
அவனோ ‘ஒரு நாய்க்கு இவ பண்ணற அக்கப்போரு இருக்கே’ என மானசீகமாக தலையிலடித்து இமைகள் இடுங்கியவன் “ஏ புள்ள ஏற்கனவே உன் மேல கொல காண்டுல இருக்கேன்…இப்போ உறங்கற நேரத்தில இந்த நூனாய பேச்சு அவசியமா?ஒழுங்கா படுத்தா” என காட்டமாக மொழிய,
அதில் காரிகையின் முகம் சுருங்கிவிட தலையை சிலுப்பி ‘என்ட்ட மட்டும் சும்மா ராஜ்கிரண் வாய்சுல கரக்கு முறுக்குன்னு கத்தறது…ஹீம்…காட்டான்’ என இதழை சுழித்து பழிப்பு காட்டிவிட்டு
அவ்வறையினுள் ஒளிர்ந்த விளக்கை அணைத்து அவனிற்கு முதுகுகாட்டி படுத்துவிட்டாள்.
சில நொடிகள் அவளையே இமைக்காமல் பார்த்திருந்த காளையனோ உள்ளிருந்து ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டு தலைக்கு கைக்கொடுத்து விட்டத்தை நோக்கியவாறே படுத்துவிட்டான்.
அவளை அதட்டி படுக்க வைத்தாலும் தன்னவளிற்காக நாளை அங்குச் சென்று ஒரு முறை ஆராய்ந்து விட்டு வருவோம் என்ற முடிவையும் எடுத்திருந்தான்.
சுப்ரமணியை எங்கிருந்து கண்டுப்பிடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன்,அதற்கான ஆதி வழியை அலசி ஆராய்ந்து வெகு நேரம் கழித்து அப்போது தான் கண்ணயர்ந்தான்.
நடுசாமத்தில் அவர்களது அறையில் யாரோ பூனை போல் பாத்திரம் உருட்டும் ஓசையொன்று எழும்பியது.
படீரென்று உறக்கம் களைந்து கண்விழித்தான்.
விழிகள் இரண்டும் கூர்மையுற பக்கவாட்டாக திரும்பி தன் அருகில் பார்த்த காளையனின் இமைகள் வியப்பில் விரிந்தது.
ஏனெனில்,சன்னல் கம்பிகளின் ஊடாக அறையினுள் நுழைந்த நிலவின் ஒளியில் பளீரிட்ட வதனியின் வதனத்தில் தெரிந்த வசீகரத்தில் காளையவனின் சரீரம் பனியாய் உறைந்துப்போனது.
நிலவிற்கு நிகராக நிலா மகளின் அழகிய முகம் இருக்க…
கார்மேகத்திற்கு இணையாக கருங்குழல் போட்டியிட…
நட்சத்திரங்களுக்கு ஒப்பாக அவளின் ஒற்றை வைர கல் மூக்குத்தி பளபளத்து ஆடவனின் உள்ளத்தினுள் ஒரு மோகனத்தை குடிக்கொள்ள செய்தது.
எத்தனை நேரம் மெய் மறந்து அழகிய மோகனாவின் வதனத்தை இமைசிமிட்டாமல் பார்த்திருந்தானோ “மாமா” என மனையாளின் மெல்லிய குரலில் தலையை உலுக்கி நிகழ்விற்கு வந்தான்.
அதன்பிறகே தான் செய்துக்கொண்டிருந்த செயலின் வீரியம் உணர்ந்து தன் மீதே கோபம் கொண்டவன் கைமுஷ்டியை இறுக்கினான்.
அத்தோடு தன்னை மீறி “என்னடி” என விழி உயர்த்தி மதிவதனியை அதட்டியிருந்தான்.
காரிகையோ அவன் தன்னை ‘டி’ என உரிமையாய் அழைத்ததில் விழிகள் இரண்டும் சாசர் போல் விரிய “மாமா” என ஆச்சரியத்தில் கூவியதற்கு பிறகே தன் தவறை உணர்ந்தவனிற்கு “ஐய்யோ” என்றானது.
‘காளையா நீ ரொம்ப தப்புப்பண்ணற…அவ நம்பூட்டு புள்ள…இப்படி தப்பா பார்த்தது தவறு’ என மனசாட்சி காறி உமிழ்ந்தது.
அதனால் தன்னை தானே கட்டுப்படுத்தி அவளின் முகம் நோக்காமல் “உறங்காம இங்கின என்ன செய்யற?” என உணர்ச்சிகளற்ற குரலில் வினவினான்.
‘அதானே பார்த்தேன்…அதுக்குள்ள எங்கடா என் மாமனோட குரங்கு மனசு மாறிடுச்சோனு?இதெல்லாம் காலத்துக்கும் திருந்தாத கேஸூ’ என நொடித்துக்கொண்டு “கால் வயிறா இருக்கவும்,உறக்கம் வரலை மாமா…புரண்டு புரண்டு படுத்தாலும் வயிறு கவ்வா கவ்வானு கத்துச்சு…அதேன்…” என அவள் சங்கடமாக இழுக்க,
இப்போது அவனின் விழிகள் கூர்மையாக அவளின் முகத்தை அவதானிக்க,
மதிவதனியோ திருட்டு முழி முழித்து “சித்தி கூஜா நிறைய பால் கொடுத்துச்சு இல்ல…அதை குடிக்கலாம்னு வந்தேன்” என அசடுவழிய பதில் கூறினாள்.
