நெஞ்சில் நிறைந்த காதல், என்றும் நினைவில் நிற்குமே!
கனவே சேராயோ?? 15
எப்போதும் அவன் சிந்தனையை அலைக்கழிக்கும் அந்த நெகட்டிவ் மனிதனுடன், இன்று ஒரு பெண்ணும் வந்தாள். உருவங்கள் தெரியவில்லை. ஆனால் பெண் என்று நன்றாகவே தெரிந்தது.
ஏசி அறையில், வியர்வை முத்துக்கள் கோர்க்க. அடித்துப் பிடித்து எழுந்தான்.
‘இது என்ன புதுசா பொண்ணு வருது?? நேத்து இந்த மானசா பிரச்சனையிலேயே இருந்ததுனால, பெண் உருவமும் சேர்ந்து வருதா’? குழப்ப ரேகையில் அவன் நெற்றி சுருங்கியது.
இரவு முழுவதும் கூட அவர்களின் சிந்தனையில் தான் உறங்கச் சென்றான். ஆனால் கனவில் வரும் இந்த நெகட்டிவ் மனிதன் எப்போதும் வருபவன் தான். இந்தப் பெண் தான், இன்று புதிதாக வந்திருக்கிறாள். இவள் யார்?? இவளுக்கும், அந்த நெகட்டிவ் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்?? இவளுக்கும் மானசாவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா?? குழப்பத்தோடு அமர்ந்திருந்தான்.
அவன் குழப்பம் தீர்ந்தப்பாடில்லை. சற்று நேரம் பொறுத்து தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
காலைக்கடன்களை முடித்துவிட்டு. ஜிம் அறைக்குள் தஞ்சமடைந்தான். ஆனால் குழப்பம் மட்டும் தீர்ந்தப்பாடில்லை.
……..
காலையில் எப்போதும் போல மகள் எழுந்து வராததை உணர்ந்த சிவமதி. அவளுக்கு உடல் நிலை சரியில்லயோ?? என்று நினைத்து மகள் அறைக்கு வந்தார்.
ஆனால் அவளோ, முக்காடு போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. போர்வையை இழுத்து விட்டார். அவள் கைகளை துலாவி மீண்டும் போர்த்திக் கொண்டாள்.
அவள் நெற்றியில், கழுத்தில் என்று கைகளை வைத்து அனல் அடிக்கிறதா? என்று ஆராய்ந்தார். ஆனால் ஏசி குளிரில் ஜில்லென்று தான் இருந்தது.
“உனக்கு என்னடி கேடு வந்துச்சு?? வேலைக்கு சரியா எழுந்து கிளம்பிடுவ. இப்ப என்ன தூங்கிட்டிருக்க?? உன் தம்பியோட காத்து உனக்கும் அடிச்சிடுச்சா?? எழுந்து மானசா. உடம்பு ஏதாவது சரியில்லையா”? மகளை உலுக்கிக் கொண்டு கேள்விகளை கேட்டார்.
“வேலை போயிடுச்சுமா” தூக்க கலக்கத்தில் உளறி கொட்டினாள்.
“என்ன?? என்ன பினாத்திட்டிருக்க?? உன் தம்பியை மாதிரி நீயும் கனவு கண்டு தொலைச்சியா”? சற்று கோபமாகவே கேட்டார்.
அவரின் அழுத்தமான குரலில் அதிர்ந்து எழுந்தவள். தன்னை சுதாரித்துக் கொண்டாள்.
“சாரி, சாரி அம்மா, வேலை போயிரும்னு நினைக்கிறேன் அம்மா”? என்றாள் பதட்டமாக.
“ஏன்?? ஏதாவது தப்பு பண்ணிட்டியா?? பார்த்து பண்ண தெரியாதா? வேலை செய்யும்போது எப்பயும் கவனம் வேலையில இருக்கணும். மத்ததுல இருக்க கூடாது. உனக்கு இதை எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்”? அறிவுரை வழங்க ஆரம்பித்து விட்டார் சிவமதி.
“தப்பெல்லாம் பண்ணல. ஆனா போயிடும்”? என்று சொன்னவளுக்கு, தம்பியை காட்டிக் கொடுக்க மனம் வரவில்லை.
