“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையினும் நமக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே”
மணிகர்ணிகா கடந்து வந்து பாதையில் தனக்கென இருப்புத்தொகையாக எதையும் சேமித்து வைத்திருக்காதலால்,தனது லட்சியத்தை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதுமின்றி என்ன செய்யலாம் என தெளிவற்ற சிந்தனையோடு கவலைப்பூண்டிருந்த வேளையில் தெய்வத்தின் மறுவுருவாய் வந்து அவளுக்கான சாதனை பாதையின் வழியை கைக்காட்டினார் சிவனேசன்.
அவளது முதலாளியான எழுபது வயது நிரம்பிய சிவனேசன் அமெரிக்காவில் தன் மகன் இருப்பதாக கூறி “மணி அங்கு அவன் ஒரு உணவு விடுதியை நடத்திக்கொண்டிருக்கிறான்… உனக்கு விருப்பம் இருந்தால் நீ அங்கே சில காலம் பணிப்புரியலாம்…நீ தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாட்டையும் அவனே செய்துக்கொடுப்பான்…உன் வாழ்விற்கு தேவையான நிதியும் இயல்பு வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுதலும் நிச்சயமாக அங்கு உனக்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்…அங்கே செல்கிறாயாம்மா??” என அவளிடம் அபிப்பிராயம் கேட்கவும்,
அவள் மகன் என்ற ஆண் பாலினத்தவரை கொண்ட வார்த்தையில் சிறிது தயங்குவது தெரியவும், அவர் இதழ்ப்பிரித்து முறுவலித்து “நீ கவலைப்படும் படியாக ஒன்றுமில்லைம்மா…என் மகனிற்கு ஏற்கனவே திருமணமாகி கல்யாண வயதில் ஒரு மகளும் இருக்கிறாள்…அதனால் உன்னுடைய தயக்கத்திற்கு எந்த வித அவசியமும் நேராது…அவன் உன்னை தன் தங்கை போல் பார்த்துக்கொள்வான்…உனக்கு தேவையான விசாவிற்கான ஏற்பாடு அனைத்தும் அவனே பார்த்துக்கொள்வான்…நீ என்னை நம்பி தைரியமாக போயிட்டு வா” என அவளுக்கு தேவையான ஆறுதல் வார்த்தைகளை அளித்து அவளை அமெரிக்கா அனுப்பி வைக்க சம்மதிக்க வைத்தார்.
அடுத்த ஒரு மாதத்திற்கு பிறகு அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையத்தில் தன் உடைமைகளுடன் நின்றிருந்த மணிகர்ணிகா தாயை பார்த்து சங்கடமான ஒரு புன்முறுவலுடன் “அம்மா உன்னை விட்டுட்டு போறேனு உனக்கு கோபமா??” என தயக்கத்துடன் கேட்க,
தன் விழியில் வழிந்த கண்ணீரோடு “இல்லை” என்னும் விதமாக தலையசைத்தவரின் விழிகளில் மகளின் எதிர்க்கால வாழ்க்கை நன் முறையில் அமைய வேண்டும் என்ற அச்சம் மட்டுமே தென்பட்டது.
