அத்தியாயம் 25

வாட்ச்மென் அதை மீராவிடம் தான் கொடுத்தேன் என்று கூறியவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்து…அடுத்த நிமிடம்…ஶ்ரீநிதி தெளிவுடன் ‘இது கண்டிப்பாக மீரா…தான் செய்திருப்பாள்’ என்று நம்பினாள்.

ஏனெனில் அவளின் அறைக்கு அனுமதி இல்லாமல் நுழையக் கூடியவர்கள் வாணி,ரிஷி,கீதா அடுத்து மீரா…மற்றவர்கள் யாரும் இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை…அதனால் மீரா தான் செய்திருப்பாள் என்று உறுதியாக நம்பினாள்.

அதையே ரிஷியிடமும் கூறினாள்.ஆனால் அவன் ஶ்ரீநிதியிடம் “அவள் எதற்கு இதை எடுத்திட்டு போய் அண்ணாவிடம் கொடுக்கணும்…?அதற்கான அவசியம் தான் என்ன…???” என்று குழப்பத்துடன் கேட்டான்.

ஶ்ரீநிதிக்கே அது தெரியவில்லை.இருந்தும் அவனிடம் “ரிஷி…அதை அக்கா தான் சொல்லணும்…!இப்போ இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் ரிஷி…!!சமயம் கிடைக்கும் போது நாம் அக்காவிடம் கேட்கலாம்…!!!” என்று கூறியவுடன் ரிஷி தலையாட்டினான்.

ஶ்ரீநிதி அன்று இரவில் படுக்கையில் விழுந்து “ஓ…ஐயாவுக்கு ரமேஷைப் பற்றி சொல்லைனு தான் கோபம் போல…அதற்கு என்னிடம் பேசாமல் இருந்தால் எல்லாம் சரியாகிடுமா…??சரியான லூசு அத்தான் நீங்க…?சரி சரி நாளைக்கு அவனைப் பற்றி எல்லாமே நான் உங்களிடம் சொல்லுறேன் சரியா அத்தான்…?ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் வரக்கூடாது அத்தான்…?பட் எனக்கு உங்க கோபமும் ரொம்ப பிடிச்சிருக்கு…???” என்று தனக்குள் பேசி சிரித்துவிட்டு அவனை கண்களுக்குள் நிரப்பி கண்மூடினாள்.

ஶ்ரீ மறந்தும் கிருஷ் தன்னை சந்தேகப்பட்டிருப்பான் என்று நினைக்கவில்லை…அவளுக்கே அவனின் காதலின் மீது அதீத நம்பிக்கை இருந்தது.

அடுத்தநாள் காலை 8 மணிக்கு ஶ்ரீநிதியை அவளின் அன்னை பதட்டத்துடன் எழுப்பினார்.

ஶ்ரீநிதி தூக்கத்துடனே “அம்மா…!!பிளீஸ்ம்மா இன்னும் கொஞ்சம் நேரம்…!!!” என்று கூறி போர்வையை இழுத்து போத்தினாள்.

அவர் அவளின் போர்வையை இழுத்தவாறு “ஶ்ரீம்மா எழுந்திரி…உன்னிடம் பேசுவதற்காக தாத்தா உன்னை உடனடியாக கீழே வர சொன்னார்…சீக்கிரம் வாம்மா…தாத்தா ரொம்பவும் கோபமாக இருக்கார்…!!” என்றவுடன்,

ஶ்ரீநிதி படக்கென எழுந்து “என்னச்சும்மா…??” என்று வினவினாள்.

“தெரியலைம்மா…உன்னிடம் ஏதோ முக்கியமான விசயம் பேசணும்னு உடனடியாக உன்னை எழுப்பி கூட்டிட்டு வர சொன்னார்…தாத்தா ரொம்ப கோபமாக இருக்கார்டா…அவரைப் பார்த்தால் எனக்கே பயமாக இருக்கு…!!” என்று கண்களில் மிரட்சியுடன் கூறினார்.

