மோகனம் 10

காளையனோ மாமனிடம் கொடுத்த கெடு முடிவதற்குள் ஒரு மணமகனை கொண்டு வந்துவிட வேண்டும் என பெரும் முயற்சி செய்தான்.

ஆயினும்,அந்த இரண்டு நாட்கள் முடிவுற்றும்,அவனால் மாமனிற்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை.

யாவரும் மதிவதனியை திருமணம் செய்ய முன்வராததோடு அவளை தங்களது இரண்டாம் தாரமாக வைத்துக்கொள்வதாக நக்கல் செய்யவும்,அவனிற்கு வந்த கோபத்தில் தவறாக பேசியவர்களை அடி வெளுத்துவிட்டான்.

இதனால் மதிவதனிக்கு உரிய வரன் கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானான்.

இந்நிலையில் அவனது மாமன் சீமைத்துரை அவனிற்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டதோடு,மொத்த குடும்பமும் அவனை மதியை கட்டிக்கொள்ளும் படி வலியுறுத்த தொடங்கிவிட்டது.

வாசமல்லியும் வேறு யாரும் தனது பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அனுபவத்தில் அறிந்துக்கொண்டதினால் தனது சகோதரனுக்கே பெண்ணை கட்டிக்கொடுக்கும் முடிவிற்கு வந்துவிட்டார்.

‘பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகளா?குடும்ப கௌரவமா?’ என்று வருகையில் மதிவதனியின் பெற்றோருக்கோ குலப்பெருமையே பெரிதாக இருந்தது.

ஆனால் காளையனிற்கோ பெண்ணவளின் நல்வாழ்வு மட்டுமே கண்முன் இருந்தது.

அதன்பொருட்டே அவளை நிராகரித்து வந்தான்.

ஒரு கட்டத்தில் உறவினர் அனைவரது வற்புறுத்தலினால் அதிக மன அழுத்தம் ஏற்பட,எந்தவொரு முடிவையும் உடனடியாக எடுக்க முடியாத வகையில் இருவருக்கும் இடையே இல்லாத பொருத்தங்கள் அவனிற்கு தடையாக இருந்து நெஞ்சில் பாரமேற்றியது.

அவளின் விபரங்கள் ஊர் முழுவதும் பரவியிருந்ததால் எந்தவொரு ஆண்மகனும் அவளை கட்டிக்கொள்ள முன் வரவில்லை.

அதேசமயம் அவனாலும் அவளை தாரமாக ஏற்க முடியவில்லை.

இப்படியானதொரு சூழ்நிலையில் மதிவதனி கல்லூரிக்கு வராததினால் மணிமேகலை தவிப்புடன் கயல்விழிக்கு அழைத்து தோழியை பற்றிய விபரம் கேட்டாள்.

கயல்விழியின் வாய்மொழியாக அங்கு நடந்த களேபரத்தை கேட்டவளின் இரத்தம் கொதித்தது.

‘இவங்களாம் நிஜமா மனுசங்க தானா?’ என பெருஞ்சினத்தோடு அனைவரின் சிரத்தை கொய்யும் வெறி உள்ளுக்குள் தோன்றினாலும்,அங்கு தோழியின் நிலையை எண்ணி இவளின் கண்ணில் நீர் பெருகியது.

அத்தோடு இறுதி நாளில் தோழிக்கும் அவளுக்குமிடையேயான உரையாடலை பற்றி எடுத்துரைத்தவள் “தப்பெல்லாம் உங்க அக்கா புருஷன் செய்திட்டு இப்படி தப்பே செய்யாதவளை இப்படி உயிரோடு சாவடிச்சிருக்கீங்களே…நீங்களாம் நிஜமா மனுசங்க தானா?இப்படி மனசாட்சி இல்லாத காட்டுமிராண்டிகள் எல்லாம் என் மதியை சுத்தி இருக்கறதை நினைச்சா எனக்கு வெகுண்டு வருது…இத்தின நாளா அந்த புள்ள மனசதேன் கொன்னுட்டு இருந்தீங்க…இப்போ உயிரையும் கொல்ல துணுஞ்சிட்டீங்களே…பாவிகளா?ச்சை…உங்ககூடயெல்லாம் மனுசி பேசுவாளா?த்தூ” என கயல்விழியை நாக்கை பிடிங்குவது போன்று சரமாரியாக வசைமழை பொழிந்தவளின் சொற்களை கேட்டவளிற்கு பகீரென்றது.