அதை அறிந்தவள் உடனடியாக தன் தாயை கட்டியணைத்து விடுவித்து இலேசான முறுவலுடன் “அம்மா என்னை நினைத்து நீ கவலைப்படாதே…உன்னோடு பொண்ணு மிகவும் தைரியசாலியம்மா…அவளுடைய வாழ்வில் பொதி சுமப்பதிலிருந்து எண்ணெய் சட்டியில் வாட்டி எடுக்கும் வரையிலான நரக வேதனை அனைத்தையும் அனுபவிச்சிட்டாள்…கூட பொறந்த தங்கையே வேசி என்னும் வார்த்தையால் அடித்தப்போதும் உன் கண்ணு முன்னாடி நான் கல்லு மாதிரி தானே நின்றிருக்கிறேன்…அதையே தாங்கிக்கொண்டு உயிரோடு இருக்கும் போது அதை விட பெரிய கஷ்டமெல்லாம் எனக்கு இந்த உலகத்தில் வெறும் தூசும்மா” என்று விரக்தியாக கூறியவுடன் கலங்கிய அவளது தாய் மகளை அடிப்பட்ட பார்வை பார்க்க,
அதில் சற்று சுதாரித்து “ஐய்யோ அம்மா…அம்மா” என்று தாடையைப் பிடித்து கொஞ்சி “அம்மா இன்னும் எத்தனை பேர் வேண்டுமானாலும் வரச்சொல்லும்மா…யார் வந்தாலும் ஒற்றை ஆளாய் நின்று அனைவரையும் பந்தாடி கெத்தா நிற்பாள் இந்த ஜான்சி ராணி…சரியா?” ஒற்றை புருவத்தை உயர்த்தி தன் மனதில் இருக்கும் வேதனைகளை மறைத்து தாயிற்காக கேலியாக பேசி சிரித்தாள்.
ஆனால் அவளது இதழ்கள் மறைத்தப்போதும் தங்கையைப் பற்றிய பேச்சின் போது அவளது விழிகளில் ஒரு நொடியில் வந்துப்போன வலியை ஒரு தாயாக அறிந்துக்கொண்டவருக்கு மனம் பாரமாய் கனத்தது.
‘கடவுளே!ஒரு இளம்பெண் சந்திக்கக்கூடாத மாபெரும் துன்பத்தை கூட என் மகள் அனுபவித்துவிட்டாள்…இதற்கு மேல் அவளது வாழ்வில் எல்லாம் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் இறைவா…உன் மேல் பாரத்தை போட்டு என் பெண்ணை தனியாய் அனுப்புகிறேன் பார்த்துக்கொள்…’ மனதோடு இறைவனிடம் வேண்டுதல் வைத்தார்.
இருந்தாலும் மகள் விடைபெறும் நேரத்தில் சிரமப்படுத்த வேண்டாம் என்பதால் அழுகையுனூடே சிரிக்க முற்பட்டு “நீ இன்னும் எத்தனை கஷ்டம் வந்தாலும் சமாளிப்பாய் என்று எனக்கு தெரியும் மணி…அதனால் தான் உன்னை தைரியமாக வெளிநாட்டிற்கு அனுப்புகிறேன்…நீ இதுவரை எங்களை நினைத்து கவலைப்பட்ட காலம் அனைத்தும் போதும்…இனிமேல் உன்னோட வாழ்க்கையை பற்றி மட்டும் நினை” என்றவுடன்,
அவரின் கைகளை பிடித்து வருத்தத்துடன் “இருந்தாலும் உன்னை தனியா விட்டுட்டு போறது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்மா…பேசாமல் உனக்கும் சேர்த்து விசாவுக்கு ஏற்பாடு செய்து அது கிடைத்தவுடன் இருவரும் ஒன்றாக அமெரிக்கா போகலாமா??” தன் தாயை தனியாய் விட்டு செல்ல முடியாமல் சேய் பறவை துடிக்க,
மகள் தன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு துளிக்கூட நமக்கு தகுதியில்லையே என்ற வேதனை சுட்டாலும் அதை மறைத்து மகளின் தலைக்கோதி “இல்லைடி மணி…இது நாள் வரை ஒரு தாயாய் நான் உனக்கு செய்த கொடுமை போதும்…இனிமேலும் என் கையினூடே உன்னை சிறை கைதியாய் பிணைத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை…உன்னை சிறையிலிருந்து விடுவித்துவிட்டேன்…நீ இனிமேல் சுதந்திர பறவை…விருப்பம் போல் இந்த உலகை நிதானமாக சுற்றி வா…நீ என்ன சாதிக்க நினைத்தாலும் உனக்காக இந்த அம்மா துணையிருப்பாள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்…ஒரு நாள் இந்த உலகம் உன்னை திரும்பிப்பார்க்கும்…அப்போதுதான் இந்த அம்மா உன்னோட வருவாள்…அந்த ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி உன்னோட தாயாக காத்துக்கொண்டு இருப்பேன்” என ஆறுதல் வார்த்தைகள் மூலம் அவளுள் லட்சிய வெறியை தூண்டிவிட்டு வெற்றி வாகை சூடி வர ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.
