அவள் 3

“மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்

வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்

நாதந் தானது நாரதர் வீணையோ?

நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?

வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே

மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?

சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?

தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!”

மணிகர்ணிகா இன்றோடு அமெரிக்காவிற்கு வந்து ஒரு மாதம் கடந்துவிட்டது.அத்தோடு தனது லட்சியத்திற்கான முதல் படியில் காலடி எடுத்து வைத்திருந்தாள்.

ஆனால் அவள் எடுத்து வைக்க போகும் முதல் பாதையின் தொடக்கமே எளிதாக இல்லாமல் வெகு சிரமத்துடன் பல தடைகற்களை கொண்டு அமைவதாக இருந்தது.ஏனெனில் மணிகர்ணிகா இதுநாள் வரை கற்று தேர்ந்திருந்தது இந்தியன் சமையல் கலை மட்டுமே.

ஆனால் இங்கு அவள் பணிப்புரிய போகும் உணவகமோ ஒரு இத்தாலியன் வகையை சேர்ந்ததாகும்.இதுவரை அவள் கற்று வைத்திருந்தது கடுகளவு மட்டுமே,அத்தோடு அவள் பயில வேண்டியது  வானளவு பரந்து விரிந்திருந்தது.

மணிகர்ணிகாவிற்கு முதல் ஒரு வாரம் அனைத்தும் மலைப்பாக தோன்றிட,அதில் பெரும் தடுமாற்றத்துக்குள்ளானவள் அடுத்து வந்த திங்களில் சிரமேற்கொண்டு இத்தாலியன் சமையலை நன்கு கற்று தேர்ந்தாள்.

சமையல் மீது அவள் கொண்ட மையலே அவளை விரைவாக கற்று தேற வைத்திருந்தது.

அவளுக்கு இத்தாலியன் சமையலில் உள்ள நுணுக்கங்களையும் செய்முறையையும் ஒரு ஆசானாக மிகவும் பொறுமையாக பயில்வித்தது சிவனேசனின் மகன் சந்திரகேசன்.

அன்று அவள் நினைத்தது போல் அல்லாமல் விமானநிலையத்திலிருந்து வீடு வந்து சேர்ந்தவுடன் அவளை இன்முகத்தோடு வரவேற்றது தான் சிவனேசனின் மகன் சந்திரகேசன்.அவளை நிலையத்தில் வரவேற்று தன்னுடைய காரில் அமர்த்தி கொண்டு வந்து வீடு சேர்ப்பித்தது அவருடைய உற்ற தோழன் ஏ.ஜே என்ற பெயர் சுருக்கம் கொண்ட அஜீத் செல்வன்.

சந்திரகேசன் தன்னை அறிமுகப்படுத்தியவுடன் அதில் அதிர்ச்சிக்குள்ளான மணிகர்ணிகா தன் விழிகளை பெரிதாக விரித்து திகைப்புடன் அஜீத்தை நோக்கி திரும்பியவளுக்கு மூச்சடைத்தது.

ஏனெனில் அந்நேரம் தன்னுடைய மூச்சுக்காற்று மணிகர்ணிகாவின் தோள்பட்டையில் விழும்படியான நெருக்கத்தில் நின்றிருந்தார் ஏ.ஜே.

ஆனால் இயற்கையாகவே தனக்கிருக்கும் எச்சரிக்கை உணர்வில் உடனடியாக மூச்சடைக்கும் உணர்விலிருந்து வெளிவந்த மணிகர்ணிகா அவசரமாக அவரிடமிருந்து இரண்டடி தள்ளி நின்றாள்.

