அத்தியாயம் 7

இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த திருப்தியுடன் கீதா தனது ஊருக்கு செல்ல முடிவெடுத்து கிளம்பினாள்.ஆனால் ஶ்ரீநிதி கீதாவை தன் வீட்டிற்கு வந்து இரண்டு நாள் தங்கிவிட்டு செல்லுமாறு அழைத்தாள்.கீதா அதற்கு ‘நான் உங்கள் வீட்டிற்கு வரவில்லை ஶ்ரீ…நான் ஊருக்கு செல்கிறேன்’ என்று கூறியவளை ஶ்ரீநிதி வலுக்கட்டாயமாக தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

ஶ்ரீநிதி தனது தோழி கீதாவை வீட்டில் தங்குவதற்கு அழைத்து வர போவதாக தாத்தாவிடமும் தனது பெற்றோரிடமும் அனுமதி வாங்கிவிட்டாள்.ஆனால் முக்கியமான நபரான கிருஷிடம் மட்டும் அனுமதி வாங்கவில்லை.

கிருஷிற்கு இதுப்போல் சிநேகிதர்களை வீட்டிற்கு அழைத்து வருவது பிடிக்காது…அதனால் அவனிடம் அனுமதி கேட்க பயமாக இருந்தது.தாத்தா கிருஷிடம் சொல்லிவிடுவார் தான்.ஆனாலும் ஶ்ரீநிதிக்கு கிருஷிடம் ஏதோ பயமாக இருந்தது.

கீதாவுடன் ஶ்ரீநிதி வீட்டிற்கு வந்து தாத்தா பாட்டியிடம் அழைத்துச் சென்று…சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு…கீதாவை தன் அறைக்கு அழைத்து சென்றாள்.

கீதா ஏற்கனவே நிறைய முறை ஶ்ரீநிதியுடன் இந்த வீட்டிற்கு வந்து இருக்கிறாள்.ஆனால் இதுவரை தங்கியது இல்லை…இதுவே முதல் முறை.ஆதலால் கீதாவை வீட்டில் யாரிடமும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்கவில்லை.ஆனால் கிருஷிடம் மட்டும் அனுமதி வாங்கவில்லை என்பது அவள் மனதை அலைக்கழித்தது.

அவன் வந்து தன் தோழியை ஏதேனும் கூறிவிடுவனோ என்று நினைத்து அச்சமடைந்தாள்.இருந்தும் வாய்மட்டும் தானாக கீதாவுடன் பேசிக் கொண்டு இருந்தது.கிருஷின் கோபத்தைச் சமாளித்தாக வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டாள்.

மாலையில் வீட்டிற்கு வந்த கிருஷ் ஶ்ரீநிதியின் பயத்திற்கு அவசியமே இல்லை என்பது போல் கீதாவிடம் நல்ல விதமாக தான் பேசினான்.முதலில் தடுமாறிய கீதாவும்…அவனிடம் எந்த பயமும் இல்லாமல் நல்ல விதமாகவே பேசிக்கொண்டு இருந்தாள்.

கிருஷ்நந்தன் என்றும் இல்லாத திருநாளாக முகத்தில் சிரிப்புடன் பேசி கொண்டு இருந்தான்.ஶ்ரீநிதியின் முன்னால் இதற்கு முன்பு…கிருஷ் இந்த அளவு சிரித்து பேசியது இல்லை…அதனால் முதன்முறையாக அவன் சிரித்து பேசும் போது விழும் கன்னக்குழி அழகில் ஶ்ரீநிதி மயங்கினாள்…கிருஷ் அத்தான் இவ்வளவு அழகா என்றவாறு…அவனைத் தலைமுதல் உள்ளங்கால்வரைப் ஒரு பார்வைப் பார்த்தாள்.

