சமர் 2

 

இந்தியா,

அதிகாலை(நமது கதாநாயகிக்கு) ஒன்பது மணி அளவில் தனது இளஞ்சிவப்பு நிற பஞ்சு மெத்தையில் அழகிய பதுமையென உறங்கிக்கொண்டிருந்த அம்லுவை அவளுடைய தாய் பத்மாவதி, “ஏய் சமி, மணி ஒன்பதாகுது… எரும மாட்டு மேலே மழைப்பேஞ்ச மாதிரி ஒன்பது மணி வரை தூங்கிட்டு இருக்கே… இப்போ எழுந்திரிக்கியா இல்லையாடி?” காலையில் சுப்ரபாதம் பாடியவாறே தனது பெரிய மகள் இழுத்து போர்த்தியிருந்த போர்வையை விலக்கி முதுகில் பலமாக ஒரு அடி வைத்து எழுப்பினார்.

அதில் சிறிது உறக்கம் கலைந்தாலும் எழ மனமில்லாமல், “மாம் ப்ளீஸ்…கொஞ்சநேரம்” என்று சிறுப்பிள்ளையென சிணுங்கி,மறுபுறம் திரும்பிப்படுத்துக்கொண்டாள் சமி என்கிற சம்ரிஷா ஆனந்த்.

அதில் கோபம் சுறுசுறுவென ஏற, “ஏய் சமி, இப்போ நீ எழுந்திரிக்கலை. ஒரு வாளி தண்ணி முழுதும் உன் மேலே ஊத்திடுவேன்டீ” என இடுப்பில் கைவைத்து முறைத்தப்படி கூற,

அப்போதும் அசையாமல் உறங்கிக்கொண்டிருந்த சேய்யின் மீது ஆத்திரம் மிக அறையின் வெளிப்புறம் பார்த்து, “சாதனா…சாதனா…அடியே சாதனா…எங்க இருக்கடி? இங்க கொஞ்சம் வாவேன்” சிறிய மகளை கத்தி அழைக்க,

அவளோ தனது செவியை இரு கரங்களால் பொத்திக்கொண்டு, “மாம், எதுக்கு காலங்கார்த்தாலே இப்படி எட்டு ஊருக்கு கேட்கற மாதிரி கத்தறீங்க” என சலித்தபடியே உள்ளே நுழைய,

பத்மாவதியோ அவளை பலங்கொண்ட மட்டும் முறைத்து, “என்னடி அக்காளுக்கும் தங்கச்சிக்கும் என்னை பார்த்தால் எப்படி தெரியுது. கிறுக்கு பிடிச்சவ மாதிரி தெரியுதா? இவ என்னடானா நான் எழுப்ப எழுப்ப கொஞ்சம் கூட மதிக்காமல் தூங்கிட்டே இருக்கா. நீ என்னடானா எட்டு ஊருக்கு கேட்கற மாதிரி கத்தறேனு சொல்லுற. வாய் நீளுச்சு குச்சியில் நாலு சாத்து சாத்திடுவேன். ஜாக்கிரதை” படபடவென பொரிந்து தள்ள,

அதில் சற்று திடுக்கிட்டு சுதாரித்த சாதனா, “சரி…சரி விடுங்க மாம், இப்போ எதுக்கு என்னை கூப்பிட்டீங்க. அதை சொல்லுங்க” என பேச்சை மாற்ற,

பத்மாவதியின் பார்வையோ பெரிய மகளின் புறம் திரும்ப இதழ்களோ, “பாத்ரூமில் போய் பக்கெட்டில் கொஞ்சம் தண்ணிக் கொண்டு வா” என கட்டளை இட,

தாயின் பேச்சை மீறாமல் சாதனா தண்ணீர் கொண்டு வர குளியலறைக்குள் நுழைய, அப்போதும் அசராமல் தனது அருகிலிருக்கும் ஜூகோவை(டெடி) இறுக்கி கட்டிப்பிடித்தப்படி அசையாமல் படுத்திருந்தாள் அந்த பிடிவாதக்காரி.