அவருடைய ஆசிர்வாதத்திற்கு இறைவன் செவிமடுத்தாரா இல்லையா என்பது வரும் காலங்களை கண்டு மட்டுமே அறிய முடியும் என்பதால் பொறுத்திருந்து காண்போம்.
ஒரு வழியாக தன் தாயிடமும் தன்னுடன் பணிப்புரியும் மற்றவர்களிடமும் பிரியா விடைப்பெற்றாள் மணிகர்ணிகா.
தாய் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவளினுள் ஒரு புது இரத்தத்தை பாய்ச்சி புதிதாய் பிறந்தது போலான ஒரு உணர்வை தோற்றுவிக்க புதிய மணிகர்ணிகாவாய் அமெரிக்கா மண்ணில் காலடி எடுத்து வைத்தாள்.
அவளை விமான நிலையத்திலிருந்து அழைத்துச்செல்ல சிவனேசனின் மகனும் அவரது பேத்தியும் என இருவருமே வந்திருந்தனர்.
சிவனேசன் அவரின் மகனை பார்க்கும் போது நாற்பதைந்து வயது மதிக்கத்தக்க நடுத்தர வயதினர் போன்று இல்லாமல் முப்பதுகளில் இருக்கும் இளைஞன் போல் வாட்டசாட்டமாக நெடுநெடுவென உயரத்தில் இருந்தார்.
அவரது வெள்ளை நிறத்திற்கு பாந்தமாக அடர் நீல நிற கொசவு சட்டை(டீ-சார்ட்) அணிந்து கீழே சந்தன நிறத்தில் கால்சட்டை அணிந்திருந்தவரின் தலைமூடிகளில் கருப்பும் வெள்ளையும் கலந்து ஒரு புது விதமான பாணியில் சிகை அலங்கார தோற்றத்தை கொடுத்திருந்தது. (சால்ட் அன்ட் பெப்பர் லுக் என்பார்களே அது போல்)
வயதின் மூப்பிற்கான நரையுமே அவருக்கு தனி அழகையும் கம்பீரத்தையும் கொடுத்திருக்க,அந்த கம்பீரம் அவரது குட்டி தொப்பையை கூட குறைத்து காட்டியது.
அவருக்கு அருகே அவரது தங்கையை போன்ற தோற்றத்தில் அவரது மகள் ரேவதி ஐந்தரை அடி உயரத்தில் மாநிறத்திற்கும் சிறிது குறைவான நிறத்தில் சுருள் முடிகளுடன் கோலி குண்டு போன்ற கண்களுடன் ஒல்லியாக இருந்த அப்பெண் இந்நாட்டில் வாழும் கருப்பின அமெரிக்க இனத்தவர்களை போல் காட்சியளித்தாள்.
இருவரையும் பார்வையால் அளந்தப்படி தன் பெயர் கொண்ட பலகை பிடித்திருந்தவர்களின் அருகே நெருங்கியவள் ஆங்கிலத்தில் தன் பெயரை கூறி அறிமுகம் செய்துக்கொண்டாள்.
அவர்களுக்கு தமிழ் தெரியாது என்றே அவள் ஆங்கிலத்தில் உரையாட,அந்த பதினெட்டு வயது பாவையோ அவளை ஆச்சரியத்தில் விழ வைக்கும் விதமாக அழகான தமிழில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.
அதில் மனதிற்குள் வியந்தாலும் வெளியே காட்டாமல் அவர்களை பார்த்து மரியாதை நிமித்தமாக இலேசாக புன்னகை சிந்திய மணிகர்ணிகா சம்பிரதயமாக அவர்களது நலனை விசாரித்தத்தோடு தன் கடமை முடிந்ததென அமைதியாகிவிட்டாள்.
