அத்தியாயம் 6

அன்று ஶ்ரீ தனது தோழிகளுடன் தேர்வுகள் முடிந்த திருப்தியுடன் சேலத்தில் உள்ள பெரிய ஐஸ்கீரிம் பார்லருக்கு சென்றாள்.அங்கு சென்று ஐஸ்கீரிமுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாள்.

அப்போது “அடுத்து எல்லாருக்கும் என்ன பிளான்…?படிப்பு முடிஞ்சிருச்சு” என்று தோழிகளில் ஒருத்தி கேட்டாள்.

ஒவ்வொருத்தரும் ஒன்று ஒன்று சொன்னார்கள்.அதில் ஒருத்தி “எங்க வீட்டில் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க…” என்றாள் சோகமாய்.

“ஹய் ஜாலி…நம்ப பிரண்ட்ஸ் ஒருத்திக்கு கல்யாணம்…”

“எல்லாரும் சேர்ந்து…போய் அவள் கல்யாணத்தில் கூத்து அடிக்கலாம்” 

“நல்லா…கல்யாணம் சாப்பாடு சாப்பிடலாம்” 

“ஹய்யா…!எல்லாரும் ஒரே மாதிரியாக டிரெஸ் எடுக்கலாம்”

“நல்லா பாசங்களை சைட் அடிக்கலாம்…”

“ஏய் நிஷா…கார்த்திக்கையும் இன்வைட் பண்ணுடி…” 

“ஏய்!போதும்…போதும்…நாளைக்கே அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவீங்க போல…அதுக்குள்ள ஒருத்தி அவ ஆளை இன்வைட் பண்ணி… சைட் அடிக்கிற அளவுக்கு போயிட்டா…முதலில் கல்யாணம் முடிவாகட்டும்…அப்புறம் எல்லாம் பிளான் பண்ணுங்கடி” என்றாள் சிரிப்புடன் ஶ்ரீநிதி.

ஐஸ்கீரிமை வாயில் தள்ளிக் கொண்டே “இவளுங்க விட்டால்… அங்கேயே ஒரு பையனைப் பார்த்து சைட் அடிச்சி…அடுத்த நாளே கல்யாணம் பண்ணிக்க போறாங்கனு நினைக்கிறேன்…ஏய் நிஷா!உனக்கு பேஸ்டு அட்வைஸ்…இவங்களைக் கல்யாணத்துக்கு கூப்பிடாதேடி…அதான் உனக்கு நல்லது…இல்லையெனில் உன் மாப்பிள்ளையைக் கரெக்ட் பண்ணிருவாங்க…அப்புறம் உன் வாழ்க்கை அம்பேல்” என்றாள் கீதா சகத் தோழிகளை நக்கல் செய்து.எல்லாரும் ஏய்…என்று சண்டைக்கு வந்தனர் அவளிடம்.

ஶ்ரீ அதைப் பார்த்து சிரித்துவிட்டு “போதும்…நீங்க சண்டை போட்டது… கல்யாணம் பொண்ணைக் கொஞ்சம் ஓட்டலாம் வாங்க…நிஷா எப்போ உனக்கு மேரேஜ்டி…?” என்று கேட்டாள் உற்சாகமாக கல்யாண பெண்ணிடம்.

“இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் இருக்கும்” என்றாள் சோகமாக.

“அதை ஏன்டி…இவ்வளவு சோகமாக சொல்லுறே..?நானெல்லாம் எப்போடா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகலாம்னு நினைச்சிட்டு இருக்கேன்…நீ என்னடானா இவ்வளவு சோகமாக இருக்கே” என்று கேட்டாள் ஶ்ரீயின் தோழிகளில் ஒருத்தி.

அதற்கு அவள் “ச்சு…போடி…எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை…எனக்கு மேலே படிக்கணும்…ஆனால் எங்க வீட்டில் எனக்கு பின்னாடி…இரண்டு தங்கச்சி இருக்காங்க…அதனால்தான் எனக்கு கல்யாணம் பண்ணிவிட முடிவு பண்ணிட்டாங்க” என்றாள் ஆதங்கத்துடன்.

ஶ்ரீ “உங்க அப்பாவிடம் பேச வேண்டியது தானே” என்றாள்.