அத்துடன் தன் பார்வையில் கனலுடன் அவரை எரித்து சாம்பலாக்கவும்,அதை அலட்சியப்படுத்துவது போல் ஒற்றை புருவத்தை மேலேற்றி கீழுதட்டை கேலியாக பிதுக்கியவர் அவளை மேலிருந்து கீழே வரை ஒரு இளக்கார பார்வை பார்த்து நக்கல் புன்னகை பூத்து தன்னுடைய பழுப்பு நிற குளிர் கண்ணாடியை கண்களுக்கு கொடுத்துவிட்டு தனது நண்பன் சந்திரகேசனிடமும் அவரது மகளிடமும் விடைப்பெற்று காரிலேறி கிளம்பிவிட்டார். 

ஆனால் அவரது பார்வையில் பொதிந்திருந்த இளக்காரம் அவளை உள்ளுக்குள் கூச செய்து அருவருப்பு ஊட்டியதில் ‘எந்த காரணம் கொண்டும் அவனை தன் வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது’ என உறுதிமொழி எடுக்க வைத்தது.

அவரும் வேண்டுமேன்றே அவளை நெருங்க முயற்சி செய்யவுமில்லை,எதிர்ப்பாராமல் நிகழ்ந்துவிட்ட நெருக்கத்திற்கு அவள் காட்டிய கோப முகம் அவருக்குள் கனலாய் ஒரு தீயை மூட்டிட அதை தணித்துக்கொள்ள வேண்டி ‘உன்னை மாதிரி எத்தனை பெண்களை பார்த்திருக்கிறேன்’ என இளக்காரமான பார்வையை அவள் மீது வீசிவிட்டு சென்றார். 

அதேசமயம் அவள் வாழ்க்கையில் சந்தித்த பல இன்னல்களும் ஒரு சில ஆண்களின் ஒழுக்கமற்ற செயல்களையும் கடந்து வந்தவளுக்கு இயற்கையாகவே இருக்கும் எச்சரிக்கை உணர்வினால் அவரை தவறாக நினைத்து ஒதுங்க முயற்சித்து,அவரையும் தன்னிடமிருந்து தள்ளி நிறுத்த வேண்டி அனல் கக்கும் பார்வை பார்த்து வைத்தாள்.அதில் அவரது இளக்காரமான பார்வையில் தேகம் கூசிட அவரை தவறாக நினைத்து மேலும் ஒதுங்க செய்தாள்.

இறுதியில் காரணமின்றியே இருவரும் ஒருவரிடமிருந்து மற்றவர் ஒதுங்கி இருப்பதே நல்லது என முடிவுசெய்து அதன்படி நடக்கவும் செய்தார்கள்.

அத்தகைய காரணத்தால் மணிகர்ணிகா அஜீத்தை முதல் நாளிற்கு பிறகு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நேரடியாக சந்திக்கவில்லை.அதற்கு அவரது பரபரப்பான வாழ்க்கையும் ஒரு காரணம்.

அதற்கிடையில் மணிகர்ணிகாவை நெருங்க ரேவதி எத்தனையோ  முயற்சி செய்தப்போதும் அதில் வெற்றியடைய முடியவில்லை.சந்திரகேசனும் தன் தந்தை அனுப்பிய பெண் என்பதால் அவளிடம் ஒரு தங்கையை போல் பாசம் காட்டினார்.

அவர்கள் இருவரும் பஞ்சு பொதிப்போல் பாசமூட்டையை அள்ளி அவள் மீது கொட்டியப்போதும் சூடு கண்ட பூனை என்பதற்கு இணங்க தன் வாழ்க்கையில் அவள் அடைந்த கஷ்டங்களும் வேதனைகளும் அவர்களிடம் அவளை நெருங்க விடாமல் தன்னை சுற்றி ஒரு வளையத்தை அமைத்துக்கொள்ள செய்தது.

சந்திரகேசனின் இல்லம் வசதியாக இருந்தப்போதிலும்,தனக்கென தனியாக ஒரு வீடு பார்த்து தருமாறு வேண்டி கேட்டுக்கொண்டவள் அடுத்த ஒரே வாரத்தில் தனி வீட்டிற்கு குடிப்புகுந்துவிட்டாள்.

