“தி வீல்ஸ் ஆன் தி பஸ் கோ ரவுண்ட் அன்ட் ரவுண்ட் ரவுண்ட் அன்ட் ரவுண்ட்…” என மும்பையிலுள்ள அந்த மிகப்பெரிய வெண்ணிற பங்களாவே கிடுகிடுக்கும் வகையில் தொலைக்காட்சியில் பாடலை அலற விட்டுக் கொண்டிருந்தார்கள் இரண்டு வாண்டுகள்.
பாடல் தான் பெரும் இரைச்சலோடு அலறிக்கொண்டிருந்தது என்றால்,அதனுடனே இணைந்து ஒரு வளர்ந்த குமரியும் நான்கு வயது மதலையும் உற்சாக கூச்சலிட்டு கத்த வேறு செய்தார்கள்.
அவர்கள் இருவரது சத்தம் கேட்டு பதறியடித்து அங்கு ஓடி வந்தாள் செவிலிய பெண்ணவள் ஸ்வேதா.
குழந்தையை உடனிருந்து பார்த்துக்கொள்வதற்காக பிள்ளையின் தகப்பனான ருத்ர பிரதாப் மல்ஹோத்ராவால் சிறப்பு பணிப்பெண்ணாக நியமிக்கப்பட்டவள் தான் இவள்.
வேகமாக உள்ளே நுழைந்த ஸ்வேதா அங்கு கண்ட காட்சியில் ஒரு கணம் உறைந்து நின்றுவிட்டாள்.
ஏனெனில்,ருத்ர பிரதாப்பின் ஒற்றை வாரிசான நான்கு வயது அஜய் மல்ஹோத்ராவும் அவனுடனே வளர்ந்த குமரியான சைத்ராவும் இணைந்து நடனமாடியவாறே பாடிக்கொண்டிருந்தாள்.
அந்தவொரு காட்சி அவளது விழியை நிரப்பி இதயத்தை நிறைக்க,அவை அத்துணை அழகிய கவிதையாய் இருந்தது.
“தி வைப்பர்ஸ் ஆன் தி பஸ் கோ ஸ்விஷ் ஸ்விஷ் ஸ்விஷ்…” என மீண்டும் அவர்கள் சத்தமாக பாடத்தொடங்கவும்,
எங்கு அவர்களது சத்தம் அந்த வீட்டில் உள்ளவர்களின் கோபத்தை தூண்டிவிடுவமோ என அஞ்சிய காரிகையோ “சைத்தும்மா மெதுவா…மெதுவா…ஏன் இவ்வளவு சத்தமா பாட்டு பாடறீங்க?” என கேட்டுக்கொண்டே தொலைக்காட்சியின் இயக்கியை எடுத்து சத்தத்தை குறைத்தாள்.
அவளை அங்கு கண்டவுடன் உற்சாகமான சைத்ரா “அட ஸ்வேத் நீயும் வந்துட்டியா?வா…வா…கரெக்ட்டான டைமுக்கு தான் வந்திருக்கே…எங்களோட ஜாயின் பண்ணிக்கோ…வா” என அவளின் கையையும் பிடித்து “வீல்ஸ் ஆன் தி பஸ் கோ ரவுண்ட் அன்ட் ரவுண்ட்…” என அவளையும் தன் கைப்பாவையாக்கி நடனமாட வைத்து ஒரு சுழற்று சுழற்றிவிட, அணிந்திருந்த புடவை தடுக்கி தடுமாறினாள்.
மீண்டும் ஒரு முறை அவளின் கையை பிடித்து சுழற்றவும்,அவளிற்கு தலைகிறுகிறுத்தது.
“ஐய்யோ விடு சைத்து…தலைசுத்துது” என அவளது பிடியிலிருந்து வெளியே வந்து தலையை தாங்கியப்படியே தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள் ஸ்வேதா.
“ஸ்வேமா என்னாச்சு?” என நான்கு வயது குழந்தை ஓடிச் சென்று அவளின் ஒரு கரத்தை பிடித்துக்கொள்ள,
“ஓ…சாரி ஸ்வேத்…உனக்கு சுத்திவிட்டா மயக்கம் வரும்ன்றதை மறந்துட்டேன்…சாரி” என சைத்ராவும் முகம் வாடி அவளின் மற்றொரு கரத்தை பிடித்தாள்.
