கவிதை 1

கவிதை 1:

“அம்மா…” என அந்த பெரிய வளாகமே அதிரும் வகையில் பிரசவ வலியில் கத்திக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.

அவளிற்கு வெறும் பதினாறு வயது மட்டுமே!

தாய்மை என்றால் என்னவென்று அறியாத பருவத்தில் பிரசவ வலியை அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் அவள்!

குமரி அடையாத கிள்ளையவளின் வயிற்றில் ஒரு குழந்தை.

நினைத்து பார்ப்பதற்கே படுபயங்கரமாய் இருந்தது.

ஆனால் அப்படியான ஒரு கொடுஞ்சூழலை தான் அந்த சிறு பாவை துய்த்துக்கொண்டிருந்தாள்.

“அம்மா வலிக்குது…என்னால முடியலை…என்னை காப்பாத்தும்மா…அம்மா நான் சாகப்போறேன்…அம்மா…அம்மாஆஆ…” என உச்சக்கட்ட நரக வேதனையோடு தாயின் கரத்தை இறுகப்பிடித்து அலறிய மகளை கண்டவரின் இதயத்தில் உதிரம் கொட்டியது.

அவரது கண்ணிலிருந்து நீர் கரகரவென கன்னத்தின் வழியே கீழிறங்கிட,இவருக்கு நெஞ்சே வெடித்து சிதறியது.

அதனால் “ஐய்யோ” என மார்பை அடித்துக்கொண்டு அழுதவரை கண்ட மருத்துவர் “நர்ஸ் முதல்ல அந்த அம்மாவை வெளிய கூட்டிட்டு போங்க…ஏற்கனவே இந்த பொண்ணுக்கு பல்ஸ் குறையுதுனு நானே டென்ஷனா இருக்கேன்…இதில் இது வேற…” என சிடுசிடுத்து,அவளின் தாயை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

“ஐய்யோ என் பொண்ணு…என்னை விடுங்க…விடுங்க” என செவிலியரின் கைகளுக்குள் திமிறியவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வெளியே விட்டு வந்தார்கள்.

அந்த சிறு பெண்ணோ தனக்கென்று இருந்த ஒரே ஒரு ‌உறவையும் அங்கிருந்து அகற்றிவிடவும்‌,அவளிற்குள் எஞ்சியிருந்த தைரியமும் மாயமாகிட அவளை இருளான அறைக்குள் தள்ளிவிட்டது போல் அச்சத்தில் மூச்சடைக்க ஆரம்பித்தது.

உடனே கைகால்கள் அனைத்தும் ஒவ்வொரு புறமாக வெட்டிக் கொள்ள தொடங்க, அருகிலிருந்த இதயத்துடிப்பை காட்டும் மின்னணு திரையில் கோடுகள் தாறுமாறாக கிறுக்க தொடங்க “நர்ஸ் கைகாலை பிடிங்க…இந்த பொண்ணுக்கு பிரஷர் அதிகமாகிடுச்சு…ஸ்வேதா அந்த இன்ஜெக்ஷன் எடு” என மடமடவென தன்னை சுற்றியிருந்த செவிலியர்களுக்கு கட்டளையிட்டார்.

ஊசி போட்டதற்கு பிறகு அவளின் உடல் அமைதியடைந்தாலும் இதயத்துடிப்பில் மட்டும் மாற்றமில்லை.

“டாக்டர் இப்படியே போனால் இந்த பொண்ணு செத்துடும்” என ஒரு செவிலிய பெண் பதட்டத்துடன் சொல்ல,

“ஆமா…முதல்ல ராகவ் சாருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லுங்க…ஹரியப்” என அவளை துரிதப்படுத்தியவர்,

எரிச்சலுற்ற முகத்துடன் அருகிலிருந்த ஸ்வேதாவிடம் திரும்பி “நமக்குனே வந்து சேருது பாரு…ச்சை…மயங்கிட்டா சோ நார்மல் டெலிவரிக்கும் வழியில்லை…ஹாட் பீட் கன்ட்ரோலாகற வரை ஆப்ரேஷனும் பண்ணமுடியாது…இது செத்து தொலைஞ்சா நம்ம உயிரை தான் எடுப்பாங்க…காட்…” என சிறிதும் இரக்கமின்றி சலித்துக்கொண்ட மருத்துவரை ‘நீயெல்லாம் ஒரு மனுசி தானா?’ என அருவருப்புடன் நோக்கினாள் அவள்.