“கேட்டேன்டி…” என்று இழுத்து சுற்றி எல்லாரையும் ஒரு பார்வை பாவமாக பார்த்துவிட்டு,

“அவர் உன்னை மட்டும் படிக்க வைச்சுட்டு இருந்தால்…உன் தங்கைகளை எப்படி படிக்க வைக்கிறது…நாம் ஒண்ணும் பணக்காரங்க கிடையாதும்மா…எனக்கும் வயசு ஆகுது…நான் கண்ணை முடுறதுக்குள்ள இன்னும் இரண்டு பெண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்…அதனால் முடியாது…” என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

“இப்ப சொல்லுங்க…இதுக்கு மேலே நான் என்ன பண்ணறதுடி…எனக்.. எனக்கு என்…என்ன பண்ண…றதுனு தெரியாலடி” என்றாள் கண்ணில் கண்ணீருடன் திக்கியப்படி.

அவசரமாக “ஏய் கண்ணைத் துடை…இது பொது இடம் எல்லாரும் நம்மை பார்க்கறாங்க பார்…அன்ட் தென் சாரிடி…இது எதுவும் தெரியாமல்…நாங்க என்ன என்னவோ பேசிட்டோம்” என்றாள் உண்மையான வருத்தத்துடன் ஶ்ரீநிதி அவள் கைகளைப் பிடித்து கொண்டு.

அவளைத் தொடர்ந்து எல்லாரும் சாரி கேட்டனர்.

நிஷா தன் கண்ணீரைத் துடைத்து கொண்டே “பரவாயில்லப்பா…உங்க கூட பேசியப் பிறகு கொஞ்சம் மனதுக்கு நிம்மதியாக இருக்கு… எல்லாரும் என்ஜாய் பண்ண வந்துட்டு…என்னைப் பற்றி சொல்லி உங்கள் சந்தோஷத்தைக் கெடுத்திட்டேன்…சாரிப்பா எல்லாருக்கும்” என்றாள் முகத்தில் புன்னகையைத் தவழவிட்டப்படி.

“ஏய்…பிரண்ட்ஸ்குள்ள சாரி எல்லாம் வேணாம்டி” என்றாள் ஒருத்தி.

கீதாவும் “அதெல்லாம் வேணாம்டி…எங்கக்கிட்ட சொன்ன பிறகு நிம்மதியாக இருக்குனு சொன்னே தானே…அதுவே எங்களுக்கு போதும்” என்றாள்.

இந்த சூழ்நிலையை மாற்ற எண்ணி ஶ்ரீ “ஓகே…ஓகே…மாப்பிள்ளை பெயர் என்ன…?எப்படி இருப்பார்…என்ன பண்ணறார்…?அவரைப்பற்றி சொல்லு” என்றாள்.

இவ்வளவு நேரம் களை இழந்த இருந்த முகத்தில் ஒரு வெளிச்சம் பரவ “அவர் பெயர் செந்தில்…கே.எம் காலேஜ் இருக்கு இல்லை…அதில் பிரப்பஸராக இருக்கார்” என்றுக் கூறிவிட்டு வெட்கத்தில் தலைக்குனிந்தாள்.

எல்லாரும் ஓ…என்று கூச்சல் எழுப்பினர். அதே வெட்கத்துடன் ச்சூ என்றாள் எல்லாரையும்.

“இங்க பாருங்கப்பா…கொஞ்சம் முன்னாடி…யாரோ கல்யாணம் வேண்டானு சொன்னாங்க…ஆனால் மாப்பிள்ளை பற்றி கேட்ட உடனே…முகமெல்லாம் வெட்கத்தில் சிவந்திருச்சி” என்று ஶ்ரீ கூறிக்கொண்டே நிஷாவுடைய முகத்தை நிமிர்த்தினாள்.

அவள் கையைத் தட்டிவிட்டு நிஷா “ஏய்!சும்மா இருங்கப்பா…கல்யாணம் இப்போ வேண்டாம்னு தான் சொன்னனே ஒழிய அவரைப் பிடிக்கவில்லை என்று சொன்னேனா…?” என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள்.எல்லாரும் இன்னும் சிரிப்பதைப் பார்த்து அந்த இடத்தைவிட்டு வெட்கத்துடன் எழுந்து ஓடப்போனாள்.