“இன்று இவளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்” என்று இடுப்பில் கைவைத்து கோபத்தோடு முணுமுணுத்தவர்,தனது சின்ன மகள் வரும் வரை பொறுமைக்காக்காமல் அதிரடியாக குளியலறைக்குள் நுழைந்து தானே தண்ணீரை வாளியில் நிரப்பிக்கொண்டு வந்தவர் சற்றும் பொறுமை காக்காமல் நேரே சென்று  வாளியிலிருந்த நீர் முழுவதுமாக மகளின் மீது அப்படியே சரித்தார்.

அவள் அப்போதும் எழாமல் தன் மேல் பூ மழை தூவியது போல் தண்ணீரை உதறிவிட்டு மறுபடியும் தனது தூக்கத்தை தொடர, அதில் ஆத்திரம் பன்மடங்கு பெருக, “அடியே சமி, இந்தாடி…இப்போ எழுந்திருக்கப் போறீயா இல்லையாடி?” என்று உச்சஸ்தானியில் கத்தி தோளைப் பிடித்து உலுக்க,

அதில் இலேசாக கண்திறந்த சமி முகத்தை சுழித்து, “ஏன் மாம் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணறீங்க…ப்ளீஸ் கொஞ்ச நேரம் தூங்கவிடுங்க…இல்லைனா பாட்டிக்கிட்ட சொல்லிக்கொடுத்திடுவேன்” ஆரம்பத்தில் கெஞ்சுவது போல் தொடங்கி முடிக்கையில் ஒரு வித மிரட்டலுடன் முடிக்க,

அதில் கடுப்பானவர், “ஆமாண்டி…அம்மா சப்போர்ட் மட்டும் இல்லைனா உன்னை நாலு சாத்து சாத்தியாவது வழிக்கு கொண்டு வந்திருப்பேன். ஆளைப்பாரு… இந்த லட்சணத்தில் இந்த ராங்கி அமெரிக்கா போய் அந்த புள்ளையை என்ன கொடுமைப்படுத்தப்போறாளோ தெரியலை…பாவம் அந்த புள்ளை” என வெளிப்படையாக புலம்பி சமருக்காக பரிதாபம் கொள்ளவும் செய்தார்.

அவரது புலம்பலையும் கண்டும் காணாமல் தன் மேல் பன்னீர் பூக்கள் விழுந்து சிதறியது போல் தொப்பலாக நனைந்த ஈரத்தோடு உறங்கிக்கொண்டிருந்த மகளை என்ன செய்தால் தகும் என்று இயலாமையால் எழுந்த கோபத்தோடு முகம் சிவக்க இடுப்பில் கைவைத்து உறுத்து விழித்தப்படி நின்றிருந்தவருக்கு பட்டென்று இரண்டு அடி வைத்தால் என்ன என்று கூட தோன்றியது.

ஆனால் பெற்ற பிள்ளையின் மீது கைவைக்கும் அதிகாரத்தை அவரது தாய் அகிலாண்டேஸ்வரி தடைச்செய்திருப்பதால் அமைதியாக தனது மகளை கோபத்தோடு உறுத்து விழித்துக்கொண்டிருந்தார்.

அதுவரை தனது தாயின் போராட்டத்தை பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த அவரது இரண்டாம் மகள் சாதனாவிற்கு தாயின் மீது இரக்கம் சுரக்க அவரின் அருகே வந்து, “மாம் எதுக்கு இப்போ இவ்ளோ டென்ஷன் அவளை எழுப்பணும் அவ்ளோ தானே?” என்று சாதாரணமாக கூறி, அவளின் அருகில் குனிந்து தனது கைப்பேசியிலிருந்து இசை ஜாம்பவான் ஏ.ஆர்.ரகுமான் இசையை ஒலிக்கச்செய்தாள்.

“கசடதபற ஞஙனநமன ரபடதபட” என்று பாடல் ஆரம்பித்தவுடன் சமி படுத்திருந்த வாக்கிலே முதலில் கைகால்களை அசைக்க ஆரம்பித்தாள். அவளது தாய் விழி விரிய ஆச்சரியத்தோடு பார்க்க,

“Ladio beautiful ladio, sexy ladio, Likes kodiyo” என்றவுடன் கண்களை திறக்காமலே படீரென்று எழுந்தவள் மெத்தையில் முட்டிப்போட்டப்படி வலிப்பு வந்தது போல் கைகால் வெவ்வேறு பக்கமாக காற்றில் குத்தியப்படி இழுத்துக்கொண்டு ஆட அவளது அன்னை, “என்னடா நடக்குது இங்க” என்று வாயில் கைவைத்தப்படி விழிகள் தெறித்துவிடும் படி அவளையே பார்த்துக்கொண்டிருக்க,

“பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ ஹோ” என்றவுடன் மெத்தையிலிருந்து எகிறி குதித்து இறங்கி கை கால் மற்றும் தலையை அசைத்து மேற்கத்திய நடனத்தை ஆட ஆரம்பித்துவிட்டாள்.