இருந்தும் அவரை எதிர்த்து எதுவும் கூறமுடியாத காரணத்தால் அவர் செய்யும் பாவத்திற்கு மௌனமாய் துணை நின்றாள்.

அவளின் விழிகள் இப்போது மஞ்சத்தில் துயில் கொண்டிருந்த அச்சின்னஞ்சிறு பாவையின் மீது பதிந்தது.

மாசு மருவில்லாத பால் வெண்மை மாறாத குழந்தை முகம் கொண்ட அவளை பார்க்கும் போதே நெஞ்சம் விம்மியது.

‘கடவுளே!இந்த சின்னப் பெண்ணை இப்படி பண்ண எப்படி தான் மனசு வந்ததோ?’ என உள்ளுக்குள் அவள் குமுறிக்கொண்டிருக்க,

ஆனால் இந்த சிறுபெண்ணின் வலிக்கும் வேதனைக்கும் காரணமான ஆடவனோ எவ்வித கவலையுமின்றி வானத்தில் சிறகடித்து பறந்துக்கொண்டிருந்தான்.

பாரீஸ் மாநகரம்,

தரைமட்டத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரம் அது!

சில நேரம் பறவைகள் கூட அந்த உயரத்தில் பறப்பதற்கு அஞ்சி நடுங்கும்!

ஏனெனில்,உயரழுத்த காற்றின் வேகம் அவ்விடத்தில் சற்று அதிகமாக இருக்கும்.

அதீத காற்றின் வேகத்தால் அந்த குறிப்பிட்ட இடத்தில் பறக்கும் யாவும் காற்று வீசும் திசைக்கு எதிர்ப்புறமாக தள்ளப்படும் அபாயம் இருப்பதால் பெரும்பாலான பறவையினங்கள் அவற்றினை விரும்பாது.

அவ்விடத்தில் சிறு புள்ளியாய் ஒரு விமானம் ஆகாயத்திற்கு மிக அருகே பறந்துக்கொண்டிருந்தது.

திறந்திருந்த விமானத்தின் கதவருகே ஒரு ஆறடி இரண்டு அங்குல உயர ஆண்மகன் நின்றிருந்தான். 

வீசிய எதிர்க்காற்றின் வீரியத்தில் அந்த விமானமே ஒரு கணம் தடுமாற,ஆனால் கதவருகே நின்றிருந்த அந்த சாகசக்காரனோ அதற்கான அச்சம் சிறிதுமின்றி சலனமில்லா முகத்துடன் விமானத்திலிருந்து குதிப்பதற்கு ஆயத்தமானான்.

அவனிற்கு அருகே “ரெடி சார்” என ஒரு பயிற்சியாளன் குரல் கொடுத்தவுடன்,

விண்வீழ் வீரனின் உடையில் நின்றிருந்த அந்த ஆடவன் அந்த பயிற்சியாளனை நோக்கி திரும்பாமலே ‘தயார்’ என்பது போல் கட்டை விரலை தூக்கி காட்டிவிட்டு தலைகவசத்தை அணிந்துக்கொண்டான்.

விண்வீழ் விளையாட்டை(Sky diving) அவ்வளவு எளிதில் எந்தவொரு மனிதனாலும் செய்துவிட முடியாது.

அதிலும் பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து கீழே குதிக்க வேண்டும் என்றால் எதையும் கண்டு அஞ்சிராத நெஞ்சுரமும் ஒரு அசாத்திய துணிச்சலும் இருத்தல் அவசியம்.

