“அம்மி மிதிச்சாச்சு
அருந்ததிய பார்த்தாச்சு ஏ
ஏ ஏ பின்னி பூ முடிச்சு
புருஷன் கைய
கோர்த்தாச்சு
எட்டூரு எட்டும் படி
தட்டுங்கடா மத்தளத்த பாச
மழை பெஞ்சு வந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த
பாச மழை பெஞ்சு வந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த” அந்த திருமண மண்டபத்திலிருந்த ஒலிப்பெருக்கியின் வழியாக பாடல் கசிந்து வந்துக்கொண்டிருக்க,அதற்கு இணையாக நாதஸ்வரமும் மேளதாளங்களும் இசைந்துக்கொண்டிருந்தது.
மக்கள் திரள் ஒன்றாக சூழ்ந்திருக்க திருவிழா போல் அவ்விடமே காட்சியளித்தது.
வெளியே உள்ள சிவப்பு நிற துணி வைத்த பலகையில் ‘காளையன் weds மதிவதனி’ என பெயர் பலகை வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதற்கு நேரெதிரே மிகப்பெரிய அளவில் மணமக்களின் புகைப்படங்களும்,கூடவே அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் கொண்ட பதாகை வைக்கப்பட்டிருந்தது.
மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்டு வாழை மரங்கள் நின்றிருக்க,அவை தென்னங்கீற்றினாலும் மஞ்சள் நிற பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க,உற்றார் உறவினர்கள் தங்களுக்குள் சலசலத்தப்படி மண்டபத்தினுள் அமர்ந்திருந்தார்கள்.
மண்டபத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு அறையில் விருந்து பரிமாறிக்கொண்டிருக்க,அவ்விடத்திலும் கூட்டம் அலைமோதியது.
மணமக்களை வாழ்த்த வந்திருந்த பெண்கள் தங்களது பகட்டான வாழ்வை மற்றவருக்கு காட்டும் பொருட்டு அலங்கார புஷ்டியுடன் கழுத்து நிறைய தங்க ஆபரணங்களுடன் வளைய வந்தார்கள்.
ஆடவர்களோ மண்ணின் மனம் மாறாமல் பாரம்பரிய உடையில் மீசையை முறுக்கிக்கொண்டு விறைப்புடன் சுற்றி திரிந்தார்கள்.
வாசமல்லியும் சுகந்தியும் மணமகளுக்கு இணையாக பெரிய கரை வைத்த பட்டுப்புடவையும் தங்க நகைகளும் அணிந்திருக்க,கயல்விழியோ தனது கல்வி தந்த செருக்குடன் எளிமையான அலங்காரத்துடன் தமையனின் திருமணத்தில் அழகாய் வலம் வந்தாள்.
காந்திமதியும் சிறு கரை வைத்த பட்டுப்புடவையில் நெற்றியில் விபூதி பட்டையுடன் தனது மகனின் மணக்கோலத்தை கண்ணால் ஆசைத்தீர பார்த்திருந்தார்.
‘நடந்து விடாதா?’ என்று வெதும்பியிருந்த தலைமகனின் திருமணத்தை கண்ணார காணும் ஆவலோடு பெண்டியர் காத்திருக்க,நேசமிட்ட மன்னவனை மணாளனாக அடையப்போகும் இனிய படபடப்புடன் பெண்ணவள் மணமகள் அறையில் நகத்தை கடித்துக்கொண்டிருந்தாள்.
கனவு கை சேரப்போகும் அந்த அழகான தருணத்தை மனதிற்குள் பூட்டி பாதுகாக்கும் வேட்கையுடன் அவளிருக்க,தனக்கு குழந்தையானவளை பொத்தி பாதுகாக்கும் அரணாக மாறும் நினைப்புடன் அவனிருந்தான்.
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதற்கு ஏற்ப அன்று அந்த ஜோடியை தூற்றியவர்கள் இன்று அதே ஜோடியை வாழ்த்தும் விருந்தினர்களாக வருகை புரிந்திருந்தார்கள்.
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மட்டுமே மனிதர்களை நல்லவர்களாக தீயவர்களாக சித்தரிக்கவும் செயல்படவும் வைக்கிறது என்பது இவர்களது விடயத்தில் ஊர்ஜிதமானது.
இன்னும் சற்று நேரத்தில் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்த அந்த திருமணம்…
உறவினர்களும் நண்பர்களும் புடைச்சூழ வெகு கம்பீரமாய் பட்டு வேட்டி சட்டையில் மேடையில் காளையன் நின்றிருக்க,ஊரிலுள்ள வயதில் மூத்த தலைவர்கள் அவனிற்கு முன்பு நின்று தலையில் கைவைத்து விழி மூடி இறைவனை பிரார்த்தனை செய்துக்கொண்டிருந்தார்கள்.
காளையனின் மனதிற்குள்ளோ பல்வேறு குழப்பங்கள்!!
தன்னுடைய முடிவு சரியானதா அல்லது அவளிற்கு நல்லது செய்வதாக எண்ணி ஒரு பெண்ணின் வாழ்வை சிதைக்கப்போகிறோமா என்பது போன்ற சிந்தனைகள் மூளையெங்கும் ஆக்கிரமித்து அவனையே தின்றுக்கொண்டிருக்க,நெருப்பின் மீது நிற்பது போன்ற ஒரு அவஸ்தையான உணர்வுடனே இறுக்கமாக இருந்தான்.
அதேநேரம் பெண்ணவள் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு ஆடவனிற்கு அருகே நிற்க வைக்கப்பட்டாள்.
இதற்கு முன்பு எத்தனையோ முறை மாமனின் அருகில் அவள் நின்றிருந்தாலும் மணக்கோலத்தில் அவனிற்கே உரியவளாக நிற்கையில் மெல்லிய மேனியில் சிலிர்ப்பு ஒன்று இழையோடியது.
எதிர்ப்பாராமல் ரகசியமாய் உறவாடிய இரண்டு ஸ்பரிசங்களின் மென்மையில் மதிவதனியின் உள்ளம் குறுகுறுக்க,தன்னவனை நிமிர்ந்து பார்க்குமாறு வலியுறுத்திய மனதினை பெண்ணவளின் நாணம் அடித்து அடக்கியது.
