சிறை 2

சிறை 2:

கார்த்திக்கின் நிறுவனம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால்,அன்றே மனைவியை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்துவிட்டிருந்தான்.

மணமக்கள் இருவரின் இல்லமும் சென்னைக்கு வெளியே புறநகரில் இருப்பது,இவனிற்கு வசதியாகிப்போனது.

இதைப்பற்றி முன்பே தெரிவித்திருந்ததால்,இருவீட்டின் பெரியவர்களும் புதுமண தம்பதிகளுக்கு தனிமை கொடுக்க எண்ணி,முதலிரவு அறைக்கு தாரிகாவை அனுப்பியதோடு தங்கள் இல்லம் புறப்பட்டுவிட்டனர்.

இரவில் தன் எதிர்க்கால வாழ்வை பற்றிய துக்கத்தோடு கண்ணயர்ந்த தாரிகா,காலையில் தன் அலைப்பேசியின் மணியோசை கேட்டே கண்விழித்தாள்.

அதன் சப்தத்தில் விழித்த கார்த்திக்கும் கையை தூக்கி சோம்பல் முறித்தப்படி “குட்மார்னிங் தாரிகா” என அவளை பார்த்து புன்னகைக்க,

அவளும் பதிலுக்கு “குட்மார்னிங்” என வேண்டா வெறுப்பாக முணுமுணுத்தவாறே எழுந்து சென்றாள்.

‘சரியான‌ ஏத்தம் புடிச்சவாள்’ என பல்லைக்கடித்தவன்,

சடுதியில் தலையை உலுக்கி ‘ஏய் கார்த்தி…கொஞ்சம் பொறு…அவ சின்னப்பொண்ணு பயத்தில் என்ன பண்ணறதுனு தெரியாமல் பண்ணிட்டு இருக்காள்…இன்னைக்கு எப்படியாவது அவகிட்ட பேசி பயத்தை போக்கிடு’ என தனக்கு தானே உரைத்து சிகையை அழுந்தக்கோதி குளியலறைக்குள் நுழைந்தான்.

அலைப்பேசியின் வழியே தாய் உரைத்தது போல்,பெண்ணவளும் அவர்களது அறையில் இருந்த குளியலறையில் குளித்துவிட்டு வந்து பூஜையறையில் விளக்கேற்றி வணங்கினாள்.

அவளின் தாய் ஒவ்வொரு வேலையாக சொல்ல சொல்ல பரபரப்புடன் அனைத்தையும் செய்துக்கொண்டிருந்த மனையாளை கண்ணெடுக்காமல்  பார்த்திருந்தான் கார்த்திக்.

எந்த வித அலங்காரமுமின்றி,நெற்றியில் வைத்த குங்குமம் பளீச்சென்று மின்ன,கழுத்தில் புது மஞ்சள் கயிறு பளபளக்க,சிவப்பு நிற டிசைனர் பட்டுப்புடவையில் தலையிலிருந்த நீர் சொட்ட சொட்ட நடமாடியவளின் தோற்றம் கண்ணிற்கு குளிர்ச்சியாய் இருந்தது.

அவ்வப்போது தலையில் தட்டி இதழை சுழித்து வேலைச்செய்யும் அவளின் பாங்கும் ஆடவனின் மனதை கொள்ளை கொண்டது.

‘ஷப்பா…தக்காளி மாதிரி செம்ம அழகா இருந்து கொல்லறாளே’ என உஷ்ண பெருமூச்சை வெளிவிட்ட ஆடவனின் உணர்வுகள் தறிக்கெட்டு ஓடியது.

ஆனால் தனக்குள் எடுத்த பிரமாணத்தின் படி,தன் உணர்வுகளை முயன்று கட்டுப்படுத்தி,அவளை நோக்கினான்.

தாரிகா பணிகளை செவ்வனே செய்தாலும்,அவளின் முகம் களையிழந்திருப்பதை புருவம் சுருக்கி பார்த்தவன் ‘இவளுக்கு என்ன பிரச்சனை?நேத்திலிருந்து இப்படி தான் இருக்காள்’ என சிந்தித்து,அவளிடம் அதைப்பற்றி பேசவும் விளைந்தான்.