“குளம்பி வாசம் இவள் கூந்தலோ

உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ” என்று இசைகேற்றார் போன்று கால்களால் எம்பி குதித்து கைகளால் வானத்தில் குத்தி ஆடியவளோடு சாதனாவும் தொடர்ந்து ஆடியப்படியே,பாடல் ஒலித்து முடியும் வரை இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவள் ஒரு வழியாக பாடல் முடிந்தவுடன் மூச்சு வாங்க முகம் முழுக்க புன்னகையுடன் தனது தாயைக் கண்டு தலைசரித்து ஒற்றைகண் மூடி இடது கையை தனக்கு முன்னால் நேராக நீட்டி லேசாக தன்புறமாக வளைத்து வலது கையை வளைத்த இடது கரத்தின் மீது முன்னோக்கி நீட்டி துப்பாக்கி சுடுவது போல் ஆட்டி உதட்டை குவித்து “டிஷ்யூம்” என்றவள், அத்தோடு நிற்காமல் கண்சிமிட்டிவிட்டு கலகலவென்று சிரித்தாள்.மகிழ்ச்சியாக இருக்கும் போது செய்யும் அவளது செய்கையில் இதுவும் ஒன்று. அவளோடு கூடவே அவளது தங்கை சாதனாவும் கலகலவென்று சிரித்தாள்.

அவளது செயலைக் கண்டு மேலும் எரிச்சலடைந்த பத்மாவதி, “ஏன்டி உனக்கு ஏழு கழுதை வயசாகுது. இன்னும் என்னடி ஆட்டம் வேண்டிக்கிடக்கு?” என்று குரலுயர்த்த அவர் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அவரது கன்னத்தில் அவசரமாக முத்தமிட்ட சமி, “மாம் கூல் டவுன்…காலையிலே இவ்ளோ டென்ஷனா இருந்தால் எப்படி?வேணும்னா டாட் கூப்பிட்டு முத்தம் கொடுக்க சொல்லவா” என்று வெகு சாதாரணமாக கூற,

அவளது பேச்சு சரியாக வேலைச்செய்ய முகம் வெட்கத்தில் சிவக்க சற்று குரலை தணித்து, “சமி நீ இப்படி பொறுப்பில்லாமல் இருந்தால் அங்கு போய் தனியா என்னடி பண்ணுவ. அங்க சமர் தான் எல்லா வேலையும் செய்யறான். நீ போய் அவனுக்கு கொஞ்சமாவது ஹெல்ப் பண்ண வேணாமாடி? இன்னும் விளையாட்டுத்தனமாவே இருந்தால் என்னடி பண்ணறது” ஒரு தாயாக அவளை கடிந்துக்கொள்ள,

சமர் என்ற பெயரை கேட்டவுடன் சுறுசுறுவென கோபம் எகிற தலையை சிலுப்பி, “மாம் காலையில் நல்ல மூடில் இருக்கும் போது எதுக்கு அந்த வெள்ளை பன்னியை பத்தி பேசி என் மூட் ஸ்பாயில் பண்ணுறீங்க” என்று கத்தியவள், 

‘அவனும் அவன் மூஞ்சியும் கண்ணைப் பாரு ப்ளு ஐஸ் இருந்தால் பெரிய ஆணழகன் னு நினைப்பு…வைட் கொரில்லா’ என்று கோபத்தோடு முணுமுணுத்தாள்.

அவளின் முணுமுணுப்பு பத்மாவிற்கு கேட்கவில்லை என்றாலும் அவளுக்கு மிக அருகில் இருந்த சாதனாவின் காதில் விழ பெருங்குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

‘ஐய்யையோ தப்பான டைமீங்கில் சொல்லிட்டேன் போலவே’ என்று தன்னையே நொந்துக்கொண்டு, “சாது பொட்டப்பிள்ளை எதுக்கு சத்தமா சிரிக்கிற. பாட்டிக்கிட்ட சொல்லட்டுமா?” என்று கண்களை உருட்டி மிரட்டியவுடன் சாதனாவின் புன்னகை உடனடியாக மறைந்துவிட்டது.