அவனிற்கு அவளின் சிறுப்பிள்ளையின் செயல் அத்தனை நேரமாய் அவனுள் இருந்த இறுக்கத்தை நீக்கி முகத்தில் ஒரு மென்மையை வரவழைத்தது.
வெண்ணெய் திருடிய கள்ளன் போல் அவள் ஒரு கையில் கூஜாவுடன்,பாதி வரைந்த வெள்ளை மீசையுடன் தலைசரித்து இமைக்கொட்டியிருந்த விதம் அவனின் இதழில் முறுவலை தோற்றுவித்தது.
அந்த கள்ளனோ தாடிக்குள் அதனை மறைத்து “சரி…சரி பால குடிச்சுட்டு போய் உறங்கு” என விறைப்புடன் மொழிந்தான்.
நாவால் இதழிற்கு மேலாக வருடி “இம்புட்டு நேரம் நீ குடிப்பேன்னு நான் பார்த்தேன் மாமா…நீ குடிக்கலையா?அதேன் நான் குடிக்கலாம்னு” என்றவள் “உனக்கு வேணுமா மாமா?” என அவனிடம் கூஜாவை நீட்ட,
அவனோ “ஏய் கிறுக்கச்சி…எனக்கெல்லாம் வேணாம்…நீ பால் குடிச்சுட்டு மொத போய் படு” என சிடுசிடுத்தவன்,அவளிற்கு முதுகுகாட்டி படுத்துக்கொள்ள,
‘ரொம்பதேன்’ என இதழை சுழித்து பழிப்புக்காட்டி கூஜாவிலிருந்த பால் முழுவதையும் நாக்கு சொட்ட ரசித்து குடித்தவள் “ஏவ்” என ஏப்பம் வேறு விட்டு “ஹப்பாடா” என மூச்சை இழுத்துவிட்டு எழுந்தாள்.
இப்போது பசியில் வயிறு நிறைய பால் குடித்துவிட்டதினால் திம்மென்று இருக்க,மெத்தையில் படுக்க முடியாமல் அறைக்குள்ளே நடைப்பயில ஆரம்பித்தாள்.
‘பசியில் ஓவரா குடிச்சுப்புட்டமோ?கழுத்தை கவ்வுதடா’ என கால தாமதமாக கழுத்தை வருடி வருந்தி,இங்குமங்கும் நடந்தவளிற்கு இணையாக அவளின் வெள்ளி சதங்கை இசைமீட்டிக்கொண்டிருந்தது.
இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஒலித்த,அவளின் சலங்கை ஓசையில் ஆடவனின் இதயமும் அதிர்ந்து அவனுள் ஓர் ரசனை பாவனையை கொடுத்தது.
முதன்முறையாய் நடைப்பயிலும் தனது மகவின் நடையில் ஆர்ப்பரிக்கும் பாவனை மட்டுமே அது!!
அவள் அறையினுள் செய்யும் அட்டகாசத்தை அவதானித்துக்கொண்டிருந்த காளையனிற்கு அவளை எண்ணி ஒரு புறம் பாவமாக இருக்க,மற்றொரு புறமோ அவளின் செயல் புன்னகையை வரவழைத்தது.
சிறிது நேரத்திற்கு பிறகும் அவள் நகத்தை கடித்து சுற்றிக்கொண்டிருக்க,அருகிலிருக்கும் அறையில் உறங்கிக்கொண்டிருக்கும் தமது சகோதரிகளுக்கு சங்கோஜத்தை வரவழைக்கும் என்பதால் “இப்படியே ரவை முழுசா நடந்திட்டே இருந்தாக்க…மத்தவீங்கயெல்லாம் உறங்கறதா வேணாமா?” என அவன் கத்த,
அவளோ “இதோ படுத்துட்டேன் மாமா” என குரல் கொடுத்து அவசரமாக ஓடிச்சென்று படுக்கையில் விழுந்தவள் “தூங்கிட்டேன் மாமா” என போர்வையை முகம் முழுவதும் போர்த்தி படுத்தவளின் செயல் அவனின் முரட்டு அதரங்களை தாராளமாக விரிய வைத்தது.
படுத்திருந்த வாக்கிலே எட்டி அவளை ஒரு முறை பார்வையால் வருடியவனின் புன்னகை வழமை போல் தாடிக்குள் ஒளிந்துக்கொள்ள ‘இன்னும் சின்னப்புள்ளயாவே இருக்கா?இதில காதலாம்’ என இருபக்கமும் தலையாட்டி மறுத்துவிட்டு இமைகள் மூடி உறக்கத்தை நாடினான்.
காரிகையவளும் மாமனை சில நிமிடம் இதழ்களுக்குள் போட்டு பற்களால் அரைத்துக்கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் துயில் கொண்டிருந்தாள்.
இரவு வேக நேரத்திற்கு பிறகே உறங்கியதினால் மதிவதனி தாமதமாகவே கண்விழித்தாள்.
போர்வையும் அவளும் இரு வேறு திசை மருங்கில் அநாதரவாக கிடக்க,அவளின் புடவையோ முட்டி வரை சுருண்டிருந்தது.
