சக்தி 27 அகவையுற்ற பெண்…பார்ப்பவரை வசீகரம் தோற்றமில்லை அவளிற்கு!
ஆயினும்,அவளும் அழகி தான்!
5 அடி இரண்டு அங்குல உயரம்,கோதுமை நிறம்,சுருள் சுருளான அழகான இரண்டடி உயர கூந்தல்,துறுப்புறுப்பான இரண்டு கருவிழிகள்,கூரான நாசி,அவளிற்கு உதடுகள் சற்றே வித்தியாசமாக இருக்கும்.
மேலுதடு சிறியதாகவும் கீழ் உதடு பெரியதாகவும் இருக்கும் அமைப்பு அவளுடையது.
அத்தோடு கனகச்சிதமான உடற்கட்டு இவை தான் சக்தியின் தோற்றம்!
நேர்த்தியாக பின்னப்பட்ட கூந்தல்,காதில் ஒரு குட்டி தங்க தோடு,நாசியில் ஒற்றை கல் வைத்த மூக்குத்தி,கழுத்தில் தங்க தாலி,கரத்தில் இரண்டு நெகிழி வளையல்,ஒரு சாதாரண ஷிபான் புடவை இவை மட்டும் தான் அவளின் அதிகப்பட்ச அலங்காரங்கள்!
வெளியில் செல்லும் போது சில நேரம் புடவைக்கு பதிலாக சுரிதார் இருக்குமே தவிர,ஒப்பனையில் பெரிதாக எந்தவொரு மாற்றமும் கிடையாது.
மற்றைய பெண்களை போல் அவளிற்கும் நன்றாக ஒப்பனை செய்து அழகான உடையணிந்து கணவனுடன் வெளியே செல்ல வேண்டும் என ஆசையாக இருக்கும்.
ஆனால் நினைப்பதெல்லாம் நடப்பதற்கு இவையொன்றும் திரைப்படம் அல்லவே?
ஏனெனில்,வெளியில் சென்றப்பிறகு அவன் குழந்தையை கையில் கூட வாங்கமாட்டான்.
தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அவனின் வேக நடைக்கு இணையாக அவள் தான் ஓட வேண்டியதாக இருக்கும்.
அவனோ ராஜா வீட்டு கன்றுக்குட்டி போல் நேர்த்தியாக அணிந்திருக்கும் உடை சிறிதும் கசங்காமல் தோரணையாக முன்னால் நடந்து செல்வான்.
அவளோ சம்பளம் வாங்காத வேலைக்காரி போல் குழந்தையை தூக்கியவாறு கால் வலிக்க மூச்சிறைக்க அவனின் பின்னால் ஓடி வருவாள்.
ஆனால் அவனிற்கோ மனைவியை பற்றிய அக்கறையில்லை…அவன் உயிரணுவில் உருவாகிய குழந்தையை பற்றியையும் அக்கறையில்லை.
அவனிற்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதவன் போல் நடந்து செல்லும் கணவனின் அட்டூழியத்தை பார்த்தவளிற்கு அப்படியொரு ஆத்திரம் வரும்.
அவனை மனதிற்குள் கண்டப்படி திட்டிக்கொள்வாள்.
வெளியில் அதே அமைதி தான் அவளிடம்!
‘கழுதைக்கு வாக்குப்பட்டால் அனுபவிச்சு தான் ஆகணும்’ என பெருமூச்சுடன் தனக்கு தானே கூறி பொறுத்துப்போவாள்.
ஆனால் அவளின் நிதானத்தை சோதிக்கும் தினமும் ஒரு நாள் வந்தது.
ஒரு நாள் பேரங்காடியில் வழக்கம் போல் உடை கசங்க,குழந்தையை தூக்க முடியாமல் மூச்சிறைக்க ஓடி வந்தவளை கண்ட அவளின் மணாளன் “கொஞ்சம் சீக்கிரம் தான் நடந்து வாவேன்டி…ஆமை மாதிரி நடந்து வர்றே?படமே போட்டிருவாங்க” என அவளிடம் எரிச்சலோடு அவன் சிடுசிடுத்தான்.