தனக்காக இவர்கள் இருவரும் வருந்துவது பிடிக்காமல் இருவரின் கரங்களையும் தன் கைக்குள் வைத்து அடக்கியவள் “நத்திங் டியர்ஸ்…இலேசா தலை சுத்துச்சு…அவ்வளவு தான்…இப்போ ஐயம் ஓகே” என பளீச்சென்று புன்னகைக்க,
அதன்பிறகே அவர்களும் ‘அப்பாடி’ என சோகம் மறந்து சிரித்தார்கள்.
ஸ்வேதாவின் மீது அவர்களுக்கு கொள்ளை பிரியம்!
அவளது முகம் இலேசாக வாடினால் கூட பிள்ளை மனம் கொண்ட இவர்கள் இருவராலும் தாங்கிக்கொள்ள முடியாது.
அஜய் மல்ஹோத்ரா தான் நான்கு வயது குழந்தை என்றால்,சைத்ராவும் ஒரு வளர்ந்த குழந்தை தான்!
சைத்ரா இந்த வீட்டின் வாரிசாக இருந்தாலும் அவள் இத்தனை வருடங்களாய் தனிமையிலே வாழ்ந்து வந்தாள்.
அவளது தனிமையை போக்கும் வரப்பிரசாதமாக அவளிற்கு கிடைத்தவர்கள் தான் குழந்தை அஜயும் செவிலியப்பெண் ஸ்வேதாவும்!
பணம் அவளின் காலுக்கடியில் கொட்டி கிடந்தாலும் அவளின் மனம் ஏங்கியதெல்லாம் பாசத்திற்காக மட்டுமே?
அந்த பாசமும் அன்பும் ஸ்வேதாவின் வழியாக அள்ள அள்ள குறையாத அட்சயப்பத்திரமாய் அவளிற்கு கிடைத்தது.
அவளை பெற்றவர்களுக்கும் இந்த குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் அன்பு,பாசத்தை விட செல்வமே பிரதானமாக இருந்தது.
ஓரளவு அவளின் மேல் அன்பு காட்டக்கூடிய ஜீவன் என்றால் அவளின் பாட்டனார் சீனியர் ருத்ர பிரதாப் மல்ஹோத்ரா!
அவர் தான் இந்த குடும்பத்தின் ஆணிவேர்,இரண்டு தலைமுறை மக்களின் கௌரவம்!
மணிமகுடம் சூட்டப்படாத பேரரசர்!
அவருக்கு மூன்று பிள்ளைச் செல்வங்கள்!
அதில் மூத்தவர் மனிஷ் மல்ஹேத்ராவும் அவரது மனைவி சிவன்யாவும் ஒரு விமான விபத்தில் உயிரை பறிகொடுத்துவிட்டனர்.
அவர்களது ஒற்றை வாரிசு தான் தற்போது இந்த குடும்பத்திற்கு சிம்மசொப்பனமாய் விளங்கும் ஜூனியர் ருத்ர பிரதாப் மல்ஹோத்ரா.
ஆளுமையிலும் திறமையிலும் அப்படியே தாத்தாவை போல் பேரன்!
இல்லை…இல்லை குருவை மிஞ்சிய சிஷ்யன்…தொழிலில் தன் பாட்டனாரை தாண்டி பல படிகள் முன்னேறிச் சென்றுவிட்டான்.
அவனிற்கு எதிலும் எல்லையில்லை.அனைத்துமே அவனிற்கு சற்று அதிகம் தான்.
அதில் ஒன்று தான் இந்த அகங்காரமும் தன்முனைப்பும்!
சீனியர் ருத்ர பிரதாப் மல்ஹோத்ரா மற்றும் அவரது மனைவி ஜானகிக்கு இரண்டாவதாக பிறந்த மகள் வைஷ்ணவி.(இனி தாத்தாவை மல்ஹோத்ரா என்றே குறிப்பிடுவோம்)
அந்த குடும்பத்தின் இளைய வாரிசு மால்வி.