“அது எப்படி டி, தப்பே பண்ணாம வேலை போகும்?? இதென்ன ஐடி கம்பெனியா?? ஆள் குறைப்பு பண்றேன்னு வேலையிலிருந்து தூக்குவதற்கு? இதுக்கு தான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன்?? ஒழுங்கா கவர்ன்மெண்ட் எக்ஸாம் எழுதுன்னு. கேட்டீங்களா?? இந்த பிரைவேட் கம்பெனிகளில் இப்படித்தான் எப்ப வேலையில வச்சிருப்பாங்க? எப்ப தூக்குவாங்கன்னு சொல்லவே மாட்டாங்க”? அவர் பாட்டிற்கு புலம்பிக்கொண்டே செல்ல.
இவளும் வேண்டா வெறுப்பாக தயாராகி வெளியில் வந்தாள். அவளுடைய தம்பி அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
“அம்மா கிட்ட சொல்லிட்டியா”? என்று கண்களை உருட்டினான் நிர்மல்.
அவள் “இல்லை” என்று தலையாட்டினாள்.
“ஆபீஸ்லயிருந்து ஏதாவது போன் கால் வந்துச்சா”? என்று கேட்டான்.
அதற்கும் அவள் இல்லை என்று தலையாட்டினாள்.
“நான் வேணும்னா திரும்பி வந்து, உங்க எம் டி கிட்ட சாரி கேட்கவா”? என்று கேட்டு வைத்தான் நிர்மல்.
பெரிய கும்பிடாக போட்டவள். “நீ பண்ண வரைக்கும் போதும் டா ராசா? நீ இனிமேல் எதையுமே பண்ண வேண்டாம். என் ஆபீஸ் பக்கம் வந்த?? கால ஒடச்சிடுவேன்” என்றாள் மானசா.
“ஹலோ மேடம் இனிமே அது உங்க ஆபிசா, இல்லையான்னு தெரியல?? அதுக்குள்ள ஓவரா பில்டப் பண்ணாதீங்க”? என்று கூறினான்.
தம்பி பார்த்து பல்லை கடித்தவள். வேலைக்கு கிளம்பினாள்.
அவர்களாக அழைத்து எதுவும் சொல்லவில்லை. எழுந்தவுடனே மெசேஜ் மெயில் என்று செக் செய்தாள். அதிலும் வேலையில் இருந்து நிறுத்தியதாக எந்த மெயிலும் வரவில்லை. எப்படியும் நேரில் சென்று தான் பேசிவிட்டு, பைலை வேறு வாங்கிக் கொண்டு வர வேண்டுமே?? அதனால் கிளம்பினாள்.
‘நானும் துணைக்கு வரவா’ என்று கேட்ட தம்பியை, முறைத்து விட்டு தான் புறப்பட்டாள்.
அவள் வீட்டிற்கும் கம்பெனிக்கும் வெகு தூரம் இருந்தது. அடித்து பிடித்து ட்ராபிக்கில் வருவதற்குள், எப்படியும் தாமதமாகி விடும். முறைக்கும் மேனேஜரிடம் இளித்துவிட்டு தான் அலுவலகத்திற்குள் நுழைவாள். அதுவும் இன்று வேண்டா வெறுப்பாக வேறு கிளம்பினாளா?? இன்னும் தாமதமானது.
“என்னடி இன்னைக்கு இவ்வளவு லேட்டா வர?? எம் டி யோட பி. ஏ உன்னை தேடிட்டே இருந்தாரு. நீ சாவகாசமா வர?? திட்ட போறாரு போ. நேத்தே ஆஃபீஸ் முழுக்க உன்னை பத்தியும் உன் தம்பியை பத்தியும் தான் பேச்சு. அவனுக்கு இருக்கிற பிரச்சினையை பத்தி எனக்கு தெரியும். ஆனா எல்லாருக்கும் விளக்கம் சொல்ல முடியாது இல்லையா? சரி போ போய் முதல்ல செக்கரட்டரிய பாரு” என்று அவளுடைய தோழி கடிந்து கொள்ள.
“அனேகமா இன்னைக்கு தான் என்னோட லாஸ்ட் டேவா இருக்கும் டி. யார் திட்டுனாலும் வாங்கிக்கிட்டு கிளம்பி போயிட்டே இருக்க வேண்டியதுதான்” என்றாள் மானசா.
“ஏண்டி உளறிட்டு இருக்க”?? என்றாள் ராதா.
“நான் உளறல உண்மையை தான் சொல்றேன்.”
“நீ தினமும் லேட்டா வந்ததுனால உன்னை வேலையில் இருந்து தூக்கிட்டாங்களா”? என்று கேட்டாள் ராதா.
