சமையலறையில் பணிப்புரிந்து கொண்டிருந்த சக்தி அன்றைய நாளில் நூறாவது முறையாக பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள்.
திருமணமாகி நான்கு வருடங்கள் கடந்துவிட்டிருந்தது.
இந்த நான்கு வருட திருமண வாழ்வை அவள் திரும்பி பார்த்தால் அவளிற்காக வாழ்ந்த நாட்கள் என்பது மிகவும் குறைவு தான்!
குறைவு என்பதை காட்டிலும் பூஜ்ஜியம் என்பது தான் சரியான கூற்றாகும்.
கடந்த நான்கு வருடங்களாக அவளின் வாழ்க்கை எவ்வித பிடிப்பும் இல்லாமல் அலுப்பும் சலிப்புமாகவே கடந்தன.
பிடிப்பற்ற அந்த வாழ்விற்குள் அவளை இழுத்துப் பிடித்து வைத்திருந்தது அவளின் மூன்று வயது குழந்தை கணேஷ்!
திருமணத்திற்கு பிறகு அவளிற்கு உருப்படியாக நடந்த ஒரு நல்ல விஷயம் அவன் மட்டுமே!
சில நேரங்களில் அதை நினைத்து அவளால் மகிழ்ச்சியுறவே முடியாது.
காரணம்,அவளின் கணவன் சிவப்பிரகாஷ்!
அவனது பெயரில் மட்டுமே சிவம் இருந்தது.
ஆனால் ஆண் பெண் இருவருக்கும் எவ்வித பேதமில்லை…இருவரும் சமம் என அகிலத்திற்கே எடுத்துக்காட்டிய சிவப்பெருமானின் கூற்றுக்கு நேர்மறையானவன் சிவப்பிரகாஷ்.
அதற்காக பெண்கள் அனைவரும் தன் காலிற்கு கீழே என்று எண்ணும் ஆணவ ரகமும் இல்லை அவன்!
அவனிற்கு அவன் மனைவி ஒரு தாலிக்கட்டி கூட்டி வந்த ஒரு அடிமை என்ற திண்ணம்!
அதனால் தன் சக்திக்கு தேவையான அடிப்படை உரிமையை கூட வழங்காமல் கடந்த வருடங்களாக அவளை வேலைக்காரியாக மட்டுமே நடத்திக் கொண்டிருந்தான்.
அவளிற்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது.
ஒரு சில சமயங்களில் ‘இந்த வாழ்க்கையே வேண்டாம்…எங்காவது ஓடிவிடலாமா?’ என்று கூட அவளிற்கு தோன்றும்.
சமுதாயம் என்னும் தழைகளுக்கு கட்டுப்பட்டு ஒட்டுதல் இல்லாத வாழ்வை பழுதுப்பார்த்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் சக்தி.
அவள் சமையலறையில் இருந்த சமயம் “சக்தி சாப்பாடு ரெடியா?எனக்கு ஆபிஸுக்கு நேரமாச்சுடி” என அவளின் கணவன் சிவப்பிரகாஷ் வெளியிலிருந்து கத்தினான்.
அவனின் குரல் கேட்டதும் அவளின் முகம் அஷ்டக்கோணலாகியது.
“வர்றேன்…வர்றேன்…” என கடுப்பாக பல்லைக்கடித்தவள் ‘எனக்கு மட்டும் ஏழு கையா இருக்கு?எல்லாத்தையும் நானே செய்யணும்னா என்ன தான் செய்யறது?’ என எரிச்சலுடன் முணுமுணுத்தவாறு சுட்டுக்கொண்டிருந்த தோசையை தட்டில் வைத்து எடுத்துச்சென்றாள்.
அவளும் என்ன தான் செய்வாள்?
காலையில் எழுந்தலிருந்து வாசலை பெருக்கி கோலம் போட்டு,குளித்துவிட்டு கணவனை எழுப்பி கொட்டை வடிநீர் கொடுத்து,அதேப்போல் குழந்தையை எழுப்பி அதனையும் பால் குடிக்க வைத்து,மீண்டும் அவர்கள் இருவரையும் குளிக்க வைத்து தயார் செய்து,காலை மற்றும் மதிய உணவுகளை சமைத்து கணவனை வழியுனுப்பி,பின்பு மகனை அழைத்து சென்று பால்வாடி பள்ளியில் விட்டு வந்து,மீண்டும் வீட்டிலிருக்கும் மற்றைய பணிகள் அனைத்தையும் அவள் ஒருவளாக பார்த்து ஓய்வதற்குள் மகனை பள்ளிலிருந்து அழைத்து வரும் நேரம் வந்துவிடும்…பள்ளியிலிருந்து அழைத்து வந்த குழந்தையை கை கால் கழுவி சாப்பிட வைத்து உறங்க வைத்தவளிற்கு அடுத்த வேலை தயாராக காத்திருக்கும்.