தன்னுடைய ஆசை மகள் இருவரும் தன்னை விட்டு பிரிந்துச் செல்லக்கூடாதென்று வீட்டோடு தங்கி தன் தொழிலில் பங்குக்கொள்ளும் திறமையான வசதிக்குறைந்த மாப்பிள்ளைகளை கொண்டு வந்தார்.
அதில் வைஷ்ணவியிற்கு சிறிதும் உடன்பாடில்லை என்றாலும்,தகப்பனின் பேச்சை மீற முடியாமல் வேண்டா வெறுப்பாக அந்த வாழ்க்கையை ஏற்று வாழ ஆரம்பித்தார்.
அவர்களுக்கு இரண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.
மூத்தவள் நேத்ரா,இளையவள் பூஜா.
பூஜாவிற்கு இரண்டு வயதாக இருக்கும் வேளையில் வைஷ்ணவியின் கணவரும் ருத்ராவின் பெற்றோர் சென்ற அதே விமானத்தில் பயணம் செய்ததால்,விபத்தில் அவரின் இன்னுயிர் இப்புவியிலிருந்து விடைப் பெற்றிருந்தது.
மகள் தனிமையில் படும் துயரத்தை கண்டு கவலையுற்ற மல்ஹோத்ரா அவருக்கு இரண்டாவது திருமணத்தை செய்து வைக்க முயல,அவரோ பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
அதில் அவருக்கு வருத்தம் தோன்றினாலும் மகளை துக்கத்திலிருந்து திசைத்திருப்பும் விதமாக தொழிலில் மிக முக்கிய பொறுப்பு ஒற்றை கொடுத்து,தொழில் உலக சாம்ராஜ்ஜியத்தில் அவருக்கென தனியொரு அடையாளத்தை வழங்கினார்.
தகப்பன் காட்டிய வழியை இறுகப்பற்றிக்கொண்ட வைஷ்ணவியும் இன்று தொழில் வட்டாரத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக வளைய வந்துக்கொண்டிருக்கிறார்.
அவரது மூத்த மகளான நேத்ராவை வசதியான செல்வந்தர் வீட்டிற்கு மருமகளாக்கியிருந்தார்.
இளையவள் பூஜாவை தனது தமையனின் மகனான ருத்ராவிற்கு திருமணம் செய்து இந்த சொத்து முழுவதையும் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் இறுமாப்புடன் அவர் காத்திருக்க,
அவனோ திடீரென்று ஒரு நாள் கையில் குழந்தையுடன் வந்து நின்று அவரது தலையில் இடியை இறக்கியிருந்தான்.
அவனது செயலில் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தினர் யாவரின் கேள்விக்கும் இன்று வரை அவன் பதிலுரைக்கவில்லை.
யாரிடமும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் தனக்கு இல்லை என்பது அவனது திண்ணம்.
அதனால் அவர்கள் யாவரது பிடியிலும் சிக்காத விலாங்கு மீனாக நழுவிக் கொண்டிருக்கிறான் ருத்ரா.
மல்ஹோத்ராவின் மூன்றாவது மகள் மால்வி.அவளது கணவன் சந்துரு அரோரா.
அவர்களது ஒற்றை மகள் தான் இந்த சைத்ரா!
அவளை பெற்றெடுத்ததோடு அவர்களது கடமை முடிந்துவிட்டது என்று எண்ணிவிட்டார்கள் போலும்!
ஏனெனில்,சிறு வயதிலிருந்து தனிமையென்னும் சிறையில் தான் அவள் வளர்ந்தாள்.
அவளிடம் நின்று பேசுவதற்கு கூட அவர்களுக்கு நேரமும் பொறுமையும் இல்லை.
எப்போதும் நாடு நாடாக எங்கேயாவது ஜோடி பறவைகளாய் சுற்றி வந்துக்கொண்டே இருப்பார்கள்.