ஶ்ரீநிதி “சரிம்மா நீங்க போங்க…நான் முகம் கழுவிட்டு வரேன்…!!” என்று கூறி அவரை கீழே அனுப்பினாள்.

என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு காலை கடன்களை முடித்துவிட்டு கீழே இறங்கி சென்றாள்.

கீழே குடும்பத்தின் உறுப்பினர் அனைவரும் ஒன்றாக கூடி இருப்பதைப் பார்த்துவிட்டு…அதுவும் தாத்தா மிகவும் கோபமாக அமர்ந்து இருப்பதைப் பார்த்து மனதில் ஒரு கிலி பரவியது.

இருந்தும் அவர் அருகில் சென்று “என்ன விசயம் தாத்தா…எதுக்கு கூப்பிட்டீங்க…??” என்று தைரியத்தை வரவழைத்து வினவினாள்.

அதற்கு தாத்தா அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு…விசுவிடம் கண்களால் ‘நீயே கேளு’ என்று சைகை செய்தார்.

விசு “என்னம்மா இப்படி பண்ணியிருக்கே…??எங்களிடம் சொல்லி இருந்தால்…நாங்க என்ன தடுக்கவா போறோம்…உனக்கு நாங்க எல்லா உரிமையும் கொடுத்திருக்கோம்…இருந்தும் நீ எப்படி பண்ணுவே என்று நாங்க கொஞ்சம் கூட நினைக்கலைம்மா…??” என்று வருத்தத்துடன் கூறினார்.

ஶ்ரீநிதிக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் திருதிருவென்று முழித்தாள். அதேபோல் சுற்றியிருக்கும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவள் முழிப்பதைப் பார்த்து அவளின் தந்தை ஒரு செய்தித்தாளை எடுத்து அவளின் முன் போட்டுவிட்டு “அதை எடுத்துப்பாரு…!!” என்றார்.

அதையெடுத்து பார்த்த ஶ்ரீநிதி…அதிலிருந்த ஓர் செய்தியைப் படித்தவளின் பார்வை…அதிலே நிலைகுத்தி நின்றது…அந்த செய்தியின் விவரம் இது தான்…சஞ்சீவ் குருப் ஆப் கம்பெனியின் வாரிசான ரமேஷ் சஞ்சீவ் சக்கரவர்த்தியும்…நந்தன் குருப் ஆப் கம்பெனியின் வாரிசான ஶ்ரீநிதி விசுநந்தனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புவதால் கூடிய சீக்கிரம் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்று கூறி,அதில் ரமேஷ் ஶ்ரீநிதியை அணைத்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை அந்த செய்தியுடன் இணைத்திருந்தார்கள்.

அதைப்பார்த்த ஶ்ரீநிதி இன்னும் அதிர்ச்சியடைந்தாள்.

அதற்குள் விசு “இதற்கு என்னம்மா சொல்ல போறே…?நாங்க உன் ஆசைக்கு குறுக்கே நிற்கவா போகிறோம்…??நீ இந்த விசயத்தை முதலிலே எங்களிடம் சொல்லியிருக்கலாம்மா…??இப்படி ஊர் பூராவும் தெரிந்தப்பிறகு எங்களுக்கு தெரியறமாதிரி செய்திருக்கியே…!!இது எங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம்…?இதிலிருந்தே நீ எந்த அளவு மதிக்கிறேன்னு தெரியுதும்மா…??” என்று வேதனையுடன் வினவினார்.அவர் கூற கூற ஶ்ரீநிதியின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

இதைப் பார்த்த எல்லோருக்கும் ஶ்ரீநிதியைப் பார்க்க பாவமாக இருந்தது…ஆனால் இதில் மீராவுக்கு மட்டும் மனதில் மகிழ்ச்சி ஊற்று எடுத்து பெருகியது.இதை தானே எதிர்ப்பார்த்தாள்.

ஶ்ரீ “அப்பா…நான்…” என்று கண்ணீருடன் ஆரம்பித்தவளை “ஶ்ரீநிதி…ஒரு நிமிடம் அந்த பேப்பரைக் கொடு” என்று தடுத்த கிருஷ் அந்த பேப்பரை வாங்கிப்பார்த்தான்.