அவை அளவுக்கு அதிகமாகவே அவனிடத்தில் கொட்டி கிடந்தது.

அந்த பயிற்சியாளன் வாயினருகே விசிலை வைத்து “1…2…” என்றவன் “3” என்று கூறி முடிப்பதற்கு முன்பாகவே அந்த ஆடவன் விமானத்திலிருந்து கீழே குதித்திருந்தான்.

மற்றவர்கள் நினைப்பதை செய்துமுடிப்பவன் அல்ல அவன்.

அவனிற்கு தோன்றுவதை மட்டுமே செய்யும் ஆணவக்காரன்.

அவன் அவ்வாறு செய்வான் என்பதை சற்றும் எதிர்ப்பாராத அந்த பயிற்சியாளனோ “ஓ மை காட் சார்…” என அதிர்ச்சியில் கூவி வேகமாக வந்து கீழே எட்டிப்பார்த்தான்.

ஆனால் அவனது அச்சத்திற்கு சிறிதும் அவசியமின்றி சீரான வேகத்தில் அந்தரத்தில் கைகளை விரித்து மிதந்துக்கொண்டிருந்தான் ருத்ர பிரதாப் மல்ஹோத்ரா.

“வரை புரையும் மழ களிற்றின் மிசை,

வான் துடைக்கும் வகைய போல,

விரவு உருவின கொடி நுடங்கும்

வியன் தானை விறல் வேந்தே!” என்ற புறநானூறு பாடலுக்கு ஏற்ப 

அவன் சினந்து பார்த்தாலே பார்க்கும் இடம் தீப்பற்றும்; அவன் இரக்கமுற்றால் அதில் பொன் பொலியும் என நினைத்ததை நடத்தி முடிக்கும் படைப்பலமும் துணிச்சலும் கொண்ட வீரனாவான்.

கீழே விழுந்து அடிப்பட்டால் ஒரு சிறு எலும்பு துண்டு கூட யாவருக்கும் கிடைக்காது.

ஆனால் அதைப்பற்றிய பயம் கிஞ்சித்துமின்றி அந்த துணிச்சல் வீரன் வானில் ஒற்றை ஆளாய் சிறகின்றி பறந்துக்கொண்டிருக்க,அவனது அச்செயலை இதயத்தில் நீர்வற்றிப்போக மிரட்சியுடன் பைனாகுலர் வழியாக பார்த்துக்கொண்டிருந்தான்,அவனது உதவியாளன் டேவிட்.

அப்போது அவனது கால்சட்டையில் இருந்த அலைப்பேசி தனது இருப்பை தெரிவிப்பதற்காக சப்தம் எழுப்பியது.

அதன் சத்தத்தில் தேகம் தூக்கிவாரிப்போட பைனாகுலரை கீழிறக்கிய டேவிட்டின் இதயம் தடதடத்தது.

“ஓ காட் ஃபோனா?பயந்துட்டேன்” என இதழை குவித்து காற்றை ஊதியவன்,ஊடலை வழியாக அலைப்பேசியை உயிர்ப்பித்து “எஸ் டேவிட் ஹியர்” என்றவனின் பார்வை மட்டும் தனது முதலாளி செய்யும் சாகசத்தின் மீதே பயத்துடன் பதிந்திருந்தது…(ஆங்கில உரையாடல் தமிழில்)

“டேவிட் இந்தியாவிலிருந்து ராகவ் ஹியர்…பாஸ் இல்லையா?” என்று கேட்டவனின் குரலில் பதட்டம் தொற்றியிருந்தது.

அதில் டேவிட்டின் புருவம் சுருங்க “ஏன் ராகவ்?ஏதாவது பிரச்சனையா?உன் குரல்ல ஒரு பயம் தெரியுதே” என அவன் முகத்தை நேரில் காணவில்லை என்றாலும் குரலை வைத்தே எதிரில் இருப்பவனை சரியாக கணித்தான்.