அதில் பெரிதாக பதறாமல் நிதானமாக அதனை இழுத்துவிட்டவாறே எழுந்தவள் ‘தெரிஞ்சா மட்டும் ஆசையில என்ன கட்டியணைக்கவா போறாரு…கல்லையும் மண்ணையும் பார்க்கற மாதிரிதேன் பாக்க போறாரு…இதுக்கு எதுக்கு பில்டப்பு?’ என பெருமூச்சுடன் சலித்துக்கொண்டே காலை கீழே வைத்து இறங்கினாள்.
வெய்யோனின் கதிர்கள் சன்னல் திரையின் வழியாக உள்ளே வந்து அவளின் முகத்தை கூசச் செய்தது.
அதனால் கண்கள் மூடி முகத்தை வேறுபுறம் திருப்பினாள்.
உடலை இடதுப்புறமாக வளைத்து தனது மாமன் இருக்கும் திசை நோக்கி விழிகளை சுழற்றினாள்.
இந்நேரம் அவன் எழுந்து வயலுக்குச் சென்றிருப்பான் என்று எண்ணியிருந்தவளின் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக,அவனது ஆஜானுபாகுவான உருவத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் வாயை பிளந்து சிறு குழந்தை போல் உறங்கிக்கொண்டிருந்தான்.
அதனை ஆச்சரியமாக பார்த்தவளின் மனம் உவகையில் ஆர்ப்பரிக்க ‘அழகு மாமா’ என கொஞ்சி கன்னத்தை கிள்ளி முத்தமிட,மேனியெங்கும் பரபரத்தாலும் ‘அடங்கு மதி…நீ மட்டும் அப்படி பண்ண?மாமன் சோமனா மாறி உன்னைய காட்டுப்பூச்சியா நசுக்கி விட்டுருவாரு…சாக்கிரத’ என மனசாட்சி முன்னெச்சரிக்கை செய்தது.
அதனால் தன் உணர்வுகளை அடக்கி ‘தூங்கறதை பாரு…விரல வாயில் வைச்சா கூட கடிக்க தெரியாத பச்சை குழந்த மாதிரி…என்னா நடிப்புடா சாமி’ என இதழை சுழித்து பழிப்புக்காட்டியவாறு கணவனை முறைத்தவள்,பின்பு பெருமூச்சோடு விலகியிருந்த புடவையை சரி செய்தவாறு கதவை திறந்தாள்.
முதலிரவு அறையிலிருந்து கொண்டையிட்டு சாவகாசமாக வாயை திறந்து கொட்டாவி விட்டவாறே வெளியே வந்தவள் “ஏய்…ஏய் அங்கனவே நில்லுடி” என தாயின் பதட்டமான குரலில் மேனி தூக்கிவாரிப்போட,அவ்விடத்திலே நின்றுவிட்டாள்.
வாசலில் ஒரு காலும்,அறைக்குள்ளே ஒரு காலுமாய் நின்றிருந்தவளிற்கு பதட்டம் தொற்றிக்கொள்ள “என்ன என்னாச்சும்மா?” என விழிகளை நாலாப்பக்கமும் சுழற்றி தாயை தேடியவாறு வினவினாள்.
ஆனால் அவரோ “ஏய் கூறுக்கெட்ட குப்பி…மொத அறைக்குள்ள போடி…முதல் ராத்திரி முடிஞ்சு வெளிய வர புள்ள அம்மா முகத்துல முழிக்கக்கூடாது…நீ உள்ளுக்கு போ…கயல வந்து கதவு தட்ட சொல்லறேன்…அதுக்கு பொறவு வெளிய வா” என சமையலறையிலிருந்து சப்தமிட்டதற்கு பிறகே விஷயம் அவளிற்கு புரிப்பட்டது.
அதனால் மானசீகமாக கழுத்தை நொடித்து “ம்க்கும் மொத ராத்திரி…அது ஒண்ணுதேன் இங்க குறைச்சல்” என முனகியவளிடம் “அங்க என்னடி சப்தம்? உள்ளுக்கப்போடி” என தாய் அவளிற்கு முகம் காட்டாமலே அதட்ட,
‘ஷப்பா’ என சலித்துக்கொண்டே”போறேன்…போறேன்” என பல்லிடுக்கில் பேசியவாறே மீண்டும் அறைக்குள் புகுந்து கதவை சாற்றிக்கொண்டாள்.
கதவில் சாய்ந்து ‘இவங்க சாங்கியமும் சம்பிரதாயமும்…சாணியில் மொக்கி அடிக்கணும்’ என கோபத்தில் முனகிக்கொண்டிருந்தவள்,வெகு நாட்களுக்கு பிறகு தாயிடம் சாதாரணமாக உரையாடியிருப்பதை அறியவில்லை.
ஆனால் அதனை அறிந்த தாய் மனமோ மகிழ்ச்சியில் நிறைவுற கண்கள் கலங்கிப்போனது.
‘நல்ல நேரத்தில் எதுக்கு இந்த அழுகை?’ என புடவை முந்தானையால் கண்களை துடைத்து தன்னையே தேற்றியவர் “ஏத்தா கயலு” என முற்றத்தில் இருந்த தங்கையை அழைத்துக்கொண்டே வெளியேச் சென்றார்.