அவளை போலவே அந்த நெடியவரின் பார்வையும் அவளை ஆராயும் விதமாக துளைத்தது.
ஐந்தடி இரண்டு அங்குல உயரத்தில் கோதுமை நிறத்தில் சற்று பூசினார் போன்ற உடல்வாகுவுடன் வாரி படிந்து பின்னலிட்ட அழகிய நீண்ட கூந்தலுடன் சிவப்பு நிற புடவையில் இமைகளில் இருக்கும் மூடிகள் இயற்கையாக சற்று நீண்டு அவளின் விழிகளுக்கு ஒரு வித அழகை கொடுத்திருக்க புன்னகைத்தால் கன்னத்தில் விழும் குழியை கொண்ட இரண்டு ஆப்பிளை வெட்டி வைத்தாற்போன்ற கன்னங்களுடன் கூரான நாசியோடு குடும்ப பாங்கான அழகுடன் இருந்தவளை பார்த்தவுடன் ரேவதிக்கு பிடித்துப்போனது.
சிவனேசனின் மகனாகிய அந்த நெடியவரோ அவளை பார்வையால் ஆராய்ந்தற்கு பிறகு ஒரு விதமாக இதழை கேலியாக வளைத்து சிரித்தவர்,ஒரு வித கர்வத்துடன் தன் பார்வையை விலக்கிப்கொண்டார்.
அவரது பார்வை அவளினுள் கோபத்தை விளைவிப்பதற்கு பதிலாக ஏதோ ஒரு படப்படப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.தன்னுடைய உணர்வுகள் அனைத்தையும் மண்ணில் போட்டு புதைத்துவிட்டோம் என்று நினைத்தவளுக்கு இத்தகைய தடுமாற்றம் ஒரு வித அவஸ்தையை தந்தது.
அதனால் தன் விழிகளை தாழ்த்தியவளுக்கு அவர் தன் பார்வையை விலக்கியதற்கு பிறகு தான் ‘ஹப்பாடா’ என நிம்மதியாக இருந்தது.
அவரும் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் எதுவும் பேசாததால் சற்று நிம்மதியடைந்த மணிகர்ணிகா ‘இது சரியில்லை…அவன் உனக்கு அண்ணன் முறை என்பதை நினைவில் வை’ என மனதை அதட்டி அடக்கி நியூயார்க் நகரத்தை வேடிக்கை பார்த்தப்படி பயணித்தாள்.
அவளது அமைதியை கிழிப்பது போல் சிவனேசனின் பேத்தியான ரேவதி மணியிடம் பேச ஆரம்பித்தாள்.
முன்பக்கம் ஒட்டுனர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த ரேவதி பின்பக்கம் திரும்பிப்பார்த்து “ஆன்ட்டி நீங்க ரொம்ப அமைதியா?வந்தப்போ பேசினதோடு சரி…அதுக்கு பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகவே வரீங்க?” எனவும்,
அதில் கவனம் கலைந்து உள்பக்கம் திரும்பியவள் பற்கள் தெரியாமல் இதழில் ஒட்டாத புன்னகையுடன் “அப்படியெல்லாம் இல்லை” என்று மட்டும் கூற,
“அப்படியெல்லாம் இல்லை தானே…அப்போ சரி…நாம் போக வேண்டிய இடத்திற்கு இங்கிருந்து ஒரு மணி நேரம் போகணும்… அதுவரை ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாம் ஆன்ட்டி…முதல்ல என்னை பத்தி சொல்லுறேன்” என்று தன்னை பற்றி கூற ஆரம்பித்தாள்.
அமெரிக்காவில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் மரியாதையுடன் துறுதுறுப்புடன் “ஆன்ட்டி” என்று அழைத்து பேசும் அவளை பார்த்த முதல் பார்வையிலே பிடித்துப்போனது.