‘இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை’ என நொடித்த ராகவ் “ஆமா டேவிட்…இங்க ஒரு எமர்ஜென்சி…பாஸ்கிட்ட அந்த விஷயத்தை உடனே சொல்லணும்” என பரபரக்க,

வானத்தில் சிறு புள்ளியாய் தெரியும் ருத்ராவின் உருவத்தை பார்த்தவாறே “நீயே நினைச்சாலும் பாஸ்கிட்ட உடனடியா பேச முடியாது ராகவ்” என்றான் பெருமூச்சுடன்.

“ஏன்?என்னாச்சு?” என அவன் பதட்டமாக கேட்க,

நெற்றியை நீவி “நத்திங் சீரியஸ் ராகவ்…பாஸ் ஸ்கை டைவிங் பண்ணிட்டு இருக்கார்” என்றான்.

“ஏதே ஸ்கை டைவிங்கா?” என திகைப்போடு விழி விரித்தவனோ ‘இங்க ஒரு பொண்ணு இவரால சாகக்கிடக்குது…இப்போ போய் இந்த மனுஷனுக்கு த்ரில் கேட்குதா?மனுஷனா இவன்?’ என நெற்றியை நீவி தனது முதலாளியை வறுத்தெடுத்தான்.

அந்நேரமும் அவன் வாய்விட்டு திட்டவில்லை.கவனமாய் மனதிற்குள்ளே வசைப்பாடினான்.

ஏனெனில்,ருத்ர பிரதாப்பிற்கு இருக்கும் நான்கு உதவியாளர்களில் டேவிட் மிகுந்த விசுவாசமானவன்.

அவனிடம் ஏதேனும் ஒன்றை கூறினால் அவ்விடயம் நேரடியாக தங்களது முதலாளியின் செவியிற்கு சென்றுவிடும் என்பதால் அவனிடம் அடக்கியே வாசித்தான்.

பின்பு,மாதத்திற்கு லட்சத்தில் சம்பளம் தரும் முதலாளியை அவனால் பகைத்துக்கொள்ள இயலுமா என்ன?

“டேவிட் விஷயம் ரொம்ப சீரியஸ்…இங்க அந்த பொண்ணுக்கு பிரசவ வலி வந்திடுச்சு…டாக்டர் அந்த பொண்ணை காப்பாத்தறதே கஷ்டம்னு சொல்லறாங்க…பிளீஸ் பாஸ்கிட்ட இந்த விஷயத்தை சொல்லு…ஹரியப் மேன்” என அவனிடம் விஷயத்தை கூறிய அடுத்தகணமே டேவிட்டும் பரபரப்பானான்.

“என்ன சொல்ற டேவிட்?போன வாரம் செக் பண்ணும் போது கூட எந்த பிரச்சனையுமில்லைனு ரிப்போர்ட் அனுப்பினீயே?இப்போ என்னாச்சு?டெலிவரி டேட்டுக்கு கூட இன்னும் நாளிருக்கே” என மடமடவென கேள்விக்கணைகளை கோபத்துடன் தொடுத்தவன்,அவசரமாக இந்த விஷயத்தை தனது முதலாளியிடம் தெரியப்படுத்துவதற்காக விரைய ஆரம்பித்தான்.

அவனோ சிறிது பயத்துடன் “தெரியலை டேவிட்…அந்த லேடி டாக்டர் முன்னாடி அப்படி தான் சொன்னாங்க…பட் எப்படி இதுனு எனக்கே புரியலை” என விட்டேத்தியாக அவன் கூறிய பதிலில் கடுப்பான டேவிட் “உனக்கு என்ன தான் தெரியும் ராகவ்?ஒரு பொறுப்பை உன்கிட்ட ஒப்படைச்சா அதை சரியா கூட செய்யமுடியாதா?பாஸுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது உன்னை உயிரோடு மண்ணுக்குள்ள புதைச்சிடுவார்” என சீறியவன்,முதலாளிக்காக அவன் தரையிறங்கும் இடத்திற்கு வந்து காத்திருக்க தொடங்கினான்.