காற்றோடு காற்றாக அவனது சுவாசம் தன் மூச்சுக்காற்றோடு கலந்ததுப்போன்ற ஒரு மாயை உருவாக,அதனை விழி மூடி ஆழ்ந்து அனுபவித்தவளுக்குள் பல வகையான உணர்ச்சி பிராவகங்கள்!!
அவனின் முகத்தில் உணர்ச்சிகள் தொலைந்திருக்க,அவளின் முகத்திலோ பல வர்ணங்களின் அணிவகுப்பு!!
அத்தோடு ஆடவனின் அருகாமை தந்த மயக்கம் வேறு அவளது மேனியை குழைய வைத்தது.
இயற்கையாகவே மதிவதனியின் வதனம் அந்த நிலவின் மறுவிம்பம்.
இப்போதோ தனது நேசம் நிறைவேறப்போகும் மகிழ்ச்சியில் ஒளிரிட்ட கண்களும் பளபளத்த சரீரமும் அவளிற்கு தனி சோபையை கொடுத்து அவளை பேரழகியாய் அனைவருக்கும் காட்டியது.
அதற்கு மகுடம் சேர்த்து அலங்கரித்தது பாவையவளின் முகச்சிவப்பு!!
“ஐய்யோ என் மயினி…எம்புட்டு அழகுடா” என காரிகையின் கன்னம் வழித்து நெட்டி முறித்து குறும்பாய் சிரித்தாள் கயல்விழி.
அதில் மேலும் கன்னங்குழிய புன்னகைத்த மதிவதனியின் தேகம் சூடேற ஓரவிழியால் அவளை முறைத்து “சித்தி நான் உனக்கு மயினியா?” என செல்லமாய் சிணுங்க,
அவளோ “பின்ன என் அண்ணனை கலியாணம் பண்ணா எனக்கு நீ மயினிதேன்” என மதியை சீண்ட,
இப்போது நாசி விடைக்க பார்த்து “என்ன லந்தா?உன் வயசென்ன என் வயசென்ன?சும்மா மயினி பயினி கூப்பிட்டியிருந்தா குரவளைய கடிச்சி துப்பிடுவேன்” என பல்லைக் கடித்து காட்டியவளின் கையில் நறுக்கென கிள்ளி “ஏன்டி கலியாணம் கட்டும் போது கூட அடக்கமா இருக்கமாட்டியா?அடங்கி நில்லுடி” என பின்னிருந்து சுகந்தி அவளை கடிந்தார்.
அதில் “ஸ்ஆ” என முனகி பின்னால் திரும்பியவள் சுகந்தியை கண்ணாலே எரிக்க,
“ஏய் போதும்டி ஆத்தா…மொத்த சனமும் உன்னதேன் பாக்குது…செத்த அடங்கி நில்லு…உன் பஞ்சாயித்த பொறவு வைச்சுக்கலாம்” என கயல்விழி அவளின் காதோரம் குனிந்து எச்சரித்தாள்.
அதனால் மௌனமாய் முகத்தை மாற்றி நேராக திரும்பி நின்றவள் ‘மவளுங்களா உங்களுக்கெல்லாம் மொத்தமா இருக்குடி…இந்த கலியாணம் மட்டும் நடக்கட்டும்…என் மாமன இத்தின நாளா ஆட்டி வைச்ச உங்களையெல்லாம் வைச்சு செய்யல…என் மாமனுக்கு இந்த மதிவதனி பொண்டாட்டி இல்ல’ என மனதிற்குள்ளே கறுவிக்கொண்டு நின்றாள்.
அருகிலிருந்தவர்களின் பேச்சுக்குரல்கள் காளையனின் காதை எட்டினாலும் அவன் விறைப்புடன் அவள் புறம் திரும்பாமலே நின்றிருந்தான்.
அச்சமயம் அவர்களது ஊர் வழக்கப்படி அனைவரின் ஆசிர்வாதம் பெற்று மாங்கல்யம் வயது மூத்தவர்களின் கையின் வழியாக மணமகனிடம் கொடுக்கப்பட்டது.
“காளையா இந்தா புள்ள கழுத்துல கட்டு” என அவனிடம் மங்கலநாணை நீட்ட,அவனோ அதனை தன் கையில் வாங்காமல் சில நொடிகள் அதையே வெறித்துப்பார்த்திருந்தான்.
பாவையவளோ அந்த மதுரை மீனாட்சி அம்மன் உருவம் பொறித்த தாலி அடங்கிய மஞ்சள் கயிறை கண்டவுடன்,மீண்டும் அவளின் இதயம் தடதடக்க தொடங்கியது.
அவளின் முகத்தில் வெட்கமென்னும் அணிகலன் அலங்கரித்தது.
அது அவள் உடலெங்கும் அபகரித்திருந்த ஆபரணங்களை காட்டிலும் அவளின் முகத்திற்கு தனி ஜொலிப்பை கொடுக்க,தன் கழுத்தை அடையப்போகும் அந்த புதிய பந்தத்திற்கான துவக்கத்திற்காக தலைக்குனிந்து காத்திருந்தாள்.
ஆனால் அவளின் காத்திருப்பிற்கான மரியாதையைச் செலுத்த வேண்டியவனோ அதை அவமதிக்கும் விதமாக மாங்கல்யத்தை வாங்காமல் இறுகி நிற்க,ஏனையவர்களோ மணமக்களை வாழ்த்தும் முனைப்புடன் கையில் அச்சதையுடன் தயாராய் இருந்தார்கள்.
நொடிகள் கடந்து நிமிடங்கள் கடந்தப்பிறகும் அவன் மங்கல நாணை வாங்காமல் அழுத்தமாக இருக்கவும்,பெண்ணவளின் முகத்திலிருந்த நாணம் விடைப்பெற்று அவ்விடத்தில் இருள் சூழ ஆரம்பித்தது.