கயலிடம் விஷயத்தை பகிர,அடுத்த நிமிடமே மதிவதனியை இல்லத்தின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்று முதலிரவிற்கு பின்பான சில சடங்குகளை செய்ய வைத்தார்கள்.
கயல்விழி அறைக்கு வந்து கதவை தட்டும் போதே காளையனும் எழுந்து விட்டதினால் அவர்கள் இருவரும் தனித்தனியாக உறங்கிய விடயம் யாவருக்கும் தெரியாமலே போனது.
அவர்கள் படுத்திருந்ததாக கூறப்பட்ட படுக்கை விரிப்புகள்,இருவரும் அணிந்திருந்த உடைகள் என அனைத்தையும் அவளின் கையாலே துவைக்கும் படி வலியுறுத்தினார்கள்.
அவர்கள் கூறியது போலவே அனைத்தையும் செய்த நேரத்தில் காளையன் மற்றொரு புறம் குளித்துவிட்டு வயலுக்குச் சென்றிருந்தான்.
அவளிற்கு எல்லா வீட்டு வேலைகளும் அத்துப்படி என்பதால் எளிதாக அனைத்தையும் செய்து முடித்தவளை உட்கார வைத்து ‘உடம்பு சூடு குறையணும்’ என தலையில் நல்லெண்ணெய் வைத்து தேய்த்து குளிப்பாட்டியதோடு,வெண்ணிற மேனி முழுவதும் மஞ்சள் தேய்த்து அவளை குளிப்பாட்டியிருந்தார்கள்.
இவளோ அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ‘ம்க்கும்’ என தனக்குள்ளே முனகியதை மட்டும் நிறுத்தவில்லை.
இதில் கயல் வேறு அவளின் தலைக்கு சீயக்காய் தேய்த்து விடும் சாக்கில் காதோரம் குனிந்து “என்னடி நேத்து ரொம்ப நேரம் உன் அறையில ஒரே கொலுசு சப்தமா கேட்டுச்சு…என்ன என் அண்ணன் விடிய விடிய கொஞ்சம் கூட ஓய்வு தரலையா?” என கண்சிமிட்டி குறும்பாக வினவ,
கண்களில் நுரை இருந்ததினால் விழி திறக்க முடியாமல் பல்லை நறநறவென கடித்தவள் “வாயில நல்லா வண்ண வண்ணமாக வருது…என் வயிற்றெரிச்சலை கொட்டிக்காம மூடிட்டு தண்ணீய ஊத்து” என சப்தமில்லாமல் சீறியவளின் முகத்தை எட்டி நோக்கி,
“ஏன்டி…நான் உனக்கு சித்தி…உன்னைய விட எட்டு வருஷம் பெரியவ…அதுக்காச்சும் கொஞ்சம் மரியாத கொடேன்டி” என்றாள் பாவமாக.
அவளோ முகம் சிவந்துவிட “பாவம்தேனே…மொத தண்ணீய ஊத்து…அதுக்கு பொறவு எப்படி பாவம் பாக்கறேன்னு மட்டும் பாரு” என ஒரு மார்க்கமான குரலில் கூற,
“ஏத்தா நீ பாவமும் பாக்க வேணாம்…ஒரு மண்ணும் பாக்க வேணாம்…உன் பாவத்த உன் மாமன்கிட்டயே காட்டிக்கோத்தா” என விட்டால் போதுமென்று தண்ணீரை எடுத்து அவளின் தலையில் ஊத்திக்கொண்டிருந்த வேளையில்,
அவ்விடத்திற்கு வந்த சுகந்தியோ “ஏன்டி நாங்களாம் ரவைக்கு தூங்கறதா வேணாமா?ரவை முழுசும் பேச்சு சத்தமும் கொலுசு சத்தமும் கேட்டுட்டே இருந்துச்சு…என்ன தான்டி பண்ணீங்க?” என விஷமமாக கேட்டுக்கொண்டே வந்தார்.
கயல்விழியோ ‘ஆத்தீஈஈ…இப்போதேன் அவளை சாந்தமாக்கின…அடுத்து நீயா?நல்லா வாங்கு’ என நமுட்டு சிரிப்புடன் மதிவதனியை பார்க்க,
அவளோ உஷ்ணத்துடன் கண்களில் வழிந்த நீரை வழித்தெடுத்தவள்,அங்கிருந்த யாவரும் சற்றும் எதிர்பாராத வகையில் “உன் மொத ராத்திரியில நீ என்ன பண்ணியோ…அததேன் நானும் பண்ணேன்” என பதில் கூறி அனைவரையும் ஒட்டுமொத்தமாக அதிர வைத்தாள்.