‘அடேய் ஏற்கனவே நான் பீதியில் இருக்கேன்…இவன் வேற என்னை குலை நடுங்க வைக்கிறான்’ என புலம்பிய ராகவ் “டேவிட் பிளீஸ்…பாஸ்கிட்ட என்னை பத்தி எதுவும் சொல்லாமல் அந்த பொண்ணுக்கு பிரசவ வலி வந்து கிரிட்டிக்கலா இருக்காள்னு மட்டும் சொல்லு…பிளீஸ்…பிளீஸ் என்னை நம்பி என் குடும்பத்தில் அஞ்சு பேர் இருக்காங்க…அவங்களை கொஞ்சம் நினைச்சு பாரேன்” என அவன் குரல் தாழ்த்தி இறைஞ்சியதில் டேவிட் கடுப்பானாலும் “ச்சை…எதுக்கெடுத்தாலும் உன் குடும்பத்தை கொண்டு வந்து என் வாயடை…உனக்காக இப்போதைக்கு இதை மறைக்கிறேன்…பட் இந்தியா வந்தவுடனே எப்படியும் பாஸுக்கு விஷயம் தெரிஞ்சுடும்…அப்போ நானே நினைச்சாலும் உன்னை காப்பாத்த முடியாது” என எச்சரித்துவிட்டே அழைப்பை துண்டித்தான்.

இவனோ பீதியில் ‘ஐய்யோ’ என தலையில் கைவைத்து அமர்ந்துவிட, “சார் டாக்டர் உங்களை கூப்பிடறாங்க” என படபடப்புடன் ஒரு செவிலியர் ஓடி வந்து அழைக்கவும்,

‘இவர் புள்ள பெத்துக்கிறதுக்குள்ள நான் செத்துடுவேன் போல’ என வற்றிய தொண்டையை முயன்று சரிசெய்து “இதோ வரேன்மா” என வேகமாக அவளை பின்தொடர்ந்துச் சென்றான்.

வானத்தில் மிதந்துக்கொண்டிருந்த ருத்ர பிரதாப்பின் அருகே பறந்து வந்த விமானத்தின் உள்ளிருந்த அந்த பயிற்சியாளன் ஒலிபெருக்கியின் வழியாக “சார் இட்ஸ் எமர்ஜென்ஸி…காத்து ரொம்ப வேகமா வீச ஆரம்பிச்சிடுச்சு…நம்ம தரை இறங்கணும்…பிளீஸ் சார்” அவன் தன் பேச்சை துளியும் மதிக்கமாட்டான் என்று அறிந்தும் வேண்டினான் அவன்.

நினைத்ததை போலவே அவன் அவரின் பேச்சை ஒரு பொருட்டாக கூட மதியவில்லை.

ஏனெனில்,இன்னும் சற்று கீழிறங்கி பறந்துச் சென்ற ருத்ரா ஒரு முறை தலைகீழாக கரணம் அடித்து கைகால்களை தூக்கி உடலை வளைத்து ஒரு மேற்கத்திய நடனத்தை ஆடிக்கொண்டிருந்தான்.

அதைப்பார்த்தவருக்கு பயத்தில் நெஞ்சு வலியே வந்துவிட ‘காட்’ என நெஞ்சில் கைவைத்துக்கொண்டார்.

விண்வீழ் விளையாட்டில் பங்கேற்கும் மற்றவர்கள் ஒரு த்ரில் அனுபவத்திற்காக இதனை செய்வார்கள்.

ஆனால் இவனோ மனதில் உண்டான குழப்பத்தை நிவர்த்தி செய்வதற்காகவும்,தொழிலில் உண்டாகும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் இதை ஒரு ரிலாக்ஸ் தெரப்பியாக செய்துக்கொண்டிருக்கிறான்.