அதைப்படித்துவிட்டு கிருஷ் ஶ்ரீநிதியை ஒரு முறை முறைத்தான். இருந்தும் அவன் மனதில் இது அன்று ஶ்ரீநிதி அணிந்திருந்த உடை கிடையாதே…!!இந்த போட்டா எப்போ எடுத்தது…என்று யோசித்து கொண்டிருந்தவனை தடைச்செய்வதைப் போல் வாசலில் சர் சரென்று கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

அனைவரின் பார்வையும் வாசல் புறம் திரும்பியது.அதிலிருந்து இரண்டு வாட்டசாட்டமான இளைஞர்களும்… நான்கு நடுத்தர வயது ஆண்களும்…நான்கு நடுத்தர வயது பெண்களும்…ஒரே ஒரு வயதான மூதாட்டியும் இறங்கி நின்றார்கள்.

வந்தவர்கள் யார்…?என்ன…? என்று தெரியவில்லை என்றாலும் வீடு தேடி வந்தோரை எப்படி வரவேற்காமல் இருப்பது என்று யோசித்து அனைவரையும் வரவேற்று உட்காரவைத்து உபசரித்தார்கள் நந்தன் குடும்பத்தினர்.

அந்த செய்தித்தாளைப் பார்த்தவர்கள்…ரமேஷை மட்டும் அடையாளம் கண்டு கொண்டனர்….கிருஷிற்கு சுர்ரென்று கோபமேறியது…இருந்தும் வீட்டின் பெரியவர்கள் முன் எதையும் செய்யமுடியாத நிலையில் இருந்தான்.ரிஷி தன் நண்பன் சுரேஷை முறைத்துகொண்டிருந்தான்… அவனுக்கும் சுரேஷை அடித்து துவைக்கும் அளவு ஆத்திரம் இருந்தது…ஆனால் அவனும் பெரியவர்கள் முன் எதுவும் செய்ய முடியாமல் வாலாயிருந்தான்.

ஶ்ரீநிதி வெளியாட்களின் முன் கண்ணீர் சிந்த விரும்பாமல் தன் கண்ணீரை துடைத்துவிட்டு அவளின் தங்கையின் அருகில் நின்றாள்.

அப்போது பார்த்து மீரா ரமேஷுக்கு சைகை செய்வதையும்…மீரா அதற்கு ஏதோ சைகை செய்வதையும் பார்த்த ஶ்ரீநிதிக்கு முன்பு புரியாமல் இருந்த விசயங்கள்…எல்லாம் இப்போது விளங்கியது… இதெல்லாம் மீராவும் ரமேஷூம் திட்டமிட்டு செயல்படுத்திய செயல் என்பது தெளிவாகப் புரிந்தது…இந்த திட்டத்தை வெற்றியடைய செய்த தன்னையே நொந்து கொண்டாள்.

ரமேஷின் அப்பா சஞ்சீவ்சக்கரவர்த்தி நந்தனிடம் பேச ஆரம்பித்தார். “நாங்க உங்களின் குடும்பத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்… நீங்க காலையில் வந்த நியூஸ் பேப்பரைப் பார்த்துயிருப்பீங்க…நம்முடைய பிள்ளைகள் நமக்கு தெரியாமல் அவசரப்பட்டுட்டாங்க… இப்படி ஊர் பூராவும் தெரியும் அளவுக்கு சுற்றியிருக்காங்க…அவங்க செய்தது தப்புதான்…ஏதோ தெரியாமல் பண்ணீட்டாங்க…நாம் தானே பெரிய மனசு பண்ணி இவங்களை மன்னிக்கணும்…” என்று பேச்சை மெதுவாக ஆரம்பித்தார்.