சுகந்தியோ “ஆத்தாடி” என வாய் மேல் கைவைத்து திகைத்து விழிக்க,
அவ்விடத்தில் ஓரமாக விறகு அடுப்பில் சூடு தண்ணீர் வைத்துக்கொண்டிருந்த அவளின் தாய் திரும்பி “என்னடி?பெரியவங்கன்னு ஒரு மட்டு மருவாத வேணாம்” என திட்ட,
இப்போது நன்றாகவே அனைவரையும் முறைத்தவள் “பின்ன என்னைய எதுக்கு ஒவ்வொருத்தரா வந்து ராத்திரி ஒரே கொலுசு சப்தமா இருந்துச்சு…என்ன பண்ணீங்க?என்ன பண்ணீங்கன்னு கேட்கிறீங்க?ஏன் என்ன பண்ணோம்னு உங்களுக்கெல்லாம் தெரியாதாக்கும்…நீங்க அப்படி கேட்டா நானும் அப்படிதேன் பதிலு சொல்லுவேன்” என அழுத்தமான குரலில் கூறியவளிடம் “மதி மொத ராத்திரி முடிஞ்ச பொண்ணை சுத்தி இருக்கவங்க பகடி பேசறது சாதாரண விஷயம்தேன்…அதுக்கு என்னத்துக்கு உனக்கு இம்புட்டு கோவம்?” என கயல்விழி அவளை மென்மையாய் கடிந்தாள்.
மதிவதனியோ நிதானமாக ஏறிட்டு “சித்தி எதிர்ல இருக்கவங்க ரசிச்சாதேன் அது கேலி…அவங்களுக்கு அது பிடிக்கலைனா?அப்படி பேசக்கூடாதுன்னு அர்த்தம்…கணவன் மனைவி தாம்பத்தியம்ன்றது அது அவங்களுக்குள்ள ரகசியமா மட்டும்தேன் இருக்கணும்…அதை யாருக்கும் அம்பலப்படுத்த எனக்கு விருப்பமில்லை…இனிமேட்டுக்கு ஒருத்தரும் இதை பத்தி என்கிட்ட பேசாதீங்க” என நிறுத்தி நிதானமான குரலில் அனைவரையும் எச்சரிக்கும் படி கூறிவிட்டு விருட்டென்று அங்கிருந்து சென்றுவிட்டாள்.
குழந்தையென அவர்கள் நினைக்க அவள் குமரி என்பதையும் தாண்டி வயதில் மூத்தவர்களுக்கு பாடம் எடுத்தது மட்டுமின்றி ‘என் அந்தரங்க விடயங்களில் நுழைவது அநாகரீகம்’ என பொட்டில் அறைந்தது போல் விஷயத்தை சொல்லிச் சென்றிருந்தாள்.
மற்றவர்களுக்கு அவள் கூறுவதிலிருந்த நியாயம் புரிய மௌனமாகிட,சுகந்தி மட்டும் “என்ன கேட்டுட்டேன்னு இப்படி சிலும்பிட்டு போறா?ஆட்டக்காரிச்சு” என அவளை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார்.
மற்றவர்களோ அவரின் பேச்சை ஒரு பொருட்டாக கூட மதியாமல் தத்தம் அவரவர் பணியை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.
கொல்லை புறத்தில் நடந்த விவாதங்களை கேள்வியுற்ற காந்திமதிக்கோ பெருமிதமாக இருந்தது.
சிறு பெண்ணாக இருக்கிறாள்.எவ்வாறு தங்களது குடும்பத்தை வழிநடத்திச் செல்லுவாள் என்ற சிறு அச்சம் அவர் மனதிலிருக்க,இப்போது அவை சூரியனை கண்ட பனியாய் விலகி ஓடியது.
காளையன் சகோதரிகளுக்கு உயிரை கொடுப்பான்.
தகுதியுள்ளவர்களுக்கு அவ்வாறு செய்வதில் தவறில்லை.
ஆனால் அவனிடமிருந்து ஒரு தலையாக பெற்றுக்கொண்டே இருப்பதோடு பிறந்தகத்தில் அவர்கள் செய்து வரும் அதிகாரத்தை அடக்குவதற்காகவும் காளையனை அவர்களது பாச கயிற்றிலிருந்து மீட்டெடுப்பதற்கு ஒருத்தி வேண்டும் என அவர் எண்ணியிருந்த எண்ணம் ஈடேறிய ஓர் உணர்வு!!
அதனால் புடவை கட்டி தலைவாரி எளிய ஒப்பனையுடன் வெளியே வந்த பேத்தியை “என் ராசாத்தி” என கன்னம் வழித்து உச்சிமுகர்ந்தார் காந்திமதி.
‘இவள் தான் என் மகனுக்கு ஏற்ற மணவாட்டி’ என்ற ஆனந்தம் அவரது முகத்தில் தாண்டவமாட,அவளை பூஜையறையில் விளக்கேற்றுமாறு பணித்துவிட்டு சமையலைறைக்கு அனுப்பினார்.
“எத்தா கயலு” என சிறிய மகளை அழைத்தவர் “நாளு நல்லாயிருக்குன்னு நம்ப வெங்கட அய்யர் நாளு குறிச்சு கொடுத்திருக்கார்…அதனால புள்ளைய அழைச்சிட்டு போய் இன்னைக்கு அடுப்பை பத்த வைச்சு பால் பொங்க வைச்சிடு” என்றவுடன்,
“சரித்தா” என அவள் தலையாட்டவும்,
“பாலு எந்த பக்கம் பொங்குதுன்னு நருவுசா பாருத்தா…அது பொங்கனதுக்கு பொறவு புள்ளைய ஏதாவது இனிப்பு செய்ய சொல்லு…இன்னைக்கு இது போதும்தா…மீதி சோறு,வெஞ்சனமெல்லாம் நீங்க சமைங்க…புள்ளைய ஓய்வெடுக்க அறைக்கு அனுப்பிடுங்க…நான் சொன்னது விளங்குச்சா?” என குரலில் ஏற்ற இறக்கத்துடன் நுணுக்கமாக பேசிய தாயை புன்னகையுடன் நோக்கியவள் “ஆத்தா இதெல்லாம் நீ சொல்லணுமா?நான் பாத்துக்கிறேன்தா” என அவரின் கரம் பற்றி வாக்கு கொடுத்தாள்.