‘காற்றில் கீழே விழும் போது தேகம் மொத்தமும் சிலிர்த்து ,உடலிலுள்ள ஒட்டுமொத்த இரத்தமும் மூளைக்கு பாய்ந்து ஒரு புத்துணர்வை கொடுத்து புது புது சிந்தனைகளை வழங்கும்’ என்பான் அவன்.

அதைக்கேட்கும் மற்றவர்களோ ‘அடேய் சண்டாளா?உனக்கெல்லாம் வீட்டுக்குள்ள உட்கார்ந்தா கற்பனை வராதா?எமனை நேருக்கு நேர் சந்திச்சா தான் ஐடியா தோணுமா?’ என அவனின் விசித்திரமான நடவடிக்கைகளை கண்டு பீதியடைந்து தெறித்து ஓடுவார்கள்.

அதற்கெல்லாம் சிறிதும் அசராமல் தனக்கு பிடித்தமானதை மட்டும் செய்வதில் முனைப்பாய் இருப்பான் ருத்ர பிரதாப் மல்ஹோத்ரா.

பயிற்சியாளரின் சில நிமிட போராட்டத்திற்கு பிறகு அணிந்திருந்த உடையின் வலதுப்புறத்தில் இருந்த திருப்பியை திருப்பவும் ருத்ரா காற்றை கிழித்துக்கொண்டு கீழே விழ ஆரம்பித்தான்.

ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு கீழிறங்கியும் ருத்ரா வான் குடை மிதவையை(parachute) விரிக்கவில்லை.

அதனை பார்த்த மற்றவர்களுக்கு தான் நெஞ்சம் திக்திக் என்று அதிர்ந்தது.

டேவிட்டிற்கோ அவனது உயிர் அவனிடத்திலே இல்லை.

ஆனால் அந்த அச்சம் சிறிதுமின்றி 1000 அடி உயரத்தில் இருக்கும் போது நிதானமாக வான்குடை மிதவையை விரித்த ருத்ரா,அவற்றை சரியான பாதையில் இயக்கி டேவிட் நின்றிருக்கும் இடத்திற்கு எவ்வித தடுமாற்றமுமின்றி அழகாக தரையிறங்கினான்.

அவன் தரையில் காலூன்றி நின்றவுடன் அந்த மிதவை குடை கீழே சுருண்டு விழுந்திட,அவனின் வருகைக்காகவே காத்திருந்த மற்றொரு பயிற்சியாளனோ வேகமாக அவன் அணிந்திருந்த விண்வீழ் உடைகளை அகற்ற ஆரம்பித்தான்.

உடனே டேவிட் அவசரமாக அவனிடம் ஓடி வருவதை புருவம் சுருக்கி நோக்கியவாறே தலைகவசத்தை கழட்டி அருகிலிருந்த ஒரு பணியாளிடம் தூக்கியெறிந்தவன்,ஒரு முறை தலையை குலுக்கி அடர்த்தியான தன் சிகையை சிலுப்பினான்.

கையில் அலைப்பேசியுடன் “பாஸ்” என மூச்சிறைக்க அவன் ஓடி வந்து நின்றவுடன் ‘நிறுத்து’ என்பது போல் கண்ணாலே நெருப்பை கக்கியவன்,அணிந்திருந்த கையுறை கழட்டியவாறே நடக்க தொடங்கியவன் ‘வா’ என்பது போல் சைகை செய்தான்.

அவனது அந்த செயலில் அவனின் கோபத்தை பறைசாற்ற ‘ஓ காட் செத்தோம்’ என நெற்றியை தட்டிக்கொண்டு அவனின் பின்னோடு துரத்திச் சென்றான்.