‘ஐய்யோ தப்பே பண்ணாத புள்ளய இப்படி வஞ்சுப்புட்டமே’ என நெஞ்சம் பதைபதைக்க தனது தமக்கைக்கு அழைத்து அலைப்பேசியின் வழியாக விஷயத்தை பகிர்ந்துக்கொண்டவளின் கண்ணிலிருந்து நீர் வழிந்தது.

நடந்த உண்மைகளை ஓரளவு கிரகித்த மதிவதனியின் உறவுகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இடிந்துப்போயினர்.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

மதிவதனிக்காக உறவுகள் ஒவ்வொருவரின் இருதயமும் உச்சக்கட்ட வேதனையுடன் துடிக்க,பெண்ணவளோ எப்போதோ உயிரற்று வெறும் கூடாகியிருந்தாள்.

தன்னை தானே தனிமை படுத்திக்கொண்ட மகளை கண்ட தாயின் உள்ளம் நிலைக்கொள்ளாமல் பரிதவித்தது.

முன்பு தவறுக்கான தண்டனை அனுபவிக்கட்டும் என மெத்தனமாக நினைத்தவரால் இப்போது அவ்வாறு இருக்க முடியவில்லை.

அவளிடம் சரணடைந்து மன்னிப்பு வேண்டிட அவர் ஒன்றும் சாதாரண பிழைச்செய்யவில்லையே?

அதனால் மகளின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க இயலாமல் அவரும் ஒதுங்கிப்போனார்.

மகளின் இந்நிலையை கண்ட சீமைத்துரையும் அவளது இந்த நிலைக்கு தாம் தான் காரணம் என்ற குற்றவுணர்வில் தினந்தோறும் உள்ளுக்குள்ளே மடிந்துக்கொண்டிருந்தார்.

அந்த வீட்டில் அவளின் நடமாட்டம் முற்றிலும் தொலைந்திருந்தது.

அவளை பார்ப்பதே ஒரு அபூர்வமான நிகழ்வாக இருக்கும்.

குளிப்பதற்காகவும்,இயற்கை உபாதைகளை கழிப்பதற்காகவும் மட்டுமே அறையிலிருந்து வெளிவருபவளை காண்பதற்காக மொத்த குடும்பமே பரவசத்துடன் காத்திருக்கும்.

முன்பு அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவமதிப்பவர்கள்,இப்போதோ அவளின் தரிசனம் கிடைத்துவிடாதா அல்லது தங்களிடம் ஒரு வார்த்தையேனும் பேசிவிடமாட்டாளா என ஏக்கத்துடன் தவம் கிடந்தார்கள்.

ஆனால் அவளின் தரிசனம் அவர்களுக்கு மகிழ்ச்சியை மீறிய துயரத்தையே அளித்தது.

ஏனெனில் களைந்த தலையுடன்,கண்ணிற்கு கீழே கருவளையத்துடன்,அவளது வெண்ணிறம் பொலிவிழந்து,உடல் மெலிந்து இருந்தாள் பாவையவள்.

அழகின் மறுவுருமாய் இருப்பவளின் இந்த சிதைந்த நிலையை கண்ட பெற்றவர்களின் இதயத்தில் ஈட்டியால் சொருகியது போல் ரணமாய் வலிக்க செய்தது.

நிம்மதி நிறைந்திருந்த இல்லத்தினுள் துக்கம் நடந்தது போல் அந்த இல்லமே துயரக்கடலில் மூழ்கி இருந்தது.

நாளடைவில் அவளின் நிலை கவலைக்கிடமாக மாறுவதை கண்ணுற்ற பெற்றோர்கள் தவறை சரி செய்வதற்கான வழிகளை பற்றி சிந்தித்தார்கள்.

இம்முறை சரியான பாதையில் சென்றார்கள்.

அதிலும்,கயல்விழி அவளை பற்றி கூறியதிலிருந்து பேத்தியை காண காந்திமதிக்கு கண்கள் பூத்திருந்தது.

