சிறை 1

அதுவொரு முதலிரவு அறை!

திருமணமாகிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஆவலோடு எதிர்ப்பார்க்கக்கூடிய ஆத்மார்த்தமான நிமிடங்கள்!

அவ்வறையின் வலதுப்புறத்தில் உள்ள கண்ணாடி திரையின் வழியே  தெரிந்த நிலா மகள் தேவதையென மிளிர்ந்துக்கொண்டிருக்க,உட்புறம் ஊதுபத்தியின் மணம் நிறைந்து ஒரு ஏகாந்த நிலையை உருவாக்கியிருந்தது. 

மனம் மயக்கும் அவ்வேளையில் சல்லாபத்தில் ஈடுப்பட வேண்டிய புதுமண தம்பதியினரோ கட்டிலில் ஆளுக்கொரு புறமாக திரும்பிப்படுத்திருந்தனர்.

அச்சமயம் அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல்,

“நிலா காயுது நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்” காமதேவனின் மோக ரசம் சொட்டும் பாடல் அறையெங்கும் கணீரென்று ஒலிக்க,

திடீரென்று ஒலித்த அந்த பாடலை கேட்டு திடுக்கிட்ட கணவனும் மனைவியும் பதறியடித்து எழுந்தார்கள்.

மலங்க மலங்க விழித்தவாறு  மணாளனை நோக்கிய தாரிகாவின் தலையை வருடி “ஈஸி தாரிகா…என் அத்தை பொண்ணு ஸ்ருதி வேலையா இருக்கும்” என அவளிற்கு விளக்கமளித்தவாறே எழுந்து சென்றான் கார்த்திக்.

‘பர்ஸ்ட் நைட் அதுவுமா என் மானத்தை வாங்கறா’ என பல்லைகடித்து அத்தை மகளை திட்டிக்கொண்டே,விளக்கை உயிர்ப்பித்தவனின் கூரிய விழிகள் அறையை ஒரு முறை பார்வையால் அலசியது.

இறுதியாக,அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அலைப்பேசியை கண்டறிந்து,அவசரமாக வந்த அழைப்பை துண்டித்தான்.

அதுவரை கணவனது செயல்களை இமைகள் படபடக்க ஒரு வித சங்கடத்துடன் அவள் பார்த்திருக்க,அதில் மெல்லியதாக புன்னகைத்த கார்த்திக்,

அலைப்பேசியை அவளின் முன்பு காட்டி “பாட்டை ஆஃப் பண்ணியாச்சு…இனிமேல் நிம்மதியா தூங்கு” என சொல்லி விளக்கணைத்தான்.

அதற்கு “ம்” என முணுமுணுத்தவள்,வேறு எந்த வித உணர்வையும் காட்டாமல் அவனிற்கு முதுகுக்காட்டி படுத்துவிட்டாள்.

திருமணத்திற்கு முன்பு கூட அவனிடம் சகஜமாக உரையாடியவள்,தற்போது ஒரு வார்த்தை பேசுவதற்கே பஞ்சமாகிப்போனதை கண்ட கார்த்திக்கின் புருவம் நெரிந்தது.

இந்த அறைக்குள் வந்த நொடியிலிருந்து அவளது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் விசித்திரமாக இருப்பதை அவதானித்தவன் ‘இவளிற்கு என்ன பிரச்சனை?’ என யோசனையோடு படுக்கையில் விழுந்தான்.

திரும்பி அவளை நிதானமாக நோட்டமிட்டவனால் புது இல்லாளின் மனதிலிருப்பதை கண்டறிய முடியவில்லை.

அவளை எழுப்பி ‘என்ன?’ என்று கேட்டுவிட உள்ளம் பரபரத்தாலும், திருமணமாகிய முதல் நாளே அவளை பயமுறுத்த விரும்பாமல் பெருமூச்சுவிட்டவன்,சிறிது நேரத்தில் களைப்பில் கண்ணயர்ந்தான்.

அவனருகே படுத்திருந்த தாரிகாவோ இவர்களது திருமணம் நடைப்பெற்ற சூழ்நிலையைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

இவர்கள் இருவரது திருமணமும் பெற்றோரால் ஜாதகம் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம்!!

கார்த்திக் குமார் 26 வயது வாலிபன்,ஒரு பிரபலமான ஐடி நிறுவனத்தில் டீம் லீடராக பணிப்புரிந்து கொண்டிருக்கிறான்.