சில அடி தூரம் சென்றவுடன் அவனிற்கென பிரத்யேகமாக உள்ள கருப்பு உடை அணிந்த பாதுகாவலர்கள் இருவர் அவனை சூழ்ந்துக்கொள்ள “என்ன விஷயம்?” என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

அவனிற்கு எப்போதும் சுருக்கமாக பேசுவதில் தான் பிடித்தம்!

சட்டென சொல்ல வந்ததை கூறவில்லை என்றால் அவனிற்கு கடும் கோபம் வந்துவிடும் என்பதால் “பாஸ் ராகவ் கால் பண்ணான்…அந்த பொண்ணுக்கு பிரசவ வலி வந்திடுச்சாம்…டாக்டர் அந்த பொண்ணை காப்பாத்துறதே கஷ்டம்னு சொன்னாங்களாம்” என அவனும் தயங்காமல் பட்டென்று விடயத்தை போட்டு உடைத்தான்.

அதில் ஒரு கணம் நின்று இவனை நோக்கி பக்கவாட்டாக திரும்பிய ருத்ரா “வாட் அபவுட் பேபி?” என கேட்டவனின் குரல் நெருப்பு பிழம்புகளாய் வெளிவந்தது.

அவனுடனே மற்றவர்களும் நின்றுவிட டேவிட் அச்சத்துடன் “குழந்தையும் கிரிட்டிக்கல் கண்டிஷனில் தான் இருக்கு” என்றவுடன் அவனது முகமோ மொத்தமாய் ரௌத்திரத்தை தத்தெடுத்தது.

அவனது அந்த ஒற்றை பார்வையிலே அவனது உடலிலுள்ள உயிர் ஊசலாட “பா…ஸ்” என தடுமாற்றத்துடன் அழைக்கவும்,

“ஷட் அப்” என முகம் சிவக்க கழுத்து நரம்புகள் புடைக்க கர்ஜித்தவன் “டாக்டருக்கு கால் கனெக்ட் பண்ணு” என்றவன் வேகமாக திரும்பி தன் மகிழுந்தை நோக்கி நடக்க தொடங்கிவிட்டான்.

இவனும் அவசரமாக இந்தியாவிற்கு அழைத்து அந்த சிறுப்பெண்ணிற்கு பிரசவம் பார்க்கும் மருத்துவரை இணைப்பில் பிடித்திருந்தான்.

அதற்குள் ருத்ரா வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் இவனும் “பாஸ்” என பவ்யமாக அலைப்பேசியை நீட்ட,

அவனை விழிகளால் உறுத்து விழித்தவாறே “ஏர்போர்ட் போ” என ஓட்டுனரிடம் பணித்து அலைப்பேசியை காதில் வைத்தான்.

மருத்துவரிடம் குழந்தையை பற்றியும் அந்த சிறு பெண்ணை பற்றியும் விசாரித்த ருத்ரா “டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்…ஆப்ரேஷன் பண்ணிடுங்க” என்றவுடன்,

எதிர்ப்புறம் அந்த மருத்துவர் ‘என்ன கூறினாரோ?’

அதற்கு இவன் “எனக்கு பேபி தான் இம்பார்ட்டென்ட்…அந்த பொண்ணுக்கு என்ன நடந்தாலும் ஐ டோன்ட் கேர்…ஆப்ரேஷன் பண்ணி பேபிய வெளிய எடுத்திடுங்க” என அலட்சியமாக பதிலுரைத்தவன்,

“சப்போஸ் அந்த பொண்ணுக்கு ஏதாவதானால் அவங்க ஃபேமிலி எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்திடுங்க” என நெஞ்சில் ஈரமின்றி பேசினான்‌.

இதை கேட்கும் டேவிட்டிற்கே மனம் தாளவில்லை.

நெஞ்சமெல்லாம் அந்த பெண்ணை எண்ணி பிசைய “பாஸ் பாவம் அவ சின்னப்பொண்ணு…” என ஆரம்பிக்கும் போதே,

“ஷட் அப் டேவிட்…ஐயம் தி பாஸ்…” என உறுமியவனின் குரலில் ‘நீ என் வேலைக்காரன்…நான் சொல்லுவதை தான் நீ செய்ய வேண்டும்’ என்ற அதிகார தொனியும் அகம்பாவமும் இருந்தது.

