கிருஷ் அன்று இரவில் தாத்தாவிடம் அலுவலக அறையில் வெகு மும்முரமாக பேசிக் கொண்டு இருந்தான்.
தாத்தா “நீ சொல்வதெல்லாம் சரிப்பா…இதற்கு விசுவின் அனுமதி ரொம்ப முக்கியம்…அவன் இதற்கு அனுமதி தருவானா என்பது எனக்கு சந்தேகம் தான்ப்பா…அதுமட்டுமில்லாமல் ஶ்ரீயை மட்டும் பிஸினஸில் ஈடுப்படுத்தினால்…மற்ற நம் வீட்டு பெண்கள் இதைத் தவறாக நினைப்பார்கள் கிருஷ்…அப்புறம் அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவாய்” என்று வினவினார் கிருஷிடம்.
நினைத்ததை முடிக்கும் பழக்கம் கொண்ட கிருஷ் அலட்சியத்துடன் “தாத்தா நீங்க மட்டும் அனுமதி கொடுங்கள் போதும்…விசு மாமாவிடம் பேச வேண்டியது என்னுடைய பொறுப்பு…மற்றவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை தாத்தா…மீறி யாராவது ஏதாவது கேட்டால் நான் சமாளித்து கொள்கிறேன் தாத்தா…” என்றான் கிருஷ்.
தன் பேரனைப் பற்றி தெரிந்த தாத்தாவும் “சரிப்பா அப்புறம் உன் இஷ்டம்…ஆனால் இதில் எந்தவிதமான பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு…இருந்தும் உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது கிருஷ்…அதனால் தான் உனக்கு அனுமதி கொடுக்கிறேன்…எப்படியோ பேசி பேசியே உன் காரியத்தை சாமர்த்தியமாக சாதிக்கிறேடா பேரான்டி” என்று கண்டிப்புடன் தொடங்கி முடிவில் ஒரு புன்னகையுடன் தன் பேரனை அணைத்து கொண்டார்.
கிருஷூம் தன் தாத்தாவை அணைத்துக் கொண்டே சிரிப்புடன் “எனக்கு தெரிந்த ஒரு பெரிய மாமனிதர் தான் தாத்தா…எடுத்த காரியத்தை எக்காரணம் கொண்டும் பாதியில் நிறுத்தக்கூடாதுனு எனக்கு சொல்லி கொடுத்து இருக்கார்…அதனால் தான் தாத்தா…நான் அவரின் வார்த்தையைப் பின்பற்றுகிறேன்” என்று குறும்புடன் முடித்தான்.
உடனே தாத்தா கிருஷைத் தன் பிடியிலிருந்து தள்ளிநிறுத்தி “டேய் படவா…!!!என்னையே கிண்டல் பண்ணுறியா…?நான் தான் அதை உனக்கு சொன்னேன்னு நான் ஒத்துக்குறேன்டா…அதற்காக என்னிடமே இதெல்லாம் காட்டணுமாடா…???” என்று வினவினார்.
அவனும் பதிலுக்கு தன் தலையை இடைவரை குனிந்து “தாத்தா எவ்வழியோ பேரனும் அவ்வழியே” என்றான் குறும்புடன்.
அதைப் பார்த்த தாத்தாவும் முகத்தில் புன்னகையுடன் தன் பேரனின் அழகையும் பேச்சு திறமையையும் ரசித்தார்.
இப்படியாக தாத்தாவும் பேரனும் சிறிது நேரம் பேசிவிட்டு,அதன்பிறகு கிருஷ் அந்த அறையை விட்டு வெளியேறி நேராக சென்றயிடம் விசுவின் அறை.அந்த அறையில் ஜானகியும் இருந்தார்.
கிருஷ் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் விசயத்தை நிறுத்திவிட்டு கிருஷைத் திரும்பி பார்த்தனர்.