அவனின் தந்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட தாயும் ஒரு சகோதரன் மட்டுமே அவனிற்கு உறவாக இருந்தார்கள்.

தாரிகா 21 வயது கன்னிகை.

பொறியியல் கல்லூரி படிப்பை இரண்டு மாதங்களுக்கு முன்பு முடித்த பட்டதாரி அவள்.

அவளது பெற்றோரான காந்திமதியும் மணிவண்ணனும் தாரிகாவிற்கு பின்பு இரண்டு பெண்பிள்ளைகள் இருப்பதினால்,அவளின் திருமணத்தை உடனடியாக நடத்திட முடிவெடுத்தார்கள்.

நடுத்தர குடும்பத்தின் நடைமுறை வழக்கத்தை தவறாமல் பின்பற்றியது,இவளின் குடும்பம்!

தாரிகாவிற்கு மேலே படிக்க ஆசையிருந்தாலும்,குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருமணத்திற்கு அரை மனதாக சம்மதித்தாள்.

ஆனால் பெண் பார்க்க முதன் முறையாக வந்த கார்த்திக்கை பார்த்தவளின் இதயம் நழுவி அவன் காலடியில் விழுந்துவிட்டது. 

ஏனெனில்,கார்த்திக் நல்ல உத்யோகஸ்தன்‌ மட்டுமல்ல,நல்ல அழகனும் கூட!

அடர்த்தியான கருமையான சிகை,இளகிய கண்கள்,மற்றவரை சிரிக்க அழைக்கும் உதடுகள்,கூரிய நாசி,கச்சிதமான உடற்கட்டு,இலேசாக வளர்க்கப்பட்ட தாடி,மீசை,நேர்த்தியான உடையலங்காரம்,பார்த்தவுடன் மற்றவரை கவர்ந்திழுக்கும் கம்பீரத்தோடு இருந்தவனை பெண்ணவளிற்கு பிடிக்காமல் இருந்தால் ஆச்சரியமே!!

அதனால் முழு விருப்பத்துடனே அவனுடனான திருமணத்திற்கு தலையாட்டிவிட்டாள்.

தாரிகா முதல் பார்வையிலே மற்றவரை ஈர்க்கக்கூடிய அழகு இல்லையென்றாலும்,அவளின் அமைதியான பாங்கும் நளினமும் கார்த்திக்கை ‘சரி’ என்று சொல்ல வைத்தது.

அவனிற்கு கூடிய விரைவில் அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவிருப்பதால்,தற்போது திருமணம் செய்துக்கொள்ளவதில் நாட்டமில்லை.

ஆனால் அவனின் தாய் ஆதிலட்சுமி ‘வெளிநாட்டிற்கு செல்லும் மகன் அங்கே வெள்ளைக்கார பெண்ணை பிடித்துவிடுவானோ?’ என்ற அச்சத்தில் விரைவாக இத்திருமணத்தை நடத்திட உத்தேசம் கொண்டார்.

வேண்டா வெறுப்பாக தாயின் வற்புறுத்தலால் பெண் பார்க்க வந்திருந்த கார்த்திக்கும் தாயிற்காக இத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான்.

இருப்பினும்,கார்த்திக் நடைமுறை அறிந்த ஒரு ஆண்மகன்.

அதனால் ‘இவள் தான் அவனுடைய மனைவி’ என உறுதியானதற்கு பிறகு,அவளை விலக்கி நிறுத்துவது சரியில்லை என்றெண்ணி,அவளோடு அலைப்பேசியில் உரையாட ஆரம்பித்திருந்தான்.

இயல்பாக இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு தோன்றி,அது காதலாக மலர வேண்டும் என்பது ஆடவனின் விருப்பம்!!

அதனை செயலாற்றும் விதமாக இருந்தது,அவனின் நடவடிக்கைகள்!

முதலில் அவனோடு அலைப்பேசியில் பேச தாரிகா நாணத்தில் தயங்கினாலும்,நாட்கள் செல்ல செல்ல அவனோடு ஓரிரு வார்த்தைகள் சகஜமாக உரையாடும் அளவு மாறியிருந்தாள்.

அதுவும்,அவளது தோழி சஞ்சனாவின் ஆலோசனையின் பெயரில் என்பது குறிப்பிடத்தக்கது.