அதனால் அவன் வாயை கப்பென்று மூடிக்கொள்ள,அவனின் இதயம் மட்டும் அநீதிக்கு துணை போவதை எண்ணி குமுறிக்கொண்டிருந்தது.

அடுத்த இருபது நிமிடத்தில் இருவரும் இந்தியாவிற்குச் செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர்.

அவனிற்கென சொந்தமான விமானம் என்பதால் உடனடியாக அவனால் பயணம் மேற்கொள்ள முடிந்தது‌.

இங்கு இந்தியாவில் மருத்துவரும் ருத்ரா கூறியது போல் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாக, ஆனால் அதற்கு முன்பே அந்த சிறுப்பாவைக்கு விழிப்பு வந்துவிட, பிரசவ வலி அதிகரிக்க தொடங்கின.

அவள் உச்சக்கட்ட வலியில் மெத்தையை இறுக்கிப்பிடித்து “அம்மாஆஆஆ” என வீறிட,

அதைக்கண்ட மருத்துவர் மகிழ்ச்சியாகி “இட்ஸ் மிராக்கிள்…இந்த பொண்ணுக்கு நார்மலாவே வலி வர ஆரம்பிச்சிடுச்சு…குட்…ஸ்வேதா சீக்கிரம் அந்த பொண்ணு காலை பிடி” என கட்டளையிட்டவர்,அவளது கர்ப்ப வாயின் வழியே குழந்தையை வெளியே எடுப்பதற்கு பெரிதும் போராடினார்.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெரும் வீறிடலுடன் ஒரு ஆண் குழந்தை இப்புவியில் ஜனிக்க,

ஆனால் அக்குழந்தையை ஈன்றெடுத்த சிறு அன்னையவளிற்கோ இரத்தழுத்தம் அதிகரித்து அவளிற்கு மீண்டும் வலிப்பு வரத்தொடங்க,உதிரத்தின் போக்கும் ஆறாய் பெருக்கெடுத்தது.

அதைப்பார்த்து ஸ்வேதா அதிர்ந்து “டாக்டர் இங்க பாருங்க” அவ்வறையே அதிர கத்த,

அந்த மருத்துவரோ “ஐய்யோ மறுபடியுமா?” என பதட்டத்தோடு குழந்தையை வேறு செவிலியரின் கையில் கொடுத்துவிட்டு அந்த பெண்ணின் உயிரை காக்க அரும்பாடுபட்டு போராடினார்.

உலகத்தில் அந்த உயிரை பிடித்து வைக்க அவர்கள் அந்த எமனோடு யுத்தம் புரிந்துக்கொண்டிருக்க,உயிர் வாழும் ஆசையே இல்லாத அந்த சிறு கண்மணியின் இதயம் இறுதியாக தன் துடிப்பை நிறுத்திக்கொண்டது.

அவ்வளவு தான்!

அனைத்தும் முடிந்துவிட்டது.

பதினாறு வயது பட்டாம்பூச்சி ஒரு சிலரின் சுயநலத்தால் இறுதி மூச்சை விடுத்து செத்து மடிந்தது‌.

அந்த பெண் மருத்துவரும் “ஷி இஸ் நோ மோர்” என அசால்ட்டாக கூறி இதழை பிதுக்க, ஸ்வேதாவின் கண்ணிலிருந்து நீர் கடகடவென வழிய ஆரம்பித்தது.

அதேவேளை இந்தியாவில் தனது காலடியை பதித்தான் ருத்ர பிரதாப் மல்ஹோத்ரா.

“மறமேந்திய திருவற் நெடியோனின் கிள்ளை மொழி பெதும்பையாளின் சிருங்காரம் நேயறு தொகையாகும்”

 

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top