இரவு ஒன்பது மணிக்கு உணவகத்தில் தன் பணியை முடித்துக்கொண்டவள் தான் உடுத்தியிருந்த வெள்ளை நிற சமையல்காரர் உடையை அவிழ்த்து அதை தன் பையில் மடித்து வைத்தவள்,பையிலிருந்த சுரிதாரின் துப்பட்டாவை எடுத்து தோளின் இருபுறமும் போட்டுக்கொண்டு,அவளுக்கு கீழ் பணிப்புரியும் உதவியாளரான ஜோசப்பிடம் “ஜோசப் காலையில் சமைப்பதற்கு தேவையான காய்கறிகளை லிஸ்ட் போட்டு சாரிடம் கொடுத்திருக்கிறேன்…அதில் இருக்கும் காய்கறிகள் எல்லாத்தையும் பிரிட்ஜிலிருந்து வெளிய எடுத்து நறுக்கி வைச்சிடுங்க…ஏனால் நான் நாளைக்கு கொஞ்சம் தாமதமாக தான் இங்கு வருவேன்…இதர இன்கிரிடியன்ட்ஸ் அனைத்தையும் சிவப்பு நிற கூடைக்கு அடியில் லிஸ்ட் போட்டு வைத்திருக்கேன்…அதையும் கொஞ்சம் எடுத்து தயார் படுத்தி வைங்க” என்றவுடன் அவனது முகத்தில் ‘இது எல்லாத்தையும் நானே தனியாக செய்யணுமா?!’ என்பது போல் ஒரு அயர்ச்சி தெரியவும்,

அதை அவனது முகத்தின் வழியாக படித்த மணிகர்ணிகாவிற்கு உள்ளுக்குள் கடுத்தாலும் வெளியில் “உங்களுக்கு உதவி செய்ய ஷாஷாவையும் சீக்கிரம் வர சொல்லியிருக்கேன்…அதனால் தனியாக செய்யணுமா என்று வருத்தப்பட வேண்டாம்…நான் கிளம்பறேன் ஜோசப்” என்ற பிறகு தான் அவனது முகத்தில் ஒரு மலர்ச்சியே தோன்றியது.

அதை ஒரு வித சலிப்போடு பார்த்தாள் மணிகர்ணிகா. அத்தோடு அவள் அவ்வாறு சலிப்பதற்கும் காரணங்கள் இருந்தது.ஏனெனில் தினமும் வெகு விரைவாக இங்கு வந்து தனியொருத்தியாக அத்தனை வேலையையும் செய்பவள் இவள் ஒருத்தி மட்டுமே.ஒரே ஒரு நாள் அவ்வேலையை அவனிடம் செய்யும்படி பணித்ததற்கு தயங்கினால் அவளும் என்ன தான் செய்வாள் பாவம்.

அவனை மனதினுள் வறுத்தப்படி கொண்டையிட்டு இருந்த தனது பின்னலிட்ட முடியை அவிழ்த்துவிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு சந்திரகேசனிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப,அவளை தடுத்த சந்திரன் “மணி கொஞ்ச நேரம் காத்திருந்தால் இரண்டு பேரும் ரெஸ்ட்ரான்ட் மூடிட்டு ஒண்ணாவே கிளம்பலாம்… நானே உன்னை கூட்டிட்டு போய் வீட்டில் விடறேன்ம்மா…நீ ஏன் இந்த நேரத்தில் தனியா போய் சிரமப்படறே?” என அக்கறையுடன் கேட்க,

அதை மரியாதை நிமித்தமாக கூட ஏற்றுக்கொள்ள மனமின்றி உடனடியாக மறுத்த மணி “இல்லை சார்…பக்கத்தில் தானே வீடு நான் நடந்தே வீட்டுக்கு போய்விடுவேன்…கிளம்பறேன் சார்” அவர் மீண்டும் எந்த வித கேள்வியும் கேட்டு தன்னை தடுப்பதற்கு வாய்பளிக்காமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

போகும் அவளை ஒரு வித மனப்பாரத்தோடு பார்த்திருந்தார் சந்திரகேசன்.மணிகர்ணிகாவை பற்றி அனைத்தையும் தந்தையின் வாய் மூலமாக கேட்டறிந்திருந்த சந்திரனுக்கு அவளின் மீது பரிதாபம் தோன்ற செய்தது.ஆனால் அவரது பரிதாபத்தை ஒரு போதும் மணிகர்ணிகா விரும்புவது இல்லை என்று தெரிந்தவுடன் தன் போக்கை மாற்றிக்கொண்டார்.