தாரிகா சிறுவயதிலிருந்தே மற்றவரின் கரங்களுக்குள் வைத்து உலகம் அறியாமல் வளர்க்கப்பட்ட ஒரு பேதை பெண்.

யார் எதை கூறினாலும் அதனை அப்படியே நம்பி,செய்து முடிக்கும் குணமுடையவள்!

ஈன்றோரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மணமகனை நேரில் காண்பதற்கு முன்பே விருப்பமின்றி சம்மதம் தெரிவித்ததை போல்!!

பெற்றோருக்கு அடுத்தப்படியாக அவள் அதீத நம்பிக்கை கொள்ளும் ஒரு ஆள் என்றால் அவளின் கல்லூரித்தோழி சஞ்சனா.

‘வெள்ளைக்காக்காய் பறக்குதுடி’ என்று தோழி கைக்காட்டினால்,சிறிதும் மறுக்காமல் அவற்றை அப்படியே கண் மூடி நம்புவாள்.

ஒரு வேளை பணிக்காக தனித்து வெளியே சென்றிருந்தால் வெளி உலகம் தொடர்பான விபரங்களும் மற்றவரை எடைப்போட கூடிய பக்குவமும் அவளிற்கு வந்திருக்கலாம்.

அந்தோ பரிதாபம் என்பது போல்,அவளிற்கோ பெற்றோரும் அவளது தோழி சஞ்சனாவும் கூறுவதே,வேதவாக்கு!!

அனைத்தும் அவளின் நன்மைக்கே என்னும் அன்பு மாயை காரிகையின் சிந்தையை மழங்கடித்திருந்தது.

அவளை குறைக்கூறியும் குற்றமில்லை.

ஏனெனில்,சிறு வயதிலிருந்தே அவளது பெற்றோர் அவளை தங்களது கைச்சிறைக்குள்ளே வைத்து வளர்த்துவிட்டனர்.

சுருங்கக்கூறினால்,ஒரு பொம்மலாட்ட கைப்பாவை தான் அவள்!

இந்நிலையில் இரு வீட்டினரும் ஏற்பாடு செய்த திருமணமும் நன்முறையில் நடந்து முடிந்திட,பெண்ணவளை முதலிரவு அறைக்கு அனுப்புவதற்காக தோழிகள் அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவளது தோழிகளில் ஒருத்தியான தேவி “தாரி இங்கயெல்லாம் சொட்டையா இருக்கு…இரு நான் டச்அப் பண்ணிவிடறேன்” என்றவாறு அவளின் முகத்தை கைக்குட்டையால் திருத்த,

அதுவரை ஓரமாக நின்றிருந்த சஞ்சனா திடீரென்று “பியூஸ் போன பல்புக்கு இந்த மேக்கப்பே போதும்” என எரிச்சலோடு முகத்தை சுழிக்க,

அதைக்கேட்டு வெடுக்கென்று அவள் புறம் திரும்பிய தாரிகா “என்னடி சொல்லற?” என குழப்பத்துடன் வினவினாள்.

‘இவ ஒருத்தி’ என பல்லைக்கடித்த மணிமேகலை “அதெல்லாம் ஒண்ணுமில்லைடி…அவ ஒரு லூசு” என்றவள்,

அவளருகே வந்து “இந்த தோடு இதுக்கு செட்டாகலை…வேற போடுடி” என தாரிகாவை திசைத்திருப்ப முனைந்தாள்.

அதற்குள் தேவியோ கடுப்போடு “சனா சும்மா இருக்க மாட்ட நீ” என அடிக்குரலில் சீற,

அதில் கடுப்பாகி ‘ம்க்கும்…நல்லதுக்கே காலமில்லை’ என சஞ்சனா முகத்தை சுழித்து வேறுப் புறம் திரும்பிக்கொண்டாள்.

இவர்கள் அனைவரையும் ஒரு முறை பார்வையால் அளவிட்ட தாரிகா “என்ன பிரச்சனை சஞ்சு?” என நேரடியாக தன் உயிர் தோழியை பார்த்து வினவினாள்.

அவள் பதில் கூறுவதிற்கு முன்பே,அவசரமாக இருக்கையை சுற்றி தாரிகாவின் முன்னால் வந்து நின்ற தேவி “அதெல்லாம் ஒண்ணுமில்லை தாரி…நீ வா முதல்ல ரெடியாகு” என அவளின் கைப்பிடித்து இருக்கையில் அமர்த்த முயல,

வெடுக்கென்று அவளின்‌ கரத்தை தட்டிவிட்டு நொடியில் சஞ்சனாவை நெருங்கிய தாரிகா “சஞ்சு என்ன விஷயம்?” என அழுத்தமான குரலில் கேட்டாள்.