நேர்கொண்ட நாசியும்.. ஒரு பெண்ணிடம் பேசுகிறோம் என்ற தடுமாற்றமின்றி முகத்தை மட்டுமே பார்த்து பேசும் கண்ணியமான நேர்பார்வையும்…அவன் சிரிக்கும்போது விழும் கன்னகுழி அழகும்… வீட்டில் இருந்ததினால் அணிந்திருந்த சிவப்பு நிற டீ சர்ட்டும்…கீழே காக்கி நிற பெர்முடாஸும்… பார்க்கவே அம்சமாக இருந்தான்… மொத்தத்தில் அவள் கண்ணுக்கு அந்த கண்ணன் மாடர்னாக இருப்பதைப் போல் காட்சியளித்தான்.இப்படியாக தன்னையறியாமல் அவன் கன்னக்குழி அழகில் புதைந்து கொண்டு இருந்தாள்.மனதைத் தனக்கே தெரியாமல் அலைப்பாய விட்டு கொண்டு இருந்தவளுக்கு உலகமே வண்ணமயமாக காட்சியளித்தது.

சில நொடிகளில் தானாகவே அவன் சிரிப்பில் மயங்கியிருந்த மாயவலை அறுப்பட,குற்ற உணர்ச்சியுடன் ‘ச்சு ஶ்ரீ…உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா…?நீ நல்ல பொண்ணு தானே…உனக்கு ஏன் இப்படி புத்தி போகுது…இதுமட்டும் அத்தானுக்கு தெரிந்தது…உன்னை எந்த அளவு கேவலமாக நினைப்பார்…’ என்று மனதில் தன்னை தானே திட்டிக்கொண்டு இருக்கும் போதே…

கிருஷ் அவளின் முகத்தைப் பார்த்து ‘என்ன’ என்பது போல் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான்.அதில் சிறிது குற்றுணர்ச்சி வந்தாலும் முகத்தைச் சரி செய்து ஒண்ணும் இல்லை என்பது போல் தலையாட்டினாள்.

கிருஷ் ஒரு நம்பாத பார்வையுடன் விழிகளை சுருக்கி அவள் கண்களை ஊன்றி பார்த்தான்…அந்த பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் ஶ்ரீ தலைகுனிந்தாள்…கிருஷ் அதனால் அதனை விடுத்து “ஓகே ஶ்ரீ…உன் தோழியை நல்லபடியா பார்த்துக்கொள்…ஏதாவது வேணும்னா… என்கிட்ட கேளு…நம்முடைய வீட்டிற்கு வந்த விருந்தாளி அதனால் நல்ல பார்த்துகோ” என்று கூறி இருவரிடமும் சிரிப்புடனே விடைப்பெற்றான்.

கிருஷ் சென்றபிறகு கீதா தனது தோழியை இடுப்பில் கைவைத்து நன்றாக முறைத்தாள்.ஶ்ரீநிதி இவள் ஏன் இப்போது நம்மை முறைக்கிறாள் என்று மனதில் நினைத்துவிட்டு “என்னடி…???” என்றாள் வாய்வழியாக.

“ஏன்டி…என்ன பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது…நீ என்ன சொன்னாலும் நம்புவதற்கு கேனாச்சி மாதிரி தெரியுதா…?கிருஷ் எவ்வளவு நல்லவர்…அவரைப் பற்றி என்கிட்டே எவ்ளோ தப்பு தப்பா சொல்லிருக்கே …?” என்றாள் ஏகப்பட்ட கடுப்புடன்.

‘எனக்கே இவர் இப்படியெல்லாம் சிரிப்பார்னு இன்னைக்கு தான் தெரியும்….இதை இப்ப இவள்கிட்ட சொன்னால் நம்பக்கூட மாட்டாள்….எல்லாம் இந்த அத்தானால் வருது…ஒரு நாளாச்சும் இப்படி என்னிடம் சிரிச்சு பேசி இருக்காறா…இவர் எப்பவும் இது போல் இருந்தால் நான் ஏன் இப்படியெல்லாம் தப்பு தப்பா நினைக்கிறேன்… ஹிட்லர்…ஹிட்லர்… எல்லாம் உன்னால் தான்’ என்று மனசீகமாக பற்களை நறநறவென கடித்துவிட்டு…உடனே ‘சரி ஶ்ரீ…இதெல்லாம் வாழ்க்கையில் ரொம்ப சாதாரணம் அப்பா…என்னை யாரும் அசச்சிக்க முடியாது…அசச்சிக்க முடியாது’ என்று சினிமாப் பட வசனத்தை மனதில் கெத்தாக சொல்லி வெளியில்…