தாத்தாவும் “நாங்க எங்க பொண்ணை ரொம்ப சுதந்திரமாக தான் வளர்த்திருக்கோம்…அவள் என்ன கேட்டாலும் இல்லையென்று சொன்னதில்லை…ஆனால் இப்படி எங்க பொண்ணு பண்ணுவனு நாங்களும் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கலை…என்ன எங்க பொண்ணு… கொஞ்சம் முன்னாடியே சொல்லிருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று வருத்தமே ஒழிய…மற்றபடி எங்க பொண்ணு வாழ்க்கைக்கு குறுக்கே…நாங்க எப்பவும் நிற்கமாட்டோம்” என்று வருத்தத்துடன் கூறினாள்.

“அப்போ சரிங்க ஐயா…உங்களுக்கு இதில் சம்மதம் என்றால் நாம் இப்போ உறுதி மட்டும் செய்து கொள்வோமா…?அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாண தேதி முடிவு பண்ணுவோம்…?” என்று நேரடியாக கேட்டவுடன்…அனைவரும் அதிர்ந்தனர்.

தாத்தா எந்த பதிலும் சொல்லாமல்…நந்தன் விசுவையும் ஜானகியையும் திரும்பி பார்த்தார்.

இவர்கள் தீடிரென்று இப்படி கேட்பார்கள் என்று எதிர்ப்பார்க்காதிதினால் விசுவும் ஜானகியும் என்ன முடிவு செய்வது என்று குழம்பினார்கள்.

தீடிரென்று திருமணம் என்றவுடன் ஶ்ரீநிதிக்கு கண் கலங்க ஆரம்பித்தது.

விசுவும் ஜானகியும் குழம்பி இருப்பதைப் பார்த்த நந்தன்…கிருஷைப் பார்த்தார்.கிருஷ் எதுவும் சொல்லாமல் திரும்பி ஶ்ரீநிதியை ஒரு பார்வை பார்த்தான்…அந்த பார்வையே சொல்லாமல் சொல்லியது…இதெல்லாம் உன்னால் தான்…அதனால் நீயே பதில் சொல்லு என்றவாறு.தாத்தா ஶ்ரீநிதியின் பக்கம் கூட திரும்பாமல் மறுபடியும் விசுவின் பக்கமே திரும்பி பார்த்தார்.

அவரின் நிராகரிப்பு…இன்னும் ஶ்ரீநிதியின் கண்ணீரை என்ன முயன்றும் தடுக்கமுடியாமல் பொங்கி வர ஆரம்பித்தது…ஶ்ரீநிதி கிருஷை ஏதாவது செய்யுங்களேன்…என்றவாறு அவனிடம் கண்களால் கெஞ்சினாள். அவனுக்கு அவளின் கண்ணீரைப் பார்த்தவுடன் மனம் வலித்தது… இருந்தும் எல்லா விசயத்தையும் நீயே பார்த்துப்பே…இப்ப மட்டும்…நான் உனக்கு எதற்கு சப்போர்ட் பண்ணணும்…? என்று முகத்தை திருப்பிக் கொண்டான்.

ஶ்ரீநிதிக்கு தீடிரென்று எல்லாரும் இருந்தும்…யாரும் இல்லாத அனாதைப் போல் ஓர் தனிமை உணர்வு ஏற்பட்டது…அதைப்பார்த்த மீராவுக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் போனது.

ரிஷிக்கு தான் ஶ்ரீநிதி எந்த தப்பும் செய்யவில்லை என்று தெரியுமே… !!ஆனால் இந்த இடத்தில் உதவி செய்யமுடியாத நிலையில் இருந்தான்.

மற்ற அனைவரும்…நந்தனிடம் தைரியமாக பேசக்கூடிய ஒரே ஆள்… கிருஷ் தான்…அவனே அமைதியாக இருக்கும்போது…மற்றவர்கள் பேச தயங்கினார்கள்.