சஞ்சனாவோ முகம் சுருங்கி பதிலேதும் கூறாமல் தலைக்குனிய,அவளின் தாடையைப் பற்றி நிமிர்த்தியவள் “சஞ்சு நீ எது சொன்னாலும் என் நல்லதுக்கு தான் இருக்கும்…எதுவா இருந்தாலும் சொல்லுடி” என படபடத்த நெஞ்சத்தை அடக்கி,நிஜத்தை உரைக்குமாறு அவளை ஊக்கினாள்.

மீதமுள்ள அவர்களது தோழிகள் அனைவரும் சஞ்சனாவிடம் கண்ணால் ‘வேண்டாம்’ என கெஞ்சுக்கொண்டிருக்க,

தேவியோ தலையலடித்து ‘போச்சு..போச்சு…இந்த மலக்குரங்கு எல்லாத்தையும் போட்டு உடைக்கப்போகுது…என்ன செய்யறது?’ என தவிப்போடு கைகளை பிசைந்தாள்.

அவர்கள் எண்ணியது போலவே,சில வினாடி தாரிகாவின் முகத்தையே மௌனமாக பார்த்திருந்த சஞ்சனாவோ தொண்டையை செருமி “உன் வாழ்க்கையே நாசமாப்போச்சு தாரி..உன் புருஷன் கார்த்திக்…” என ஆதங்கமாய் தொடங்கும் போதே,

“ஏய் வாய மூடுடி” என தாவி வந்து அவசரமாக அவளின் வாயை பொத்தினாள் தேவி.

“தாரி இந்த பிசாசு இப்படி தான் தேவையில்லாமல் எதையாவது உளறிட்டு இருக்கும்” என படபடவென சொல்லி,

“சஞ்சு உன்ன ரொம்ப நேரமா ஆன்ட்டி தேடிட்டு இருந்தாங்க…வா போலாம்” என சஞ்சனாவை அங்கிருந்து தள்ளிக்கொண்டு செல்ல முயன்றாள்.

பட்டென்று தேவியின் கையில் ஒரு அடி வைத்த தாரிகா “கையை எடுடி முதல்ல” என சீறி,சஞ்சனாவை பற்றியிருந்த அவளின் கையை அகற்றிவிட்டவள்,

அவளை தீயாய் முறைத்து “ஏதோ சொல்ல வரவளை நீ எதுக்கு தடுக்கற?” என குரலுயர்த்தி அதட்டினாள்.

அவளது தோழிகளின் நடவடிக்கை சற்றே வித்தியாசமாக இருக்க,அது அவளிற்குள் பெரும் சந்தேகத்தை வரவழைத்திருந்தது.

அத்தோடு தன்னவனின் பெயர் இதில் அடிப்படவும்,அவளின் இதயம் ஏனென்றே அறியாமல் அசுரவேகத்தில் துடித்தது.

ஆயினும்,துடித்த நெஞ்சத்தை அடக்கி “சஞ்சு நீ என்கிட்ட எதுவும் மறைக்க மாட்டேன்னு நினைக்கிறேன்…உண்மைய சொல்லு” என தோழியிடம் கிடுக்குப்பிடி போல் கேட்கவும்,அவளும் வேறுவழியின்றி மடமடவென கார்த்திக் பற்றி தனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தையும் கொட்ட தொடங்கினாள்.

முதலில் அசூயையுடன் அதை கேட்க ஆரம்பித்தவள்,தோழி அனைத்தையும் கூறி முடிக்கையில்,தலையில் இடி இறங்கிய உணர்வில் உடைந்து தரையில் அமர்ந்துவிட்டாள்.

ஒரு கணவனால் தன் மனைவியோடு தாம்பத்தியத்தில் ஈடுப்பட முடியாது என்பதை அறிந்துக்கொள்ளும் எந்தவொரு பெண்ணால் தாங்க இயலும்.

அதிலும்,அவனை கண்ட கணத்திலிருந்து இல்லறம் பற்றிய பல வித கனவுகளோடு ஆசையாக காத்திருந்தவளின் தலையில் கூடைத்தணலை கொட்டியது போல் வலியில் துடித்துப்போனாள் அவள்.