‘சுடு கண்ட பூனையல்லவா…’ தன்னுடன் பிறந்த தங்கையை தன்னை இழிவுப்படுத்தி பேசும் போது என்றாவது ஒரு நாள் இவளும் தன்னை எடுத்தெறிந்து பேசமாட்டாள் என்று என்ன நிச்சயம் என்பதாலே பேச்சை வளர்க்க விரும்பாமல் வெளியில் வேடிக்கை பார்த்தாள்.
ஆனால் தன்னை பாசமாக அழைத்து பேசும் பெண்ணிடம் முறுக்கிக்கொள்ள முடியாமல் ரேவதி பேச்சிற்கு செவிமடுக்க ஆரம்பித்தாள்.
வண்டியின் ஒலிநாடாவின் வழியே மென்மையாக கசிந்து வெளி வந்துக்கொண்டிருந்த இசையையும் மீறி சற்று உரக்கவே ரேவதி பேசினாள்.
அதனால் இரண்டு ஓசையும் அவளுக்கு செவியினுள் ஒரு குடைச்சலை உண்டாக்க,அதில் சற்று எரிச்சலான மணி ‘மகள் தான் பேசுகிறாள் என்று தெரிகிறதே ஒலியை சற்று குறைத்து வைத்தால் தான் என்ன?தந்தையாக இருந்துக்கொண்டு அப்படியென்ன மகளிடம் வீம்பு’ என மனதில் அந்த நெடுயவரை காரணமின்றி வறுத்தெடுத்தாள்.
கண்ணாடியின் வழியே தெரிந்த அவளது முகத்தில் என்ன கண்டாரோ அந்த நெடியவர் அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு ஒலிநாடாவை அணைத்தார்.
அதன்பிறகே மணிகர்ணிகாவிற்கு காது தெளிவாக கேட்க,ரேவதி பேச்சிற்கு நிம்மதியாக செவிமடுக்க ஆரம்பித்தாள்.
“என் பெயர் ரேவதி…என்னோட அப்பாவுக்கு நடிகை ரேவதி மேல் ஒரே காதல்…அதனால் அவங்களோட நினைவா எனக்கு ரேவதினு பெயர் வைத்துவிட்டார்…இங்க யாருக்கும் ரேவதி என்ற பெயர் வாயில் நுழையாததினால் ‘ரே’ அல்லது ‘ரேவ்’ என்று தான் அழைப்பார்கள்…அப்புறம் எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க மட்டும் ரேவ்ஸ் என்று அழைப்பார்கள்…அதனால் நீங்களும் என்னை ரேவ்ஸ் என்று தான் கூப்பிடணும் ஆன்ட்டி” என தன் கோரிக்கையை முன்னால் வைத்தாள்.
‘ரேவ்ஸ்’ என்ற தன்னை அழைக்க கூறி கட்டளையிடுவதிலே தன்னை அவளது நெருங்கிய வட்டத்தினுள் இணைத்துக்கொண்டாள் என்பது அறிந்தவளுக்கு இறுக்கமாக இருந்த மனம் இலேசாக,ரேவதியை மென்மையாய் பார்வையால் வருடி விழி விரித்து ஆசையாய் அவளை பார்த்திருக்க வைத்தது.
அதற்குள் ரேவதி படபடவென்று தன்னை பற்றிய அத்தனை விஷயங்களையும் கூறி முடித்துவிட்டு சிறிது கூட ஓய்வு எடுக்காமல் “ஆன்ட்டி அடுத்து நீங்க?உங்களை பற்றி,பிறகு உங்க குடும்பத்தை பற்றி எல்லாம் சொல்லுங்க ஆன்ட்டி” என்று அவளின் புறம் ஒரு வித ஆர்வத்துடன் கேள்வி என்னும் பந்தை வீச,
அக்கேள்வியில் அவளது நினைவலையில் இருந்த அழியா சுவடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாய் நினைவில் தோன்றி வேதனையில் முகம் சுருங்கியது.