மொட்டை மாடியில் துவைத்து காய வைத்திருந்த துணியை எடுத்து வந்து மடித்து அதற்குரிய இடத்தில் வைத்து நிமிர்வதற்குள் அவளின் கணவன் அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்துவிடுவான்.
பிறகு அவளிற்கு ஓய்வெடுப்பதற்கு எங்கனம் நேரம் இருக்கும்?
அவனிற்கு தேவையான சிற்றுண்டியை தயாரித்து முடிப்பதற்கும் குழந்தை உறங்கி எழுவதற்கும் சரியாக இருக்கும்.
ஓடிக்கொண்டிருக்கும் குழந்தையின் பின்னோடு ஓடி ஆடி விளையாட்டிக்காட்டி அந்த சிற்றுண்டி உணவை ஊட்டி முடிப்பதற்குள் இரவு உணவு வேளை வந்துவிடும்.
அதற்கான உணவை தயாரித்து குடும்பமாய் உணவை உண்டுவிட்டு அன்றைய நாள் களைப்பு அனைத்தையும் உறக்கத்தில் ஈடு செய்யலாம் என்று படுக்கையில் வந்து விழுந்தால் அவள் கணவன் வந்து அவளை அணைப்பான்.
“சிவ்வு டையர்டா இருக்கு” என அவள் சோர்வாக கூறினால்,
“ப்ச் எப்போ பாரு டையர்டா இருக்குனு சொன்னால் என்னடி அர்த்தம்?பிளீஸ்” என அதட்டலும் கெஞ்சலுமாய் கேட்பவனிடம் அவளால் மறுக்க முடியவில்லை.
மறுக்க நினைத்தாலும் அவளால் மறுக்க முடியாது.
நினைத்ததை சாதித்து கொள்ளும் ரகம் அவன்!
அவன் அவளை விடுவிக்கும் போது மணி பன்னிரெண்டை தொட்டிருக்கும்.அப்போது உறங்கி மீண்டும் அதிகாலை ஐந்து மணிக்கு எழும் போது அவளின் ஓட்டம் தொடங்கிவிடும்.
விளம்பரத்தில் வருவது போல் ‘டையர்டா எனக்கா நெவர்’ என சொல்லிக்கொண்டு பம்பரமாய் சுற்றி சுழன்று வேலை பார்ப்பாள் சக்தி.
பெயரிலே சக்தி இருப்பதாலோ என்னவோ பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஆற்றலையும் பெற்றவள் போல் ஓயாமல் வேலை செய்வாள்.
அனைத்து வேலைகளையும் அவள் ஒருவளாக செய்வதில் கூட அவளிற்கு பிரச்சனையில்லை.
அவனிடம் அவள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்று மட்டும் தான்!
அவனின் அக்கறையான வார்த்தைகள்!
‘நீ சாப்பிட்டியா?இன்னைக்கு ரொம்ப வேலையா?வாம்மா கொஞ்ச நேரம் ஓய்வெடு’ என இப்படியான அன்பை பரிமாறிக்கொள்ளும் அனுசரணையான சைகையை மட்டுமே அவள் எதிர்பார்த்தாள்.
ஆனால் அவனிற்கோ அவன் மட்டுமே அலுவலகத்தில் முதுகு ஒடிய வேலை பார்க்கிறான்.
அவள் வீட்டில் காலாட்டியவாறு சாப்பிட்டு கொண்டிருக்கிறாள் என்ற மேலாதிக்க மனோபாவம்!
ஒரு நாள் உணவருந்த அமரும் போது அவள் தண்ணீர் கொண்டு வர மறந்துவிட்டாள்.
திடீரென்று விக்கல் வர “சிவ்வு..க்வ்.. கொஞ்சம் தண்ணீ எடுத்திட்டு வாவேன்..க்வ்” என திணறிக்கொண்டே சொல்ல,
அவனோ மட்டைப்பந்து விளையாட்டில் கவனமாக இருந்தவாறே “ப்ச் பார்த்தா தெரியலை…நான் மேட்ச் பார்த்திட்டு இருக்கேன்…நீயே போய் எடுத்துக்கோடி” என அவளின் முகத்தை பாராமல் கூட பதில் கூறியவன் ”ஹே சிக்ஸு” என கூச்சலிட்டு உற்சாகமாய் ஆர்ப்பரித்தான்.
