கிருஷ் மனதில் ஶ்ரீநிதியை நன்றாக வறுத்து எடுத்து கொண்டிருந்தான். ‘ஏய் குண்டச்சி…உனக்கு மனசிலே பெரிய இவள் நினைப்பா…??சரியான திமிரு பிடிச்சவே…??எத்தனை நாளைக்கு இதை எங்களிடமிருந்து மறைக்க முடியுனு நினைக்கிறே…ஒரு நாள் இல்லைனா…ஒரு நாள் இது வெளியே வர தான் போகுது…அப்போ இருக்குடி உனக்கு…!!பாட்டி அடிக்கடி சொல்லுவாங்களே…கூறு கெட்டவனு…அது கண்டிப்பாக உனக்கு ஏற்றப்பெயர் தான்’ என்று அவளை மனதார வைதான்.
ஆனாலும் அவனின் இன்னோரு மனம் ‘அவள் இதனால் ஏதாவது பிரிச்சினையில் மாட்டிக்கொண்டாள்…என்ன செய்வது…?’ என்று மனம் வருந்தினாலும்,
அடுத்த நிமிடமே ‘இந்த குண்டச்சி வந்து எதைப் பற்றியும் சொல்ல மாட்டாள்…நான் அவளை நினைத்து எதுக்கு வருத்தப்படணும்…நானே வழிய போய் அவளிடம் கேட்கணுமா…நான் கேட்கமாட்டேன்…!!’ என்று மறுபடியும் முறுக்கினான்.
சிறிதுநேரத்திலே ‘இரண்டு நாளாக ஏதோ தப்பாக நடக்கப் போவது போல்…என் மனசு சொல்லுதே…இந்த ஶ்ரீநிதி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வாளா…??’ என்று மறுபடியும் வருத்தப்பட்டான்.
இப்படி மாறி மாறி யோசித்து அவளிடம் தாழ்ந்து போய் கேட்கவும் முடியாமல்…அவளை எப்படியோ போ என்று விடவும் முடியாமல் இருத்தலைக்கொள்ளி எறும்பாக தவித்தான்.தன்னை இந்த நிலைக்கு தள்ளிய ஶ்ரீநிதியின் மீது கோபம் கோபமாக வந்தது.
‘இந்த லட்சணத்தில் இவங்க அப்பா அம்மாவிடம்…அவள் டெல்லி போவதைப் பற்றி பேசி சம்மதம் வாங்கணுமாம்…ஒண்ணும் இல்லாத விசயத்தை எல்லாம் என்னிடம் சொல்லுவாள்…ஆனால் முக்கியமான விசயத்தை மட்டும் சொல்லமாட்டாள்…ஏன் இதையும் அவளே சென்று அவங்க அப்பா அம்மாவிடம் சொல்ல வேண்டியது தானே…சரியான கிறுக்கிடி…நீ குண்டச்சி…!!’ என்று ஆசைதீர திட்டி பற்களை நறநறவெனக் கடித்தான்.
அவள் மட்டும் இங்கே இருந்தால் கடித்து குதறிவிடும் நோக்கத்தில் இருந்தான்.
இப்படியாக கிருஷின் எண்ணம் முழுவதும் ஶ்ரீநிதியைச் சுற்றி இருக்க… ஶ்ரீநிதி முற்றிலும் இவன் நினைவே இல்லாமல் தனக்கு வந்த கைப்பேசி அழைப்பை பற்றி யோசித்து கொண்டிருந்தாள்.