பின்பு “நீ சின்னக்காவுக்கு கூப்பிட்டு நம்பூட்டு ஆம்பளைங்களை புள்ளைங்களை கூட்டிட்டு சோறு உண்ண வரச்சொல்லுத்தா…நாங்க அதுக்குள்ள எல்லாம் முடிச்சிடறோம்” என அவரின் முகத்திலிருந்த மகிழ்ச்சியை ரசித்தவாறே கூறிய கயல் “மதி” என கூப்பிட்டவாறே சமையலைறைக்குள் நுழைந்தாள்.
காந்திமதி உரைத்தது போல் பாலை சுடவைக்க அது கிழக்கு பக்கமாக பொங்கியதும் பேரின்பமடைந்து விஷயத்தை மற்றவரிடம் பகிர,அனைவருக்கும் எல்லையில்லாத உவகை!!
இடையில் கயல்விழி தான் திட்டியதை பொருட்படுத்தாமல் சகஜமாக உரையாடியதை கண்டவுடன் அவளிற்கு ஒரு மாதிரியாகிவிட “சித்தி சாரி” என மனமாற வேண்டியவளிடம் “பரவால்ல விடுத்தா…நீ சொன்னதில் ஒரு தப்புமில்லை” என பெரிய மனதுடன் அவளும் மன்னித்து விட்டாள்.
மதிவதனியோ “சித்தி நிசத்த சொல்லப்போனா எனக்கு உன் மேல கோவமே இல்ல” என்றவளை குழப்பமாக ஏறிட்டவளிடம் “நிசம்தேன் சித்தி” என தலையசைத்து ஆமோதித்தவளின் முகம் சடுதியில் மாறிப்போனது.
“என்னோட கோவமெல்லாம் சுகந்தி சித்தி மேலதேன்…சும்மா எப்போ பாரு மாமாவை மட்டம் தட்டம் தட்டி பேசிட்டு கிடக்கு…பாத்தில்ல நேத்து எப்படி பேசினுச்சுன்னு…இன்னைக்கும் அத பேசவுட்டா மாமனை பத்தி தேவையில்லாம எதையாவது பேசி உரண்டை இழுத்து வைக்கும்னுதேன்…அப்படி கோவமா பேசிட்டு வந்துட்டேன்…மத்தப்படி நீ என்னைய கேலி பேசினதுக்கு எனக்கு கோவமில்ல” என முகம் சிவக்க கோபத்தோடு ஆரம்பித்து அவளின் கரம் பற்றி இறைஞ்சதலுடன் பார்த்தவளின் தலையை நீவிய கயல்விழி “சரி விடுத்தா…நீ சொல்லற மாதிரி இடத்தை கொடுத்தா மடத்த கேட்கிற ஆளுதேன் அது…அதை ஆரம்பத்தில தட்டி வைக்கிறது சரித்தான்” என பெருமூச்சுடன் அவளின் செயலிற்கு ஒப்புவித்தவளை முறுவலுடன் நோக்கினாள் மதிவதனி.
அவளது உறவுகளில் மாமனிற்கு அடுத்ததாக பிடித்த ஓர் உறவு என்றால் காந்திமதியும் கயல்விழியும் தான்!!
சுயநலமில்லாத மனிதர்கள் அவர்கள் இருவரும் என்பதினால் மதிவதனிக்கு எப்போதும் இருவரையும் பிடிக்கும்.
அதன்பிறகு நேரம் இறக்கை கட்டி பறக்க ஆண்கள் அனைவரும் வந்தவுடன் பெண்டியர் உணவு பரிமாற,காளையனுக்கு அருகில் மதிவதனி அமர வைக்கப்பட்டாள்.
அதில் சங்கோஜமடைந்த ஆடவன் அவளிடமிருந்து ஓரடி நகர்ந்து அமர,பாவையவளோ நமுட்டு சிரிப்புடன் இலையை பார்த்தவாறு வேண்டுமென்று அவனை நெருங்கி அமர்ந்தாள்.
அதனை அறிந்து காளையன் பல்லை கடித்தாலும் அனைவருக்கும் முன்பு எதையும் காட்டிக்கொள்ளாமல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் உணவில் கவனமானான்.
பெண்ணவளோ ஆடவனது அருகாமையை ஒவ்வொரு நொடியும் ஆழ்ந்து அனுபவித்து தேகம் சிலிர்த்து சிலாகிப்போடு உணவருந்தினாள்.
அவளின் அருகே சுகந்தியின் மகள் மதுவந்தி அமர்ந்திருந்தாள்.
தாயை உரித்து வைத்து பிறப்பெடுத்திருந்தவளோ பக்கவாட்டாக திரும்பியவள் “மாமா வயலுக்கு போயிட்டு அப்படியே வந்துட்டீங்களா?ஒரே வேர்வை நாத்தம் அடிக்குது” என மூக்கை பொத்தி முகத்தை சுழித்தாள்.