கிருஷ் அந்த அறைக்குள் நுழைந்தவாறு “மாமா…நான் உங்களிடம் ஒரு முக்கியமான விசயம் பேச வேண்டும்” என்று நேரடியாக விசயத்தை ஆரம்பித்தான்.
அங்கு இருந்த நாற்காலியைக் கையில் காட்டியவாறு “முதலில் இங்கு வந்து உட்காருப்பா…அதன்பிறகு எதுவாக இருந்தாலும் சொல்லுப்பா” என்று விருந்தோம்பலுடன் கூறினார் விசு.
கிருஷ் தன் மாமா சொன்னதைச் செய்துவிட்டு “மாமா இப்போ ஒரு பேஷன் ஷோ நடத்தப்போகிறோமில்லை… அதைப் பற்றி உங்களுக்கே தெரியும் தானே மாமா…??” என்றவுடன்,
“ஹூம் அதைப் பற்றி எனக்கு நல்லவே தெரியும்ப்பா…ஆனால் அதில் என்னிடம் பேச என்ன இருக்கிறது…” என்று புரியாமல் கேட்டார்.
கிருஷ் “அதைப் பற்றி பேச தான் நான் இங்கு வந்திருக்கிறேன் மாமா… நம்முடைய ஶ்ரீ கடந்த இரண்டு மாதமாக இந்த பிராஜக்ட்டில் வேலை செய்து இந்த நூலாடைகளை எல்லாம் டிசைன் செய்தாள் என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம்…அந்த பேஷன் ஷோவில்…ஷோ டாப்பராக ஶ்ரீயைப் போடலாம்னு நான் யோசித்து வைத்திருக்கிறேன் மாமா…அதற்காக தான் உங்களிடம் அனுமதிக் கேட்க வந்தேன்…இதைப் பற்றி தாத்தாவிடம் கேட்டேன்…தாத்தா உங்களிடம் அனுமதி வாங்க சொன்னார்…நீங்க என்ன சொல்லுறீங்க மாமா…???” என்று ஒரு வித ஆளுமையுடன் கேட்டேன்.
அவன் மற்றவர்களைப் போல் சுற்றிவளைக்காமல் நேரடியாக விசயத்திற்கு வந்தது விசுவை ஒரு விதத்தில் ஈர்த்தது என்றால்…ஜானகிக்கு தன் தம்பியின் ஆளுமையை நினைத்து பெருமையாக இருந்தது.
ஜானகி முகம் முழுவதும் மலர்ச்சியுடன் “வாவ் சூப்பர்டா கிருஷ்…இது நல்ல யோசனையாக இருக்கு…கண்டிப்பாக ஶ்ரீ இது பண்ணட்டும் கிருஷ்…இது நமக்கு தானே பெருமை கிருஷ்” என்றார் ஒர் உற்சாகத்துடன்.
அதற்கு விசு “ஜானகி நீ சும்மா இரும்மா…இது ஶ்ரீ எடுக்க வேண்டிய முடிவு…என்று ஜானகியிடம் கூறிவிட்டு கிருஷிடம் திரும்பி
“கிருஷ் இதில் எங்களுக்கு முழுசம்மதம்…ஆனால் இதில் முடிவெடுக்க வேண்டிய உரிமை ஶ்ரீநிதிக்கு தான்ப்பா இருக்கு…அதனால் நீ அவளிடம் கேட்டு கொள்ப்பா…ஆனால் ஒரு விசயம் கிருஷ்…அவளை எக்காரணம் கொண்டும் மிரட்டியெல்லாம் ஒத்துக்க வைக்கக்கூடாதுப்பா…” என்று புன்னகையுடன் கூறினார்.
கிருஷும் புன்னகையுடன் “மாமா உங்கள் மகளை நான் ஒரு வார்த்தை சொல்லக்கூடாதுனு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா…??” என்று வினவினான்.