இங்கு அவனின் மனைவி தொண்டையில் உணவு அடைக்க தவித்துக் கொண்டிருக்க,அவனிற்கோ அவளை விட தோனி ஆறு அடிப்பது தான் முக்கியமாக இருந்தன.
அவளிற்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது.
தவிக்கும் வாயிற்கு ஒரு வாய் தண்ணீர் எடுத்து வந்து தர மறுக்கிறான் என்றால் அவளின் வாழ்வு எப்படியானதாக இருக்கும்?
நரகமே அல்லாத நரகத்தில் வாழ்ந்து பல கொடுமைகளை அனுபவித்து கொண்டிருக்கிறாள் அவள்.
இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் தன் மனைவியை அவன் வாட்டி வதைப்பதை கூட அறியாமலே அவளை தினந்தோறும் சித்திரவதை செய்துக்கொண்டிருந்தான் சிவப்பிரகாஷ்.
அவன் நினைத்திருந்தால் மனைவியை நடக்க வைக்காமல் அவனாகவே தோசையை சமையலறைக்கு சென்று வாங்கி வந்திருக்கலாம்.
ஆனால் அவள் தான் ஒவ்வொரு தோசையாக சுட்டு எடுத்து வர வேண்டும்.
மொத்தமாக சுட்டு எடுத்து வந்தாலும் அவன் ஒத்துக்கொள்ளமாட்டான்.
அவனின் தாய் அவனிற்கு சூடாக சமைத்து பரிமாறியே பழக்கம் என்பதால் சுடச்சுட தோசையை வார்த்து வந்து அவனிடம் அவள் கொடுக்க வேண்டும்.
இதில் அநியாயம் என்னவென்றால் அவன் ஒரு தோசை பிரியன்!
அதனால் ஒரு வேளைக்கு எத்தனை தோசை அவன் வயிற்றினுள் செல்கிறது என்பது கணக்கே இல்லை.
அவனிற்கு தோசை என்றால் கொள்ளை பிரியம்!
மூன்று வேலையும் தோசை செய்துக்கொடுத்தாலும் அவன் சலிக்காமல் சாப்பிடுவான்.
ஆனால் அவளிற்கு தான் அவனிற்கு தோசை சுட்டு தருவதற்குள் களைத்துவிடும்.
பின்பு ஒவ்வொரு தோசைக்காகவும் வரவேற்பறைக்கும் சமையலறைக்கும் நடந்துக்கொண்டிருப்பதால் உடல் சோர்ந்துவிடும்.
அவளின் சேமித்து வைத்த ஆற்றல் மொத்தமும் நடந்தே தீர்ந்துவிடும்.
இதில் அவனிற்கு மதிய உணவை சமைத்து டப்பாவில் அடைத்து தர வேண்டும்.அது ஒரு பக்கம் நடந்தே ஆக வேண்டிய கட்டாயம்!
அவள் சமைத்து தருவதற்கு சிறிது தாமதமானால் கூட “ப்ச் சக்தி எனக்கு நேரமாச்சுடி…எனக்கு சாப்பாடு வேணாம்…ஒண்ணும் வேணாம்…நான் ஆபிஸ் கேன்டினிலே போய் சாப்பிட்டுக்கிறேன்…போடி” என திட்டிவிட்டு கிளம்பிவிடுவான்.
அதன்பிறகு அவள் சமைத்த உணவை அன்றைய நாள் மதியம்,இரவு,அடுத்த நாள் காலை என மூன்று வேளையும் அவளே தின்று தீர்க்க வேண்டும்.
ஏனெனில்,துரை பழைய உணவையெல்லாம் சாப்பிடமாட்டார்.
இப்போதும் அவனிற்கு தோசை ஊற்றியே அவள் களைத்துப்போயிருக்க,அவனிற்கு அவற்றினை உண்பதில் சோர்வில்லை போலும்!
பத்து தோசைக்கு மேல் அவன் வயிற்றுக்குள் சென்றிருந்தது.
யாரும் அவனை பார்த்தால் பத்து தோசைக்கு மேல் சாப்பிடுபவன் அவன் என்று நம்பவே மாட்டார்கள்.
அந்த அளவு அவன் உடலை கனக்கச்சிதமாக வைத்துக்கொள்வான்.
ஆனால் அவளிற்கு தான் ஒரு கட்டத்தில் ஆத்திரமாக வந்தது.