ஆனால் அதற்குள் இருவீட்டின் உறவினர்களும் வந்துவிட,அத்தனை நேரமும் சோர்ந்திருந்த அவளது முகம் மலர்ந்து விகசித்தது.

அதை கவனித்த கார்த்திக் ‘ஓ…இவளுக்கு என்னை பார்த்தா மட்டும் தான் கசக்குதா?’ என கடுப்புடன் எண்ணியவன்,தனது உள்ளக்கிடங்கை வெளிக்காட்டாமல் அடக்கி,அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றான்.

வீடு முழுவதும் உறவினர்கள் நிரம்பி வழிந்ததால்,அவனால் மனைவியிடம் தனித்து பேச முடியவில்லை.

இந்நிலையில் மகளிற்கான சீர்வரிசையை கொண்டு வந்து இறக்கிய மாமனார் மறு வீட்டு விருந்துக்கு அழைப்பு விடுக்கவும்,

எந்த வித அலட்டலுமின்றி “கண்டிப்பா வர்றோம் மாமா” என உறுதியளித்தான் அவன்.

காந்திமதியும் மருமகனிடம் ஓரிரு வார்த்தைகள் சம்பிரதாயமாக உரையாடிவிட்டு,அங்கிருந்த மற்ற பிற சொந்தக்காரர்களிடம் அளவளாவத்தொடங்கிவிட்டார்.

மகளிடம் தனித்து பேச சந்தர்ப்பம் கிடைக்காததால் மற்றவரின் முன் பொதுவாக நலன் விசாரித்து,ஒதுங்கிவிட்டார்.

அதில் பாவையவளிற்கு வருத்தம் தோன்றினாலும்,நிதர்சனம் புரிந்து மௌனமாகினாள்.

அதுமட்டுமின்றி புது மண தம்பதியினர் இருவரையும் அனைவருக்கும் காட்சிப்பொருளாக்கும் விதமாக,வரவேற்பறை நீள்விரிக்கையில் அமர வைத்து அழகு பார்த்தனர்.

கணவனின் அருகே அமர்வது அவளிற்கு ஒரு சேர சங்கடத்தையும்,கவலையையும் தோற்றுவித்தது.

அச்சமயம் அவனிற்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர “ஒரு நிமிஷம் பேசிட்டு வந்திடறேன் இரு” என அவளின் அனுமதிப்பெற்று,அலைப்பேசியில் உரையாடியவாறே தன்னறைக்கு சென்றான்.

அவள் ‘ஹப்பாடா’ என மூச்சு விடுவதற்குள் அந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த இளம்பெண்கள் தாரிகாவை சுற்றிவளைத்து கேலிச்செய்ய தொடங்கினார்கள்.

தாரிகாவோ ‘இவளுங்க வேற?இங்க பேட்ஸ்மேன்னுக்கே வழியில்லை…இது தெரியாம வெந்தப்புண்ணில் வேலை பாய்ச்சறாங்க’ என உள்ளுக்குள் பொருமியவள்,வெளியே முகம் மாறாமல் இருக்க அரும்பாடுப்பட்டாள்.

அவனது அத்தைப்பெண் ஸ்ருதியோ “நிலா காயுது நேரம் நல்ல நேரம்” என்று கேலியாக பாட்டு பாடி,எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற,

‘அடியே!என்னை நைட் அலற வைச்ச  புண்ணியவாதி நீ தானாமா?நீ மட்டும் என் கையில் தனியா சிக்கு…உன்னை பிச்சு காக்காய்க்கு போட்டறேன்’ சரமாரியாக அவளை வசைப்பாடி முறைத்தவளை “என்ன பாப்பா?நைட் முக்கியமான சமயத்தில் டிஸ்ட்ர்ப் பண்ணிட்டேன்னு முறைக்கிறீயா?” என அதற்கும் அவள் பேச,

உள்ளுக்குள் கொதித்தாலும் மௌனமாக இதழ்கடித்து தலைக்குனிந்தாள்.