அவனின் உறவுகளுக்குள்ளும் ஒரு பதட்டம் அதிகரிக்க “ஏய்யா தம்பி தாலிய வாங்காம ஏன் சும்மாவே நிற்கற…வாங்கி கட்டுய்யா” என வாசமல்லி குரல் கொடுக்க,
மதிவதனியோ முதன்முறையாய் பதட்டத்தோடு தனது மாமனை ஏறிட்டாள்.
அவனது இறுகிய முகம் ஏதோ விபரீதத்தை உணர்த்த,பாவையவளின் நெஞ்சுக்கூடு காலியாகிப் போன ஓர் உணர்வு!!
‘மாமா’ என வாயிலிருந்து சப்தம் வராமல் திணறியவளின் நெஞ்சில் திகில் சூழ்ந்தது என்றால்,கண்களோ கலங்க தயாரானது.
அதற்குள் மண்டபத்தினுள் பெரும் சலசலப்பு எழ,மேடைக்கு கீழே அமர்ந்திருந்த காந்திமதியோ தன் வயதையும் பொருட்படுத்தாமல் மேடை ஏறி வந்து “ஏய்யா சாமி…என்னாச்சுய்யா?தாலிய வாங்கி புள்ள கழுத்துல கட்டு” என உயிரை கையில் பிடித்துக்கொண்டு பேச,
அதுவரை மௌனமாய் இருந்த காளையனோ தனது தாயை நோக்கி அழுத்தமாக பார்த்தவன் “ஆத்தா உன்ட்ட நான் என்ன சொன்னேன்?” என கணீர் குரலில் கேட்க,
பதறிப்போய் கூட்டத்தை விலக்கி அவனை நெருங்கி வந்தவர் “ஏய்யா சாமி?என்னய்யா” என்றார் கலக்கத்துடன்.
தன்னருகே நின்றிருந்தவரை குனிந்து முறைத்த காளையன் “நீ தொட்டு தாலிய கொடுத்தாதேன் நான் கலியாணமே செய்துப்பேன்னு சொன்னயில்ல…பொறவு எதுக்கு நீ கீழ ஒதுங்கி நிற்கற” என திட்ட,
அதுவரை ‘என்னவோ?ஏதோ?’ என்று படபடத்துக்கொண்டிருந்தவர்கள் ‘அவ்வளவு தானா?’ என நெஞ்சை நீவி ஆசுவாசமடைந்தார்கள்.
காந்திமதிக்கோ மகன் தன் மீது வைத்திருக்கும் அன்பில் நெகிழ்ந்தாலும் “புருஷன் இல்லாதவ தாலி எடுத்து கொடுத்தா அது விளங்குமாயா?அதெல்லாம் வேணாம் ராசா” என வருத்தத்துடன் ஓரடி பின்னே வைத்தார்.
சட்டென்று அவரின் கைப்பற்றி தன்னருகே இழுத்து நிறுத்தியவன் “தான் புள்ள நல்லாயிருக்கணும்னு பெத்தவள விட பெருசா எவனும் நினைக்கமாட்டான்தா…அப்படி பாத்தா நான் நல்லாயிருக்கணும்னு நினைக்கிற மொத ஆளு நீ தேன்…நீ ஆசிர்வாதம் பண்ணாதேன் நாங்க நல்லாயிருப்போம்…தாலிய வாங்கி என் கையில் கொடு த்தா” என அதட்டல் தொனியில் கூற,
அவரோ அப்போதும் தயங்க தாலியை வாங்கி தன் தாயின் கையில் திணித்த வேளையில் “அம்மாச்சி புருஷன் இருக்கவக எல்லாம் நல்ல மனசுக்காரங்களும் இல்ல…புருஷன் இல்லாதவங்களாம் கெட்ட மனசுக்காரவங்களும் இல்ல…மாமா சொன்ன மாதிரி நானும் மாமாவும் நல்லாயிருக்கணும்னு நினைக்கிற மொத ஆளு நீ தேன்…அந்த நல்ல மனசு உன்ட்ட மட்டும்தேன் இருக்கு…நீ தாலி எடுத்து கொடுத்தாதேன் என் வாழ்க்கை சீரும் சிறப்புமா இருக்கும்…இப்போ எங்க வாழ்க்கை உன் கையில…பொறவு உன் இஷ்டம்” என தனது மாமனை தாண்டி அம்மாச்சியிடம் பேசினாள் மதிவதனி.
திருமணத்திற்கு முன்பே தன்னவனிற்கு உறுதுணையாக நிற்கும் சரிப்பாதி கிடைப்பது வரமே?
அதனை உணர்ந்தாற் போன்று காளையன் ஒரே ஒரு முறை தன் அருகில் இருந்தவளை ஆச்சரியமாக பார்த்துவிட்டு மீண்டும் தாயின் புறம் திரும்பிவிட்டான்.
காந்திமதி அப்போதும் தயங்க “ஏத்தா…அதான் புள்ள அம்புட்டு தொல சொல்லுதே…தாலிய ஆசிர்வாதம் பண்ணி கொடுத்தா” என மற்றவர்களும் எடுத்துரைக்க,
வேறுவழியின்றி ‘ஐயா கருப்பண்ணா சாமி…இந்த முண்டச்சி தாலி எடுத்துக்கொடுக்கறானு புள்ளைய வஞ்சிப்புடாத…என் புள்ள வாழ்க்க நல்லாயிருக்கணும்ய்யா…அதுக்கு நீ தேன் துணை’ என இறைவனின் மீது பாரத்தை போட்டுவிட்டு மாங்கல்யத்தை கண்ணில் ஒற்றி மகனின் கையில் பவ்யமாக கொடுத்தார் அந்த வெள்ளை உள்ளம் கொண்டவர்.
அதில் தாடிக்குள்ளிருந்து கள்ளத்தனமாய் எட்டி பார்த்த முறுவலுடன் மங்கல நாணை தன் கரம் பற்றி தனக்குரியவளின் புறம் திரும்பியவனின் சிரிப்பு மீண்டும் காணாமல் போனது.
