அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் என்னும் மாநிலம்,
தனக்கு பிடித்த ஒரு ஆங்கில ராக் பாடலை தனது செவிப்பறை அதிர்ந்து கிழியும் அளவு இரைச்சலாக அலறவிட்டு அதன் இசைக்கு ஏற்ப தானும் உடன் பாடி வீட்டையும் சேர்த்து அலறவிட்டுக்கொண்டிருந்தான் சமர் என்கிற சம்ரிஷ் கௌதமன்.
நீள்விரிக்கையில் ஒரு புறம் தலை வைத்து மற்றொரு புறமாக கால் நீட்டி இமை மூடி தோரணையாக படுத்திருந்த சமர்,தனது செவியில் மாட்டியிருந்த தலையணி கேட்பொறியின் வழியே கசிந்து வந்த பாடலுக்கு ஏற்றப்படி கை கால்களை இப்படியும் அப்படியுமாக அசைத்து அபிநயத்து பாடிக்கொண்டிருக்கையில் அதை தடை செய்வது போன்று ‘கிர்…கிர்’ என்ற அலைப்பேசியில் இருந்து எழும்பிய அதிரொலியில் அவனது செவிப்பறை அதிர்ந்தது.
அதன் குறுக்கீட்டால் இலேசாக எரிச்சலானவன் “ச்சை யாருடா ஷாங் கேட்கும் போது டிஸ்டர்ப் பண்ணறது” என புருவம் நெறித்து முணுமுணுத்து அலட்சியத்துடன் யாரென்று நோக்காமல் கூட அழைப்பை ஏற்ற சமர் களைந்திருந்த தன் சிகைக்கோதி “ஹலோ திஸ் இஸ் சமர்… ஹூ ஆர் தேர்” என அதிகார தோணியில் புருவம் உயர்த்தி கேட்க,
அந்தப்பக்கம், “திஸ் இஸ் சமர் மாம்ஸ் ஹியர்” என பதில் கூறி, அவனை பெற்றவள் என நிரூபித்தார் ரமா.
அதுவரை எரிச்சலில் இருந்த சமர் தாயின் குரலில் முகம் மலர உற்சாகமடைந்தவனாய் ஆர்வமாக எழுந்து நீள்விரிக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து, “மீ வாட் ஆ பிளசன்ட் சர்பரைஸ்? என்ன இந்த நேரத்தில் தீடிர்னு கால் பண்ணியிருக்கீங்க?எனி திங்க் இம்பார்ட்டன்ட்” என படபடவென இடைவெளி விடாமல் பேச,
“டேய், ஏதாவது விசயம் இருந்தால் தான் பேசணுமா. இல்லைனா என் பையன் கிட்ட நான் பேசக்கூடாதா ?” என எதிர்கேள்வி கேட்க,
அதில் கன்னங்குழிய சிரித்த அந்த இருபத்தைந்து வயது ஆடவன், “மீ…உங்க பையன் கிட்ட எப்போ வேணா பேசலாம். ஐ ஹேவ் நோ அப்ஜக்ஷன்… ஆனால் ஒரு மணி நேரத்திற்கு முன்னால் பேசின நீங்க உடனே எனக்கு கூப்பிட்டிருக்கீங்கனா… கண்டிப்பா ஏதாவது முக்கியமான விசயமாக தான் இருக்கணும். என்னனு சொல்லுங்க” என்று கேட்டு தனது புத்திசாலித்தனத்தை பேச்சில் காட்டி பல்வரிசை தெரிய சிரித்தான் சமர்.
தன் மகனை உள்ளுக்குள் மெச்சிய அவனது தாய் ரமா மெல்லியதாக முறுவலித்தவர் அடுத்ததாக அலுங்காமல் குலுங்காமல் சமரின் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்.
இதுவரை சத்தம் போட்டு பாடிக்கொண்டிருந்ததினால் தொண்டை வறண்டுப்போக தாயிடம் பேசிக்கொண்டே நீர் பருக குளிர்சாதனப்பெட்டியை நோக்கி நடந்தவனின் செவியில் விழுந்த செய்தியில் தனது நீல நிற விழிகளை பெரிதாக விரித்து “மீஈஈஈஈ” என்று பயத்தில் அலறியவனின் கையிலிருந்த கைப்பேசி பறந்துப்போய் தரையில் விழப்போக, அதனை விழுவதற்கு முன்னரே சூப்பர் மேனை போல் அலங்கார மேசையின் மீது எகிறி குதித்து பாய்ந்து ‘கேட்ச்’ பிடித்து காதில் வைத்து பெரிய சாதனையை நிகழ்த்தியவன் போன்று பெருமூச்சு வாங்கினான் அவன்.