அவளை அந்த கூட்டத்திலிருந்து காக்கும் ஆபத்பாந்தவனாய் அங்கு வந்து சேர்ந்தான் கார்த்திக்.

“வீட்டில என் மாமன் சம்பாதிச்சு போடற கொழுப்பாடி?ஏத்தம் புடிச்சவளே” என ஸ்ருதியின் காதைப்பிடித்து அவன் திருக,

அவளோ “ஆஆஆ” என வலியில் அலறி துள்ளிக்குதிக்க,

“என் பொண்டாட்டிய நான் இல்லாதப்பே கலாய்ப்பியா?” என கேட்டவாறே மனைவியின் முகம் வாடியிருப்பதை பார்த்து அவளின் தலையில் கொட்டு வைத்தான்.

கணவன் தனக்கு ஆதரவாக பேசியது புண்பட்ட நெஞ்சிற்கு இதமளித்தது போல் இருக்க,

அவனை கண்கள் பனிக்க அவள் நோக்க “ரொம்ப ஓட்டிட்டாங்களா தாரிகா?” என்று ஆதுரத்துடன் கேட்டவனின் விழிகளும் மனைவியை பரிவோடு வருடியது.

அதைக்கண்ட மற்றைய இளம் பெண்களோ “ஓ” என கூச்சலிட,

ஸ்ருதியோ பாட்டு பாடவே தொடங்கிவிட்டாள்.

“கார்த்திக் மச்சான் வொய்ப்கிட்ட கவுந்திட்டாரு டும் டும் டும்…கார்த்திக் மச்சான் வொய்ப்கிட்ட கவுந்திட்டாரு டும் டும் டும்” என கண்சிமிட்டி தாளம் தட்டி பாட்டு பாட,

அவளிற்கோ அதில் வெட்கம் பிடிங்கி தின்க,தலைக்குனிந்தவளின் முகச்சிவப்பை ரசித்தவாறே “ஏய் சும்மா இருக்கமாட்டிங்களா?” என அதட்டலாய் கேட்டுக்கொண்டே தன்னவளருகே வந்தமர்ந்தான் கார்த்திக்.

“இன்னா மாமா?பொண்டாட்டிய ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சு இருக்கமாட்டிங்களா?” என அதற்கும் அவர்கள் கேலிப்பேச,

இவளிற்கோ பூமிக்குள்ளே புதைந்திடுவது போன்ற உணர்வு தோன்ற,பெரும் அவஸ்தையோடு நெளிந்த மனைவியின் நிலையறிந்த கார்த்திக் “அம்மா…அம்மா” என தாயை கத்தியழைத்தவன்,

“என்ன சாமி” என்று வந்தவரிடம் இளம் பெண்களை சுட்டிக்காட்டி “அம்மா இந்த வானரங்களை மொதல்ல இங்கிருந்து அனுப்புங்க…தாரிகா அன் ஈஸியா ஃபீல் பண்ணறாள்” என்று மனைவிக்காக பரிந்து சொன்னான்.

அதற்கும் “ஓ…” என பெரிதாக கூச்சலிட்டவர்களை “ஹே சின்னவன் எல்லாருக்கும் ஐஸ்கீரிம் வாங்கித்தரானாம்…யாருக்கு வேணுமோ…போங்கடி” என அவர்களை தனது சிறிய மகனிடம் விரட்டி விட்டார்.

அவர்கள் சென்றதற்கு பிறகு மருமகளை சங்கடமாக நோக்கி “எல்லாம் என் அண்ணன் பொண்ணுங்க தாரிகா…ரொம்ப செல்லமா வளர்ந்திட்டாங்க…நீ எதுவும் தப்பா நினைக்காதம்மா” என்று சொல்ல,

அதில் பதறிப்போய் தலை உயர்த்திய தாரிகா “ஐய்யோ அத்தை…கொஞ்சம் ஒரு மாதிரி வெட்கமா இருந்துச்சு…மத்தப்படி தப்பாவெல்லாம் நினைக்கலை” என அவசரமாக கூறினாள்.