ஆனால் அவளிற்கு தாங்கள் செய்த அநியாயத்தை கருத்தில் கொண்டும் மகனிற்கு நேர்ந்த அவமானமும் அவரை அங்கு செல்லவிடாமல் தடை செய்திருந்தது.

காளையனை தவிர ஒருவரும் அவளை நம்பவில்லை என்று நிதர்சனமும் புரிய,ஒருவேளை அவன் அவளிடம் பேசினால் பழைய மதிவதனியாய் மாறிவிடுவாளோ என்ற எண்ணமும் உதித்தது.

அதனாலே காந்திமதி பேச்சுவாக்கில் மதிவதனியை பற்றி மகனிடம் எடுத்துரைக்க,அவனிற்கோ அவளின் நிலை சுருக்கென தைத்தாலும் “நிசம் புரியாம அந்த புள்ளைய உசுரோடு கொன்னுட்டு எந்த மூஞ்சியை வைச்சிட்டு அந்த புள்ளைக்கிட்ட என்ன பேச சொல்லறீங்க?என்னால் முடியாது” என நிர்தாட்சண்யத்துடன் மறுத்தவனின் செவியில் மதிவதனியின் கதறல் இப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அதில் அவனது தேகமெங்கும் பதற ஒருமுறை தலையை உலுக்கி நிகழ்விற்கு வந்தவனின் முகம் பாறையென இறுகிப்போனது.

எதிரில் இருந்த தாயை உறுத்து விழித்தவன் “உன் மவக்காரி அந்த புள்ளைய முச்சந்தியில நிறுத்தி விளக்கமாத்தல அடிச்சது இன்னும் என் கண்ணுக்குள்ள இருக்கு…அந்த புள்ள அப்படி கதறுது…ஒரு நாதியத்த நாயும் ஏன்னு கேட்கலை…என் மாமனோ நம்ப புள்ள இப்படி பண்ணுவாளானு ஒரு நொடி சிந்திக்காம அந்த புள்ள அடி வாங்கறதை நின்னு வேடிக்க பார்த்திட்டு இருக்காயன்…அந்த புள்ளைய அவங்க படுத்தினப்பாட்டுக்கு எனக்கு வந்த ஆத்திரத்தில அம்புட்டு பேரையும் செதில் செதிலா வெட்டி ஆத்துல கிடாசிருப்பேன்” என கழுத்து நரம்புகள் புடைக்க ஆக்ரோஷத்தோடு கர்ஜித்தவன்,

“எல்லாம் எனக்கு உறவா போனதால தப்பிச்சீங்க…இல்ல இன்னைக்கு ஒரு பைய உசரோடு திரியமுடியாது” என நாக்கை மடித்து கடித்தவனின் கண்களில் தீப்பொறி பறந்தது.

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஐய்யனார் சிலையாய் உக்கிரத்துடன் இருந்த மகனை கண்டு பதறிப்போய் “ஏய்யா எதுக்கு உனக்கு இம்புட்டு கோவம்…பொறுய்யா” என அவனை சமாதானம் செய்ய முயல,

வெடுக்கென்று தலையை அவரை நோக்கி திரும்பியவன் “மொத உன்னைய வெட்டிப்பொலிப்போடணும்…நீயும் சேர்த்து தானே அந்த புள்ளைய வஞ்சிட்டு கிடந்த” என அவரிடமும் எகிறினான்.

அதில் திடுக்கிட்டு ஓரடி பின்னடைந்தவர் ‘ஆத்திஈஈ…என்ன வண்டி நம்ப பக்கம் திரும்புது’ என நெஞ்சில் கைவைத்து மிரட்சியோடு அவனை பார்த்தார்.

அதன்பிறகே கைமுஷ்டியை இறுக்கி அணிந்திருந்த செம்பு காப்பை பின்னுக்கு தள்ளி கோபம் தணிந்தவன் “ஆத்தா இன்னொருக்கா அந்த புள்ளைக்கிட்ட பேசு…அந்த புள்ளைய கலியாணம் பண்ணுனு தூது வந்த எனக்கு கெட்டக்கோவம் வரும்…அதிலும் பெரியக்காவுக்கு சப்போட்டுக்கு வந்த அம்புட்டுதேன் நீ” என விரல் நீட்டி எச்சரித்தவனிற்கு மதிவதனியை பார்க்க உள்ளம் பரபரத்தது.