ரமேஷின் அப்பா தாத்தாவின் முகத்தையே பார்த்து கொண்டிருக்கவும்…வேறு வழியில்லாமல் “பொண்ணை பெற்றவர்கள் என்ன சொல்லுறாங்களோ…அதுப்படி தாங்க செய்ய முடியும்…நீங்க தீடிரென்று இப்படி கேட்கவும்…அவங்க குழப்பத்தில் இருக்காங்க… அதனால் எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க…!!” என்றவுடன்,

அந்த பக்கம் வந்திருந்த ரமேஷின் உறவினர்கள் சலசலக்க ஆரம்பித்தார்கள்.பையனைப் பெற்ற நாங்களே மானம் போய்விடும் என்று சீக்கிரம் இவங்க வீட்டில் பேச வந்தால்…பொண்ணை பெத்த இவங்களுக்கு யோசிக்கணுமா…??எங்களுக்கு ஊர் உலகத்திலே வேற பொண்ணா கிடைக்காது பாரு…இப்படி கல்யாணத்துக்கு முன்னால்…ஒரு ஆம்பிளை கூட சுத்தற பொண்ண வச்சிட்டே…இப்படியெல்லாம் ஆடுறாங்க…அதுவும் நல்ல பொண்ண இருந்தால் அவ்வளவு தான்…இவங்களை கையிலே பிடிக்கமுடியது…என்று ஆளாளுக்கு புரளி பேச ஆரம்பித்தார்கள்.

இப்படியெல்லாம் பேச ஆரம்பித்தவுடன் நந்தனுக்கு என்ன பேசுவது என்று புரியாமல் தலைகுனிந்தார்.

இதுவரை பேசாமல் இருந்த கிருஷ் கோபத்துடன் “என்ன ஆளாளுக்கு பேசிறீங்க…அந்த பொண்ணு உங்க பையன் கூட சுத்தியதை பார்த்தீங்களா…??ஏதோ பேப்பரில் வந்த ஒரு செய்தியைப் பார்த்து சந்தேகப்படற குடும்பம் இது இல்லை…என்ன நடந்துச்சினு…உங்கள் பையனைக் கொஞ்சம் கேளுங்க…ஏனால் எங்கள் பொண்ணு மேலே எந்த தப்பும் இல்லை…அவளை அந்த மாதிரி நாங்க வளர்க்கவும் இல்லை…!எல்லா தப்பும் உங்கள் பையன் மேலே தான்…இப்படி கேடுகெட்ட பையனைப் பெத்துவச்சுட்டு…இந்த அளவுக்கு ஆடுறீங்க…??உங்களை யாரு எங்க பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க சொன்னது…முதலில் எல்லாரும் இங்கிருந்து எழுந்து வெளியே போங்க…!!” என்று உறுமி வாசல் பக்கம் கை காட்டினான்.

அதில் இன்னும் எரிச்சலடைந்த ரமேஷ் வீட்டினர் ‘ச்சை சுத்தம் மரியாதை தெரியாத குடும்பமாக இருக்கு…மரியாதையில்லாமல் ஒரு சின்ன பையன் வீட்டை விட்டு வெளிய போக சொல்லுறான்…இவங்க எல்லாரும் வாயை முடிட்டு இருக்காங்க…இந்த ரமேஷ் போயும் போயும் தேடி பிடிச்சிருக்கான் பாரு பொண்ணை…இந்த லட்சணத்தில் நம்ப பையனை பேச வந்திட்டாங்க…இந்த பொண்ணு இது மாதிரி எத்தனை பசங்களோடு சுத்துச்சோ…!இல்லை உறவு வச்சிக்கிச்சோ…!!! என்றவுடன்,

ஶ்ரீநிதி ‘அய்யோ கிருஷ்ணா…என்னை இந்த உலகத்திலே…எதுக்கு வச்சிருக்கே…என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடு…’ என்று காதைப் பொத்தியவாறு அலறி மயங்கி சரிந்தாள்.

அதைப்பார்த்தவுடன் எல்லோரும் ஶ்ரீநிதி என்று அவளை தாங்கிப்பிடித்தனர்.

அவ்வளவுதான் எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ கிருஷிற்கு அவளைத் தப்பாக பேசியவனையும்…அந்த ரமேஷையும் அடித்து துவைத்தான்.கூடவே ரிஷியும் தயாவும் சேர்ந்து கொண்டார்கள். பெண்களைத் தவிர மற்றவர்களை ஒரு கைப்பார்த்தனர் இருவரும்.

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top