இருப்பினும்,மனம் தாளாமல் அவளுக்கு உதவிச்செய்ய முன்வந்தால் அதை மணிகர்ணிகா உறுதியாக மறுத்தாள்.அவரும் தினமும் இதே வேண்டுக்கோளை முன் வைக்க,அவள் அதற்கு ஒத்துக்கொள்ளவேயில்லை.

அவளது பிடிவாதமும் மற்றவரை சார்ந்திருக்காமல் இருக்கும் தன்னம்பிகையும் அவருக்கு வியப்பாகவும் பிரம்மிப்பாகவும் இருக்கும்.இப்போதும் அதே வியப்புடன் போகும் அவளை பார்த்திருந்தாலும்,சுட்டெரிக்கும் கதிரவனாய் தன்னை சுற்றி நெருப்பு வட்டத்தைப் போட்டு கொண்டு அதன் நடுவே அமர்ந்திருக்கும் அவளது தியான நிலை அவரது நெஞ்சில் பாரமாய் கனக்கவும் வைத்தது.

உணவகத்திலிருந்து வெளியே வந்த மணிகர்ணிகா சாலையோர பாதசாரியில் நடந்தவளுக்கு சுற்றியிருக்கும் வானளவு உயர்ந்த கட்டிடங்கள் எப்போதும் போல் ஒரு வித பிரம்மிப்பை கொடுத்தது.

அதனால் அவையனைத்தையும் வேடிக்கைப்பார்த்தப்படி நடந்தவளுக்கு அங்கிருந்த உணவகங்களின் தோற்றங்கள் கவனத்தை கவர்ந்தது.வெளியில் இருந்தப்படியே கண்ணாடியின் வழியே உணவகத்தை பார்வையிட்டவளின் விழிகள் விரிய இலேசாக வாயை பிளந்தப்படி அனைத்தையும் தனது மூளையில் பதிவு செய்துக்கொண்டாள்.

இதேப்போல் ஒரு உணவகத்தை இந்தியாவில் தன்னுடைய ஊரில் திறக்கவேண்டும் என அவளுள் பல ஆயிரம் கனவுகள் காட்சிகளாய் மூளையில் தோன்றி,அவளது ஆசையை கிளர்ச்சியடைய செய்திருந்தது.

அனைத்தையும் சிறுப்பிள்ளையின் ஆர்வத்தோடு பார்த்து கொண்டிருந்த மணிகர்ணிகாவின் பார்வை ஒரு இடத்தில் ஆணியடித்தது போல் நிலைக்குத்து நின்றது.

ஏனெனில் அது ஒரு சமையல் போட்டியை பற்றிய அறிவிப்பிற்கான பலகை விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.அந்த போட்டி ஒரு பெரிய சமையற்கலை வல்லுநர்களின் தலைமையில் நடைப்பெற போகிறது என போடப்பட்டிருந்தது.

அத்தோடு,அதில் வெற்றி பெறப்போகும் வெற்றியாளருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகையும்,அத்தோடு ஒரு உயர ரக ஐந்து நட்சத்திர விடுதியில் வேலையும் கிடைக்கும் என போடப்பட்டிருந்தது.