அவளோ களைப்பில் உடலெல்லாம் சோர்ந்துவிட “கொஞ்ச நேரம் குழந்தைய தூக்கு சிவ்வு…கையெல்லாம் வலிக்குது” என பாவமாக சொல்ல,
அவனோ அவளை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு “என்ன விளையாடிறீயா?அவனை தூக்கினால் என் டிரஸ் அயன் களைஞ்சிடும்” என்றான் அசிரத்தையுடன்.
அவளிற்கு வந்ததே ஆத்திரம்!
அவனின் முகத்தில் ஒரு குத்துவிட்டு நாசியிலிருந்து உதிரம் கொட்ட வைக்கும் வேகம் அவளிற்குள்!
அதே சீற்றத்தோடு “அப்போ நான் பிச்சைக்காரி மாதிரி வந்தால் பரவாயில்லையா சிவ்வு?” என அடிக்குரலில் சீற,
அவனோ “உன்னை யாரு டிரஸ் கசங்க கை வலிக்க அவனை தூக்கி வர சொன்னது…அவனை கீழே இறக்கி நடக்க வைச்சு கூட்டிட்டு வா…சிம்பிள்” என அலட்சியமாக தோளை குலுக்கி அணிந்திருந்த கொசவுசட்டையை இழுத்துவிட்டான்.
அவன் பேச்சில் இன்னும் அதிகமாக கடுப்பானவள் “அது எனக்கு தெரியாது பாரு…மூணு வயசு குழந்தையாலே எவ்வளவு தூரம் நடக்க முடியும் சிவ்வு…நைட்டு தூங்காமல் கால் வலிக்குதுனு அழுவான்…அப்புறம் விடிய விடிய நான் தான் அமுக்கணும்” என ஆற்றாமை கலந்த கோபத்தில் பேசினாள் சக்தி.
அதிக சப்தம் செய்யாமல் அதே கணம் சிறிது அழுத்தமாக அவளின் குரல் வெளிவந்தது.
அவனோ அவளிற்கு மீறிய அழுத்தத்துடன் “இதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது சக்தி…ஒரு குழந்தைக்கு தாய்னா இப்படி பல கஷ்டங்களை அனுபவிச்சு தான் ஆகணும்” என வியாக்கியானம் பேச,
அவளோ அவனை வெறித்துப்பார்த்தாள்.
‘அப்போ நீ யாரு?குழந்தைக்கு அம்மா நான் கஷ்டம் அனுப்பவிக்கணும்…தகப்பன் நீ ஜாலியா நடந்து வரணுமாடா?’ என உள்ளத்து கொதிப்புடன் தனக்குள்ளே குமுறினாள்.
அவனோ அவளின் குமுறல் அறியாமல் “எங்க அம்மாயெல்லாம் என்னை ஐந்து வயசு வரை எங்கனாலும் தூக்கிட்டு தான் போவாங்க…இத்தனைக்கும் ஒரு கையிலே என் அக்காவை பிடிச்சிட்டு போவாங்க தெரியுமா?நீயெல்லாம் ஒரு குழந்தைய பார்த்துக்கவே மூக்காலே அழறே” என நக்கல் தொனியில் அவளை காயப்படுத்தினான்.
‘உங்க அம்மா பண்ணால் நான் ஏன்டா பண்ணனும்?’ என அவளின் விழிகள் பேசிய மொழி அவனின் களிமண் நிறைந்த சிந்தைக்கு வழக்கம் போல் புரியவில்லை.
அவனோ “அவங்க அவ்வளவு பாசமா பார்த்துக்கிட்டதாலே தான் நாங்க இப்போ அம்மா மேலே பயங்கர பாசமா இருக்கோம்…அது மாதிரி நீ இந்த மாதிரி சில வலியெல்லாம் தாங்கினால் தான் நம்ப பையனும் நாளைக்கு உன்மேல பாசமா இருப்பான் சக்தி” என யோகி போல் அறிவுரை வேறு கூற,
அவளிற்கு மனமே வெறுத்துப்போனது.