சஞ்சனா இயல்பில் துடுக்குத்தனமான பெண்.அவளால் எந்த வித இரகசியத்தையும் மனதிற்குள் பூட்டிப்பாதுகாக்க இயலாது.

அதன்பொருட்டே,மற்றைய தோழிகள் அத்தனை தூரம் கண்டித்தும்,தாரிகாவிடம் அவள் கணவன் பற்றி அறிந்த விஷயங்களை உளறிவிட்டாள்.

உலகிலுள்ள ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் இழந்தது போல் வேதனையில் துடித்த பெண்ணவளை கண்ட மற்றைய தோழிகள் சஞ்சனாவை குற்றம்சாட்ட,அவளுமே ‘என்ன செய்வது?’ என அறியாமல் கலங்கிப்போய் நின்றிருந்தாள்.

அவளின் குணம் புரிந்ததினால் மற்றவர்கள் தாரிகாவை சமாதானம் செய்ய முயல,அதற்குள் அவளின் தாய் மகளை முதலிரவு அறைக்கு அழைத்து செல்ல வந்தார்.

அவரின் முன்பு எதுவும் பேச முடியாமல் அவர்கள் மௌனமாகிவிட,அவரோ மகளை தன்னோடு அழைத்து சென்றார்.

முதலிரவு அறைக்குள் நுழையும் முன் மகளின் முகம் இருண்டிருப்பதை கண்டு துணுக்குற்ற காந்திமதியோ சடுதியில் ‘இது தாம்பத்தியம் பற்றிய பெண்களுக்கே உரித்தான அச்சம்’ என தவறாக கணித்து “சிப்பிக்குள் இருப்பது முத்தா நண்டான்னு திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்…அதே மாதிரி தான்டி கல்யாண வாழ்க்கையும்…எதுவா இருந்தாலும் அனுபவிச்சு தெரிஞ்சுக்கணும்…ஒருவேளை உள்ளுக்குள் இருப்பது நண்டாவே இருந்தாலும்,அதை முத்தா மாத்தறது நம் சாமர்த்தியம்” என்று கூறி மகளின் தலையை பரிவுடன் வருட,

அவரது சொல்லில் முகம் தெளிந்து தலையை உயர்த்திய தாரிகாவை கண்டு மென்மையாக புன்னகைத்தவர் “தேவையில்லாமல் எதுக்கெடுத்தாலும் பயப்படாதேடி…உள்ள இருக்கிறது உன் புருஷன்…அவரை பார்த்து எதுக்கு பயப்படற?எங்களுக்கு அடுத்து உன்னை பத்திரமா பார்த்துக்கப்போறது அவர் தான்…அதனால் அவர் என்ன சொன்னாலும்‌ கேட்டு பதிவிசா நடந்துக்கோ” சரியான நேரத்தில் பெற்ற தாயாக மகளிற்கு தேவையான அறிவுரை வழங்கி,கலங்கியிருந்தவளின் உள்ளத்தை தெளிய வைத்து அனுப்பினார்.

தாயின் பேச்சில் இழந்த மகிழ்ச்சியை மீட்டெடுத்து உள்ளே நுழைந்தவளின் மனமோ ‘அம்மா சொன்ன மாதிரி எதுக்கு பயப்படணும்?எதுவா இருந்தாலும் அனுபவிச்சு தெரிஞ்சுக்கலாம்’ என தனக்கு தானே தேற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தவள்,கணவனை கண்டு மயங்கிப்போனாள்.

ஆண்மையின் இலக்கணத்தோடு பட்டு வேட்டி சட்டையில் கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்து அமர்ந்து அலைப்பேசியை பார்த்திருந்த கார்த்திக்கின் அழகில் சொக்கிப்போனவள் ‘எவ்வளவு மேன்லியா இருக்கார்…இவருக்கா அது வேலை செய்யாதுன்னு சொல்றாங்க…,கண்ணு தெரியாத கபோதி பசங்க’ சஞ்சனாவிடம் அவ்வாறு கூறிய அந்த முகமறியா நபரை வறுத்தெடுத்தாள்.

அதேநேரம் நாளை சஞ்சனாவிடம் இதுக்குறித்து விரிவாக பேச வேண்டும் என்று உறுதியான முடிவெடுத்து,கட்டிலை நோக்கி புன்னகையுடன் நடந்தாள்.