அதை பார்த்தவளின் விழிகளில் பிரகாசம் கூடிட நாமும் இதில் கலந்துக்கொண்டால் என்ன என்று உள்ளுக்குள் ஒரு ஆர்வம் தலைத்தூக்கியது.ஆனால் இன்னொரு மனமோ அதில் அனைத்து வகையான உணவுகளும் செய்ய தெரிந்திருக்கக்கூடியவர்களும்,அதிக அனுபவம் வாய்ந்தவர்களும் வருவார்கள்,அவர்கள் அனைவரையும் தாண்டி உன்னால் வெற்றி பெற முடியுமா என அவளது மனசாட்சி கேள்வி எழுப்ப,உடனடியாக மலர்ந்த அவளது முகம் மீண்டும் சுருங்கிட,சோர்ந்துப்போனவளாய் தன் வீடு வந்து சேர்ந்தாள்.

‘போட்டி ஆரம்பிப்பதற்கு இன்னும் மூன்று மாத காலம் இருக்கு… அதற்குள் உன்னால் பல வகை சமையலை கற்றுக்கொள்ளமுடியாதா என்ன?’ என அவளது மனசாட்சி குரல் கொடுக்க,

ஆனால் அவளது இன்னொரு மனமோ ‘மணி நடக்கிறது பேசுடி…ஒருத்தருக்கு எழுந்து நிற்கவே வக்கு இல்லையாம்…இதில் போட்டியாம் போட்டி…முதல்ல அந்த போட்டியில் கலந்துக்கொள்வதற்கு தேவையான பணம் உன் கையில் இருக்கா?இந்த மாதம் சம்பாதித்தால் தான் உன்னால் வீட்டு வாடகையே கொடுக்க முடியும்…இந்த லட்சணத்தில் உனக்கெல்லாம் இந்த போட்டி தேவையா?ஒழுங்கா எல்லாத்தையும் மறந்திட்டு நடக்கறதை பாரு’ என அவளது தற்போதைய நிலையை அறிவுறுத்தி பரிகாசம் செய்ய,தன்னுடைய இயலாமையை நினைத்து துவண்டுப்போய் உணவருந்தாமல் படுத்துக்கொண்டாள்.

முதன்முறையாக தன் நிலையை அறவே வெறுத்தவளாக ஆதங்கத்தோடு பொங்கி வந்த அழுகையை இதழை கடித்து வேதனையை அடக்கி வைத்தவளின் நிலையை உணர்ந்தாற் போன்று காக்கும் கடவுளாய் வாயிற்மணி ஒலித்தது.

தன் இலட்சியத்தை அடைய முடியாத நிலையில் தனக்கு யாருமில்லை என வருந்திக்கொண்டிருந்த மணிகர்ணிகா மணியோசையில் தன் கவலை கலைந்து இந்நேரத்தில் ‘யார்?’ என்ற நெற்றி சுருக்கத்துடன் பெரும் குழப்பத்தோடு கதவை நோக்கி நடந்தாள்.

கதவில் இருந்த கண்ணாடி குமிழி வழியாக வெளியில் இருக்கும் உருவத்தை பார்த்துவிட்டு ‘இந்நேரத்தில் இவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள்?’ என்ற கடுகடுப்புடன் கதவை திறந்தாள்.

இவள் கதவு திறப்பதற்காகவே காத்திருந்தாற் போன்று அவளை கண்டு புன்னகைத்த ரேவதி மணிகர்ணிகாவின் முகத்தை கூர்ந்துப்பார்த்தாள்.

அவளது முகத்தில் தெரிந்த வேதனையையும் அத்துடன் கூடவே தெரிந்த கடுப்பையும் கண்டுக்கொண்டவள் “ஹாய் ஆன்ட்டி…இந்த நேரத்தில் உங்களை தொந்தரவு பண்ணிட்டனா…மன்னிச்சிடுங்க” முகத்தை சுருக்கி காது இரண்டையும் பிடித்து தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு வேண்டிட,

அவளது சிறு பிள்ளை செயலில் தனது கடுப்பை கைவிட்டவளாக இதழில் ஒட்டி வைத்த புன்னகையோடு “சரி மன்னிச்சிட்டேன்…நீ என்ன விஷயமா வீட்டிற்கு வந்திருக்கே??” என்று கேட்டவளின் விழிகளில் கூர்மை ஏற அவளை மேலிருந்து கீழே வரை பார்வையால் அளந்தாள்.