‘எப்படி இந்த பார்சல் இங்கிருந்து காணாமல் போனது…?இந்த வீட்டிற்குள் புகுந்து இந்த பார்சலை எடுத்து கொண்டும் போகும் அளவுக்கு…அப்படி யாரும் சுலபமாக இத்தனை பேரையும் மீறி…என்னுடைய அறைக்கு வரமுடியாது…!!ரமேஷ் தான் செய்திருப்பான் என்று யோசித்தால்…அவன் இந்த வீட்டிற்குள் வரமுடியாதே…!அப்போது கண்டிப்பாக யாரோ இந்த வீட்டிலே இருக்கவாங்க தான்…இதையெல்லாம் செய்திருக்கணும்…அந்த ஒருத்தர் யாரு…??’ என்று பலமான சிந்தனையில் இருந்தவளின் யோசனையைக் கலைக்கவென அவள் போன் அடித்தது.
அதையெடுத்து காதில் வைத்தவள் “இதோ வருகிறேன்…!!” என்று கூறி தன் கைப்பையை எடுத்து கொண்டு கிளம்பினாள்.
அதேநேரம் ரிஷி வாணியின் காதலை ஏற்று கொள்வதா…??வேண்டாமா…?? என்ற பலத்த யோசனையில் இருப்பதால்…சுற்றி இருக்கும் யாரிடமும் பேசாமல்…பெரும்பாலும் அவன் அறையிலேயே நேரத்தைக் கழித்தான்.
இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த வாணி ‘என்னச்சு இந்த ரிஷி அத்தானுக்கு…??ஒரே நேரத்தில் பத்து பேருக்கு சேர்த்து வைத்து…இவர் ஒருத்தரே பேசுவார்…ஆனால் இப்போது ரூமைவிட்டு வெளியே வரதேயில்லை’ என்று யோசித்தோடு மட்டும் இல்லாமல் கிருஷ் ஶ்ரீநிதியும் கூட ஏதோ ஒரு மாதிரி இருப்பதையும் கவனித்தாள்…
அதுமட்டுமில்லாமல் இந்த மீரா அக்கா போக்கே சரியில்லையே…!!எப்போது பார்த்தாலும்…ஶ்ரீ அக்காவை ஏதோ எதிரியைப் பார்ப்பதை போல் முறைத்து பார்த்து கொண்டிருப்பதையும் சேர்த்து கவனித்தாள்.
வாணிக்கு இதையெல்லாம் பார்த்து தலைமுடியைப் பிய்த்து கொள்ளலாம் போல் குழப்பமாக இருந்தது.இதைப்பற்றி யாரிடம் கேட்பது என்று யோசித்து கொண்டிருந்தாள்.
கடைசியாக ரிஷியிடமே கேட்கலாம் என்று அவன் அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.அவள் உள்ளே வந்தது கூட தெரியாமல் சுவற்றை வெறித்து கொண்டிருந்தவனின் அருகில் சென்று,அவன் தோள் தொட்டு “அத்தான்” என்று அழைத்தாள்.
ரிஷி திரும்பி அவளின் முகத்தை பார்த்தான்.அவன் தன்னை அப்படி பார்ப்பதைப் பார்த்த வாணி “அத்தான்…என்னச்சு எதுக்கு என்னை அப்படி பார்க்கிறீங்க…??” என்று வினவினாள்.
“ஒண்ணுமில்லை…இத்தனை நாள் நீ ரொம்ப சின்ன பொண்ணுனு நினைச்சேன்…ஆனால் நீ வளர்த்திட்டேனு…இப்போ உன்னை பார்த்த பிறகு தான் புரியுது…” என்று சம்பந்தம் சம்பந்தமில்லாமல் கூறினான்.
“அத்தான்…! நான் வளர்த்திட்டேனு இப்போ தான் உங்களுக்கு தெரியுமா…?நான் உயரமாகி ரொம்ப நாளாச்சு…??” என்று குறும்புடன் கூறி அவன் முகத்தைப் பார்த்தாள்
அவன் “ச்சு” என்று சலித்தானே தவிர…வேற எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டான்.ரிஷி தன்னை ஏதாவது கேலி செய்வான் என்று காத்திருந்த வாணி…அவன் முகத்தை திருப்பியவுடன்…ரொம்பவும் ஏமாற்றமாக உணர்ந்தாள்.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்த ரிஷி தீடிரென்று “நீ ஏன் இப்படி பண்ணினே வாணி…??உன்னிடமிருந்து இதை நான் சத்தியமாக எதிர்ப்பார்க்கலை…!!” என்றான் வருத்தத்துடன்.