ஆனால் பெண்ணவளோடு இணைத்து பேசிய தமக்கையின் வார்த்தை இப்போதும் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்க,தன்னால் அவளின் எதிர்கால வாழ்வு பாழாகிவிடக்கூடாது என்பதற்காகவும்,தன்மானத்தை சீண்டிய சொற்களால் உண்டான வடுக்களாலும் மதிவதனியை பார்ப்பதற்கு முயற்சிக்கவில்லை.

அதனால் தாயை அழுத்தமாக நோக்கி “இன்னும் அந்த புள்ள மேல கொஞ்சுண்டு பாசம் ஒட்டிக்கிட்டு கிடந்தா என் மாமன்காரனையும் அக்காகாரியையும் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லு…அப்போவாது அவுக செஞ்ச பாவம் கரையுதான்னு பாப்போம்” என சூடான குரலில் உரைத்தவன் “ம்மாஆ” என மருது கத்துவதை கேட்டு “இந்தாய்யா வரேன்” என வாசலை நோக்கி குரல் கொடுத்தவாறே துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

மகன் அங்கிருந்து சென்றவுடன் இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றிய காந்திமதிக்கோ சிறிது நேரத்தில் சூறாவளி வந்து தன்னை சுழன்றடித்தது போல் ஒரே மலைப்பாக இருந்தது.

அதனால் சோர்வுடன் தனது சிறிய மகளிற்கு அழைத்து விஷயத்தை பகிரவும்,அவர்களுக்கென்று இருந்த ஒரு நம்பிக்கையும் திக்கற்று அறுந்துப்போனது.

மதிவதனியின் அழுத்தம் ஒருபுறம்,காளையனின் பிடிவாதம் மறுபுறம் என்று எல்லாம் சேர்ந்து அவர்களின் நெஞ்சில் பாறாங்கல்லை வைத்தது போல் கனக்க செய்தது.

ஆனால் அவனது அந்த தன்மானத்தையும் உறுதியையும் முற்றிலுமாக தகர்த்தெறிய செய்யும் வகையில் அவனை வந்தடைந்தது,மதிவதனியின் தற்கொலை செய்தி!!

அந்தவொரு தகவல் அந்த ஆறடி ஆண்மகனை அடியோடு நிலைப்பிறழ வைத்தது.

இறப்பிற்கு துணிந்து கையை அறுத்துக்கொண்டதினால் அவளை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக அவனிற்கு தகவல் வர,உழுதுக்கொண்டிருந்த நிலத்தை கூட பாதியில் விட்டவன் பதறியடித்து மருத்துவமனை ஓடி வந்தான்‌.

அவளுக்கு சிகிச்சை வழங்கிக்கொண்டிருக்கும் அறைக்கு வெளியே அனைவரும் கவலை அப்பிய முகத்தோடு அமர்ந்திருப்பதை பார்த்தவனின் சர்வமும் அடங்கிப்போனது.

தன் மடியில் அமர வைத்து காது குத்தும் போது தன்னை கட்டிக்கொண்டு அழுத மதிவதனி தொடங்கி,அன்று தமக்கையின் அடியிலிருந்து தன்னை காக்க வரும்படி கதறிய மதிவதனியின் நினைவுகள் வரை அவனின் நெஞ்சில் முட்டிமோதியது.

தன்னை கண்டவுடன் துள்ளிக்கொண்டு ஓடி வரும் பெண்ணவளின் இதழில் உறைந்திருக்கும் புன்னகை இப்போதும் மனதில் பசுமரத்தாணி போல் ஒட்டியிருக்க,அந்நொடி ஒரு முடிவெடுத்தான் காளையன்.

‘இனி என்ன நடந்தாலும் சரி…அவள் தன் மனைவியாக தன்னுடைய வீட்டிலே இருக்கட்டும்’ என தீர்க்கமானதொரு முடிவெடுத்து,அவள் கண் விழிக்கும் அந்தவொரு தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தான்.

ஆனால் அனைத்தையும் செய்துவிட்டு தனது மகளிற்காக ஒப்பாரி வைத்த வாசமல்லியை கண்டவனிற்கு ஆத்திரமாக வந்தது.