மூச்சு வாங்கியவனின் ஓசை அந்தப்பக்கம் இருந்த அவனது தாயிற்கு கேட்க, “என்னாச்சு சமர், ஏன் இப்படி மூச்சு வாங்குது ?” என்று குழப்பத்தோடு கேள்வி எழுப்ப அதைக் கண்டுக்கொள்ளாத சமர் ஒரு வித பரபரப்போடு, “மீ முன்னாடி என்ன சொன்னீங்க திரும்ப இன்னொரு முறை சொல்லுங்க?” என்று கேட்டவனின் குரலில் முன்பு தன் செவியில் விழுந்த தகவல் பொய்யாக இருக்கவேண்டும் என்ற நப்பாசை இருந்தது.
ஆனால் அது பொய்யில்லை மடையா உண்மை என்பதை நிரூபிப்பது போல் அவனது தாய் மீண்டும் ஒரு முறை அவ்விஷயத்தை கூறி அவனது தலையில் இடியை இறக்கினார்.
“சமர், நம்ப அம்லு இன்னும் பத்து நாளில் அமெரிக்காவுக்கு வரப்போறாள்” என்று கூறிய நொடியில் அவனின் இதயம் தூள் தூளாக உடைந்து சிதற, “ஓ நோ” என்று போலியாக நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நீள்விரிக்கையில் அப்படியே பொத்தென்று விழுந்து விட்டான்.
அந்தப்பக்கம் இருந்த அவனது தாய் அவனின் அலறலில் திகைத்து, “சமர் என்னாச்சுப்பா? ஏன் கத்துற ?” என்று ‘மகனுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டதோ’ என்ற தவிப்பு அவரது குரலில் வெளிப்பட,
அவரின் தவிப்பில் தன்னை மீட்டெடுத்த சமர் தற்போது கோபம் கொப்பளித்த குரலில் முகத்தை எரிச்சலுடன் சுழித்து “அந்த ரோடு ரோலர் இங்க வரலைனு யார் அழுதா?” என,
அந்தப்பக்கம் இருந்த அவனது தாய் “சமர்ர்ர்ர்ர்ர்” என்று கண்டிக்கும் விதமாக கடுமையுடன் அவனது பெயரை அழுத்தி உச்சரிக்க சமர் முகத்தை சுழித்து ‘ச்சை… இந்த அம்மா வேற மனுஷனோட கஷ்டம் புரியாமல் சமர் சுமர்னுட்டு’ என மனதிற்குள் பலிப்புக்கட்டியவன்,
தீடிரென்று, ‘ஆமா… அந்த குந்தாணி அமெரிக்கா வரலைனு யார் அழுதா… இடியட்… அடக்க ஒடுக்கமா இந்தியாவிலே எவனையாவது கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாக வேண்டியது தானே’ மனதிற்குள் ஆசைத்தீர அவளை பொறிந்து தள்ளியவனுக்கு உள்ளுக்குள் பீதியாக ‘ஐய்யோ! இங்க வரதுக்கு முன்னாடியே இப்படி திட்டுவாங்க வைக்கிறாளே. இங்க வந்தா என் நிலைமை என்னவாகும்’ என்று ஒரு கையைத் தூக்கி தலையில் பாவமாக வைத்துக்கொண்டான்.
இவனின் நிலைமை மோசமாகியிருக்க அதை அறியாத அவனது தாயோ அவனின் நெஞ்சத்தை மேலும் சுக்கு நூறாக்குவது போல் இன்னொரு செய்தியைக் கூறினார்.