அவள் அந்த கோபத்தில் “சிவ்வு எனக்கு அடுப்புக்கிட்ட நிறைய வேலை இருக்கு…நீயே வந்து ஒவ்வொரு தோசையா வாங்கிலாமில்லை” என்று சொல்லிவிட்டால்,
அவனோ “சும்மா தானே டி நீ வீட்டுலே இருக்கே…இதை கூட பண்ணமாட்டியா நீ?” என அவளிற்கு தக்கப்பதிலடி கொடுப்பான்.
அவனின் பேச்சில் அவளிற்கு சுருக்கென்று தைக்கும்.
‘நான் சும்மா இருக்கிறதை நீ பார்த்தியாடா?’ என கேட்டிவிட அவள் நாவு துறுதுறுத்தாலும் வீணாக பிரச்சனைகள் வேண்டாம் என்று வாயை அடக்கிக்கொள்வாள்.
தன் எரிச்சலை அடக்கிக்கொண்டு அவனிற்கு தோசை சுட்டு அவனின் தட்டில் அடுக்கினாள்.
அவனும் ஒரு வழியாக தோசையை வயிற்றில் அடுக்கிக்கொண்டு “போதும்டி…வயிறு ஃபுல்” என வயிற்றை நீவி கைகழுவி எழுந்துக்கொண்டான்.
அவளின் முகம் சோர்ந்திருப்பதை பார்த்துவிட்டு “ஏன்டி உன் மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு…புருஷனுக்கு சாப்பாடு பரிமாறும் போது சிரிச்சிட்டே பரிமாறணும்…அது தான் நல்ல பொண்ணுக்கு அழகு” என அறிவுரை வேறு கூற,
அவளோ “ஈ போதுமா?” என முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி சிரிக்க,
அவனோ பயந்தவன் போல் “ஆத்தி காட்டேரி…போதும்…போதும்…இனி நானே கேட்டாலும் சிரிக்காதே தாயே” என சொல்லி சிரிக்க,
அவளின் முகம் உம்மென்று இருந்தது.
‘இவ திருந்தமாட்டாள்’ என உள்ளுக்குள் சலித்தவனிற்கு அவளின் துயரங்கள் தெரியவில்லை.
தன்னையறியாமலே அவளை காயப்படுத்தி கொண்டிருப்பதை அறியாமல் மெத்தனமாய் சுற்றி திரிந்தான் அவன்.
“சரி…சரி நான் போன பிறகு நிம்மதியா காலாட்டிட்டு தூங்கு…பை” என குத்தலாக சொல்லி சிரித்தவாறே அலுவலகம் சென்றுவிட்டான்.
அவன் அலுவலகம் சென்ற பிறகே அவளிற்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
‘ஹப்பாடா’ என பெரிய யுத்தத்தில் வென்றது போல் வியர்வையை துடைத்து கீழே போட்டுவிட்டு திரும்பியவளை வரவேற்றது அவன் சாப்பிட்டு கைகழுவிய தட்டு!
ஏனோ அவன் உணவருந்திய எச்சில் தட்டு அவளை கண்டு கேலி செய்து இளிப்பது போலிருக்க,அவள் முகத்தை சுழித்தாள்.
திருமணத்திற்கு முன்பு வரை அவளின் எச்சில் தட்டை கூட கழுவியிராத மங்கை அவள்!
இப்போது தினந்தோறும் அவனின் எச்சில் படிந்த தட்டை கழுவி வைப்பதே தலையாய கடமையாக இருந்தது.
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை அவள் திருமணத்திற்கு பிறகு தான் உணர்ந்தாள்.
பிறந்தகத்தில் அமர்ந்த இடத்திலிருந்து தாயை ஏவி வேலை வாங்குவாள்.அச்சமயமெல்லாம் அவளின் தாய் அவர்களிடம் காரணமின்றி எரிந்து விழுவார்.
அப்படி தான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.
இப்போது தான் அவரின் அந்த கோபத்திற்கு பின்பிருந்த வலி அவளிற்கு புரிந்தன.
அதனால் இறந்த தன் தாயிடம் ‘சாரிம்மா’ என கலங்கிய கண்களோடு வானத்தை பார்த்து மன்னிப்பு வேண்டினாள் காரிகை.
ஒருவர் இருக்கும் வரை அவரின் அருமைகள் யாவருக்கும் தெரிவதில்லை.
அவர் உயிருடன் இருந்த சமயத்தில் ஒரு நாளும் தாயிற்கு உரிய மரியாதையை அவள் வழங்கியதில்லை.