“அதுக்காக தூக்கினாங்களா இல்லையான்னு தெரியல? ஆனா கண்டிப்பா தூங்கிடுவாங்கன்னு மட்டும் தெரியும்”? என்றாள் மானசா.
அதற்குள் அங்கு வந்த ஏவலர், அவளை சீஃப் இன்ஜினியர் கூப்பிடுவதாக சொன்னார்.
“இரு டி போய்ட்டு வரேன். சாயங்காலம் வரைக்கும் கூட தாங்காது போல”? என்று கூறிவிட்டு சென்றவள்.
பவ்யமாக அவர் முன்னால் சென்று நின்றாள்.
“நேத்து என்ன நடந்தது?? உன் தம்பி எதுக்கு அப்படி முட்டாள்தனம் பண்ணான்? முதல்ல அவனை யாரு உள்ள வரச் சொன்னது”?? என்று அடுக்கடுக்காக அவர் கேள்விகள் கேட்க. அதற்கு அவளிடம் பதில் தான் இல்லை.
அமைதியாக தலை கவிழ்ந்து நின்றாள்.
“நேத்து என்கிட்ட நீ சொல்லிக்காம லீவ் போட்டுட்டு போயிட்ட? அதுக்கே உன்ன பனிஷ் பண்ணனும்? சீனியர் கிட்ட சொல்லிட்டு போகணும்னு நாலெட்ஜ் இல்லையா உனக்கு?? ஏற்கனவே எப்பயும் வரது லேட்டு. இதுல புது பிரச்சனையை வேற இழுத்து வச்சிருக்க?? எப்ப எம். டி கூப்பிட்டு திட்ட போறாரோ தெரியல?? நீங்க பண்ண தப்புகளுக்கு நாங்க பயந்து நிக்கிறோம்?? எக்ஸ்பீரியன்ஸ் இருக்குறவங்களுக்கு பிரமோஷன் கொடுக்கணும்?? இப்படி சின்ன வயசு பொண்ணுங்களுக்கு கொடுத்தா? இதுதான் நடக்கும். என்னதான் பிரச்சனை உனக்கு? கேட்க கேட்க அமைதியா இருக்குற ? இன்னைக்கும் சாவகாசமா வர”? என்று ஏக கடுப்பில் திட்டிக் கொண்டிருந்தார்.
“சார், அது உங்களுக்கு சொன்னா புரியாது. அவன் கொஞ்சம் உடம்பு சரியில்லாதவன்” என்று அவள் கூற.
“மனநல பாதிக்கப்பட்டவனா?? பார்க்கும்போதே நினைச்சேன். இவ்வளவு அழகான பையனுக்கு இப்படி ஒரு நோயா”? என்று அவர் படபடக்க.
“சார்” என்று ஓங்கி கத்தி விட்டாள். அவளுடைய தம்பியை அப்படி சொன்னால், அவளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்??
அவர் நெற்றிசுருக்கி அவளை முறைத்தார். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்.
“நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல சார். ஏதோ கனவு கண்டு உளறிட்டான். Precognitive dream (முன்கூட்டிக் காணும் கனவு) ப்ராப்ளம் இருக்கு. இதுக்கு எந்த எக்ஸ்பிளனேசனும் கொடுக்க முடியாது. ஏன்னா இன்னும் இது ஆய்வுல தான் இருக்கு. நேத்து எம்டி கிட்ட சொல்லிட்டு தான் போனேன். சாரி உங்ககிட்ட ரிப்போர்ட் பண்ணல. வேற எதுவும் விஷயம் இருக்கா சார்”? என்று பொறுமையை கடைப்பிடித்துக் கொண்டு கேட்டாள்.
“அது எப்படி?? வர்ற கனவு எம்டியோட தான் வரணுமா?? நம்ம ஆபீஸ் ஸ்டாப், நம்ம பியூன், வாட்ச்மேன், இவங்க கூட நான் வரக்கூடாதா”? என்று அவர் நக்கலாக கேட்க.
கீழ் உதட்டை மடித்து கடித்து. தன் ரௌத்திரத்தை கட்டுப்படுத்தியவள்.
“நாளைக்கு இவங்க கூட எல்லாம் கனவு காண சொல்றேன் சார். உங்களுக்கும் ஒரு பையன் இருக்கான்ல?? அவனோட கூட கனவு காண சொல்றேன்” என்று கூறிவிட்டாள்.