இப்போது வெட்கத்தில் தலைக்குனியாமல் மாமனின் முகத்தை மட்டுமே அவதானித்துக்கொண்டிருந்த மதிவதனிக்கு அதில் சடுதியில் ஏற்பட்ட மாற்றங்களை உணர முடிந்தது.
‘ஏன்?’ என்ற கேள்வியுடன் அவளின் புருவம் உயர்ந்த வேளையில் காரிகையின் விழிகளின் வழியே அவளின் இதயத்தை கூறுப்போட்டவனின் பார்வை தீட்சண்யத்தின் வீரியத்தில் அவளின் முதுகுத்தண்டு சில்லிட்டது.
அவள் அவனை மிரட்சியோடு நோக்கும் போதே உஷ்ண பெருமூச்சோடு தனக்கு முன்பே தரையில் குவிக்கப்பட்டிருந்த கல் உப்பின் மீது ஒற்றை காலை வைத்து அவளின் கழுத்தை சுற்றி கைகளை கொண்டுச் சென்றான்.
கிட்டத்தட்ட ஆஜானுபாகுவான உருவம் கொண்டவனின் கைச்சிறையில் பூஞ்சையவள் அடைப்பட்ட நிலை.
அதாவது,திடகாத்திரமான காளையிற்குள் ஒரு சின்னஞ்சிறிய பெண் புறா சிக்கிக்கொண்டது போல்,அவனுள் அவள் மறைந்தேப்போயிருந்தாள்.
அவனது விம்பத்திற்குள் மட்டுமின்றி எதிர்ப்பாராமல் நிகழ்ந்த மேனி உரசலும்,மூச்சுக்காற்றின் பகிர்தலும் பாவையவளை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்று அவனிற்குள் கரைந்து காணாமல் போக செய்திருந்தது.
கழுத்தோரமாய் உரசிய முரட்டு ஆணின் விரல்களின் ஸ்பரிசம் அவளின் தேகத்தை நெருப்பாய் தகிக்க வைக்க,காரிகையின் கண்களில் ஒரு வித மயக்கம் சூழ்ந்தது.
அவளின் கருவிழிகளில் அவன் மீதான நேசத்தையும் அவனது இறுகிய முகத்தையும் சிறைப்பிடித்து காட்டியவளின் அந்த நொடி நேர காட்சி ஆடவனின் மனப்பெட்டகத்தில் அவனையும் அறியாமல் அழகிய கவிதையாய் சேமிக்கப்பட்டிருந்தது.
அதிசயத்திலும் அதிசயம் பெண்ணவளின் இதயக்கூட்டிலும் அந்த காட்சி பதிவானது என்பது சிந்தையின் விந்தையே!!
முதன்முறையாய் தன்னவளின் விழி வழியே அவனுள் பாய்ந்துச் சென்ற நேசத்தின் வீரியத்தில் ஆடவனின் மேனியில் ஒரு சிலீரென்ற உணர்வு மெல்ல ஆக்கிரமித்து அதனுள் அமிழ்த்திய வேளையில்,படீரென்று காளையனின் இயற்கை குணம் விழித்துக்கொண்டது.
அதனால் தலையை உலுக்கி கண்களை அவளிடமிருந்து திருப்பி அவசரமாக விலகினான்.
வேறொரு உலகத்தில் கரைந்துக்கொண்டிருந்த மதிவதனியோ மாமனின் மூச்சுக்காற்று தன்னிலிருந்து விலகியவுடன் சடாரென்னு நிகழ்விற்கு வந்தவள் ‘அதுக்குள்ள எதுக்கு விலகின மாமா…அப்படியே என்ன காலம் பூராவும் சிறை வைக்கவேண்டியது தானே…சரியான லூசு மாமா’ என செல்லமாக கடிந்துக்கொண்டவளிற்கு அதன்பிறகு வேறு எதை பற்றியும் சிந்திக்கும் அளவு நேரமில்லை.
ஏனெனில்,மணமக்கள் இருவரும் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து வணங்கிய நிலையில், பெரியவர்கள் அவர்களின் நெற்றியில் விபூதி பூசிவிட்டனர்.
மற்றவரின் காலில் விழும் போது சடுதியாக இருவரின் தோள் உரசினால், வெடுக்கென்று அவன் அவளிடமிருந்து விலகியதை கவனித்து வந்த மதிவதனிக்கோ மாமனின் இந்த விசித்திரமான செய்கை எரிச்சலையும் சந்தேகத்தையும் விதைத்தது.
அன்று மாமன் தன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று கூறிய வினாடியிலிருந்தே அவள் நன்றாக உடல் நலம் தேறி வர,அவளிற்கு பக்கப்பலமாக காளையன் துணை நின்றான்.
அதன்பொருட்டே அவள் வெகு விரைவிலே பழைய மதிவதனியாக மாறிவிட்டாள்.
இப்போதும் தாய் தந்தையரின் மீது அதே சினம் நீடித்தாலும்,தனது காதல் கைக்கூடப்போகும் சந்தோஷத்தில் அனைத்தையும் மறந்துவிட்டு ‘மாமன் ஒருவன் மட்டுமே அவள் உலகம்’ என வானத்தில் சிறகடித்து பறந்துக்கொண்டிருந்தாள்.
இந்நிலையில் நேற்று வரை தன்னிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்த மாமன் அன்று காலையிலிருந்து ஏனோ அவளிடம் ஒரு விலகல் காட்டுவது போல் தோன்றியது.
மேலும்,அவனது முகம் வழக்கத்திற்கு மாறாக இறுகியிருக்க ‘என்ன நடந்தது?’ என ஒன்றும் புரியாமல் குழப்பத்திலே இருந்தாள்.
அத்தோடு மட்டுமின்றி அன்றைய நாள் முழுவதும் அனைத்து விதமான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நடந்தப்போதும் அவளிடம் அவன் ஒரு வார்த்தை பேசவில்லை.
அவளாக “மாமா” என தவிப்பாக அழைத்து பேச முயன்றாலும் அவன் அவளிடமிருந்து விலகிச்சென்றான்.