வந்ததிலிருந்து கண்ணாடியின் வழியே அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அந்த நெடியவர் அவளின் முகம் வாடியதை கண்டு நெற்றியில் முடிச்சு விழ ரேவதியிடம் “பேபி…அவங்க இப்போ தானே பயணம் செய்து இங்கு வந்து இருக்காங்க…ரொம்ப சோர்வா இருக்கும்…இரண்டு மூன்று நாள் கழித்து பொறுமையா அவங்ககிட்ட பேசி அவங்களை பற்றி தெரிந்துக்கலாம்டா…இப்போது தொந்தரவு செய்யாதே” அந்த குரல் சாதாரணமாக வெளி வந்தாலும் அதிலிருந்து ஒரு கடினத்தை ரேவதி புரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் மணிகர்ணிகாவிற்கு நன்கு புரிந்தது.
ரேவதி அவரின் புறம் திரும்பி முகத்தை சுருக்கி “பேப்ஸ்…ஆன்ட்டியே என்கிட்ட சொன்னாலும் நீ விடமாட்டே போலே…நீயே பாரு…ஆன்ட்டி விமானத்தில் வந்தாலும் எவ்வளவு புத்துணர்ச்சியாக தெளிவாக இருக்காங்க…அவங்களை பார்த்து சோர்வா இருக்காங்கனு சொல்லுறே…எனக்கு என்னவோ உனக்கு தான் நான் லொடலொடனு பேசறது பிடிக்காமல் வாய் மூடிட்டு வானு சொல்லுற மாதிரி இருக்கு…அப்படித்தானே” என முறைக்க,
உதட்டோரம் சிரிப்பில் துடித்தாலும் அதை மறைத்து போலியாக ரேவதியை முறைத்தவர் “ரேவதி ஒரு முறை சொன்னால் கேட்கணும்…அவங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுனா பண்ணக்கூடாது…அவ்வளவு தான் புரியுதா??” என அவளை அதட்ட,
அதில் இதழை சுழித்து பழிக்காட்டிய ரேவதி “பேப்ஸ்…நீ சொன்னால் நான் கேட்கணுமா…முடியாது” அவரிடம் பதிலுக்கு சண்டைக்கு நிற்க,
அவரும் சிலிர்த்துக்கொண்டு காரை ஓட்டிக்கொண்டே பதிலுக்கு அவளை முறைக்க,இருவரும் இப்படி போலியாக சண்டையிடுவது வழக்கம் என்றாலும் புதிதாக அவர்களை பார்த்த மணிகர்ணிகா சண்டையை உண்மை என்று நம்பி தன்னால் தான் இருவருக்குள்ளும் பிரச்சனையோ என அச்சம் கொண்டு,அடுத்து வாய் திறந்து அந்த நெடியவர் ரேவதியை திட்டுவதற்குள் அவசரமாக இடைப்புகுந்து “சார்…ரேவதியை எதுவும் சொல்லாதீங்க…எனக்கு சோர்வாக எல்லாம் எதுவுமில்லை” என அவரிடம் அவசரமாக பதிலளித்தவள் ரேவதியிடம் திரும்பி “உனக்கு என்ன என்னை பத்தி தெரியணும் அவ்வளவு தானே…என் பெயர் மணிகர்ணிகா…எல்லாரும் என்னை ‘மணி’ என்று அழைப்பார்கள்…இந்தியாவில் உங்க தாத்தாவோட மெஸை நான் தான் பார்த்துக்கொள்கிறேன்…இப்போது என்னுடைய அடையாளத்தை தேடி தான் அமெரிக்கா வந்திருக்கிறேன்…அன்பு ஒன்றே அனாதை… எல்லாரும் இருந்தும் எனக்கு யாருமில்லை…இப்போதைக்கு இதை தவிர என்னை பற்றி சொல்லிக்கொள்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை” முதலில் பரபரப்புடன் ஆரம்பித்தவள் இறுதியில் இறுக்கமான குரலில் கூறி முடித்தவளுக்கு தங்கைகளின் நினைவில் கலங்கத்துடித்த மனதை அடக்கும் வகையறியாமல் இதழை கடித்து வெளியில் வெறிக்க,
மணிகர்ணிகாவின் பேச்சிற்கு பிறகு காரினுள் பெரும் நிசப்தம் ஒன்று நிலவியது.