ஆயினும்,மதிவதனி மீண்டு வரட்டும் என வேண்டுதலுடன் தன்னவளிற்காக காத்திருக்க தொடங்கினான்.

தொடர்ந்து வந்த பல மணி நேரங்களுக்கு பிறகு மதிவதனி கண்விழித்துவிட்டாள் என்ற செய்தி கிட்டியதும்,முதல் ஆளாக அவளை பார்ப்பதற்கு பாய்ந்து உள்ளே ஓடினான் காளையன்.

அவளை காண்பதற்கு அவனை முந்திக்கொண்டுச் செல்ல முயன்ற நபர்களை தன் நெருப்பு விழிகளாலே சுட்டெரித்து அவர்களை தள்ளி நிறுத்தினான்.

அவனது முகத்தில் தெரிந்த உஷ்ணத்தில் அனைவரும் மிரட்சியோடு அவ்விடத்தில் நின்றுவிட்டார்கள்.

அவனது பார்வையே ‘இதுவரை நீங்க எல்லாரும் பார்த்து கிழிச்சது போதும்…என் புள்ளைய இனி நான் பார்த்துக்கிறேன்’ என அனைவரையும் எச்சரித்தது‌.

மற்றவர்கள் கப்பென்று வாயை மூடிக்கொள்ள சீமைத்துரையும் சுகந்தியும் மட்டும் முணுமுணுத்தார்கள்.

அதற்கு கயல்விழியோ “அண்ணனை அவளுக்கு உரிமைப்பட்டவங்கன்னு நியமனம் பண்ணியாச்சுல…பொறவு என்னாத்துக்கு இப்படி சலம்பிட்டு நிக்கறீங்க?” என குரல் உயர்த்தி அதட்ட,

“இப்போ என்ன ஊரு முன்னுக்கு பரிசமா போட்டிருக்கு…சும்மா பேச்சு தானே பேசியிருக்காங்க” என சுகந்தி துடுக்குத்தனமாய் பதில் கொடுக்க,

காந்திமதியோ மகளின் கன்னத்தில் இடித்து “அடியே இன்னாருக்கு இன்னாருன்னு பேசி வைச்சுப்புட்டாலே அவுக பாதி புருஷன் பொஞ்சாதிதேன்…என் மவனுக்கு அவன் பொஞ்சாதிய பாக்க எல்லா உரிமையும் இருக்கு…அதனால நீ செத்த வாய அடக்கு” என்றவர் தனது மருமகனான சீமைத்துரையின் புறம் திரும்பி,

“என்னா மருமவனே வாயே திறக்கமாட்டிக்கிறீக…நீங்க என் புள்ள கால்ல வந்து வுழுந்து என் மவள கட்டிக்கனு சொன்னப்பவே அவ எம்மவனுக்கு பொஞ்சாதியாகிட்டா…அவள பாக்க அவனுக்கு உரிம இல்லையா?வாய தொறந்து பேசுங்க” என வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் அவரை ஜாடையாய் சீண்டினார்.

அதில் அவர் முகம் கறுக்க தலைக்குனிந்து நிற்க,கயல்விழியோ ‘காரியம் ஆகணும்னா கால புடிப்பாங்க…இல்லனா வாரிவிடுவாங்க…என்ன மனுசங்க இவங்கயெல்லாம்’ என காட்டத்துடன் அவரை முறைத்துவிட்டு “ஏடே பாண்டி…அக்காதேன் கண்ணு முழிச்சிட்டாளே…இன்னும் என்னத்துக்கு கண்ண கசக்கிட்டு கிடக்க…இங்க வா…சித்தப்பா கூட போய் எல்லாருக்கும் காப்பிய வாங்கிட்டு வா” என அதிகாரத்துடன் செந்தூரப்பாண்டியனை பார்த்து கட்டளையிட்டாள்.

உடனே சீமைத்துரையின் ஆணவம் தலைத்தூக்க ‘என் புள்ளைய இவ வேலை ஏவுவதா?’ என பல்லைகடிக்க,வழக்கம் போல் அவள் அதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை.

வாசமல்லியோ இங்கு நடக்கும் கூத்தை கவனிக்காமல் மகள் இருந்த அறையையே விழி அகற்றாமல் பார்த்திருந்தார்.