வெளியே அவ்வாறு கூறினாலும் ‘இத்தனை மாமா பொண்ணுங்க இருந்தும் என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு?ஒரு வேளை அவங்க வாழ்க்கையெல்லாம் நாசமாகக்கூடாதுனு என்னை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?’ என அவளின் மனம் குதர்க்கமாகவும் எண்ணியது.

புது மருமகள் அவர்களை தவறாக கருதிவிடுவாளோ என எண்ணியிருந்த ஆதிலட்சுமி,அவளின் பதிலில் ஆசுவாசமடைந்தார்.

தன் மருமகளின் நற்குணத்தை எண்ணி பூரித்து “என் தங்கம்” என அவளின் முகத்தை வழித்து நெட்டி முறித்தவர்,

“கண்ணு குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லட்டுமா?” என கனிவுடன் வினவ,

“அச்சோ அத்தை…இப்போதான் கல்யாணமான பொண்ணு நிறைய சாப்பிடணும்னு சொல்லி ஒரு தட்டு நிறைய பலகாரத்தை சாப்பிட வைச்சாங்க எங்க அம்மா…இதுக்கு மேல நம்மால் முடியாதுப்பா” என உணவு உண்ண அஞ்சி வயிற்றை பிடித்து மிரண்டவளை கண்டவருக்கு சிரிப்பு வந்தது.

அவரோ “நல்லா சாப்பிட்டா தான் கண்ணு பின்னாடி புள்ளைய சுமக்க வலுவிருக்கும்” என வெகு சாதாரணமாக கூறவிட,இவளிற்கோ ஒரு நொடி முகம் சுருங்கி பின் சகஜமானது.

‘அத்தை உங்க பையன் நிலைமை உங்களுக்கு தெரிஞ்சா இப்படியெல்லாம் பேசமாட்டிங்க’ என உள்ளுக்குள்ளே அவரிடம் கேட்டவளிற்கு நெஞ்சமடைத்தது.

வாழ்வில் தோற்ற உணர்வு அவளை ஆட்கொள்ள,

அவள் முகம் சோர்வுற்றிருந்ததை கவனித்த கார்த்திக் “அம்மா அவளை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க” என மென்மையாக கடிய,

அதில் சிரித்தவர் “சரி…சரி உன் பொண்டாட்டிய நான் ஒண்ணும் சொல்லலை சாமி…நீங்க போய் ஓய்வெடுக்கறதுனா எடுங்க” என்று கூறிய அடுத்த வினாடியே,

அவளிடம் பேசுவதற்கு சந்தர்ப்பம் வேண்டி காத்திருந்தவன் உடனே எழுந்துவிட்டான்.

காரிகையோ “இல்லை அத்தை இங்கே…” என்றவளின் பேச்சு கணவனின் செயலில் பாதியில் தடைப்பட்டுப்போனது.

அவனின் வேகத்தை பார்த்து உறவின பெண்கள் எல்லாம் சேர்ந்து “மாப்பிள்ளைக்கு ரொம்ப தான் அவசரமோ?” என கலகலத்து சிரிக்க,

கார்த்திக்கோ சங்கடமாக முகம் சிவக்க தலையை அழுந்தக்கோதி “ரூமுக்கு வா தாரிகா” என குனிந்து அவளிடம் முணுமுணுத்துவிட்டு, அறைக்குள் சென்று மறைந்தான்.

இவளோ ‘இந்த மனுசனோட ஒரே ரோதனை…அங்கப்போயும் சும்மா தான் இருக்கப் போறாரு..இவங்க என்னவோ நாங்க உள்ளப்போய் ஜல்சா பண்ணற மாதிரி சிரிச்சு கடுப்பேத்தறாங்க’ என அனைவரையும் வசைப்பாடி எரிச்சலோடு அமர்ந்திருக்க,

“ஏன்டி மாப்பிள்ளை கூப்பிடறாரு…உள்ள போகலையா?” என அவளின் தாய் வேறு சத்தமாக கேட்டு வைக்க,கூட்டத்தில் மீண்டும் சிரிப்பலை ஒன்று எழுந்தது.