மேலே கொசவுசட்டையும் கீழே முட்டிக்கு மேலே இருந்த கால்சட்டையும் அவள் இரவு உடையோடு வீட்டிலிருந்து கிளம்பி வந்திருக்கிறாள் என்பதை தெரியப்படுத்த முகத்தை சுழித்தவள் ஒரு முறைப்புடன் “என்ன மறுபடியும் சார் கூட சண்டையா?” நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

அவளது புத்திசாலித்தனத்தை உள்ளுக்குள் மெச்சிக்கொண்டவள் இதழை சுழித்து தன்னை உள்ளே வரவிடாதது போல் கை வைத்து வழி மறைத்திருந்த மணிகர்ணிகாவின் கைகளை நகர்த்திவிட்டு அராஜகமாக உள்ளே வந்து அங்கிருந்த மெத்தையில் தொப்பென விழுந்தவள் உணர்ச்சியற்ற குரலில் “ஆன்ட்டி பிளீஸ் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்…எனக்கு இப்போ தூக்கம் தூக்கமா வருது…பிளீஸ்…குட் நைட்” என கூறி தலையணையை எடுத்து முகத்தில் வைத்து மூடிக்கொண்டு மணிகர்ணிகாவை கேள்வி கேட்க விடாமல் உறக்கத்தை நாட தொடங்கினாள்.

ரேவதியின் முகத்தின் மீது மூடியிருந்த தலையணையை வெறித்துப்பார்த்து “உனக்கு எத்தனை தடவை அப்பா கூட சண்டை போடாதுனு சொன்னாலும் கேட்கமாட்டே…சண்ட போட்டாலும் பரவாயில்லை…வயசுப்பொண்ணு அர்த்தஇரத்திரி பதினொரு மணிக்கு வீட்டை விட்டு கோவிச்சுக்கிட்டு கிளம்பி வரது…என்ன பழக்கமோ?உன்னையெல்லாம் இரண்டு சாத்து சாத்தி வளர்த்திருக்கணும் சாரு…உனக்கு நல்லா செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்காரு” என தனக்குள்ளே புலம்பியவாறு கதவை மூடிவிட்டு தன் கைப்பேசியை எடுத்து சந்திரகேசனுக்கு தொடர்பு கொண்டாள்.

அதற்குள் தன் முகத்தை மூடியிருந்த தலையணையை நகர்த்திய ரேவதி “ஆன்ட்டி திட்டிறதா இருந்தா சத்தமாகவே  திட்டுங்க… நானெல்லாம் கோபப்படமாட்டேன்” என நொடித்துக்கொள்ள,

அவளை மேலும் நன்றாக முறைத்த மணிகர்ணிகா “ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என இப்போதும் வாயிற்குள் முணுமுணுத்தாள்.

இது அமெரிக்கா வந்த ஒரு மாதமாக அடிக்கடி நடக்கக்கூடிய நிகழ்வு தான் என்பதால் மணிகர்ணிகா அவளின் மீது கோபப்பட்டு வெளிப்படையாக திட்டாமல் தனக்குள் புலம்பிக்கொள்வதும்,அதை அறிந்தப்போதும் ரேவதி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இன்னும் கூறப்போனால் அவள் உரிமையெடுத்து வெளிப்படையாக திட்டவேண்டும் என எதிர்ப்பார்த்தாள்.

சிறு வயதிலே தாயை பறிக்கொடுத்ததால் அவரின் கண்டிப்பும் கவனிப்பும் இன்றி,தந்தையின் பாசம் மற்றும் அரவணைப்பில் வளர்ந்தவளின் மனம் தாயின் கண்டிப்பை எதிர்ப்பார்த்து ஏங்கியது.