ஏய்…என்று கோரஸாக கூறி அவளை அந்த இருக்கையில் உட்கார வைத்தனர்.அவள் வெட்கத்துடன் அங்கு உட்கார முடியாமல் நெளிந்தாள்.

அதைப்பார்த்து ஶ்ரீ அவளை மேலும் வதைக்க வேண்டாம் என்று முடிவு செய்து “ஓகே போதும்ப்பா…பாவம் விட்டுவிடுவோம்…” என்று எல்லாரையும் பார்த்து கூறி விட்டு நிஷாவிடம் திரும்பி

“நிஷா பேசாமல் நீ அவரிடம்…கல்யாணத்திற்கு பிறகு நான் படிக்கட்டுமா என்று கேள்…??அவர் ஒத்துகிட்டால்…நீ படித்த மாதிரியும் இருக்கும்…உங்க அப்பா தன் கடமையைச் செய்தமாதிரியும் இருக்கும்” என்று நிஷாவிற்கு யோசனை வழங்கினாள்.

உடனே நிஷா ஶ்ரீயைக் கட்டி அணைத்து “ஹே வாவ்!சூப்பர் ஐடியாடி…இப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…எனக்கு இது தோணலைப் பாரு…ரொம்ப தேங்கஸ்டி” என்று உணர்ச்சி வசத்துடன் கூறினாள்.

“ஏய் நிஷா…இது ஶ்ரீ…உன் அவர் இல்லை…அவளை விடு” என்று கீதா சிரிப்புடன் கூறினாள்.நிஷா ஶ்ரீயிடம் இருந்து பிரிந்து கீதாவை முறைத்தாள்.

ஶ்ரீ சிரிப்புடன் “போதும்…போதும்…எனக்கு நேரம் ஆகுது…நான் வீட்டுக்கு போகணும்ப்பா” என்றாள் எல்லோரையும் பார்த்து.

“ஓஹோ…உன் ஆள் உனக்கு வெயிட் பண்ணுவாரா ஶ்ரீ…?” என்று குறும்புடன் ஒருத்தி கேட்டாள்.

அவளிடம் திரும்பி “அது யாருடி…என்னுடைய ஆள்…?” என்றாள் புருவம் உயர்த்திவாறு.

“வேற யாரு…ரமேஷ் தான்…எங்களுக்கு தெரியாதுனு நினைச்சியா ஶ்ரீ…??” என்றாள் இன்னொருத்தி குறும்புடன்.

ஶ்ரீ திரும்பி கீதாவைப் பார்த்தாள் இதெல்லாம் உன் வேலையா என்பது போல்…

அதேவேளையில் கிருஷ் அவன் அறையில் உள்ள அலமாரியில் இருந்து அவன் மறைத்து வைத்திருந்த பொருளை கையில் எடுத்து “குண்டச்சி…எப்போடி நான் உன்னை கல்யாணம் பண்ணறது…?எத்தனை நாள் இதையே கொஞ்சிட்டு இருக்கறது…சீக்கிரம் வாடி இங்கே” என்று முத்தம் ஒன்றைக் கொடுத்தவன் கையில் இருந்தது…ஒரு பன்னிரெண்டு வயது பெண்ணின் புகைப்படமும் ஒரு ஒற்றை கால் கொலுசும் தான்.

தோழிகளிடம் ஶ்ரீ என்ன பதில் கூறி இருப்பாள்…அந்த ரமேஷ் யாரு…அவளுக்கும் அந்த ரமேஷூக்கும் என்ன சம்பந்தம்…ரமேஷ் ஶ்ரீயுடைய காதலனா…???

கிருஷ் மறைத்து வைத்திருக்கும் புகைப்படத்தில் இருந்த பெண் மற்றும் கொலுசு யாருடையது…????

 

நான் இட்ட மருதாணியில் 

சிவக்காத என் கரங்கள்

உன் கரங்கள் செய்யும் ஜாலத்தில்

என் கரங்களோடு மேனியும் சிவக்கறதே…

மருதாணி தீண்டியதால் 

செக்க சிவந்த என் கரங்களை விட

உன் கரங்கள் தீண்டியதால் 

சிவந்த என் மேனி காதலைக் காட்டுகிறது.

 

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top