‘டேய் தகப்பா நிஜமா நீ தான் என்னை பெத்தியா?’ என அவரின் சட்டையை பிடித்து உலுக்கும் கோபம் அவளிற்கு வந்தாலும் ‘அடப்போங்கடா’ என எரிச்சலாக கூண்டுக்குள் அடைப்பட்ட கிளியாய் தனக்கு தானே சிறையிருந்தாள்.
ஒரு கட்டத்தில் வாழ்வையே அவள் துச்சமாக வெறுக்க துவங்கிய நிலையில் அவளது வாழ்வில் வசந்தம் வீசுவதற்கென்று வந்தவர்கள் தான் ஸ்வேதாவும் அஜய்யும்!
மூச்சு விட முடியாமல் சிரமத்தில் தத்தளித்தவளிற்கு வாழ்வளித்த வள்ளல்கள் அவர்கள்!
அவர்கள் அவளது வாழ்வில் வந்ததற்கு பிறகு தான் வாழ்வில் ஒரு பிடிமானமும் வெளிச்சமும் கிடைத்தது போலிருந்தது.
மல்ஹோத்ரா படுக்கையில் விழுந்ததற்கு பிறகே அவளிடம் பேசவே தொடங்கியிருந்தார்.
அதற்கு முன்பு தன் பேரப்பிள்ளைகளை கவனிக்க கூட நேரமின்றி சுற்றி திரிந்தார்.
அவர் உயிருடன் இருந்த வரையிலும் அவளிற்கு தேவையான ஒவ்வொன்றையும் மிகுந்த பரிவுடன் கேட்டு செய்வார்.
இரண்டு வருடத்திற்கு முன்பு அவரது உயிரும் பூலோகத்தை பிரிந்து சொர்க்கலோகம் சென்றடைந்திருந்தது.
அதன்பிறகே அவளிற்கு அனைத்துமாகிப்போனார்கள் ஸ்வேதாவும் அஜய்யும்!
அவர்களது துணையால் அவள் சிறு வயதில் இழந்த சந்தோஷங்கள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டன.
இப்போது சைத்ரா எவ்வித கவலையுமின்றி ஜாலியாக வளைய வந்துக்கொண்டிருக்கிறாள்.
இப்போது சலுகையாக ஸ்வேதாவின் தோளில் சாய்ந்து “ஸ்வேத் நானும் பீச் பையனும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வைச்சிருக்கோம்” என கண்களை உருட்டி அவள் பேசிய அழகில் மயங்கிய பெண்ணவளும் சிரித்தப்படியே “என்ன சைத்து?” என கேட்டாள்.
உடனே குழந்தை உள்ளம் கொண்ட குமரியும் அஜய்யிடம் “ரெடியா?” என கண்சிமிட்டி கேட்க,
அவனும் தனது அரிசி பற்களை முழுமையாக காட்டி “ரெடி…ரெடி” என கட்டை விரல் காட்டி சமிக்ஞை செய்யவும்,
‘இரண்டு அறுந்த வாலும் என்னடா பண்ணப்போறாங்க?’ என அவள் ஆவலாக பார்த்துக்கொண்டிருக்கும் போதே தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான விஜய்யின் பாடல் ஒன்று அறையே அதிரும்படி ஒலிக்க ஆரம்பித்தது.
அதில் இவளின் விழிகள் திகைப்பில் விரிந்தது என்றால் “ஸ்வேத் இது உனக்காக…அதுவும் உனக்கு பிடிச்ச ஆக்டர் விஜயோட பாட்டு” என இரண்டு விரலை வாயில் வைத்து முத்தமிட்டு அவளிற்கு அனுப்பியவள்,
“என்னா நட என்னா நட ஏறி வரும் ஜிலுக்கா…மட்டை…” என சமீபத்தில் வெளியான கோட் படத்திலிருந்த பாடலுக்கு இவர்கள் இருவரும் நடனமாட தொடங்கிவிட்டார்கள்.
அந்த நான்கு வயது குழந்தையும் அவளிற்கு இணையாக தனது குட்டி கை காலை தூக்கி நாக்கை மடித்து இறங்கி ஆடுவதை காண கண் கோடிகள் வேண்டும்.
சைத்ரா ஒரு அழகிய பார்பி பொம்மை.அந்த பொம்மை எழுந்து நடனமாடினால் சொல்லவா வேண்டும்?