‘போதும்டா சாமி…யப்பா…குழந்தைய தூக்க சொன்ன கொடுமைக்கு ஞானி மாதிரி தத்துவம் பேசிட்டு திரியறான்’ என அவனிடம் ஒரு வார்த்தை பேசாமல் கையறு நிலையில் நிசப்தத்தை கடைப்பிடித்தாள்.
அவனோடு போராடி அவளால் வெற்றிப்பெற முடியாது என்று இத்தனை வருட திருமண வாழ்க்கையில் தெரிந்துக்கொண்டதால்,வழமை போல் பேசாமடந்தையாகிப்போனாள்.
இறுதிவரை அவன் அவளிடமிருந்து குழந்தையை வாங்கவே இல்லை…
அன்று மட்டுமில்லை…அடுத்து அவளை அவன் எங்கு அழைத்து சென்றாலும் அவள் மட்டுமே குழந்தையை தூக்கி சுமக்கும் சுமைதாங்கியாகிப்போனாள்.
குழந்தையை மட்டுமல்ல…அவன் அவளிற்கு கொடுத்த வலிகளையும் சேர்த்து சுமந்தாள்.
தியாகத்தின் மறுவுருவம் அன்னை என்றால்,சுமையைக் கூட சுகமாய் தாங்கி சுமக்கக்கூடியவர்கள் இல்லதரசிகள் தான்!!
அதில் சக்தியும் விதி விலக்கல்ல.
அதனால் அவள் தன் அலங்காரங்களை முற்றிலும் அகற்றிவிடுவாள்.
அவள் அலங்காரம் செய்து வந்தாலும்,செய்து வந்த அலங்காரங்கள் எல்லாம் ஓடி வந்த களைப்பில் கரைந்து காணாமல் போயிருக்கும்.
அதனால் மெனக்கெட்டு எதற்கு ஒப்பனை என்று அலங்காரங்களையே தவிர்த்து விடுவாள்.
அன்று அவன் கொடுத்த அறிவுரைக்கு பிறகு அவள் அவனுடன் வெளியே செல்வதையே குறைத்துக்கொண்டாள்.
அதற்கும் அவளை சேர்த்து திட்டுவான்.
அவள் அதற்கெல்லாம் அசருவதே இல்லை.
சக்தி என்று பெயர் வைத்ததாலோ என்னவோ அனைத்தையும் தாங்கும் ஆதிசக்தியாகவே அவள் இருந்தாள்.
அன்று விடுமுறை தினம் என்பதால் சிவப்பிரகாஷ் வீட்டில் இருந்தான்.
அவன் ஒரு பிரபலமான வங்கியில் பணம் சேகரிக்கும் நிர்வாகியாக பணிப்புரிவதால் அவனிற்கு பெரும்பாலும் அலுவலகத்திற்கு வெளியில் தான் வேலை.
வாடிக்கையாளர்களிடம் கறாராக பேசி பழகியதினால் மனைவியையும் அவன் கடனாளி போலவே நடத்துக்கிறானோ என்று அவளிற்கு தோன்றும்.
ஆனால் அவள் ஒன்றும் அவன் வசூலிக்க செல்லும் வாடிக்கையாளர் கிடையாது.அவள் தான் அவனின் வாழ்க்கை என யாரேனும் எடுத்து கூறினால் நன்றாக இருக்கும் என எண்ணிக்கொள்வாள்.
அவளிற்கு ஆதரவாக பேசிவிட அவளின் தந்தையை தவிர வேறு யாருமில்லை.
அவரோ வாயே பேச தெரியாத அப்புராணி மனிதர்!
அதையெல்லாம் எண்ணி பெருமூச்சு விட்டாள் சக்தி.