அசடுவழிந்தவாறு “ஹிஹிஹி… அவரைப் பற்றி நான் சொன்னது எல்லாம் உண்மை கீது…நான் சொல்லறதை நீ நம்பணும்டி….இதெல்லாம் நம்பளைப் பிரிக்க நடக்கும் சதி…பிளிஸ்டி நான் சொன்னதெல்லாம் உண்மை…உண்மை தவிற வேற ஒன்றும் இல்லை…இது சத்தியம் சத்தியம்…சத்தியம்…இப்பவும் என் மேல் நம்பிக்கை வரவில்லையெனில் உன் மேல் சத்தியம்டி” என்று மூச்சுவிடாமல் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி பேசி கடைசியில் அவள் தலையில் கை வைத்து சத்தியம் செய்தாள். 

கீதாவும் இவள் பேசுவதை பார்தால் இது தான் உண்மைபோல் என்று நினைத்து கோபத்தை குறைத்து “சரி சரி உன்னை நம்புகிறேன்… அதுக்கு ஏன் கோர்ட்டில் பேசுவதைப் போல் சத்தியம் சத்தியம்னு கூவிக்கிட்டு இருக்கே…அதுவும் என்மேலே சத்தியம் பண்ணது கொஞ்சம் ஓவர்டி” என்றாள் சிரித்து கொண்டே.

ஶ்ரீ “நீ நான் சொல்லறதை உண்மைனு நம்பணும் தானே…தட்ஸ் ஒய்…ஐ டூ திஸ்” என்றாள் முகத்தை பாவமாக வைத்து.

அந்த நடிப்பை நம்பி “சரி விடுடி…நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கிறேன்…அதுக்கு மறைக்காமல் உண்மை மட்டும் சொல்லு” என்றாள் கீதா ஏதோ பீடிகையுடன்.

ஶ்ரீயும் அவளை தோளோடு அணைத்து “கேளுடி…உனக்கு என்ன கேட்கணுமோ கேளு…ஏனா நீ என் நண்பண்டா…சாரி சாரி…நண்பீடி…இதுமட்டும் எனக்கு எப்பவுமே சரியாக வரமாட்டிக்குது” என்றுவாறு இறுக்கி அணைத்தாள்.

கீதா அவள் கையைத் தட்டிவிட்டு அவளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு “போதும் தாயே போதும்…!!என்னை ரொம்ப உயர்த்தில் கொண்டு போய் வச்சிட்டு…தொப்கடீர்னு கீழே தள்ளி விட்டுடாதே தாயே…!!என்னால் தாங்க முடியாது!!!” என்றாள் சற்று தள்ளி நின்று பயத்துடன்.

ஶ்ரீ அதற்கு கலகலவென சிரித்துவிட்டு “சரி ஏதோ கேட்கணும்னு சொன்னியே என்ன அது” என்று அவளை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி வினவினாள்.

“அது வந்துடி…” என்று சற்று தயங்கி இழுத்து

“அதை இன்னொரு நாள் கேட்கிறேன்டி…பிளீஸ்டி…” என்றுவிட்டு “சரி..சரி..வா…தாத்தாகிட்ட ஏதோ பேசணும்னு சொன்னே…வா போகலாம்” என்றாள் நினைவுப்படுத்தி.

கீதா மனதிற்குள் ‘இதைப் பற்றி நான் இப்போ கேட்டால் சாமி ஆடுவாள் இந்த ஶ்ரீ…அதனால் நாம் ஊருக்கு போனவுடன் போன் பண்ணிக்கேட்கலாம்’ என்று நினைத்தாள்.