எப்பொழுதும் துறுதுறுவென சிரித்து பேசும் ரேவதிக்கே அவளது பேச்சை கேட்டதற்கு பிறகு ஒரு மாதிரி மனதை கனக்க செய்ய,அந்நொடியில் அவளை பற்றி தன் பாட்டனார் கூறிய வார்த்தைகள் அனைத்தும் முகத்தில் அறைய மணிகர்ணிகாவை பாவமாய் பார்த்தாள்.
மணிகர்ணிகாவிற்கு தன்னால் யாரும் வருந்தக்கூடாது என்று நினைப்பவள்,இப்போது ரேவதி வருந்துவதைக் கண்டு மன்னிப்பு வேண்ட முற்படுகையில்,காரினுள் இருந்த இறுக்கத்தை குறைக்க எண்ணி அந்த நெடியவர் வண்டியை ஒரு உணவு விடுதியின் முன் நிறுத்தினார்.
ரேவதியைப் பார்த்து “ரேவ்ஸ் பேபி…நீ காலையில் பத்து மணிக்கு சாப்பிட்டது…இப்போது மணி நான்கு ஒரே ஒரு பர்கர் மட்டும் சாப்பிட்டு போகலாம் வா” என்றவரின் பார்வை இப்போது பின்னால் இருந்தவளின் மீது படிந்து மீள “நீங்கள் பொய் கூறினாலும் விமானத்தில் வந்தது உங்களுக்கு களைப்பாக இருக்கும் என்று தெரியும்…ஆனால் ரேவ்ஸ் மதியம் சாப்பிடலை…அதனால் ஒரு பத்து நிமிஷம் இங்கு சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வீட்டிற்கு போகலாம் வாங்க” உணர்ச்சியற்ற குரலில் அவளை அழைத்தார்.
அவளின் பேச்சை கேட்டப்பிறகு பரிதாபம் வரக்கூடிய இடத்தில் அவருக்கு ஏனோ கோபமாக வந்தது.அது ‘ஏன்?’ என்று அவருக்குமே தெரியவில்லை.அதனால் காரில் இருந்தால் கோபத்தில் ஏதேனும் பேசிவிடுவோமோ என நினைத்து வெளியில் செல்ல தீர்மானித்தார்.
அதற்காகவே ரேவதியின் உணவுவேளையை முன்னிறுத்தி அழைத்தவர்,வேண்டா வெறுப்பாக மணியையும் உடன் அழைத்தார்.