அதைக்கண்ட கயல்விழியோ ‘பையனை மெச்ச வளத்த மாதிரி புள்ளையையும் வளத்திருந்தா இப்படி தெவுடு காக்கணும்னு அவசியம் வந்திருக்குமா?என்னைக்கு ஆம்பளை பையன் பொம்பளை புள்ளைனு பிரிச்சு வளக்காம இரண்டும் என் புள்ளைங்கதேன்னு நினைச்சு வளக்கறீகளோ…அன்னைக்கு தான் இந்த சமுதாயம் உருப்படும்’ என ஆற்றாமையுடன் பெருமூச்சுவிட்டாள்.

அனைவரையும் தடுத்து நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த காளையன்,வாடிய கொடியென துவண்டுப்போய் படுத்திருந்த பெண்ணவளை காண,அவனது சர்வ அங்கமும் நடுங்கிப்போனது.

எலும்பை போர்த்திய தோல் உடலுடன் ஜீவனற்ற கண்களுடன் ஒளியிழந்து இருந்தவளின் நிலை பார்த்து ‘ஐய்யோ தப்பு பண்ணிட்டனே…என் தன்மானத்தை யோசிச்சு புள்ளைய கைவிட்டுப்புட்டனே’ என கலங்கிப்போனவனின் நெஞ்சமோ உடைந்து நொறுங்கிப்போனது.

அந்த ஆறடி உயர முரட்டு மனிதனை ஒரு சிறு பெண்ணின் செயல் உயிரோடு மடிய வைத்தது.

“பாப்பா” என நா தழுதழுக்க அழைத்து அவளை நெருங்கியவனின் கணீர் குரல் கேட்டு பட்டென்று கண் திறந்தாள் காரிகை.

வெகு நாட்களுக்கு பிறகு தன்னவனை அங்கு காணவும்,உயிரற்ற சிலைக்கு ஜீவ ஒளிப்பிரதி கிடைத்தது போல் முகம் பிரகாசமுற “மா…மா” என தடுமாற்றத்துடன் அழைத்தவளின் குரலில் தான் எத்தனை பரவசம்!!

அதனை அறிந்த காளையனோ தன் தவறை எண்ணி மனதிற்குள்ளே குமுறினான்.

முன்பே அவளை சென்று சந்தித்து பேசியிருந்தால் அவளிற்கு இத்தகைய நிலை வந்திருக்காதோ என காலத்தாமதமாக தனக்குள்ளே புழுங்கியவனின் கண்களில் இருந்து நீர் வழிந்தது.

கட்டுப்போட்டிருந்த அவளின் காயத்தை வருடி “என்ன புள்ள இப்படி செஞ்சு மனசனை கொலையா கொண்டுப்புட்டே…உன்னைய இப்படி பாக்கையில என் ஈர குலையே நடுங்கிப்போச்சு பாப்பா” என்று கரகரப்பான குரலில் உரைத்து அவளின் கரம் பற்றிய மாமனின் ஸ்பரிசத்தில் பெண்ணவளின் மேனி சிலிர்த்தது.

முதன்முறையாய் அவனாக உரிமையாய் வந்து அவளின் கரம் பற்றியதில் நெஞ்சம் நெகிழ்ந்து அவனது கரத்தை இறுகப்பற்றியவள்,அவனின் முன் வைத்த முதல் கோரிக்கையே “மாமா என்னை உன்னோட கூட்டிப்போறீயா?” என்பது தான்!

பிறந்த வீட்டில் எத்தனை துன்பங்கள் அனுபவித்திருந்தால் இப்படியொரு வார்த்தை அவளின் வாயிலிருந்து வரும் என்பதை அறிந்தவனிற்கு இதயத்தில் உதிரம் கசிந்தது‌.

அதனால் அவளின் முகம் நோக்கி குனிந்தவன் “இதுக்கு மேலையும் உன்னைய அங்க விட எனக்கு என்ன கிறுக்காப்புடுச்சிருக்கு…இனி என்ன நடந்தாலும் சரி,இந்த ஆஸ்பத்திரிய விட்டு வெளிய வரும் போது நீ என் பொஞ்சாதியா நேரா நம்ப வூட்டுக்குதேன் வர” என திடமான வாக்குறுதியை கொடுத்தான்‌.