விசுவும் “ஆமாம் நீ போய் அவளிடம் இதைப் பற்றி கூறி…அவள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லையெனில்… நீ என் பொண்ணை மிரட்டி கட்டாயப்படுத்துவே…!! பாவம் குழந்தை பயந்திடும்ப்பா…அதனால் தான்…நான் உன்னிடம் ஒரு முன்னெச்சரிக்கையாக சொன்னேன்…இல்லையெனில் நீ பேச வேண்டாம் கிருஷ்…நானே ஶ்ரீயிடம் பேசிட்டு சொல்லுகிறேன்ப்பா…” என்றார் மகளின் மீது பாசம் கொண்டவராக.
“அச்சோ மாமா!!உங்கள் குழந்தைக்கு என்ன ஒரு 5 இல்லனா 6 வயசு இருக்குமா…???அவளுக்கு கல்யாணம் வயசாகுது மாமா…இன்னும் என்ன குழந்தைனு சொல்லுறீங்க…??இது உங்களுக்கே கொஞ்சம் அதிகப்படியாக தெரியல…!!” என்று கிருஷ் சலிப்புடன் கூறினான்.ஆனால் உள்ளுக்குள் தன் மாமா ஶ்ரீயின் மேல் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து பூரித்தான்.
“கிருஷ்…என் பொண்ணுக்கு எத்தனை வயசானாலும்…அவள் எங்களுக்கு குழந்தைதான்டா…நாளைக்கு அவளுக்கே குழந்தை பிறந்தாலும் அவள் எங்களுக்கு குழந்தை தான்டா” என்று ஜானகியும் என் பாசத்திலும் ஒரு குறைவும் இல்லை என்பதை நிரூபித்தார்.
“உங்க பொண்ணு மேலே வச்சிருக்கே பாசத்தைப் பார்த்து எனக்கே பொறாமையாக இருக்கு…என்னே உங்கள் அன்பு…!!என்னே உங்கள் பாசம்…!!அப்பப்பா…!!நானே உங்களுக்கு பொண்ணாகப் பிறந்து இருக்கலாம்னு தோணுது…!!ஹூம் என்று பெருமூச்சுவிட்டு சரி மாமா…நான் ஶ்ரீயிடம் இதைப் பற்றி பேசுகிறேன்…பின்குறிப்பு தாங்கள் சொன்னது போல் தங்கள் மகளை எந்த விதத்திலும் மிரட்டி கட்டாயப்படுத்தமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறேன்” என்று குறும்புடன் கூறினான்.
அதைப்பார்த்து விசுவும் ஜானகியும் சிரித்தனர்.
ஜானகி தனது தம்பியின் தலையில் தட்டி “போடா டேய்” என்றார் சிரிப்புடன்.
அதன்பிறகு கிருஷ் அவர்களிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு இரவு வணக்கம் கூறி வெளியேறினான்.வெளியேறியவன் கண்ணில் மாடிப்படி ஏறிக்கொண்டிருந்த ரிஷி படவும் கிருஷ் தன் தம்பியை அழைத்தான்.
தன் அண்ணன் தன்னை அழைத்தவுடன் அச்சோ போச்சு!!இந்த அண்ணன் கண்ணில் படக்கூடாதுனு தான் ஒரு வாரமாக மறைந்து மறைந்து இருந்தேன்…இவன் என்னடானா கண்டுபிடிச்சிட்டனே…ரிஷி இனி உன் நிலைமை அவ்வளவு தான்டா என்று மனதில் புலம்பிவிட்டு தனது தமையனிடம் “என்ன அண்ணா…” என்றான்.
“ரிஷி எக்ஸாம் முடிந்து இரண்டு வாரத்திற்கும் மேலாகிவிட்டது…அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா…?” என்று நக்கலாக வினவினான்.
“இருக்கு அண்ணா…” பாதி குரல் உள்ளே சென்றுவிட்டது.