அதை அவளது வாழ்க்கையில் கிடைக்காமல் இருப்பதால் தந்தையிடம் அடிக்கடி வேண்டுமென்றே சண்டைப்போட்டு தோழி வீட்டிற்கு சென்றுவிடுவாள்.இப்போது தன் தாயின் உருவத்தில் மணிகர்ணிகாவை பார்ப்பதால் அவளின் கண்டிப்பு கலந்த அன்பை வேண்டி இங்கு ஓடி வருகிறாள்.

அதனால் மணிகர்ணிகாவின் கண்டிப்பு கலந்த வார்த்தைகள் அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியையே தோற்றுவித்தது.

வெளியே அவளை திட்டிக்கொண்டே கைப்பேசியின் வழியே சந்திரனுக்கு அழைப்பு விடுக்க,எதிர்ப்புறம் அழைப்பை எடுக்கப்பட அவசரமாக அதை காதிற்கு கொடுத்து “சார் நான் மணிகர்ணிகா பேசுகிறேன்…ரேவதி இங்க என்னோடு வீட்டில் தான் இருக்கிறாள்…அதை சொல்ல தான் இந்த நேரத்தில் கூப்பிட்டேன் சார்” என சங்கடத்துடன் கூற,

எதிர்ப்புறம் ஒரு நீண்ட நெடிய அமைதிக்கு பிறகு ஒரு கணீர் குரல் “சந்துரு கால் பார் யூ…” என கூறியது.

உடனே கைப்பேசி வேறு கைக்கு மாறும் ஓசையும் கேட்டது.

அதற்கு இடையில் சந்திரன் “யாரு அஜீ” என கேட்பதும்,

அவர் “ஏதோ ஒரு லேடி பேசுறாள்??” என அலட்சியமாக பதில் கொடுப்பதும் மணிகர்ணிகாவின் செவியில் நன்றாக விழுந்து சுறுசுறுவென கோபம் பொங்கி பெருக ‘எது லேடி பேசறாளா??நான் என்ன இவனுக்கு பொண்டாட்டியா இல்லை வேலைக்காரியா??அவள் இவள்னு மரியாதை இல்லாமல் பேசறான் சேடிஸ்ட்…மரியாதை தெரியாதவன்…அரைவேக்காட்டு தடியன்’ என பல்லைக்கடிக்க,

அதை அறியாத சந்திரன் வேறொரு பெண் என நினைத்து அந்நிய குரலில் “ஹலோ யார் பேசறீங்க??” என ஆங்கிலத்தில் கேட்க,

அவர் மீது இருந்த காரம் குறையாமல் “உங்க பொண்ணு இங்க தான் இருக்கிறாள்…நீங்க காணாமல் தேட போறீங்கன்னு அதை சொல்ல தான் கால் பண்ணேன்…வேற ஒண்ணுமில்லை சார்… வைச்சிடறேன்” படபடவென பேசிவிட்டு அலைப்பேசியை நங்கென்று வைத்துவிட்டாள்.

அலைப்பேசியை வைத்தப்பிறகும் அவளது ஆத்திரம் அடங்கவில்லை.தன்னுடைய இயலாமைக்காக தான் பெண்கள் வேலைக்கு வருகிறார்கள்,அதற்காக அவர்கள் என்னவோ ஆண்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தது போல் கீழ்த்தரமாக நடத்ததுவதே இந்த ஆண்களுக்கு வேலையாகிவிட்டது என கொதிப்புடன் வீட்டை தனது கால்களால் அளந்தாள்.

இதற்கு முன்னால் பல ஆண்கள் இதைவிட கேவலமாக அடைமொழி வைத்து அவளை அழைத்திருக்கிறார்கள்,அப்போதெல்லாம் தோன்றாத கோபம் இப்போது அளவுக்கு மீறி ஆண் வர்க்கத்தினரிடம் தோன்றியது.அதற்கெல்லாம் முழு முதற்காரணம் அஜீத் செல்வன்.