ஆனால் அவளின் உறுதியும் மகிழ்ச்சியும் அடுத்ததாக கணவன் பேசிய வசனத்தில் உடைந்து நொறுங்கிப்போயிருந்தது.

அறைக்குள் மனைவி வந்துவிட்டதை அறிந்து அலைப்பேசியை கீழே வைத்தவன்,அவளை தன்னருகே அமருமாறு பணித்தான்.

பெண்ணவளும் வெட்கத்தில் தலைக்குனிந்தவாறு கட்டிலில் அவனருகே அமர்ந்தவுடன் நீண்டதொரு பெருமூச்சை வெளியிட்ட கார்த்திக் “தாரிகா இன்னைக்கு பர்ஸ்ட் நைட் நடக்க வேணாம்” என அவளிடம் சொல்லியிருந்தான்.

அதைக்கேட்டு விலுக்கென்று தலையுயர்த்தியவள் ‘அப்போ சஞ்சு சொன்ன எல்லாமே உண்மையா?’ என தலையில் இடியிறங்க சித்தம் கலங்கி அமர்ந்திருக்க,

அவளின் நிலையறியாத கார்த்திக்கோ தன்னுடைய அத்தகைய முடிவிற்கான காரணத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்துக்கொண்டிருந்தான்.

இறுதியாக “தாரிகா உனக்கும் இந்த முடிவு ஓகேவா?” என கேட்டுதற்கு பிறகே நிகழ்விற்கு வந்தவள் ‘என்ன’ என ஒன்றும் புரியாமல் அவனை பார்த்து திருதிருவென விழித்தாள்.

அவனோ நெற்றி சுருங்க “உனக்கும் இது ஓகே தான தாரிகா?” என அவளை ஆழ்ந்து பார்த்து கேட்க,

அவளோ ‘ஓகேவான்னா என்ன ஓகேன்னே தெரியலையே…அவ்வ்’ என உள்ளுக்குள் புலம்பினாலும் “ஹான்…ஓகே…ஓகே” என அவசரமாக தலையாட்டினாள்.

அவள் இதுவரை யாவரையும் எதிர்த்து பேசியதில்லை என்பதால்,அவனிடம் விஷயம் என்னவென்று கேட்டறியாமலே ஒப்புக்கொண்டாள்.

ஆனால் காரிகையின் மனம் மட்டும் ஆழ்கடலின் சீற்றத்துடன் குமுறிக்கொண்டிருந்தது.

ஆடவனோ பெண்ணவளின் முகம் சரியில்லாததை கவனித்து “ஆர் யூ ஓகே தாரிகா?” என அவளின் கன்னம் பற்றி விசாரிக்க,

கணவனது முதல் தொடுகையில் மேனி சிலிர்த்தவள் நெஞ்சம் படபடக்க “ம்” என தடுமாற்றத்துடன் முனகி,நாவால் இதழை வருடினாள்.

பதட்டமாக இருக்கும் போது செய்யும் அவளின் மேனரிசம் அது!

ஈரத்தில் மினுமினுத்த அவள் இதழை கண்ணெடுக்காமல் பார்த்திருந்த கார்த்திக்கின் கண்ணில் ஒரு வித ரசனை மிளிர “தாரிகா” என மென்குரலில் அவன் அழைக்க,

அதன் பிறகே அவன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்த விடயம் அவளிற்கு உரைக்க,

உடனே அவனது கரங்களை நயமாக அகற்றிவிட்டு “எனக்கு தூக்கம் வருதுங்க” என கோபத்தோடு தலைக்குனிந்து முணுமுணுத்தாள்.

அவளிடம் நிறைய பேச எண்ணி காத்திருந்தவன் ஏமாற்றத்துடன் “சரி தூங்கு தாரிகா…குட் நைட்” என கூறவும்,

அதற்காகவே காத்திருந்தவளும் “குட் நைட்” என மடியில் கோர்த்திருந்த தன் கரத்தை பார்த்தவாறே முணுமுணுத்தவள்,அவசரமாக அவனிற்கு அருகே காலியாக உள்ள வெற்றிடத்தில் படுத்துவிட்டாள்.

அவளின் முகத்தில் சடுதியாக வந்து சென்ற சினத்தின் சாயலை அறிந்த கார்த்திக்கின் முகத்தில் சிந்தனையின் ரேகைகள் படர்ந்தது.