வாணி குழப்பத்துடன் “நான் என்ன பண்ணினேன் அத்தான்…??எதுவாக இருந்தாலும் நேரடியாக சொல்லுங்க அத்தான்…!!” என்றாள்.
நீ என்னை காதலிக்கிறீயா என்று எப்படி நேரடியாக கேட்பது என்று ரிஷி தயங்கினான்.
வாணி அவன் தயக்கத்தைப் பார்த்து “அத்தான் எதுவாக இருந்தாலும் கேளுங்க…!நீங்க அதை மனதிற்குள் வைத்து வருத்தப்படுவதை விட…அதை கேட்டுவிடுவது நல்லது அத்தான்…!!” என்று அவனை ஊக்கப்படுத்தினாள்.
ரிஷி ‘எப்போதாக இருந்தாலும் அவளிடம் இதைப் பற்றி கேட்டு தான் ஆகணும்’ என்று யோசித்து…தன் தயக்கத்தை முழுவதுமாக விடுத்து…அவள் கையில் இருக்கும் செல்போனைப் பிடுங்கி…அதில் அவள் தன் பெயருக்கு பதிலாக சேமித்து வைத்திருக்கும் தொடர்பு பெயர் பட்டியலை எடுத்து காண்பித்து “இதுக்கு என்ன அர்த்தம்…??” என்று தெளிவான குரலில் கேட்டான்.
அதைப் பார்த்தவுடன் என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறினாள்.அதனைப் பார்த்த ரிஷி “சொல்லு…இதுக்கு என்ன அர்த்தம்…??” என்று மறுபடியும் கடுமையாக கேட்டான்.
இதுவரை இந்த அளவு கடுமையாக யாரும் வாணியிடம் நடந்து கொண்டதில்லை…அதனால் தீடிரென்று இவ்வளவு கடுமை இவனிடம் இருந்து வந்ததால் வாணியின் கண் கலங்க ஆரம்பித்தது.
இவள் கண் கலங்க ஆரம்பித்ததைப் பார்த்தவுடன் தன் கடுமையைக் குறைத்து மென்குரலில் “முதலில் அந்த கண்ணீரைத் துடை…” என்று கூறினான்.
அவள் கண்ணீரைத் துடைத்தவுடன் “இங்க பாரு வாணி…உனக்கு காதலிக்கிற வயசு இன்னும் வரவில்லை…!!அதுவும் இந்த வயதிலே வருவது வெறும் ஒரு ஈர்ப்பு தானே தவிறே…அது காதல் இல்லை… !!!அதனால் இந்த விசயத்தை மறந்துவிட்டு…படிக்கும் வழியை மட்டும் பாரு…புரியுதா…??” என்று அறிவுரை கூறினான்.
அவன் பேசுவதை இதுவரை அமைதியாக கேட்டு கொண்டிருந்த வாணி தீர்க்கமான குரலில் “அத்தான்…நீங்க சொல்லுவது ஒரு விதத்தில் சரி…எனக்கு இது காதலிக்கும் வயசுயில்லை தான்…!ஆனால் எனக்கு உங்கள் மேல் எனக்கு இருப்பது காதல் தானே ஒழிய ஈர்ப்பு இல்லை…!அது மட்டும் என்னால் உறுதியாக நம்ப முடியும்…!!” என்று அவன் முகத்தைப் பார்த்து தைரியமாக கூறினாள்.
ரிஷி ஏளனக்குரலில் “அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்லுறே…??” என்று வினவினான்.