அதேநேரம் சந்திரகேசன் முதலில் யார் என அறியாமல் பட்டாசு பேச்சில் முழித்தவர்,அலைப்பேசியில் மிளிர்ந்த மணிகர்ணிகாவின் பெயரை கண்டு அதிசயத்தார்.

அவள் இதுவரை இதுப்போல் இத்தகைய முரண்பாடான பேச்சுகளை அவளிடமிருந்து கேட்டிராதவர் பெரும் குழப்பத்துடன் அலைப்பேசியை வைத்துவிட்டு ‘என்னாச்சு இவளுக்கு’ என யோசிக்க,

“சந்துரு என்னாச்சு அப்படியே நின்றுவிட்டாய்…இங்கே வாடா” என்ற நண்பனின் அழைப்பில் கவனம் கலைந்த சந்திரன் அலைப்பேசியை மேசையின் மீது வைத்துவிட்டு அவருக்கு எதிர்புறம் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

இருவருக்கும் இரண்டு கண்ணாடி குவளையில் மதுவை ஊற்றி ஒரு குவளையை நண்பனிடம் கொடுக்க,அதை வாங்கியவர் புன்னகைத்து “சீயர்ஸ்” என கூறி இரண்டு குவளையையும் இலேசாக தட்டிவிட்டு மது அருந்த ஆரம்பித்தார்கள்.

குவளையில் இருந்த மதுவை ஒரு வாய் உறிஞ்சிய அஜீ தன் நண்பன் ஏதோ ஒரு யோசனையில் இருப்பதை அறிந்து புருவ சுழிப்புடன் “என்னாச்சு சந்துரு…ஏதாவது பிரச்சனையா?” என கேட்க,

அவரும் மதுவை உறிஞ்சியப்படி “அதெல்லாம் எதுவுமில்லை அஜீ…இந்த மணியை பத்தி தான் யோசித்துட்டு இருக்கேன்” என்றவுடன்,

அஜீத்தின் முகம் ஒரு நொடியில் சுருங்கி பின்பு சகஜநிலைக்கு மாறிட அழுத்தமான குரலில் “ஏன் அவளுக்கு என்ன??”சற்று எரிச்சலோடு கேட்க,

அந்த எரிச்சலை உணராத சந்திரகேசன் “இல்லை அஜீ…அந்த பொண்ணு என்கிட்ட கோபமா பேசியது இல்லை…இன்னைக்கு என்னவோ கோபமா பேசினார் போன்று இருந்தது…அதான் நான் என்ன பண்ணேன் என்று யோசிக்கிறேன்” எனவும்,

அவரது பேச்சில் கோபம் கொப்பளிக்க “டேய் நீ என்ன லூசா??அவ உன்கிட்ட வேலை செய்யற வேலைக்காரி அவ்வளவு தான்…அவள் அப்படி பேசுகிறானாள்னா நீ அந்த அளவு இடம் கொடுத்து வைத்திருக்கிறாய் என்று அர்த்தம்…எப்போதும் நமக்கு கீழ் வேலைப்பார்ப்பவர்களின் உணர்ச்சிகளுக்கெல்லாம் மதிப்பு கொடுக்க தேவையில்லை…அதை முதல்ல ஞாபகத்தில் வைத்துக்கோ…இன்னொரு முறை கோபமாக பேசினால் ஆரம்பத்திலே தட்டி வை” என கனலை உள்ளடக்கிய குரலில் கூறிய நண்பனை பெரும் வியப்புடன் வித்தியாசமாய் பார்த்தார் சந்திரகேசன்.

ஏனெனில் அவர் அறிந்த ஏஜேவிற்கு கோபம் ஒன்றே பிரதானமாக இருந்தாலும் பணியாளர்களை கீழ்த்தரமாக நடத்தும் வழக்கமில்லை.

ஆனால் இன்றோ…??

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top