அதில் மனம் சுணங்கினாலும் ‘எப்படி இருந்தாலும் உன் குடுமி என் கையிலதான்டி மாப்பிள்ள…உன்னைய செமத்தியா கவனிச்சுக்கிறேன்’ என இதழை சுழித்து சூளுரைத்துக் கொண்டாள்.
ஆனால் அவளின் மாமனின் கோபத்தை தணிப்பது அவ்வளவு எளிதான விடயமல்ல என்பதும்,அவன் மனதினுள் அவளை பற்றிய பிம்பத்தை உடைத்துவிட்டு மனைவி என்ற ஸ்தானத்தை அடைவதற்கும் நீண்ட நெடிய தவம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்பதும் மதியவள் அறியவில்லை.
மணமக்கள் இருவரும் இல்லத்திற்கு வந்ததற்கு பிறகு பாலும் பழமும் கொடுத்த நொடிதனில் காளையன் யாவரின் முகத்தையும் பாராமல் “ஆத்தா வயல்ல கொஞ்சம் சோலி கிடக்கு…நான் புறப்படறேன்” என்றவன் நின்று அதற்கான பதிலை கேட்காமல் விருட்டென்று அங்கிருந்து புறப்பட்டுவிட்டான்.
கயல்விழியோ “என்னத்தா இந்த அண்ணே இப்படி பண்ணுது…இன்னும் ஒரு வாரத்தில கலியாணம் வைக்கணும்னு அந்த ஆடு ஆடினுச்சு…இப்போ என்னடானா புள்ளைய ஏறெடுத்து கூட பாக்காம கிடக்கு…எல்லார் முன்னாடியும் அதுக்கிட்ட பேச வெட்கம்னு நினைச்சா வூட்டுக்கு வந்த பொறவும் அந்த புள்ளைக்கிட்ட ஒத்த வார்த்த பேசாம விசுக்குன்னு கிளம்பிடுச்சு” என அங்கலாய்க்க,
சுகந்தி தன் பங்கிற்கு “ஏன்டி மொத அவனுக்கு இந்த கலியாணத்தில விருப்பம் தானா?இல்ல…எல்லாரும் வற்புறுத்தவும் ஒத்துக்கிட்டானா?எனக்கு என்னவோ இவன் அந்த புள்ளைய வைச்சு நல்லா வாழுவான்னு நம்பிக்க இல்ல” என புது வெடியை கொளுத்திப்போட்டதோடு,
“யக்கா உன் பொண்ணு வாழ்க்கை அம்புட்டுதேன்னு நினைச்சுக்க” என வாசமல்லியின் வயிற்றில் புளியை கரைத்தார்.
அதில் அனைவரின் முகமும் பீதியில் உறைந்துவிட “ஏடி இப்போதேன் என் மவன் வாழ்க்கையில் ஒரு விடிவு வந்திருக்கு…அது பொறுக்கலையா உனக்கு…போற போக்குல செத்த மண்ண அள்ளிப்போடாம ரவைக்கு என்ன சோறு பொங்கலாம்னு போய் பாருடி போக்கத்தவளே” என காந்திமதி இடைப்புகுந்து தன் இரண்டாவது மகளை அதட்டி சப்தமிட,
அவரோ “ம்க்கும்” என கழுத்தை நொடித்துக்கொண்டு “நான் என்ன இல்லாததையா சொன்னேன்…இந்த புள்ள முகத்தில கிடக்கற கிறக்கம் உன் மவன் முகத்தில காணலை…வந்தோம்…போனோம்னு ஏதோ விருந்தாளி கணக்கா கடமைக்கு தாலி கட்டி இவள வூட்டுல தள்ளிப்புட்டு போயிட்டான் உன் மவன்…அத என்னானு கேட்க துப்பில்லை…என்னைய விரட்டறதுக்கு வரவ” என வழமை போல் மனசாட்சியை கொன்று வன்மத்தை கொட்டி குடும்பத்தில் கலகமூட்டும் வேலையை செவ்வனே செய்தார்.
வாசமல்லியோ தலைகுனிந்து அமர்ந்திருந்த தனது மகளையும் தாயையும் கலக்கத்துடன் பார்த்து “ஆத்தா” என அழைத்தவரின் குரல் உடைந்தது.
சூழ்நிலை இறுக்கமாக மாறுவதை கண்ணுற்ற கயல்விழி வழக்கம் போல் அதனை தன் கையில் எடுத்துக்கொண்டாள்.
“மல்லிக்கா சின்னக்காதேன் ஏதோ பேசுதுன்னு நீயும் கண்ண கசக்குவியா?அண்ணனை பத்தி உனக்கு தெரியாதா?அவருக்கு மதின்னா உசுரு…சடுதியா கலியாணம் நடக்கவும் ஒரு மாதிரி இருந்திருக்கும்…மத்தப்படி நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்லை” என பெரியவளை சமாதானம் செய்தவள்,
தனது சிறிய தமக்கையை நோக்கி முறைத்து ‘எந்த நேரத்தில என்ன பேசணும்னு இல்ல…பிசாசு’ என மனதிற்குள் வறுத்தெடுத்து “யக்கா கோட்டிக்காரி மாறி எதையாவது பேசி தொலையாம…புடவ மாத்தணும்னு சொன்னியே என்னோட வா” என அவரையும் கையோடு தன்னோடு அழைத்துச் சென்றாள்.
மதிவதனியோ குனிந்து விரல்களின் நகத்தை சுரண்டிக்கொண்டிருக்க,அதனை ஒரு முறை பார்த்துவிட்டு பெரிய மகளிடம் குனிந்த அந்த முதியவர் “மல்லி…இப்போ என்னாத்துக்கு சுருண்டுப்போற…கயலு சின்னப்புள்ளையா இருந்தாலும் உன் தம்பிய எப்படி புரிஞ்சிருக்கா பாரு…கூட பொறந்த உடம்பிறப்பையே தங்கமா தாங்கறவன் காளை…அவனுக்குன்னு உள்ள ஒருத்திய அம்போன்னு விட்டுருவானா?” என இதமாக பேசி அவருக்கு புரியும் படி எடுத்துரைத்தார்.