ஶ்ரீயும் ‘சரி இவளை அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று நினைத்து அவளிடம் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு,அதன்பிறகு தாத்தாவின் அறைக்கு சென்றனர்.கிருஷ் அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு தாத்தாவிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

தாத்தா கட்டிலுக்கு அருகே இருந்த சோபாவில் அமர்ந்தவாறு பேசி கொண்டிருக்க,ஶ்ரீநிதி வருவதைப் பார்த்து  “என்னம்மா ஶ்ரீ…?” என்றார்.

முன்னால் மாதிரி கிருஷ் இருக்கிறான் என்று தயக்கம் சிறிதுமின்றி ஶ்ரீநிதி தாத்தாவின் அருகில் சோபாவில் அமர்ந்தவாறு “தாத்தா நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை…அதனால் நாளைக்கு என்ன பிளான் வச்சிருக்கீங்க…” என்று கேட்டாள் ஆர்வமாக.

ஏனெனில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இந்த குடும்பத்தில் உள்ளவர்கள்…எல்லாரும் சேர்ந்து எங்கேயாவது வெளியில் சுற்றிவருவார்கள்.

ஒரு வாரம் சினிமா…ஒரு வாரம் பிக்னிக்…ஒரு வாரம் மால் மற்றும் ஒரு வாரம் வீட்டிலே ஏதாவது பிளான் பண்ணி சமைக்கிறது… பாட்டு… டான்ஸ் என்று அனுப்பவிப்பார்கள். இதெல்லாம் தாத்தாவின் யோசனை…எல்லாரும் ஞாயிற்றுக்கிழமை தான் வீட்டில் இருக்கிறார்கள்…அதனால் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து இந்த நாளைக் கழிக்க வேண்டும் என்றும்…இதன்மூலம் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும்…இந்த முறையைப் பழக்கப்படுத்தினார்.அந்த ஒருநாள் மட்டும் நாம் வயதில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வித்தயாசம் இல்லாமல் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவார்கள்.

அதேபோல் எல்லாருடைய விருப்பமும் நிறைவேற வேண்டும் என்று ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் விருப்பப்படி அவர்கள் கூறிய யோசனையின் வழியில் கழித்தனர்.இந்த வாரம் ஶ்ரீநிதியின் முறை அதற்காகவே அவள் தாத்தாவிடம் பேச வந்து இருக்கிறாள்.

நெற்றியில் தட்டி “ஓ…ஆமாம்மா…நான் மறந்தேபோயிட்டேன்… நாளைக்கு யாருடைய முறை…?” என்றார் கேள்வியாக ஶ்ரீயிடம்.

கிருஷ் அங்கு இருப்பதையும் மறந்து ஶ்ரீ உற்சாகமாக “தாத்தா என்னுடைய முறை…!” என்றாள் குதுகலத்துடன்.

தாத்தா குறும்புடன் தனது பேத்தியைப் பார்த்து “ஓ…அதான் இவ்ளோ ஆர்வமா…?நான் கூட ஒரு நொடி என் பேத்தி பெரிய பொண்ணு ஆகிட்டாங்க போலே…தாத்தா மறந்த விசயத்தை நினைவுப்படுத்த வந்திருக்காங்கனு நினைச்சேன்…ஆனால் அப்படியெல்லாம் நீங்க எப்படி என்னை பற்றி தப்பாக நினைக்கலாம்னு அடுத்த நிமிடமே இந்த மரமண்டைக்கு புரிய வைச்சிட்டேம்மா” என்றார் புன்னகையுடன்.

“போங்க தாத்தா…நான் தான் எப்பவுமே நினைவுப்படுத்துவேனே!” என்றவாறு சிணுங்கினாள் ஶ்ரீநிதி.கீதா அதைப் பார்த்து ரசித்து சிரித்தாள்.கிருஷூம் அவளின் சிணுங்கலை அமைதியாகப் பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்.

தாத்தா சிரிப்புடன் “சரிம்மா…என்ன முடிவு பண்ணிருக்கே??” என்று வினவினார்.