அவரை ஒரு இலவச அடிமைப்போலவே அவளின் குடும்பத்திலுள்ள அனைவரும் நடத்தினார்கள்.
அவர் அனுபவித்த துயரங்களுக்கு சம்பளமாய் தான் அவளிற்கு இந்த வாழ்வு கிடைத்திருக்கிறதோ என்றெல்லாம் சில நேரம் அவள் எண்ணிக்கொள்வாள்.
தாயின் நினைவில் சில நிமிடம் கலங்கிப் போய் நின்றிருந்த சக்தியின் முந்தானையை யாரோ பிடித்து இழுத்தார்கள்.
அதில் தன் கவனம் களைந்த சக்தி கீழே குனிந்து பார்க்க,அவளின் மூன்று வயது மகன் கணேஷ் தான்!
“அம்மா தூக்கு…தூக்கு” என கையை தூக்கி எக்கி காட்டிக்கொண்டிருக்க,
அவனை பார்த்தவுடன் அவளின் கவலைகள் எல்லாம் காற்றடித்த பஞ்சாய் பறந்துப்போக “என்னடா அம்மா தூக்கணுமா?வாங்க…வாங்க..” என இதழில் வருவித்த புன்னகையுடன் அவனை தூக்கிக்கொண்டாள்.
அவளின் கன்னத்தில் இப்போதும் கண்ணீர் துளிகள் எஞ்சியிருந்தன.
அதனை துடைக்க மறந்த தாயின் கண்ணீரை கண்ட குழந்தையோ “அம்மா அதுயா?” என தன் மழலை மொழியில் கேட்க,
அவளோ “இல்லைடா கன்னுக்குட்டி…அம்மா பிரேவ் கேர்ள்…நான் அழமாட்டேன்” என சிரித்தப்படி சொல்ல,
“நோ..நோ..நீ அதுக்கே…” என பிடிவாதமாக கூறினான் பாலகன்.
அவனிடம் அவளால் எதையும் மறைக்க முடியாது.
சிறு குழந்தை என்றாலும் அவன் புத்திசாலியாக இருந்தான்.
அதில் அவளின் புன்னகை விரிந்தன.
அவளை மேலும் நெகிழ வைக்கும் விதமாக “கத்துக்குட்டி அத்தா அம்மா கிஸ் பண்ணுவா…நா கிஸ் பண்ணா அம்மா க்ரை போயிதும்…அப்பி தானேமா” என தலையாட்டி பேசிய குழந்தையின் பாவனையிலும் பேச்சிலும் அப்படியே உருகி விட்டாள் அந்த இளம் அன்னையானவள்.
அத்துணை நேரமாக அவளினுள் இருந்த விரக்தி,வருத்தம், கோபம்,ஆதங்கம் எல்லாம் அவளுள் பறந்துப்போயின.
அவளோ ஆனந்தத்தில் கண்கள் கலங்க “ஆமாடா என் செல்லமே…இந்த கன்னுக்குட்டி அம்மாவை தொட்டாலே அம்மாவோட வருத்தம் எல்லாம் பறந்துப்போயிடும்” என சிரித்துக்கொண்டே சொல்ல,
“அப்ப நா கித் பண்ணதேன்” என தலையை உருட்டிக்கொண்ட குழந்தை வெறும் வார்த்தையோட நிறுத்தாமல் அவளின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு அவ்விடத்தில் முத்தம் கொடுத்தது.
குழந்தையின் மென் ஸ்பரிசம் அவளின் கன்னத்தை தீண்டிய நொடியே அவளின் மேனி சிலிர்த்தன.
அவளிற்கு ஏனோ இறந்த அவளின் தாயே மீண்டு வந்து அவள் துயர் துடைத்தது போல் இருந்தது.
அவள் மெய்மறந்து சில நொடிகள் நின்றிருக்க குழந்தையோ “ஐய் அம்மாக்கு நா கித் பண்ணிதேன்…அம்மா க்தை போயிதும்” என கைத்தட்டி கிளுக்கி சிரிக்க,அவளின் இதழ்களிலும் இலேசாக முறுவல் பூத்தது.
அவளின் பிடிப்பற்ற வாழ்வை இழுத்து பிடித்திருந்த அச்சாரம் அவன் மட்டும் தான்!
அவனிற்காக எதையும் தாங்கலாம் என்று அவளின் மனம் உரக்க கூறின.
ஆயினும்,அசிரத்தையாக இருக்கும் கணவனை எண்ணி அவளின் நெஞ்சம் விம்மவும் செய்தன.