அதற்குள் தன்னை பெருமளவு சமாளித்திருந்த மணி அவரின் குரலில் இருந்த ஒரு விதமான ஒதுக்கத்தை அறிந்தவளுக்கு ‘அவன் வெறும் கடமைக்கு என தன்னை அழைக்கிறான்’ என்ற ரோஷத்துடன் அவரை நேருக்கு நேர் பார்த்து “இல்லை…நான் காரிலே அமர்ந்திருக்கிறேன்…நீங்கள் இருவரும் சென்று உணவருந்திவிட்டு வாருங்கள் சார்” என மறுக்க,
உடனடியாக ரேவதியும் “ஹே பேப்ஸ்…ஆன்ட்டிக்கு வேணாம்னா எனக்கு வேணாம்…வண்டியை நேரே வீட்டிற்கு விடு” அவளும் உறுதியாக மறுத்துவிட,
இப்போது அவரது கோபம் வெளிப்படையாக முகத்தில் எட்டி பார்க்க விழிகள் இடுங்க ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி மணிகர்ணிகாவை பார்த்து “ஹலோ மேம்…உங்களால் அவளும் சாப்பாடு வேண்டாம் என்கிறாள்…மகாராணியார் இலேசாக மனம் வைத்தால் தங்களால் ஒரு சிறு பெண்ணின் பாசியாறும்” சிறிது நக்கல் கலந்த குரலில் கூற,
அதில் ‘என்ன தைரியம் இவனுக்கு’ என சுறுசுறுவென ஆத்திரம் பொங்கி எழுந்தாலும் ரேவதியின் முகத்தில் இருந்த களைப்பை கண்டு வேறுவழியின்றி அவரை உறுத்து விழித்தப்படி “சரி வா ரேவதி… எனக்கும் சிறிது பசியாக இருக்கிறது…சாப்பிட்டுவிட்டு செல்வோம்” கதவை திறந்து கீழே இறங்க முற்பட,
அது திறக்கமுடியாமல் சதி செய்ய வெளிப்புறம் இருந்து அவரே கதவை திறந்துவிட்டார்
அவரது முகத்தை பார்க்காமல் “நன்றி” மட்டும் கூறியவள் முன்னால் நடந்தாள்.
“ஆன்ட்டி இருங்க நானும் வரேன்” என்று ரேவதியும் அவளின் பின்னோடு ஓடி அவளுடன் சேர்ந்து நடந்தாள்.
‘சரியான திமிரு பிடித்தவள்’ என்று எரிச்சலோடு முனகியப்படி அவர்களை பின்தொடர்ந்தார் அவர்.
மணிகர்ணிகாவின் மனதினுள் இப்போது ஒரு புது கேள்வி உதயமாகியிருந்தது.
‘சிவனேசன் ஐயாவின் மகனுக்கு தாம் வந்தது பிடிக்கவில்லையோ??’ என்ற வினா மனதை குடைய அதன்பிறகு வந்த சந்தர்ப்பத்தில் அவர் தன்னிடம் நடந்துக்கொண்ட முறை அவளை மேலும் அவ்வாறு எண்ண வைத்தது.
இருவரும் ‘எதற்காக முட்டிக்கொள்கிறோம்?’ என்று அறியாமலே ஒருத்தரை ஒருத்தர் முறைத்துக்கொண்டிருந்தார்கள்.ஒரு வழியாக அனைவரும் வீடு வந்து சேர்ந்தப்போது மாலை வேளையாகி இருள் கவிழ தொடங்கியிருந்தது.
அதேநேரம் வீடு வந்து சேர்வதற்கு முன்பே மணிகர்ணிகா ‘விரைவில் இவர்கள் தமக்காக செலவு செய்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு தம் வசதிக்கு ஏற்றாற் போன்று வேறொரு இடம் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என ஒரு உறுதியான முடிவெடுத்திருந்தாள்.
ஒரு வழியாக மூவரும் அவர்கள் வீடுகள் இருந்த அடுக்குமாடி குடியிருப்பினுள் வண்டியை செலுத்தி தங்களுக்கு உரிய இடத்தில் நிறுத்திவிட்டு வண்டியை விட்டு இறங்கினார்கள்.
அவர்கள் வண்டியை விட்டு இறங்குவதற்கும் அவர்களை நோக்கி ஒரு நடுத்தர வயதுடைய ஒருவர் தங்கள் அருகே வருவதற்கும் சரியாக இருக்க,அவரை கண்டவுடன் ரேவதி முகம் மலர குதுகலத்துடன் “டாடி” என ஓடிப்போய் அவரை அணைத்துக்கொண்டாள்.
ஆனால் மணிகர்ணிகாவோ ரேவதியின் அழைப்பில் திகைத்து ‘அப்போது இத்தனை நேரம் நம்முடன் இருந்த இவன் யார்?’ என புருவ சுழிப்புடன் அந்த நெடியவரை நோக்கி தன் பார்வையை திருப்பியவளுக்கு ஏனோ மூச்சடைத்தது.