ஸ்வேதாவால் இருவரின் மீதிருந்தும் கண்களை எடுக்க முடியாத வகையில் கன்னத்தில் கைவைத்து தன்னை மறந்து நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்.
சட்டென்று தான் இருக்கும் வீட்டின் சூழ்நிலை உறைக்க “ஐய்யோ” என வேகமாக பதறியெழுந்து தொலைக்காட்சியை அணைத்தாள்.
அதில் கடுப்பாகிய சைத்ரா “ஸ்வேத்…” என காலை உதறி கத்தினாள் என்றால்,
அஜய்யும் அவளை பின்பற்றி “ஸ்வேம்மா” என முகத்தை உம்மென்று வைத்து சிணுங்கினான்.
உடனே “உஷ்…சத்தம் கேட்டு பெரியம்மா வந்து திட்டப்போறாங்க” என வாயில் சுட்டு விரல் வைத்து அவள் எச்சரிக்க,
“அடப்போ ஸ்வேத்…இந்த பெரியம்மா திட்டலைனா தான் அதிசயம்…அதுக்கு வேற வேலையே இல்லை காட்டேரி” என சைத்ரா முகத்தை சுளிக்க,
ஸ்வேதாவோ “ப்ச் சைத்ரா பெரியவங்களை அப்படியெல்லாம் மரியாதையில்லாமல் பேசக்கூடாது” என அவளின் தவறை திருத்தினாள்.
“ம்க்கும்…அந்த சூன்யக்கார கிழவிக்கு இந்த மரியாதை போதும்” என இதழை சுழித்து பழிப்புக்காட்ட,
அஜய்யும் அவளை பின்பற்றி “ஆமா தாதிமா…ஊ…சூயக்காரி” என கையை பிரண்டுவது போல் வைத்து வாயை குவித்து சைகை காட்ட,
அந்த அழகில் கவரப்பட்டு ஓடி வந்து “அப்படி சொல்லு என் பீச் குட்டி” என அவனது இளஞ்சிவப்பு நிற கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள் சைத்ரா.
“பெரியம்மாவுக்கு பயப்படாமல் இருக்கலாம்…பட் சாருக்கு நீ பயந்து தானே ஆகணும்” என சவாலாக அவள் புருவம் உயர்த்தியவுடன்,
சிறியவளின் விழிகள் சாசர் போல் விரிய “என்ன சொல்ற ஸ்வேத்?அங்கிள் வர்றாரா?எப்போ?எங்கே?ஏன்?” என மூச்சுக்கூட விடாமல் படபடத்தவளை நோக்கி மென்மையாக புன்னகைத்தவள்,
“டுடே நைட்” என்றதும் தான் தாமதம் “ஐய்யையோ” என தலையில் கைவைத்தவள்,அவசரமாக அந்த அறையில் இருக்கும் அவளுடைய பொருட்கள் அனைத்தையும் காலி செய்ய ஆரம்பித்தாள்.
ஏனெனில்,அவளது மாமன் மகன் ருத்ராவிற்கு அஜய்யின் அறையில் யாவரும் தங்குவது என்றால் அவனிற்கு அறவே பிடிக்காது.
அஜய் ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே அவனை தனியாக படுக்க வைத்து பழக்கியிருந்தான் ருத்ர பிரதாப்.
ஆனால் அவன் இல்லாத சமயங்களில் அவனுடைய பேச்சை மீறி குழந்தையோடு படுத்துக்கொள்வாள் சைத்ரா.
இந்த விடயத்தை கேள்வியுற்றால் நிச்சயம் தனக்கு தண்டனை நிச்சயம் என்பதை அறிந்து வேக வேகமாக தான் அங்கு இருந்ததற்கான சுவடே அறியாத வகையில் தன் பொருட்களை அள்ளிக்கொள்ள தொடங்கினாள்.
மற்றவர் யாவரென்றால் ஒரு கை பார்த்துவிடுவாள்.ஆனால் ருத்ரா என்றால் மட்டும் அவளிற்கு தனி பயம்.