மேலும்,மதிவதனியின் முகமும் சோர்ந்திருப்பதை பார்த்துவிட்டு மகளின் புறம் நோக்கி திரும்பியவர் “மதி ஆரு?அவ நம்பூட்டு புள்ள…அதுவும் இப்போ அவன் பொஞ்சாதி…அப்படி இருக்கையில் அவளை நெஞ்சுக்குள்ள வைச்சு தாங்கிடமாட்டான் எம்மவன்” என்றவுடன் மதிவதனி வெடுக்கென்று தலையை உயர்த்தி தனது அம்மாச்சியை பார்த்தாள்.
‘நெஞ்சுக்குள்ள வைச்சு தாங்குவானா?’ என்பது போல் அவளின் விழிகள் ஏக்கத்தோடு மிளிர,
அதனை ஓரப்பார்வையால் கண்ணுற்ற காந்திமதியின் இதழோரம் புன்னகை பூக்க “நெஞ்சுக்குள்ள என்ன உசுருக்குள்ள வைச்சு தாங்குவான்” என அவளுக்கான பதிலை கூறியவர்,
“வீணா கவலைப்படாதத்தா…நீ வா…ரவைக்கு பண்ண வேண்டிய ஏற்பாட்டை பத்தி பேசுவோம்” என பெரிய மகள் மற்றும் தனது பேத்தியின் மனதில் நிரம்பிய சஞ்சலத்தை ஒரே நேரத்தில் துடைத்தெறிந்தார் அந்த அனுபவமிக்க மூதாட்டி.
அதன்பிறகே இருவரின் முகத்திலும் ஒரு வெளிச்சம் பரவியது.
இரவு பத்து மணிக்கு மேல் சுப நேரம் என்பதால் பெண்ணவளை குளித்து உணவருந்தியதற்கு பிறகு அவளை முதலிரவிற்கு தயார் செய்தனர்.
பாவையவளோ தனிமையின் இரவுகளை பற்றி கனவு காணாமல் தனது மாமனின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தாள்.
அதுவொரு இரண்டு அறைகளை கொண்ட சிறிய தார்சு வீடு என்பதால் அங்கிருந்த ஒரு அறையில் சுகந்தியும் கயலும் தங்கிக்கொள்ள,மற்றொரு அறையை முதலிரவிற்காக பிரத்யேகமாக அலங்கரித்திருந்தார்கள்.
“ஆத்தா மணி பத்தாகப்போகுது…எங்க? அண்ணனை காணல?” என கயல்விழி யோசனையுடன் கேட்கும் போதே,
சுகந்தி அபஸ்வரமாய் ஏதோ வாயை திறக்கும் போதே “யக்கா தயவுசெய்து கோக்குமக்கா எதையாவது சொல்லி குடைச்சல கொடுக்காம…கம்முன்னு வாய் மூடிட்டு போய் தூங்கு” என அவளின் வாயை பொத்தி அறைக்குள் அனுப்பிவிட்டாள்.
அவரோ இவளை நன்கு முறைத்துவிட்டு “என்னைய பாத்தா மட்டும் உனக்கு ஒரே இளப்பம் தான்டி…மெத்த படிச்ச திமிரு…உன்னைய ஒரு நாள் சல்லி சல்லியா நொறுக்கறேன் பாரு” என முனகிக்கொண்டே போக,
‘இதுவொரு அல்ப பிசாசு…நேரம் காலம் தெரியாம பினாத்திக்கிட்டு’ என உள்ளுக்குள் கடுப்புடன் திட்டியவள் “ஆத்தா அண்ணனுக்கு ஒரு போன போட்டு வெரசா வரச்சொல்லு” என அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலே காளையனின் வண்டி வரும் ஓசை கேட்டது.
அதில் ஒரு முறை வாசலில் எட்டிப்பார்த்தவள் “ஆத்தா அண்ண வந்திடுச்சு போல...நீ சோத்த போட்டு உள்ளுக்கு அனுப்பு…நான் மதிய எங்க அறைக்கு கூட்டிப்போறேன்” என விபரம் கூறியவள்,
“மதி வா” என அவளை அழைத்தாள்.
அவளோ கண்கள் மின்ன தனது மாமனை கண்ணால் அவனது வரிவடிவத்தை அளந்துக்கொண்டிருக்க “அடியே கிறுக்கி…ஆம்பள தான்டி கிறங்கிப்போய் பின்னாடி சுத்தணும்…இங்க என்ன தலைகீழா நடக்குது” என தலையில் அடிப்போட்டு அவளை இழுத்துச் சென்றாள்.
மதியோ அவள் தன்னை அடித்ததினால் உண்டான கோபத்தில் “ஏ லூசு சித்தி…உனக்கு பெரிய லார்டுனு நினைப்பா?எதுக்கு என்னைய அடிச்ச?” என சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டு நிற்க,
“ஏய் லூசு கூமுட்டை…ஆம்பளைய உன் பொற்னாடி அலைய விடறத விட்டுப்புட்டு நீ ஏன்டி அவரை தின்னற மாதிரி வெறிச்சிட்டு இருக்க” என செல்லமாய் முறைக்க,
‘அப்படியே உன் நொண்ணன் என் பொற்னாடி அலைஞ்சிட்டாலும்’ என தனக்குள்ளே முனகியவள்,
அவள் “என்னடி அங்க சடைச்சுக்கிறவ?என்ன விஷயம்?” என கேட்க,
மதிவதனியோ நேராக நிமிர்ந்து அமர்ந்து “அதென்ன ஆம்பள மட்டும்தேன் பொண்ணு பின்னாடி அலையணுமோ?பொம்பளை ஆம்பளை பொற்னாடி அலையக்கூடாதா?” என்றாள் சினம் தொனிக்கும் குரலில்.
முகம் சுணங்க “அப்படி அலைஞ்சா ஊரு தப்பா பேசும்டி” என்றாள் நலிந்த குரலில்.