தற்போது அவளின் கணவன் குழந்தையை தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
அந்த மதலையும் தகப்பனோடு நெஞ்சில் முட்டிமோதி கிளுக்கி சிரித்து விளையாடியது.
“ஹே தங்கம்…அப்பாவுக்கு ஜானி ஜானி எஸ் பாப்பா…ரைமஸ் சொல்லுங்க பார்ப்போம்” என கொஞ்சலாக சொல்ல,
குழந்தையும் “ஜாதி ஜாதி எஸ் பாப்பா…இதிங் சுவர் நோ பாப்பா…” என தலையாட்டி சிரித்துக்கொண்டே பாடவும்,
“ஏதே ஈட்டிங் சுவரா?” என கேட்டு வாய்விட்டு கலகலவென சிரித்தவன்,
“அடேய் அது ஈட்டிங் சுகர்…சுகர்…சுகர் சொல்லு…சுகர்…” என மகனிற்கு பாடம் எடுத்துக்கொண்டு இருக்க,
‘இதுக்கொண்ணும் குறைச்சலில்லை’ என அவள் முனகினாள்.
குழந்தையோ தகப்பன் கற்றுக்கொடுத்தது போலவே “சுவர்…சுவர்…சுவர்…” என கைதட்டி சரியாக தவறாக சொல்ல,
“எங்கடா இவன்?தப்பு தப்பா சொல்லறான்?கிச்சு கிச்சு மூட்டறேன் இரு இவனை” என குழந்தைய மடியில் படுக்க வைத்து கிச்சுகிச்சு மூட்டியதும் குழந்தை வாய்விட்டு சிரித்தது.
அன்று பேரங்காடியில் குழந்தையை தூக்க மறுத்த ஆடவன் இன்று குழந்தையுடன் விளையாடியதை பார்க்க அவளிற்கு எரிச்சலாக வந்தன.
‘கொஞ்சும் போது மட்டும் அவன் மவன்…மத்த நேரத்திலே சீண்ட கூட மாட்டான்…இந்த சின்னக்குட்டியும் பார்றேன் அவன்கிட்ட சிரிக்கிறதை’ என மனதிற்குள் இருவரையும் பொருமிக்கொண்டே கீரையை பிய்த்துப்போட்டாள்.
கணவனை துண்டு துண்டாக பிரிக்க முடியாததால் கீரையை ஆவேசமாக பிடுங்கிக்கொண்டிருந்தாள்.
அதுவரை அனைத்தும் சரியாக நடந்திருக்க,திடீரென்று வீடே அதிர “சக்தி…” என பல்லைக் கடித்து கத்தினான்.
‘ஆரம்பிச்சிட்டான் ஸ்பீக்கர் முழுங்கி’ என சலிப்பாக புடவை முந்தானையை இழுத்து சொருகி அவனிடம் வர,
அவனோ குழந்தையை தூக்கி அந்தரத்தில் பிடித்து தள்ளி நிறுத்தியிருப்பதை பார்த்து “என்ன சிவ்வு?” என அவள் கேட்க,
“ப்ச் சக்தி…உன் பையன் பாரு மடியிலே வைச்சு விளையாடின கொடுமைக்கு என் மேலே உச்சா போயிட்டான்…இந்தா இவனை பிடி முதல்ல…” என முகத்தை அஷ்டக்கோணலாக வைத்தப்படி அவளிடம் குழந்தையை கொடுத்தான்.
கிட்டத்தட்ட குழந்தையை தூக்கியெறியாத குறையாக இருந்தது அவனது சைகை!
அவளிற்கு ஆத்திரம் என்றால் அப்படியொரு ஆத்திரம்!
அவன் குழந்தையை ஏதோ அசிங்கத்தை தொடுவது போல் தூக்கி தூர நிறுத்தியிருந்த விதம் அவளிற்கு எரிமலையை வெடித்து சிதற வைத்தது.
‘இது உன் குழந்தை தானேடா?வேற எவன் குழந்தையா என்ன?உச்சா போனால் இப்போ ஒரு இன்ச் குறைஞ்சிடுவியா என்ன?’ என கேட்டு விட அவளின் மனம் துடித்தன.