“சமர் அம்லு அங்க வந்து உன் கூட தான் தங்கப்போறாள். அங்க நமக்கு சொந்தமா அவ்ளோ பெரிய வீடு இருக்கும் போது அவள் எதுக்கு ஹாஸ்டலில் தங்கணும். அதனால் பாட்டி தான் அவளை அங்கே தங்கிக்க சொல்லியிருக்காங்க… நாங்களும் பிள்ளை பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள்னு நிம்மதியா எங்க வேலையைப் பார்ப்போம்டா கண்ணா, அதுமட்டுமில்லாமல் என் பையன் மேல் அலாதி நம்பிக்கை இருக்கு” என்று பெருமிதத்துடன் அறிவிக்க,
சமரோ மேலும் அதிர்ச்சியடைந்து, “எது இங்க தங்கப்போறாளா?ஹோ காட்! குண்டு தக்காளிக்கிட்ட நான் வசமா மாட்டினேன்” என்று சத்தமாகவே முணுமுணுக்க, அது அவனின் தாயின் காதிலும் விழுந்து அவரின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது.
ஆனால் அதை மறைத்து குரலில் கண்டிப்புடன், “சமர், என்ன பேச்சு இதெல்லாம்?” எனவும்,
சமர் சுதாரித்து அசடு வழிய சிரித்து, “ஹிஹிஹி…சாரி மீ” என்று கூறியவனின் நீல விழிகள் இரண்டும் கோபத்தில் மின்னிக்கொண்டிருக்க பற்களோ வாயினுள் கடிப்பட்டுக்கொண்டிருந்தது.
அதை அறியாத அவனது தாய் ரமா, “சமர், மறுபடியும் சொல்லுறேன். உன் வாலுத்தனத்தையெல்லாம் அம்லுகிட்ட காட்டாதே, அவள் ஒரு குழந்தை மாதிரி… அதையும் மீறி ஏதாவது செய்து வைத்தால் பாட்டிக்கிட்ட நீ தான் வாங்கிக்கட்டணும். இப்போவே சொல்லிட்டேன். பாட்டியோட கோபத்தை பற்றி நான் சொல்லி தான் உனக்கு புரியணும்னு இல்லை. அதனால் ஜாக்கிரதை” என பாட்டியை முன் வைத்து மிரட்டல் விட,
அதற்கெல்லாம் அசராதவன் உதட்டை வளைத்து நக்கலாக சிரித்துக்கொண்டே, “நல்லா தானே மீ… கண்டிப்பாக அவளை நல்லாஆஆஆஆஆ பார்த்துக்கிறேன் போதுமா?” என்று அந்த நல்லாவில் அழுத்தம் கொடுத்து கூற,
அதை உண்மை என்று நம்பிய ரமா இதழ்ப்பிரித்து மென்மையாக புன்னகைத்து, “உன்னை பற்றி எனக்கு தெரியும் சமர், நீ ரொம்ப பொறுப்பான பையன்.நிச்சயம் அம்லுவை எங்களை விட நன்றாக பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவளை மட்டும் இல்லாமல் உன்னையும் நல்லா பார்த்துக்கோடா கண்ணா, நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடு” என்று ஆதுரத்துடன் கூற,
அத்தனை நேரம் அந்த அவளை நினைத்து கடுப்பில் இருந்தவன் தற்போதைய தாயின் கரிசனையான பேச்சில் முகம் மென்மையுற, “மீ நான் ஒரு டாக்டர்… கண்டிப்பா என் உடம்பை நல்லா பார்த்துப்பேன்.சோ நீங்க என்னை பற்றி நினைத்து கவலைப்படாமல் உங்க உடம்பை பார்த்துக்கோங்க. அண்ட் தென் நம்ப குடும்பத்தில் இருக்கும் எல்லாரையும் கேட்டேன் என்று சொல்லுங்க மீ” எனவும்,
நடந்த சில கசப்பான நிகழ்வுகளால் குடும்பத்தினரை பிரிந்து தூர தேசத்தில் தனித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் மகனை நினைத்து கண்கலங்க “கண்ணா” என கரகரப்பான குரலில் நா தழுதழுக்க அவர் அழைக்கவும்,
எதனால் அவரது தடுமாற்றமும் கண்ணீரும் என்பதறிந்த சமர் தாயின் கேள்வியை முன்னரே தடுக்க எண்ணியவன் முகம் இறுக, “மீ எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு. நான் நாளைக்கு பேசறேன். நீங்க எதையும் நினைக்காமல் நிம்மதியாக தூங்குங்க…பை” என்று படபடவென பேசியவன், தாய் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் அழைப்பைத் துண்டித்தான்.