‘கடவுளே!என் மானமே போச்சு’ என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக “இதோ போறேன்” என அவசரமாக அங்கிருந்து ஓடிவிட்டாள்.

இவர்கள் இருவரும் ஆதர்ஷ தம்பதியினர் போல் எண்ணி மற்றவர்கள் கிண்டலாக சிரிக்க,இவளிற்கோ கடுப்பாக வந்தது.

அதே சினத்துடன் “எதுக்கு என்னை கூப்பிட்டிங்க?” என சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டு உள்ளே வந்தவளிடம் “கதவை லாக் பண்ணிட்டு வா சண்டைக்கோழி” என குறும்புடன் சிரித்தவாறே கார்த்திக் கட்டளையிட,

‘ஏற்கனவே நாங்க பர்ஸ்ட் பகல் கொண்டாடற மாதிரி அங்க எல்லாரும் ஓட்டிட்டு இருக்காங்க…இதில இந்த மனுஷன் வேற’ என பல்லை கடித்து நொந்துக்கொண்டு கணவனை முறைத்தாள்.

கண்ட நாள் முதலாய் இன்று வரை மௌனமாய் மட்டுமே தன்னிடம் நடந்துக்கொண்டவளின் தற்போதைய செல்லக்கோபம் அவனிற்குள் உற்சாகத்தை கொடுத்தது.

அதனால் வம்பிழுக்கும் விதமாக அவளின் பின்புறம் இருந்த கதவை சுட்டிக்காட்டி “உள்ள என்ன நடக்குதுன்னு கதவு இடுக்கு வழியே அந்த வானரக்கூட்டம் பார்த்திட்டு இருக்கு…அதை வைச்சு உன்னை தான் கலாய்ப்பாங்க…எனக்கென்ன?” என்று சொல்லி,

அவன் அலட்சியமாய் தோளை குலுக்க,

“ஏதே…மறுபடியுமா?” என நெஞ்சை பிடித்து அதிர்ச்சியானவள்,அவசரமாக கதவை சாற்றி தாளிட்டாள்.

அவளின் மின்னல் வேகம் ஆடவனின் இதழில் சிரிப்பை வரவழைக்க,அதை இதழுக்கடியில் மறைத்தவன் “தாரிகா இங்க வா” என மெத்தையில் தன்னருகே வந்து அமருமாறு சைகை காட்டினான்.

‘ஹப்பாடி தப்பிச்சேன்’ என ஆசுவாசப் பெருமூச்சு விட்டு நெஞ்சை நீவியவள்,கணவன் அருகழைக்கவும்,ஒரு நொடி தயங்கினாள்.

ஆனால் அடுத்த வினாடியே ‘கணவன் சொல்லப்படி நடக்கவேண்டும்’ என தாய் கூறியது நினைவில் எழ,தலையை உலுக்கி அவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அருகமர்ந்தாள்.

சடுதியில் அவள் முகம் உம்மென்று மாறிட நேற்று போல் கடமையென தலைக்குனிந்து அமர்ந்திருந்தவளை கண்ட கார்த்திக் ‘மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா?’ என புருவம் சுருக்கியவனிற்கு ஆயாசமாக வந்தது.

‘இவளுக்கு என்ன தான் பிரச்சனை?’ என சில நிமிடங்கள் அவளையே அவன் ஆழ்ந்து பார்த்திருக்க,

அவன் எதுவும் பேசாமல் இருப்பதினால் கடுப்பாகி குனிந்த தலை நிமிராமலே “எதுக்கு என்னை உள்ள கூப்பிட்டிங்க?” என முனகலாய் வினவ,

சட்டென அவள் எதிர்ப்பாராத வேளையில் கைப்பிடித்து அவளை தன் புறமாக திருப்பி அமர வைத்திருந்தான் ஆடவன்.

அவளோ திகைப்பில் விழி விரித்து அவனை ஏறிட “நைட்டலாம் தூங்கலையா?” என அக்கறையோடு கேட்டவன்,அவளின் கண்ணிற்கு கீழே இருக்கும் கருவளையத்தை கட்டை விரலால் மென்மையாய் அழுத்தி நீவி விட்டான்.