ஶ்ரீநிதி சின்ன பிள்ளைகளின் ஆர்வத்துடன் “தாத்தா இப்போ புதுசா…அருவினு ஒரு படம் வெளியாகியிருக்கு…எல்லாரும் அதுக்கு நல்ல விமர்சனம் கொடுத்திருக்காங்க…அதுக்கு போகலாமா தாத்தா…??” என்று கேட்டு பதிலுக்காக அவர் முகத்தைப் பார்த்தாள்.

ஆனால் தாத்தா திரும்பி கிருஷைப் பார்த்து ‘என்ன ஒரு ஒற்றுமை… !!எப்படி டா பேரான்டி…??’ என்று கண்களால் வினவினார்.

கிருஷ் உதட்டைப் பிதுக்கி ‘எனக்கு எதுவும் தெரியாதுப்பா’ என்பது போல் தோளைக் குலுக்கி கைக்கட்டி சாய்ந்து அமர்ந்தான்.

ஏனெனில் சிறிது நேரத்திற்கு முன்பு தான் கிருஷ் தாத்தாவிடம் இந்தவாரம் அருவி படத்திற்கு போகலாம் தாத்தா…படம் ரொம்ப நன்றாக இருக்குனு எல்லாரும் சொன்னாங்க…என்றான்.அதற்கு தாத்தா இந்த வாரம் யாருடைய முறை அவங்களைக் கேட்காமல் எப்படிப்பா முடிவு செய்வது என்று பேசி கொண்டு இருக்கும் போதே ஶ்ரீநிதி நுழைந்ததினால் இந்த பேச்சு பாதியில் தடைப்பட்டது. இப்போது அதையே ஶ்ரீநிதி  வந்து சொல்லவும் எப்படி இருவரும் ஒரே மாதிரி சொல்கின்றனர் என்று தாத்தாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

தாத்தா உடனடியாக பதில் சொல்லாததால் ஶ்ரீநிதி சோகமாக தரையைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.அதனால் இவர்களின் செய்கையைக் கவனிக்கவில்லை.ஆனால் கீதா மட்டும் இவர்கள் சம்பாஷனையைக் கவனித்துவிட்டாள்.

தாத்தா ஶ்ரீயிடம் திரும்பி  “சரிம்மா…அது குடும்பமாக சேர்ந்துப் பார்க்கவேண்டிய படம் தானா…??நல்ல விசாரிச்சிட்டியாம்மா…ஏன் கேட்கிறேனா…??போன தடவை மீரா ஒரு படத்துக்கு கூட்டிட்டு போனளே…படமா அது பார்க்கவே சகிக்கலை…அதனால் தான்ம்மா கேட்கறேன் சொல்லும்மா…??” என்றார் அதை நினைத்து அருவருப்புடன்.

ஶ்ரீ மகிழ்ச்சியுடன் தலையாட்டிகொண்டே “தாத்தா அதெல்லாம் நல்ல படம் தான்…நான் விமர்சனத்தைப் பார்த்துட்டேன்…எல்லாரும் நல்ல விதமாக தான் கூறியிருக்கிறார்கள்…கீது நீயும் தானே பார்த்தே… தாத்தாவிடம் சொல்லுடி” என்று கீதாவின் கையைப் பிடித்து இழுத்து தனக்கு ஆதரவு அளிக்க அழைத்தாள்.

கீதாவும் “ஆமாம் தாத்தா” என்றவாறு தலையாட்டினாள்.

“அப்போ சரிம்மா…கண்டிப்பாக போகலாம்…இரவு சாப்பாட்டு வேளையில்…எல்லாரிடமும் தெரிவித்து விடுவோம்” என்றார் தாத்தா.

கிருஷ் இங்கு நடந்து கொண்டு இருக்கும் அனைத்தையும் ஒரு சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான்.

ஶ்ரீயும் உற்சாகமாக தலையாட்டிவிட்டு அந்த இடத்திலிருந்து கிருஷைக் கண்டு கொள்ளாமல் தோழியை அழைத்துகொண்டு சிறுப்பிள்ளை போல் துள்ளி குதித்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

ஶ்ரீநிதி மனதில் கண்டுகொண்டால் தானே பிரச்சினை நாம் இனிமே கிருஷ் அத்தானைப் பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்திருந்தாள்.

 

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top