தனது தாயை சாதனா பாவமாக பார்க்க அவரோ, “இதெல்லாம் உனக்கு தேவையா? நீ போ” என்று இளையவளை அனுப்பி வைத்த கையோடு சமியை நன்றாக முறைத்த பத்மாவதி,

“சமி இங்க அம்மா உனக்கு  சப்போர்ட் பண்ணற தைரியத்தில் ரொம்ப ஆடிட்டு இருக்கே..‌.ஆனால் அங்க உனக்கு யாரும் சப்போர்ட் பண்ணமாட்டாங்க. அங்க உன் கொட்டத்தை அடக்கி தான் ஆகணும். இல்ல சமரை உன் வாலை ஒட்ட நறுக்கச்சொல்லுவேன். இப்போ போ… போய் குளிச்சிட்டு தயாராகி சீக்கிரம் கீழே வா, பாட்டி உனக்காக சாப்பிடாமல் ரொம்ப நேரமாக காத்திட்டு இருக்காங்க” ஏற்ற இறக்கத்துடன் கூறி அவளை நன்றாக வசைப்பாடி அறையை விட்டு வெளியேறினார்.

அவர் போன அடுத்த நொடி முகம் முழுவதும் கோபத்தை அப்பிக்கொண்டவள், “யாரு…யாரு வாலை வெட்டறாங்கனு பொறுத்திருந்து பாரு மம்மி, அங்க போய் அவன் பண்ணுற தில்லாலங்கடி வேலையை பாட்டிக்கிட்ட போட்டு தரலை. நான் சின்ன அகிலாண்டேஸ்வரி இல்ல…ஹூம்” என்று இதழை சுழித்து தலையைச் சிலுப்பிக்கொண்டு குளியலறையினுள் நுழைந்துக் கொண்டாள் சம்ரிஷா.

சமி என்கிற சம்ரிஷா ஆனந்த் 21 வயது நவநாகரீக யுவதி. ஆனந்தும் பத்மாவதியும் சமியின் தாய் தந்தையினர்.

வசீகரன் அகிலாண்டேஸ்வரி தம்பதியினர் தான் இவ்வீட்டின் மூத்த குடிமக்கள். அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண்பிள்ளை. அவர்களின் மூத்த மகன் அர்ஜூனருக்கு திருமணமாகி ஒரே ஒரு பெண். அவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள்.

இரண்டாவது மகன் கௌதமனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் அம்ரிஷ் கௌதமனுக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை இருந்தது. இரண்டாவது புதல்வன் தான் நாயகன் சமர்.

அவர்களது மூன்றாவது மகள் தான் சமியின் தாய் பத்மாவதி. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூத்தவள் சமி,இரண்டாவது சாதனா ஆனந்த்.

தாய் தந்தையர் இல்லாத ரமா மற்றும் ஆனந்த் அவர்கள் இருவரையும் தங்களது பெற்ற பிள்ளைகளுக்கு நிகராக பாசம் காட்டி வளர்த்து அவர்கள் இருவரையும் தங்களது பிள்ளைகளுக்கே திருமணம் செய்து வீட்டுடன் வைத்துக்கொண்டார் அகிலாண்டேஸ்வரி.

எந்த அளவிற்கு பாசம் காட்டி வளர்த்தாரோ அதே அளவிற்கு கண்டிப்பு காட்டவும் தவறமாட்டார்.அதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை வீட்டிலிருக்கும் அனைவருக்குமே அவரின் மேல் பயம் கலந்த மரியாதை இருந்தது. ஆனால் அவரோடு சரிக்கு சமமாக வாயாடும் ஒரே ஜீவன் சமி மட்டுமே. அத்தோடு அவரின் வலது கை என்று கூட கூறலாம். வீட்டிருப்பவர்கள் ஒருத்தரை விடாமல் அனைவரும் என்ன செய்கிறார்கள் ஏது பேசுகிறார்கள் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் கொண்டு சேர்க்கும் வானொலி.