அதில் கொதித்தெழுந்தவள் “ஆமா பெரிய மண்ணாங்கட்டி ஊரு…அவனுங்கயெல்லாம் மனுஷங்களா?நிறத்துக்கு நிறம் மாறும் பச்சோந்திங்க…அன்னைக்கு என்னையும் மாமாவையும் அம்புட்டு குறை சொல்லிப்புட்டு இன்னைக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நம்ப வூட்டுல சோறு திங்க வந்திடுச்சுங்க…எனக்கு வர வெறிக்கு அம்புட்டு பேரையும் சதக் சதக்னு போட்டு போயிட்டு இருக்கணும் போல இருக்கு” என அன்றைய நாளுக்கான குன்றல் கலந்த ஆவேசத்துடன் பேசியவளை கவலையாக பார்த்து “சரி விடுடி…நல்ல நேரத்தில் போய் பழசை பேசிக்கிட்டு” என அவளிடம் சமரசத்திற்கு வந்தாள் கயல்விழி.
அப்போதும் மனம் சமாதானமடையாமல் “ப்ச்” என இதழை பிதுக்கி சலித்தவளின் முகமோ எதிரில் இருந்த சுவற்றை வெறித்தது.
மாமனுடனான திருமணத்தினால் தற்காலிகமாக அன்றைய நாளின் கொடூர நிகழ்வுகள் மனதிலிருந்து மறைந்திருந்தாலும் அது ஆறாத ரணமாய் அவளின் ஆழ் மனதில் புதைந்துக்கிடந்தது.
அத்தோடு பாலின வேறுப்பாடு கொண்டு கயல்விழி உரைத்த வார்த்தைகளும் அவளிற்கு சமுதாயத்தின் மீது கோபத்தையே கொடுக்க,உள்ளம் வெதும்பிப்போனாள்.
வெளியே காளையன் உணவருந்தியதற்கு பிறகு அவனை அறைக்கு அனுப்பிவிட்ட கயல்விழி மதிவதனியை கைப்பிடித்து அவர்களறைக்கு அழைத்துச் சென்றாள்.
கண்ணாளனின் எண்ணப்போக்கை அறிந்திருந்ததினால் எந்த வித சங்கடமும் பதட்டமுமின்றி நிச்சலனமான முகத்துடன் அவனறை நோக்கி சாதாரணமாக நடந்துச் சென்றாள் மதிவதனி.
சிறிதும் சங்கோஜமின்றி நடந்துக்கொண்ட பெண்ணவளை அதிசயமாக நோக்கிய கயல்விழி “கொஞ்சமாவது வெட்கப்படேன்டி” என அவளின் தோளை இடிக்க,
‘அப்படியே உன் நொண்ணன் போனவுடனே என் மேல பாயப்போறான்…நான் அதுக்கு வெட்கம் வேற படணும்…ம்க்கும்…ஏன்டி என் வயிற்றெச்சலை கொட்டிக்கிற’ என கடுப்புடன் சித்தியை ஒரு பார்வை பார்த்து “ஈ” என இளித்து பல்லிடுக்கில் வாயில் விரல் வைத்து “இந்த வெட்கம் போதுமா சித்தி?” என நக்கலாக வினவ,
அதில் திகைத்து விழி விரித்து “அடியே வெட்கப்பட சொன்னா…ஏன்டி இப்படி பல்ல காட்டி பயமுறுத்துற…வாய மூடுடி” என அவளின் விரல் தட்டிவிட்டவளை முறைத்து “பின்ன எப்படி வெட்கப்படணும்…இப்படியா?” என கால் விரலை தரையில் தோண்டி குழிப்பறிக்க தொடங்கினாள்.
மேலும் முகத்தை மூடி ஓரக்கண்ணால் அவளை பார்த்து இமைக்கொட்டி “இந்த வெட்கம் போதுமா?இல்ல…இன்னும் கொஞ்சம் வேணுமா?” என விதாண்டாவாதத்துடன் பாட்டு பாடி கேலி செய்ய ஆரம்பிக்க,
மற்றவளோ அவளை கண்டு அதிர்ந்து “எம்மா தாயே…இனி உன்னைய வெட்கப்படுன்னு நான் கேட்பேன்…மாட்டனே” என கையெடுத்து கும்பிட்டு அலறியடித்து ஓடியவளை கண்டு கலகலவென சிரித்தாள் மதிவதனி.
பெண்ணின் சிரிப்பொலி கேட்டு அவளின் தாய் வாசமல்லி வாசல் புறம் இருந்து எட்டிப்பார்த்து “ஏன்டி இன்னும் உள்ள போவாம என்னடி செய்யற?இதில ராத்திரி நேரத்தில பிசாசு கணக்கா சிரிப்பு வேற…உள்ள போடி” என பெரும் அதட்டல் போட,
அதில் அவளின் புன்னகை மறைந்துப்போக அவர் புறம் திரும்பி அழுத்தமாக பார்த்திருந்தவள்,வெடுக்கென்று தலையை வெட்டி கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.
தாய் தந்தையின் மீதிருந்த அந்த சினம் நீர்ப்பூத்த நெருப்பாய் இப்போதும் நெஞ்சினுள் கனன்றுக் கொண்டிருந்தது.
வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆகவேண்டும் என்று வாசமல்லி பெருமூச்சுடன் இல்லத்தின் கதவை சாற்றிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
நல்ல நேரத்தில் மதிவதனியை அந்த அறைக்குள் அனுப்பிவிட்டு,காந்திமதியும் வாசமல்லியும் மாட்டுக்கொட்டகைக்கு அருகிலுள்ள சிறிய அறைக்குச் சென்று படுத்துக்கொண்டார்கள்.
கையில் பித்தளை பால் கூஜாவுடன் உள்ளே நுழைந்த மதிவதனியோ கட்டாந்தரையில் மேல் சட்டையின்றி வெற்றுடம்புடன் படுத்திருந்த மாமனை கண்ணால் ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.
இதற்கு முன்பு பல முறை அவனை சட்டையின்றி பார்த்திருந்தாலும் முதன்முறையாய் தனக்கு மட்டுமே உரிமையானவன் என்ற கர்வத்துடன் அவனழகை வஞ்சனையின்றி ரசிக்க ஆரம்பித்தாள்.