அலைப்பேசியை மேசையின் மீது தூக்கியெறிந்த சமரின் வெண்ணிற முகம் ஆத்திரத்தில் சிவந்திருக்க, அவனது தாய் பேச எண்ணிய விஷயத்தை நினைக்கையில் அவனது சினம் கரையைக் கடக்க அவையனைத்தும் காரணமின்றி அந்த அம்லுவின் மீதே திரும்பியது.
அதீத கோபத்தோடு நீல நிற விழிகள் இரண்டும் வேட்டையாட துடிக்கும் புலியின் பளபளப்போடு மின்ன “தக்காளி வாடி வா… இந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக தான் இத்தனை வருஷமா நான் காத்திருந்தேன். இங்க வந்ததற்கு பிறகு ஒவ்வொரு நாளும் ஏன் இங்க வந்தோம்னு உன்னை நினைக்க வைச்சு கதறவிடலை என் பெயர் சமர் இல்லடி” என்று வெஞ்சினத்துடன் கறுவினான்.
சம்ரிஷ் கௌதமன் 25 வயது இளைஞன்.ஏ.எல்(AL) இன்ட்ஸ்டிரீஸின் வாரிசுகளில் ஒருவன் தான் சமர்.ஆறடிக்கு குறையாத உயரம் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகிய முகம், சுண்டிவிட்டால் இரத்தமென சிவக்கும் பால் வெள்ளை நிறம், அடர்த்தியான பழுப்பு நிற கேசம்,பெண்களை கொள்ளை கொள்ளும் அசரடிக்கும் குறும்புத்தனம் மிளிரும் நீல நிற விழிகள், கூரான நாசி எந்நேரமும் புன்னகையை பூசிக்கொண்டிருக்கும் சிவந்த இதழ்கள், அவன் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி இவையனைத்துமே சமரை ஒரு வெளிநாட்டவனாகவே காட்டியது.
அத்தோடு சமர் தனது பதினேழாவது வயதிலிருந்து குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்து அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் என்னும் நகரத்தில் தங்கி அங்கிருந்த ஹார்ட்வார்டு பல்கலைகழகத்தில் இறுதி வருடம் மருத்துவம் பயன்றுக்கொண்டிருக்கிறான்.
மூன்று தலைமுறைகளுக்கு எவ்வித பணியும் செய்யாமலே அமர்ந்து உணவு உண்ணும் அளவு சொத்துகள் நிரம்பியிருந்தாலும் மருத்துவம் தான் பயில்வேன் என்று வீட்டினரிடம் பிடிவாதம் பிடித்து இங்கே வந்திருக்கிறான். அவனின் வெளிநாட்டவர் போன்ற தோற்றத்தைக் கண்டு அங்கிருப்பவர் யாவருக்கும் அவன் ஒரு தமிழன் என்பதே தெரியாது.அதைப் பயன்படுத்தி இந்நாட்டின் பெண்களை தனது நீல நிற கண்களாலே கவர்ந்திழுப்பதோடு தன் கன்னக்குழி சிரிப்பில் அவர்களை அடிமைப்படுத்திவிடும் பேரழகன். அத்துடன் அவனும் தன் மனதிற்கு பிடித்த அழகான பெண்களோடு நெருங்கி பழகவும் செய்வான்.
பெண்கள் அவனிடம் எல்லை மீறி பழகினாலும் அதை தடுக்காமல் ஆதரிப்பான். அதனால் அவனைச் சுற்றி எப்போதும் பெண்கூட்டங்கள் நிரம்பியே இருக்கும்.
மேலும் அவன் எவ்வளவு தான் மேல்நாட்டு கலாச்சாரத்தின் படி பெண்களோடு நெருங்கி பழகினாலும் தனக்கென ஒரு எல்லையை வகுத்திருந்தான்.அதை எப்போதும் மற்றவர்கள் தாண்ட அவன் அனுமதிப்பது இல்லை. அதேநேரம் தன் எல்லையைத் தாண்ட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும் போது அதை செய்வதற்கு தயங்கியதும் இல்லை.
கல்லூரி செல்லும் நேரம் தவிர ஏனைய பிற நேரங்களில் தனக்கு மிகவும் பிடித்த ஹேண்டியை(அவனின் இரு சக்கர மிதிவண்டியின் பெயர்) எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விடுவான். அப்போதும் பொழுது போகாத நேரத்தில் தனது முகநூலில் தோழியாக உள்ள பெண்களிடம் கடலை வறுக்க ஆரம்பித்துவிடுவான்.