அவளது அந்த சிறுப்பிள்ளை செயலை ஸ்வேதா சிரிப்புடன் பார்த்திருக்க, அதைக்கண்டு கடுப்பானவள் “ஏய் ஸ்வேத்…பார்த்து பார்த்து பல்லு சுளுக்கிக்க போவது…அடச்சீ ஆளை பாரு…ஒழுங்கா வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு…இல்லை நீ எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தந்த விஷயத்தை அங்கிள் கிட்ட சொல்லிடுவேன்” என மிரட்டினாள்.
“அடிப்பாவி…பாவம்னு சாருக்கு தெரியாமல் வாங்கிக்கொடுத்தேன் பார்த்தியா?என் புத்திய…” என்னும் போதே,
“செப்பாலே அச்சுக்கணும்” என குழந்தை அந்த வசனத்தை முடித்து வைத்து கிளுக்கி சிரித்தது.
“ஐய்யோ என் செல்ல தங்கம்டி நீ” என மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து குழந்தையை ஒரு சுழற்று சுழற்றி சைத்ரா கீழே இறக்கிவிட,
இடையில் ஒற்றை கைகுற்றி “ஏன்டியம்மா…உன் கூட சேர்ந்து குழந்தையையும் கெடுத்து வைச்சிருக்கியா?சாருக்கு மட்டும் இது தெரிஞ்சது…” என்னும் போதே,
“அச்சோ” என பதறியவளிற்கும் அவளது அங்கிளின் முகம் மின்னி மறைய “காட் அவர் வரதுக்குள்ள நான் இடத்தை காலிப்பண்ணனும்” என தனது மூட்டை முடிச்சை தூக்கிக்கொண்டு தன்னறைக்குச் செல்ல,
“மௌசி(சித்தி) ஐ வி ஹெல் யூ” என தன் குட்டி பாதங்களால் அவளை பின்தொடர்ந்து ஓட,
“அது ஹெல் யூ இல்லை பீச்…ஹெல்ப் யூ சொல்லு” என குழந்தையின் உச்சரிப்பை அவள் திருத்துவதை அறிந்து ஸ்வேதாவின் கண்கள் பனித்தது.
அவளையும் அறியாமல் இதழோரம் முறுவல் தோன்ற,அதனை தொடர்ந்து ஏதேதோ நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவளின் மூளையில் வலம் வர ‘வேண்டாமே’ என அவளது மனதின் ஆணையின் பெயரில் தலையை உலுக்கிக்கொண்டு அவர்களை பின்தொடர்ந்தாள்.
அப்படியே அந்த பகல் பொழுது உற்சாகமாய் கழிய,இருள் சூழ்ந்து சந்திரன் வானத்தில் தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்கியிருந்தான்.
அதேநேரம் லண்டன் மாநகரம்,
ஒரு முக்கியமான வாடிக்கையாளருடன் நடந்த சந்திப்பை முடித்துக்கொண்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தான் ருத்ர பிரதாப் மல்ஹோத்ரா.
நான்கு வருடங்களுக்கு முன்பு எவ்வாறு இருந்தானோ இப்போதும் அதே ஆளுமையும் கம்பீரமும் குறையாமல் இருந்தான்.
கூடவே தான் என்ற அகந்தையும் திமிரும் அப்படியே மாறாமல் இருந்தது.
நான்கு வருடத்திற்கு முன்பும் இப்போதைக்கும் வயதில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதே ஒழிய,அவனது வாழ்வில் எத்தகைய வித்தியாசமும் ஏற்படவில்லை.
தான் ஒரு நான்கு வயது குழந்தையின் தகப்பன் என்ற எண்ணம் அவனிடத்தில் சிறிதும் இல்லை.
தன் உயிரணுவில் உருவாகிய அந்த ஜீவனை அவனது வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே கையில் ஏந்தியிருந்தான்.
அதுவும்,அவனது மகன் அஜய் மண்ணில் உதித்த அந்த நாளில்!
தொடர்ந்து வந்த நாட்களில் தனக்கொரு மகன் இருக்கிறான் என்ற சிந்தையின்றி தனது தொழிலை விருத்தி செய்வதற்காக நாடு நாடாக சுற்றிக்கொண்டிருக்கிறான்.