உருண்டு திரண்ட தசைக்கோளங்களுடன் புஜங்கள் இரண்டும் முறுக்கேறி உடற்பயிற்சி இல்லாமலே கட்டுக்கோப்பாக இருந்த உடற்கட்டோடு திண்ணிய மார்புடன் ஆண்மைக்கே உரிய இலக்கணத்துடன் தன்னவன் படுத்திருந்த தோற்றத்தை பார்த்தவளின் விழிகளில் தாபம் பொங்கி வழிந்தது.
அவனை கண்களால் விழுங்கியவளின் கரங்கள் இரண்டும் அவனது தேகத்தின் வனப்பை ஆசைத்தீர தொட்டு உணர துடித்தாலும்,தன்னவனின் அனுமதியோடு அவற்றை தீண்டி ரசிக்க எண்ணியவளிற்கு பெருமூச்சு ஒன்று எழுந்தது.
அதனால் கையிலிருந்த பால் கூஜாவுடன் அவனருகே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள் “மாமா” என கிசுகிசுப்பான குரலில் அழைக்க,
ஆடவனோ உறங்காமல் விழித்திருந்தாலும் தன் மனையாளிற்கு எந்த வித பதிலும் கூறாமல் கண்மூடியே இருந்தான்.
முதன்முறையாக தன் அறையினுள் நிறைந்திருந்த பெண்ணவளின் வாசனை அவனை அசௌகரியத்துடன் உணர வைத்தது.
அதனால் விழி திறவாமல் ஆழ் கடலின் சீற்றத்துடன் அழுத்தமாய் இருந்தான்.
திருமணம் என்றால் தாம்பத்தியமும் அதில் ஒரு அங்கம் என்பதை அவனறிந்திருந்தாலும்,மதிவதனியை சிறு பிள்ளையாக மட்டுமே எண்ணுபவனால் அவளை மனைவி என்ற கண்ணோட்டத்துடன் நெருங்க முடியாத ஒரு தீர்க்கம் அவனுள் இருந்தது.
பாவையவளிற்கும் இன்றே தங்களது உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விருப்பமில்லை.
ஆனால் அவள் ஓரடி விலகியிருந்தால் மாமன் நூறடி விலகி ஓடிவிடுவான் என்பது அவளின் கணிப்பு!!
அதன்பிறகு எப்போதும் அவளது நேசத்தை அவனிற்கு உணர்த்த முடியாது என்பதால் அவன் வாயை திறக்காத நிலையிலும் துவண்டு பின்வாங்காமல் “மாமாஆஆ” என அவனின் தோள் தொட்டு உலுக்கினாள்.
இதற்கு மேலும் மௌனமாக இருந்தால் சரிவராது என்பதை உணர்ந்த ஆடவனும் மெதுவாக இமைத்திறந்து தன்னருகே அமர்ந்திருந்த மனையாளை ஆழ நோக்கி ‘என்ன’ என்பது போல் ஏறிட்டான்.
அவனது பார்வையில் எப்போதும் இருக்கும் பாசமின்றி ஒரு வித விலகல் நிலையூன்றி இருப்பதை பாவையவள் சட்டென்று கண்டுக்கொண்டாள்.
அதனால் முகம் தீவிரமடைய “மாமா என் மேல எதுவும் கோவமா இருக்கியா?” என்று கேட்டதற்கு ‘ஆமா...உனக்கு ஒண்ணும் தெரியாது பாரு…சரியான நடிப்பு கள்ளி’ என அவளை எரிச்சலோடு நோக்கி “மதி இப்போ என்ன பிரச்சன உனக்கு? காலையில வெள்ளனா நான் வயலுக்கு போவணும்…நீ போயி படு” என பொறுமையை இழுத்துப்பிடித்து நிதானமாக உரைத்தான்.
அவளோ விடாக்கண்டியாக ”மாமா இப்போ என்னாத்துக்கு இஞ்சி தின்ன குரங்கு மாறி மூஞ்சியை வைச்சிட்டு இருக்கவ…என் மேல ஏதாவது கோவமா இருந்தா சொல்லு…நான் திருத்திக்கிறேன்” என்றவாறு பால் கூஜாவை தரையில் வைத்து வினவினாள்.
அவனோ படுத்திருந்த வாக்கிலே “ப்ச்” என அவளிடம் சலித்துக்கொள்ள,
பாவையவளோ அதில் கடுப்பாகி “மாமா இப்போ நான் என்ன பண்ணிட்டேனு இப்படி சண்டக்கோழி மாதிரி சடைச்சுக்கிறவ?” என அவனின் நாடிகள் அடர்ந்த கன்னத்தில் இடித்தாள்.
அவள் தன்னை தொட்ட ஆத்திரத்தில் படீரென்று அவளின் கையை தட்டிவிட்டு “ஏய்…என்னைய சீண்டற சோலியெல்லாம் வேணாம்…நீ பண்ண காரியத்துக்கு உன் குரவளைய நெறிக்கிற அளவு வெறி வருது…ஆனாக்க நான் வளத்த புள்ளையாச்சேன்னு அடங்கியிருக்கேன்…வீணா என்னைய சோதிக்காம போய் படு” என ஒற்றை விரல் நீட்டி முகம் சிவக்க சிடுசிடுத்தான்.
அதில் உள்ளுக்குள் மிரண்டாலும் நாசி விடைக்க அவனை முறைத்து ”யோவ் மாமா…இப்போ எதுக்கு ஜல்லிக்கட்டு காளை கணக்கா துள்ளிட்டு திரியற?என்ன உன்…” என அவள் படபடவென பொரிந்துக்கொண்டிருக்கும் போதே “ஏய்” என கையை ஓங்கியவாறு துள்ளிக்கொண்டு எழுந்தவனின் வேகத்தில் பாவையவள் நடுங்கிப்போய் கண்களை இறுக்கி மூடி பின்னோக்கி சாய்ந்தாள்.
அவனது அந்த செயலை சற்றும் எதிர்ப்பாராதவளின் இதயமோ அசுரவேகத்தில் துடித்தது.