முதன் முறையாய் ஒரு ஆண்மகனின் உரிமையான தீண்டல்!

அதிலும்,அவளது அகமுடையானின் தீண்டல்!

அவளின் தேகம் சிலிர்க்க இதயம் படபடக்க,அவளால் அவனை நேருக்கு நேர் சந்திக்க இயலவில்லை.

அதனால் நாவால் இதழை வருடி தலைக்குனிய போனவளின் இதழ் வளைவை பார்த்தவனின் தேகமோ கிளிர்ந்தது.

பதட்டமாக இருக்கும் போது அவள் செய்யும் அதே சைகை!

அதிலும்,உமிழ்நீரில் மினுமினுத்த அதரமும் வாயிலிருந்து வெளிவந்த சிவந்த கூர் நாக்கும் ஆடவனின் உணர்ச்சியை தூண்டிக்கொண்டிருந்தது.

‘ஓ மை காட்’ தனக்குள்ளே பேயாட்டம் போட்ட உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமல் அவளின் தாடையை பற்றி நிமிர்த்தியவன்,அவளின் மதிமுகம் நோக்கி குனிந்தான்.

பெண்ணவளிற்கு அவனது நெருக்கம் அடிவயிற்றில் பட்டாம் பூச்சியை பறக்க வைக்க,இமைகள் பதட்டத்தில் மூடியது.

அவளின் படபடப்பை கண்டு இறுதி நொடியில் தன்னை சுதாரித்தான் கார்த்திக்.

அப்போதும் தாப உணர்ச்சிகள் உச்சம் பெற்றதின் விளைவால் தன்னை கட்டுப்படுத்த இயலாமல்,அவளின் பிறைநுதலில் தன்னிதழ் பதித்தான்.

நெற்றியில் முத்தமிட்டு விலகிய கார்த்திக் சிகையை அழுந்தக்கோதி “வெளியே நீ சங்கடமா பீல் பண்ணே…அதான் உன்னை உள்ள கூப்பிட்டேன்…நீ வேணும்னா தூங்கி ரெஸ்ட் எடு…நான் வரேன்” என்று வேகமாக கூறியவன்,அவள் விழி திறப்பதற்கு முன்பே அறையின் கதவை திறந்துக்கொண்டு வெளியேறியிருந்தான்.

அவன் வெளியே சென்றவுடன் விழி திறந்து அவன் முத்தமிட்ட நெற்றியை தொட்டு பார்த்தவளிற்கு,இப்போதும் அவனது இதழ் ஸ்பரிசம் அவ்விடத்தில் இருப்பது போல் குறுகுறுத்தது.

‘அச்சோ’ என நாணத்தில் முகம் சிவக்க இதழை நாவால் வருடி புன்னகைத்தாள் அவள்.

ஆனால் படீரென்று அவனின் உடல்குறை உறைக்க,அவளின் புன்னகை மறைந்தது.

‘தாரிகா கூல்…அவர் நிலைமைக்கு முத்தம் மட்டும் தான் தரமுடியும்…வேற எதுவும் செய்யமுடியாது’ என்று உஷ்ணப்பெருமூச்சுடன் எண்ணி,படுக்கையில் விழுந்தாள்.

முதலிரவு அன்று அவனளித்த தன்னிலை விளக்கத்தை செவிச்சாய்த்து கேட்டிருந்தால்,இவ்வாறு தனக்குள்ளே மருக வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

அத்தோடு இப்பொழுதும் அவள் மனதில் உறுத்திய விடயங்களை பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசியிருந்தால்,அவளின் மனக்கிலோசத்தை இன்றே நிவர்த்தி செய்திருப்பான் அவன்.

ஆனால் விதியின் சதியோ அல்லது அவனவளின் அலட்சியமோ?

இரண்டில் ஏதோ ஒன்று அவர்களுக்குள் கண்ணிற்கு புலப்படாத ஒரு விரிசலை ஏற்படுத்தியிருந்தது.

புரிதலின்றி சந்தேகத்தில் தொடங்கிய இவர்களது பந்தம் நீடித்து நிலைக்குமா?

 

 

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top