ஆனால் அடுத்த வினாடியே ‘சேச்சே கார்த்திக்…தேவையில்லாமல் கண்டதையும் யோசிக்காதே…கொஞ்சம் அன்ஈஸியா ஃபீல் பண்ணறாள்…நாள் போக போக சரியாகிடுவாள்’ என அவளிற்காக அவனே வாதாடி தானும் படுக்கையில் விழுந்தான்.

அவளருகே அவன் படுத்தவுடன்,அதுவரை கண்மூடி தூங்குவது போல் பாவனை செய்திருந்த பாவையவளின் நெஞ்சம் மீண்டும் படபடத்தது.

புதிதாக ஒரு ஆண்மகனின் அருகாமை அவளிற்குள் இனம் புரியாத ஒரு உணர்வை தோற்றுவித்து,அடிவயிற்றில் பட்டாம்பூச்சியை பறக்க வைத்தது.

ஆயினும்,அதனை முயன்று கட்டுப்படுத்தி படுத்திருந்தவளிற்கு உறக்கம் என்பது எட்டாக்கனியாக மாறியிருந்தது.

அவளது எதிர்க்கால வாழ்வு சூன்யமாகிவிட்டதை எண்ணி கவலையோடு நகத்தை கடித்தவாறு விழித்தே இருந்தாள்.

அச்சமயமே அறையில் திடீரென்று ஒலித்த அப்பாடலும், அவற்றின் பின்பான நிகழ்வும்!!

இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்திருந்தவள்,ஒரு கட்டத்தில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ‘என் வாழ்வை ஏன் அழிச்சீங்க?’ என அவனிடமே கேட்டுவிடலாம் என ஆவேசமாக திரும்ப,அவனோ களைப்பில் எப்போதோ உறங்கியிருந்தான்.

தன்னருகே நெற்றி முடிச்சுடன் அவள் புறமாக திரும்பிப்படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஆறடி உயர திடக்காத்திரமான ஆண்மகனை பார்த்தவளின் இதயம் மீண்டும் நிலைத்தடுமாறியது.

அவனை மேலிருந்து கீழாக பார்வையால் ஒருமுறை அளந்தவள் ‘பார்க்க ஹல்குக்கு அக்கா பேரன் மாதிரி நல்லா கும்முன்னு தான் இருக்கார்… இவருக்கு அது ஒர்க் ஆகாதுனு சொன்னா தான் நம்ப முடிய மாட்டிக்குது’ என உள்ளுக்குள் புலம்பி தவித்தவளின் பார்வை அவனது இடுப்பை தாண்டி கீழே சென்றது.

அவ்விடத்தையே சில நொடிகள் அவள் குறுகுறுவென பார்த்திருக்க, கார்த்திக் உறக்கத்திலே புரண்டுப்படுத்தான்.

அதில் படீரென்று நிகழ்விற்கு வந்தவள் ‘அடச்சீ தாரிகா…ஒரு பையனை பார்க்கக்கூடாத இடத்தில் பார்த்திட்டு இருக்கியே,உனக்கு வெட்கமா இல்லை’ என மனசாட்சி அவளை காறி உமிழ,

உடனே தலையை வேறுப்புறம் திருப்பியவளிற்கு இதயம் அதிவேகத்தில் படபடத்தது.

பெண்ணவளின் கற்பனையோ தாறுமாறாக ஓட,மேனியில் தோன்றிய தாப உஷ்ணத்தை அடக்கும் வகையறியாமல் தவித்தது,அந்த இளம் குருத்து.

மோக உணர்வுகள் ஆண்களுக்கு மட்டுமல்ல,பெண்களுக்கும் பொதுவான ஒன்றாகும்.

துடித்த இதழ்களை பற்களால் அழுந்தப்பற்றி அடக்கியவள் ‘ஏய்…அவர் என் புருஷன்…அவரை அங்க மட்டுமில்லை…எங்க வேணா பார்த்து ரசிக்க எனக்கு உரிமையிருக்கு’ என மனசாட்சியை திட்டினாலும்,அவளின் உள்ளமோ சஞ்சலத்தில் தவித்துக்கொண்டிருந்தது.

தோழியின் கூற்றை முழுதாக ஏற்க முடியாமலும்,அதே சமயம் கணவனின் மீதான அவளது தாப உணர்வுகள் எல்லைமீறுவதை தடுக்க முடியாமலும் இருதலைக்கொள்ளி எறும்பாய் கலங்கியிருந்தாள் தாரிகா.

 

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top