வாணி ஒரு சிறுமுறுவலை உதிர்த்துவிட்டு “அத்தான்…அதெல்லாம் சொல்லி புரிய வைக்கமுடியாது…!அதை உணர்ந்து தான் தெரிந்து கொள்ளணும்…எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குனு…என் உள் உணர்வு இரண்டு வருஷத்திற்கு முன்னால் உணர்த்தியது…!அதேபோல் நீங்க எப்போ உணருகிறீங்களோ…?அப்போ தான்…என்னை புரிஞ்சிக்க முடியும் அத்தான்…அதுமட்டுமில்லாமல்…உங்களுக்கு எப்படி என் காதலைப் பற்றி தெரியும் என்று கேட்கமாட்டேன்…ஏனால் என் காதலைப் பற்றி எப்படி உங்களிடம் சொல்வது என்று நானே யோசித்துக் கொண்டிருந்தேன்…இப்போது உங்களுக்கு தெரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி தான்” என்று கூறி அவன் கையில் இருக்கும் தன் கைப்பேசியை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
ரிஷி தன் மனதில் ‘நான் இவளை சின்ன பொண்ணு என்று நினைத்தால்… இவள் இந்த அளவுக்கு எனக்கே காதலனா என்னவென்று புரிஞ்சிக்க சொல்லிட்டு போறா…??’ என்று யோசித்து அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தான்.
கதவு வரை சென்றவள்…என்ன நினைத்தாளோ திரும்பி அவன் அருகில் வந்து “அத்தான்…உங்களிடம் ஒரு முக்கியமான விசயம் பேசணும்… அதற்காக தான்…உங்களிடம் பேச வந்தேன்” என்றாள்.
“என்ன வாணி…??” என்று கேட்டான்.
“அத்தான்…இந்த கிருஷ் அத்தான்…ஶ்ரீ அக்கா…மீராக்கா இவங்களுக்குள்ள ஏதாவது சண்டையா…??” என்று குழப்பத்துடன் கேட்டாள்.
ரிஷியும் புரியாமல் “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே…??ஏன் கேட்கிறே…??” என்று கேட்டான்.
வாணி அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றி கூறிவிட்டு “ஏன் இப்படி இருக்காங்கனு எனக்கு புரியவில்லை…நீங்களும் ஒரு மாதிரி சோகமாக இருந்தீங்களா…??அதைவைத்து தான் உங்களுக்கு ஏதோ தெரியும் போலே என்று நினைத்து… கேட்கலாம்னு வந்தேன்…!ஆனால் நீங்க சோகமாக இருந்த காரணமே வேறு என்று இப்போது புரியுது…!அதனால் கொஞ்சம் ஶ்ரீ அக்காவிடம் என்ன பிரச்சினை என்று கேளுங்க…??அவங்க கண்டிப்பாக உங்களிடம் சொல்லுவாங்க…??” என்று யோசனை வழங்கினாள்.
இவளின் பேச்சு மற்றும் மற்றவர்களின் மீது உள்ள அக்கறையைப் பார்த்து…முதல் முதலாக ரிஷியின் மனதில் வாணியின் மீது காதல் விதை விழுந்தது…
பதிலுக்காக வாணி தன்னை பார்த்து கொண்டிருப்பதைப் பார்த்து “சரி… நான் ஶ்ரீயிடம் பேசுகிறேன்” என்று கூறி மெல்லிதாக புன்னகைத்தான்.
வாணி அதன்பிறகு அவனை ஏக்கமாக ஒரு பார்வைப் பார்த்து “பை அத்தான்” என்று கூறி சென்றாள்.
இப்போது அவளின் ஏக்கப் பார்வை தன்னை ஏதோ செய்வதை ரிஷி உணர்ந்தான்.ஒரு வேளை அவள் சொன்ன உள் உணர்வு இது தானா…என்று யோசித்து கொண்டிருந்தவன்…அவன் மண்டையில் அவனே தட்டி ‘ஏய் லூசு…!முதலில் ஶ்ரீயிடம் போய் பேசு…அது தான்…இப்போது முக்கியம்’ என்று கூறி அவளைப் பார்க்க சென்றான்.