“நான் என்னடா சொன்னேன்…தேர்வு முடிந்த ஒரு வாரத்திற்கு பிறகு ஆபிஸ் வரணும்னு சொன்னேனா இல்லையா…?ஆனால் அது உனக்கு ஞாபகம் இருக்கிற மாதிரி தெரியலையே…?தேர்வு முடிந்து இரண்டு வாரமாச்சு…!ஆனால் நீ ஆபிஸ் வரமாதிரி தெரியலையே…?ஜாலியா வீட்டிலேயே சுத்திட்டு இருக்கலாம்னு எண்ணமா…??” என்று குரலை உயர்த்தி கேட்டான்.
“இல்லை அண்ணா என்று ஆரம்பித்தவனை கை நீட்டி தடுத்து
“எனக்கு இனிமே எந்த காரணமும் தேவையில்லை ரிஷி…நாளையிலிருந்து நீ என் கூட ஆபிஸ் வரே…!எனக்கு எந்த சாக்கு போக்கும் தேவையில்லை… உன்னுடைய முதல் பொறுப்பு இந்த பேஷன் ஷோ பிராஜெக்ட் தான்…அதற்கு முதல் கட்ட வேலையாக ஶ்ரீயிடம் சென்று ஷோ டாப்பராக அவளை இருக்க சொல்லி… அவளிடம் பேசி அனுமதி வாங்கிட்டு வரே…??இதை வைத்து தான் நான் உனக்கு பெரிய பொறுப்பு கொடுக்கலாமா வேணாமானு என்னால் கணிக்கமுடியும்…அதை மனதில் வைத்து ஶ்ரீயிடம் பேசிட்டு வா…!!” என்று தனது தம்பிக்கு கட்டளையிட்டுவிட்டு வேலை முடிந்தது என்பது போல் அவன் அறைக்கு சென்றான்.
ஐய்யையோ எடுத்தவுடனே இந்த குட்டி சாத்தான்கிட்டயா பேசணும்…அது வேணும்னே நான் என்பதால் ஒத்துக்காதே… கிருஷ்ணா நீ தான் எனக்கு துணை இருந்து இந்த ஶ்ரீயை ஒத்துக்க வைக்கணும் என்று கையெடுத்து கடவுளை கும்பிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.
அதேநேரம் கீதா தனது மகளிர் விடுதியில் இருந்தவாறு கடந்த மூன்று வாரமாக நந்தன் டெக்ஸ்டைலில் டிசைனராக வேலை செய்து கொண்டு இருக்கிறாள்.இதற்கெல்லாம் காரணம் ஶ்ரீநிதி…அவள் சொன்னமாதிரியே தாத்தாவிடம் பேசி இந்த வேலையை கீதாவுக்கு வாங்கி கொடுத்திருந்தாள்…இதற்காக கீதா கோடிக்கணக்கான நன்றிகளால் தனது தோழி ஶ்ரீநிதியைக் குளிப்பாட்டி கொண்டு இருந்தாள்.அவளுக்கு நம்மால் முடிந்த ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்று யோசித்து அவள் அறையை கால்களால் அளந்து கொண்டு இருந்தாள்.
அவளின் முன் இரண்டு மாதங்களுக்கு முன் சினிமா அரங்கில் நடந்த ஒரு நிகழ்வு படமாக விரிந்தது.
சேலத்தின் மிகப்பெரிய சினிமா அரங்கின் முன்னால் நந்தன் குடும்பம் கூடி இருந்தது.
கீதா தனது தோழி ஶ்ரீயின் காதில் “ஶ்ரீ உங்க தாத்தா பாட்டி எல்லாம் எப்படிடி இந்த வயசுல மூன்று மணி நேரம் உட்கார்ந்து படம் பார்க்கமுடியும்…??” என்று தனது சந்தேகத்தைக் கேட்டாள்.