மற்ற விடயங்களில் விளையாட்டு தனமாக இருப்பினும் உணவு உண்ணும் விசயத்தில் மிகவும் கட்டுக்கோப்பாக இருப்பான். அதனால் அடிக்கடி வெளியில் உணவு எடுத்துக்கொள்ளாமல் அவனே சமைத்து சாப்பிடுவான். இந்த நற்பழக்கத்தை அவனது தாய் வழிப்பாட்டனாரிடமிருந்து அவன் கற்றுக்கொண்டான்.
அவன் தனது வீட்டிலிருக்கும் யாரை கண்டும் அஞ்சுவது இல்லை. தனது தாயாருக்கு மட்டும் ஒரு சில நேரம் பயப்படுவது போல் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவன் பயம் கலந்த மரியாதை செலுத்துவது அவனுடைய தந்தை வழி பாட்டி அகிலாண்டேஸ்வரியிடம் மட்டும் தான்.
ஏ.எல் இன்ட்ஸ்டிரீஸில் உள்ள ஏ.எல் என்பது அகிலாண்டேஸ்வரியின் ஆங்கில பெயர் சுருக்கம். அதனால் மொத்த நிர்வாகத்தின் முழு உரிமையாளர் இவர் ஒருவரே. அதனால் அவன் மட்டுமில்லை அவரை கண்டு அந்த வீட்டிலுள்ள அனைவருமே அஞ்சுவார்கள்.
சமர் அயல்நாட்டு கலாச்சாரத்திற்கு உட்பட்டு பெண்கள் விசயத்தில் சற்று எல்லை கடந்து நடப்பதை இன்று வரை வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறான். ஏனெனில் தமிழக கலாச்சாரத்தை தன் உயிர்மூச்சாக கடைப்பிடிக்கும் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனின் தீய பழக்கங்களைப் பற்றி உறவினர் அறிய நேர்ந்தால் குடும்பத்தினுள் தேவையின்றி வீண் சலசலப்பு ஏற்படும் என்ற ஒரே காரணத்திற்காக மறைத்துவிட்டான். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்தாலும் குடும்பத்தினர் மீது அவன் அளவிடமுடியாத அன்பை வைத்திருக்கிறான்.அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் விஷயம் வீட்டிற்கு தெரியக்கூடாது என்று நினைத்தான்.
ஆனால் தற்போது அவர்களது வீட்டிலிருந்து அம்லு கிளம்பி அமெரிக்கா வந்தால் தன்னை பற்றிய விஷயங்கள் வீட்டிற்கு தெரிந்துவிடும் என்பது தான் அவனது தற்போதைய சஞ்சலம். அதற்கு காரணம் அம்லு அவனது பாட்டியின் செல்ல பேத்தி.
சிறுவயதிலிருந்தே இவன் செய்யும் சிறு சிறு தவறுகளை ஒன்றுவிடாமல் அப்படியே வந்து தனது பாட்டியிடம் ஒப்புவித்து திட்டு வாங்க வைப்பது தான் அவளது தலையாய கடமை. அதனால் அவளை கண்ணால் காண்பதில் கூட அவனுக்கு பிடித்தம் இல்லை. அவன் யாருடைய கட்டுப்பாடுமின்றி சுதந்திரமான சிந்தனையுடன் வாழ்வது, அமெரிக்காவிற்கு படிக்க வந்த இந்த வெகு சில வருடங்கள் தான். ஆனால் அந்த சுதந்திரத்தையும் நிம்மதியையும் பறிக்கவென அவள் இங்கே வருவாள் என்பது அவனே எதிர்பாராத ஒன்று.
‘இனிமேல் பெண்களோடு நெருங்கி பழக முடியாதே’ இது தான் அவனின் மிகப்பெரிய கவலை.
மேலும் அவனின் பாட்டி இருக்கும் வரை அவளின் வரவை அடியோடு தடுக்கமுடியாது என்பது தெரிந்ததினால் அவளை எப்படி இங்கிருந்து துரத்தலாம் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்திருந்தான் சமர்.
இவ்வாறாக கோபியரின் கண்ணனாக திகழும் சமர் ஒரு பெண்ணிடம் காதல் வயப்படுவான் என்று அவனிடம் யாவரேனும் கூறினால் நம்பி இருப்பானா?