தவறு அவள் தம்பியுடையது என்று தெரிந்ததால் தான், தேஜாவிடம் அவள் இறங்கி போனாள். தன் தம்பிக்கு பிரச்சனை வரக்கூடாது என்று கெஞ்சினாள். ஆனால் இப்படி வேண்டுமென்றே பேசுபவர்களிடம், பதில் பேச அவளுக்கும் தெரியும்.
“எகத்தாளத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை”? என்று அவளை முறைத்துப் பார்த்தார்.
“வேற என்ன விஷயம் சார்?? வேலை ஏதாவது கொடுக்க போறீங்களா?? இல்ல லேட்டா வந்ததுக்கு சேலரில கட் பண்ண போறீங்களா”? என்று மிடுக்கு குறையாமல் கேட்டாள்.
“வேற என்ன?? வேலை விஷயம்தான். கிட்டத்தட்ட ஒன் அவர் லேட்டா வந்திருக்க. அதுக்கு உன்னோட சேலரியில் இருந்து கட் பண்ண வேண்டியது தான்” என்றார்.
“சேலரி எல்லாம் குடுப்பீங்களா சார்”?? அவளும் பவ்யமாகவே கலாய்த்தாள்.
“சேலரி கொடுக்காம இருந்தா, நீ அமைதியா போயிடுவியா”? என்று அவரும் திமிராக கேட்டார்.
அவள் என்னவோ கடைசி நாள் என்ற ரீதியில் பேசிக்கொண்டிருக்க. அவர் ஏதோ சாதாரணமாக தான் பேசிக் கொண்டிருந்தார்.
தேஜாவிற்கும் அவளுக்கும் இடையே நடந்த உரையாடல் அவருக்குத் தெரியாதே??
“அது எப்படி சார்?? இத்தனை நாள் உழைச்சிருக்கேன் இல்லையா?? அதுக்கான கூலியை கொடுத்தா வாங்கிட்டு போயிடுவேன்” என்றாள்.
“அதை எம். டி தான் டிசைட் பண்ணனும். ஆனா பெரிய பாஸ் உன் மேல ரொம்ப கோவத்துல இருக்காரு. போ, போய் வேலையை பாரு” என்றார்.
தன் சீட்டிற்கு வந்து அமர்ந்தவள். “எம்டி வந்துட்டாரா டி”? என்று ராதாவிடம் கேட்டாள்.
“அவர்தான் எப்பையும் பங்க்சுவலா வந்துருவாரே டி?? இன்னைக்கும் சீக்கிரமாவே வந்துட்டாரு. நீதான் எப்பயும் போல லேட்” என்றாள் ராதா.
தோழிக்கு சரி என்று தலையாட்டியவள். ‘தான் இப்போது வேலையை பார்ப்பதா வேண்டாமா?? என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.
கேமரா வழியாக அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் தேஜா.
‘எப்படியும் வேலையை விட்டு தூக்க போறாங்க?? அதுக்கு எதுக்கு நான் வேலையை பாக்கணும்? கன்னத்தில் கையை வைத்தபடி விண்டோ ஸ்கிரீனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
உதட்டை சுளித்து ‘ம்ப்ச்’ கொட்டியவள். பிறகு நாக்கின் நுனியை உதட்டின் ஓரமாக வைத்து சலித்துக் கொண்டவள். எதையோ முணுமுணுத்து விட்டு, அமைதியாக அமர்ந்து கொண்டாள். அதை பார்த்ததும் அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை.
பணம் இருந்தால் எதுவும் சாத்தியப்படும் என்பதற்கு இணங்க. ஒரே நாளில் கிட்டத்தட்ட, முக்கால் நாளிலேயே நிர்மலை பற்றிய விஷயங்கள் அனைத்தையும் எடுத்து விட்டான் தேஜா. அவளுக்கு காதலன் யாராவது இருக்கிறார்களா, இல்லையா? என்பது உட்பட.
முதல் நாள் அவர்கள் இருவரும் ரெஸ்டாரன்ட் சென்று பிரியாணி சாப்பிட்டது வரை தெரியும் அவனுக்கு.
அவர்கள் சொன்னது உண்மைதான் என்று தெரிந்து விட்டது. ஆனால், ‘அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்ன’? அவன் கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை பார்த்தபடியே தனக்குள்ளாக கேட்டான் தேஜா.
……