அந்த வீட்டிலே அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் அகிலாண்டேஸ்வரி பாட்டி. அதற்கு அடுத்து அவளுக்கு மிகவும் பிடித்த இன்னொரு நபர் ஏ.ஆர்.ரகுமான். அவரின் பாடல் எங்கு ஒலித்தாலும் முதல் ஆளாக அங்கு ஆஜராகிவிடுவாள். அவரின் எந்தவொரு மேடை நிகழ்ச்சியையும் கூட விடாமல் அனைத்திற்கும் செல்லுவாள்.அதிலும் “லேடியோ” பாட்டைக் கேட்டால் போதும் தன்னையே மறந்து ஆடிவிடுவாள். அவளின் அதிகப்படியான உற்சாகத்திற்கு காரணம் அந்த பாடல் தனக்காகவே எழுதப்பட்டது போல் உணர்ந்தாள்.அதை தெரிந்துக்கொண்டு தான் அவளின் தங்கை சாதனா அந்த பாடலை ஒலிக்க செய்து எழுப்பினாள். அத்தோடு தன் அறையைச் சுற்றியும் ஏ.ஆர்.ரகுமானோடு அவள் எடுத்து கொண்ட புகைப்படங்களை பெரியதாக்கி மாட்டி வைத்திருந்தாள். குளித்து முடித்து வெளியே வந்தவுடன் அவருடைய இசையை ஒலிக்க செய்து கண்மூடி ரசித்துவிட்டு அதன்பிறகு தான் அன்றைய நாளுக்கான தனது பணியைத் தொடங்குவாள்.

அடுத்து அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு ஓய்வு நேரங்களில் இசை ஆல்பத்தில் பங்கேற்று பாடல்பாடி ஆடுவது. அதன்பழக்கத்தினால் காலைவேளையில் ஒரு ஆடலுடனே கண்விழிப்பாள்.அவள் அவ்வாறு செய்வது அகிலாண்டேஸ்வரிக்கு அறவே பிடிக்காது.

மற்ற விடயங்களில் பேத்திக்கு ஆதரவளிக்கும் அகிலா பாட்டி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கண்டிப்பதனால் வீட்டிற்கு தெரியாமல் இசை ஆல்பத்தில் பங்கேற்க பழகிவிட்டாள்.

சமி இந்த வருடம் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு அவளின் தொழிற்துறை சார்ந்த மேற்கல்வியை பயில்வதற்காக அமெரிக்கா செல்லவிருக்கிறாள். சமருக்கு பிறந்ததிலிருந்தே தொழிலில் நாட்டம் இருந்ததில்லை. அவனுக்கு மருத்துவம் பயின்று சொந்த காலில் நின்று ஒரு இலவச மருத்துவ சேவை மையம் வைக்கவேண்டும் என்பது தான் அவனது வாழ்வின் லட்சியம்.

சமர் ஏ.எல் குழுமத்தின் சொத்துக்களை அடக்கி ஆள்வதை விட்டுவிட்டு மருத்துவம் பயில்வது இங்கிருந்த யாவருக்கும் பிடிக்கவில்லை.

அதிமுக்கியமாக அவனது பாட்டி அகிலாண்டேஸ்வரிக்கு அறவே பிடிக்கவில்லை. அதனால் தான் இத்தனை வருடங்கள் அவன் தனியாக பிரிந்து சென்றும் எதுவும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்.அவனோடு பேசுவதையும் அடியோடு நிறுத்தி பல வருடங்கள் ஆகியது. அதற்காக அவனை அப்படியே கைகழுவி விட்டாரா என்றால் இல்லை.

தனது மருமகளிடம் அவனைப்பற்றி எப்போதும் விசாரித்துக்கொண்டு தான் இருப்பார்.அத்தோடு தனது பேத்திக்கும் பேரனுக்கும் திருமணம் செய்து வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவரது எண்ணம்.

அதற்காக தான் எலியும் பூனையுமாக அடித்துக்கொள்ளும் இவர்கள் இருவருக்குமிடையே நேசவிதையை தூவி விருட்சமாக எண்ணத்தோடு அவளை அவனோடு தங்க அனுமதித்தார்.மேலும் அவருக்கு இருவரின் ஒழுக்கத்தின் மீதும் தன்னுடைய வளர்ப்பின் மீதும் அளவுகடந்த நம்பிக்கையும் இருந்தது.