சிறு வயதிலிருந்தே யாருடைய அரவணைப்பும் அன்புமின்றி வளர்ந்ததினாலோ என்னவோ அவனிற்கு குடும்பம் என்றாலே வேப்பங்காயாய் கசந்தது.
தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் என்பது போல் அவனது உடல் பொருள் ஆவி அனைத்திலும் பணம்…பணம்…பணம் மட்டுமே…!
புரவியில் ஏறி மீதமுள்ள பதினைந்து செல்வங்களை விடுத்து ஆக்கத்தின் பின்னே மட்டும் ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தான்.
உறவுகள் என்றும் அவனிற்கு ஒரு பொருட்டே அல்ல.
குடும்பம்…பந்தம்…பாசம்…அன்பு…காதல் எதிலுமே ஈடுப்பாடு இல்லாத இரும்பு இதயம் கொண்டவன் அவன்!
அணிந்திருந்த பிளேசரை கழற்றி டேவிட்டிடம் கொடுத்த ருத்ரா நடந்தவாறே “டேவிட் சாம்சன் கூட ஃப்ரைடே மீட்டிங்க்கு ஏற்பாடு பண்ணிடு” என கட்டளையிட்டான்.
அவனோ அதில் திகைத்து “பாஸ் இன்னைக்கு நைட் இந்தியா போகணும்” என நினைவுறுத்த,
“சோ வாட் ஃப்ளைட் கேன்சல் பண்ணிட்டு ஆஸ்திரேலியாவுக்கு போறதுக்கு ஜெட் ரெடி பண்ணு” என்றான் அசால்ட்டாக.
“இல்லை பாஸ்…” என அவன் தயக்கமாக இழுக்கும் போதே,
அவனது தடுமாற்றம் அவனிற்கு விசித்திரமாக இருக்க பக்கவாட்டாக திரும்பி “என்ன?” என்று கேட்டவனின் புருவங்கள் கோபத்துடன் இடுங்கின.
தொண்டையை செருமி “பாஸ் கம்மிங் ஃப்ரைடே அஜய்க்கு பர்த்டே” என அவன் கூறியதற்கு பிறகே அவனது மகனிற்கு அன்று பிறந்தநாள் என்பதே அவனது ஞாபகத்திற்கு வந்தது.
உடனே தன் நடையை நிறுத்திய ருத்ரா “ஓ…” என நெற்றியை நீவி மௌனம் காத்தான்.
சில கணம் அமைதியாய் எதையோ யோசித்தவன்,பின்பு சட்டென விழிகளை உயர்த்தி “இட்ஸ் ஓகே…ஸ்வேதா வில் டேக் கேர் ஆஃப் ஹிம்…ராகவ்கிட்ட சொல்லி பர்த்டே பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ண சொல்லிடு” என நெஞ்சில் ஈரமின்றி ஒரு தீர்வை வழங்கிவிட்டுச் செல்லும் அவனின் முதுகை வெறித்தான் டேவிட்.
பெற்ற மகனின் பிறந்தநாளிற்கு கூட செல்ல விரும்பாமல் ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு ஆயத்தமாகிய தனது முதலாளியை பார்த்தவனிற்கு ‘நிஜமா இவன் மனுஷன் தானா?’ என்ற சந்தேகமே வந்துவிட்டது.
ஆயினும் தனக்கு சம்பளம் தரும் முதலாளியை பகைத்துக்கொள்ள முடியாததால் ஒரு பெருமூச்சுடன் ஆஸ்திரேலியா செல்வதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டான்.
****
இரண்டு நாட்கள் கழித்து,
நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் ஸ்வேதா தன்னறையில் உறங்கிக்கொண்டிருக்க,அவளது அறையினுள் சத்தமின்றி ஒரு ஆண் உருவம் உள்ளே நுழைந்தது.
அவ்வறையின் கதவை தாழிட்ட அந்த உருவம் சத்தமின்றி மெத்தையில் சயனித்திருந்த ஸ்வேதாவை நெருங்கியது.