அதைக்கேட்டு மதிவதனியோ கோபத்தில் புசுபுசுவென்று மூச்சுவிட்டாள்.
காளையனோ முகம் மாறாமல் காத்து சிறு புன்னகையுடன் “நான் ஒரு விவசாயி…என் தொழிலே அதேன்னும் போது ஒண்ணும் செய்யமுடியாதுத்தா” என்றான் பொறுமையாக.
மதிவதனியோ ‘என்ட்டனா மட்டும் அப்படியே பொங்கிட்டு வரது…இவக்கிட்ட மட்டும் பல்லை காட்டறத பாரு’ என பல்லை கடித்து அவனை திரும்பி முறைத்தாள்.
அதற்குள் மதுவந்தி “என்னவோ எனக்கு நாத்தம் குடலை புரட்டது…நான் பொறவு சாப்பிட்டுக்கிறேன்” என அருவருப்புடன் முகத்தை அஷ்டக்கோணலாக்கி இலையை மூடி எழுந்துக்கொண்டவளை கன்னம் கன்னமாக அறைந்துத்தள்ள மதிவதனியின் கரங்கள் துடித்தது.
இதற்கெல்லாம் மேல் அவளின் சினத்திற்கு தூபம் போடுவது போல் “ஏத்தா நீ எதுக்கு மதி பக்கத்துல உட்கார்ந்த?அவளுக்குதேன் வேற கதியில்ல அங்க உட்காரணும்…நீ அப்பாரு பக்கத்துல இந்த பக்கம் உட்கார வேண்டியது தான ராசாத்தி?” என குழைந்தக்குரலில் மகளின் பின்னோடு வேண்டியப்படி சென்றார் சுகந்தி.
ஆனால் பேச்சு வாக்கில் அவரின் குத்தல் மொழிகளால் மற்றவரை குறுக செய்துவிட்டு மதிக்காமல் சென்றவரை கண்ட அனைவரின் முகத்திலும் எரிச்சல் மண்டியது.
சுகந்தியின் கணவர் மற்றவரை சங்கடமாக ஏறிட,அதைக்கேட்ட காளையனின் தேகம் இறுகி மீண்டும் தளர்வுற்றது.
‘தன்னவனின் வியர்வை துளிகள் அவளிற்கு வாசமாக இருக்க,அது மற்றவளுக்கு நாற்றமாக தெரிவதா?’ என உள்ளுக்குள்ளே வெதும்பியவளிற்கு,சுகந்தியின் இழிவான பேச்சும் சேர்ந்து அவளை எரிமலை குழம்பாய் வெடித்து சிதற வைத்தது.
அதனால் அவர்கள் இருவரையும் அறைந்து தள்ளும் வேகத்துடன் சீறும் வேங்கையாய் நாசி விடைக்க எழுந்தவளின் எண்ணத்தை அறிந்தவனாய் அவளின் வலது கரத்தை இறுக பற்றினான் அவளின் மணாளன்.
முதன்முறையாய் உரிமையாய் தன்னவன் அவளின் கரம் பற்றியதை கூட உணராமல் வெடுக்கென்று அவன் புறம் திரும்பியவள் “யோவ் மாமா விடுய்யா…இன்னைக்கு அவளுங்களை இரண்டுல ஒண்ணு பாத்துட்டு வரேன்” என அடிக்குரலில் சீறியவளின் கரத்தில் அழுத்தம் கொடுத்தவன் “மதி பெரியவங்களை மதிக்காம என்ன பழக்கம் இது?” அவனும் குரலை அடக்கி அதட்ட,
“ஆமா அவங்க பேசின பேச்சுக்கு நான் மதிக்க வேற செய்யணுமாக்கும்?” என எரிந்து விழுந்தவளை அழுத்தமாக பார்த்த காளையன் “அவங்க என்னத்தான சொன்னாங்க…நானே அமைதியா இருக்கும் போது உனக்கு என்ன பிரச்சன?” என,
அவளோ ஆத்திரம் குறையாமல் “நீ ஒரு கேன கிறுக்கன்யா…பாசம்ன்ற முகமூடியை போட்டு உன்னை நீயே ஏமாத்திட்டு திரி…அவங்கயெல்லாம் சேர்ந்து உன் தலையில மொளகாய் அரைச்சிட்டு போவட்டும்” என சூடாய் பதில் கொடுத்தவள்,
அவனின் கண்ணோடு கண் கலந்து “உன்னைய பேசினா நீ கேட்பியோ இல்லையோ நான் கேட்பேன்யா…என் புருஷனை,என் மாமனை யாராவது மரியாத குறைவா நடத்தினா நான் கேட்பேன்…” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
அவளின் அந்தவொரு பதில் அந்த ஆறடி உயர முரட்டு மனிதனை அடியோடு புரட்டிப்போட்டது.
தனது குடும்பத்திற்காக எத்தனையோ இழந்திருந்தவன்,முதன் முதலாக தனக்காக தன் சுயமரியாதைக்காக போராடும் ஒரு ஜீவன்…
அதிலும்,அவள் அவனிற்கு மட்டுமே சொந்தமானவள் என்று எண்ணும் போதே நெஞ்சம் தேனாய் இனித்தது.