ஶ்ரீ அவளை ஊற்றுப்பார்த்து “யாருக்கு வயசுயாகிடுச்சுனு சொல்லுறே லூசு…எங்க தாத்தா பாட்டி இந்த வயதிலும் இளமையான தம்பதியினர் தான்…அவங்களைப் பார்த்தால் ரொம்ப வயதானவர்கள் போலவா இருக்கு…அவங்களுக்குள் எப்பவும் ஒரு உற்சாகம் இருந்துகொண்டே இருக்கும்…அதுதான் அவங்களுடைய இந்த இளமைக்கு காரணம்டி…அதுமட்டுமில்லாமல் இந்த குடும்பத்தின் சந்தோஷத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்…இதுவும் அதில் ஒண்ணுடி” என்றாள் தன் தாத்தா பாட்டியை நினைத்து பெருமையாக.
“இருந்தாலும் உங்கள் தாத்தா பாட்டி இந்த வயதில் என்று ஆரம்பித்தவளைத் திரும்பி கண்களால் முறைத்தாள்.
அப்போது “ஶ்ரீ டிக்கெட்ஸ் நீ தானே முன்பதிவு செய்தே…சீட் நம்பர்ஸ் சொல்லு…” என்றுவாறு கீதாவை ஶ்ரீயிடமிருந்து காப்பாற்றினான் கிருஷ்.
கீதா திரும்பி கிருஷிற்கு கண்களால் நன்றி செலுத்தினாள். அதனைப்பார்த்த கிருஷ் இந்த பொண்ணு இப்போ எதுக்கு இப்படி பார்க்கிறது என்று குழப்பத்துடன் நினைத்து “கீதா என்னம்மா…?? ஏதாவது வேணுமா…?” என்று கேட்டான்.
கீதா அவசரமாக “ஒண்ணும் இல்லண்ணா” என்று கூறினாள்.அதைத் தொடர்ந்து ஶ்ரீயைத் திரும்பி பார்த்தான்.
கிருஷ் இதற்காக தான் தன்னைப் பார்க்கிறான் என்று ஶ்ரீநிதி நினைத்து “இதோ அத்தான்…சீட் நம்பர் கே1 லிருந்து கே20 வரைக்கும் நம்முடைய சீட் தான்…அந்த வரிசையில் எங்கு வேணாலும் உட்காரலாம் அத்தான்” என்றாள் கடமையாக.
“சரிப்பா…!எல்லாரும் ஒன்றாக சேர்ந்து போக வேண்டாம்ப்பா… நான்கு நான்கு பேரா போகலாம்ப்பா…இல்லைனா ஊரு கண்ணு பட்டுடும்” என்றார் ராதை பாட்டி.
ஶ்ரீ குறும்புடன் “எப்படி பாட்டி…இப்படியா…?” என்றவாறு அவள் கண்ணை எடுத்து பாட்டியின் கண்ணில் வைப்பது போல் செய்தாள்.
அவள் காதைப் பிடித்து திருகியவாறு ஶ்ரீயின் அம்மா ஜானகி “உன் குறும்பை ஆரம்பிச்சிட்டியா பேபி…அதை அப்புறம் வைத்து கொள்வோம்…இப்போது நாம் உள்ளே போகலாம் வா…படம் ஆரம்பிச்சிட போறாங்க” என்றார் சிரிப்புடன்.
ஆஆஆஆ… “அம்மாஆஆஆ!காது வலிக்குது” என்றாள் ஶ்ரீ முகத்தை அழுவது போல் வைத்து.
எல்லாரும் இவள் செய்யும் குறும்பைப் பார்த்து சிரித்து கொண்டு இருந்தனர்.குந்தவையும் மீராவும் மட்டும் இதில் எதிலுமே கலந்து கொள்ளாமல் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் தனியாக நின்று இருந்தனர்.கிருஷ் தான் நேரமாகிவிட்டது என்றவாறு எல்லாரையும் உள்ளே அழைத்து சென்றான்.