அதனை சற்றும் எதிர்ப்பாராத பாவையவளின் முகத்தில் பல வர்ண ஜாலங்களின் அணிவகுப்பு!!

கண்கள் இரண்டும் விரிய “நிஜமாவா மாமா?” என குதுகலித்தவளின் உடலில் இழந்த புத்துணர்வு மீண்டு வந்தது போல் இருந்தது.

அவனோ அவளின் கரத்தை இறுகப்பற்றி “நிசம்தேன் பாப்பா” என கண்களில் கண்ணீரோடு இதழில் முறுவல் போட்டிப்போட தலையசைத்தான்.

பெண்ணவளிற்கோ அவளின் கனவு கை சேர்ந்த நிம்மதியில் உள்ளம் உவகையில் ஆர்ப்பரிக்க கண்ணிலிருந்து நீர் வழிய வாயடைத்துப்போனாள்.

‘கடவுளே…நான் நினைச்சது நடக்கப்போவுதா?இது நிசமா இல்ல கனவா?’ என இப்போதே படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்து ஒரு குத்தாட்டம் போட உடலின் ஒவ்வொரு அணுவும் பரபரத்தாலும் அவளின் மேனி ஒத்துழைக்காததினால் சந்தோஷத்தில் “மாமா…மாமா” என அடுத்த வார்த்தை வாயிலிருந்து வராமல் உணர்ச்சிவசத்தோடு திணறிப்போனாள்.

அவனோ மென்னகை புரிந்து “இனிமேட்டுக்கு உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது பாப்பா…உன்னைய என் குழந்த மாதிரி கண்ணுக்குள்ள வைச்சு பாத்துக்கிறேன்…அழக்கூடாது” என சிறுப்பிள்ளைக்கு கூறுவது போல் தனது முரட்டு விரல் கொண்டு கண்ணீர் துடைத்தான்.

பாவையவளோ கண்களில் நேசம் மிளிர “நீ இருக்கும் போது நான் ஏன் அழப்போறேன் மாமா” என அவனின் கரத்தை தன் கன்னத்தோடு வைத்து அழுத்தி கூறியவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

ஆனால் ஆடவனோ அவளின் கவனம் கவராமல் தன் கரத்தை அவளிடமிருந்து பறித்துக்கொண்டு “களைச்சு தெரியற…ஓய்வு எடு பாப்பா” என ஆதுரத்துடன் கூற,

மதிவதனியோ தன் மாமனை திருமணம் செய்துக்கொள்ள போகும் மகிழ்ச்சியில் “சரி” என தலையசைத்து இதழில் உறைந்த புன்னகையுடன் உறங்கிப்போனாள்.

அவளை சில நிமிடங்கள் அசையாமல் நோக்கியவனின் கண்களில் ஒரு தந்தைக்குரிய வாஞ்சையும் ஒரு சகோதரனுக்கு உரிய பாசமும் ஒரு தாயிற்கு உரிய அன்பும் மட்டுமே மிளிர்ந்ததே ஒழிய,தன்னவளுக்கான ஈர்ப்போ, நேசமோ, ஆசையோ எதுவும் தென்படவில்லை.

ஏனெனில்,காளையன் மதிவதனியை சிறையிலிருந்து மீட்டு வரப்போகும் ஒரு மூலத்தனமாக மட்டுமே இந்த திருமண பந்தத்தை எதிர்நோக்கினான்.

ஆனால் பெண்ணவளோ திருமணத்திற்கு உரிய பல வகையான எதிர்ப்பார்ப்புகளுடனும் ஆடவனின் காதலை எதிர்நோக்கியுமே இந்த புது உறவை ஆவலாக வரவேற்க காத்திருக்க,அவளுக்கு கிடைக்கப்போவது ஏமாற்றம் மட்டுமே என்பதை அந்நொடி அவள் அறியவில்லை‌.

‘காளையவன் சேயென்றான்…

மதியவள் தலைவனென்றிருக்க…

இறையவன் பொம்மையென்றான்…

விதியவன் காலனின் சிறையிலிருக்க…

முற்று பெறப்போகும் அத்தியாயங்களின் முடிவு பாசமா?நேசமா??’

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
USD United States (US) dollar
Scroll to Top