அங்கு சென்று பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது…ஏனெனில் ஶ்ரீநிதி அங்கு இல்லை…சரி அக்காவிடம் கேட்போம் என்று நினைத்து ஜானகியிடம் கேட்டான்.
அதற்கு ஜானகி “ஶ்ரீ யாரோ ஒரு பிரண்ட்டைப் பார்க்கப் போறேன்னு… இப்போ தான்டா போனாள்…ஏன் ஏதாவது அவளிடம் பேசணுமா…??” என்று கேட்டார்.
ரிஷி “இல்லை அக்கா…ஒண்ணுமில்லை சும்மா எப்பவும் போல தான்…!!” என்று கூறி சமாளித்து அவன் அறைக்கு சென்றான்.
ஆனால் அவன் மனதிற்குள் ஒரு சந்தேகவிதை விழுந்தது. ‘இந்த ஶ்ரீநிதி எப்போதும்…என்னை இல்லையென்றால்…கீதா கூட தானே…பிரண்ட்ஸைப் பார்க்க போவாள்…ஆனால் கீதா ஊருக்கு போயிருக்கானா…என்னைக் கூப்பிட்டு இருக்க வேண்டியது தானே…இவளே தனியாக போயிருக்கானாள்…ஏதோ இடிக்குதே…என்னவாக இருக்கும்’ என்று யோசித்து அவன் பங்குக்கு ஒரு பக்கம் குழம்பினான்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மீரா அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக கோபத்தில் நடந்து கொண்டிருந்தாள்.அவள் எண்ணம் நிறைவேறாமல் போனதால் சரியான எரிச்சலில் இருந்தாள்.
கிருஷிடம் ஶ்ரீநிதியின் காதலைப் பற்றி கூறினால்…கிருஷ் ஶ்ரீநிதியை கண்டிப்பாக சந்தேகப்படுவான்…அதனால் இருவருக்கும் பெரிய பிரச்சினை நடக்கும் என்று நினைத்தால்…அப்படி எதுவும் நடக்காமல் இருவரும் அவர்கள் வேலையைப் பார்த்துகொண்டிருப்பது…பிறகு கிருஷ் வாயால் மட்டும் சொன்னால் நம்ப மாட்டான் என்று தான்…அந்த பார்சல் மற்றும் கடிதத்தை காண்பித்தேன்…அதன்பிறகு ரமேஷை தன்னுடன் கூட்டு சேர்த்து…இதையெல்லாம் செய்து இருந்தும்…கிருஷ் அவளிடம் எதுவும் சண்டைப்போடாமல் இருப்பது தான் அவளுக்கு இன்னும் எரிச்சலாக வந்தது.
இதற்கெல்லாம் மேலாக ரமேஷின் நம்பரை கஷ்டப்பட்டு அவனின் தம்பி சுரேஷிடம் கெஞ்சி வாங்கி…அவனைத் தொடர்பு கொண்டால்…அவன் இவளின் பேச்சை கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை… ஶ்ரீநிதி உங்களுக்கு வேணும்னா…நான் சொல்லறப்படி செய்ங்க என்று எவ்வளவு தந்திரமாக பேசி சம்மதிக்க வைத்தால்…இதற்கும் ஒரு பலனுமே காணுமே என்று இன்னும் எரிச்சலில் இருந்தாள்.
இவ்வளவு யோசித்தவளுக்கு கிருஷின் காதலின் ஆழத்தைப் பற்றி தெரியவில்லை…அவன் ஒரு காலத்திலும் தன் காதலியைச் சந்தேகப்படமாட்டான்…எத்தனை முறை இதை முயற்சி செய்தாலும்… அவன் மனசிலிருந்து அவளை வெளியேற்ற முடியாது என்பதை பாவம் அவள் அறியவில்லை.