அவனிடம் அந்த கேள்வியை கேட்டால் அவளின் பெண்மையை அவளே இழிவுப்படுத்துவது போல் என்றெண்ணி தன்னையே கட்டுப்படுத்தி கொண்டாள்.
ஆயினும் அவனை அப்படியே விட மனமின்றி “சிவ்வு இது உன் குழந்தை தானே உச்சா போனால் என்ன?” என வெகுண்டுப்போய் வினவினாள்.
அவனோ ஆடையை உதறிக்கொண்டு “என்னடி லூசு மாதிரி உளருறே?இப்போ தானே குளிச்சிட்டு வந்தேன்…ஒரு நாளைக்கு எத்தனை தடவை குளிக்கிறது?உன் பையன் இருக்கானே?” என சலிப்பாக அவளின் கையிலிருந்த குழந்தையின் கன்னத்தில் இடிக்க,
குழந்தையோ தந்தையின் உதாசீனம் கூட அறியாமல் “அம்மா அப்பா மேதே உச்சா போயித்தேன்” என வாயை பொத்தி கிளுக்கி சிரிக்க,
“சிரிடா சிரி…உன்னையும் உன் அம்மாவையும் அடி வெளுக்கப்போறேன்…மூணு வயசாகுது…இன்னும் பாத்ரூமிலே போய் உச்சா போக கத்து தரலை உன் அம்மா…வீட்டுலே சும்மா இருந்து என்ன தான் பண்ணறாளோ?போடி” என தாய் மகன் இருவரையும் ஒரு சேர திட்டிக்கொண்டு மீண்டும் குளியலறைக்கு சென்றான்.
அவனிற்கும் இந்த குடும்பத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்தது அவனின் பேச்சும் செயலும்!
அந்த ‘சும்மா இருந்து’ என்ற வார்த்தை அவளை மிகவும் காயப்படுத்தியது.
அவன் சொல்வது போல் அவள் ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக அமருபவள் கிடையாது.
எப்போதும் எறும்பு போல் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருப்பாள்.
அவ்வளவு ஏன்?
திருமணமாகி குழந்தை பிறக்கும் வரை முப்பதாயிரம் வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த பெண் தான் அவள்!
ஆனால் குழந்தை பிறந்த பிறகு வீட்டையும் குழந்தையும் கவனித்துக்கொள்வதற்காக அவனின் கோரிக்கையின் பெயரில் வேலையை விட்டாள் அவள்.
அன்று ஆரம்பித்தது இவையெல்லாம்!
“சக்தி நீ வேலையை விடுடி…நான் தான் கை நிறைய சம்பாதிக்கிறனே…உன்னை ராணி மாதிரி பார்த்துக்கிறேன்” என்று தேன் தடவிய குரலில் பேசிய ஆடவன் அவளை பார்த்துக்கொள்ளும் லட்சணம் இது தான்!
அவள் அவனை ராணி போல் என்று நினைக்கும் போதே அவளின் இதழில் ஒரு கசந்த முறுவல் ஒன்று தோன்றின.
கூடவே,அவளுள் ஒரு சீற்றமும் உருவாகின.
அவளிற்கு வந்த ஆத்திரத்திற்கு குழந்தையின் சிறுநீரை பிடித்து சென்று அவன் தலையில் ஊற்றி குளிப்பாட்டி விடும் வெறி எழுந்தது.
அதற்குள் அவளின் மகனோ “அம்மா அம்மா ஜத்தி ஈயமா இக்கு…மாத்து…மாத்து…” என அவளின் இடையில் அமர்ந்துக்கொண்டு துள்ளி குதிக்க,
“அப்பனுக்கு தப்பாமல் பொறந்திருக்காடா நீ?” என அவனின் கன்னத்தில் இடித்துக்கொண்டு குழந்தையை அறைக்கு அழைத்து சென்றாள்.