மேலும் தொழிற்கல்வியைப் பயிற்றுவித்து சமியை தங்களுடைய குடும்ப தொழிலில் ஈடுப்படுத்தி சமரின் மேலுள்ள சங்கடத்தை தீர்த்துக்கொள்ள முடிவுச்செய்திருந்தார்.இவரின் முடிவைப் பற்றி வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு தெரியும். ஆனால் சிறியவர்களுக்கு தெரியாது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்விசயம் மட்டும் அவரது பேரனுக்கோ பேத்திக்கோ தெரிய நேர்ந்தால் இருவரும் ஒரு பரதநாட்டிய கச்சேரியே நிகழ்த்துவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே!

சிறுவயதிலிருந்தே ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கொண்டு தான் இருப்பார்கள்.அவனைப் பற்றி குறைக்கூறிக்கொண்டு இவளும்,இவளைப் பற்றி குறைக்கூறிக்கொண்டு அவனும் வந்து நிற்பதைக் கண்டால் இருவருடைய அன்னையருக்கும் தலையே வெடித்துவிடுவது போல் இருக்கும்.ஆனால் சமருக்கு பத்மாவதியும் சமிக்கு ரமாவும் வக்காளத்து வாங்கி அவரவர் பிள்ளைகளை நன்றாக வறுத்தெடுப்பார்கள்.

வளர்ந்தப்பிறகாவது இருவரும் சரியாகிவிடுவார்கள் என்று எதிர்ப்பார்த்தால் வளர வளர அவர்களது சண்டை அதிகரித்து நிலைமை மோசமாகியதே ஒழிய சிறிதும் குறையவில்லை.அதுவும் சமர் பள்ளியில் செய்யும் சிறு சிறு குறும்புகளைக்கூட விடாமல் சமி தனது பாட்டியிடம் போட்டுக்கொடுக்க சமருக்கு ‘பொறுப்பில்லாதவன்…வீட்டிற்கு அடங்காதவன்’ என்ற பட்டமே கிடைத்தது.அதை வாங்கிக்கொடுத்த பெருமை சமியையே சென்று சாரும்.

அத்தோடு சமரும் சமியும் ஒருத்தருக்கு ஒருத்தர் நேர் எதிர் குணங்களைக் கொண்டவர்கள்.சமர் சாப்பாட்டு விசயத்தில் கண்டிப்பு என்றால் சமி தன் இஷ்டத்திற்கு சாலை ஓரக்கடைக்களில் கூட உணவு பண்டங்களை வாங்கி உண்ணும் பழக்கம் கொண்டவள். அதிகாலை மிக விரைவாக எழும் பழக்கம் கொண்டவன் அவன்.அதற்கு நேரேதிராக காலை பத்து மணிவரை இழுத்து போர்த்திக்கொண்டு உறங்கும் பழக்கம் கொண்டவள் அவள்.இரவு தாமதமாக நித்திரை கொண்டு அசந்து உறங்கினாலும் ஏதாவது ஒரு சிறு ஓசை எழும்பினாலும் தூக்கத்திலிருந்து எழுந்திடுவான் சமர். ஆனால் இவள் இடியே விழுந்தாலும் தூக்கத்திலிருந்து(ஏ.ஆர்.ரகுமான் இசையை தவிர) எழமாட்டாள்.

அவளுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையென்றால் உயிர்.ஆனால் அவனுக்கு மேற்கத்திய இசை ஒன்றே விருப்பம்.இதற்கெல்லாம் மேலாக அவ தல ரசிகை என்றால் இவன் தளபதி ரசிகன்.இவள் நவநாகரீக யுவதியாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக எந்த ஆண்களிடமும் நெருங்கி பழகிடாத வேள்வி போன்றவள்.ஆனால் அவன் பார்த்த சில மணித்துளிகளிலே ஒரு பெண்ணோடு நெருங்கி பழக ஆரம்பித்துவிடும் மழை போன்றவன்.

இப்படியாக அனைத்து விடயங்களிலும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் இவர்களுக்கிடையே காதல் வருமா இல்லை யுத்தம் வருமா?

 

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top