அதனால் அவளை பிடித்திருந்த முரட்டுப்பிடி இலகுவாகிட, விழிகளோ அவளின் மதிமுகத்தின் மீதே நிலைப்பெற்று இருந்தது.
அவனின் கண்களில் பாசத்தை தாண்டிய வித்தியாசமான உணர்வு தென்பட,பாவையவளோ அதனை அறியாமல் தனது கோபத்திலே உழன்றுக் கொண்டிருந்தாள்.
சடுதியில் நடப்பை உணர்ந்து தலையை உலுக்கி அவளின் கரத்தை பட்டென்று விடுவித்து உணவில் கவனமாகியவனின் இதழில் தன்னையறியாமல் இளநகை பூத்திருந்தது.
மதிவதனியோ அவனின் பிடி விலக, தன்னுணர்வுக்கு வந்தவளிற்கு கரத்தில் வலி உயிர்ப்போனது.
வாதையின் திசைநோக்கி குனிந்தவளிற்கு அதற்கான சூத்திரத்தின் விடையை உடனடியாக கண்டறிய முடிந்தது.
அவனது இரும்புப்பிடியின் பலனாக அவளின் வெண்ணிற கரத்தில் அவன் விரலின் அச்சுகள் ஆழமாக தடம் பதிந்திருந்தது.
வலி உயிர்ப்போக ‘அடப்பாவி மனுசா?அவங்களுக்காக என் கையை சில்லு சில்லா நொறுக்கி வைச்சிருக்கியே…நீயெல்லாம் மனுசனா?காட்டான்’ என முகத்தை சுழித்து முணுமுணுத்தவளின் குரலில் இருந்த சொற்களை கிரகித்தவனின் விழிகள் அவளின் கரத்தின் மீது அவசரமாக பதிந்தது.
நன்றாக கன்றி சிவந்திருந்த அவளின் கரத்தை கண்டு பதறிப்போனவனின் இதயமோ அவளிற்காக துடித்தது.
ஆனால் மற்றவரின் முன்பு எதையும் காட்டிக்கொள்ள முடியாததால் “பாப்பா” என நலிந்த குரலில் அவன் அழைக்கவும்,
அவனை ஏறிட்டவள் அவன் கண்களில் இருந்த தவிப்பை கண்டு பல்லைகடித்து வலி பொறுத்தவள் “எனக்கு ஒண்ணும் வலிக்கல…எல்லாரும் நம்மையே பாக்கறாங்க…நீ சாப்பிடு” என அவனின் கவனத்தை திசைத்திருப்பினாள்.
அவனோ இடது கையால் தனது மீசையை முறுக்கிவிட்டவாறு சாதாரணமாக மற்றவர்களை நோட்டமிட்டவன்,அனைவரின் விழிகளும் அவர்களது மீதே இருப்பதை கண்டுவிட்டு சங்கோஜமடைந்தவனாய் உணவருந்தி எழுந்துவிட்டான்.
அதேசமயம் எழுந்துக்கொள்ளும் முன்பு கண்கள் பனிக்க “வயிறு நிறைய சாப்பாடுத்தா…ரவைக்கு பசிக்கப்போகுது” என நேற்று இரவை நினைவுகூர்ந்து அவளிடம் ஆதுரத்துடன் எடுத்துரைத்திருந்தான்.
அதில் அவளின் முகம் பளிச்சிட்டது.
அவளிற்கு மட்டுமேயான அந்த அக்கறை கலந்த அன்பில் மதிவதனியின் முகம் கனிந்தது.
சிறிது நேரத்திற்கு முன்பிருந்த சினம் விலகி ஓடிட மாமனை ஏறிட்டு ‘சரி’ என தலையசைத்து சிறு புன்னகையை உதிர்த்தாள்.
நின்றிருந்த வாக்கிலே அவளின் பிரகாசமான முகத்தை ஆழ்ந்து பார்த்தவனின் விழிகள் கரங்களில் இருந்த சிவப்பை ஒரு கணம் வருட,நீண்டதொரு பெருமூச்சுடன் விறுவிறுவென இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தான்.
அதுவரை ‘இங்கு என்ன நடக்குப்போகுதோ?’ என கலவரத்துடன் பார்த்திருந்த உறவினர்களுக்கு மதிவதனியின் முகத்திலிருந்த புன்னகை பெரும் ஆசுவாசத்தை கொடுத்தது.
அதேசமயம் தேவையின்றி கணவன் மனைவிக்குள் ஒரு ஊடலை உருவாக்கிய சுகந்தி மற்றும் மதுவந்தியின் மீது எரிச்சலையும் தோன்ற வைத்தது.
மதிவதனிக்கோ தற்காலிகமாக தாய் மற்றும் மகளின் அலட்டல் பேச்சை ஒதுக்கியிருந்தாலும் ‘எவ்வளவு தெகரியம் இருந்தா என் மாமனை நோவடைச்சு பேசியிருப்பாங்க…இருக்கட்டும் ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உங்களையெல்லாம் வைச்சு செய்யலை…நான் என் மாமன் பொண்டாட்டி மதிவதனி இல்ல’ என தலையை சிலுப்பி சூளுரைத்திருந்தாள்.